பசுமைக்குள் சுமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 9,715 
 
 

அவளுக்குக் கடந்த காலம் உண்டு; அவனுக்கும். திருமணத்துக்கு முன்னால் எத்தனை உண்மைகளைப் பகிர்ந்து கொள்வது என்பதிலல்ல தயக்கம், எவற்றை மறைப்பது என்பதில் தான்.

கதவைத் திறந்த விஜி, மகிழ்ச்சியுடன் வியந்தாள். அவனை எதிர்பார்க்கவில்லை. நேற்று இரவு பத்து மணிக்கு வீடு வரை துணை வந்தவனை மறுபடி இத்தனை அதிகாலையில் எதிர்பார்க்கவில்லை. “விக்ரம்…. வா” என்றவளின் தொனியில் ஆசையும் அழைப்பும் நிறைந்திருந்தது.

“என்னம்மா, யார் வந்திருக்காங்க?” என்று கேட்டபடி வந்த விஜியின் தாய், உள்ளே வந்த விக்ரமைப் பார்த்துச் சிரித்தபடி, “வாங்க தம்பி. என்ன தினம் வந்துடறீங்க? அதான் என் பெண்ணை இன்னும் பத்து நாளில கல்யாணம் செய்துக்க போறீங்களே? இப்படி தினம் வந்துகிட்டிருந்தா எல்லாரும் இப்பவே உங்களை என் பொண்ணு கைக்குள்ள போட்டுகிட்டதா பேசுறாங்க பாருங்க” என்றாள். “விஜி, போய் மாப்பிள்ளைக்கு காபி ஏதாவது கொண்டு வந்து கொடுமா”

“யாருக்கு காபி? நான் எழுந்ததிலிருந்து கேட்டுக்கிட்டிருக்கேன், எனக்கு இன்னும் காபித் தண்ணிய தரக்காணோம்” என்று கிணற்றடியிலிருந்து வந்த விஜியின் தந்தை, “வாங்க வாங்க விக்ரம். என்ன விசயமா வந்தீங்க? நகையெல்லாம் பாக்கணுமா? நீங்க சொன்ன மாதிரியே தங்கமாளிகை காரங்க இன்னிக்குக் கொண்டு வந்துருவாங்களா? அதுக்குத் தான் வந்தீங்களா?”

“இல்லை, சார்” என்றான் விக்ரம்.

“சத்திரம் முழு பணமும் கொடுத்தாச்சுங்க. சமையலுக்கும் பணம் கொடுத்தாச்சு. பத்திரிகை அனுப்பி பதிலுங்களும் வந்திடுச்சு. பாக்கறீங்களா? போட்டோக்காரன் இன்னக்கு வரதா சொன்னான். வரதட்சணை பாக்கி” விடாமல் சொல்லிக் கொண்டு போனார் தந்தை.

“இல்லிங்க…” என்று தயங்கினான் விக்ரம். பிறகு, “விஜி, உங்கூட கொஞ்சம் பேசணும்” என்றான்.

“வா” என்று அவனைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“நான் என் பெண்டாட்டிய கூட இப்படி சுத்தல. நீங்க ரெண்டும் கல்யாணத்துக்கு முந்தியே கொஞ்ச ஆரம்பிச்சுட்டீங்க. கல்யாணத்துக்குப் பிறகும் இப்படி சந்தோசமா இருங்க” என்ற தந்தையை கவனிக்காதது போல் கதவை லேசாக மூடினாள். “சொல்லு, விக்ரம்” என்றாள்.

அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, “எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லே, விஜி. காரணம் எதுவும் கேட்காதே. உன்னையும் உன் குடும்பத்தையும் அலைக்கழிச்சதுக்கு என்னை மன்னிச்சுடு” என்றான். வேண்டுமென்றே உரக்கச் சொன்னது போல் பட்டது. தாய்-தந்தை காதில் விழுந்திருக்குமா?

முகத்திலடித்த வார்த்தைகளை மூளையிலேற்றத் தயங்கினாள். அதைப் புரிந்து கொண்டவன் போல், “என்னை மன்னிச்சுடு” என்றான் விக்ரம், மறுபடியும். அவள் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன், அவள் கைகளை திரும்ப மூடியபடியே கதவைத் திறந்து, வந்த வேகத்திலேயே வெளியேறினான். சில நொடிகளில் உள்ளே வந்த தாயும் தந்தையும் “என்னம்மா, என்ன ஆச்சு? என்னவோ ஏமாந்தது போல நிக்கிறே?” என்றனர்.

**

பழவந்தாங்கலுக்குக் குடி வந்து மூன்று வாரங்களாகியிருக்கும். சென்ற பத்து வருடங்களில் எட்டு ஊர்கள் மாறியாகிவிட்டது. ஊர் மாற்றியதிலும் வாழ்க்கை நிலையாமையிலும் சோர்ந்து போயிருந்தாள் விஜி. வந்து மூன்று வாரங்களுக்குள் அப்பா ஒரு வரன் தேடிக் கொண்டு வந்துவிட்டார்.

“கடையைப் போட வேண்டியது தான்” என்றார். அம்மாவையும் அவளையும் அழைத்தார். “வாங்க, வாங்க, ஒரு வரன் பிடிபடும் போல இருக்கு”.

“அப்பா, எனக்கு இனிமேல் கடை போட விருப்பம் இல்லே”

“விஜி, இது தான் கடைசினு நான் ஒப்புக்கிட்டிருக்கேன் இல்லே? இதுக்குப் பிறகு நீ உன் விருப்பப்படி உன் வாழ்க்கையை அமைச்சுக்கோ. நாம தனி வழி போயிடுவோம்”

“எதுக்கப்பா? இந்த எட்டு வருசத்துல சேக்காத பணமா? எனக்கு ஓய்வு வேணும்”

“யாருக்காக சேத்த பணம்? எல்லாம் நமக்காகத் தானே? உனக்காகத் தானே?” என்றாள் அம்மா.

“எனக்குப் பணம் எதுவும் வேண்டாம். எல்லாப் பணத்தையும் நீங்களும் அப்பாவுமே வச்சுக்குங்க. எனக்கு நிம்மதி வேணும். செஞ்ச பாவத்துக்கெல்லாம் பரிகாரம் வேணும். தனியா வாழ்க்கை வேணும்”

“சுலபமா சொல்லிட்டா எப்படி? நாம எல்லாருமே உடந்தை தானே? இந்த ஒரு முறை தான். நல்ல வரன். இதுக்கப்புறம் வேண்டாம். அனாவசியமா விவாதம் பண்ணிக்கிட்டிருந்தா மனசு வெறுத்து சண்டை சச்சரவு தான் வரும். அப்புறம் நாக்பூர்ல நடந்த மாதிரி ஆயிடும். பேசாம சொல்றத கேளு” என்றார் அப்பா சற்று கடுமையான தொனியில்.

சற்று அமைதியானாள் விஜி. “வந்து மூணு வாரம் தானே ஆகுது? அதுக்குள்ள எப்படிப் பிடிச்சீங்க? ஏதாவது…” என்றவளை மறித்தார் அப்பா. “இந்த வரன் தானாவே வந்திருக்குதுமா. நீ அழகா இருக்கேனு சொல்லி பக்கத்து வீட்டம்மா அவங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கிட்டே சொல்லி எங்கேயோ எப்படியோ விசயம் பரவி இந்த வரன் வந்திருக்குது. நேத்து கோயில் போனப்ப ஒருத்தர் வந்து அறிமுகம் செய்துகிட்டு, போட்டோவும் விவரமும் கொடுத்தாரு. ரொம்ப வசதியான இடம்” என்றார்.

“ஒழுங்கா விசாரிச்சீங்களா? போலீஸ் ஏதாவது இருக்கப் போகுது? ஆறு வருசம் முந்தி பங்காருபேட்டைல நடந்தது இப்ப நெனச்சாலும் நடுங்குது” என்றாள் அம்மா.

“விசாரிச்சேன். இன்னும் கவனமா தான் இருக்கணும், இருந்தாலும் இந்த விசயமெல்லாம் சட்டு புட்டுனு முடிச்சுறணும்” என்றார் அப்பா. “சொல்றதக் கேளுங்க, பையனுக்கு அப்பா அம்மா இல்லியாம். எல்லாம் அண்ணனும் அண்ணியும் தானாம். கோடீஸ்வரக் குடும்பம். இனி கடை போடாம இருக்கணும்னா இது மாதிரி வரன் தான் தேவை. பத்தாம் தேதி பையனை வரச் சொல்லியிருக்கேன். பெண் பார்க்க வரப்போறாங்க. விஜி, இனி எல்லாம் உன் கைல தான் இருக்கு”

“கண்டிப்பா இது தான் கடைசி, ஒத்துக்குவீங்களா?”

“சரிம்மா” என்றார் அம்மா.

“இதுக்குப் பிறகு தொடர்ந்தீங்கன்னா நான் எங்கனா ஓடிடுவேன்”

“அட நீ வேற, நீ என் பொண்ணு. உன்னைத் தொந்தரவு செஞ்சு என்ன லாபம்? அதுவும் உனக்கு வயசாகிக்கிட்டு போவுது, இந்த மாதிரி கடை போட முடியாது. இது தான் கடைசி, சொன்னா நம்பு” என்றார் அப்பா.

“சரி, விவரம் சொல்லுங்க” என்ற விஜியிடம் பையனின் புகைப்படத்தைக் கொடுத்து, அறிந்த விவரமெல்லாம் சொன்னார் அப்பா.

புகைப்படத்தைப் பார்த்தாள். கண்டிப்பாக இது தான் கடைசி என்று சொல்லிக் கொண்டாள். “சரிப்பா, நான் ரெடி” என்றாள்.

தன்னைப் பெண் பார்க்க வந்தபோது அவனை நன்றாகப் பார்த்தாள் விஜி. கருகரு என்று முடியுடன், அளவான மூக்கு நெற்றி கண் உதடு என்று செதுக்கிய சிலை போலிருந்தது அவனுடைய முகம். இயற்கையாகவே மேல் நோக்கியிருந்த உதட்டு நுனியில் நிரந்தரப் புன்னகை. “என் பெயர் விக்ரம்” என்றான். உடன் வந்திருந்த அவனுடைய அண்ணாவையும் அண்ணியையும் அறிமுகம் செய்தான். எல்லாருடனும் கை குலுக்கி நலம் விசாரித்தான்.

“இவன் என்னோட தம்பி. எனக்கும் இவனுக்கும் இருபது வயசு வித்தியாசம். எங்கப்பா அம்மா இவனை எங்கிட்ட ஒப்படைச்சதிலிருந்து நாங்க தான் இவனுக்கு அப்பா அம்மா எல்லாம்” என்றார் அண்ணன். என்னவோ இடித்தது. என்னவென்று புரியவில்லை. ஆனால் விகரமின் பேச்சும் புன்னகையும் விஜியை மிகவும் கவர்ந்தது. வேண்டாம் என்று உள்மனம் சொன்னாலும், அவன் மேல் ஆசை வந்தது. அவனுக்கும் தன் மேல் ஈர்ப்பிருந்ததை உணர்ந்தாள். எல்லோரும் அருகில் இருக்கும் போதே அவள் கை விரல்களைப் பட்டும் படாமல் தொட்டான். உணர்ச்சி புதுமையாக இருந்தது.

“ஒரே பொண்ணா உங்களுக்கு?” என்றார் அண்ணி.

“ஒரே பொண்ணு தான். பிஏ படிச்சிருக்கா. இங்கே மாறி வந்து ஒரு மாசம் தான் ஆகுது. இன்னும் வேலை தேடிக்கிட்டிருக்கா. ஆனா வேலை தேடித் தான் பிழைக்கணும் என்கிற நிலை அவளுக்குக் கிடையாது. எங்க சொத்து எல்லாம் அவளுக்குத் தான்” என்றாள் விஜியின் தாய். அதைக் கேட்டதும் அண்ணியின் முகம் பூரித்ததைக் கவனித்தாள் விஜி.

“பெண்ணை உங்களுக்குப் பிடிச்சிருக்கா, விக்ரம்?” என்றார் தந்தை.

