மாமியாரும் மாமனாரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 7,956 
 

என் பெயர் ஜனனி.

திருச்சியில் பிறந்து வளர்ந்தேன். சீதா லக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதும், உடனே திருமணமாகி விட்டது. திருமணமாகி தற்போது ஆறு மாதங்களாகிவிட்டது. வாக்கப்பட்டது பெங்களூரில். என்னவர் ஒரேமகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவர். வசதியான குடும்பம்.

பெங்களூரின் உடம்பை வருடும் மெல்லிய குளிரும், தினமும் தாராளமாக பளிங்கு போன்று குழாயில் கொட்டும் குளிரான காவிரித் தண்ணீரும் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது.

புகுந்த வீட்டில் என் சந்தோஷத்துக்கு குறைவில்லையானாலும், அதிகமான ஆச்சரியங்களுக்கும் பஞ்சமில்லை.

முக்கியமான ஆச்சர்யம் என் மாமியாரும், மாமனாரும்தான்.

என் மாமியாருக்கு 57 வயது. ஒரு பிரபல கம்பெனியில் அதன் பெங்களூர் கிளையின் ஜெனரல் மானேஜராக இருக்கிறார். அவருக்கு டிரைவருடன் ஒரு கார் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த வருடம் ஓய்வு பெறுகிறார்.

மாமானார் ஒருபெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் சீனியர் வைஸ்-பிரசிடெண்டாக வேலைசெய்து ஓய்வு பெற்றபின் தற்போது ஜாலியாக வீட்டில் இருக்கிறார். ரொம்ப வித்தியாசமான கேரக்டர். அவருக்கு வயது அறுபது. ஆனாலும் ஷோக்குப் பேர்வழி. உடம்பை ட்ரிம்மாக வைத்துக்கொண்டு, பார்ப்பதற்கு 45 வயதுக்கு மேல் அவரைச் சொல்ல முடியாது. தினமும் வீட்டில் இருக்கும் ட்ரெட் மில்லில் அரைமணி நேரம் ஓடுவார். நிறைய ஜோக் அடிப்பார். எப்போதும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். தனி மனித சுதந்திரத்தை மிகவும் மதிப்பவர். எதற்கும் கோபப்படாமல் அமைதியாக, அதிர்ந்து பேசாது, அனைவரிடமும் பண்புடன் நடந்துகொள்வார்.

மாமனாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சாஸ்திரங்கள், சடங்குகள், பூஜைகள் என்று எதையும் தன்னிடம் அண்ட விடமாட்டார. பெற்றோருக்கு திவசம் செய்ய மாட்டார. அடுத்தவர்களின் கடவுள் நம்பிக்கை தன் வசதியிலும், சுகத்திலும் குறுக்கிடாதவாறு பார்த்துக் கொள்வார். சாப்பாடு, தூக்கம், டி.வி., நியூஸ் பேப்பர், பத்திரிகைகள் என்று தன் வசதிகளை நன்றாகக் கவனித்துக்கொள்வார். மாமியார் அவரைப் புரிந்துகொண்டு குறிப்பறிந்து நடந்துகொள்வார்.

தவிர மிகவும் ரசனையுள்ளவர். தினமும் ஷேவ் செய்துகொண்டு, நேர்த்தியாக உடையணிந்து கொள்வார். நகங்களை சீராக வெட்டிக் கொள்வார். அவருக்கு நிறைய பெண் நண்பர்கள். அவர்களுடன் வைபர், வாட்ஸ ஆப் என்று தொடர்பில் இருப்பார். அவர்களிடம் பேசும்போது ஸ்வீட்டி; ஹனி; டியர் என்று கொஞ்சுவார். அடிக்கடி பகலில் தன்னுடைய ஆட்டோமேடிக் காரை எடுத்துக்கொண்டு பப்களுக்குச் சென்று அவர்களுடன் ஹேப்பி அவர்ஸில் ட்ராட் பீர் குடித்துவிட்டு வருவார்.

மாமியார் அவரிடம் கிண்டலாக, “என்னிக்கு எவ உங்களை அடித்து உதைக்கப் போகிறாளோ?” என்று சீண்டுவார்.

மாமனார் “பெண்கள் மிகவும் மேன்மையானவர்கள், அதே சமயம் மென்மையானவர்கள்… அவர்களின் நட்பு ஒரு ஏகாந்தம். உங்களுக்கெல்லாம் அது புரியாது” என்பார்.

மாமியார் எப்போதும் என்னிடம் மிகவம் அன்பாக இருப்பார். என்னைப் பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வார். ஜனனி ஜனனி என்று உருகுவார்.

தினமும் காலை நான்கரை மணிக்கே எழுந்திருந்து டிபன் தயாரித்து, அன்றைக்கான சமையலையும் முடித்துவிட்டு, குளித்து உடையணிந்து ஏழரை மணிக்கெல்லாம் அலுவலகம் செல்ல தயாராகி விடுவார். .

டிரைவர் வந்து மாமியாரின் லேப்டாப் பையை எடுத்து காரினுள் வைத்ததும், ஏழு நாற்பதுக்கு அலுவலகம் கிளம்பி விடுவார். மாலை ஆறுமணிக்கு திரும்பிவிடுவார். உடை மாற்றிக்கொண்டு இரவுச் சமையல் என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டுக்கொண்டு சமைப்பார்.

இரவு அனைவரும் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டு அரட்டையடித்தபடி சாப்பிடுவோம். என் மாமனார் தாட் பூட் என்று ஆங்கிலத்தில் ஆர்க்யூ செய்வார். அப்படி ஆர்க்யூ பண்ணும்போது மாமனாரும் மாமியாரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்வார்கள்.

பல நேரங்களில் என்னையே நீதிபதியாக்கி, “ஜனனி நீயே சொல்லு” என்று என்னிடம் ஜட்ஜ்மென்ட் கேட்பார்கள். எனக்கு இவையெல்லாம் பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும். நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணாமல் மையமாக நழுவிக் கொள்வேன்.

என் கணவர் பெரும்பாலும் என் மாமனாருக்குத்தான் சப்போர்ட் செய்வார். பிறகு இருவரும் சேர்ந்துகொண்டு மாமியாரை கிண்டல் செய்வார்கள். மாமியாரும் அந்தக் கிண்டல்களை மிகவும் ரசிப்பார். அதன்பிறகு ஒரே சிரிப்பு மயம்தான்.

மாமியார் சரியாக இரவு பத்து மணிக்கெல்லாம் தூங்கச் சென்றுவிடுவார். மறுநாள் மறுபடியும் நான்கரைக்கே எழுந்து விடுவார். சனி, ஞாயிறுகளில் மட்டும் சற்று தாமதமாக எழுந்திருப்பார்.

ஒரு மகளாக பாவித்து என்னை ஒரு வேலைகூட செய்ய விடமாட்டார். அவரிடம் கேட்டால் “என் உடம்பில் தெம்பு இருக்கும்வரை நான் செய்கிறேன். நீயே ஒருநாள் பொறுப்பாக வேலை செய்யும் காலம் வரும். அப்போது நீயே செய்வாய்… இப்ப நீ எஞ்சாய் பண்ண வேண்டிய வயசு… ஒரு குழந்தை பிறந்தாச்சுன்னா அப்புறம் உனக்கு ஓய்வே இருக்காது” என்று சொல்லிச் சிரிப்பார்.

என்னவர் பெங்களூர் அமேஸானில் வேலைசெய்கிறார். நானும் அவரும் தினமும் எட்டரை மணிக்குத்தான் எழுந்திருப்போம். மெதுவாக மாடியிலிருந்து கீழே வந்தால் மாமியார் செய்து வைத்த பிரேக்பாஸ்ட் மற்றும் லஞ்ச் டைனிங் ஹால் டேபிளில் தயாராக இருக்கும்.

மாமனார் எட்டு மணிக்கே பிரேக்பாஸ்ட் முடித்துவிட்டு தன்னுடைய லேப்டாப்பில் சுறு சுறுப்பாக இருப்பார்.

பிரேக்பாஸ்ட்டை மைக்ரோ ஓவனில் சுட வைத்து நானும் என்னவரும் சாப்பிட்டதும், பத்து மணிக்கு அவர் தன்னுடைய காரில் ஆபீஸ் சென்று விடுவார்.

அதன் பிறகு நான் மெதுவாக மாடிக்குச் சென்று குளித்து ரெடியாகி அன்றைய செய்தித் தாளை மேய்ந்தால் மணி ஒன்றாகிவிடும்.

மாமனார் வீட்டில் இருந்தால் கீழே ஹாலில் ஒருமணி நியூஸ் கேட்பார். அந்தச் சமயத்தில் நான் மதியச் சாப்பாட்டை சுடவைத்து, மாமனாருக்கு தட்டு வைத்து, டேபிளில் அனைத்தையும் எடுத்து வைத்தபிறகு சாப்பிடக் கூப்பிடுவேன். அவர் தானே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விடுவார். அவர் சாப்பிட்ட பிறகு நானும் சாப்பிட்டுவிட்டு, மிச்சத்தை ப்ரிட்ஜில் தள்ளிவிட்டு மாடிக்குச் சென்று தினமும் ஒரு குட்டித் தூக்கம் போடுவேன்.

மாலை நான்கு மணிக்கு மாமனாரே காபி போட்டுக் குடித்துவிடுவார். நான் ஒருவேளை கீழே ஹாலில் இருந்தால் எனக்கும் சேர்த்து காபி கலந்து கொடுப்பார்.

பொதுவாக மாலை ஐந்தரை மணிக்குத்தான் கீழே ஹாலுக்கு வருவேன். மாமியார் சரியாக ஆறு மணிக்கு வந்து விடுவார். என்னவர் ஆறரை மணிவாக்கில் வீட்டுக்கு வருவார்.

மொத்தத்தில் நான் புகுந்த வீட்டில் மிகவும் சொகுசாகத்தான் இருக்கிறேன்.

அன்று மாமனார் அருகிலுள்ள எம்.எஸ்.ராமையா மெடிகல் காலேஜ் சென்று, தான் இறந்தபிறகு தன்னுடைய உடம்பை அனாட்டமி மாணவர்களுக்காக டொனேட் செய்து எழுதிவைத்துவிட்டு அதற்குண்டான படிவங்களை நிரப்பி கொடுத்துவிட்டு வந்தார்.

அதைப் பெருமையுடன் இரவுச் சாப்பாட்டின்போது எங்களிடம் சொல்லி அவர்கள் கொடுத்த ஐடி கார்டை காண்பித்து இறப்பிற்குப் பிறகும் நான் உபயோகமாக இருப்பேன் என்று பீற்றிக் கொண்டார். என்று இறந்தாலும் அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணிச் சொன்னால் அவர்கள் வந்து ஆம்புலன்சில் பாடியை எடுத்துச் சென்று விடுவார்கள், தாமதமாக என்னைப் பார்க்கவரும் உறவினர்களுக்காக இரண்டு நாட்கள் வரையில் பாடியை வைத்திருப்பார்கள் என்றார்.

மாமியார் சிரித்துக்கொண்டே, “சாகும்போது ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் சாகுங்கள்… தொடர்ந்து வரும் சனி, ஞாயிறுகளில் நான் லீவு போட வேண்டாம், மண்டே எப்பவும் மாதிரி நான் ஆபீஸ் போய்விடுவேன்…” என்றார்.

மாமியார் இப்படிச் சொன்னதும் எனக்கு ஷாக்காகி விட்டது.

மாமனார் கூலாக, “உனக்கு இதில் ஒரு வேலையும் கிடையாது…நீ அழக்கூட வேண்டாம். என் மகன் காலேஜ் அனாட்டமிக்கு போன் பண்ணுவான்… நான் என்னிக்கிச் செத்தாலும் ஒரு நாள்கூட லீவு எடுக்காமல் நீ பாட்டுக்கு ஆபீஸ் போகலாம்” என்றார்.

“நீங்க மட்டும் ஏன் தனியா ஹாஸ்பிடல் போனீங்க? என்னையும் கூட்டிகிட்டு போயிருந்தா நானும் என் பாடியை மெடிகல் காலேஜுக்கு எழுதிக் கொடுத்திருப்பேன் இல்ல? இது ஒரு நோபிள் காஸ். வர்ற சனிக்கிழமை கண்டிப்பா என்னை கூட்டிக்கிட்டு போறீங்க.”

இதைப் படிக்கிற நீங்களே சொல்லுங்க…

எனக்கு இப்படி ஒரு மாமியார், அப்படி ஒரு மாமனார். ஆச்சரியங்களுக்கு மத்தியில் என் வாழ்க்கை ஓடிகிட்டிருக்கு…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *