காதலுக்கு ஒரு போர்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 19,366 
 
 

அந்த ஊரில் கடந்த நான்கு நாட்களாக ஊரிலுள்ள இருகுடும்பங்களுக்கிடையே ஒரு பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த ஊரின் மட்டுமல்ல அடுத்த ஊர்களிலுள்ள மக்களின் சாதாரண அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. சமுதாயத்தின் அடிவேர்களான,கல்வி நிலையங்கள் (பாடசாலை,வாசிகசாலை), கோயில்,சில கடைகள் என்பன சாதாரணமாக இயங்க முடியாமற் தடுமாறுகின்றன. போர் புரியும் இரு குடும்பங்களுக்குமிடையே இருக்கும் அந்தப் பொதுத் தெருவைக் கடந்து செல்லும் அரசாங்க ஊழியர்களான தபாற்காரன்,பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,வயல்களுக்குச் செல்லும் விவசாயிகள்,அவர்களின் வண்டில் மாடுகள், அண்டை அயற்கிராமத் தொழிலாளர்கள்,அடுத்த ஊரிலிருந்து இந்த ஊரைத்தாண்டிச் சந்தைக்கும் வேறு பல விடயங்களுக்கும் பொது மக்கள் என்று பல ரகத்தினரும் அந்த ஊரிற் தொடரும் ‘போரின்; எதிரொலியால்,போரின் கருவிகளாக அவ்வப்போது,இருதரப்பும் ஒருத்தொருக்கொருத்தர் எறிந்து தாக்கும்போது, தங்களுக்குக் கிடைக்கும் கல்லெறி, பொல்லெறி, மண்ணெறிகளிலிருந்து தப்புவதுதற்குப் படாத பாடு படவேண்டியிருக்கிறது.

காலையில் இராணுவ வண்டிகள் ரோந்து வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்தப் போர் தொடர்கிறது. போரில் ஈடுபட்டவர்களின்; ஆயதங்களில் மிகப் பலம் வாய்ந்ததான ‘வசை’மொழிகள் செம்மொழியின் மிகவும் அருமையான எதுகை,மோனையுடன், சிலவேளை கவிதை நடையில். சிலவேளை மிகவும் அருவருப்பான தூஷண மொழியில் இருபக்கத்திலிருந்தும் வாரி வழங்கப் படுகின்றன.

வெளிப்பகுதிகளிருந்து வரும் ஒரு சிலர்;,இந்தப் போரின் தாக்கத்திலிருந்த தப்ப ஊரை ஊடறுத்துச் செல்லும் பெரிய றோட்டைத் தவிர்த்து ஊரைச் சுற்றிப் பிரயாணம் செய்யும்போது,அவர்களைத் துரத்தும் கடிநாய்களின் தொல்லையால் அவர்கள் உலக ஓட்டப்பந்தய வீரர்கள் மாதிரி ஓடவேண்டியிருக்கிறது.

அன்று காலை,அந்த அழகிய கிராமத்தைச் சுற்றியோடும் தில்லையாற்றை, இளங்கதிரவன் தனது தங்கக் கதிர்களால் அன்பாக அணைத்துக் கொண்டெழுந்தான். தில்லையாற்றின் ‘பெருங்குடிகளான’ எருமை மாடுகளும், சிவப்புக் கால்களையும் நீண்ட கழுத்துக்களையுமுடைய கொக்குகளும் பெருந்தெருவில் நடக்கும் ‘போரின்’ சீற்றத்துக்குள் அகப் பட்டுக் கொள்ளாததால் வழக்கம்போல் தங்கள் வாழ்க்கையைத் தொடர்கின்றன.தென்னங் கீற்றுக்களைத்தாண்டி வந்த மெல்லிய சூட்டில் சில நாய்கள் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கிடந்தன. காலையில் தன் குஞ்சுகளுகு;கு இரைதேடத்தாய்க் கோழி பரபரத்துக் கொண்டிருந்தது.

பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகள்,அழகிய சிறு பறவைக கூட்டங்கள்போல் அந்தத் தெருவில் ஆங்காங்கு தென்பட்டார்கள. வயலுக்குச் செல்பவர்கள், கடை கண்ணிகளுக்குச் செல்பவர்களென்று தெருவில் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்தக் குடும்பங்களின் சண்டையால் இன்று தங்களுக்கு எந்தக் காயமும் வரக் கூடாது என்று அவர்கள் நினைப்பது பெரும்பாலோரின் விரைவான நடையிற் பிரதிபலித்தன.

மனிதர்கள் மட்டுமல்ல அப்பாவிப் பிராணிகளும் கடந்த சில நாடகளாகத் தொடரும் இந்தச் சண்டையால் காயமுற்றன. இரு வீட்டு நாய், பூனை,கோழிகள் என்பன,மனிதர்கள் மூர்க்க குணத்தின் பரிமாணங்களையறியாமல்,தங்களின் வழக்கமான இரைதேடல்,அல்லது அக்கம் பக்கத்தில் சுதந்திரமாகத் திரிவதுபோன்ற நாளாந்த வேலைகளைத் தொடரும்போது பல அதிரடித்தாக்குதல்களை எதிர்நோக்கி வேண்டியிருக்கின்றன.து.அண்மையில் தனக்குக் கிடைத்த பத்துக் குஞ்சுகளுடன்

வேலியிடுக்குகளைத் தாண்டிப் பவனி வந்துகொண்டிருந்த தாய்க்கோழி,தனது அழகிய குஞ்சு ஒன்று,எதிரெதிர் வீடுகளிலிருந்து எறியப்பட்ட தடியால் காலுடைந்ததகை; கண்டு மிக ஆத்திரத்துடன் தனது குரலை எழுப்பித்திட்டித் தீர்த்தது (ம்ம்,கொக்கரித்துக் கொட்டியது).

பக்கத்து வீடுகளில் உள்ள சமயலறைகளில் பத்திரமாக வைத்திருக்கும் மீன் பொரியலைத் தேடும் பூனைகளுக்கும் அதே நிலையே. கிராமத்தில் எல்லாவிடத்திலும் சுதந்திரமாகத் திரிந்து, தங்களுக்குப் பிடித்தவர்களைக் கண்டால் வாலாட்டுவதும், பிடிக்காதவர்களைக் கண்டால் ஆத்திரத்தில் குரைத்து அவர்களைத் துரத்துவதையும் தங்கள் பணியாகக் கொண்டிருந்த இருவீட்டார் நாய்களும். தங்களுக்கிடைத்த கல்லெறி, பொல்லெறிகளின் நோவுடன், அடுப்பங்கரைகளில் முனகிக் கிடக்கின்றன.

தொடர்ந்து நடக்கும் அந்தப் போரிற் காயப்படுவோருக்குச் சிகிச்சை செய்யும் டாக்டர் சந்திரசேகர் இருகாதலர்களுக்காக அடித்துக்கொள்ளும் தனது சொந்தக்காரர்களில் ஆத்திரமாகவிருக்கிறார். இதுவரை தொடரும் போரில்; கல்லெறி மண்ணெறி, பொல்லெறி பட்டுக்காயம்படாதமற் தப்பிய ஒரு சிலரில் அவரும் ஒருத்தர்.

அவரிடம் கடந்த நான்கு நாட்களாகச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிற் பலர் சண்டை செய்யும் இருகுடும்பத்தினரும் பாவித்துக் கொள்ளும் கல்,மண்,பொல்,கத்தரிக்காய்,மாங்காய்,பூசணிக்காய்,மரவள்ளிக் கிழங்கு போன்ற ஆயுதங்களின் தாக்குதல்களால் சிறுகாயமும் பெருங்காயங்களுக்குமள்ளானவர்கள்;;.

கடந்த மூன்று நடன்களாகத் தொடரும் இந்தக் காதலப்’;போரால் கிராமத்தாரின் மட்டுமல்லாமல் அக்கம் பக்கக் கிராம மக்களும் துன்புறவதால், நான்காம் நாளான இன்று அந்தப் போருக்கு எப்படியும் இன்று ஒரு முடிவு கட்டவேண்டு;ம் என்ற யோசனையில் தனது மோட்டார் பைக்கில் வந்தவரின் தலையில் வேகமாக ஒரு கல் வந்து விழுந்து காயப்படுத்தியது மட்டுமல்லாமல் தனது பைக்கைத் தடமாறவைத்தது கல்லெறியா,பொல்லெறியா அல்லது பிரமாண்டமான மரவள்ளிக்கிழங்கா என்று யோசிக்க முதல் டாக்டர்; தடுமாறி விழுந்து விட்டார்.

அவரது நிலையைக் கண்ட ஒரு சிலர் பதறிப் போய்த் தெருவில் கிடந்த அவருக்கு உதவி செய்ய ஓடிவந்தார்கள். ‘இந்தக் கொடுமையைக் கேட்பார் யாருமில்லையா?’ ஒரு கிழவி ஆத்திரத்துடன் ஓலமிட்டது. இப்படி ஆரவாரமான ஒரு விடயம் நடந்துகொண்டிருந்தபோதும் சண்டை நடக்கும் ஒரு வீட்டிலிருந்து வந்த பெரிய பூசணிக்காய்த் துண்டு ஒன்று ஓலமிட்ட கிழவியின் தோளைப் பதம்பாhத்;;தது. கிழவி வாய்விட்டுக் கத்தத் தொடங்கியது.

‘மிலிட்டரிக்குப் போய்ச் சொல்’ கூட்டத்தில் யாரோ கூச்சல் போட்டார்கள். பொறுத்ததுபோதும் பொங்கி எழு என்ற ஆத்திரம் அவரின் குரலில்ப் பிரதிபலித்தது.

‘இது மிலிட்டரி விசயமில்லை,சிவில் பாதுகாப்புவேலை’ இன்னொருத்தர் அந்தக் கூட்டத்திலிருந்து இரைந்து கொண்டிருந்தார். இனவெறி பிடித்த சிங்கள் ஆர்மிக்காரன், ஊரில் தொடரும் காதலுக்கான சண்டையைக் காரணம் காட்டி அப்பாவி இளைஞர்களை ஆடுமாடுகள்போல் மிலிட்டரி வாகனங்களில் அடைபடுவதை அவர் விரும்பவில்லை என்பது பணிவான அவரின் குரலில் தெரிந்தது.

இருகுடும்பத்துக்கும் நடக்கும் போரின் உக்கிரத்தால் நடக்கும் இத்தனை அசாதாரணங்களுக்குக் காரணியான முக்கிய பேர்வழிகளான இரு காதலர்கள் அல்லது அவர்களின் ‘காதல்’ பற்றிச் சற்றுப் பார்த்து விட்டு மேலே இக் கதையைத் தொடரலாம்:

————- ————— ———————-

உலகத்தில் இதுவரை நடந்த பல போர்கள் காதலுக்காக (பெண்களுக்காக) நடந்திருக்கின்றன.இங்கேயும் அதுதான் நடக்கிறது. கிரேக்கிய ஹோhமரின் படைப்பான ‘ட்ரோயன் போர்’அழகி ஹெலனுக்காக நடந்த போர், இந்தியக் காப்பியங்கள் உருவாக நடந்த, தூக்கிக்கொண்டோடிய, துகிலுரி கதைகள் மாதிரி இந்தக் கதையில் பெரிய அம்சங்கள் இல்லை.ஆனால் மூலப்பொருள் ஒன்றுதான். ஊரிற் பெரிய பணக்காரியாரியான(அதிகம் படிக்காத) கண்ணைக்கவரும் அழகும் இளமையும்,துடிப்பும் குறும்புத்தனங்களும் செல்வத் திமிரும் கொண்ட போடியாரின் பேத்தி தாமரையை-(போடியாரின் மகளான சிந்தாமணியின் மகளை),அவளின் மைத்துனனான, ஊரில் நன்றாகப் படித்தவனாக மதிக்கப்பட்ட (அதிகம் பணமில்லாத),எல்லோருக்கும் படித்த மரியாதைக்குரிய,கம்பிரமான பரிமளத்தின் மகன் கேசவன் ‘கூட்டிக்கொண்டு’ ஓடிவிட்டானாம்!

(‘தூக்கிக் கொண்டு’ ஓடிவிட்டான், ‘கிளப்பிக் கொண்டு’ ஓடிவிட்டான்’,அள்ளிக் கொண்டு’ அல்லது ‘அப்பிக் கொண்டு’ என்று பல விதமாகத் தங்களுக்குப் பிடித்த அல்லது தெரிந்த வசனநடையில்’ ஓடிவிட்ட காதலர்களைப்’ பற்றிய விவர்ணச்சித்திரம் நீண்டு கொண்டிருந்தது).இதுதான் இங்கு நடக்கும் போரின் மூலம்.

யார் யாரைக் ‘கூட்டிக்கொண்டு ஓடியது’ என்பதன் முழுதார்ப்பரியத்தையும் அறிந்து கொள்வது மிகக் கஷ்டம்.

அப்பாவியான(?) (ஆனால் மிகவும் கம்பீரமான) பரிமளத்தின் மகன் கேசவனை, தாமரை (ஆடம்பரக்காரி )என்ற சிந்தாமணியின் மகள் கூட்டிக்கொண்டு போனாளா அல்லது கல்யாணமாகாத இளம் தமிழ் ஆண்கள் பெண்களைப் போர் முனைக்கு இழுத்துக்கொள்ள முயலும் தமிழர் விடுதலைப் போராளிகளிடமிருந்து தப்பக் கேசவன் தனது காதலியான தாமரையைக் கல்யாணம் செய்யக் கூட்டிக்கொண்டு போனானா என்பது கேள்விக்குரிய விடயம்.(அக்காலத்தில் திருமணமானவர்களையும்; தங்கள் போருக்குள் இழுப்பதைத் தமிழ்ப் போராளிகள் தொடங்கியிருக்கவில்லை).

கேசவனை; அவன் தாய் பரிமளம்,தனது மகனின் பாதுகாப்புக்கருதி,அவனைத் தமிழ்ப் போராளிகள் வந்து பிடித்துக்கொண்டு போர்முனையில் பலியிடாமல் இருப்பதற்கு கேசவனை ஒரு ‘அப்பாவியாக’ வர்ணனைப் படுத்தி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் அப்பாவியல்ல. நிறைய வாசிப்பவன்,உலக விபரங்களை அலசிப்பார்க்கத் தெரிந்தவன்.அந்த வாலிப வயதிலுள்ள பல இளைஞர்கள்போலில்லாமல் பெரும்பாலும் தனது நேரத்தைப் ‘போருக்கு’ அப்பாலான சூழ்நிலையில் செலவழிப்பது அவனது தாய்க்குச்; சந்தோசமே. அவனுடன் படித்த இளைஞர்கள் பலர் இராணுவத்துக்குப் பயந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சென்று விட்டார்கள். அப்படியல்லாலோர்,தங்கள் சைக்கிள்களில் ஏறிக் கொண்டு. கோயிலடியிலோ, வாசகசாலையிலோ, பலர் கூடும் சந்திகள் அல்லாது கடைகளிலோ வம்பளந்து காலத்தைக் கழிப்பது போலல்லாமல்,கேசவன்; அவன் அம்மா சொல் கேட்டு அடங்கி நடப்பான்.

அவனை அவன் தாய் பரிமளம் அப்படித்தான் வளர்த்தாள். அவளுக்கு ஒரே ஒரு மகன். இலங்கையில், சிங்கள இராணுவம், இந்திய இராணுவம், தமிழ்க் குழுக்கள் என்றெல்லாம் தொடரும் அக்கிரமங்களிலிருந்து தனது மகனைக் காப்பாற்ற, தாய்க் கோழிபோல் அவனைத்;தன் சிறகுகளுக்குள் வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருப்பவள பரிமளம்;.

இலங்கையில்த் தமிழ் வாலிபம் என்பது பலியெடுக்கப் படவேண்டியது என்ற அரசியற் கோட்பாட்டைச் சிங்கள இனவாதம் கொண்டு வந்தாலும் அதை இப்போது பல தமிழ்க் குழுக்களாகப் பிரிந்த தமிழர்களே தங்களுக்குள் ஒருத்தர் மோதிக் கொண்டு பலியெடுப்பதிலிருந்து தன் மகனைப் பாதுகாக்கப் பரிமளம் படாதபாடு பட்டாள்.

அவன் இப்போது அவனது காதலியான (அவர்கள் காதலித்தது பரிமளத்துக்கோ சிந்தாமணிக்கோ அல்லது அவர்களுடன் படித்த அத்தனைபேருக்குமோ அல்லது அந்த ஊரிலுள்ள பலருக்கோ தெரியாத விடயமில்லை!!) தாமரையுடன் ‘ஓடிவிட்டான்’ அல்லது அவர்கள் இருவரும் நான்கு நாட்களுக்கு முன் ஓடிவிட்டார்கள்’ அல்லது அந்தக் காதலர்கள்,’தலைமறைவாகி விட்டார்கள்’. ஊரார் இப்படிப் பல விதமாகப் பேசிக் கொண்டிருந்தாலும் அவர்கள் இருவரும் ‘ ஒன்றுபட்டுவிட்டார்கள்'(அந்த ஊரில் காதல் சோடி வீட்டை விட்டு ஓடிப்போவதை அந்தக் காலத்தில் அப்படித்தான் சொல்வதுண்டு).

இப்போது, அவர்கள்’ஓடிப்போனதின்’ ஆரம்பத்திற்கு வருவோம்.

கேசவன் ஒன்றும் அவன் தாயார் சொல்லிக்கொண்டு திரிவதுபோல் ‘அப்பாவியில்லை’ வாழத்தெரிந்தவன். மற்றவர்கள் அதாவது அவன் காதலிக்கும் சிந்தாமணி மாமியின் மகள் தாமரையைக் கல்யாணம் செய்யமுதல் எப்படியும் ஏதோ ஒரு விதத்தில் முன்னுக்கு வரத் துடிக்கிறான். ஆனால் அவனது யோசனைகளை அங்கு தொடரும் அரசியல்நிலை குழப்பிக் கொண்டிருக்கிறது. மற்றவர்;கள் மதிக்கத் தக்கதாக ஒரு பணக்காரனாக எப்படி வாழ்வது என்பதை தாமரையைக் காதலிக்கத் தொடங்கிய இளவயதிலேயே தெரிந்து கொண்டவன்.

அரசியற் பிரச்சினையால் நடந்து கொண்டிருக்கும் பல மாற்றங்களால் யார் யார் எதை எதை இழக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டவன் கேசவன்.தனது உயிரைக் காப்பாற்ற அவனது பெற்றோர் இரவு பகலாக எத்தனையோ கடவுளர்களை வேண்டிப் பூஜைகள் வைத்துத் தவிக்கிறார்கள். அவனோடு ஒன்றாக விளையாடிய பலர் இந்தப் போர்க்கொடுமையால் உயிரை இழந்து விட்டார்கள். அப்படி இறந்தவர்களின் ஒன்றிரண்டு தாய்களுக்கு மனநிலை குழம்பி விட்டது. இதெல்லாம் யோசித்துப் பார்த்து விட்டுக் கேசவன் ;இந்த ஊரை விட்டுக் கொஞ்சகாலம் வெளிநாடு போக முடிவுசெய்து விட்டான்.