“பிடிச்சிருக்கு” என்றோ “பிடிக்கவில்லை” என்றோ சொல்வானென்று எதிர்பார்த்தாள். விக்ரம் ஒரு கணம் தயங்கி விட்டு, “ரவிவர்மா வரைஞ்ச படம் உயிரோட வந்தது போல உங்க பெண் என் கண் முன்னாடி நிக்கிறாங்க. விஜியைப் போல ஒரு அழகான பெண்ணை என் வாழ்க்கையில் சந்திச்சதே இல்லை. இனிமேல் பெண் பார்க்கும் எண்ணமே எனக்கு வரப் போறதில்லைனு சொல்வேன். அப்படி இந்த கல்யாணம் ஒத்து வராம மறுபடி பெண் பார்க்கப் போனா அவங்களையெல்லாம் விஜியோட ஒப்பிட்டுப் பார்த்து ஏமாந்து போயிடுவேன்னு தோணுது. கொஞ்ச நேரம் தனியா பேச அனுமதி தருவீங்களா? என்னோட விருப்பத்தை மட்டும் சொல்றதுக்குப் பதில் எங்க ரெண்டு பேருக்கும் இதில் விருப்பம் இருந்தால் ஒண்ணா வந்து சொல்றோம்” என்றான். கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் விஜியின் கையைப் பிடித்தான். “கொஞ்சம் தனியா பேசுவோமா?” என்றான்.

‘இவனைப் பிடித்துத் தொலைக்கும் போலிருக்கிறதே’ என்று நினைத்தபடி எழுந்து, தன்னுடைய அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள். கதவை மூடிவிட்டு, “என்ன பேசணும்?” என்றாள்.

“உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றான்.

“இந்த மாதிரி எத்தனை பொண்ணுங்க கிட்டே சொல்லியிருக்கே?” என்றாள்.

“வெரிகுட், வெரிகுட். நீங்க வாங்க எல்லாம் எனக்கும் பிடிக்காது. உன்னோட கேள்விக்கு வரேன். நிறைய பெண்கள் கிட்டே அப்படி சொல்லியிருக்கேன் என்பது தான் உண்மை. ஆனா இந்த முறை உன்னோட முகத்தைப் பார்த்ததும் எல்லாத்தையும் விட்டு உன்னோட எங்காவது கண் தெரியாத இடத்துக்கு ஓடிடணும்னு தோணிச்சு. உன் குரலைக் கேட்டதும் உன் பின்னாலயே சுத்திக்கிட்டிருக்கணும்னு தோணிச்சு. மத்த பெண்கள் கிட்டே எனக்கு இந்த மாதிரி தோணியது கிடையாது – அது உண்மை” என்றான்.

“நல்லா பேசுறே”

“கேள்விக்குப் பதில் சொல்லலியே? என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?”

“பிடிக்கலேனு சொன்னா என்ன பண்ணுவே?”

“பிடிக்கலேனு சொன்னா ஊரறியக் கல்யாணம் செய்துக்குவேன்”

விஜி சிரித்தாள். “பிடிச்சிருக்குனு சொன்னா?”

“பிடிச்சிருக்குனு சொன்னா யாருக்கும் தெரியாம காதலிப்பேன்” என்றபடி அவளுடைய கண்களைச் சந்திக்க முயன்றான். அவனுடைய கண்களைச் சந்திக்க முடியாமல் பார்வையைச் சுற்றினாள் விஜி. ‘வேண்டாம், இது விபரீதம். ஆனாலும் மனதில் ஆசை தோன்றிவிட்டதே? ‘

சற்று நேர அமைதிக்குப் பின், “அப்ப யாருக்கும் தெரியாம காதலிக்க வேண்டியது தான்” என்றாள்.

“அப்பப் பிடிச்சிருக்குனு வாயால சொல்லு” என்றான்.

“பிடிச்சிருக்கு” என்றாள்.

“வாயால சொல்லுனு கேட்டா, வார்த்தையால சொல்லுறியே?”

“புரியலையே?”

“வார்த்தையில்லாமே வாயாலே சொல்ல முடியாதா?” என்றான்.

“துணிச்சலைப் பாரு. அதெல்லாம் முடியாது” என்றாள், அவன் கேள்வியைப் புரிந்து கொண்டு.

அறையிலிருந்து வெளியே வந்ததும் “என்ன, பெண்ணைப் பிடிச்சிருக்கா? கல்யாணம் எப்ப வச்சுக்கலாம்?” என்றார் தந்தை.

“எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றபடி அவளுடைய கைகளைக் கோர்த்துக் கொண்டான். தாய்-தந்தையின் முகம் கறுத்ததைக் கவனித்தவள் முகத்தை நாசூக்காகத் திருப்பிய போது, அண்ணன்-அண்ணியின் முகமும் இருண்டிருப்பதைக் கவனித்தாள். எதையும் கவனிக்காதது போல் விக்ரம், “கல்யாணத்தை இப்பவே வச்சுக்கலாம். நான் தயார். விஜி, நீ என்ன சொல்றே?” என்றான்.

மற்றவர்கள் சிரித்தார்கள். “என்னங்க விக்ரம் இது? நாள் கிழமை பார்க்க வேண்டாமா?” என்றார் தந்தை.

“எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குனு தோணின இந்த நிமிஷத்தை விட நல்ல நேரம் வேறு என்ன இருக்க முடியும்?” என்றான் விக்ரம். அவனருகில் சென்று அவன் தோளில் அழுத்திக் கைவைத்த அண்ணனைக் கவனித்தாள். “ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குனு சொன்னது தான் முக்கியம். நான் வெள்ளிக்கிழமை வரும் போது விவரமெல்லாம் பேசலாம்” என்று அவசரமாக எழுந்து வெளியேறினார்கள் அண்ணனும் அண்ணியும். விக்ரம் நின்று விடைபெற்றுக் கொண்டு போனான்.

அவர்கள் போனபின் விஜியின் தந்தைக்குக் கோபம் வந்தது. “என்னம்மா இது, அவன் உன் கையைப் பிடிச்சுக்கிட்டு நிக்கிறான், சும்மா இருக்கியே?” என்றார்.

“அப்பா, அதை விடுங்க. அந்த ரூமில என் கிட்டே முத்தம் கேட்டான் விக்ரம். எனக்கும் கொடுக்கணும் போல இருந்துச்சு, ஆனா மறுத்துட்டேன். அதுக்கு என்ன சொல்றீங்க?” என்றாள் விஜி. “எனக்கென்னவோ இவனைப் பிடிச்சிருக்குபா. கடை போட வேண்டாம்னு தோணுது” என்றாள்.

“சொன்ன வார்த்தை தவற மாட்டேன். நீயும் தவறாதே விஜி. மீறினா உனக்குத் தான் ரொம்ப ஆபத்து”

“ஐயே, இதுக்கு ஏங்க ரொம்ப டென்சனாகுறீங்க. என்ன இருந்தாலும் நம்ம பொண்ணு தானே?”

“விஜி, என்னை மன்னிச்சுடுமா. இத பாரு, இது தான் கடைசி முறை. பையனுக்கு உன்னைப் பிடிச்சது நல்லதா போச்சு. நல்லா ஏத்தி விட்டு, கடையை அதிக விலைக்குத் திறந்து முடிச்சம்னா நீ வாழ்நாள் முழுதும் உன் இஷ்டப்படி இரும்மா, எங்க நிழல் பக்கம் கூட நீ வர வேண்டாம். எசகுபிசகா எதையாவது செஞ்சு திட்டத்தைக் கெடுத்துடாதே”

“சரிப்பா, உங்க இஷ்டம் போல செய்யுங்க. விக்ரம் போனா இன்னொருத்தன்” என்ற விஜியை அன்புடன் தட்டிக் கொடுத்தார் தந்தை. “கவலைப்படாதேமா. வெள்ளிக்கிழமை வரதா சொல்லியிருக்காங்க இல்லை? விஷயத்தை கப்சிப்னு முடிச்சிடுறேன்”.

வெள்ளிக்கிழமை அண்ணனும் அண்ணியும் வந்தார்கள். விக்ரம் வரவில்லை.

“அவனுக்கு வேலை முடியலமா. கல்யாண விவரம் தானே, நாங்களே பேசிடலாம்னு வந்தோம்” என்றார் அண்ணி.

“அதுவும் சரிதான்” என்றார் தந்தை.

“பாருங்க, எனக்கு ஒரே தம்பி. நாங்க வசதியோட இருக்குறவங்க. பெரிய இடத்துக்குத் தகுந்தபடி நகை, சீதனம், வரதடசணை எல்லாம் எதிர்பார்க்குறோம். உங்க பெண்ணும் என் தம்பியும் அமோகமா இருப்பாங்க, அதுல ஒரு சந்தேகமும் வேண்டாம்” என்று அண்ணன், நேரத்தை வீணாக்காமல் பேச்சு வார்த்தையில் இறங்கினார்.

“அதுக்கு என்ன? விஜியும் எங்களுக்கு ஒரே பொண்ணு தான், அவளுக்கு செய்யாம யாருக்கு செய்யுறது? என்ன எதிர்பார்க்குறீங்க சொல்லுங்க? முடிஞ்சா அதுக்கு மேலேயே செய்யப் பார்க்குறேன்” என்றார் தந்தை.

“முப்பது பவுன் நகை, உங்க இஷ்டம் போல வெள்ளிப் பாத்திரம் வகையறா, வரதட்சணை பத்து லட்சம் எங்க கையில ரொக்கமா கொடுத்துடணும். இதான் எதிர்பார்க்குறோம்”

தந்தை சற்று சிந்தித்து விட்டு, “எங்க பொண்ணு தானே, நகைக்கு குறை வைப்பானேன்? அம்பது பவுனா போட்டுடறோம். வரதட்சணை கொடுக்கறதில்லைனு தீர்மானமா இருந்தோம். ஆனா பையனுக்கும் பெண்ணுக்கும் பிடிச்சிருக்கிறதுனால, பையன்-பொண்ணு பேர்ல ஜாயின்ட் அக்கவுன்ட் எடுக்கச் சம்மதம்னா பத்து லட்சம் அதுல போட்டுடறோம், உங்க கைல ஒரு லட்சம் ரொக்கமா கொடுத்துடறோம்” என்றார்.

“கன்டிசன் போடறாதா நினைக்காதீங்க. நகையை தங்கமாளிகைல செய்யக் குடுத்துருங்க. பரம்பரையா எங்களுக்கு நகை செஞ்சவங்க, ராசிக்காரங்க. அவுங்க கடையிலிருந்து நகை வந்தாத்தான் எங்களுக்கு நம்பிக்கை. நீங்களே தேர்ந்தெடுத்தாலும் சரி, என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னாலும் சரி, சம்மதம் தான்” என்றார் அண்ணி.

“வரதட்சணை ரொக்கத்தை மூணு லட்சம் ரொக்கமா கைல கொடுத்துடுங்க, மிச்சத்தை அக்கவுன்டுல போட்டுறுங்க ” என்றார் அண்ணன்.

“அதனால் என்ன, தங்கமாளிகைலயே செஞ்சா போச்சு. வரதட்சணை ஒரு லட்சம் கைல கொடுத்துடறோம். இதெல்லாம் சின்ன விசயம். கன்டிசன்னு சொல்லணும்னா நான் தான் இப்ப ஒரு கன்டிசன் போடப் போறேன். உங்களுக்கு ஒண்ணும் தடையிருக்காதுனு நம்புறேன்” என்றார் தந்தை.

“சொல்லுங்க” என்ற அண்ணன் குரல் சற்றே தொய்ந்தது. அண்ணியை அவசரமாக நோட்டம் விட்டதைக் கவனித்தாள் விஜி.

“என் பொண்ணும் உங்க தம்பியும் நீண்ட ஆயுளோட சந்ததியோட இருப்பாங்கனு நம்பறோம். தினம் பிரார்த்தனை செய்துக்குவோம். இருந்தாலும் மனுச உயிர் நிலையில்லாதது பாருங்க, நாளைக்கு உங்க தம்பிக்கு ஒண்ணு ஆயிடுச்சுனு வையுங்க என் பொண்ணு கண் கலங்கக் கூடாதுங்க”

“என்ன, இப்படி பேசுறீங்க?” என்று அதிர்ந்தாள் அண்ணி.

“மன்னிச்சுருங்க. எதையும் வெளிப்படையா பேசிடணும் எனக்கு. பாருங்க, எங்கப்பா இறந்தப்ப எனக்கு எட்டு வயசு. எங்கம்மா இருபத்திரண்டு வயசுல விதவையாகிட்டாங்க. என்னையும் என்னோட தம்பிகளையும் தங்கைகளையும் வளர்க்க அவங்க பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். நான் இறந்தா என் பெண்டாட்டி கஷ்டப்படக்கூடாதுன்னுட்டு, என் பெயருல கல்யாணம் ஆன அன்னிக்கே பெரிய தொகைல இன்சூரன்சு எடுத்தேன். கடவுள் புண்ணியத்துல இன்னி வரைக்கும் நல்லாத்தான் இருக்கோம் இல்லிங்களா? உங்க தம்பியும் அமோகமா இருப்பாரு. ஆனாலும் எங்க பொண்ணு பாருங்க, அவ நல்லா இருக்கணும்னு நினைப்புல தப்பு இல்லிங்களே? அதனால, கல்யாணம் ஆன அன்னிக்கே பையன் பேருல ஒரு பெரிய தொகைக்கு இன்சூரன்சு பாலிசி எடுத்துக் கொடுத்துடணும். பாலிசிக்கான முதல் வருசத் தொகை வேணும்னாலும் நானே கொடுத்துடறேன்” என்றார் தந்தை.

“வேணாம் வேணாம், நாங்களே கட்டிடறோம். என்ன தொகைக்கு எடுக்கணும்னு சொல்லுங்க, எடுத்தா போச்சு” என்றார் அண்ணன்.

“இன்னிய கால நிலவரத்துக்கு ஏத்த மாதிரி ரெண்டு கோடிக்காவது எடுத்துருங்க” என்றார் தந்தை.

“ஒண்ணு செய்யுங்க. ரெண்டு லட்சம் வரதட்சணை ரொக்கமா கொடுத்துடுங்க, ஒரு கோடிக்கு பாலிசி எடுத்துடறோம்” என்றார் அண்ணன்.

“என்னங்க இது? நம்ம குழந்தைங்களுக்குத் தானே செய்யுறோம்? இதுல குறை நிறை பாத்துக்கிட்டு இருக்கலாமா?” என்றார் அண்ணி.

“மூணு லட்சம் ரொக்கமா கொடுத்துடறோம். ரெண்டு கோடி பாலிசி எடுத்துருங்க” என்றார் தாய்.

“சம்மதம். ரொம்ப சந்தோசம். ரெண்டு மாசத்துல தேதி பாத்து கல்யாணம் முடிச்சுடலாம். நாங்க வரோம், சம்பந்தி” என்றார் அண்ணன். சிரித்தபடி கைகுலுக்கி கும்பிடு போட்டு வெளியேறினார்கள்.

“கடை திறந்தாச்சு விஜி. இனி லாபம் சம்பாதிக்க வேண்டியது தான். எல்லாரும் அவங்கவங்க வேலைய ஒழுங்கா செய்தாப் போதும்” என்ற தந்தையின் குரலில் வெற்றி தொனித்தாலும், விஜியைக் குறிப்பாகப் பார்த்தார்.

“சரிப்பா” என்றாள். ‘இது வாழ்க்கையா வியாபாரமா’ என்ற சிந்தனை முதல் முறையாகத் தோன்றியது விஜிக்கு. ‘இத்தனை நாள் இல்லாத வருத்தம் இப்போது வருகிறதே? விக்ரமை உண்மையாகவே விரும்புகிறேனா அல்லது இந்த வியாபார வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டுவிட்டதா?’ என்று நினைத்தாள்.

அதன் பிறகு விக்ரமும் விஜியும் தனிமையில் பல முறை சந்தித்தார்கள்.

முதல் முறை அண்ணா சாலை புத்தகக் கண்காட்சியில் மதியம் முதல் மாலை வரை சுற்றினார்கள். ஐஸ் க்ரீம் ஊட்டி விட்ட போது சிலிர்த்தாள். ‘இந்த இனிமையை இழக்கப் போகிறோமா?’ என்று தோன்றியது. இரண்டாவது சந்திப்பின் போது ‘வி2′ என்ற எழுத்து பதித்த தங்க மோதிரம் ஒன்றைப் பரிசளித்தான். மூன்றாவது சந்திப்பில் சாந்தோம் கடற்கரையில் பழைய ஆல் இன்டியா ரேடியோ எதிரில் புல்தரையின் சரிவில் உட்கார்ந்திருந்த போது, விக்ரம் மெள்ள அவள் கைகளைப் பிடித்தபடி கேட்டான். “என்னைப் பிடிச்சிருக்கானு கேட்டப்ப அன்னிக்கு ஒழுங்கா பதில் சொல்லியிருக்கலாம்ல?”

“அதான் சொன்னனே?”

“வார்த்தையில்லாம ஒழுங்கா சொல்லியிருக்கலாம்ல?” என்றான்.

“வார்த்தையில்லாம எப்படி சொல்றதாம்?”

“வாயால தான்” என்றான் விடாமல்.

“ஐயே, முதல்ல வாயால கேட்டே சரி. பிறகு எத்தனை பிடிக்கும்னு கேட்டு வேறே எதனாலயாவது பதில் சொல்லக் கேட்டின்னா?”

“அடடே, அதுவும் நல்ல கேள்வி தான். நீ கேட்டதா நினைச்சு, நானே பதில் சொல்லிடறேன்’ என்றான். அவளுடன் தரையில் சரிந்து அணைத்து அவள் முகத்தை நெருங்கினான். ஒரு கையால் அவள் முகத்தை ஏந்தி உதட்டில் முத்தமிட்டான். இரண்டு நொடிகள் தயங்கி, அவன் உதடுகளைப் பற்றிப் பிரித்துத் தன் உதடுகளைச் சேர்த்தாள். இன்னொரு கையால் அவள் இடுப்பைத் தொட்ட போது இருவருமே மயங்கினர். “இதுக்கெல்லாம் பிறகு நேரம் வரும்” என்றபடி அவனை விளையாட்டாகத் தள்ளினாள். ‘நேரம் வருமா?’ என்று நினைத்தாள்.

ஐந்தாவது சந்திப்பில், மெகாப்ளக்ஸ் தியேடரின் தனிமையில் அருகருகே நெருக்கியடித்து திரைப்படம் பார்த்தார்கள். வேண்டுமென்றே இருட்டில் ‘இதான் இடுப்பா இதான் இடுப்பா? இருட்டுல கண் தெரிய மாட்டேங்குது’ என்றபடி இடுப்பைத் தவிர உடல் முழுதும் அவன் தடவிய போது பதில் சொல்லாமல் அனுபவித்தாள். பிறகு அவன் கையை எடுத்து, “இந்தா இதான் இடுப்பு” என்று தன் மார்பில் வைத்துக் கொண்ட துணிச்சலில் அவன் பயந்து விட்டதைக் கண்டு பலமாகச் சிரித்தாள். “நீ ரொம்ப மோசம்பா” என்று காதருகே அவன் கிசுகிசுத்த போது எதிர்பார்க்காமல் சட்டென்று திரும்பி அவனுடைய உதட்டைக் கவ்வினாள். “என் கிட்டே மாட்டிக்கிட்டா நீ அதோகதி தான்” என்றாள். ‘உண்மையும் அது தான்’ என்று நினைத்தாள். படம் முடிந்து வெளியே வந்து எதிரே மைனா ரெஸ்டாரன்டின் ஏசி குளுமையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவன் அமைதியாகக் கேட்டான்.

“விஜி, நீ உண்மையாகவே என்னை நேசிக்கிறியா?”

“பொய்யா நேசிக்கறது எப்படி?”

“விளையாடாதே. எனக்கு உண்மையிலேயே உன் மேலே அபரிமிதமா காதல் உண்டாயிடுச்சு. இன்னிக்கே எங்கயாவது ஓடிடலாமா?” என்றான்.

“ஏன் ஓடணும்? அதான் கல்யாணம் செஞ்சுக்கப் போறோமே? அப்புறம் ஓடுவோம்”

“உனக்கு எல்லாமே விளையாட்டா இருக்கா? நான் இப்படி உன் கிட்டே மனசைப் பறி கொடுப்பேன்னு நினைக்கவே இல்லை. ஏதோ பெண் பாக்க வருவோம்னு தான் வந்தேன்…” என்று தொடங்கியதை அவன் முடிக்கவில்லை. அவன் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை என்பதை வீட்டுக்கு வந்ததும் உணர்ந்தாள். ‘தெரிந்து கொண்டு விட்டானா?’ என்று நினைத்தாள்.

முதல் நாள் இரவு மெரினா கடற்கரையில் சந்தித்து இரவு வரை பேசிக் கொண்டிருந்தார்கள். “எங்கியாவது ஓடிடலாமே விஜி?” என்று அவன் பத்தாவது முறையாகக் கேட்டதும், “ஏன் இப்படி சொல்றே?” என்றாள்.

“உண்மையைச் சொல்லணும்னா, என் அண்ணா-அண்ணி ரொம்பக் கொடுமைக்காரங்க. விவரமெல்லாம் கேட்காதே. உன்னையும் கொடுமைப் படுத்துவாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களப் பத்தி எனக்குத் தான் தெரியும். சொன்னாக் கேளு. எங்கியாவது ஓடிப் போய் சந்தோசமா இருப்போம். என்ன சொல்றே?”

என்ன கேட்டும் விக்ரம் விவரம் சொல்ல மறுத்தான். “விஜி, நான் உன்னை நேசிக்கறதும் உன்னோட வாழ நினைக்கறதும் நிஜம். எதிர்காலத்தைப் பத்தித் தானே கவலைப்படணும்? அதனால தான் சொல்றேன். அவங்க இல்லாத எதிர்காலத்துல தான் எனக்கு நிம்மதி” என்றான்.

நீண்ட நேரம் பதில் பேசாமலிருந்தாள். பிறகு, “கவலைப்படாதே விக்ரம். அப்படி ஒண்ணும் நடக்காது. ஓடிப் போறதெல்லாம் நடக்காத காரியம். எங்கப்பா அம்மாவைப் பத்தியும் உனக்குத் தெரியாது. உன்னைத் தொலைச்சு எடுத்துடுவாங்க” என்றாள். அன்றைக்கு வீடு வரை உடன் வந்தான். பத்தரை மணிக்கு வீட்டுத் தெரு முனையில் இறங்கிய போது, “இன்னொரு தடவை யோசிச்சு சொல்லு. என் கூட ஓடி வர சம்மதம்னா நாளைக்குச் சொல்லு” என்றான்.

“ஓடி வர சம்மதமில்லே விக்ரம். எத்தனை தடவை கேட்டாலும் என பதில் இது தான். பத்து நாள் பொறுத்து, கல்யாணம் முடிஞ்சதும் பாப்போம்” என்றபடி வீட்டுக்கு நடந்தாள்.

**

“என்ன இப்படிச் சொல்லிட்டுப் போறான்? நீ ஏதாவது சொல்லியிருப்பே, அதான்” என்றார் தந்தை.

“விஜி, உண்மைய சொல்லு. என்ன நடந்தது?” என்றார் தாய்.

“அம்மா, எனக்கு ஒண்ணும் புரியலே. நான் எதையுமே அவன் கிட்டே சொல்லலே. அவன் ஏன் இப்படி சொல்லிட்டுப் போறான்னு தெரியாது. கொஞ்சம் யோசிக்கணும்” என்றாள் விஜி. அப்போது தான் தன்னுடைய கைகளுக்குள் காகிதம் போல் ஏதோ இருப்பதை உணர்ந்தாள். கையைப் பிடித்தபடி விக்ரம் பேசிய போது திணித்திருக்க வேண்டும். பெற்றோருக்குத் தெரியாமல் படிக்க வேண்டும். “என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க தயவுசெய்து” என்றாள்.

அவர்கள் போனதும் கைகளைத் திறந்து காகிதத்தைப் பிரித்துப் படித்தாள்.

மாலை இரண்டு மணிக்குக் கிளம்பிய போது, “எங்கம்மா போறே?” என்றார் தந்தை.

“அப்பா, நான் மவுன்ட் ரோடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன். அடுத்து என்ன செய்யுறதுனு ஒரு திட்டம் வச்சிருக்கேன். விக்ரமைப் பாத்துப் பேசிட்டு வரேன். அவனுக்கு என்ன தெரியும் என்கிறது நமக்குத் தெரிஞ்சாவணும். நீங்க ரெண்டு பேரும் எதுக்கும் கவனமா இருங்க” என்றாள்.

“சரிம்மா, ஜாக்கிரதை. ஏதாவது ஏடாகூடமா இருந்தா உடனே எங்களுக்குத் தகவல் சொல்லு. கிளம்பத் தயாரா இருப்போம்” என்றார் விஜியின் தாய்.

விஜி கிளம்பிய சில நொடிகளில் அவளுடைய தந்தை, மனைவியிடம் “நீ கொஞ்சம் கவனமா இரு. நான் அவ பின்னாடியே போய் எங்க போறா என்ன செய்யுறானு பாத்துட்டு வந்துடறேன். எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு” என்றார்.

மவுன்ட் ரோடு ஸ்பென்சர் வாசலில் இறங்கினாள். எதிர்பார்த்தபடியே சற்று பின் தள்ளி இன்னொரு ஆட்டோ வந்து நிற்பதைக் கவனித்தாள். அமைதியாக உள்ளே சென்றாள். வலது புறம் இருந்த புடவைக் கடைக்குள் நுழைந்தாள். கடையின் பின்வாசல் வழியாக அவள் வெளியேறியது கடையில் வேலை செய்த காவல்காரனுக்கும் அவனுக்கு லஞ்சமாகக் கொடுத்த ஐநூறு ரூபாய்க்கும் மட்டுமே தெரியும்.

எழும்பூர் ஸ்டேசனின் நான்காவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவனை தொலைவிலிருந்தே பார்த்தாள். விரைந்து சென்று அவனை இழுத்துக் கொண்டு “எங்கப்பா என்னைத் தொடர்ந்து வந்தாலும் வருவாரு. வேறே எங்காயாவது போய் பேசலாம்” என்றாள்.

“எங்கயும் வேண்டாம். இங்கேயே பேசலாம்” என்றபடி அவன் அவளை இழுத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயிலில் ஏறினான். “ஆறு மணிக்குக் கிளம்புது. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. கூட்டம் சேரத் தொடங்கிடுச்சு. இங்கயே பேசுவோம்” என்றான்.

“சொல்லு” என்றாள்.

“நான் சொல்லப் போறதைக் கவனமாக் கேளு விஜி. என்னுடைய உண்மையான பெயர் விக்ரம் இல்லே. அவங்க என்னோட அண்ணன்-அண்ணியும் இல்லே. நான் அனாதை. அவங்க என்னை வளத்தெடுத்த அப்பா-அம்மா. ரொம்பக் கெட்டவங்க. நானும் தான். உன்னைச் சந்திக்கும் வரை. இதுவரை பதினொரு கல்யாணம் கட்டியிருக்கேன். எங்களுக்கு இது ஒரு வியாபாரம். பெண் பார்க்க வேண்டியது. நிறைய நகை கேட்க வேண்டியது. எல்லா நகையும் எங்கம்மா தான் தேர்ந்தெடுப்பாங்க, அதுவும் கே.டி தங்கமாளிகைல தான். மூணு டிசைன் பொய் நகை செட் செஞ்சு வச்சிருக்காங்க. எப்பவும் அதே மூணு டிசைனை மாத்தி மாத்தி உபயோகிச்சு ஒவ்வொரு பெண் வீட்டுக்காரங்க கிட்டயும் பணம் கறந்துடுவோம். பெண் வீட்டுக்காரங்க பணம் கட்டியதும் நிஜ நகையை செய்து கொடுத்துடுவாரு மொதலாளி. கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கு ராத்திரியே நகையை மாத்திடுவோம். ‘பொய் நகை’னு சொல்லி கலாட்டா செய்வோம். “நிஜ நகை செஞ்சா தான் மிச்சதெல்லாம்’னு சொல்லி பெண்ணையும் அவங்க குடும்பத்தையும் விரட்டி விட்டுறுவோம். இருபது முப்பது பவுன் நகையை யார் திரும்பிப் போட்டு வரப் போறாங்க? ஒரு வாரம் ரெண்டு வாரம் இருந்துட்டு அந்த இடத்திலந்து கிளம்பிடுவோம். இப்படி மோசடி செய்யுற குடும்பம் எங்களது. ஆனா இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கலை விஜி. உன் கிட்டே நான் உண்மையா வாழ ஆசைப்படுறேன் விஜி” என்றான். அவன் அழைத்த விஜியில் தயக்கம் இருந்தது. அவளை நேராகப் பார்த்தான்.

பொறுமையாக இருந்தாள். ‘இவன் நம்மை சோதிக்கிறானா’ என்று நினைத்தாள்.

“என்னோட உண்மையான பெயரும் விஜி இல்லை” என்றாள். அவன் அமைதியாக இருந்தான். பிறகு, நடப்பது நடக்கட்டும் என்று அவன் கைகளைப் பிடித்தபடி பேசத் தொடங்கினாள்.

“எங்கம்மா அப்பாவும் மோசமானவங்க தான். என்னை மாதிரியே. இதுவரைக்கும் ஏழு கல்யாணம் செய்திருக்கேன். தமிழ்நாட்டுல ரெண்டு. உன்னைக் கல்யாணம் செய்துகிட்டா மூணாவது. மாப்பிள்ளை பெயருல பெரிய தொகைக்கு இன்சூரன்சு எடுக்கச் சொல்லுவோம். கல்யாணமான மொதல் மாசமே பையன் எப்படியாவது இறந்துடுவாருனு வச்சுக்க. ஆறு மாசத்துல இன்சூரன்சு பணம் கைக்கு வந்ததும் ஒரு வருசமோ என்னவோ பொறுத்திருந்து இன்னொரு இடத்துல கடை போடுவோம். எங்க பேர்ல இதுவரைக்கும் எந்த வித சந்தேகமும் வந்ததில்லை. ஆனா எனக்கும் இந்த வியாபார வாழ்க்கையில் விருப்பம் போயிடுச்சு. அப்பத் தான் எங்க வழியில் நீ வந்தே. உன்னையும் கொல்லத் தான் திட்டம் போட்டிருந்தோம். ஆனா உன்னைக் கொல்ல மனசு வரலையே” என்றாள்.

“உனக்கு நான் விக்ரமாகவும் எனக்கு நீ விஜியாகவுமே இருந்துட்டுப் போவோம்” என்றான். “விஜி, நான் யோக்கியனில்லை. ஆனால் நீ என் வாழ்க்கையில் வந்ததும் தான் எனக்கு வாழ்க்கையின் ஒளிப் பகுதியே கண்ணுல பட்டிருக்கு. திருடவும் மோசடி செய்யவும் கொஞ்சம் கூடத் தயங்காத மனசு உன் கிட்டே சின்ன பொய் சொன்னா கூட முள்ளா குத்துது. அதனால தான் ஓடிப் போயிடலாம்னு நிறைய தடவை சொல்லிப் பார்த்தேன், நீ கேட்கவே இல்லை. சரி, நானாவது எங்கியாவது ஓடிப்போயிட்டா நல்லதுனு காலையில உன் கிட்டே கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்” என்றான்.

“அப்ப எழும்பூர் ஸ்டேசனுக்கு அஞ்சு மணிக்கு வரச்சொல்லி கடிதம் கொடுப்பானேன்?” என்றாள்.

“உன் கிட்டே உண்மையெல்லாம் சொல்லணும்னு ஒரு எழுச்சி. அர்த்தமில்லா விட்டாலும் உன் கிட்டே மன்னிப்பு கேட்கணும்னு தான். ஒரு வேளை நீ என்னுடன் ஓடி வர சம்மதிப்பியோனு ஒரு சின்ன ஆசை தான். இதோ பார்” என்று இரண்டு டிக்கெட்களைக் காட்டினான்.

“நீயும் மன்னிப்பு கேட்டாச்சு. நானும் மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆனா ஓடிப் போறது ரொம்ப ஆபத்து. எங்கப்பா என்னைப் பின் தொடர்ந்து வந்தாரு. அவரை ஏமாத்திட்டு வந்தேன்னு நெனச்சுக்கிட்டிருக்கேன், ஆனா நம்ப முடியாது. பின்னாலயே வந்திருப்பாரு. ஓடிப் போறதுனாலும் எங்கியாவது ப்ளேன் பிடிச்சு கண் காணாம ஓடறத விட்டு இப்படி ட்ரெய்ன் ஏறி எங்கே போக முடியும்னு நினைக்கறே?”

“அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம். இந்த நேரத்துல ட்ரெய்னோட மூன்றாம் வகுப்புக் கூட்டம் தான் நமக்குப் பாதுகாப்பு. இந்நேரம் நான் ஓடிட்டது எங்கப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்கும். இருக்குற ஆளுங்களை மீனம்பாக்கம் அனுப்பியிருப்பாங்க. என்னோட வந்துடறியா விஜி? வண்டி திருச்சி வரை போகுது. வழியில எங்கயாவது இறங்கிக்கலாம். கைல பத்தாயிரம் ரூபா வச்சிருக்கேன். என்னோட தனிக் கணக்குல லட்ச ரூபாய்க்கு மேலே இருக்கு, யாருக்கும் தெரியாது. நம்ம ரெண்டு பேரையும் காப்பாத்திக்க முடியும், என்ன சொல்றே?” என்றான்.

தொலைவில் விசில் சத்தம் கேட்டது. வண்டி கிளம்ப நேரமாகி விட்டதோ என்னவோ. “ஓடி வரது நல்லதா தோணலே விக்ரம். உன் மேலே எனக்கு காதல் இருப்பது உண்மை. இந்த வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலை தேடுறதும் உண்மை. அது உங்கிட்டே கிடைக்கும்னு நான் நம்பறதும் உண்மை. ஆனால் இது ஆபத்து. எங்கப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாது. நம்மைத் துரத்திக் கண்டு பிடிச்சுடுவாரு. அதுவும் இல்லாம இப்ப ரெண்டு பேரும் இந்த மாதிரி தான்னு தெரிஞ்ச பிறகு ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு நம்பிக்கை கடைசி வரை இருக்குமானு சந்தேகம் வந்திடுச்சு” என்றாள்.

“எங்கப்பாவும் அப்படித் தான். ஆனா என்னால நம்ம ரெண்டு பேரையும் பாதுகாக்க முடியும்னு நம்பறேன். இதோ பார், ஒரு விசில் கொடுத்தாச்சு. வண்டி கிளம்பிடும். நாம ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் நம்புற வரைக்கும் கூடவே இருப்போமே? உன் கிட்டே கண்ணியமா நடந்துக்குவேன். தமிழ் நாட்டுல நீ மூணாவது முறையா கல்யாணம் செய்துக்க நினைக்கும் போது நான் மாப்பிள்ளையா இருக்க விரும்புறேன். ஆனா இந்தத் திருமணம் நிலையானதா இருக்கும்னு எனக்குப் படுது. என்ன சொல்றே? வண்டி கிளம்பப் போகுது” என்றான்.

அவள் அலைபாய்ந்தாள்.

“இதோ பார் விஜி, நீ உடனே பதில் சொல்ல வேண்டாம். இப்படியே உக்காந்துக்க, நான் கதவருகே நின்னுக்கிட்டு யாருனா வராங்களானு பாக்குறேன். மாம்பலத்துல வண்டி நிக்கும். அதுக்குள்ள நீ என் கூட வர விருப்பம் இல்லையின்னா, இறங்கிக்க. என்னால இனி உனக்கு ஒரு தொந்தரவும் இருக்காது. இது தான் என்னை நீ கடைசியாப் பாக்குறதா நினைச்சுக்க. உன் வாழ்க்கையும் சீக்கிரமே உன் மனம் போல மாறணும்னு நான் விரும்புறேன்” என்று அவள் கையை அழுத்தி கன்னத்தைத் தொட்டு விட்டு எழுந்தான். வண்டி கிளம்பி நகரவும் அவன் கதவருகே சென்று நிற்கவும் சரியாக இருந்தது.

அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தன்னிடமும் பணம் இருக்கிறது. இவனை நம்பி இருக்க வேண்டியதில்லை. அப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது. அவனுடன் புது வாழ்வு தொடங்க மனதின் ஓரத்தில் ஏக்கம் தோன்றி வலுவடையத் தொடங்கியது. ஆனால் தன்னைப் போல் ஒரு மோசடிக்காரனிடம் எப்படி நம்பிக்கை வளர்ப்பது என்ற எண்ணம் தோன்றி அந்த ஏக்கத்தைத் துடைத்தது. தாய்-தந்தைகளிடமிருந்து தப்பி ஓடினாலும், எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? ஒரு வெறுப்பில் அவர்கள் உண்மையைச் சொல்லி நம்மைச் சிக்க வைத்து விட்டால்? விக்ரமுடன் நிகழ்ந்த சந்திப்புகளில் மனம் பறவையானதை நினைத்தாள். இவனுடன் ஓடி விடலாமா?

அதற்குள் மாம்பலம் வந்து விட்டதா? அவள் இன்னும் உட்கார்ந்திருந்தாள். அருகில் வந்த விக்ரம், “என்ன விஜி, இன்னும் யோசிக்கிறியா? உன்னோட தயக்கம் புரியுது. இறங்குறதுனா உடனே இறங்கு” என்றான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “வண்டி அடுத்து தாம்பரத்துல நிக்கும். அதுவரை டயம் கொடு” என்றாள்.

– 2009/05/10

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *