ரயிலில் இருந்து இறங்கியதும், அவனைத் தான் தேடினாள்.
“நான் இங்கே இருக்கேன்ம்மா ?” என்றான் டிரைவர்.
“ரெண்டு சூட்கேஸ் இருக்கு எடுத்து கார்ல கொண்டு போய் வை.”
மறுபடி தேடினாள். எங்காவது ஒளிந்து கொண்டிருகிறானோ? திடீரென்று வந்து இடுப்பைக் கிள்ளுவானோ?
வரவில்லை.
உதடுகள் துடித்தன. எத்தனை தூரம் வலியுறுத்தி லெட்டரில் எழுதி இருந்தேன். “உங்களை… நேரில் பேசிக் கொள்கிறேன்” என்று பற்களைக் கடித்தாள்.
காரில் ஏறி வீட்டுக்கு வந்து, “ஹலோ டாடி”, சொல்லி நேராக ரூமிற்கு வந்து டெலிபோனை எடுத்தாள்.

“ஹலோ, சரஸ் பேசறேன்.”
“ஹாய்! எப்ப வந்தே !”
“விளையாடுறீங்களா?”
“போன்ல எப்படி முடியும்?”
“லெட்டர் வரலை?”
“என்ன லெட்டர்? எழுதி இருக்கியா? வரலையே?”
“வரலை ?”
“நிஜமா வரலைடா?”
“பொய். ஸ்டேஷன்ல உங்க மேல , எனக்கு எவ்வளவு கோபம் தெரியுமா? அந்த லெட்டர்ல, ஸ்டேஷனுக்கு கண்டிப்பா வரணும்னு எழுதியிருந்தேன்.”
“அதான் வரலைன்னு சொல்றேனம்மா. வந்திருந்தா அதைவிட என்ன வேலை எனக்கு? சரி, எப்படி இருக்கே?” நல்லா இருக்கேன். உங்களுக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன்.”
“லைட்டர்?”
“இல்லை .”
“பனியன்.”
“ஊகூம்”
“நீயே சொல்லிடு. என்ன?”
“சொல்ல மாட்டேன். காட்டறேன் நேர்ல!”
“சரி. எத்தனை நாளாச்சி? ஒண்ணு கொடேன்.”
“மாட்டேன். இன்னும் பல்விளக்கலை.”
“டெலிபோன் வழியா துர் நாற்றம் அடிக்காது.”
“நீங்க மொதல்ல கொடுங்க.”
“நீ மொதல்ல.”
“நீங்க மொதல்ல.”
“சரி, ரெண்டு பேரும் ஒரே சமயத்திலே ரெடி ஒன், டூ, த்ரி.”
“முத்…”
“…தம்”
“வீட்லதானே இருக்கீங்க?”
“வீட்லயேதான் இருக்கேன். பத்துநாளா?”
“பத்து நாளாவா? ஏன்-?”
“உடம்பு சரியில்லை சரஸ். ப்ளு ஜுரம் வந்து…. இப்ப தேவலாம். டாக்டர் ரெஸ்ட்ல இருக்கச் சொல்லி இருக்கார்.”
“இடியட் ஏன் எனக்கு எழுதலை?”
“எழுதினா என்ன செஞ்சிடப் போறே டெல்லியிலேர்ந்து?”
“உடனே புறப்பட்டு வந்திருப்பேன்.”
“உடம்பு சரியில்லாம போறது சகஜம்தானே சரஸ். இதைப் போய் எழுதிக்கிட்டு, உன் மூடை ஏன் கெடுக்கணும்னு நினைச்சேன். லீவிலே போயிருக்கிற உன் டரிப்பும் வீணாகிறதை நான் விரும்பலை.”
“இன்னும் ஒரு மணிநேரத்திலே வர்றேன் அங்கே.”
“வா. அப்புறம்…. ஒரு விஷயம்…”
“என்ன பிரகாஷ்?”
“இன்னிக்கு நான் உன்னைப் பார்க்க முடியாது.”
“ஏன்?”
“உன் கூடப் பேசுவேன். ஆனா பார்க்க வரமாட்டேன்.”
“புரியலை .”
“இன்னிக்கு என்ன தேதி?”
“ஜுன் 12”
“இதைப் பத்தி உன்கிட்டே சொன்னதில்லைன்னு நினைக்கிறேன். இன்னிக்கு எங்கப்பா இறந்த தினம். அவர் ஃபாக்டரியிலே வேலை பார்த்தப்போ கம்பிகள் சரிஞ்சி இவர் மேல் விழுந்து உடம்பெல்லாம் குத்தினதோட இல்லாம, ரெண்டு கண்ணையும் இழந்தார். பதினைஞ்சு நாள் துடிச்சிட்டு இறந்துவிட்டார். ஒவ்வொரு ஜுன் 12ரூந் தேதியும் கண்ணைக் கட்டிக்கிட்டு அன்னிக்கு முழுக்க மொன் விரதம் மாதிரி பார்க்கா விரதம் இருப்பேன்.”
“வெரி சாரி பிரகாஷ். இதைப்பத்தி நீங்க சொன்னதேயில்லை. ஒரு நாள் பூரா கண்ணைக் கட்டிக்கிட்டிருக்கிறதுன்னா ரொம்பக் கஷ்டமாயிருக்குமே?”
“கஷ்டம்தான்.”
“சரி, நாம நேர்ல பார்ப்போம்.”
சரஸ் வந்தபோது, கட்டிலில் படுத்து இருந்தான். பிரகாஷ் கைகளை மார்பின் குறுக்கே கட்டி இருந்தான். முகத்தில் இரண்டு வார வயதான தாடி. கண்களின் மேல் ஒரு துண்டு கட்டப்பட்டிருந்தது.
“பிரகாஷ். நான் வந்துட்டேன்.”
“தெரியும். சென்ட் சொல்லிடுச்சி.”
எழுந்து அமர்ந்தான். கையை நீட்டினான். கொடுத்தான். அருகில் இழுத்து கட்டிலில் அமரச் செய்தான்.
“என்ன பிரகாஷ். இப்படி துரும்பாயிட்டீங்க?”
“யாருக்காவது பல் குத்த உதவலாமேன்னு நினைச்சேன் துரும்பாயிட்டேன்.”
“எப்பவும் கிண்டலா? உடம்பிலே பாதியைக் காணோம்.”
“பேப்பர்ல விளம்பரம் கொடுப்போமா?”
“இன்னும் காய்ச்சல் இருக்கா?”
“இல்ல . களைப்பு மட்டும் தான்”.
“டாக்டர் சொன்னபடி மருந்தெல்லாம் சாப்பிடறீங்களா?”
“தவறாம்.”
“உதவிக்கு யார் இருக்கா. “
“வேலைக்காரன்.”
“ஊர்லேந்து அம்மாவை இல்லை தங்கச்சியை வரவழைச்சு இருக்கலாம் இல்லே …”
“அந்த அளவுக்கு அவசியமாபடலை. இப்போ நான் ஓ.கே. வேற பேசேன். டெல்லி ட்ரிப் எப்படி இருந்திச்சி?”
“ஃபைன், உங்களுக்கு வாங்கிட்டு வந்தது என்ன தெரியுமா?”
“சொல்லிடு.”
“கூலிங் கிளாஸ். கிளை மேட்டுக்குத் தகுந்த மாதிரி, நாலு கலர்ல மாறிக்கும்.”
வாங்கி தடவிப் பார்த்தான்.
“நல்ல செலக்ஷன்.”
“அப்புறம் என்ன புக் படிச்சீங்க…. சமீபத்திலே?”
“தியாகின்னு ஒரு தமிழ் நாவல் படிச்சேன். பிரமாதமான நாவல்.”
“சுருக்கமா சொல்லுங்களேன்.”
“ஒரு இளம் தம்பதிகள். திடீர்னு புருஷன் ஒரு விபத்திலே சிக்கி, இரண்டு காலும் எடுக்க வேண்டியதாய் போய் ஆண்மையையும் இழந்துடறான். சில மாதங்களில் சலிச்சுப் போயிடுது. வாழ்க்கை அந்த சந்தர்ப்பத்திலே, எதிர்த்த வீட்டில் குடி வர்ற, ஒரு வாலிபனை பார்க்கிறா. மனசு தன்னையறியாம அவனை விரும்ப ஆரம்பிக்குது. அந்த வாலிபனே, ஒரு நாள் ஒரு சந்தர்ப்பத்திலே இவகிட்டே, ஐ லவ் யுன்னு சொல்றான்.
“இவளால் திருப்பி, ஐ லவ் யுன்னு சொல்லாம் முடியாம், அறைஞ்சிடறா, என் புருஷன் மேல எனக்கு சலிப்பு இருக்கு, ஆனா வெறுப்பு இல்லை. நிச்சயமா துரோகம் பண்ணமாட்டேன்னு சொல்றா.
“அவன் போனதும் ரூமுக்குள்ளே போய் கதறி அழறா!”
“கதை!” என்றாள் சரஸ்
“என்ன சொல்றே?”
“கதையில் லட்சியம் இருக்கு. பண்பாடு தெரியுது. ஆனா யதார்த்தம் இல்லை. மனசை தொட்டுச் சொல்லுங்க இந்த முடிவு சரியா?”
“வெல் அதைத்தான் நானும் சொல்லணும்னு இருந்தேன். நீயே சொல்லிட்ட…”
“இப்பல்லம் ஆணா இருந்தாலும், பெண்ணா இருந்தாலும், உறவுகளை விட உணர்வுகள் முக்கியமாயிடுச்சி. பெண்களைப் பொருத்தவரைக்கும் அவங்களுக்கு தீவிரமாக விரும்பவும் தெரியும். தீவிரமாக வெறுக்கவும் தெரியும். கதையில் அந்தப் பொண்ணு திரும்ப நானும் உங்களை விரும்பறேன்னு சொல்லி அவனோட ஓடிப் போயிந்தா , அது பண்பாடு மீறினதா இருக்கும். ஆனா என்வரைக்கும் அதுதான் சரியான தீர்வா நினைக்கிறேன். ஒவ்வொரு ஜீவனும் தனக்காக அதிகமா வாழணும்ங்க றது என் கருத்து.”
படபடவென்று கைதட்டினான்.
பிறகு…. பிரகாஷ் மவுனமாயிருந்தான்.
“என்ன மவுனமாயிட்டிங்க?”
“கொஞ்சம் பேசப் போறேன். அதுக்கு முன்னாடி மனசுக்குள்ளே ஒத்திகை பார்த்துகிட்டேன்.”
“என்ன சொல்லுங்க. நாம வாதிக்கலாம். எனக்கு வாதம்னா ரொம்ப பிடிக்கும்.”
“இது வாதிக்க வேண்டிய விஷயமில்லை சரஸ் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.”
“புதிரா? விடுகதையா?”
“இல்லை வாழ்க்கை. இப்போ கொஞ்சம் பேசினியே. ஒவ்வொருத்தரும் தனக்காக அதிகமாக வாழணும்னு . இது ஊருக்கான அறிவுரையா? இல்லை உன் சொந்த எண்ணமும் அதுதானா?”
“என் சொந்தக் கருத்து. நானும் அப்படித்தான் வாழ்வேன்.”
கொஞ்சம் தயங்கினான்.
“என்ன பிரகாஷ் சொல்லுங்க”
“அப்போ நீ என்னை மறந்துடறதுதான் நல்லது”
“ஏய் இதென்ன புது விளையாட்டு.”
“விளையாட்டு இல்லேம்மா. வினை. இன்னிக்கு அப்பா இறந்த தினம். விரதம் அது, இதுன்னு சொன்னதெல்லாம் பொய் சரஸ்.”
“நீ ஊருக்குப் போன மறுநாள். பைக்கிலே போய்க்கிட்டிருந்தப்போ, இரும்பு கம்பியை ஏத்திக்கிட்டுப் போன ஒரு கை வண்டி மேல மோதி, என் உடம்புலே கண்லே எல்லாம் கம்பி குத்தி… இப்போ என் முகத்திலே குழிகள் தான் இருக்கு “
துண்டை அவிழ்த்தான். இரண்டு கண்களைச் சுற்றிலும் காய்ந்து போன ரத்தமும், அடர்த்தியாய் கண்கள் மேல் பஞ்சுவைத்து அதன்மேல் பாண்டேஜும் போடப்பட்டிருக்க, சட்டையக் கழற்றினான். மார்பில், வயிற்றில் தனித்தனியாக பாண்டேஜ்கள்.
“பிரகாஷ்!” என்று கதறி விட்டாள்.
வெடித்தாள். விம்மினாள். அவன் மடியில் விழுந்து அழுதாள்.
“பிரகாஷ். என் வாழ்க்கையிலேயே இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை. நோ. என்னால உங்களை விலக்க முடியாது. மறக்க முடியாது. எத்தனை தூரம் உங்களை விரும்புறேன் தெரியுமா? நீங்க எப்படி இருந்தாலும் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று வெறிபிடித்தவள் மாதிரி கத்தினாள்.
“அவசரப்படாதே சரஸ். நிதானமாக யோசிச்சு ஒரு முடிவுக்கு வா.”
அழுது கொண்டிருந்த அவள் தலையைக் கோதினான்.
மறுநாள் சரஸ் வரவில்லை.
அதற்கும் அடுத்தநாள் தான் வந்தாள்.
அதே அறை. அதே கட்டில். புது பேண்டேஜோடு படுத்திருந்தான் பிரகாஷ். வாசனை வந்து, வாசல் பக்கம் திரும்பினான்.
“வா சரஸ்!” என்றான்.
அமைதியாய் வந்து ஸ்டூலில் அமர்ந்தாள்.
“ஸாரி பிரகாஷ். நேத்து என்னால் வரமுடியலை.”
“பரவால்லை. என்ன சாப்பிடறே?”
“ஒண்ணும் வேணாம்.”
அமைதி. அவள் பேச, அவன் காத்திருக்க ஹாலின் சுவர்க் கடிகாரத்தின் “டிக், டிக்” துல்லியமாய் கேட்டது.
சரஸ் விசும்பினாள்.
“ஏய், சரஸ்! ப்ளீஸ் அழாதே! நீ அழுதா எனக்கும் அழுகை வரும். என் மனசு ரொம்ப பக்குவப்பட்டது. என்னால் எந்தப் பிரச்சனையையும் எல்லாக் கோணத்திலேர்ந்தும் பார்க்க முடியும்.”
சரஸ், அழுகையை நிறுத்தி மெதுவாய் பேசினாள். “என்னை மன்னிச்சிடுங்க…. பிரகாஷ் உங்களுக்கு கடைசி வரைக்கும், ஒரு நல்ல தோழியா இருக்கேன். ப்ளீஸ்! என் வாழ்க்கையையே கேட்காதீங்க. உங்களை எந்த அளவுக்கு விரும்புறேனோ, அதைவிட கொஞ்சம் அதிகமா, நான் என்னையே விரும்புறேன். நான் முதல் முதல்ல உங்களை சந்திச்சப்பபோ, உங்களை இந்த நிலையிலே பார்த்திருந்தா என் மனசிலே நிச்சயமா காதல் தோன்றி இருக்காது. கருணைதான் ஏற்பட்டு இருக்கும்.”
“காதல்ங்றது இரு உள்ளங்கள் சம்பந்தப்பட்டதுங்கறது ; நம்மையே நாம் ஏமாத்திக்கிற , ஏராளமான அபத்தங்கள்ல ஒண்ணு. உடல், அழகு இதிலே மயங்கி விரும்பி, அப்புறம் பேசிப் பழகினதுக்கப்புறம் தான், உள்ளத்துக்கு வர்றோம்.”
“என் கோணத்திலேர்ந்து யோசிக்க, உங்களால் முடியும் பிரகாஷ். நான் உங்களை விரும்புறேன். ஆனா எனக்கு என்ன இன்பம் இருக்கு இந்த வாழ்க்கையிலே? என் அழகை பார்க்கிறது யாரு? நான் யாருக்காக மேக்கப் செஞ்சிக்கணும்? தெரிஞ்சி, வலுக்கட்டாயமா வேதனைகளிலே என்னை சொருகிக்கணுமா? நான் சுயநலக்காரிதான். ஆனா அதுக்காக வருத்தப்படலே!”
அமைதி. இப்போது பிரகாஷின் உடல் லேசாய் குலுங்கியது. உதட்டைக் கடித்தான்.
“சரஸ்! நீ எடுத்த முடிவு ரொம்ப சரி. ஆனா ஒரே ஒரு சின்ன சந்தேகம் மனசிலே. நாம் காதலிச்சோமே, அது உண்மையான காதல்தானா?”
“காதல்ங்கிறது ஒன்மோர் அபத்தம். காதல்ன்னா என்ன பிரகாஷ்? இதோ வடக்கே இதுவரை, தெற்கே இதுவரைன்னு வயலுக்கு வேணும்னா எல்லை போட்டு காட்ட முடியும். உங்களால் இதுதான் காதல்ன்னு எல்லை போட்டு காட்ட முடியுமா?
காதலைப் பொறுத்தவரைக்கும், ஒவ்வொரு மனுஷக்கும் அது ஒவ்வொரு அர்த்தம். கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் கனிவு, கருணை, புகழ்ச்சி, அன்பு, காமம் எல்லாம் கலந்த கலவை அது.”
“காதல்ல தோல்வி அடையற அத்தனை பேரும் ரயிலுக்கு முன்னாடி பாய்ஞ்சிடறதில்லை. எத்தனையோ பேர் மெயினமாக முழுங்கிடறாங்க. முடியக் கூடியதுதான் இது.”
“மெதுவா, நிதானமா என் கோணத்திலேர்ந்து யோசிச்சா, எல்லா உணர்வுகளுக்கும் சரியான அழுத்தம் கொடுத்துப் பார்த்தா, என்னைப் புரிஞ்சுக்குவிங்க வர்றேன் பிரகாஷ்.”
வேகமாகச் சென்றாள் சரஸ்.
மேஜைமேல், முந்தாநாள் அவள் வாங்கி வந்து வைத்த கூலிங் கிளாஸ், இரண்டு கால்களால் அமர்ந்திருந்தது.