புகுஷிமாவும் கண்வலியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,002 
 

கொஞ்சம் கொஞ்சமாக அலுவலக ஏசி அறையையும் மீறி அவனது கண்ணின் கற்கட்டி வலி கூடத் தொடங்கியிருந்தது. காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போதே அவள் அவனிடம் வாஞ்சையுடன் தெரிவித்த கவலை அவனது வலியை சற்று குறைத்ததைப் போல தோன்றினாலும் அந்த வலி அத்தனை எளிதில் அவனை விட்டு நீங்கிவிடும் என்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. விரைந்து சென்று அவளது குளிரான அணைப்பிற்குள் தன்னை பொதிந்து கொண்டு தீராத ஓய்விற்குள் பாய்வதற்கு அவனது உடலும் மனமும் அல்லாடியபடி இருந்ததை அவனது வேலைப் பொழுதுகளில் உணர்ந்தான். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அலுவலகத்தில் அவன் ஏற்படுத்திக் கொண்ட காரசாரமான ஒரு சண்டைக்கு இந்த நோயின் முன்னறிகுறியாக அது இருக்கலாம் என்று அவள் கவலையுடன் சொல்லி அனுப்பியிருந்தாள். எனவே கூடுமானவரை மிகவும் நிதானத்துடனும் வாய்ப்பிருந்தால் விரைந்து வீட்டிற்கு வந்து விட சொல்லியிருந்த அவளது சொற்கள் அருவியின் மெல்லிய ஈரத்தைப் போல அவனுள் வழிந்தோடியபடி இருந்தது. அந்த ஈரக்கரையில் நின்றுதான் அலுவலகத்தின் சலிப்பூட்டும் சூழலில் இருந்து வேலையை வேகமாக முடித்துக் கொண்டு அன்றைக்கு வீட்டிற்குத் திரும்பிவிட வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தான். ஏறக்குறைய ஒவ்வொரு பிற்பகலிலும் அவனது வேலை முடித்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து தகிக்கும் வெப்பத்தின் ஊடாக பேருந்தில் ஏறி வியர்வை கசகசக்க வீட்டிற்கு திரும்புவது என்பது நெருப்பாற்றில் பயணம் செய்வதைப் போன்றது என்ற உணர்வை அடைவான். மேலும் வேலையால் உருவான மூளைக் களைப்பால் பிற்பகலின் அனைத்து சாத்தியங்களும் அவனுக்கு அலுப்பானதாக மாறிவிட்டிருந்தன. ஒரு பிற்பகலை குழந்தை வரையும் சித்திரத்தின் வரைபடத்தில் இருக்கும் சூரியனை அழித்து விடும் அழிரப்பரைக் கொண்டு அழித்து விட்டு நேரடியாக மாலையை கடந்து இரவுக்குள் நாட்கள் பாய்ந்து விடாதா என்று மனம் ஏங்கும். காலத்தின் விதிகள் மனித கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதல்ல என்ற போதிலும் வெயில் நாளின் தள்ளாடும் களைப்பு அவனை மிகவும் அயர்ச்சியான மனநிலைக்கு கொண்டு செல்லும். பறவைகளும், நாய்களும், சிறு பூச்சிகளும் கூட தங்களுடைய அன்றைய உணவை அசைப்போட்ட படி தங்களுக்கு வாய்த்த சிறு நிழலில் இளைப்பாறுவதை காணும் போது உலகம் சபிக்கப்பட்டதாகவே தோற்றம் கொள்ளும். ஆனால் கருணையற்ற சூரியன் யாருக்காகவும் விரைந்து பாய்வதோ, நிதானித்து கடந்து செல்வதோ இல்லை. அது எல்லோருக்குமான வெயிலை ஒரே போலவே பொழிகிறது என்று சுயசமாதானம் செய்து கொள்வான். தப்பிச் செல்ல வாய்த்தவன் பாக்கியவான் என்று தோன்றும்.
இன்றைய கண்வலியால் வெகு விரைவிலேயே வேலைகளை சுருக்கிட்டு முடித்தவன் ஒரு அசடனின் துணிச்சலுடன் பிற்பகல் வெயிலை எதிர்கொள்ள தயாரானான். வழக்கமான அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கடைசி தொலைபேசி அழைப்பு வருவதற்குள்ளாகவே சிறிய அனுமதியுடன் தனது ஏசி அறையை கைவிட்டு வீட்டை சென்றடையும் அவசரத்தில் வெளியேறினான். அலுவலகம் 75 சதவீதமே முடிவடைந்திருந்த நிலையில் யாருடைய கண்ணிலும் தட்டுப்பட்டு விடுவதற்கு முன்பாக தனக்கு வரவேண்டிய பிற்பகல் பேருந்தின் காலக் கணிதத்தை மனத்தில் வகுத்துக் கொண்டே வெயிலில் வீறு நடை போட்டு மத்திய பேருந்து நிலையத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான். செல்லும் வழிகளில் சாலையை கடக்கும் முயற்சியில் ஒரு ஆட்டோ ஒன்றின் மீது மோதிக் கொள்ளும் அபாயத்தையும் தாண்டி வேகமாக வீட்டிற்கு சென்று ஒரு முடிவற்ற ஓய்வில் தன்னை சரித்துக் கொள்வதைப் பற்றிய கனவை தீட்டியபடி சென்றவனுக்கு அது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை.

ஒவ்வொரு சிறிய வேலைகளுக்குப் பின்னாலும் மிகப் பெரிய திட்டங்களை மனம் வகுத்துக் கொண்டே இருக்கிறது. காலத்தின் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் சாத்தியப்பாடுகளின் நிகழ்தகவு விரிவடைந்து செல்ல செல்ல திட்டங்களும், திட்டங்கள் குறித்த கனவும் விரிவடைந்தபடியே இருக்கின்றன. சமீப நாட்களில் ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கமும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உருவான பேராழீ எனப்படும் சுனாமி அலைகளும் அவை வாரி சுருட்டிய தொலைக்காட்சி பிம்பங்களும் மனதிற்குள் அலையடித்தப்படி இருந்தன. மேலும் அதனைத் தொடர்ந்து ஜப்பானில் இருந்த அணுஉலைகள் வெடித்து சிதறி விட்டதாகவும் அவற்றிலிருந்து வெளிவரும் நச்சு கதிர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரம் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் பரபரப்பூட்டிக் கொண்டிருந்தன. ஜப்பான் நாட்டிலிருந்து கதிர்வீச்சு காரணமாக காய்கறிகள், பால் போன்றவை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர். ஆகையால் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்த நாடு தடைவிதித்திருப்பதாகவும், கதிர்வீச்சின் பாதிப்பு வெளித் தெரிய சுமார் ஒரு வருடம் வரை ஆகும் விஞ்ஞானிகள் ஆரூடங்கள் சொல்லிய வண்ணம் இருந்தனர். அழிவின் கொடுஞ்சித்திரம் அனைவரின் மனதிலும் விரிந்து கொண்டே சென்றன. விளையாட்டுப் பொம்மைகளைப் போல கார்களும், கப்பல்களும், விமானங்களும் குப்பையோடு குப்பையாக கிடப்பதை தொலைக்காட்சிகள் செயற்கைகோள் துணையுடன் படம் பிடித்து தான்தான் முந்தித்தருவதாக பிதற்றிக் கொண்டு வெளியிட்டுக் கொண்டிருந்தன. மனித குலம் முன்னெப்போதையும் விட மிகச் சிக்கலான சவாலை சந்தித்திருப்பதாக இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்று உலகம் முழுவதிலும் இருந்து மனித ஆர்வலர்கள் கவலை தெரிவித்ததை எந்த செய்தி சானல்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஒரு சமயம் அந்த கதிர்வீச்சின் காரணமாகத்தான் தனக்கு கண்ணில் சிறு கட்டியும், கொடுமையாக தகிக்கும் உக்கிரமான கோடை வெயிலும் தரப்பட்டுள்ளதோ என்று கூட அஞ்சினான். இதை குறித்து யாரிடமும் சொல்ல முடியாது. சொன்னால் தனக்கு ஏதோ சித்தம் கலங்கி பித்து பிடித்துவிட்டதாகக் கூட பட்டம் கட்டி விடுவார்கள் என்று அஞ்சினான்.

அவனது குழப்பமான மன பதட்டத்துடனேயே அவன் பேருந்து நிலையத்தை வந்தடைந்தான். அங்கு அவனது கணிதங்கள் சரிந்து கிடப்பதை பிற்பகல் வெயில் கண்டு கேலி செய்தது. புதிதாக தளமிடப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையத்தின் பூமிக்கடியில் இருந்து வெப்ப கதிர்கள் பிளந்துகொண்டு ஒவ்வொருவரையும் விழுங்க வருவதைப் போல கற்பனை செய்தான். தனது அச்சத்தின் மாயப்பிடியிலிருந்து தன்னை எவ்வாறு விடுவித்துக் கொள்வது என்பதைக் குறித்து அவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் தன்னை அந்த பிற்பகல் வெயிலில் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் மரணத்தின் கைப்பிடித்து அழைத்து செல்லும் வெப்பகதிர் வீச்சு நோயாளிகளைப் போல மிகவும் களைப்புடன் காணப்படுவதைப் போல அவனுக்குத் தென்பட்டது. தன்னையும் மற்றவர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள் என்பதாக அவன் கற்பனித்துக் கொண்டான். தாகத்தின் தீ விரல்கள் அவனது தொண்டைக் குழிக்குள் இறங்கும் போது நெருப்பை விழுங்குவது போல அவனுக்குப்பட்டது. எரிச்சலுடன் செத்த உடல்களைப் போல பேருந்து நிலையம் முழுவதும் மதிய உணவு வேளை இடைவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்துகளை பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. தேவையில்லாமல் நடத்துநர் மற்றும் ஓட்டுனர்கள் மீது கோபம் எழுந்தது. அந்த கோபம் நிர்வாகத்தின் மீதும், நிர்வாகத்தை உருப்படியாக நடத்த தெரியாத அரசாங்கத்தின் மீதும் ஆற்றாமையாக அது திரும்பியது. அந்த வெயிலால் அந்த நகரமே ஒரு சாம்பல் நிற புதைவடிவ சிற்பத்தைப் போல அவனுக்கு காட்சியளித்தது. கானல்கள் அசையும் வெப்ப தருணத்தில் தனது திசை வழியே செல்லும் பேருந்து ஒன்று பொதி கழுதை ஒன்று அசைந்து வருவதைப் போல வந்தது. ஏறக்குறைய நிரம்பி வழியத் தொடங்கியிருந்த அந்த கூட்டத்தினு£டாக தன்னையும் திணித்துக் கொண்டான். மெதுவாக ஊர்ந்தபடியே சென்ற அந்த பேருந்து நிலையத்தில் நிற்காமலேயே தன்னை வெளியேற்ற ஆயத்தமானதைத் தொடர்ந்து அவன் உள்பட பலரும் மகிழ்ச்சியில் பெருமூச்சு விட்டனர். Ôஅப்பாடாÕ வென பசியை சகித்துக் கொண்டு பேருந்தில் ஏறிய கிராமத்தினர் உள்பட தானும் திட்டமிட்டபடியே விரைவில் வீட்டிற்கு சென்று ஓய்வெடுப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறி சென்றது. ஆனால் சிறிது நேரமாகியும் நடத்துநர் டிக்கெட் எதையும் பெற்றதாக தெரியவில்லை.

வெயில் மயக்கத்தில் தவறான பேருந்து எதிலும் ஏறி விட்டோமோ என்ற சந்தேகம் அவனுக்கு வலுத்தது. தனது மன சுவாதீனம் இன்னும் அந்த அளவுக்கு சரிந்து விடவில்லை என்று திடமாக நம்பினான். ஆனால் யாரிடமும் ஒரு பதற்றமும் காணப்படாததை கண்டு இவனுக்கு பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. நடத்துனர் வருவதற்கு முன்பாகவே சில்லரைகளை சரிபார்த்து கைகளில் வைத்துக் கொண்டான். அந்த பேருந்து சிட்டி எக்ஸ்பிரஸ் என்று அரசால் வருணிக்கப்பட்ட பேருந்து. சாதாரண பேருந்தை விட சற்று கட்டணம் அதிகம். ஒரு சமயம் தவறான பேருந்தாக இருக்கும் பட்சத்தில் தான் செல்லும் வழியிலேயே பாதி து£ரம் வரை அதில் பயணம் செல்லலாம் என்றும், அதற்குண்டான கட்டணத்தை செலுத்தினால் மீதி சில்லரை தனது வீடு வரை செல்வதற்கான அளவுக்கு இருக்குமா என்று ஒன்றுக்கு பலமுறை சோதித்துக் கொண்டான்.

பேருந்து அடுத்த நிறுத்தம் வரை சென்று அங்கிருந்து அருகிலிருந்த பணிமனையை நோக்கிச் செல்லும் வழியில் திரும்பியதும் தான் இவனுக்கும், பிறருக்கும் பல்வேறு உள்ளீடான விசயங்கள் புலப்பட்டன. அதனால் தான் நடத்துனர் டிக்கெட் வாங்கவில்லை என்றும் புரிந்தது. அதற்குள்ளாக பேருந்து பணிமனை வாசலை அடைந்து விட்டது. நடத்துனரும், ஓட்டுநரும் எல்லோரும் பணிமனைக்கு வெளியிலேயே இறங்கிக் கொள்ளுமாறும், உள்ளே யாரையும் அனுமதிக்க முடியாது என்றும், பத்து நிமிடத்தில் மீண்டும் வந்து அழைத்துச் செல்வதாகவும் கூறி அனைவரையும் இறங்கும்படி ஆணையிட்டார். பெரும்பாலான பயணிகள் இறங்க மறுத்தபோது ஓட்டுனர் பயணிகள் அனைவரையும் அவர் கடவுளைப் போலவும், இவர்கள் அனைவரும் பாவிகளைப் போலவும் பாவித்துக் கொண்டு நயத்தக்க நாகரீக முறையில் கர்ஜித்தார். பயணிகள் எரிச்சலுடன் இறங்கினர்.

பிற்பகலின் வெயில் தனது தாண்டவத்தை நடத்த சிலர் கிடைத்துவிட்டதைக் கண்டு நாக்கை உறிஞ்சி சப்புக் கொட்டிக் கொண்டது. கிராமத்திலிருந்து வந்து பசியை விழுங்கிய வயோதிகர்கள். கைக்குழந்தைகளுடன் பெண்கள், கல்லு£ரி முடிந்து திரும்பும் ஒருசில வாலிபர்கள், ஒரு சில இளம் பெண்கள், கூடை வியாபாரம் செய்யும் கிராம பெண்கள் என பலதரப்பட்டவர்களும் அதில் இருந்தனர். ஆனால் வெயில் கருணையற்றது என்பது அங்கு இருந்த அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது. பேருந்தை விட்டு இறங்கியதும் அனைவரின் கால்களும் அனிச்சையாக எதிர் வரிசையில் இருந்த பட்டறை போன்ற ஒரு கட்டிட நிழலில் தஞ்சம் புகுந்தனர். உள்ளே சென்ற பேருந்து என்ன ஆனது என்பது ஓட்டுனர்களுக்கும் கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் பிற்பகல் ஒரு அதிகார மமதையுடன் அந்த தெருவில் ஒரு குடிகாரனைப் போல படுத்து கிடந்தது. குடிகாரனின் மிதமிஞ்சிய போதையில் பரவும் சலனத்தைப் போல வெயில் அனைவரின் மீதும் ஒரு வாஞ்சையற்ற அரவணைப்பை தந்தது. வயோதிகர்கள் வெயிலால் சுருண்டபடி சுவரோரம் பதுங்கும் நாய்க் குட்டிகளை போல நிழலில் சரிந்தனர். அந்த சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த கூர்மையான கற்கள் அங்கு யாரும் அமரக்கூடாது என்ற எல்லையற்ற கருணையுடன் பதிக்கப்பட்டிருப்பதை கண்டு அந்த இளைஞர்கள் தங்களுக்குள் நம்மைப் போன்ற திருடர்களுக்காகத் தான் என்று பிறருக்கு கேட்காத வண்ணம் முணுமுணுத்தபடி கேலி செய்தனர்.

அவனுக்கு படிப்படியாக எரிச்சல் உணர்வு அதிகரிக்க தொடங்கியது. காலம் ஒரு செல்லாக் காசைப் போல அவன் முன்பாக வீசியெறிப்பட்டிருப்பதை போல அவமான உணர்ச்சியடைந்தான். நடத்துனர், ஓட்டுநர்கள் மீது அவனுக்கு கடும் கோபம் எழுந்தது. பணிமனைக்குள்ளே புகுந்து தனது பணியை பயன்படுத்தி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆவேசம் அவனுக்குள் எழுந்தது. பத்து நிமிடத்தில் என்று நடத்துனர் ஏறும் போதே சொன்னதாக இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். பத்து நிமிடம் என்றால் அரை மணிநேரம் தான் என்று கேலி பேசி சிரித்துக் கொண்டனர். பணிமனைக்கு எதிரே இருந்த பள்ளி ஒன்றில் தனது பள்ளிபை ஒன்றை தவற விட்ட சிறுவன் ஒருவனை தாய் ஒருத்தி வியர்க்க விறுவிறுக்க அவனை செல்லமாக கோபித்தபடி மீண்டும் பள்ளிக்கு இழுத்து வந்து பையை எடுத்து வர அவனை விரட்டிக் கொண்டிருந்தாள். பிற்பகல் என்ற பாம்பை ஒரு பொம்மையைப் போல கையில் பிடித்து விளையாடும் குது£கலத்துடன் அவன் ஓடியபடி பள்ளியை நோக்கி ஓடினான். அவர்களை கண்டு பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு காத்துக் கிடக்கும் அவர்கள் வேடிக்கை பார்த்தனர். அந்த தருணத்தை தள்ளிவிடுவதற்கு அவர்கள் ஒரு வேடிக்கை பொருளாக மாறியிருந்தனர். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பிராந்தியத்திற்கே அந்த பயணிகள் ஒரு வேடிக்கை பொருளாக மாறியிருந்தனர். ஆனால் இது போன்ற சம்பவங்கள் வாடிக்கையானவைதான் என்பது போல அந்த பகுதி மக்களின் பாவனை இருந்தது. அல்லது அவர்களும் பிற்பகல் வெயிலின் நஞ்சால் தீண்டப்பட்டு அரை மயக்க நிலையில் இருந்ததால் இது போன்ற காட்சிகள் அவர்களை பாதிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டான். வெயில் அவனுக்கு ஒரு மகத்தான சவாலாக மாறிவிட்டிருந்தது. இடுப்பிலிருந்து வியர்வை நதி புறப்பட்டு அவனது பாதங்களை நோக்கி ஒரு பூச்சி ஊர்வது போன்ற உணர்வுடன் கீழிறங்கிப் போவதை அவன் உணர்ந்தான். தனது கால்சட்டை வியர்வையால் ஈரமாகிவிட்டதா என்று குனிந்து பார்த்துக் கொண்டான்.

மக்கள் தனது தவிப்புகளை மறந்து சாவகாசமாக வெயிலை சபித்தபடி அவர்களுக்குள் பேசி சிரித்தபடி காத்துக் கிடந்தார்கள். அவன் இவர்களை ஒன்று திரட்டி பணிமனை முன்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்து, அது பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியாகி, போலீசார் வந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தி முடித்து, ஒரு புத்தம் புதிய பேருந்தில் அனைவரையும் சகல சௌரியங்களுடன் ஒரு குளிர்ந்த தண்ணீர் பாட்டிலுடன் அனுப்பி வைத்தனர். ஆனால் வெயில் அவனது கற்பனையை எல்லாம் மீறியதாக தனக்கே உரித்தான வெளிறிய நிறத்தில் ஒளிர்ந்தது. அந்த பகுதியே ஒரு வெறுமையான சித்திரத்தைப் போல அது காட்சி அளித்தது. நீண்ட யுகங்களாய் தியானத்தில் திளைத்த தவயோகியின் கண்களைப் போல அந்த பிற்பகல் வெயில் பழுத்து காய்ந்திருந்தது, சிதறவிடப்பட்டிருந்த அந்த பயணிகள் கூட்டத்தில் பெரும்பான்மையானோர் படிப்படியாக கரையத் தொடங்கியிருந்தனர். ஒரு சிலர் சற்று தள்ளியிருந்த இரும்பு பெட்டியால் கட்டப்பட்ட சிறிய தேநீர்கடையில் அந்த பிற்பகலையும் அதன் வெப்பத்தையும் மிடறு மிடறாக விழுங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் நெருப்பை கரைத்து விழுங்குபவர்களைப் போல அவனுக்கு தோன்றியது. அந்த பணிமனையின் பகுதியில் இருந்த குடியிருப்பின் சந்து ஒன்றிலிருந்து மணல் லாரி ஒன்று மண்ணை கடத்திக் கொண்டு மற்றொரு சந்தின் வழியே அதிகாரிகள் கண்களில் படாமல் இருப்பதற்காக வளைந்து வளைந்து சென்றது. பள்ளியை அடுத்த அந்த சிறிய தெருவின் வழியே சென்ற அதன் அசாத்திய வேகம் அங்கிருப்பவர்களுக்கு அச்சத்தை உண்டாக்குவதாக இருந்தது, அந்த லாரி சென்ற பின் வாரியிறைக்கப்பட்ட செம்மண் புழுதி பிற்பகலின் வெயிலின் மீது படிந்து வெயிலே ஒரு மெல்லிய செம்மண் நிறத்தில் மாறிவிட்டதைப் போல அவனுக்குத் தோன்றியது, டீக்கடையில் நெருப்பை விழுங்கியவர்களின் உதடுகளில் இருந்து சிகரெட் புகை அங்கு வெயிலில் சுருண்டு கிடந்தவர்களின் மீது படர்ந்து மறைந்தது. பெரிய அருவிகளை மட்டுமல்ல கடலையே ஒரு துளியைப் பருகிவிடுவதைப் போல வெயில் ஒரு மாயாவி போல் அவன் முன்பு விசுவரூபமெடுத்து நிற்பதை கண்டு நடுங்கினான். ஒரு சோபையற்ற நாளின் தவிர்க்க முடியாத தண்டனைக்காய் காத்திருக்கும் தண்டனை கைதி போல அவன் அங்கே நின்று கொண்டிருந்தான். பிற்பகலின் கொடிய நகங்கள் பிறாண்டியதில் அந்த நாளின் தேகம் முழுவதும் ரத்த களறியாக மாறியிருந்தது. தன்னிலிருந்து கழன்று போய்விட்ட ஒரு பிடிமானம் மெல்ல கரைந்து கொண்டிருப்பதை போல அவனுக்குப் பட்டது. எப்பொழுதும் தன் முன்பாக ஒரு நிச்சயமற்ற கணம் ஒரு குமிழியைப்போல துளிர்த்து எழும்பி அலைந்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான்.

எல்லாவற்றிலிருந்தும் தன்னைப் போலவே தவிப்பவர்கள் ஏராளமானோர் அங்கு இருப்பதை போல அவன் நினைத்துக் கொண்டான். அனைத்து அதிகாரங்களும், நிறுவனங்களும் சாமானியனான தன்னை கைவிட்டு விட்டதைப்போல தோன்றிய அந்த கணம் அவனுள் ஒரு ரகசிய துக்கம் பெருகியது. அவனது கண்ணில் தோன்றிய வலியை விட ஒரு துல்லியமான வலி அவனது மனத்திற்குள் புகுந்து கொண்டதைப் போல உணர்ந்த அந்த கணத்தில் பேருந்து மெல்ல பணிமனையை விட்டு வெளியே வந்து பயணிகள் அனைவரையும் அள்ளிக் கொண்டது. நின்று கொண்டு வந்தவர்கள் தங்களுக்கு இருக்கை கிடைக்க வேண்டும் என்ற அவசரத்தில் வேகவேகமாக ஏறினர். ஆனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்தது. பலரை பிற்பகல் கரைத்து காணாமல் ஆக்கியிருந்தது அந்த பேருந்தை பார்த்த போது தெரிந்தது. அமர்ந்தவர்கள் முகத்தில் ஒரு ஆசுவாசம் இருந்தது. தனக்கு ஒரு சன்னலோர இருக்கை கிடைக்காத ஆயாசம் அவனுள் படிந்திருந்தது. பேருந்து நகரை விட்டு வெறியேறி நெடுஞ்சாலையை தொட்டு வேகம் பிடித்த போது அவனது கண்வலி அவனுக்கு மீண்டும் நினைவுக்கு வந்து ஆயாசத்தை உண்டாக்கியது. ஓடத் தொடங்கிய பேருந்தின் ஜன்னல் வழியாக வீசத் தொடங்கிய காற்றின் தீண்டுதலால் பிற்பகல் முடிந்து மாலை தொடங்கிவிட்டதாக திடமாக நம்பினான் அவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *