தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,979 
 

காலை நேரம் —
ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்தான் வேலு. தெருவில் ஒரு புதிய மனிதர் நுழைவதை கவனித்தான்.
“வத்சலாவின் பெரியப்பா போலிருக்கிறதே…’ என்று நினைத்தான். அடுத்த கணமே, “அவர் ஏன் இங்கெல்லாம் வரப் போகிறார்; அவரைப் போல தோற்றமளிக்கும் இவர் யாரோ…’ என எண்ணினான்.
ஆனால், வந்தது அவர்தான்.
பரபரப்படைந்தான்…
“”வத்சலா!” என்று குரல் கொடுத்தான்.
“”என்னங்க…”
“”யார் வர்றாங்கன்னு பாரு!”
எட்டிப் பார்த்தாள்.
தராதரம்
அதற்குள் மாணிக்கம் வீட்டை நெருங்கி விட்டார்.
அவர் மிகவும் சங்கோஜத்துடன் வந்திருந்தார்.
வேலாயுதத்தை, அதிகபட்சம் அவமானப் படுத்தியிருக்கிறார்; அலட்சியப் படுத்தியிருக்கிறார்.
வேறு யாராக இருந்தாலும், அவர் செய்த அலட்சியத்துக்கு திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்; மதித்திருக்க மாட்டார்கள்.
ஆனால், வேலு அப்படி இல்லை. ஒவ்வொரு முறை குன்றத்தூருக்கு போகும் போதும், மாமனார் வீட்டுக்கு போவதற்கு முன், பெரிய மாமனார் என்ற முறையில், முதலில் அவர் வீட்டுக்கு தான் விஜயம் செய்வான். அவர் கண்டும், காணாமல் இருப்பார். என்றாலும் அவன், “நல்லாயிருக்கீங்களா மாமா!’ என விசாரிப்பான்.
“எனக்கென்ன குறைச்சல்… ஏதாவது வந்துவிட்டால், மருத்துவமனைக்கு கூட்டிகிட்டு போக ஆட்டோக்காரன் நீ இருக்கியே…’ என, முகத்தில் அடிப்பார்.
அவனுக்கு பெண் கொடுக்கக் கூடாது என, தம்பி கதிரேசனிடம் சொன்னவர் அவர். அதையும் கடந்து அந்த கல்யாணம் நடந்த போது, அவர் அதை புறக்கணித்ததோடு, தம்பி வீட்டாரிடமும் உறவை துண்டித்துக் கொண்டிருந்தார். இவ்வளவு நடந்த பின்னும், தன்னை அவன் மரியாதையாக நடத்துவதை கவனித்திருக்கிறார். அந்த நம்பிக்கையில்தான், புறப்பட்டு வந்திருந்தார்.
“”வாங்க பெரியப்பா…” என்றாள்.
அவனும், “”வாங்க மாமா!” என அழைத்தான்.
“”என்ன வேலு, வத்சலா நல்லா இருக்கீங்களா?” என கேட்டபடி, குடையை மடக்கினார் மாணிக்கம்.
“”சவாரிக்கு தயாராயிட்டீங்க போலிருக்கு?” வேலுவைப் பார்த்து கேட்டார்.
“”பரவாயில்லை… நீங்க வாங்க!”
அவரை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
“”யாரு…” என கேட்டுக் கொண்டு, கொஞ்சம் தடுமாறி நடந்து வந்த அம்மாவிடம், “”குன்றத்தூரிலிருந்து வத்சலாவோட பெரியப்பா வந்திருக்காரு…” என அறிமுகம் செய்தான்.
“”அப்படியா… அங்க, எங்க சம்பந்தி நல்லாயிருக்காங்களா?” என விசாரித்தாள் அம்மா.
“”நல்லாயிருக்காங்கம்மா. நீங்க சவுக்கியமா? வீடு அடையாளம் தெரியல. முன்ன சின்னதா, நாட்டு ஓடு போட்ட வீடாயிருந்தது. இப்ப நல்லா வளர்த்தி கட்டிட்டீங்க…”
“”சின்னவனுக்கும் கல்யாணம் பண்ணனும். அவனுக்கும் இடம் வேணுமில்லையா… அதான்.”
“”பொண்ணு பார்த்துட்டீங்களா?”
“”இனிமேல்தான்…” என்றாள் அம்மா.
மோர் கொண்டு வந்து கொடுத்தாள் வத்சலா.
“”சாப்பிட வாங்க பெரியப்பா…” என்றாள்.
“”அதெல்லாம் முடிச்சிட்டுத்தான் வந்தேன். காலையில நீராகாரம் மட்டும்தான். வேற ஏதும் சாப்பிடறதில்லை,” என்றபடி, மோரை குடித்து விட்டு, மேல்துண்டால் உதடுகளை துடைத்துக் கொண்டு, வேலுவை பார்த்தார்.
ஏதோ முக்கியமான விஷயமாகத்தான் வந்திருக்கிறார் என, வேலுவுக்கு புரிந்தது.
சாதாரணமாக, அவர் யாரையும் தேடிப் போவதில்லை. குறிப்பாக, வேலுவை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவனென்றால், அவருக்கு கொஞ்சம் இளக்காரம். ஆட்டோ ஓட்டி பிழைக்கிறவன் தானே என்று.
சில வருடங்களுக்கு முன், வத்சலாவை பெண் பார்க்க போன போது நடந்த சம்பவம், அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதாக இல்லை.
வீட்டில் கல்யாண பேச்சு எடுத்தபோது… வேலுக்கு சொந்தத்தில், உள்ளூரில் பெண் எதுவும் இல்லை.
யாரோ சொன்னார்கள், “குன்றத்தூர்ல, உங்க வகையறாவுல ஒரு பெண் இருக்கு. கதிரேசன்னு ஒருத்தர்… ஒரே பொண்ணு. ப்ளஸ் டூ படிச்சிருக்கு… கேட்டுப் பாருங்க…’ என்றனர்.
குன்றுத்தூருக்கு போய் விலாசம் விசாரித்தான்.
அவள் புன்னகையுடன், “வாங்க…’ என்று அழைத்துக் கொண்டு போனாள். அந்த நிமிடமே, அந்தப் பெண்ணின் மேல், வேலுக்கு ஒரு அபிப்ராயம் ஏற்பட்டது.
பார்க்கப் போகும் பெண்ணும், இது போல கனிவான பேச்சும், உதவும் குணமும் கொண்டவளாக இருக்க வேண்டுமே என்று.
பிறகுதான் தெரிந்தது… தான் பார்க்கப் போன பெண்ணே அவள்தானென்று!
<வரவேற்று உட்கார வைத்தனர். பையன் ஆட்டோ ஓட்டி எனத் தெரிந்ததும், தயங்கினார் கதிரேசன். "நாங்க உத்யோகம் பார்க்கற மாப்பிள்ளையா பார்க்கறோம்...' என்றார். "அப்படி எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டால், என்ன மாதிரி ஆட்களுக்கு கல்யாணம் ஆகறது எப்படி... குடும்பஸ்தனாகறது எப்படி? உத்யோகத்துல இருக்கிற பையன்கள் இப்ப, மனைவியும் வேலைக்கு போறவளா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறாங்க. அதோடில்லாமல், வரதட்சணையும் எக்கச்சக்கமா கேட்கறாங்க... உங்களுக்கே தெரியும்...' என்றான் வேலு. அந்த உண்மையை கதிரேசனும் ஒப்புக் கொண்டார். அம்மாவும், "சொந்த வீடு, நிலம் எல்லாம் இருக்கு. ஆட்டோவும் சொந்தம் தான். அரசாங்க உத்யோகம் பார்க்கறவங்கள விட அதிகமாத்தான் சம்பாதிக்கிறான். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. உங்க பொண்ணை ராஜாத்தி மாதிரி வச்சிக்குவோம்!' என்றாள். காபி கொண்டு வந்த வத்சலாவின் பார்வையில் அன்பு தெரிந்தது. அவளுக்கு சம்மதமென்பதை அவன் தெரிந்து கொண்டான். "பெரியவரை ஒரு வார்த்தை கேட்டுட்டுத்தான் எதையும் பேச முடியும்...' என்ற கதிரேசன், அண்ணனுக்கு ஆள் அனுப்பினார். அவர்கள் வந்த செய்தி, மாணிக்கத்துக்கு சொல்லி அனுப்பப்பட்டது. அவர் கொஞ்சம் ஆவேசமாகவே வந்தார். "வரப்போறம்ன்னு முன்கூட்டியே சொல்ல வேணாமா... நாங்கெல்லாம் வேலை வெட்டியில்லாம சும்மாவா உட்கார்ந்திருக்கோம்...' என்றபடி வந்தார். வேலுவை ஏற இறங்க பார்த்து, "என்ன வேலை...' எனக் கேட்டார். "ஆட்டோ ஓட்றேன்...' என சொன்ன நொடியே, "க்கும்... ஆட்டோ காரங்களுக்கெல்லாம் பெண் கொடுக்கறதில்லை. போய் வாங்க...' என முகத்தில் அடித்தது போல் சொன்னார். தம்பியிடம், "ஏண்டா... ஆளுங்க வந்தால், என்ன ஏதுன்னு விசாரிச்சு வீட்டுக்குள்ள விடறதில்லையா...' என சத்தம் போட, வேலுவுக்கு சுருக்கென்றது. "இதோ பாருங்க... நாங்களும் மனுஷங்க தாங்க; உறவுக்காரங்கதான். ஏதோ வீட்டுக்குள்ள அசிங்கம் நுழைஞ்சுட்டது போல அலட்சியப்படுத்துறீங்க. ஆட்டோ ஓட்றது கேவலமா... ஆட்டோகாரன்னா இளக்காரமா... அதுவும் கவுரவமான தொழில்தான். திருடக் கூடாது; பொய் சொல்லக் கூடாது. நேர்மையாய் எந்த தொழில் செய்தாலும் இழிவில்லை. "வந்தோம், பார்த்தீங்க, புடிச்சிருந்தா சரின்னுங்க. இல்லைன்னா, இல்லைன்னு சொல்லுங்க. அதை விட்டுட்டு, ஆட்டோ ஓட்றவங்களுக்கெல்லாம் பெண் கொடுக்கறதில்லைன்னு, தயவு செய்து கேவலமா பேசாதீங்க. உத்யோகம் பார்க்கிற யாருக்கும் குறையாம சம்பாதிக்கிறோம். வீடு, நிலம், நீச்சுன்னு வசதியாத்தான் இருக்கோம்!' "அட... நாங்க அரசாங்க உத்யோகத்துல இருக்கிற மாப்பிளை வேணும்ன்னு பார்த்துகிட்டிருக்கோம். எங்க வீட்டு பெண்களை அப்படித்தான் கொடுத்திருக்கோம். வெயிலடிச்சாலும், மழை பெய்ஞ்சாலும் சம்பளம் வந்துடும்; நம்பி கொடுக்கலாம். ஆட்டோ ஓட்டிக்கு, ஒரு நாளைக்கு கிடைச்சாலும் கிடைக்கும்; அஞ்சு நாள் கிடைக்காமலும் போகும். "தவிர, ஆட்டோ ஓட்டிகள் நாகரிகமே தனி; அவங்க மொழியே தனி. தண்ணி அடிக்காத, பாக்கு போடாத ஆட்டோ டிரைவரை, நான் பார்த்ததே கிடையாது. எங்களுக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. அதை விட்டுக் கொடுக்க முடியாது...' என்றார் கறாராக. "நல்லவங்களும், கெட்டவங்களும் எங்கேயும் இருக்காங்க சார். சிலரை வச்சு, எல்லாரையும் எடை போடாதீங்க. எனக்கு தெரிஞ்சு, அரசாங்க வேலை பார்க்கும் பல பேர், கடன்காரர்களாவும் குடிகாரர்களாவும், குடும்பத்தை கவனிக்காமல் ஆட்டம் போடறவங்களாவும் இருக்காங்க. ஒருத்தருக்கு கை கட்டி பதில் சொல்லாமல், சுதந்திரமா செய்யற தொழில் ஆட்டோ ஓட்றது. ஊர்ல வந்து என்னைப் பத்தி விசாரியுங்க. எம் பேர்ல ஒரு தப்பு இருக்கான்னு...' "உன்கூட வாதாட நான் தயாரில்லை!' என எழுந்து போய் விட்டார். அந்த சம்பந்தம் கை கூடாது என்றுதான் நினைத்தான். ஆனால், வத்சலாவின் பிடிவாதத்தாலும், அவள் வீட்டு சூழ்நிலையாலும், கல்யாணம் நடந்தது. அந்தக் கல்யாணத்துக்கு பெரியவர் வராததோடு, தன் விருப்பத்துக்கு மாறாக செயல்பட்டதால் கோபித்துக் கொண்டு, தம்பி வீட்டாரோடு பேச்சு வார்த்தை இல்லாதிருந்தார். குன்றத்தூர் வந்து போகும் வேலு, மாணிக்கத்தை பார்க்க எப்போதும் தவறுவதில்லை. "அவருடைய குணத்தின் மீதுதான் அவனுக்கு வருத்தமே தவிர, அவர் மீது இல்லை...' என சொல்லிக் கொண்டு போவான். அவர் மனைவி மட்டும், "என்ன இருந்தாலும் மருமகப் பிள்ளை. விட்டுட முடியுமா?' என உபசரிப்பார்; அவரோ பாராமுகமாய் இருப்பார். அவரது மகன்கள், வங்கியிலும், ரயில்வேயிலும் வேலை பார்ப்பவர்கள். தகப்பனை விட கர்வம் ஒரு படி அதிகம். அவர்களும் சட்டை பண்ண மாட்டார்கள். அப்படியிருக்க, அவரே வீட்டுக்கு வருகிறார் என்றால், விஷயம் சீரியசானது என்று தெரிந்தது. ""சொல்லுங்க மாமா... ஏதாவது பணப் பிரச்னையா?'' என வேலு கேட்க, அவர் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து, எப்படி தெரியும் என்பது போல் பார்த்தார். ""அது வந்து... பெரியவன் வேலை பார்க்கிற இடத்துல, பணம் கையாடல் பண்ணிட்டான். நீ அன்னைக்கு சொன்னது சரியாத்தான் போச்சு. கெட்டவங்க எங்கும் இருக்காங்க. என் மகனே தப்பு பண்ணியிருக்கான். தலை குனிய வச்சுட்டான். இருபத்து நாலு மணி நேரத்துல ஒரு லட்ச ரூபாய் கட்டலைனா, போலீஸ்ல புகார் பண்ணி, <உள்ள வச்சிருவாங்க... வேலை போயிடும். நெருக்கடியான நேரத்துல எங்கேயும் பணம் கிடைக்கல...'' எனச் சொல்லி கொண்டு போனவரை, ஆட்டோவில் அழைத்து போய், அரை மணி நேரத்தில் பணத்தை ரெடி பண்ணி கொடுத்த போது, அவர் திடுக்கிட்டார். ""என்ன வேலு... ஆட்டோவை அடகு வைக்கற?'' ""அவசரத்துக்கு அதுதான் வழி. ஒரு வாரத்துல பணம் புரட்டி மீட்டு விடுவேன். அதுவரைக்கும் வாடகை ஆட்டோ ஓட்டி, அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். நீங்க உடனே பணத்தைக் கட்டி, பையனை காப்பாத்தப் பாருங்க...'' என்று அனுப்பி வைத்தான். நெகிழ்ச்சியில் அவருக்கு கண்களில் நீர் கசிந்தது. இந்த சம்பவம் நடந்த மறு வாரத்தில், தெரிந்த ஒருவர், தன் மகளுக்கு கல்யாணம் முடிக்கணும் என்று சொன்னபோது, ""எங்க மாப்பிள்ளையோட தம்பி ஒருத்தன் இருக்கார். ஆட்டோ ஓட்றார்... ஆனாலும், நல்ல வருமானம். பையனும் நல்ல பையன். விலாசம் தர்றேன் போய் பாருங்க...'' என சொல்லிக் கொண்டிருந்தார் மாணிக்கம். - எஸ்.செந்தமிழ் அரசு (டிசம்பர் 2010)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *