வழக்கம் போல் அவள் கம்பி எண்ணிக் கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகள். அது வழியே அவனைப் பார்ப்பது அவள் வழக்கம். ஜன்னல் கம்பிகளின் இடைவெளி வழியே ஓர் அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகளில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தாள். இன்னும் அவன் வரவில்லை. ஜில்லென்று காற்று மட்டும் அவள் முகத்தை வருடியது. ஜன்னலின் உறுதியான கம்பிகளை, தன் மிருதுவான ஆள் காட்டி விரலால் தொட்டு, கண்ணுக்கு புலப்படாத அழகான ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தாள். அவள் விரல் பட்டதும், அந்த கம்பி, அதன் உறுதித்தன்மையை இழந்து கொண்டிருந்ததை, அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. ஓவியத்தில் வீழ்ந்திருந்தாள்.
சட்டென, கம்பியிலிருந்து தலையை எடுத்தாள்.. அவன் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனால், தனது கல்லூரி இறுதி வருட ப்ராஜெக்ட் நினைவிற்கு வந்தது. ஒரு வாரத்திற்குள் பாதியாவது முடித்திருக்க வேண்டும். ஆனால், “நாளைக்கு பாத்துக்கலாம்” என உள்ளுணர்வு சொல்ல மீண்டும் தன் காத்திருப்பு அத்தியாத்தை தொடர்ந்தாள். அது ஒரு இரண்டு வருட நீண்ட அத்தியாயம்.
சூரிய உதயத்திற்காக காத்திருக்கும் ஒளி போல அவள் காதல் ஆழமானது.
சூரிய உதயத்திற்காக காத்திருக்கும் ஒளியா?? முரண்பாடாக உள்ளதா??
சூரியனிடமிருந்து ஒளி வருவதாக நான் நம்பவில்லை. அது ஒரு ஏமாத்து வேலை.. சூரியன் உதயமாகும் போது, சூரியனுக்காக காத்திருக்கும் ஒளியானது, சூரியனோடு இணைந்து கொள்கிறது. (சூரிய உதயத்திற்காக காத்திருக்கும் ஒளி- அவள் யோசித்துப் பார்க்கிறாள்) சூரியன் வரும் நேரம் பார்த்து, இரவினில் மறைந்திருக்கும் ஒளியானது, சூரியனை இறுக்கமாக அணைத்துக் கொள்கிறது. அதுமட்டுமல்ல. எவ்வளவு வேகத்தில் தெரியுமா?? ஒரு வினாடிக்கு 3,00,000 (3 லட்சம்) கிலோமீட்டர் வேகம். அதை எண்ணி அவள் வியக்கிறாள். எப்படி ஒளியால் இவ்வளவு வேகமாக சூரியனை அணைக்க முடிகிறது. ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் செல்லும் நாம், நிற்கும் லாரியில் அடிபட்டாலே, தார் ரோடோடு தாராக மாறிவிடுவோம்.. ஆனால், ஒளியோ, ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து, சூரியனைக் கட்டி அணைக்கிறது. ஏன் அவ்வளவு வேகம்? ஒருவேளை 12 மணி நேரப் பிரிவாக இருக்குமோ?
அவளும், அது போன்ற அணைப்புக்காக காத்திருந்தாள். ஆனால், அவள் ஒரு உண்மையை அறியத் தவறிவிட்டாள்.. அது இப்போது வேண்டாம் என்பது கடவுளின் திட்டம்.
அவள் காத்திருப்பு அத்தியாத்தில், அஸ்தமிக்கும் சூரியனை இப்போது பார்த்துக் கொண்டிருந்தாள். சூரியன், தனது பிரகாசத்தை இழந்து கொண்டிருந்தது. ஏனெனில், ஒளி பிரிந்து கொண்டிருந்தது. அதே சமயம், இருட்டில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ள துவங்கியிருந்தது. ஒளி, எங்கே ஒளிந்து கொள்ளப் போகிறது என்பதை, இப்போது கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தாள். சட்டென மறையவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக. ஆனால் எங்கே எனத் தெரியவில்லை.. சட்டென, அவள் நினைவிற்கு வந்தது, அவன் இன்னும் வரவில்லை என்பது.. ஓர் இதமான காற்று மட்டும் வீசியது.
மீண்டும், சாய்ந்திருந்த ஜன்னல் கம்பியிலிருந்து, தன் தலையை எடுத்தாள். இருளில் மறைந்தது, ஒளி மட்டும் அல்ல. அவளும் தான். அதனால் தான், ஈரமாக மாறத் துவங்கியிருந்த அவள் கண்களை, ஜன்னல் கம்பியால் காண முடியவில்லை. அவள் கண்ணீர் பூமியைத் தொடும் முன்பே, அவள் அதனை தன் கையால் தடுத்துவிட்டாள். அவனுக்காக, அவள் வடித்த கண்ணீருக்கு, யாரும் சாட்சியாகி விடக் கூடாது என்பதற்காகவே அவள் தினமும் தடுத்துக் கொண்டிருந்தாள். அவள் கண்ணீரின் ஈரத்தை, மீண்டும் அதே இதமான காற்று காயவைத்து ஆறுதல் அளித்தது.
சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் இயற்கையின் நியதி அல்லவா?? சூரிய உதயத்தை கொண்டாடுவதும், சூரிய அஸ்தமனத்தை கண்டு வீண் வேதனை கொள்வதும் நியாயமே இல்லாத செயல்.
காதல் இணைவதைக் கொண்டாடுவதும், காத்திருப்பதை, பிரிவை நினைத்து அவஸ்த்தை கொள்வதும் அது போலவே. அது ஒரு இயற்கையான நிகழ்வு. காதலில், காத்திருக்க வேண்டியது அவசியம். அதுவும், நிபந்தனையற்ற காத்திருப்பு. வரலாம். வராமலும் போகலாம். அப்போதும் காதல் குறையக் கூடாது. அது தானே காதல். வாழ்வது தானே காதலின் நோக்கம். ஒருவர் நலனுக்காக இன்னொருவர் காதலை விட்டுக் கொடுக்கலாம். அது தானே காதலின் பிரதான நோக்கம். காதலில் விட்டுக் கொடுத்தல் இருந்தால், இங்கு அரிவாள்களுக்கும், கண்ணீர்களுக்கும் தேவையில்லாத வேலை அதிகம் இருந்திருக்காதல்லவா.
ஒளி இல்லாத அறையில் அவள் நுழைந்தாள். அந்த, அறைக்கு ஒளி வீசத் தெரியாமல் ஒன்றும் இல்லை. அவள் நினைக்கும் வரை அந்த அறை ஒளியை வீசாது. எப்படி நாம் நினைக்கும் வரை நம் வாழ்வில் ஒளி பிறக்காதோ, அதே போல்.. கட்டிலில் சாய்ந்தாள். அதற்கு வலித்தது. ஆனால், அவள் அனுபவிக்கும் வலியைவிட, குறைவான வலிதான் என்பதால், சற்று பொறுத்துக் கொண்டது.கண்களை மூடினாள்.
கண்களை திறந்திருந்தும் புண்ணியமில்லை. அந்த அறை தான் இருள் சூழ்ந்தது ஆயிற்றே. அவனை பற்றிய நினைப்பில் ஆழ்ந்தாள்.
அவன் ஏன் வரவில்லை? அதுவும் இரண்டு வருடமாக? என்னை பார்க்க தோன்றவில்லையா? அவன் இருந்த வீட்டில் இதோடு நான்கு பேர் மாறி குடியேறிவிட்டனர். உனக்காக இந்த ஜன்னலின் அருகிலே காத்திருக்கும் ஓர் உயிர் உள்ளது என்பதை மறந்தாயா?? இல்லை அறிந்தும் நிம்மதியாய் இருக்கிறாயா??
என்னை வச்சு, காப்பாற்ற நிறைய பணம் வேண்டும் என்றாயே. உன் காதலும் வேண்டும் என்பதை எப்போதாவது உணர்ந்தாயா? பணம் சம்பாதித்து வருகிறேன் எனச் சென்றாயே, பணம் தான் நம் காதலை பிரித்து வைத்திருக்கிறது என நான் எடுத்துக் கொள்வதா??
இப்பொழுதெல்லாம், பணத்தை பார்த்தாலே அச்சமாக உள்ளது. அது, எத்தனையோ கணவன் மனைவிகளை தற்காலிகமாக பிரித்து வைத்துள்ளது. அதில் எத்தனை பேர் நிரந்தரமாக பிரிந்தனர்? யோசித்து பார்க்கிறாள். கண்கள் வியர்க்கிறாள்.
ஜன்னல் வழியே நுழைந்த காற்று, அவளுக்கு இதமளித்தது.. மீண்டும் ஜன்னல் நோக்கி வரத் தூண்டியது. ஜன்னல் அருகே வந்தாள். ஆனால், அவளுக்காக காத்திருந்தது ஏமாற்றமே. மீண்டும் சில்லென காற்று அவள் முகத்தை வருடியது. கண்ணீர் சிந்தி அழுதாள்.
கண்ணீரை வழக்கம் போல் தரையில் விழாமலும் தடுத்தாள். கண்ணீரின் ஈரத்தை வழக்கம் போல, அந்த இதமான காற்று காய வைத்தது.
“மீண்டும் உன்னை எப்போது இந்த ஜன்னல் வழியே பார்ப்போன்??” என யோசித்தாள். தினமும் கனவில் பார்க்கிறேன் எனத் தன்னை அறியாமல், ஈரமான விழிகளுடன் லேசாக சிரித்தாள். ஆனால், அது ஜன்னல் அல்ல, சிறை என்பதை எப்போது அவள் உணரப் போகிறாளோ?
எனக்கு தெரிந்து அவன் காற்றாக மாறியிருக்க வேண்டும். அதனால் தான், அடிக்கடி அவள் கண்ணீரை காய வைக்கிறான்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு தான். கொஞ்சம் காத்திருப்பதற்கு, கொஞ்சம் கண்ணீர் சிந்துவதற்கு, மற்றபடி வாழ்வதற்கே.
பாவம் அவள். கடவுளே, சீக்கிரம் அவளுக்கு அந்த உண்மையை சொல்லி விடுங்கள். ஏமன் நாட்டின், தீவிரவாத தாக்குதலில் அடுத்தடுத்த இரண்டு தோட்டாக்களால் அவன் உயிரும், அவள் காதலும் ஒரு வருடத்திற்கு முன்பே பறிக்கப்பட்டுவிட்டது என்று.
ஜன்னல் வழியே வரும் ஒளியை, ஒளியின் வழியே வரும் உண்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எப்போது தருவாய்??
கடவுளே, உம்மை விட்டால் வேறு யார் கூறுவார்? வாயில்லா, இந்த ஜன்னல் கூறுமா?
கடவுளே……?