அன்றைக்குக் காலையில் எழுந்த – போதே அலுவலகத்துக்கு இன்று விடுப்பு சொல்லி விட வேண்டும் என்று அகில் தீர்மானித்து விட்டான்.
கடந்த பத்து நாள்களாக இருமல், நீர்க்கோவை, ஜாட்டியம் ஆகிய பாதிப்புகளால் அவன் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.
இனிமேலும் பொறுக்க அவனால் முடியவில்லை.
தன் முடிவை அம்மா விடம் சொன்னான்.
“இன்னிக்கு லீவ் போட்டு டாக்டர பாத்துட்டு வந்துடறேன் மா. ஏதாவது மருந்து சாப்டா தான் சரியாகும்னு நினைக்கிறேன்”
“ஆமாம் டா, நானே சொல்லணும்னு நினைச்சேன். ஒரு பத்து மணி வாக்குல டாக்டர் ராஜ்குமார பாத்துட்டு வந்திரு”
அம்மாவின் ஆதரவு கிடைத்த பின்னரே அகிலுக்கு தன் மீது ஒரு நன்மதிப்பு வந்தது.
அவன் உள்ளுணர்வு ஒரு விஷயத்தைச் “சரி” என்று சொன்னாலும் அவன் அம்மா அதை ஆமோதிக்க வேண்டும்.
அப்போது தான் அது அதிகார பூர்வமாக சரி என்று கருதப்படும்.
அந்த மருத்துவ மையத்தை நோக்கி அதில் சென்று கொண்டிருந்தான்.
கடந்து சென்ற குளிர்காற்று அவன் உடலை மேலும் பலவீனப்படுத்தியது.
பாயை விரித்தது போல வெயில் சாலையில் விரிந்து கிடந்தது. ஆங்காங்கே சில நாய்கள் மரவட்டைகள் போல் சுருண்டு படுத்திருந்தன.
அவற்றைப் பார்த்தவாறே அகில் வந்து கொண்டிருந்த போது திடீரென அந்த மருத்துவ மையம் காற்றில் முளைத்து நின்றது.
அப்போது தான் தன் வீட்டிலிருந்து அந்த மருத்துவ மையம் வெறும் பத்து நிமிட தூரம் என்பது அகிலுக்கு ஞாபகம் வந்தது.
தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்துமிடத்தில் நிறுத்தி அகில் வரவேற்பறை நோக்கி நடந்தான்.
வரவேற்பறையின் மேசைக்கு பின்னே நீல நிறப் புடவை அணிந்த இரு பெண்கள் அமர்ந்திருந்தனர். அந்தச் சீருடை அவர்களைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டியது.
அகில் வந்ததை அறிந்த ஒரு பெண் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என் பேரு அகில், டாக்டர் ராஜ்குமாரைப் பாக்கணும்”
“டாக்டர் வர்றதுக்கு இன்னும் அரை மணி நேரம் ஆகும். நீங்க உங்க நம்பர் கொடுத்துட்டு போங்க. நான் அவர் வந்ததும் கால் பண்றேன்”
“இல்ல பரவாயில்ல. நான் வெயிட் பண்றேன். வீடு பக்கத்துல தான் இருக்கு”
“இன்னும் அரை மணி நேரம் இருக்கே. பரவாயில்லையா?” என்று கேட்டு விட்டு அந்தப் பெண் சட்டென்று புன்னகைத்து விட்டு அகன்றாள்.
அகில் அதை எதிர்பார்க்கவில்லை. அவன் ஸ்தம்பித்து போனான்.
அரை நிமிடத்திற்கு அந்தப் புன்னகை அவனை நகர விடாமல் நங்கூரம் இட்டிருந்தது.
அந்தப் பெண் அப்படியொன்றும் அழகல்ல. ஆனாலும் ஒரு பெண்ணின் புன்னகைக்கு இத்துணை சக்தியுண்டா?
அவனால் நம்ப முடியவில்லை. சுதாரித்துக் கொண்டு அகில் மீண்டும் அந்தப் பெண்ணிடம் சென்றான்.
“டாக்டர் எத்தனாவது ஃப்ளோர்?”
“செகண்ட் ஃப்ளோர்”
மின் தூக்கியின் கதவுகள் திறந்ததும் டாக்டர் ராஜ்குமாரின் அறை எதுவென்று கேட்டு அதற்கு ஒட்டினாற் போல் இருந்த நாற்காலியில் அகில் உட்கார்ந்து கொண்டான்.
மக்களின் பேச்சொலி அந்தத் தளத்தை நிறைத்தது.
இடப்புறத்தில் கட்டணம் செலுத்தும் கவுன்ட்டர்கள் இருந்தன. அருகிலிருந்த ஒரு சுவரில் அந்த மருத்துவ மையத்தின் அருமை பெருமைகள் விளக்கப்பட்டிருந்தன. மற்றொரு சுவரில் அந்த மையத்தின் வரலாறு வரையப்பட்டிருந்தது.
அகில் இதையெல்லாம் நோட்டம் விட்டுக் கொண் டிருக்க அவனது செல்பேசி “புரரரரரர்” என்றது.
எடுத்துப் பார்த்தால் அம்மா குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
“டாக்டர பாத்தாச்சா?”
“இன்னும் இல்ல மா. அவர பாக்கத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். வர்ற நேரம் தான்”
இந்த அம்மாக்களே இப்படித்தான். அவர்களிடமிருந்து அன்பு எப்போதும் கசிந்தபடியே இருக்கும்.
நேரம் 10.45 ஆகியது. டாக்டர் ராஜ்குமார் இன்னும் வரவில்லை. அகிலுக்கு லேசாக சலிப்பு ஏற்பட ஆரம்பித்தது.
தன் செல்பேசியை எடுத்துப் பார்த்தான். உருப்படியான குறுஞ்செய்திகள் எதுவும் வந்திருக்கவில்லை .
தற்செயலாக பக்கவாட்டில் திரும்பிய போது தான் அவளைப் பார்த்தான்.
பனி போன்ற தூய வெள்ளைப் பாவாடை. சிமெண்ட் நிறத்தில் முழுக்கை சட்டை. 2000 ரூபாய் நோட்டைப் போன்ற சிவந்த முகம். செயற்கை நீரூற்று போல பொங்கி வழிந்து விரிந்த கூந்தல். பார்த்தவுடன் மனதுக்குள் வந்துவிடும் ஆளுமை. அழகில் நூறு சதவிகிதம்.
அகிலுக்கு அப்போதே உடம்பு பாதி சரியானது போல் இருந்தது.
அவளோடு பேச வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அதற்கு அவள் அருகில் போயாக வேண்டும்.
அப்படிச் செய்யலாமா?…. முடியாது. அது நமக்கு அசிங்கமாகிவிடும். பின் என்ன செய்வது ? அவ்வப்போது அவளைத் திரும்பிப் பார்த்த வண்ணம் இருந்தான்.
ஆனால் ரொம்ப நேரம் அதை அவனால் செய்ய முடியவில்லை. யாரேனும் தப்பாக நினைத்து விடுவார்களே என்று பயமாக இருந்தது.
இப்படியே நிலை கொள்ளாமல் தவித்த போது “குட் மார்னிங் குட் மார்னிங்” என்று சொல்லிக்கொண்டே டாக்டர் ராஜ்குமார் வந்தார்.
எழுந்து வணங்கி அகில் அவர் அறைக்குள் நுழைந்தான்.
அவன் மனதில் அப்போது ஒரு கன்றுக் குட்டி துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது.
அகில் டாக்டர் முன் அமர்ந்து கொண்டான்.
“சொல்லு பா”
“டாக்டர் ஒரு பத்து நாளா ரொம்ப ஜாட்டியமா இருக்கு. ஜுரமும் வரல. அதே சமயம் இந்த ஜாட்டியமும் போகல. கடுப்பா இருக்கு. கூடவே இருமல் சளி வேற”
“வாயை நல்லா திற. நாக்கை நீட்டு”. அகில் வாய் மலர்ந்தான்…
“உள்ளே நிறைய சேத்து வச்சிருக்கியே”
“அப்ப இது த்ரோட் இன்ஃபெக்ஷன்தானா டாக்டர்”
“ஆமாம்” என்று சொல்லி ஒரு வெள்ளைத் தாளில் பரபரவென்று மருந்துகளை எழுதினார்.
“6 நாளுக்கு மருந்து கொடுத்திருக்கேன். ஃபுல் டோஸ் சாப்பிடு. சரியாகிடுச்சேன்னு பாதியில் நிறுத்திட வேணாம். சிட்ரஸ் ஃப்ரூட்ஸ் சாப்பிடாதே. தினம் வெந்நீர்ல கார்கிள் பண்ணு”
“சரி டாக்டர். தாங்க் யூ”
அகில் அறையை விட்டு வெளியே வந்ததும் அவளைத் தான் தேடினான். காணவில்லை.
ஒரு வேளை மருந்தகத்துக்குப் போயிருக்கலாம் என்று கீழே வந்தான். மருத்துவ மையத்தின் தரைத்தளத்தில் தான் மருந்தகம் இருந்தது. அவன் எதிர்பார்த்தது போலவே அவள் தன் தோழியுடன் அங்கு நின்றிருந்தாள்.
தனக்கு முன்பே அவள் மருந்து வாங்கிக் கொண்டு போய்விட்டால் என் செய்வது?
அவன் மனம் பரபரப்படைந்தது.
எதிர்பார்த்தது போலவே அவள் மருந்துகளை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.
அப்போது தான் கடைக்காரர் அவன் முன்னே வந்து “சொல்லுங்க” என்றார்.
அகில் அந்த வெள்ளைத் தாளை அவரிடம் நீட்டி னான். அவர் படித்து விட்டு பின்னால் திரும்பினார்.
“அண்ணா .. ஒரு நிமிஷம்” என்று சொல்லி விட்டு வாகன நிறுத்துமிடத்திற்கு வந்தான். அங்கே அவள் இல்லை.
அதற்குள் கிளம்பி விட்டாளா?
பாய்ந்தோடி வாசல் பக்கம் வந்தான். அவள் தன் தோழியின் பின்னே அமர்ந்து இரு சக்கர வாகனத்தில் மெதுவாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளை அறியாமல் அவள் கையிலிருந்து ஒரு கரும்பொருள் நழுவி கீழே விழுந்தது. அது ஒரு செல்பேசி போல இருந்தது.
அகில் பின்னாடியே “ஹலோ ஹலோ” என்று கத்திக்கொண்டே ஓடினான்.
அது கேளாமல் அவர்கள் ஒரு திருப்பத்தில் சென்று மறைந்தார்கள்.
“ச்ச இவ்வளோ பக்கத்துல இருந்தும் மிஸ் பண்ணிட்டோமே” என்று அவன் சலிப்புற்ற போது கீழே கிடந்த அவள் செல்பேசி அவன் கண்ணில் தென்பட்டது.
அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
தன் உடலுக்குள் புதுக்காற்று நுழைந்தது போல் இருந்தது அகிலுக்கு.
சற்று களைப்பாக இருந்தாலும் அதன் மேல் சந்தோஷம் ஏறி அமர்ந்திருப்பது போல் இருந்தது.
தன் வீட்டிற்குள் வந்ததும் அகில் நேராக தன் அறைக்குப் போனான்.
அவள் செல்பேசியை எடுத்துப் பார்த்தான். தொலைத்து விட்டோம் என்பதை அறிந்த பின் தன் எண்ணுக்கு அவள் நிச்சயம் அழைப்பாள்.
பிறகு தன்னிடம் வந்து தான் அவள் செல்பேசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அப்போது அவளை மீண்டும் பார்க்கலாம். அதை எண்ணிய போதே அகில் திக்கு முக்காடிப் போனான். அவனை அவனால் சமாளிக்க முடியவில்லை.
அவள் பேர் என்ன?
அகில் அவள் செல்லில் இருந்து தன் செல்லுக்கு கால் செய்தான்.
அவன் செல்லில் இருக்கும் ‘ட்ரூ காலர்’ செயலி அவள் பெயரை மதி என்று சொன்னது .
அவள் செல்லில் ஃபேஸ்புக் செயலியும் இருந்தது. அதற்குள் போனால் அவள் ஐ.டி யை தெரிந்து கொள்ளலாம். தெரிந்தால் நட்புக்கரம் நீட்டலாம்.
அழகான பெண். கண்டிப்பாக ஏகப்பட்ட ‘தாமிக்கள் (செல்ஃபீ) எடுத்திருப்பாள்.
கேலரியை திறந்தால் அவற்றை எல்லாம் கண்டு ரசிக்கலாம்..
“அகில்… அகில்….”
அம்மாவின் அழைப்பு அகிலை இந்த உலகத்திற்குள் மீட்டுக் கொண்டு வந்தது.
அவள் செல்பேசியை அப்படியே வைத்து விட்டு அகில் கீழே வந்தான் .
“என்ன மா?”
“டாக்டர் என்ன டா சொன்னார்?” “எதிர்பார்த்த மாதிரியே த்ரோட் இன்ஃபெக்ஷன்தான்
“ம்ம்… சரி”
அம்மாவின் முகம் கொஞ்சம் சோர்ந்திருந்தது.
“என்னமா உடம்பு சரியில்லையா?”
“ஆமாம் டா. அதான் உன்ன கூப்டேன். வயிறு சரியில்லாத மாதிரி இருக்கு. கடைக்குப் போய் சோடா வாங்கிட்டு வர முடியுமா?”
“ஆ.. சரி மா.”
அகில் தன் வீட்டருகே இருக்கும் மருந்தகத்துக்கு கிளம்பினான்.
இந்நேரம் தன் செல்பேசி தொலைந்தது தெரிந்து தன் செல்லுக்கு அவள் கால் செய்ய வேண்டுமே?.
“அய்யய்யோ “.
அகில் தன் பாக்கெட்டுகளுக்குள் படபடப்புடன் துழாவினான்.
அப்போது தான் அவளது செல்லை வீட்டிலேயே விட்டு விட்டோம் என்பதை அவன் அறிவு சொல்லியது.
“ச்ச” என்று தனக்குள்ளேயே அரற்றி அவசர அவசரமாக ஓடி சோடா வாங்கி வீட்டுக்கு வந்தான். வரும் வழியில் நண்பன் ரிஷி கால் செய்தான்.
“ஹலோ “
“டேய் ஒரு ஹெல்ப் டா. எங்க இருக்கே?”
“வீட்டுக்கு பக்கத்துல வெளில”
“சரி. ஒரு ஹெல்ப் டா. பாப்பாக்கு உடம்பு சரியில்ல. அவசரமா 1000 ரூபா தேவைப்படுது. உன் கிட்ட இருக்குல்ல”
“ஆ… இருக்கு “
“சரி. நீ ரவுண்டானா கிட்ட வந்துடு. நான் அங்க வந்து வாங்கிக்கறேன்”
ரிஷியிடம் பணம் கொடுத்து விட்டு அகில் தன் அறைக்கு பதற்றத்துடன் ஓடி வந்தான்.
எதிர்பார்த்தது போலவே அழைப்பு வந்திருந்தது. மொத்தம் 15 மிஸ்டு கால்கள்.
அழைக்கப்பட்ட எண்ணுக்கு அவன் செல்லிலிருந்து அழைத்தான்.
நிச்சயம் அவளாகத் தான் இருக்க வேண்டும்.
“ஹலோ “
“ஹலோ நான் மதிவதனி பேசறேன்”
“மதிவதனியா?… ஆ…சொல்லுங்க”
“நீங்க வச்சிட்டிருக்கிற செல் என்னோடது – இன்னிக்கு காலைல கிளீனிக்கில இருந்து கிளம்பும் போது தொலைச்சுட்டேன். இப்ப என் ஃப்ரெண்டு செல்லுல இருந்து ஃபோன் பண்றேன். இதுக்கு முன்னாடி நிறைய வாட்டி பண்ணேன். ஏன் எடுக்கவேயில்ல?”
“இல்ல சாரி. நான் அவசரமா வெளிய போயிட்டேன். மறந்து உங்க செல்ல வீட்லயே வச்சுட்டு போயிட்டேன். அதான்”
“சரி. நீங்க எங்க இருக்கீங்க?”
“அண்ணாநகர்”
“ஓகே. நான் அடையாறுல இருக்கேன். இன்னும் முக்கா மணி நேரத்துல வந்து ஃபோன வாங்கிக்கறேன்”
“கண்டிப்பா”
“உங்க அட்ரஸ் சொல்லுங்க”
“இல்ல வீடு வரைக்கும் வர வேணாம். ரவுண்டானா கிட்ட வந்துடுங்க. நான் அங்க வெயிட் பண்றேன்”
“சரி. ஒரு சின்ன ரிக்வெஸ்ட்”
“சொல்லுங்க”
“ஃபோன்ல என்னோட ஃபோட்டோஸ், ஃபைல்ஸ், ஃபேஸ்புக் எல்லாம் இருக்கு. தயவு செய்து அத ஒண்ணும் பண்ணிடாதீங்க”
“ச்ச ச்ச.. அதெல்லாம் இல்லீங்க”
“சரி. பை”
அகிலுக்கு சற்று அவமானமாய் இருந்தது. அவள் கேலரி, ஃபேஸ்புக் இவற்றை எல்லாம் பார்க்க திட்டமிட்டிருந்தோமே என்று தன்னைத் தானே அவன் திட்டிக் கொண்டான்.
“ஆனா. ஏன் ஒரு நன்றி கூட சொல்லல” என்று அவனுக்குச் சற்று ஆச்சர்யமாய் இருந்தது. பதற்றத்தில் மறந்து போயிருக்கலாம் என்று அவனே அவனைத் தேற்றிக் கொண்டான்.
அகில் கிளம்பத் தயாரானான். அவளிடமிருந்து மீண்டும் அழைப்பு.
“ஹலோ. எங்க இருக்கீங்க”
“இதோ கிளம்பிட்டேன்”
“சாரி. உங்க பேர் கேக்க மறந்துட்டேன்”
“அகில்”
“ஓகே. நாங்க இன்னும் 15 நிமிஷத்துல அங்க இருப்போம்”
“சரி.. நோ ப்ராப்ஸ். நான் வந்துடுவேன்”
“அகில்.. அந்த ஃப்போடோஸ ஒன்னும் பண்ணிடலியே”
“சீச்சீ இல்லீங்க”
“ஓகே”
அவள் இணைப்பைத் துண்டித்தாள். ஏன் மறுபடி மறுபடி அதையே கேட்கிறாள். முன் பின் தெரியாத ஒருவனிடம் செல்பேசி இருக்கிறது. என்னை அவளுக்கு இதற்கு முன் தெரியாது. அழகான பெண் வேறு. பயப்படுவது நியாயம் தான்” என்று அகில் தன்னை அமைதிப்படுத்தினான்.
இவ்வளவு பயப்படும் பெண் ஏன் தன் செல்லை கீ போட்டு பூட்டவில்லை என்று அவனுக்கு வியப்பாயிருந்தது.
அகில் ரவுண்டானாவில் காத்துக் கொண்டிருந்தான். காலையில் பார்த்த வெள்ளைப் பாவாடையோடே இப்போதும் வருவாளா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அவனுக்கு புன்னகை வந்தது.
அவன் அங்கு வந்த பத்தாவது நிமிஷத்தில் அவள் தன் தோழியுடன் வந்திறங்கினாள் அதே வெள்ளைப் பாவாடையுடன்.
அகில் மீண்டும் மலர்ந்தான்.
“மதி.. மதி”
தன் பெயரைக் கேட்டு திரும்பிப் பார்த்த மதிவதனி அவனை நோக்கி வேகமாக வந்தாள்.
“இந்தாங்க உங்க செல்ஃபோன்”
அவள் பரபரப்புடன் தன் செல்பேசியை வாங்கிக் கொண்டாள். உடன் வந்த தோழி “தாங்க்ஸுங்க” என்றாள்.
மதிவதனி யாருக்கோ கால் செய்தாள்.
“அம்மா .. செல் கிடைச்சிடுச்சி. இப்போ தான் வாங்கினேன்.. ஆ..சரிமா”
மதி சட்டென்று அவன் பக்கம் திரும்பி “ஏங்க ஃபோடோஸ் எல்லாம் சரியாத்தானே இருக்கு… ஒண்ணும் பண்ணலையே” என்றவாறே தன் செல்லை மேய்ந்தாள்.
அகிலுக்கு சற்று கோபம் வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டான்.
“இல்ல ஒண்ணும் பண்ணல. ஆனா ஒரு விஷயம். நீங்க ரொம்ப அழகா இருந்தீங்க. அதனால உங்க ஃபோட்டோஸ் பாக்கணும்ன்னு நினைச்சது உண்மை தான். ஆனா நீங்க ஃபோன் பண்ண பிறகு தான் நான் நினைச்சது எவ்வளோ தப்புன்னு தெரிஞ்சுது. அப்புறம் உங்க ஃபோன தொடவே இல்ல.சாரி”
மதிவதனி அவன் அப்படி நேர்மையாய்ப் பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை.
சே! சே! நான் பாக்கவேயில்லீங்க என்று சமாளிப்பைத் தான் அவள் யூகித்திருந்தாள்.
“சரி. நான் வர்றேன்” என்றவாறே தன் தோழியுடன் புறப்படத் தயாரானாள். அகிலுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவளும் அவள் தோழியும் வந்த வாகனம் புகையைக் கக்கிய படி மெதுவாக ஓடத் தொடங்கியது.
“நீ பண்றது ரொம்ப ஓவர்டி. அவன் நினைச்சிருந்தா உன் செல்லை திருடியிருக்கலாம். ஆனா அவன் பண்ணல. உனக்காக வெயிட் பண்ணி செல்ல வந்து கொடுத்தான்ல. ஒரு தாங்க்ஸ் சொன்னா குறைஞ்சா போயிடுவ. அவன பாத்தா ரொம்ப ஜெனுயின் ஆன ஆள் மாதிரி தான் தெரிஞ்சுது. அவனப் போய் சந்தேகப்படற. எனக்குப் புரியவேயில்லை”
அவன் தன்னிடம் உண்மையைப் பேசியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதை மீண்டும் எண்ணிய போது அவளுக்கு சிரிப்பு வந்தது.
அந்தப் புன்னகையை சுமந்து கொண்டு திரும்பிப் பார்த்தாள்.
அப்போது அகில் தன் முதுகை அவளுக்குக் காட்டிக் கொண்டு வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தான்.
மதியின் புன்னகை கண நேரத்தில் காணாமல் போனது.
அவள் மட்டும் ஒரு நிமிடத்துக்கு முன் அவனைப் பார்த்துப் புன்னகைத்திருந்தால்…
– டிசம்பர் 2017