எப்படியும் அந்த ஊரை விட்டு அயல்நாடுசென்று அதிகம் பணம் சேர்க்கவேண்டுமென்பதைத் தனது அடி மனதில் மிகவும் பத்திரமாக அத்திவாரம் போட்டு வைத்திருப்பவன்.அவனை அவனின் தாய் பரிமளம் மிக மிக உணர்ந்து கொண்டவள். அவனுக்குத் தாமரையிலுள்ள காதலையும் நன்றாகத் தெரிந்து கொண்டவள். அவனின் வெளிநாடு போகும் விடயங்கள் பற்றி எவ்வளவு அக்கறை எடுக்கிறான் என்பது பற்றித் தனக்குள் பெருமை பட்டுக் கொள்பவள்.அவனைத் தங்கள் இயக்கத்தில் இணைக்க ஓடித்திரியும் தமிழ்க்குழுக்களிலிருந்து காப்பாற்றி அவனை,சமுதாயம் மதிக்கும் மனிதனாக வளர்க்க அவள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள்.

அவன் ஒரு பணக்காரனாக வரவேண்டுமென்ற சங்கற்பத்துக்கு ஒரு காரணம் அவனுக்கும் அந்த ஊர்ப் பணக்காரியின் மகளான தாமரைக்கும் ‘தொடுப்பு’இருப்பது என்பதும் அவளுக்கும் தெரியும்.(அந்த ஊரில் ஒருத்தரில் ஒருத்தர் வைத்திருக்கும் காதலைத் ‘தொடுப்பு’ என்றுதான் சொல்வார்கள். தமிழ்ப் படங்கள் வந்து இரவு பகலாகக் காதல் பற்றி முழங்கிக் கொண்டிருந்தாலும் பரிமளத்தின் வயதினர் வெளிப் படையாகக் காதல் பற்றிப் பேசுவது கிடையாது.) தூரத்துச் சொந்தமான தாமரையுடன் பரிமளத்தின் மகன் கேசவன் ‘தொடுப்பு’ வைத்திருபது அவளுக்குத் தெரிந்தபோது அவள் தாமரையின் தாயான சிந்தாமணியின் பணத்திமிரை பற்றி யோசித்து மன நிம்மதியிழந்தாள். தனது ஒரேயொருமகனின் சந்தோசமான எதிர்காலத்திற்காக அந்தத் தாய் இடைவிடாது பல கடவுளர்களை வேண்டிக்கொள்வது கேசவன் நன்றாகப் புரிந்து கொண்ட விடயம். எப்படியும் ‘முன்னுக்கு ‘வந்து விட்டால் அவனின் காதலியைக் கைபிடிப்பது சுலபமாகவிருக்கும் என்பது அவனது நம்பிக்கை.

அவனது காதலியின் தாயான- தூரத்து உறவினரான சிந்தாமணி அவளது வாழ்க்கையில் பணத்தையே குறியாகக் கொண்டவள். அவர்கள் குடும்பத்தில் பரம்பரையாக,காதல் (தொடுப்பு) என்ற பதத்துக்கு எந்த மதிப்;பும் கிடையாது.அப்படி யாரும் அந்தக் குடும்பத்திலுள்ளவர்களுடன் காதல் வயப் பட்டால் அவர்களின் கதி அதோ கதிதான் தனக்குப் பிடிக்காவர்களைப் பழிவாங்க சிந்தாமணி எதுவும் செய்யத் தயங்குவதில்லை. மிரட்டல் பயமுறுத்தல்களுக்; சரிவராதவர்களைச் செய்வினை சூனியத்தின் மூலம் வழிக்குக் கொண்டுவருபவர்களில் சிந்தாமணியும் ஒருத்தி என்பது ஊரில் பலரின் அபிப்பிராயம்.அவள் கணவர் அவள் போட்ட சட்டதிட்டங்களுக்குள் வாழ்பவர்.சிந்தாமணி போட்ட கோட்டைத் தாண்டிப் போய் மலசலம்கூடக் கழிக்கத் தயங்குபவர்.அவர்களின் குடும்பத்தில் நடக்கும் எதையும் முடிவெடுப்பவள் சிந்தாமணி.

அப்படித் திமிர் பிடித்த சிந்தாமணியின் மகள் தாமரையைக் கூட்டிக்கொண்டு (என்ன தைரியம்?!) கேசவன் ஓடிவிட்டான்.

ஒரு அதிகாலையில், சிந்தாமணி தூங்கிக்கொண்டிருந்தபோது, வழக்கம்போல் தாமரை எழுந்து குளித்து விட்டுக் கடவுள்களுக்குப் பூவைத்து வணங்குவது நடக்கும். அன்றும் சிந்தாமணி அதிகாலையில் நல்ல நித்திரையாயிருக்கும்போது தாமரை எழுந்து வெளியே சென்றாள்.

தாமரைக்குக் கேசவனின் உயிரைப் பாதுகாக்க அவனது தாய் அயல் நாடு செல்லும் விடயமாகக் கொழும்புக்கு அனுப்பவிருப்பது தெரியும்.அவள் அதை நம்பத் தயாராகவில்லை. இந்தக் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பலரை ;தமிழ்ப் போராளிக் குழுக்கள்-முக்கியமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள்’ போர்முனைக்கு இழுத்துக்கொண்டு போகிறார்கள்.

அதற்காகப் பல தாய்மார்கள் தங்கள் பெண்குழந்தைகள் வயதுக்கு வந்ததும் அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

ஆண் குழந்தைகளைக் (வாலிபர்களை) காப்பாற்ற அயலூர்களுக்கும், தங்களுக்குத் தெரிந்த இஸ்லாமிய நண்பர்கள் வீட்டிலும் பாதுகாப்பாக அனுப்புகிறார்கள். தொடரும் அரசியல் குழப்பங்களால்,இயக்கங்களிலிருந்து கேசவனைக் காப்பாற்றும் சாட்டில்,அவன் தாய் அவனை,ஊரிலிருந்து கடத்திக்கொண்டுபோய் யாரோ அயலூர்ப் பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போகிறாள் என்று நினைத்த தாமரை அதை எப்படியும் தடுக்கும் வழிகளைத்’ தேடினாள். அது பற்றி அவளுக்கும் கேசவனுக்குமிடையில் காதற் கடிதங்களைப் பரிமாறும் தரகனான பொன்னம்பலத்தை அவள் கேட்டாள்.

பொன்னம்பலம் என்ற அந்தக் காதல்த் தரகன், கேசவன் நிச்சயமாகக்; கொழும்புக்குப் போகப்போகிறான் என்பதைத் தாமரைக்கு உறுதிப் படுத்தினான். ஆனால் அவனுக்கு இரகசியமாக அவனது தாய் ஏதும் சம்பந்தம் பேசுவது பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்ற தனது தாயின் பெயரில் சத்தியத் செய்தாலும்,கேசவன் ஊரை விட்டு, தன்னைப் பிரிந்து போகப் போகிறான் என்பதை அவளாற் தாங்க முடியவில்லை. கேசவன் அப்படிச் சென்றால் தாமரை தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவள் எழுதியதைக் கேசவன் பெரிதாக எடுக்கவில்லை.

ஒருநாள்க் காலையில், அவன் அதிகாலையில் எழுந்து காலைக் கடனைக் கழிக்க ஆற்றோரம் போகத் தெருப்பக்கமாக வந்தபோது,இருள்பிரியும் அதிகாலையில், அவனின் வீட்டு வேலிக்கப்பால் ஏதோ ‘ உஸ், உஸ் என்ற சத்தத்தைக் கேட்டுப் பயந்து பாம்பு ஏதும் ஊர்கிறதா என்று வேலிக்கப்பால் உற்றுப் பார்த்தபேது, கலங்கிய கண்களும், கையில் எதோ ஒரு சிறு பொட்டலத்துடன் தாமரை நின்றிருந்தாள்.அந்த ஊரின் அழகிய இளம் பெண்களில் அவளும் ஒருத்தி. பருவத்தின் பல மாயவர்ணங்கள் அவளைக் கவர்ச்சியாக வலம் வரப்பண்ணிக் கொண்டிருப்பதற்கு அப்பால் அவளின் செல்வத்தில் வளர்ந்த கொளிப்பு அவள் நடையுடை பாவனையில் அப்பட்டமாகவிருக்கும். அவள் இப்போது அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக ஒரு ஏழை அபலைமாதிரி அவன் முன்னால் நிற்கிறாள்

கடந்த சில கிழமைகளாக அவர்களுக்குள் நடந்த ஊடலால் அவர்கள் தொடர்புகளை வைத்திருக்கவில்லை. கொழும்புக்குப் போனதும் அவளுக்கு விபரமாக அவர்களது எதிர்காலத் திட்டம் பற்றி எழுதுவது என்று கேசவன் முடிவுகட்டியிருந்தான்..

ஆனால் அவள் இப்போது இருள்பிரியும் அதிகாலையில் இப்படியான மிகவும் பரிதாபமான, அதே வேளையில் பயமுறுத்தும் தோற்றத்துடன் கையில் ஏதோ பொட்டலத்துடன் அவன் முன் வந்திருக்கிறாள். இரவு உடையோடு அழுது கொண்டு நிற்கிறாள். அவனுக்கு அவள் தோற்றம் தர்மசங்கடத்தையுண்டாக்கியது. ஏன் அழுகிறாள்,இரண்டு மூன்று கிழமைகள்; தொடர்பில்லாததற்கு இவ்வளவு வேதனைப் படுகிறாளே?யாரும் பார்த்தால் என்ன நடக்கும்? அவன், வேலிக்கருகில் வந்து,

‘தாமரை என்னம்மா அழுகிறாய்? அதுவும் இந்த நேரத்தில்..?’ அவன் கேட்டு முடிக்க முதல் அவள் இடை மறித்தாள்.

‘ இஞ்ச பாருங்கோ கேசவன். இண்டைக்கு நீங்க உங்களோட என்னைக் கூட்டிக்கொண்டு போகாட்ட கையில் வச்சிருக்கிற எலிப் பாஷாணத்தை விழுங்கிப்போட்டு உங்களுக்கு முன்னால செத்துப்போவன்’அவளின் குரலிலிருந்த கடுமை அவனை நிலைகுலையப் பண்ணியது. அவளையும் அவளின் கையில் வைத்திருக்கும் பாஷாணத்தையும் மாறி மாறி வெறித்துப் பார்த்தான் கேசவன்.

‘எலிப் பாஷாணமா’ அவன் குரல் தடுமாறியது.அவன் அவளையும் அவளின் கையில் வைத்திருக்கும் பாஷாணப் பொட்டலத்தையும் வைத்தகண் வாங்காமல் ஆராய்ந்து பார்த்தான் அழகிய அந்தக் காலைநேரத்தில் அவர்களைத் தடவிப் போகும் இளம் காற்றின் இளம் சூட்டைத்தாண்டி அவன் உடம்பு பயத்தில் வியர்த்தது.

‘ என்ன பார்க்கிறியள்.. பொன்னம்பலத்தைக் கெஞ்சி வாங்கினன்’ அவள் வாய்விட்டழத் தொடங்கி விட்டாள்.

‘நீங்க என்னை விட்டுப் போனா நான் விஷம் குடிச்சுப்போடுவன்’

கேசவனிலுள்ள காதலால் தன் உயிரை விடத் தாமரை தயாராகி விட்டாளா?

‘ என்ன பைத்தியம் உனக்கு சும்மா இரணடு கிழமைக்குக்; கதைக்காலிருந்தால் உன்னை விட்டிட்டுப் போவதாக ஏன் பைத்தியக் கதை கதைக்கிறாய்’ அவன் கோபத்தில் முணுமுணுத்தான்.

காதலுக்காக அவள் உயிரைவிட்ட காதல் சோடிகளின் கதைகள் அவனுக்குத் தெரியும். ரோமியோ யூலியட்,அம்பிகாபதி அமராவதி,லைலா மஜ்னு என்று பல காதலர்களின் பெயர்ப்பட்டியல் அவன் மனத்தில் வந்துபோய்க் கொண்டிருந்தன.

இப்போது இந்த ஊரின் பணக்காரியின் மகளான தாமரை தனது மைத்துனன் கேசவனுக்காக உயிரைவிடத் தயாராக இருக்கிறாள்.

அல்லது வழக்கம்போல் ஏதோ சொல்லி தனது பிடிவாதத்துக்குள் அவனை மடக்கப் பார்க்கிறாள் .

அல்லது இரு குடும்பங்களையும் இந்த ஊர் காணாத ஓர் போருக்குத் தயார் படுத்துகிறாள். அல்லது உண்மையாகவே அவனில்லையெனில் தனக்கு வாழ்க்கை இல்லை என்பதை அவனுக்கு நிலை நிறுத்தப்போகிறாள்.

அவன் முகம் பயத்தால் வெளிறிப்போனதை மங்கலான இருளில் அவள் கவனித்திருக்கமுடியாது.

அவளுடனான அவனது முதல் அனுபவம் மிகவும் ஆழமானது. அவளுக்கு மூன்று வயது, அவனுக்கு ஐந்து வயது. பத்துவயதுக்கு மேலான சிறுவயதுக் குழந்தைகள் ஒன்றாய்ச் சேர்ந்து கைப்பந்து போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைவிடச் சிறியவர்கள் பக்கத்துப் புற்தரைகளிலிருந்து விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தாமரை தனது ஒன்றைவிட்ட அக்கா ஏழுவயதுச் சரஸ்வதியுடன்; விளையாட்டுப் பார்க்க வந்திருந்தாள். மழை தூறத் தொடங்கியது. விளையாட்டைப் பார்த்திருந்த பார்வையாளச் சிறுவர்கள் பட்டாம் பூச்சிகள்போல் பல பக்கங்களுக்கும் பறந்து கொண்டிருந்தார்கள்.சட்டென்று வந்த மின்னலும் இடியும் சிறு குழந்தைகளை அலறப் பண்ணியது. தாமரையின் அலறலால் அவளுடைய ஒன்றுவிட்ட அக்காள் சரஸ்வதி பயந்து விட்டாள். கேசவன் இருவரையும் தனது கைகளில் பிடித்துக் கொண்டு ஓடினான்.

‘கேவா எனக்குக் கண் பார்க்க ஏலாது’ தாமரை வீரிட்டலறிக் கொண்டிருந்தாள். தாமரைக்குக் கேசவனின் பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத வயது.அவளுடைய தமக்கை நடுங்கி விட்டாள். மின்னல் வந்து இந்தக் கண்களைப் பறித்துவிட்டதா?, மின்னடியால் இறந்தவர்கள் பார்வையிழந்தவர்கள் பற்றிய கதைகளை அந்த ஊர்ச் சிறுவர்கள் கேள்விப் பட்டிருக்கிறார்கள்.தாமரையைக் கூட்டிக்கொண்டு வந்ததால் சின்னம்மா சிந்தாமணியிடம் எவ்வளவு அகப்பைக் காம்பு அடிவாங்கவேண்டும் எனபது மட்டுமல்ல சின்னம்மா சிந்தாமணி சஸ்வதியின் கண்களையும் வாங்கி விடுவாள் என்று நினைத்துப் பயந்து விட்டாள்.

அப்படி ஓடிப்பொன சிறுவர்கள்,தாமரையின் வளவுப்பக்கம் வந்ததும்,’ தாமரை,கண்ணைத்திற’ சிறுபையன் அவளை அணைத்துக் கொண்டு அன்புடன் கூறினான்.

‘என்னால ஏலாது கேவா’ தாமரை விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.

அவள் தமக்கை சரஸ்வதியும் சேர்ந்தழுதாள்.கேசவனுக்குத் தர்ம சங்கடமும் எரிச்சலும் வந்தாலும் தனக்கு மூத்ததும் இளையதுமான இருபெண்களின் விம்மல் அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வை ஐந்து வயது ஆண்மைக்குக் கொடுத்தது. மழை குறையத் தொடங்கியது. இடியும் மின்னலும் நின்றுவிட்டன.’தாமரை,எனக்கும் சரஸ்வதிக்கும் கண்கள் மின்னலடித்துக் குருடாகவில்லை என்பதை உன் கண்களைத் திறந்துபார்’ அவனின் கெஞ்சலில் உருகினதாலோ அல்லது மற்றவர்கள் மாதிரி தனது கண்களும் பத்திரமாக இருக்கின்றனவா என்று பார்க்க தாமரை தயங்கித் தயங்கித் தன் கண்களைத் திறந்தாள்.

கொஞ்சம் கொஞ்சமகத் திறக்கத் தொடங்கியவள்,தனது கண்களை அகலத் திறந்து கொண்டு மின்னலடித்ததால் தனக்குப் பார்வை போகவில்லை என்ற சந்தோசத்தில் அவளது மழலை முகம் மலரச் சிரித்தாள்.

அவர்கள் வாழ்க்கை தொடர்ந்தபோது,இருவரும் களங்கமற்ற கிராமத்துக் குழந்தைகளாய் ஓடிவிளையாடிப் பிடித்து விளையாடி மகிழ்ந்தகாலம் கழிந்து,அவளின் பருவகாலம் வந்தததும். அவனை நேரே பார்க்காமல். கடைக்கண்ணால் கதைபேசியத் தொடங்கி வளர்ந்தது அவர்களின் காதல்.அப்படி வளர்ந்த காதலை,இப்போது அவள் எலிப்பாஷாணத்தின் உதவியுடன் ஒரு நொடியில் தொலைத்துவிடுவதாகப் பிடிவாதம் பிடிக்கிறாள்.

அவனுக்கு என்ன செய்வது என்ற தெரியவில்லை. பாஷாணத்தைக் காட்டித் தன்னைப் பயமுறுத்துவளில் கோபம் வந்தததை விட அவளுக்கப் பாஷாணம் வாங்கிக்கொடுத்த பொன்னம்பலத்தின் மென்னியைப்பிடித்துத் திருகவேண்டும்போலிருந்தது. அவன் நீpண்டகாலமாக அவர்களின் காதலுக்கு உதவியவன். இன்று அவளின் சாதலுக்கும் உதவியிருக்கிறானா?

அந்த ஊரில் காதலர்களுக்கு உதவி செய்யப் பல காதல்த் தரகர்கள் இருப்பார்கள். அவர்களை அந்த ஊரார் ‘கூட்டிக்கொடுத்து பிழைப்பவர்கள்’ என்ற தரம் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதுமுண்டு. அப்படியான ஒரு காதற் தரகன் பொன்னம்பலம் தாமரைக்கும் கேசவனுக்குமிடையில் நடைபெறும் காதற் கடிதப் பரிமாறல்களைச் செய்யும் பணியைச் செய்து, தாமரையிடமும் கேசவனிடமும் ஐந்தோ பத்தோ வாங்கிக்கொள்வான்.

அத்தோடு நிற்காமல்; இப்போது தாமரைக்கு எலிப் பாஷாணம் வாங்கிக் கொடுத்து அவள் தன்னை மிரட்டுவதை கேசவனாற் தாங்கமுடியவில்லை.

அவளிடம் எதைப் பேசி அவனின் நிலையை விளக்குவது என்ற தெரியவில்லை. அந்த ஊரிலுள்ள இளம் பெண்களையும் ஆண்களையும் ‘தமிழுக்கு’ உயிர்கொடுக்கச் சொல்லிப் போராட்டவாதிகள் வீதிகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் செல்லத் தயங்கியவர்களை இழுத்துக் கொண்டு போகிறார்கள்.

இளம் ஆண்கள் பெண்கள் இப்படியான விதத்தில் போர்முனைக்கு இழுபட்டுக் கொண்டுபோகப் படுவதைத் தடுத்த தாய்மார் தமிழ்ப் போராளிகளால் கடுமையாகத் தாக்கப் பட்டதுமுண்டு.

அதனால் பெரும்பாலான பெற்றோர்கள் வயது வந்து குழந்தைகுளுக்கு அவசர அவசரமாகத் திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

குழந்தைகளின் உயிருக்காகக் கடவுளை வேண்டி விரதமிருந்து உடைந்துபோயிருக்கும் கேசவனின் தாய் அப்படியான கொடுமைகளுக்கு ஆளாகுவதை அவன் விரும்பவில்லை. அம்மாவின் யோசனைபடி வெளி நாட்டுக்குத் தப்பிப் போக நினைப்பது தவிர்க்க முடியாது. ஆனால் அவன் காதலி அவன் நிலையைப் புரிந்து கொள்ளாமல்..?

போர்முனைக்குத் தன்னையிழுக்க முயற்சிக்கும் ‘தமிழ்ப் புலிகளுக்குப்’ பயந்து ஓடவெளிக்கிட்டவனை தாமரை அவன் காதலி எலிப்பாஷாணத்தைக் காட்டி இழுத்து நிறுத்தப் பார்க்கிறாள்!

‘தாமரை…’அவனின் தயக்கம் அவளுக்கு எரிச்சலையுண்டாக்கியது.

.இஞ்சபாருங்கோ.. விடியப்போகுது..ஆக்கள் எழும்பப்போகினம். இப்ப நாங்க இஞ்ச இருந்து ஓடிப் போகவேணும்…’அவள் முடிக்கவில்லை.

‘ தாமரை நாங்க உடுப்புகள் மாத்தி வெளிக்கிடுகிற நேரத்தில ஊர் எழும்பிவிடும்’ அவன் அவளுக்குப் புத்திமதி சொல்லும் விதத்தில் குரலை மாற்ற அவள் பட படவென்று பாஷாணத்தைப் பிரிக்கத் தொடங்கி விட்டாள்.

அவன் நடுங்கிப்போய் வேலி ஓட்டையால் அவள் கைகைளை இறுக்கிப் பிடித்தான்.ஓலையால் வேயப்பட்டிருந்த உதிர்ந்த ஓலைகளின் கூர்மையான ஈர்க்கில்கள்அவனின் கைகளைப் பதம் பார்த்தன. அவளுக்கு எந்த விதமான சமாதான வார்த்தைகளும் இந்தக் கட்டத்தில் வேலைசெய்யாது என்று அவனுக்குப் புரிந்து விட்டது.

‘ என்னுடைய எதிர்கால வாழ்வென்டால் உங்களோடதான் இல்லையெண்டா..’ அவள் கண்கள் அவனைக் கெஞ்சலுடன்; பார்த்தன.

அவளைப்போல் பல இளம் பெண்கள் புலிகளால் இழுத்துக்கொண்டு போர்முனைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இராணுவத்தின் கொடுமை தாங்காமல் சில பெண்கள் தாங்களாகவே போர்முனையில் தங்களை அர்ப்பணிக்கச் சென்று விட்டார்கள.

தாமரை அவளின் நாட்டுக்காக அல்ல,அவள் காதலித்தவன் பிரிவைத்தாங்காமல் கையில் எலிப்பாஷாணமும் நீர்வழியம் கண்களுடனும் இருள்பிரியா இந்த நேரத்தில், இறப்புக்கும் வாழ்வுக்கும் உனது பதிலைக் காத்திருக்கிறேன் என்று கெஞ்சுகிறாள்.

அவள் நிலை அவனுக்கு விளங்கியது. அவன் தன்னை விட்டுப் பிரிந்து விடுவானோ என்ற யோசனையில் சித்தம் பிசகி பைத்தியம் முற்றிய நிலையில் அவள் பேசுவது போலிருந்தது.

இந்த நிமிடம் அவன் அவளுக்கு ஏற்ற மாதிரி ஒரு முடிவை எடுக்காவிட்டால் வேலிக்கு அப்பாலுள்ளவள் கையிலிக்கும் விஷத்தை விழுங்கித் தொலைக்கத் தயங்கமாட்டாள். அவன் நினைவுகள் பல்லாயிரம் மைல் வேகத்தில் சுழன்றடித்து வேலை செய்தது.

‘சரி..இப்ப என்ன சொல்லச் செய்யச் சொல்கிறாய்?’

‘என்னை இப்பவே உங்களோட கூட்டிக்கொண்டபோங்கோ’ இரவு உடையுடன் நின்று, ‘ஓடிப் போவதற்கு’ உத்தரவுபோடும் காதலியைக் காலைக் கடன் கழிக்க லுங்கியுடன் வந்த கேசவன்; முறைத்துப் பார்த்தான்.

இன்னும் கொஞ்சம் தாமதித்தால்- தாமரையின் தாயின் கண்களில் அவர்கள் பட்டு விட்டால் தாமரை வைத்திருக்கும் எலிப்பாஷாணத்திற்கு வேலை வைக்காமல் மாமியார் சிந்தாமணி இருவர் உயிர்களையும் உலக்கையால் அடித்துப் பரலோகத்திற்குப் பார்ஸல் பண்ணிவிடுவாள் என்று கேசவன் தனக்குள் நினைத்துக்; கொண்டான்.அவனுக்கு வயது இருபது. அவளுக்கு பதினெட்டு.பெரும்பாலானவர்கள் கிராமத்தார் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் வயது.

அரை மணித்தியாலத்தின் பின் நித்திரை கலந்த சிந்தாமணி மகளின் தடயத்தைக் காணாமல் குழம்பிப்போய் வீட்டின் நாலாபக்கம், டாய்லெட் பக்கம், கிணற்றடி.பின் தோட்டம் எல்லாம் தேடிமுடிவதற்கிடையில் அவளின் உள்மனம் ஏதோ சொன்னது:

‘தாமரையை விடுதலைப்புலிகள் போர்முனைக்குக் கடத்திக் கொண்டு போயிருக்க முடியாது. ஏனென்றால் சிந்தாமணி புலிகள் ‘நன்கொடையாகக்’ கேட்கும் தொகையைத் தாராளமாகக் கொடுக்கிறாள். அப்படியான தாராளமனம் படைத்த பணக்காரர்களின் பிள்ளைகளைப் புலிகள் போர்களத்துக்கு இழுத்துச் செல்ல மாட்டார்கள் என்று தெரியும்.

– தாமரைக்குக் கேசவனிலுள்ள காதல் பற்றிய விடயம் பற்றி அவளின் தம்பியும் உளவாளியுமான அழகுப்போடி சொல்லியிருக்கிறான். பரிமளம் மகனை அயல் நாடு அனுப்ப முயற்சிப்பதும் அவளுக்குத் தெரியும் அப்படி நடந்தால் சனியன் தொலைந்தது என்று சொல்லிவிட்டுத் தாமரைக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கச் சிந்தாமணி திட்டம் போட்டிருக்கிறாள்.ஆனாலும்—?

-கேசவனுடன் ஓடிப்போயிருப்பாளோ—?

அந்தப் பாரதூரமான நினைவு வந்ததும்,சிந்தமணியின் சிந்தனை சட்டென்று தடைபட்டது.

உடனடியாக, கும்பகர்ணன் மாதிரி நித்திரை செய்யும் சின்னவன் என்ற உதவியாளனைத் தட்டி எழுப்பி, ‘தாமரையைக் பார்த்தாயா’ என்று மிரட்டினாள்.அவன் திண்ணையிற்படுத்து அந்த வீட்டுக்குப் பாதுகாவலனாகவும் எடுபிடியாளனாகவும் இருப்பவன். ஒரு பிடிச் சோற்றுகாகவும் உடுக்கும் உடுப்புக்கும் உழைக்கும் மனிதன் என்ற இயந்திரம்.கொஞ்சம் மந்த புத்தி என்ற பலரால் எடைபோடப் பட்டவன்.

காதலின் மகிமைபற்றி அவன் அறியான்.அதுவும் கள்ளக்காதல் பற்றி அவனுடன் யாரும் ‘கலந்துரையாடியதில்லை’.

பத்திரகாளியாய் நின்றிருந்த சிந்தாமணி நறுக்கென்ற அவன் தலையில் குட்டினாள்.

மிக மிக அதிகாலையில் எழுந்து காலைக்கடன் கழிக்க ஆற்றங்கரைப்பக்கம் போய்விட்டு வந்த ‘சிந்தாமணியின் புருஷன்’ மனைவியின் பத்திரகாளித் தோற்றத்தைக் கண்டு பதறி விட்டார்.அவர் சிந்தாமணியின் பணபாவங்களுக்கு மிகவும் எதிர்மறையான மனிதன். அவரின் உண்மையான பெயர் சொல்லி அவரை யாரும் பேசுவது கிடையாது. அரச விடயங்களுக்களில் கையெழுத்துப்போட அவருக்கு ஏதும் ஒரு பெயர் இருக்கலாம். ஆனால் அவர் ஊரார் கண்களுக்குச் ‘சிந்தாமணியின் புருஷனாகத்தான்’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் அயலூரைச் சேர்ந்தவரென்றபடியால், இளமையில் அந்த ஊரார் ஒருத்தருக்கொருத்தர் வைத்துக் கொள்ளும் ‘பட்டப்பெயரும்’ அவருக்கில்லை. அதாவது அந்த ஊரில் யாரும் அவர்களுக்குத் தாய் தகப்பன் செல்லமாக வைத்த ஒரு பெயருடனிருப்பதில்லை. ‘கஞ்சல்’ சிந்தாமணி,’தரகன்’; பொன்னம்பலம் (சின்னவயதிலியே இருவர் சண்டைகயைத் தீர்த்து வைப்பதில் இருவரிடமும் பணம் வாங்கிக்கொண்டு தரகு வேலை செய்தவன்-இப்போது’காதற்தரகன்’பொன்னம்பலம், போன்ற பெயர்கள் அடைமொழிகளாகவிருக்கும். .

சில அரசியல்வாதிகள் தங்களைப் பெரிய பக்திமானாகவோ அல்லது கௌரமானவராகவோ மற்றவர்களை வைத்து ப்ரமோட் பண்ணுவது மாதிரி. இப்படிப் பல பட்டப் பெயர்கள் அல்லது அடைமொழிப் பெயர்களுடன் பெரும்பாலோர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களில் ஒருத்தர் ‘சிந்தாமணியின் புருஷன’;- பெரியதம்பி.

அவர் அவருக்குள்ள பெயரிற்தான் பெரியதம்பி ஆனால் வாழ்க்கையில் சிந்தாமணிக்குக் கட்டுப்பட்ட ‘சின்னத்தம்பி’யாகத்தான் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு அப்பாவியானவர். யாருடைய பிரச்சினைக்கும் போகாதவர் மகளுக்குத் தன்னைப் போல’ஒரு நல்ல'(?) மாம்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருப்பவர்.

அதிகாலையிலெழந்து வேப்பங் குச்சியால் பற்களைத் தேய்த்தபடி,தனது காலைக் கடனை முடித்து விட்டு வந்த சிந்தாமணியின் புருஷன்’ மனைவின் ஆக்Nhரஷமான நிலையைக் கண்டு பதறி விட்டார் (பயந்து நடுங்கி விட்டார் என்பதுதான் சரியாயிருக்கும்).

வீட்டு உதவியாளன் சின்னவன் பயத்துடன் நின்றிருந்தான். தாமரை வீட்டில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட சிந்தாமணி தாமரையின் அறைக்குள்ச் சென்று ஏதும் தடயங்களிருக்கிறா என்று ஆராய்ந்தாள். தாமரையின் இரவு உடையைத் தவிர மற்றப்படி எல்லாம் வைத்த இடங்களில் பத்தரமாகவிருந்தது. தாமரை அணிந்திருந்த இரவு உடுப்புடன் தன்மகள் கேசவனுடன்’ ஓடிவிட்டாள்’ என்பது சிந்தாமணிக்குத் தெரிந்தது. ஆத்திரத்தில் கோழி மூடிவைத்திருக்கும் கூடையை எட்டியுதைத்தாள்.

கோழிக்கூண்டில்; பவுத்திரமாக இரவைக் கழித்த தாய்க்கோழியும் பத்துக் குஞ்சுகளும் பதறியடித்துக் கொண்டு கீச்சிட்டன.இரவு முழுதும் வீடியோவில்; பார்த்து விட்டு குறட்டை விட்டுத் துங்கிக் கொண்டிருக்கும் இரண்டு மகன்களையும் ஆளுக்கு ஒரு அடிபோட்டு எழுப்பினாள்.

பதினாறு,பதினாலு வயதுதுகளாகும் அந்த வாலிபர்கள் இருவரும் அங்கு என்ன நடக்கிறது என்ற தெரியாமல் நித்திரைக் கலக்கத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு தாயைப் பயத்துடன் பார்த்தார்கள்;.

அப்பாவி சின்னவன் கும்பகர்ணன் மாதிரி நித்திரை செய்ததால் தனது குடும்ப மானம் போனதாக அவன் தலையில் பட படவெனக் குட்டினாள்.அவன் அழுகையை அடக்கிக் கொண்டு கைகட்டியபடி ஒதுங்கி நின்றான்.

‘ உடனே ஓடிப்போய்த் தம்பியைக் கூட்டிக்கொண்டுவா’ சிந்தாமணியின் உத்தரவுடன் காற்றாய்ப் பறந்தான் சின்னவன்.சிந்தாமணியின் தம்பி அழகுப்போடி பெரிய சண்டியன்.அவனுக்குப் பயப்படாதவர்கள் ஊரில் இல்லையெனலாம்.

இப்போது காலையிருள் கலைந்து சூரிய பவனி தொடங்கி விட்டது. இரைதேடும் அண்டை அயலார் வீட்டுக் கோழிகள் வேலிகள் தாண்டி பவனி வந்தன.அவைகள் தெருவைத் தாண்டியிருக்கும் கேசவன் குடும்பத்திற்குச் சொந்தமான கோழிகள். அவற்றில் ஒரு கம்பீரமான சேவற் கோழி ஒரு பெட்டைக் கோழியைத் துரத்திக் கொண்டு சிந்தாமணியைத் தாண்டி ஓடியது. பெட்டைக் கோழியைத் துரத்தும் அந்தச் சேவலைக் கண்டதும் மகளைக கொண்டோடிய கேசவனின் ஞாபகம் சிந்தாமணிக்கு வந்ததோ என்னவோ அவள். அந்த அப்பாவிக் கோழிக் குடும்பத்தை ஆக்ரோஷத்துடன் பார்த்தாள் சிந்தாமணி. அடுத்த கணம் பக்கத்திற் கிடந்த விறகுக் கட்டைகள் தாறுமாறாக அந்தக் கோழிகளை முக்கியமாகச் சேவற் கோழியைப்; பயங்கரமாகத் தாக்கின. சேவலின் கால்களிற் காயம்,அந்தக் கோழி கூக்குலிட்டது. சிறு கோழிகள் அலறிப் புடைத்துக் கொண்டு வேலியிடுக்குகளால் தங்கள் உயிர் தப்பப் பாதுகாப்புத் தேடியோடின.

அந்த நேரம் காலைக் கடன் கழிக்கச் சென்ற மகன் திரும்வந்ததும் குடிப்பதற்கு பரிமளம் இஞ்சித் தேனிர் போட்டுக் கொண்டிருந்தாள்.அவன் இன்று கொழும்பு செல்லப் போகிறான். பரிமளத்தின் பிரார்த்தனைகளைக் கடவுள்கள் செவிமடுத்துக் கேட்டு உதவி செய்கிறார்கள். பரிமளம் தனது பிரார்த்தனையின் பயனைத் தனக்குள் சொல்லிக் கொண்டு பெருமைப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அலறிப் புடைக்கும் கோழிகளின் சத்தம் அவள் கவனத்தை ஈர்த்தன.

சேவல் கோழியின் கால்களில் படுபயங்கரமான காயத்தால் நொண்டிக் கொண்டு வந்தததைக் கண்டதும் பரிமளம் பதறிவிட்டாள்.

‘ அய்யோ வாயில்லாப் பிராணிக்கு இந்த அநியாயத்தைச் செய்த மிருகத்தனமானவர்யார்? ‘ பரிமளம் பெரிய குரலில் கத்தினாள். அதைக் கேட்டதும் தெருவுக்கு அப்பாலிருந்து சிந்தாமணியின் குரல் பயங்கரமாக ஒலித்தது.

‘ புள்ளயளச் சரியா வளர்க்கத் தெரியாத தேவடியாள்.. ‘ என்று தொடங்கிய சத்தத்தைக் கேட்டு பரிமளம் மட்டுமல்ல அண்டை அயலார் எல்லாரும் படபடவென்ற விழித்துக் கொண்டார்கள்.

‘ அவன் தன்ர குஞ்சாமணியைச் சரியாகப்பிடித்து மூத்திரம்போகத் தெரியாதவன் என்ட பிள்ளையப் பிடிச்சுக்கொண்டு ஓடிட்டான்,என்ன துணிவு அவனுக்கு’ கேசவன் பற்றிய ஆத்திரம் சிந்தாமணியின் சீற்றமான வார்த்தைகளில் வெடித்தன.

அந்த வார்த்தைகளைக் கேட்ட பரிமளம் பனியாய் உறைந்து விட்டாள். தனது மகன் கேசவனுக்குச் சரியாக மூத்திரம் போகத் தெரிந்திருக்காவிட்டாலும், (அது எப்படி சிந்தாமணிக்குத் தெரியும்?) தனது தாயை வேண்டுமென்றே துன்பப் படுத்த மாட்டான் என்று பரிமளத்திற்குத் தெரியும்.தனது மகனைப் புலிகளிடமிருந்து காப்பாற்ற எடுத்த அத்தனை முயற்சிகளும் தாமரையால்த் தவிடுபொடியானது பற்றித் தெரிந்ததும் பதறி விட்டாள்.

அதன் பின் அவர்களுக்கிடையில் பரிமாறப் பட்ட வார்த்தைக் கோவைகள் வயது வந்தவர்களால் மட்டும் கேட்கப் படவேண்டியவை. பாடசாலைக்குப் போகும் வயது வந்த இளம் மாணவர்கள் வசைமொழிகளிளைத் தாண்டிவேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்;.

தாமரையும் கேசவனும் ஓடிப்போனது அரைமணித்தியால இடைவெளியில் ஊரார் அத்தனைபேருக்கும் தெரிந்து விட்டது. அவர்களின் காதலைத் தெரிந்த, காதலுக்காகப் பரிமளத்தை எதிர்த்துக் கொண்டுத் தலைமறைவான காதலர்களை இiளுர்கள் மனதுக்குள் வாழ்த்தினார்கள். பழம்பெருமை பேசும் சில திமிர்பிடித்த கிழங்கள்.’ ஊருக்கு அவமானம்(?) செய்த கேசவனில் கோபம் கொண்டன.

இளம் பெண்களை வைத்திருக்கும் தாய்மார் தங்கள் பெண்களைக் கடைக்கண்ணால்’இவளுக்கும் ஏதும் தொடுப்புள்ளதா’ என்ற தோரணையில் சந்தேகத்துடன் பார்த்தார்கள்.

அந்த ஊரில் இரு குடும்பங்களுக்கிடையிலோ, அல்லது தனிப்பட்டவர்களுகிடையிலோ இப்படி அடிக்கடி சண்டைகள் வருவதும் அப்போது சண்டை செய்யும் இரு பகுதியினரதும் றோட்டில் இறங்கித் தங்கள் பகையைப் பலவழிகளில் காட்டிக் கொள்வதும் சாதாரண நிகழ்வுகள்.

தங்கள் எதிரிகளை நோக்கிய அவர்களின் வசை மொழிகளில்,அவர்களின் குடும்பங்களின் பழைய சரித்திரங்கள் அழுக்கு மூட்டையாய்ப் பகிரங்கமாகக் கொட்டப் படுவதையும் ஊராருக்குத்; தெரியாமலில்லை.

அவர்களின் வாய்ச் சண்டை பெரும்பாலும் அடிதடியில் முடிவதில்லை,ஆனால், ஆத்திரத்தால் அவர்களின் சண்டைக்காக முறிக்கப்படும் கிளைகளால் வேப்பமரம, பூவரச மரம், ஆமணக்கு மரங்கள் என்பன தங்கள் கிளைகளையிழந்து அங்கவீனப்படும்;.

பரிமளத்திற்குக் கையும் ஓடவில்லை.

அவள் திடுக்கிட்டு விட்டாள். வெறும் சரத்துடன் மலம் கழிக்கச் சென்றவன்-இன்னும் கொஞ்ச நேரத்தில் வெளிநாடு செல்லும் காரணமாக கொழும்பு செல்லவிருந்தவனுக்கு என்ன நடந்தது?

பரிமளம் தாமரையைத் திட்டினாள். தன் மகனின் உயிருக்கு அபாயத்தைத் தரக்கூடிய இந்த விடயத்தைக் கடைசிவரைக்கும் அவள் மகன் கேசவன் முன்னெடுத்திருப்பான் என்பதை அவளால் நம்பமுடியாதிருந்தது.

அவன் உடுத்திருந்த ஒரு சாரத்துடன் எங்கே ஓடியிருக்கமுடியும்?

அண்மையில் பக்கத்து வீட்டுச் சொந்தங்கள்தான் எங்கேயோதான் அவர்கள் மறைந்திருக்கவேண்டும்.எங்கே? யார் உதவி செய்தார்கள்? சிந்தாமணியை விரும்பாத யாரும் உதவி செய்திருப்பார்களா? யாரை அனுப்பி உளவு பார்ப்பது?

பரிமளத்திற்கு வந்த சந்தேகம் சிந்தாமணிக்கும் வந்தது. என்னவென்று தன்மகள் இரவு உடுப்புடன் ஓடியிருப்பாள்?’ யாரோ இந்தச் சம்பவத்திற்குப் பினனணியாக இருந்து தன் குடும்ப மானத்தை வாங்குகிறாள் சிந்தாமணியின் மனதில் சந்தேகம் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த ஊரில் உள்ள வயதுபோன கிழவிகள்,எந்த வீடுகளுக்கும், ஏழை பணக்காரர் என்ற பேதமற்று உள்சென்று உரையாடும்(வம்பளக்கும்) தகுதி பெற்றவர்கள் அத்துடன் தேவையானவர்களுக்கு உளவாளிகளாகவுமிருப்பவர்கள். அவர்களின் உதவியை நாடலாமா?;.

சிந்தாமணியின் ஆத்திரம்,கேசவனின் குடும்பத்திலுள்ள ஆயிரம் தலைகளையும் வெட்டி வாங்கித் தொலைக்கவேண்டும் என்று ஆணையிட்டது. அவற்றிற்கு முன்னால், தனக்கு,தனது கௌரவத்திற்கு இழுக்கைக் கொண்டுவந்த மகள் தாமரையைக் கண்டுபிடித்து சிந்தாமணியின் தம்பி அழகுப்போடியின் உதவியோடு (?)மகளை உயிரோடு எரிக்கவேண்டும் அவள் கோபத்தில் சீறினாள்.

ஊரில் வதந்தியாகப் பேசப்படும் ‘காதற் தரகர்கள்’ சிலரைச் சிந்தாமணியின் சண்டியன் தம்பி அழகுப்போடி அழைத்துக் (இழுத்துக் கொண்டு?) வந்தான்.

சிந்தாமணியின் ‘தர்பாரில்’ அழைத்து வந்தவர்கள் பயத்துடன் நின்றிருந்தார்கள் அவர்களிற் சிலருக்குச் சண்டியன் அழகுப்போடியில் ஆத்திரம் வந்தது.அவர்களில் பெரும்பாலோர் காதலர்களுக்காகக் கடிதப் பரிமாற்றம் செய்பவர்களே தவிர,’ஓடிப்போகவோ,இழுத்துக்கொண்டோடவோ அல்லது கடத்திக் கொண்டோடவோ’ ஒத்துழைப்பு செய்யாதவர்கள்.அதனால் வரும் விளைவுகளால்,காதலர்களின் சொந்தக்காரின் ஆத்திரத்தை தங்களின் உடலில் காட்டுவார்கள் என்றும் தெரிந்தவர்கள்.

அவர்களைப் பலவிதங்களிலும் விசாரித்தும் ஒரு தகவலும் கிடைக்காததால் கோயிற் பூசாரியை அழைத்துக் குறிபார்த்து ‘ஓடிப்போனவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விடயத்தைக் கண்டுபிடிக்கச் சொன்னாள் சிந்தாமணி.பூசாரி சிந்தாமணியின் சந்தேகத்தையுணர்ந்துகொண்டு அவர்கள்’வடக்குப் பக்கம் போய்விட்டார்கள்’ என்று சாத்திரம் சொன்னார். ஏனென்றால் தில்லையாற்றைக் கடந்து தெற்குப் பக்கத்திலிருப்பது ஒரே ஒர ஊர்தான்,அங்கு போயிருந்தால்,அவர்கள் அந்த ஊருக்குச் செல்லும் தூரமான ஒருமைலைக் கடக்கும்போது இரண்டு ஊர்களையும் சேர்ந்த யாரோ ஒருத்தர் பார்க்காமல் ஓடிப் போயிருக்க முடியாது.

அதனால் வடக்குப் பக்கம,;(பஸ் நிலையமிருக்குமிடம்,அங்கிருந்து பல ஊர்களுக்கும் போகலாம்) ஓடிவிட்டார்கள் என்று சொல்வதுதுதான் பூசாரி சிந்தாமணியின் உபத்திரவத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவியான வார்த்தைகளாகவிருந்தன.

சிந்தாமணியின் ஆத்திரம், முதல் நாள் கோழிகள், நாய் பூனையில் காட்டப்ட்டது. இரண்டாம் நாள், முதல் நாள் கோழி,பூனை,நாய்களுக்கு விழுந்த அடிகள் அடுத்தநாள், எதிரிகளின் உறவுகளுக்கு விழுந்தன. சிந்தாமணியின் சண்டியன் தம்பி அழகுப்போடி தனது சகாக்களுடன் றோட்டில் நின்று கொண்டு,’ கோழை மாதிரிப் பெண்ணைக் கடத்தியவன் குடும்பத்தில்,யாரும் தைரியசாலிகளிருந்தால் தங்களுடன் நேரடியாகச்’ சண்டைக்கு வருமாறு சவால் விட்டான்.

அதே நேரத்தில் பக்கத்து ஊரிலிருக்கும் கல்லுரிக்குப் போகவந்த கேசவனின் பதினாறு வயதுச் சொந்தக்காரப் பையன் தினேஷ்,சிந்தாமணியின் தம்பியும்; சண்டியனுமான அழகுப்போடியால் நையப் புடைக்கப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு வைத்திய சாலையிலிருக்கிறான். அத்துடன் பரிமளம் பக்கத்திலிருந்தும் சிலர் கை,காலுடைந்து வைத்தியசாலையில் அட்மிட் பண்ணப் பட்டார்கள்.

இலங்கை அரசியல் நிலமைகளால் தொடரும்,போர்க்காலத்தில் தமிழ் மக்கள் படும் துன்பம் சொல்லமுடியாதவை. சிலவேளைகளில் ‘தமிழ்ப்புலிகளைத்’ தேடிவரும் ஆர்மிக்காரர் தங்கள் ஆத்திரத்தைப் பொது மக்களிடம் காட்டி அநியாயமாக நையப்புடைப்பார்கள். அப்பாவித் தமிழர்களின் மண்டைகளை உடைத்துத் தள்ளுவார்கள். கால்களையுடைப்பார்கள். கைகளையுடைப்பார்கள். வெறிபிடித்த சிங்கள ஆர்மி தமிழரின் தலையை வெட்டித் தங்கள் கைகளில் தூக்கிக் கொண்டு பவனி வந்த துயர சம்பவங்களையும் அந்த மக்கள் அனுபவித்தவர்கள்.

அதுமட்டுமல்லாமல், நோய் நொடி வந்த சாதாரண மக்கள் படும்பாடு சொல்லமுடியாது. தேவையான மருந்துகள் வைத்தியசாலைக்கு வந்திருக்காது. அப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கடமை செய்யும் டாக்டருக்கு இப்போது இந்த பட்டிக்காட்டுக் கூட்டம் காதலுக்காகத் தொடர்ந்;து நடத்திக் கொண்டிருக்கும் போரால் வைத்தியசாலைக்கு இரத்தக் காயத்துடன் வரும் இளைஞர்களைக் கண்டு சண்டை செய்து கொண்டிருந்தவர்களில் ஆத்திரம் வந்தது. ஒவ்வொரு மணித்தியாலமும் யாரோ ஒருத்தர் இந்த ஊரில் நடக்கும் தாக்குதல்களால் காயப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டியிருப்பதால்,வயிற்று வலி, நெஞ்சுவலி,என்று வரும் நோயாளிகளைப் பார்க்கவே அவர்களுக்கான மருந்துகளைக் கொடுக்கவோ நேரமில்லாமல், காயம் பட்டவர்களைக் கவனிப்பதில் டாக்டர் திண்டாடிக் கொண்டிருக்கிறார்.

தலையில் அடிபட்டவனுக்கு வைத்தியம் பார்த்த டாக்டர், ‘உங்களின் ஊரில் இந்த விசர்ச் சண்டை தொடர்ந்தால்,நான் ஆர்மிக்காரனுக்குப் போன் பண்ணி உங்கள் சண்டையைப் பற்றி முறையிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள’; என்று மிரட்டினார்.மிலிட்டரிக்காரன் ஊருக்குள் நழைந்தால்,வெண்கலக் கடையில் யானை புகுந்த கதையாகத்தானிருக்கும் என்று கிராமத்தாருக்குத் தெரியும்.

ஆனால் அந்தப் பேச்சைக் கேட்டுத் தங்கள் கோபத்தைத் தணித்துக்கொள்ளுமளவுக்குப் போர் புரிவோரின்; மனநிலையில்லை.ஆனாலும் காயத்துடன் வைத்தியசாலையை நாடும் செயல்களை நிறுத்தி,அடியுதைகளுக்குப் போகாமல்,மூன்றாம் நாள் இருகுடும்பங்களும் வசைமாரி பொழிந்து திட்டிக் கொண்டனர்.

அவர்கள் இருபகுதியினரும் சொந்தக்காரர்கள் என்றபடியால், பரிமளத்தை ஆதரிப்பவர்கள், சிந்தாமணியை ஆதரிப்பவர்கள் என இருபெரும் பிரிவாகக் குடு;பங்கள் பிரிந்தன. கணவன் ஒரு பக்கமும் மனைவி அடுத்த பக்கமும் சேர்ந்து கொண்டு வசை மொழியைப் பொழிந்து கொண்டிருந்தார்கள். தங்கள் பிரிவினருக்குச் ‘சப்போhட்’ பண்ணுவதற்காகத் தாய்தகப்பன் றோட்டில் நிறைந்து நின்றார்கள்.குழந்தைகள் தாய் தகப்பனின் பிரிவைத் தாங்காமல் ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டன. குழந்தைகளைப் பார்க்கும் வேலை,சமயல் வேலைகள் கிழவிகளின் தலையில் சுமத்தப்பட்டன.

போர்புரியும் இருவீடுகளுக்கும் இடையிலிருந்த ஒரு உயர்ந்த கட்டடத்தின் கூரையில் ஏறி நின்று,சிந்தாமணி பக்கத்துச் சண்டியன் ஒருத்தன் தனது சாரத்தைக் கிளப்பிக் காட்டிப் பரிமளத்தின் குடும்பத்துப் பெண்களைத் தன்னுடன் ‘படுக்கக்’; கூப்பிட்டபோது,பரிமளத்தின் சொந்தக்காரப் பையன்கள் திரண்டோடி வந்து அவனையடித்துப் பெரிய களேபரமாகி விட்டது.

‘இந்த விசர் பிடிச்ச சனங்கள் செய்யுற கூத்தால ஆர்மிக்காரன் ஊருக்குள்ள வந்து அநியாயம் செய்யப் போகிறான்’ ஊர் மக்கள் பயத்துடன் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.அப்படி ஊர்மக்கள் பேசுவதைக் கேள்விப்பட்ட சிந்தாமணி, கேசவனைத் ‘தமிழ்ப் புலி’ என்ற பெயரில் ஆர்மிக்காரனிடம் பிடித்துக் கொடுக்க முடிவு கட்டினாள்.

நான்காம்நாள், இராணுவ அணி ஊரைக் கடந்துபோனபோது,அவளின் திட்டத்தையறிந்த அவள் கணவர், ‘எல்லாருக்கும் முன்னால ஆர்மியோட கதைச்சால் ஊரில உன்னைச் சும்மாவிடமாட்டார்கள்’; எனறு சொன்னார். அதனால் அவள் ஆர்மிக்காரரை இரகசியமாகச் சந்திக்கத் திட்டமிட்டாள்.அந்த ஊரில் தமிழர்களுக்கு எதிராகப் பல கொடுமைகளை சிங்கள அரசின் போலிஸ்,இராணுவப் படைகள் செய்வதால் மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஒரு நாளும் அவர்களுக்குச் சொல்வதில்லை.

சிந்தாமணியின் திட்டம் சரிவரமுதல்,சண்டை தொடங்கி நான்காம் நாளன்று, மிலிடடரி ரோந்து சென்ற பின்,தனது வைத்தியசாலைக்குப் போய்க்கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியின் ஒரேயொரு டாக்டர் கல்;லெறியாற் தாக்கப்பட்டு இரத்தம் வழியத் தெருவிற் கிடந்தார்.அதைப்பார்த்த சமூக நலத்தில் அக்கறை கொண்ட ஒரு கிராமவாசி போலிசுக்கு அறிவிக்க, அடுத்த சில நிமிடங்களில் பல போலிஸ் ஜீப்புக்கள் ‘ கலகக்காரரை’அடக்க வந்திறங்கின.

வாய்த்தர்க்கம் செய்து வசைமாரி பொழிந்துகொண்டிருந்த இருபகுதியினரும் போலிஸ் ஜீப்பைக் கண்டு நழுவ முதல் போலிசார் இருப்பத்தினரையும் சுற்றி வளைத்துப் பிடித்து,’அரஸ்ட்’ பண்ணித் தங்கள் வாகனங்களில் ஏற்றினர்.

ஆண் பெண் என்ற பேதமின்றி இருபக்கத்திலிருந்தும் பலர் கைதானார்கள். பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய்களும், பாயில் நோயுடன் படுத்திருந்த முதியவர்களையும் தவிர மற்றவர்கள்.கல்லெறி,பொல்லெறிகள் மூலம் ஊரின் அமைதியைக் கெடுத்த குற்றத்திற்காகக் கலகக்காரர்கள்(?)’கைது’ செய்யப் பட்டார்கள். சிந்தாமணியின் தொட்டாட்டு வேலை செய்யும் சின்னவனின் ஒப்பாரி பார்ப்போர் மனதைத் தொட்டது. காதற்கடிதத் தரகன் பொன்னம்பலம் கடந்த இருநாட்களுக்கு முன்னரே ஊரிலிருந்து தப்பியோடி விட்டதால்; கைதிலிருந்து தப்பி விட்டான்.

போலிஸ் இன்ஸ்பெக்டர் தனது ஸ்டேசனில் கொண்டு வந்து குவிக்கப் பட்ட ‘கிரிமினல்களை'(?) எடைபோட்டார். புதினாறு வயதுப் பையன்களிலிருந்து நாற்பது வயதுவரையான ஆண்களும், அதேமாதிரியே,பதின்மூன்றுவயதுப் பெண்களும் தொடக்கம்,ஐப்பது வயதுக் கிழவிகள்வரை இருபகுதிச்’ சிப்பாய்களாகச்’ சினத்துடன் தங்கள் எதிரிகளைப் பார்த்துச் சீறிக்கொண்டிருந்தனர்.எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் உறவினர்கள். மைத்துனன், மாமன்,மருமகன். சித்தப்பா,பெரியப்பா, அக்கா தங்கச்சி,மாமி,மருமகள்,பெரியம்மா சின்னம்மா முறையானவர்கள்.

நேற்று சிந்தாமணி பக்கத்து வீரர்களால்,மண்டையிலடிபட்ட பையனின் தமக்கை பத்மாவும்; (பதினெட்டுவயது) பிடிபட்ட ‘கைதிகளில்’ ஒருத்தி. அவளின் தமயனை அண்மையிற்தான் ஒரு தமிழ் இயக்கம்’ துரோகி என்று பட்டம் கொடுத்துக் கொலை செய்து அவர்களின் வீட்டு வாசலில் எறிந்து விட்டுப் போனார்கள். இப்போது தனது ஒரே ஒரு தம்பி-பதினாறு வயதுப் பையன் சிந்தாமணியின் சண்டியர்களால்,தாக்கப் பட்ட உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருப்பதால் அவள் பரிமளம் மாமியின் பக்கத்திலிருந்து சிந்தாமணி குடும்பத்தினரைத் (வாயால்) தாக்க வந்திருந்தவள். அவளது கைதும் அதைத்தொடர்ந்து பத்மா போலிஸ் ஸ்டேசனிருப்பதும் அவளின் தாய்க்கு தெரிந்தவுடன் அந்தத் தாய் அலறிப் புடைத்துக் கொண்டு வந்து போலிசாரின் காலில் வீழ்ந்து தனது மகளை விடுதலை செய்யுமாறு கெஞ்சினாள். அவள் நிலையைப் பார்த்துப் போலிஸ் இன்ஸ்பெக்டர் பரிதாபம்பொண்டார். சண்டையைத் தொடரும் முட்டாள்களில் மிகவும் ஆத்திரம் கொண்டார்

பெரும்பாலான அரசபடையினர் மாதிரியன்றி இந்த பொலிஸ் அதிகாரி; வித்தியாசமானவர்.அவர் ஒரு சிங்களவர். பெயர் முத்துராம ஹெட்டிய,அவரின் (முத்துராம செட்டியார்?) பெயரைப் பார்த்தால் அவரின் பாரம்பரியம் ஒருகாலத்தில் தமிழர்களாக இருந்திருக்கலாம் என்று தெரியும்.இலங்கையின் சரித்திரமே அதுதான், இலங்கை மக்கள், தமிழரோ சிங்களவரோ அத்தனைபேரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.கால கட்டத்தில் மதம்மாறி அல்லது கல்யாணங்கள் மூலம் மருவுபட்ட பெயர்களைக் கொண்டவர்கள். இப்போது இனத்தின் பெயரைச் சொல்லி,இரு சமூகத்திலுமுள்ள தங்கள் இளம் சமுதாயத்தை அழித்து எதிர்காலத்தை நாசம் செய்து கொண்டிருப்பவர்கள்.

முத்துராம ஹெட்டிய போலிசாராகவிருந்தாலும் அவருக்கு எந்த விதமான மூர்க்க குணங்களும் கிடையாது. இலங்கையின் பெரிய இனமான பெரும்பாலான சிங்கள பௌத்தர்கள் மாதிரி அவரும் புத்தரை வணங்குவதுபோல் பிள்ளையாரை, (கணேச தெய்யோ), கந்தஸ்வாமியையும,;(கந்த தெய்யோ),இலங்கையின் பாதுகாப்புத் தெய்வமான பத்தினி தெய்யோவையும் (இலங்கையின் கஜபாகு மன்னரால் பெண்தெய்வமாக வழிபடத் தொடங்கிய கண்ணகி) என்போரைப் பக்தியுடன் வணங்குபவர்.

இலங்கை இராணுவம்,ஆடுமாடுகள் மாதிரித் தமிழ் இளைஞர்கள்,’ பயங்கரவாதத்தின்’ அடிப்படையில் கைது செய்யப் படுவதால் ஊர்மக்கள் சொல்லவொண்ணாத துயர்படுவதை அவர் உணர்வார்.அவரின் தாயின் இரு சகோதரர்களும் 1971ம் ஆண்டு இலங்கையரசுக்கு எதிராக ஆயதம் எடுத்த சிங்கள இளைஞர்களின் புரட்சி இயக்கமான.’ஜாதிக விமுக்தி பெரமுன ,(ஜே.வி.பி) இயக்கத்தில் சேர்ந்ததால் அரச படையால் கொலை செய்யப் பட்டவர்கள். மாமன்கள் மாதிரி தனது மகனும் புரட்சிகரக் கருத்துக்களில் ஈடுபடக் கூடாது என்று நினைத்த அவரின் தகப்பனின் விருப்பத்திற்காகப் பொலிஸ் பயிற்சி எடுத்தவர்.

இப்போது தனது மகனை அவன் விரும்பிய தொழிலான ஒரு ஆசிரியாராக்கிச் சந்தோசப்படுபவர்.அவர் இந்த ஊருக்கு போலிஸ் இன்ஸ்பெக்டராக வந்தபோது, இந்த ஊரின் அழகும் அமைதியும் அவருக்குப் பிடித்துக்கொண்டது.ஆனால் அந்த அமைதி அவர் வந்து சில மாதங்களில் தவிடு பொடியானது. வெளியூர்களிலிருந்து வரும்,’தமிழ்’; விடுதலைப் போராளிகள் இவர்களின் நகரையண்டியிருக்கும் இராணுத் தளத்திற்கு, ஊர்களின் எல்லைகளிலிருந்து தாக்குதல்களை நடத்திவிட்டுக் காடுகளுக்குள் ஓடிவிடுவதும்,அவர்களைத் தேடிவரும் இராணுவத்தினர் அந்த ஊர் அப்பாவித் தமிழ் மக்களைச் சொல்ல முடியாத கொடுமைப்படுத்த ஆரம்பித்ததும் அவருக்குத் தெரியும்.

இப்போது இந்த ஊர்ப் பொது மக்கள்;, தமிழ் ஈழத்திற்கப்பாலான ஒரு ‘காதற்போரைத்’; தொடங்கியிருக்கிறார்கள். என்பதை அவர்களின் கல்;லெறி பட்டு அடிவாங்கிய டாக்டர் சந்திரசேகர் மூலம் தெரிந்துகொண்டார்.

‘ஓடிப்போனவர்களைக்’ கண்டுபிடிக்கும்வரை இந்தச் சண்டை தொடரும்.இவர்களைச் சரியாகக் கவனிக்காவிட்டால் இதுவரை கல்லெறி மண்ணெறி செய்தவர்கள் இனி எதிரிகளின் வீடுபுகுந்து கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள்.’ என்று டாக்டர் சொன்னார். போலிஸ் பாதுகாப்புப் படை மூலம் இந்தச் சண்டையை நிறுத்தாவிட்டால் ஊர் இரண்டு படுவது மட்டுமல்ல, அதில் பலர் இனவெறி பிடித்த இராணுவத்தினருக்குப் பலியாவதும் நிச்சயம் என இருவரும் பேசிக் கொண்டார்கள்.

இந்த நிலையைச் சமாதானத்திற்குக் கொண்டுவர ‘ஓடிப்போன ஜோடியைக்’ கண்டு பிடிக்கவேண்டும். டாக்டர் தனது தகவலில் அவர்கள் இருவரும் இரவு உடைகளுடன் ஓடியதால்,ஊரை விட்டு அதிக தூரம் போயிருக்க மாட்டார்கள் என்றும், அதனால் அவர்களைக் காப்பாற்றிய ஆணோ, பெண்ணோ,இங்கு இப்போது ‘கைது’ செய்யப பட்ட கூட்டத்தில் இருக்கவேண்டும் என்ற தனது ‘ துப்பறியும்’ வன்மையை டாக்டர் வாய்மலரப் பகிர்ந்து கொண்டார்.

அவர் சொல்வதை உள்வாங்கிக்கொண்ட போலிஸ் அதிகாரி, அடியுதை போட்டு உண்மையை எடுப்பதானால் இங்கு வந்திருக்கும் அத்தனை பேருக்கும் அடிபோடவேண்டும். அவர் அதை விரும்பவில்லை. ஏற்கனவே அவர்கள் பல தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் போலிஸ் அடிகளை அவர்கள் தாங்கிக் கொள்வார்களா என்று அவர் ஆய்வு செய்து நேரத்தைக் கடத்த விரும்பவில்லை.

அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார்.அதாவது எல்லோரையும் ஒரே கூண்டுக்குள் (அறையில்) அடைப்பது. அப்போது தங்களுக்குள் உள்ள ஆத்திரத்தில் அடியுதைகளைப் பரிமாறிக் கொள்வாhர்கள்.அந்தக் கொடுமை தாங்காமல்,

‘காதலர்கள் ஓடிப்போக’ உதவி செய்த ஒருவர் உண்மை சொல்ல முன்வருவார் என்றும் நினைத்தார்.

ஆனால், பிடிபட்டவர்கள் அத்தனைபேரும் சொந்தக்காரர்கள் என்பதால் பெரிதாக அடித்து ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக் கொள்வார்கள் என்பதையும் அவர் நம்பத் தயராகவில்லை.

அடைபட்டவர்களில் இளம் இரத்தங்கள் கொதித்தெழுந்தாலும் அவர்களை அடக்க முதிய அனுபவங்கள் தடை செய்யும் என்று அவருக்குத் தெரியும்.அத்தோடு, இவர்கள் அடைபட்டதைக் கேள்விப் பட்ட ஓடிப் போன காதலர்கள், சொந்த பந்தங்கள் சிறையிற்படும் வேதனைதாங்காமல் தாங்களாகவே வந்து போலிசில் சரணடைவார்கள் என்றும் அவர் கணக்குப் போட்டார்.

ஆனால் ஓடிப் போன காதலர்களைத் திரும்பி வராதபடிக் கடத்தி வைத்திருப்பவர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவரர்களாயிருந்தால், ஊராரை ஒரேயடியாகப் பிடித்து அடைத்து வைத்திருப்பாலும் எந்தப் பிரயோசனமுமமில்லை என்றும் அவருக்குத் தெரியும்.ஆனாலும், புலிகள் சிந்தாமணியின் மகளைக் கடத்தியிருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். ஏனென்றால் இயக்கக்காரர்களுக்குப் பண உதவி செய்பவள் அவள். புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் இந்த ஊருக்கு வருமளவுக்குச் செல்வாக்கற்றவர்கள்.

அப்படியானால், ஊரில் இவ்வளவு அமளி துமளி நடக்கும்போதும், இவ்வளவு நாட்களாக ஓடிப்போன காதலர்களை மறைத்து வைத்திருக்கும் தைரியசாலி யார்?

ஒன்றில் அவர்களை மறைத்து வைத்திருப்பவன்-அல்லது மறைத்து வைத்திருப்பவர்கள் மிகவும் முட்டாள்களாக-பைத்தியக்காரர்களாக இருக்கவேண்டும்,அல்லது மிக மிகக் கெட்டிக்காரர்களாக இருக்கவேண்டும். அவர்களைச்; சந்திக்க அவர் மனம் துள்ளியது. போலிசாரிடம் அந்தச் ஜோடி அகப்படும்போது, அவர்களுக்க உதவி செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பது ஊரறிந்த விடயம்.

இந்தச் சிக்கலைத் தீர்க்கத் தனது இரகசியப் போலிசார் ஒருவரை, ஓடிப்போன காதலர்கள் எங்கிருக்கிறார்கள் என்று துப்பறியச் சொன்னார். அந்தச் சி.ஐ.டி,ஓடிப்போன ஒரு காதல் ஜோடிக்காக பாதுகாப்பு விடய நேரத்தையும் அரச பணத்தையும்,போலிஸ் இன்ஸ்பெக்டர் முத்துராம ஹெட்டிய விரயமாக்குவதைத் தன் மனதுக்குள் திட்டித் தீர்த்தார்.

சிறையில் ஒட்டு மொத்தமாக அடைக்கப் பட்ட எதிரிகள் பயத்தில் வெளிறிப்போயிருந்தார்கள். தங்களின் விசாரணை ஆரம்பிக்கமுதல் போலிசாரின் கைவரிசைகள் எப்படியிருக்கும் என்று கேள்விப்பட்டவர்கள் அவர்கள். ஏற்கனவே கடந்த சில நாட்களாகத் தொடரும்,சண்டையில் சிறுகாயம் பட்டு வைத்தியசாலையை நாடாதவர்களும் அந்தச் சிறையிலிருந்தார்கள். அவர்கள் அத்தனைபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நெருக்கமான உறிவினர்கள். ஒன்றாகப் படித்தவர்கள் பலர். ஒரே குடும்பத்தில் திருமணமானவர்கள் பலர்.கிட்டத் தட்ட அத்தனை ‘கைதி’களும் ஏதோ ஒரு விதத்தில் உதிர உறவால் இணைந்தவர்கள்.

தலையில் அடிபட்டு வைத்தியசாலையிலிருக்கும் தினேஷின் தமக்கை,பத்மா அவர்கள் கைதிகளாக அடைத்து வைத்திருக்;கும் அந்தச் சிறைக் கூடத்தில் (அறையில்) சிந்தாமணியைக் கண்டதும், வாய் விட்டழத் தொடங்கிவிட்டாள். ‘பெரியம்மா, எங்கட வீட்டில ஒரே ஒரு ஆம்பிளப் புள்ள அதையும் உங்கட தம்பி கொலை செய்யப் பார்த்திட்டான்’ அவள் அழுகை அங்கிருந்த அத்தனை பெண்களையும் அழப் பண்ணியது.

‘பத்மா,மகளே சும்மா மனதைப் பேதலிக்க விடாத, தினேஷ் சாகமாட்டான், டாக்டர் சந்திரசேகர்; கெட்டிக்காரன்,எப்புடியும் காப்பாத்திப் போடுவார்’ பரிமளம் விம்மல்களுக்கிடையே மெல்லமாகச் சொன்னாள். தனது மகன் செய்த வேலையால் ஊரும் உறவுகளும் படும்பாடு அவளாற் தாங்கமுடியாதிருந்தது.

”அடங்காத காமத்தைக் காட்ட உன்ர பொடியனுக்கு எங்கட பொட்டைதானா கிடைச்சுது?’ சிந்தாமணி பரிமளத்தைப் பார்த்துச் சீறினாள். அவ்வளவுதான், பரிமளம் தரப்புப் பெண்கள்,பெண் புலிகளாகச் சிந்தாமணியிற்; பாய்ந்தார்கள்.வயதான பெண்கள் தடுத்திருக்காவிட்டால் சிந்தாமணியின் நிலை எப்படியிருக்கும் என்ற கற்பனையும் செய்ய முடியாது.

இவர்கள் போடும் சண்டையின் சத்தம் கேட்டு அவ்விடம் வந்து அவர்களை எடைபோட்ட போலிஸ்காரனின் பார்வை கட்டழகியான பத்மாவில் நிலைத்தது. சண்டை செய்த பெண்கள்,அவனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டதும் அடிபட்ட நாகங்களாள அடங்கி விட்டார்கள். போலிஸ் நிலையம், இராணுவ முகாம்களுக்குச் செல்லும் தமிழ்ப் பெண்களுக்கு என்ன நடக்கும் என்ற அவர்களுக்குத் தெரியும். அத்தனை பெண்களும் என்ன செய்வதறியாது என்ற பயத்தில் பெருமூச்சு விட்டார்கள். இப்போது நேரம் மதியம் தாண்டியிருந்தது.

காலையில் ஒன்பது மணியளவில் தனது வேலைக்குப் போக வந்த டாக்டருக்குப் பட்ட கல்லெறியால் வந்த களேபரத்தால் யாரும் சாப்பாட்டில் கவனம் செலுத்தவில்லை. அதைத் தொடர்ந்து போலிசாரின் சுற்றி வளைப்பும் கைதுகளும் நடந்தன. அவர்கள் தங்களின் வாழ்க்கையின் சாதாரண கோட்பாடுகள் அத்தனையும் சட்டென்று ஒருகாலையில் திசைதிருப்ப் பட்டதையுணர்ந்தார்கள். அந்த ஊரிலிருந்து பல இளம் ஆண்களையும் அப்பாவிப் பொதுமக்களையும் அதர்மமான அரசியல் போராட்டத்தில் இழந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இப்போது ஊரில் கிட்டத் தட்ட எல்லோருக்கும் தெரிந்த காதல் விடயம் காரணமாக இப்படி அடைபட்டு ஏங்குவது தேவையற்ற, முட்டாள்த்தனமான விடயமாகப் பட்டது என்று படித்த ஒரு சில இளம் பெண்கள் யோசித்தார்கள்.

‘ ஓடிப்போனவர்கள் மிகவும் தன்னலம் உடையவர்கள், தங்கள் உறவுகளும் ஊரும் படும் அல்லோல கல்லோலம் தெரியாமலோ இருப்பினம்?’

ஒரு இளம் பெண் சீறினாள்.அவள்தான் தாமரையை இடி மின்னலடித்தபோது ஐந்து வயதுக் கேசவன் கட்டியணைத்து ஆறுதல் சொல்லியபோது அவர்களுடனிருந்த தாமரையின் ஒன்று விட்ட சகோதரி சரஸ்வதி. கேசவனில் தாமரைக்குமுள்ள ஈர்ப்பை ஆரம்பத்திலிருந்து உணர்ந்துகொண்ட பெண். அவளுக்கு இருவரும் நெருங்கிய உறவினர்கள்.

யாருமே அவளுக்குப் பதில் சொல்லவில்லை. அந்த இளம் பெண்களின் சீற்றத்தின் பின்னால் அவர்களுக்கிருக்கும் பயம் அங்கு அடைபட்டிருக்கும் மற்றவர்களுக்குத் ‘தெளிவாகப்புரிந்தது.பெண்பாவம் பொல்லாதது’ ஒரு பெண் விம்மலுக்கிடையே சொன்னாள். போலிசாரோ அல்லது இராணுவத்தினரோ ஒரு கன்னிப் பெணணைச்; சீரழித்தால்,அந்தச் சீpரழிக்கப்பட்ட கன்னிப்பெண்ணின் சாபம் படு மோசமானது என்று நம்புவர்கள் அவர்கள்.

கன்னிப் பெண்ணைத் தொட்டவனின் குடும்பத்தை மட்டுமல்ல,தொடச்சொன்னவன்,தொடுவதைப் பார்த்திருந்தவன் அத்தனைபேரும்; ஒட்டுமொத்தமாக அழிவார்கள் என்பது அந்தக் கிராமத்தாhரின் நம்பிக்கை. அவர்கள் வசை சொல்லிப் பேசும்போதும் கன்னிகளைக் குறிவைத்து வைது கொட்டமாட்டார்கள்.பெண்களின் தனிப்பட்ட் வாழ்க்கையைப்பற்றித் தூற்ற கல்யாணமான பெண்களைக் குறிவைத்து,அவர்களின் கல்யாணத்திற்கு முதல் யாரோ ஒரு மைத்துனடன் அவர்களுக்கிருந்த ஏதோ ஈர்ப்பைக்காரணம் காரணம் காட்டி வசைபாடித் தொலைப்பார்கள்.

தாமரைக்கும் கேசவனுக்கும்இருந்த ‘தொடுப்பு’ ஊரெல்லாம் தெரிந்த காதற் தொடுப்பு.பணவெறிபிடித்த சிந்தாமணி அந்தக் காதலுக்குச் சம்மதிக்கமாட்டாள் என்று தெரியும்.அதே நேரம் கேசவன் தனது உயிரைக் கொடுத்தாலும் தாமரையைத் தனதாக்கிக் கொள்வான் என்றும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ஊரை விட்டோடியதற்குச் சிந்தாமணியைத்தான் திட்டவேண்டும் என்று பலருக்குப் புரிந்தாலும், எல்லை கடந்து விரிந்து நடக்கும் சண்டையால் அவர்களால் வாய்திறக்கமுடியவில்லை. ஆனாலும் பத்மாவில் அந்தப் போலி;காரனின் காமக்கண்கள் வலைபோட்டபோது சரஸ்வதியால் தாங்கமுடியவில்லை.இப்போதுதான் பருவத்திற்கு வந்த பத்மா, இனவாதப் பாதகர்களின் பசிக்கு இரையாவதைச் சரஸ்வதியால் பார்த்துக் கொண்டிருக்கமுடியாது.

ஆண்கள் பகுதியிலும்,தாமரையைக் கிளப்பிக்கொண்டோடிய’ கேசவனை விட, திNஷைக் கவலைக்கிடமான நிலையிற் தள்ளிய அழகுப்போடியில் கோபப் பட்டார்கள்.ஆனாலும் யாரும் அடைபட்ட ஒரு சில நிமிடங்களுக்க வாய் திறக்கவில்லை. அவர்களில், அவர்களுடன் தெரியாத் தனமாகக் கைது செய்யப்பட்ட ஒரு அயலூர் ஆசிரியரைத் தவிர மற்றவர்கள் அத்தனைபேரும் உறவினர்கள். அடிவாங்கிய காயங்களுடன் முனகுவோர் ஒருசிலர், எப்படியும் இவர்களை வெளுத்து வாங்கவேண்டும் என்ற வெறிபிடித்தவர்கள் ஒரு சிலர். ஆனாலும், போலிஸ் ஸ்டேசனில் ஏதும் தப்புத் தவறு நடந்தால் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் போலிஸ் ஸ்டேசனிலிருந்து அவர்களை இழுத்துச் செல்ல இராணுவத்தினரின் வருகைக்குக் காரணிகளாகவிருப்பார்கள்.

அநாவசியமாக இவர்களுடன் கைது செய்யப் பட்டு அடைபட்டுக் கிடக்கும் ஆசிரியர் தன்னுடனுள்ள கைதிகளை ஏறிட்டு நோக்கினார்.அவர் இவர்களது பாடசாலைக்குப் படிப்பிக்கப்போகும்போது, இவர்களின் சண்டையைப் பொறுக்காமல் இவர்களுக்குப் புத்தி சொல்ல தனது பைசிக்கிளால் இறங்கியவர். அந்த நேரம்தான் கல்லெறி பட்டுக் காயமடைந்த டாக்டரையும் அங்கு கண்டார். அந்தச் சில நிமிடயங்களில் போலிசார் வந்ததால் அவரும் அகப்பட்டுக்கொண்டார்.

ஆனால் தற்போது என்ன செய்வது? தன்னை அவ்விடம் கண்ட டாக்டர் போலிசாரிடம் உண்மையைச் சொல்லித் தன்னை விடுவிப்பார் என்ற ஆசிரியர் மனதுக்குள் நம்பிக்கொண்டாலும்,அதற்கு எவ்வளவு நேரம் எடுக்குமொ என்று தவித்துக் கொண்டிருந்தார்.

ஆசிரியர் இராஜரத்தினம்.இந்த ஊருக்கு வந்த நாட்களிலிருந்து,பெரும்பாலும் விசாயத்தை நம்பி வாழும் இந்த ஊர் மக்களும் இளைஞர்களும் அவர்களாற் புரிந்துகொள்ள முடியாத ஒரு போர்ச் சூழ்நிலைக்குள் அகப்பட்டுத்தவிப்பதை அவர் உணர்ந்து வைத்திருக்கிறார்.வெளியூர்களிலிருந்து பல தமிழ்ப் போராட்டக் குழக்களைச் சேர்ந்தவர்கள்,தங்களின் ஆயுத பலிக்கு இந்த அப்பாவி மக்களைப் பலியாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் தனக்குள் வெடிப்பதைவிட அவரால் ஒன்றும் செய்யமுடியாது.

குப்பைக்குள் வைரங்கள் கிடப்பதுபோல்,படிப்பு,கலை,நாடகம் போன்ற பன்முகத் திறமைகள் இந்தப் பட்டிக் காட்டுப் பாடசாலை மாணவர்களிடமிருப்பதை அவர் தெரிந்து அவர்களின் முன்னேற்றத்திற்குத் தன்னாலானவற்வைச் செய்து கொண்டிருக்கிறார்.அவர்,அந்த அப்பாவி மாணவர்களுக்கு,’இந்த ஆயதப்போர் வெற்றியடையாது’@ என்று ஏதும் சொல்லி விட்டால் புலிகள் அவரைத் துரோகி என்று குற்றம் சாட்டிக் கொலை செய்து கம்பத்திற் கட்டிவிடுவார்கள் என்ற அவருக்குத் தெரியும்.இப்போது ‘ஒரு காதற் போரிற்’ தலையிட்டுக் கைதிகளாக அகப்பட்டிருப்பவர்கள் பயங்கரவாத சட்டத்திற்குள் அகப்பட்டால் அவர்களின் எதிர்காலம் இருண்டு போய்விடும் என்ற தனது தவிப்பை மறைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டார்.

இப்போது நேரம் மதியத்தைக் கடந்து விட்டது. காலையில் ஒரு தேனிருடன் மட்டும் வெளிக்கிட்டவர். வழக்கமாகப் பத்து மணி வகுப்பு இடைவெளியின் ஒரு சில நிமிடயங்களில் ஒரு வாழைப்பழத்தையும் சில பிஸ்கட்டுகளையும் காலைச் சாப்பாடாக எடுத்துக் கொள்ளும் வழக்கத்தையுடையவர்.பசி வயிற்றைக் கிண்டியது. அவரைப் போல அங்கு அடைபட்டிருக்கும் அத்தனைபேருக்கும் அதே நிலை என்று அவருக்குத் தெரியும்.

அவரின் ஆத்திரமான பார்வை தங்களில் பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சிலமாணவர்கள் தலையைத் தாழ்த்திக் கொண்டார்கள்.

பெரியவர்கள், வெட்கத்துடன் அவரை அரையும் குறையுமாகப்; பார்த்தனர். அவர்களின் பெரும்பாலோர் கண்களில்,

‘எங்களை மன்னித்து விடுங்கள்’ என்ற வாசகம் ஒட்டப்பட்டிருக்கிறது போன்ற ஒரு உணர்வு அவருக்கு வந்தது.

பைத்தியத்தனமாக அடிபட்டுக்கொள்ளும் அந்தக் கிராமத்தாரில் அவருக்கு ஆத்திரமும் அதே நேரம் பரிதாபமும் வந்தது. அவர்களின் ஊரில், இதுவரை நடந்த சுற்றி வளைப்புக்களில் இராணுவத்தினரின் பார்வைபட்டு மாயமாய் மறைந்தவர்கள் பலர். அந்தக் கொடுமைக்குப் பயந்து ‘தமிழரின் ஒட்டுமொத்த விடுதலைக்கும்’ பல இயக்கங்களிற் சேர்ந்தவர்கள் பலர். மற்ற இயங்கங்களிற் சேர்ந்ததால் ‘துரோகிகள்’ என்ற விடுதலைப் புலிகளின் பட்டத்துடன் கொலை செய்யப் பட்டவர்கள் பலர். இந்த நேரத்தில், ஊரிலுள்ள பெரும்பாலான இளைஞர்கள் இந்தக் காதல் விவாகரத்தில் ஒருத்தருக்கொருத்தர் சண்டை பிடிக்கிறார்கள்.இதனால் தொடரும் பயங்கர நிலையை உணர அவர்களின் ஆத்திரத்தில் அமிழ்ந்துபோயிருக்கும் மனநிலை இடம் கொடுக்கவில்லையா?.

ஆனால் தூரத்தில் நின்று வசைபாடிக்கொண்டோ அல்லது நேரடித்தாக்குதல்களில் ஈடுபட்டபோதோ இருந்த ஆத்திரம் ஒரேயடியாகக் கூண்டுக்குள் தள்ளப் பட்டபோது. ஒரு சில நிமிடங்கள் ஒருத்தரை ஒருத்தர் முiறைத்துக்கொண்டதுடன் நின்று விட்டது. அடங்கிய குரலில் முறுகிக்கொண்டனர்.கனல் கக்கும் பார்வைகளைக் கணைகளாகப் பாவித்துக் கொண்டனர். ஒரு சிலர் ‘எதிரிகள்’ பக்கம் பார்க்காமல் பூட்டிவைத்திருந்த சிறைக்கதைவை அவமானத்துடன் பார்த்தக் கொண்டார்கள்.

அங்கு அடைபட்ட ஆண்கள் அத்தனைபேரும் கௌரவமான குடும்பங்களைச் சேர்த்தவர்கள். அவர்களின் வாழ்க்கையில் போலிஸ் நிலைய வாசலையும் காணாதவர்கள்.காணி பூமி வைத்திருப்பவர்கள். கடைகண்ணிகள் வைத்திருப்பவர்கள். அரசாங்க உத்தியோகத்திலிருப்பவர்கள். உயர்தர பாடசாலைகளுக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள். தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த ‘அவமானச்’செயலின்; களங்கத்தைக் காரணமாக்கி அடிதடியில் இறங்கியவர்கள். ஒருசிலர் சிந்தாமணியிடம் கடன் வாங்கியவர்கள்.அந்த நன்றியைக் காட்டப் போர்க்களத்தில் குதித்தவர்கள்.அவர்கள் இப்போது தங்களைப்போல் இங்கு வந்து சிறைப்பட்ட பலரை நோட்டம் விட்டனர். பாவம் சிந்தாமணியின் புருஷன், மிகவும் அப்பாவியும், யாருக்கும் மனதாலும் எந்தத் தீங்கும் நினைக்காத நல்மனம் படைத்தவர்.அவருடைய இருமகன்களும் இழுத்துவரப் பட்டிருந்தார்கள்,அவர் கண்ணில் நீர்வழிய அமைதியாக உட்கார்ந்திருந்த நிலை அத்தனைபேரையும் அவரில் பரிதாபப்படவைத்தது.

பரிமளம் வீட்டாரின் பக்கத்திலிருந்த ஒருசில இளைஞர்கள் கேசவனின் நண்பர்கள். சிந்தாமணியின் பணத் திமிரை மதியாமல் தாமரையைக்’ கிளப்பிக்(?) கொண்டேடியதைப் பாராட்டி அவன் சார்பில் தெருவுக்கு இறங்கியவர்கள்.

அவர்களைக்; கண்டிப்புடன் ஆசிரியர் பார்த்தார்.

அப்போது ஒரு போலிஸ்காரன் வந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக விசாரிக்கப் படுவார்கள் என்றும் அதற்கு முன்னோடியாக பிரதான எதிரியான அழகுப்போடியைத் தன்னுடன் வருமாறும் அழைத்தான்.

போலிசுடன் அழகுப்போடி தலைகுனிந்து, உடல் குறுகிப் பதுங்கிச் சென்றது பார்ப்பதற்கு அங்கிருந்த சொந்தக்காரர் அத்தனைபேருக்கும் மிகவும் அவமானமாக இருந்தது.

‘வெட்கம் கெட்ட வேலை’ ஆரிசியர் அத்தனைபேரையும் பார்த்துச் சீறனார்.

‘உங்கட ஊரில இதுதானா நீங்கள் கண்ட முதற்காதல்? உங்களிற் பெரும்பாலோர் உங்கட சொந்தக்காரப் பெண்களைக் காதலித்து அதன்பின் தாய் தகப்பனுக்கு எங்கள் விருப்பத்தைச் சொல்லி அவர்கள் பெண்கேட்டுப் போய் உங்களுக்குத் திருமணம் செய்து வைத்தவர்கள். பணக்காரப் பெணணான மாமி சிந்தாமணி தனக்குப் பெண்தரமாட்டாள் என்றபடியால் பணமதிகமில்லாத கேசவன் தான் விரும்பிய தாமரையைக் கூட்டிக்கொண்டு போனான்,இதிலென் பெரிய மர்மம், மாயம், கோபம், சண்டை அடிதடி? பேசாமல் அவர்களிருவரையும் தேடிக் கணடு பிடித்து முறைப்படி கல்யாணத்தைச் செய்யாம இப்ப இந்தக் கூத்தாடுறியள். அவங்க இரண்டுபெரும் இப்பிடி தங்கள் குடும்பம் அத்தனையும் போலிஸ் ஸ்டேசனில அடிவாங்கிற அவமானம் தாங்காம தற்கொலை செய்தா என்ன செய்வியள்? ‘ஆசிரியர் சீறினார்.யாரும் வாய் திறக்கவில்லை.

மதியச் சாப்பாடாக அவர்களுக்குப் பாணும் தேங்காய்ச் சம்பலும் கொடுக்கப்பட்டது. பெரும்பாலோனோர் அதைத் தொடவில்லை.ஒவ்வொருத்தரும் பெருமூச்சுடன்,சிறியதொரு சிறை ஜன்னலால் வரும் வெளிச்சத்தைப் பார்த்துப் பின்னேரம் ஆகிக்கொண்டிருப்பதையுணர்ந்தார்கள். வீட்டில் சிறுகுழந்தைகளுள்ள இளம் தாய்கள் போலிஸ் இன்ஸ்பெக்டரிடம் தங்களை விட்டுவிடச் சொல்லிக் கெஞ்சினார்கள். ‘ஓடிப்போன ஜோடி’ திரும்பி வரும்வரையும் யாரையும் வெளியில் அனுப்பமுடியாது என்ற இன்ஸ்பெக்டர் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்.

அதைக்கேட்டு அவள் சிந்தாமணியின் புருஷன் பெரியதம்பி மயங்கி விழுந்துவிட்டார்.நேற்றிலிருந்து அவர் எதையும் சாப்பிடாததால் மயங்கி விட்டார்.அவரின் முகத்தில் தண்ணி தெளித்து மயக்கத்தை நீக்கிய அதிகாரி, அவரின் உடல் நிலையைப் பார்க்க டாக்டரை வரவழைத்தார்.யாரும் ஸ்டேசனில் செத்துத் தொலைந்தால் அதுவே பெரிய கலாட்டாவாகிவிடும் என்று அவருக்குத் தெரியும். அவர் மயங்கி விழுந்த விடயம் சிந்தாமணிக்குச் சொல்லப்பட்டபோது,அவள்,பரிமளத்தைப்பார்த்து, ‘இந்தத் தோறைகளால என்ட குடும்பமே நாசமாகப் போகுது’; என்று திட்டினாள்.

அந்தநேரம் டாக்டர் அங்கு வந்த அடைபட்டுக் கிடக்கும் ஆசிரியரைப் பார்த்து,’இவருக்கும் இந்தச் சண்டைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.இவர் றோட்டிலபோன அடுத்த ஊர் வாத்தியார்’ என்ற போலிசுக்குச் சொல்ல ஆசிரியர் உடனடியாக விடுதலை செய்யப் பட்டார்.

டாக்டர்,சிந்தாமணியின் கணவரின் பிளட்பிரஷரைச் செக் பண்ணியபோது,அவருக்குத் தற்போது நடக்கும் தாறுமாறான விடயங்களின் அதிர்ச்சியால் பிளட் பிரஷர் கூடியிருந்தது. டாக்டரின் சிபாரிசில் அவரும் விடுதலை செய்யப்படார்.

அடுத்ததாக டாக்டரின் பார்வை விம்மியழும் இளம் பெண் பத்மாவில் விழுந்தது. இந்தப் போலிஸ் நிலையத்தில் அவளுக்குப் பாதுகாப்பு இருக்குமோ என்ற பயம் டாக்டருக்கு வந்தது. அவளின் தம்பி தினேசின் நிலையைச் சொல்லி நேரம் இருண்டுவர முதல் அவளும் விடுதலையாக உதவி செய்தார்.

போகும்போது, சிந்தாமணியைப் பார்த்து,’சிந்தாமணி இந்த ஊரின் அரைவாசியே போலிஸ் நிலையத்தில் அடைப்பட்டுக் கிடப்பதாகக் கேள்விப்பட்டால் பயத்திலும் அவமானத்திலும் உன்ட மகளும் கேசவனும் தற்கொலை செய்தால் உனக்குத் திருப்தியா’ என்று ஆத்திரத்துடன் கேட்டார்

‘அவள் எனக்கு முன்னால வந்தா அவளின்ட கழுத்தப் பிடிச்சு,நானே அவளக் கொலை செய்வன்’ சிந்தாமணி சீறினாள்.

அவளுடன் பேசிப் பிரயோசனமில்லை என்று தெரிந்த டாக்;டரும் ஆசிரிரும் முணுமுணுத்துக்கொண்டு வெளியேறினார்கள். சிந்தாமணியின் கணவரைப்பார்த்துக் கொள்ள அவர்களில் ஒரு மகனை விடுதலை செய்யச் சொல்லிப் போலிசாரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் சிந்தாமணியின் பதினாறு வயது மகனும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அந்த ஊர் டாக்டா சந்திரசேகர் ,அடுத்த ஊரைச்சேர்ந்தவர்.இந்த ஊர்ப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். தன்னுடன் படித்த பல டாக்டர்கள் பாதுகாப்புக்காகவும் பணத்திற்காகவும்,அவர்களுக்கு இலவச மேற்படிப்பைக் கொடுத்த தாய்நாட்டுக்குச் சேவை செய்யாமல் வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டிருக்கும்போது,இந்த அழகிய ஊரோடு, பெரும்பாலான நல்ல மனிதர்கள் வாழும் சூழ்நிலையொடு தனது வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டவர்.

‘தன்னலம் பார்த்து ஊரைவிட்டு எல்லோரும் ஓடினால் ஓடமுடியாத மக்களை யார் பார்த்துக் கொள்வார்கள்’ என்று தன்னிடம் கேள்வி கேட்கும் மனைவிக்குப் பதில் சொல்லிக்; கொண்டு மக்களுக்குத் தொண்டு செய்பவர். ஊர் மக்களின் பலவிதமான மூடநம்பிக்கைகளைத் தெரிந்து வைத்திருப்பவர். ‘தமிழ்’ என்ற மூலதனத்தை முன்வைத்துத் தங்கனை முன்னெடுக்க அப்பாவி மக்களைப் பாவித்துக் கொண்டிருக்கும் ஆயுத அரசியலை அடியோடு வெறுப்பவர். அந்த விஷமான பிரசாரத்தால் இலங்கைத் தமிழர்களின் எண்ணிலடங்கா இழப்பைப் பார்த்துக் குமுறித் துடிப்பவர். ஆயுத தாரிகளால் நடக்கும் அநியாயத்துடன்,இவர்கள்,கடந்த நான்கு நாட்களாக,’ஓடிப்போன காதலர்களுக்காக அடிபட்டு அடைபட்டுக் கிடப்பதையும்; பார்த்து இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று யோசித்தார்.

வெளியேறிய டாக்டரும் ஆசிரியரும் எப்படியும் ஓடிப்போய் மறைந்திருக்கும் காதல் ஜோடியைக் கண்டுபிடித்து இந்தக் கலவரத்தை அடக்க நினைத்தார்கள அவசரகால சட்டமோ,ஊரடங்கு சட்டமோ அமுலில் இல்லாவிட்டாலும்,இரவில் வெளியில் திரிவது அபாயமான செயல். இராணுவத்தினர்’தமிழ்ப் புலிகளைப்’ பிடிப்பதற்காக இரவில் மறைந்து நின்று தங்களிடம் அகப்படும் பொதுமக்களையும் நையப்புடைப்பார்கள்.

ஆனால்,சிலவேளைகளில் டாக்டர் அவசரமாக நோயாளிகளைப் பார்க்கப்போகும்போது இராணுவத்தினரின் உதவியுடன் செல்வார்.இன்றிரவு கள்ளக் காதலர்களைத்(?)தேடிக் கொண்டிருப்பதால் இராணுவத்தினரின் உதவியை ஏற்கமுடியாது.அதனால்,கையில் முதலுதவிப் பெட்டியுடன், கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் தனக்கு உதவியாக ஆசிரியரை அழைத்துச் சென்றார்.

சிறுகுழந்தைகளை வீட்டிலுள்ள கிழவிகளின் பராமரிப்பிலிருக்கச் சிறையிலிருக்கும் தாய்மாரை எப்படியும் விடுவிக்க அவர் அரும்பாடுபட்டார்.

அன்றிரவு பூரணை நிலவு வானத்தில் பவனி வந்து கொண்டிருந்தது.,காதலர்களுக்கு உதவியிருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்ட வீடுகளுக்கு இருவரும் ஒன்றாகச் சென்று விசாரித்துப் பார்த்தார்கள். அவர்களின் விசாரணையின்போது, ஓடிப்போனவர்கள் அடுத்த ஊரிலிருக்கும் சந்தர்பங்கள் இருக்கலாம் என்ற விடயம் மறைமுகமாகச் சொல்லப்பட்டது.ஏனென்றால் அங்குதான் கேசவனின் உற்ற நண்பன் கண்ணன் என்பவன் இருக்கிறான் என்ற தெரிந்தது.அது டாக்டருடன் சேர்ந்து வரும் ஆசிரியரின் ஊராகும்.

அந்த நண்பன் யாராயிருக்கலாம் என்று ஆசிரியர் ஊகித்துக் கொண்டார்.

இருவரும் அவர்கள் எடுத்த விலாசத்தைத் தேடிப்போனபோது நள்ளிரவாகிவிட்டது. அப்போது, மெல்லமாகச் சில உருவங்கள் தங்களை நோக்கி வருவதைக் கண்டார்கள்.உற்றுப் பார்த்ததில் அவர்கள் ஓடிப்போன ஜோடி அத்துடன் கேசவனின்; நண்பன் கண்ணனும் என்று தெரிந்ததும்,டாக்டர் தனது ஆத்திரத்தை வார்த்தைகளாகக் கொட்டித் தீர்த்தார்.

‘அவர்கள் என்ன யாரையோ கொலை செய்தார்களா,தங்கள் காதலுக்காகத்தானே அப்படி ஓடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்?’ கண்ணனின் பேச்சால் அவனை ஏறிட்டுப்பார்த்தார். பெண்கள் குரல் மாதிரிப் பேசியவன் ஆண்மையின் திமிருடன் டாக்டரை ஆழமாக எடைபோட்டது டாக்டரை ஆச்சரியப் படுத்தியது.

கேசவனும்,தாமரையும் புத்தாடை அணிந்திருந்தார்கள்’ நாங்கள் அம்பாரைக்குப்போய் ரெஜிஸ்டர் கல்யாணம் செய்திட்டம்’ என்று கேசவன் ஒரு பயமும் இன்றிச் சொன்னான்.அவன் ஒரு துணிவான பேர்வழி என்பதை அவன் குரலே சொல்லிக் கொடுத்தது. அவனோடிணைந்து நிற்கும் தாமரையின் முகத்தில் பல்லாயிரம் சூரியன்கள் மகிழ்ச்சியில் பளபளத்தன.

‘உங்களால் ஊரே சிறையிலடைக்கப் பட்டிருக்கிறது. நீpங்கள் கல்யாண கோலத்தில் நிக்கிறியள்’ ஆசிரியர் முழங்கித் தீர்த்தார்.

‘கல்யாணம் முடிக்காம வெளியே வந்தா எங்களப் பிரிச்சுப்போடுவாங்கள் எனற பயத்தில,அவங்க எல்லாம் பிடிபட்டபோது ஓடிப்போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டம்’ தாமரை,டாக்டரின் கோபத்தைக் கண்டு வாய்விட்டழத் தொடங்கி விட்டாள்.

ஓடிப்போக உதவி செய்த கண்ணன் என்ற ‘கவிஞன்’ காதலர்களைத் தேடிவந்திருக்கும் பிரமுகர்களைக் கண்டதும்; பயத்தில் ஒரு கொஞ்சம் ஆடிப்போய்நின்றாலும் ‘காதலுக்காக’ இவ்வளவு சோதனைக்குள்ளான தனது நண்பனை அவர் திட்டுவதை அவன் விரும்பவில்லை என்று அவன் முகபாவம் காட்டியது.

‘ஓடிப் போன காதலர்களுக்கு உதவி செய்தவன் அவன் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்தான்.ஆனால் அவன் பற்றித் தெரிந்த யாரோ சொல்லித்தான் இவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட அந்த ‘உதவியாளன்’அடுத்தடுத்த நாட்களில் தனக்கு என்ன நடக்குமென்று கற்பனை செய்து பார்த்தான்,அனால் அதைப்பற்றியோசித்து ஒன்றும் பிரயோசனமில்லை என்பதும் அவனுக்குத் தெரியும்.

இந்தக் காதற்கதையில் காதலர்களுக்கு உதவி செய்த கண்ணனின் முக்கிய பாத்திரத்தைக் குறிப்பிடாவிட்டால் இந்தக் கதைக்கு’ உப்பில்லாமல்’ என்றாகிவிடும்.

————— ——————— —————–

கண்ணன் கேசவனின் அடுத்த ஊரில் வசிக்கும் இருபது வயது இளைஞன். சட்டென்று வந்த அரசியல்,இராணுவ,மாற்றத்தால் அவனின் வாழ்வு தலைகீழாக மாறியதை அளவிடமுடியாத துயருடன் அவனின் பதின்மூன்றாவது வயதில் எதிர்கொண்டவன்.அவனின் தமயன் எட்டு வருடங்களுக்கு முன் இலங்கைத் தமிழருக்கு உதவுவதற்காக இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினரும் விடுதலைப் புலிகளும் மோதிக்கொண்டபோது தலைப்பா கட்டிய இந்திச் சிப்பாயால் நாய்போலச் சுட்டு வீழ்த்தப்பட்டான். காரணம், கண்ணனின் தமயனும் புலிகளுக்கு ஆதரவாக இருந்தான் என்ற விடயம்தான்.

இந்தியர் இலங்கைத் தமிழரரைக் காப்பாற்ற வந்தபோது இலங்கைத் தமிழர்கள் பொங்கல் வைத்து பூமாலை போட்டு இந்திய வீரர்களை வரவேற்றார்கள். ஒரு சொற்பகாலத்தில்,விடுதவைப் புலிகள் தங்களின் எதிரிகளான இலங்கை சிங்கள அரசுடன்; சேர்ந்து அவர்கள் கொடுத்த ஆயதங்களுடன் (அமெரிக்காவிடமிருந்து கிடைத்தவை.) சமாதானத்துக்கு வந்த இந்திப் படையைத் தங்கள் தமிழ்ப் பகுதிகளிலிருந்து வெளியேறிச் சொல்லி,இந்தியப் படைக்கு எதிரான பயங்கர அதிரடிகளைத் தமிழரின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் தொடங்கினார்கள்.

இலங்கைச் சிறுதீவின் சிறிய இராணுவப் படையுடன் மோதிய புலிகள் அதிமிக வலிமை கொண்ட இந்தியப் படையைச் சீண்டியபோது அதன் தாக்கம் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத பயங்கர நிலையை எதிர்பார்த்தது. கலிங்கப்போரில் அசோகனின் பயங்கரத் தாக்குதலுக்குப் பலியான கலிங்கமாக இலங்கையின் தமிழ்ப் பகுதிகள் இந்தியப் படைகளால் துவம்சம் செய்யப்பட்டன.

உலகத்தின் நான்காவது பிரமாண்டதான இராணுவப் படையை வைத்திருக்கும் இந்தியப் படை, புலிகளைத் தேடிவந்து புpலகளைப் பிடிக்க முடியாததால், பொது மக்களைக் கண்டபாட்டுக்குக் கொலை செய்தார்கள்.ஆயிரக் கணக்கான பெண்கள்,ஐந்து வயதிலிருந்து எழுபது வயதான பெண்கள் இந்தியப் படையினரின் பயங்கரமான பாலியல் கொடுமைகளுக்காளானார்கள்.இலங்கை இராணுவம் பலவருடப் போர்க்காலத்தில் தமிழர்களுக்குச் செய்யாத அளவிட முடியாத பயங்கரக் கொடுமைகளை இந்தியப் படைகள் ஒரு சில வாரங்களில் செய்து முடித்தார்கள்.

ஆயிரக் கணக்கான தமிழர்கள் காட்டு மிருகங்களாக வேட்டையாடப் பட்டார்கள்.ஏழை.பணக்காரா, வயது முதிர்ந்தவர்,வயதுக்கு வராதவர்கள்; என்ற வித்தியாசமின்றி,இலங்கைத் தமிழர்கள் இந்தியப் படைகளால் வேட்டையாடப்பட்டு, வீதிகளில்,வீடுகளில், கோயில்களில்,வைத்தியசாலைகளில்; என்ற வித்தியாசமின்றிப் பிணமாகக் குவிக்கப் பட்டார்கள்.

கண்ணணுக்கு அப்போது கிட்டத்தட்டப் பதின் மூன்று வயது. அவனின் தமயனைத் தேடிவந்த இந்தியப் படைக்குத் தப்பி ஓடத் தமயன் முயன்றபோது, நாயெனச் சுடப்பட்டு அவனின் தாயினடியில் குருதி வழியப் பிணமாய் வீழ்ந்தான். அவனின் முதலாவது தமக்கையான பதினெட்டு வயதுக் கங்காதேவியை இந்திய இராணுவம் அவள்,தன்னைக் காப்பாற்றக் கண்ணனைக் கெஞ்சிக் கதறிய பாஞ்சாலியாய் வெடித்துக் குமுறியதைப் பொருட்படுத்தாமல் இழுத்துக் கொண்டு போனார்கள்;. சில நாட்களுக்குப் பின் அவர்களின் காமவெறிக்குப் பலியாகிய அவள் வெற்றுடல் நாடோடி நாய்களின் இரையாகித் தெருவில் தின்னப் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்ட அவர்களின் தகப்பன் தாங்க முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்த சில நாட்களில் கண்ணனின் இரண்hவது தமக்கை பதினாறு வயது அகல்யா, தமிழரின் விடுதலைக்காகத் தன்னுயிரைக் கொடுக்கத் தமிழீழவிடுதலைப் போரில் தற்கொலைதாரியாகப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுப் போய்விட்டாள்.

மூன்றாவது தமக்கை பதினாலரை வயது சித்திரா இந்திய இராணுவம் வீட்டுக்கு வரும்போது அவர்களின் மாமி வீட்டுக்குப் போயிருந்ததால் தப்பினாள்.இல்லையென்றால் அவர்களின் மூத்த தமயன் தாய் தகப்பன் காலடியில் பிணமாய் விழுந்ததைக்கண்டு புத்தி பேதலித்துப் போயிருந்தாலும் அல்லது தற்கொலைதாரியாவதற்குப் புலிகளுடன் சேர்ந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அப்போது கிட்டத்தட்டப் பதின்மூன்று வயதாகி;க் கொண்டிருந்த கண்ணனுக்கு வந்த அதிர்ச்சியால்,அந்தத் தொடர் நிகழ்ச்சிகளின் பாதிப்பால் பல நாட்கள் அவனால் எதுவும் சாப்பிடமுடியாதிருந்தது. பேசமுடியாதிருந்தது. வானத்தை வெறித்துப் பார்த்து பிரமை பிடித்தவன்போல் பலநாட்கள் திரிந்தான்.

பருவத்தின் சுரப்பிகள் சுரக்கத் தொடங்கி,ஆணின் உணர்வுகளும், உறுப்புக்களும், தோற்றமும் மாறுபடத் தொடங்க வேண்டிய அந்த வயதில் அவனின் வளர்ச்சி அசையாமல் நின்றது.வயதுக்கு வந்த ஆண்கள்போல் அவன் குரல் மாற்றமடையவில்லை. அரும்பு மீசை அவன் முகத்தை அலங்கரிக்கவில்லை.அவர்கள் குடும்பத்தின் ஆண்களெல்லாம் திடகாத்திரமான.உயர்ந்த தோற்றத்திலிருப்பவர்கள். கிட்டத்தட்ட ஆறடி உயரத்திலிருப்பார்கள். தமயன், தமக்கை, தகப்பன் என்ற தனது குடும்பத்தில் ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட குறுகிய கால இடைவெளியில் இழந்தபோது அவனின் உயரம் ஐந்தடி ஆறங்குலம். அந்த அதிர்ச்சியான சம்பவங்களின் பின் அவன் உடல் வளர்ச்சியில் எந்த மாற்றமுமில்லை. ஒல்லியான புடலங்காய் மாதிரியியிருந்தான்.

உளவளர்ச்சியிலும் வளரும் ஆண்;மைக்குரிய வல்லமையான அல்லது முரட்டுத்தனமான உணர்வுகளன்றி ஒரு மென்மையான உணர்வுகளளோடு தங்கள் வீட்டு நாய் பூனைகளில் அன்பாகவிருந்தான். வெளியில் அதிகம் போகாமல் படிப்பில் மிகவும் கவனம் செலுத்தினான். அவனது தாய் ஒரு ஆசிரியை. மனித வாழ்க்கையில் பல காலங்களில் எப்போதோ இருந்து வரும் மாற்றங்களை ஒரு சில மாதங்களில் தாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டவள். கண்ணனின் மென்மையான போக்கு அவளுக்கு ஒரு விதத்தில் திருப்தியைத் தந்தது. அவனின் மனவுலகு சாதாரணத்தை; தாண்டி அசாதாரணமானதற்கான காரணங்கள் அவனின் சின்ன வயதில் எற்பட்ட கொடிய அனுபவங்கள் என்பதையுணரவோ ஆய்வு செய்யவோ அவள் மனஆய்வ நிபுணரான ‘சிக்மண்ட் ப்ராய்ட்’ என்பவரின் தியறிகள் தெரியாதவள்.

கண்ணன்,தனது நேரத்தை எதையோ வாசிப்பதிலும் எதையோ எழுதவதிலும் செலவழிப்பதைக் கண்டு அவள் திருப்திப் பட்டாள். தங்கள் இயக்கத்திற்கு ஆள்சேர்க்க இளம் தமிழர்களைத் தேடிவரும்போது கண்ணனின் ஒல்லியான,போர்வீரனுக்குத் தகுதியற்ற பெலவீனமான உடலையும் குரலையும்,போக்குகளையும்; கண்டு புலிகள் அவனைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.

தமிழர்களைப் பயங்கரவாதிகளென்ற பெயரில் அடிக்கடிக் கைது செய்து சித்திரவதை,சிதைத்து,அவர்கள் உடம்பை நாறிய பிணங்களாகத் தெருவில் எறியும் சிங்களப் படையினரும் எத்தனையோதரம் அவனை நிறுத்திப் பலவிசாரணைகள் செய்தபோதும் அவனைக் கைது செய்யவில்லை. அவனிடமிருந்து சாமான்களைக் கைப்பற்றினால் அவைகள் காதல் கதை.கவிதை. இலக்கியப் புத்தகங்களாக இருப்பதைப் பார்த்து அவனை ஏற இறங்கப் பார்ப்பார்கள்.

அவனின் கண்களிற் தெரியும் ஒரு அசாதாரணமான தன்மை-கருணையையும் காதலையும் பிரதிபலிக்கும் அப்பழுக்கற்ற அன்பான பார்வை அவர்களை அவனிடமிருந்து பிரிப்பது போலிருந்தது. அவன் ஒரு நாளும் ஆர்மியைக் கண்டு பயப் பட்டது கிடையாது. அவர்கள் தடுக்கும்போது பயமின்றித் தன் பைசிக்கிளிலிருந்து இறங்குவான்,அவர்கள் கேட்கமுதலே அவன் கொண்டுவரும் பொருட்களைக் காட்டுவான்.

தமிழரைத் தடுத்து நிறுத்தும்,ஆர்மிக்காரர்களில் ஓரிருவர் தமிழ் எழுதப் படிக்கப் பேசத் தெரிந்தவர்கள். கண்ணனின் புத்தகங்கள் பல காதற் கதைகளாக இருப்பதைப் பார்த்து அவனை ஏற இறங்கப் பார்ப்பார்கள். ‘என்ன படிக்கிறாய்’ என்ற கேட்டால்@ ‘சயன்ஸ் படிக்கிறேன்’ என்பான். விஞ்ஞானம் படித்து உலகை அளவிடத் தெரிந்தவன் என்னவென்று காதல் என்ற கற்பனையில் தனது பெரும்பாலான நேரத்தைச் செலவளிக்கிறான் என்ற மிகச் சிக்கலான மனநிலையை அவர்களின் ‘இராணுவ’ சிந்தனையால் தெளிவு படுத்த முடியாதிருந்தது.

போட்டி பொறாமை, அடுத்துக் கெடுத்தல், சுயநலம்,சண்டை சச்சரவு நிறைந்த சாதாரண உலகத்தை ஏதோ ஒருவழியில் மனித உணர்வுகளை ஒற்றுமைப் படுத்தும் அசாதாரண சக்தியான,-அன்பைப் பிரதிபலிக்கும் அற்புத சக்தியான காதல் உணர்வை அவன் ஆராதனை செய்வதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது என்று கண்ணன் நினைத்திருந்த காலத்தில் சந்தித்துக் கொண்ட சினேகிதன் கேசவன். தமிழ்ப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கையற்ற நேரங்களில பொது மக்கள் அவசர அவசரமாகக் கடை கண்ணிகளுக்குப் போய்த் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கும்போது புத்தகக் கடையில் சந்தித்துக் கொண்டவர்கள் கேசவனும் கண்ணனும்.

ஓரு நாள் இருவரும் மார்க்கட்டிலிருந்து திரும்பியபோது அருகிலிருந்த இராணுவ முகாமைக் கடக்கும்போது பரிசோதனைக்காளாகியபோது, கண்ணனைக் கண்ட ஒரு இராணுவச் சிப்பாய்,’ காதல் மன்னன் கண்ணன்’ என்ற கிண்டலாகச் சொல்லிக்கொண்டு அவன் கொண்டு வந்த சாமான்களுடனிருந்து புத்தகங்களைப் பரிசோதித்தான். அவனது தமயனும் தமக்கையும் புலிகளுடன் சம்பந்தப் பட்டவர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் அவனைக் கட்டாயமாச் சோதனை செய்வதை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தாலும் அவனிடமிருந்து காதல் கதை,கவிதைப் புத்தகங்களைத் தவிர வேறே எதையும் அவர்கள் இதுவரை கைப்பற்றவில்லை.

வீட்டுக்குத் தேவையான சாமான்களுடன்,தனக்குப் பிடித்த பல புத்தகங்களுடன் (பெரும்பாலானவை சைக்கோலஜி சம்பந்தமானவை!) தாமரைக்குப் பிடித்த நாவலொன்றையும் (காதல்கதை) கேசவன் அன்று வாங்கியிருந்தான். கேசவனின் காதல் நாவலைப் பார்த்த தமிழ் படிக்கத் தெரிந்த அதிகாரி குறும்புச் சிரிப்புடன்,’ பைத்தியங்கள்,வயதுக் கோளாறு,வயதுக் கோளாறு, சும்மா வெறும் புத்தகங்களைப் படித்துப் பெருமூச்சுவிடாமல் பேசாமல் ஒரு காதலியைப் பிடித்துக் கொள்ளங்கள்’ என்ற கிண்டலடித்தார்.

இராணுவத்தைக் கடந்ததும்,

‘உங்களுக்குக் காதற்கதைகள் பிடிக்குமா?’ என்றுற கேட்டான் கண்ணன். கண்ணனின் குரல் பெண்களின் குரல் போலிருந்தது.. கேசவன் கண்ணனை ஏறிட்டுப் பார்த்தான், கண்ணனின் முகத்தில் மீசையின் தடம் பெரிதாகவில்லை அசாதரணமான ஒரு அழகு மெருகிட்டது. கேசவனின் மனத்தில் கண்ணனின் இனிய தோற்றம் அவர்களின் ஊரில் நடக்கும் நாட்டுக் கூத்துக்களில் பெண்வேடம்போடும் ஆண்களை ஞாபகப்படுத்தியது.

‘அப்படி ஒன்றுமில்லை- – வேறு யாருக்காகவோ–‘ கேசவன் சொல்லி முடிக்கவில்லை,

கண்ணன் இடைமறித்து,’ உங்கள் காதலிக்காகவா வாங்கினீர்கள்?’ என்று பட்டென்று கேட்ட கேள்வி கேசவனை ஆச்சரியதில் தள்ளியது.

”ஏன் உங்களுக்கும்–‘ என்ற கேசவன் கேட்பதை இடையில் மறித்த கண்ணன்;,’ இல்லை இல்லை- எனக்கு ஒரு காதலியும் கிடையாது.ஆனால் நான் காதலை மதிப்பவன். காதலின் மகிமைக்குள் மனிதம் உயிர்வாழ்கிறது,காதலின் வலிமை தொயாதவர்கள்தான் உலகத்தின் கொடுமைகளுக்குக் காரணமாகவிருக்கிறார்கள் என்பது எனது கருத்து’ கண்ணன் மிகவும் ஆறுதலாக ஒவ்வொரு எழுத்தையம் கேசவன் ஆழமாகக் கிரகித்துக் கொள்ளவேண்டும் என்று தோரணையிற்; சொல்வதுபோல் உதிர்த்து முடித்தான்.

கேசவனுக்கு ஒரு சில கணங்கள் கண்ணன் என்ன பேசுகிறான் என்றோ,ஏன் பேசுகிறான் என்றோ புரியவில்லை.

‘எனது அண்ணாவுக்கு ஒரு காதல் இருந்தது. அப்பா அதை மிகவும் கடுமையாக எதிர்த்தார்,அதன்பிறகுதான் அண்ணா போராளியாக மாறினான். உலகில் தனது இருக்கைக்கு எந்தவிதமுமான ஈர்ப்புமில்லை, அதனால் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதனாற்தான் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு அடுத்த ஈர்ப்பக்குள் இழுபடுகிறார்கள். அது போராகவிருக்கலாம், பணமாகவிருக்கலாம் ஆனால் இந்த உலகில் எதுவும் ஒரு உண்மையான காதலுக்கு ஈடாகாது’

கண்ணனின் குரல் இந்த உலகத்தில் இந்த நிமிடத்தில் நடந்கொண்டிருக்கும் யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதையுணரக் கேசவனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. ஏதோ அந்த நிமிடம், தனது பரிபூரணமான வாழ்க்கையைத் தன்காதலின் மூலம் கண்ணனுக்;கு அர்ப்பணித்த ஆண்டாளாகக் கண்ணன் கேசவனின் கற்பனையில் ஒருதரம் வந்துபோனான்.

‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ கேசவன் கண்ணனின் ‘அடுத்த’ பரிமாணத்தை அறியும் தோரணையில் கேட்டான்.

‘சயன்ஸ் ஏ லெவல் பாஸ்பண்ணிவிட்டேன்.– டாக்டராக வரயோசிக்கிறேன். எனது மக்களுக்கு அதாவது எந்த மக்களுக்கும் சாதி மத,இன வேறுபாடின்றி உதவுவதற்கு வைத்தியத் துறை சரியானது என்று நினைக்கிறேன், என்னாலான உதவியை என்னிடம் உதவிகேட்பவர்களுக்குச் செய்யத் தயங்க மாட்டேன்’

கண்ணனின் குரல் திட்டவட்டமாகவிருந்தது. கேசவனுக்கு இன்னுமொரு அதிர்ச்சி. தனக்கு முன்னால் ஒரு அசாதாரணமான மனிதன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பது நிதர்சனமாகத் தெரிந்தது.

அதன்பின் அவர்கள் பத்திரிகை; கடையில் சந்திக்கும்போது ,அருகிலுள்ள தேனிர்க் கடைக்குச் சென்று சில நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருத்தரில் ஒருத்தொருத்தர் ஏதோ ஒரு பெயரில் அடையாளப் படுத்தமுடியாத ஒரு அன்பால் இணைக்கப்படுவதை இருவரும் உணர்ந்தார்கள்.

கேசவன் கொழும்புக்குப் போகும் விடயத்தைத் தனது பல நண்பர்களுக்குகூடச் சொல்லாமல் இரகசியமாக வைத்திருந்தான் கண்ணன் அந்தக் கால கட்டத்தில் தனது தமக்கையின் பிரசவத்திற்காகத் தாய்தகப்பனுடன் பொத்துவில் கிராமத்துக்குப் போயிருந்தான்.அவர்களைத் தமக்கைவீட்டில் ஒப்படைத்து விட்டு வந்தவனுக்குக் கேசவன், அடுத்தநாள் அதிகாலையில் கேசவன் கொழும்புக்குப் பயணமாகிறான் என்பதை இருவருக்கும் தெரிந்த கேசவனின் நண்பன் மூலம் கேள்விப்பட்டதால், கண்ணன் விடிய முதல் எப்படியும் கேசவனைக் கண்டு பிரியாவிடை சொல்லவந்தான்.

தனது அன்புக்குரிய பலரைச் சடடென்று இழந்தவன் கண்ணன். கொழும்புக்குப் போன தமிழர் பலர் இடைவெளியில் சிங்கள இனவெறியர்களால் பல தடவைகளில் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

கேசவன் கொழும்பு செல்கிறான் அவனைப் பார்க்கவேண்டும், அவனுடைய பிரயாணத்திற்கு வாழ்த்துச் சொல்லவேண்டும் என்று வந்தான்.

அன்று விடிகாலை மப்பும் மந்தாரமாகவிருந்தது.இரவு பெய்தமழையால் நிலத்திலும் றோட்டிலும் ஆங்காங்கே மழைநீர் திட்டுத்திட்டாகக் கிடந்தது.இராணுவம் எந்த நேரமும் ரோந்து வரலாம். அவசரமாகத் தனது பைசிக்கிளில் போன கண்ணனின் கண்களில் தெருவில் நின்றுகொண்டு,வேலிக்கு அப்பால்; யாரோடோ பேசிக்கொண்டிருக்கும் கேசவனைக் கண்டான்.

கண்ணன் தனது பைசிக்கிளுடன் கேசவனை நெருங்குவதைக் கண்ட தாமரை அவனை சாட்சாத் ‘கண்ண பிராமனே’தன்னைக் காப்பாற்றத் ‘தங்கத் தேருடன்’ வந்ததாகச் சந்தோசப் பட்டாள்.

இருவரையும் அவனின் வாகனத்தில்(?)கடத்திச் சென்று உதவும்படி கெஞ்சி அழுதாள்.அவனின் உதவியில்லாவிட்டால் தான் உயிரைவிட வைத்திருக்கும் எலிப் பாஷாணத்தை அவனிடம் காட்டினாள்.

கண்ணனுக்குத் தலைசுற்றியது. ஊரைவிட்டுப் போகிறவனுக்குப்; பிரியாவிடை சொல்லவந்தவனின் உதவி கிடைக்காவிட்டால் தனது உயிருக்குப் பிரியாவிடை சொல்லப் போவதாகக் கதறியழும் தாமரையின் கெஞ்சலுக்கு அப்பால் அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. காதல்த் தோல்வியால் போராளியாக அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட அவனின் அன்புத் தமயனின் அன்பான, அறிவான,சிரித்த முகம் வந்தது. அதைத் தொடர்ந்து,கண்ணனின் மனத்திரையில், இந்தியக் குண்டடிபட்டு இரத்தம் வழியப் பெற்றதாயின் காலடியில் இறந்த தமயனின் வெளிறிய முகமும் பட்டென்று நினைவைக் குத்தியது.

அதற்குமேல் அவனால் எதுவும் யோசிக்க முடியவில்லை.

இரு காதலர்களையும் தனது பைசிக்;கிளில் ஏற்றிக் கொண்டு,இருள் பிரியாத அந்த அழகிய காலை நேரத்தில் காற்றாகப் பறந்தான். அவன் வீட்டில் அப்பாவும் அப்பாவும் தமக்கை வீடு போய்விட்டார்கள்.அடுத்த வீட்டிலிருக்கும் பாட்டி பாட்டனார் தாங்களும் தங்கள் பாடுமாமாகவிருப்பார்கள். இராணுவம் அடித்த அடியால் தாத்தாவுக்குக் காது கேட்காது.பாட்டிக்கு வயதுகாரணமாகக் கண்பார்வை மங்கி வருகிறது.

காதலர்களைத் தன்வீட்டில் மறைத்து வைத்தான் கண்ணன். வெளியில்; போய்வரும் வழியில் தனக்குச் சாப்பாடு வாங்கி வருவான்.அதனால் பாட்டி.தாத்தாவுக்கும் சிரமம் கொடுப்பதில்லை.

அவனது வீட்டிலிருக்கும் காதலர்களுக்கும் சேர்த்துச் சாப்பாடு வாங்கும்போது ‘என்ன மூன்று சாப்பாடு வாங்குகிறாய்’ என்று கடைக்காரன் கேட்டபோது ‘பாட்டிக்கும் தாத்தாவுக்கும் சுகமில்லை;’ என்று பொய் சொன்னான்.

ஊர்நிலைமையைக் கண்காணித்தபின் காதலர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதலான நேரத்தில் உண்மையைச் சொல்லவேண்டும் என்று நினைத்தான். ஆனால் கண்ணனின் திட்டம், தாமரை-கேசவனின் குடும்பங்கள் தொடங்கிய போரால் நிர்மூலமாக்கப் பட்டது. அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப் பட்டபோது,எப்படியும் போலிசாரும் அல்லது இராணுவமும் இந்த விடயத்தில் மேலதிக நடவடிக்கை எடுப்பார்கள் கண்ணனுக்குத்; தெரிந்தது.

இராணுவத்திடம் அகப்பட்டால் காதலர்கள் உயிருடன் பிழைப்பது அரிது.

போலிசாரிடம் அகப்பட்டால், அவர்கள் இவர்களையம் சேர்த்துக் கூண்டில் போட்டால் ஏற்கனவே கைது செய்யப் பட்டுக் கிடப்பவர்கள் இந்தக் காதலர்களைக் கிழித்தெறிந்து விடுவார்கள் என்பதையும் உணர்வான்.

அதனால், ஓடிப்போன காதலர்களின் சொந்தக்காரார் அத்தனைபேரும் பொலிசாரால் கைது செய்யப் பட்டுக் கூண்டில் அடைக்கப் பட்ட அடுத்த சில மணித்தியாலங்களில்,அவசர அவசரமாக காதலர்களை பட்டணத்திற்கு அழைத்துக்கொண்டுபோய்ப் பதிவுத் திருமணம் செய்ய உதவினான்.

இவ்வளவும் அவனாற் செய்யப் பட்டது என்று இதுவரையும் யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்தவனுக்கு எப்படியோ விஷயம் தெரிந்து இப்போது டாக்டர் வந்திருப்பது கண்ணன் வயிற்றில் நெருப்பை வளர்த்தது.ஆனால் அதை விடக் கேசவனையும் தாமரையையும் ஒன்று சேர்த்ததில் அவன் திருப்திப் பட்டான். அதற்காக ஊராரின் உதைகிடைத்தால் அதையும் அவன் ஏற்கத் தயார் என்ற அவன் மனம் சொல்லியது.

இவர்களின் குரல் கேட்டு அடுத்த வீட்டிலிருந்த கண்ணணின் பாட்டி வெளியே வந்தாள். நிலவின் வெளிச்சத்தில் டாக்டரை சாடையாக அடையாளம் கண்டதும்,அவர் நோயாளியான தன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்த கிழவி சட்டென்று இருமத் தொடங்கியது. டாக்டா கிழவியின் தலையைத் தடவி வி;ட்டு,’ ஆச்சி,நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு வாங்கோ மருந்து தாறன்’ என்றார்.

இரகசியமாகக் காதலர்களைத் தேடிவந்த டாக்டர் வந்த விடயம் இனி இந்தக் கிழவி மூலம் ஊரெல்லாம் அடிபடும் என்று தெரிந்ததும்,டக்டருக்கு வந்த ஆத்திரத்தில் காதலர் இருவரையும் உதவியாளன் கண்ணனையும்;; அடித்துத் தள்ளவேண்டும் என்று நினைத்தாலும், தாமரையின் தந்தையின் உடல் நிலையை மனதில் வைத்து மௌனமானார்.அதையும்விடக் காதலர்களுக்கு உதவிய கண்ணனில் ‘கை’வைக்க அவர் மனச் சாட்சி ஏனோ இடம் கொடுக்கவில்லை.

‘சரி விடிந்ததும் முதல் வேலையாகப் போலிஸ் நிலையத்திற்குப்போய்ச் சரண்டார் பண்ணுங்கோ. அதுக்குப் பின்தான்; உங்கட ஆட்கள வெளியில விடுவினம்’. டாக்டர் மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.இப்போது போலிஸ் இன்ஸபெக்டர் இருக்கமாட்டார். இரவில் டியுட்டியிலிருப்பர்கள் இந்தக் காதல் ஜோடியைக் கண்டால் ஊரில் நடக்கும் கலவரத்திற்குக் காரணமானவர்கள் என்று அவர்களையும் பிடித்துச் சிறையில் போட்டால் உள்ளே அடைப்பட்டு ஆத்திரத்திலிருப்பவர்களின் மரண அடியை இந்த இளம் சிட்டுக்கள் தாங்காது என்று அவருக்குத் தெரியும்.

‘நான் கட்டாயம் அவர்களைக் கூட்டிக் கொண்டு போவன். போலிசார் அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. உதவி செய்ததற்கு என்னையும் ஒன்றும் பண்ணமுடியாது.இவர்களுக்காக அடிபட்டது சொந்தக்காரர்களின் முட்டாள்த்தனம் அதற்கு ஏன் இவர்களைப் பழி சொல்கிறீர்கள். இவர்கள்தானா உலகின் முதற்காதலர்கள்? இவர்கள்தானா புதினமாக ஏதோ சமூகவிரோத செயல் செய்தவர்களா,உகத்துச் சரித்திரமே காதலுடன் இணைந்தது’ கண்ணனின் குரலில் கோபாக்கினி பறந்தது. ஆசிரியர் அவனை ஏறிட்டுப் பார்த்தார்

குடும்பத்தில் பலர் இறந்ததால் இவன் இப்படிப் பேசுகிறானா அல்லது தான் சொல்வது சரியான விடயம் என்ற நம்பிக்கையில் முழங்குகிறானா?

காதலர்களைத் தேடிப்போன-ஊரிலுள்ள அத்தனைபேரையும்விட அதிகம் படித்த.டாக்டரும் ஆசிரியரும்; கண்ணனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமற் பிரிந்தார்கள்.

அன்றிரவெல்லாம் டாக்ரால்; தூங்க முடியவில்லை.

இந்தக் காதலர்களுக்காக, ஊராரின் மட்டுமல்ல போலிஸ்,இராணுவம் அத்தனைபேரையும் எதிர்த்துக் கொண்டு தனது திறமையான அறிவாற்றலின் திறனுடன் செயலாற்றிய கண்ணனை நினைக்க அவருக்கு அவனின் ஒரு மதிப்பு வந்தது. தன்னலம் பாராது,காதலுக்கு அவன் கொடுத்த மரியாதையை நினைத்தபோது உடல் புல்லரித்தது.

இப்படிப் பெருந்தன்மையற்ற அடிபடும் சொந்தக்காராரில் அவருக்கு எரிச்சல் வந்தது.

ஆனால் அவர்கள்,கண்ணன் மாதிரி காதலை முன்படுத்தாமல் கௌரவத்தை முன்னெடுத்துப் போராடிய,உணர்ச்சிக் குவியலான கிராமத்து மக்கள்,காதல் பற்றித் தெரிந்தாலும் அதற்கு அப்பால் தங்கள் ‘குடும்ப கௌரவம் பார்க்கும் பழமைவாதிகள்’; என்பதையும் அவர் புரிந்துகொண்டார்

இப்போது,சிறையிலடைபட்டிருப்பவர்கள் அவர்களுக்குக் கொடுத்த இரவுணவைத் தொட்டிருக்கமாட்டார்கள் என்று டாக்டருக்குத் தெரியும்.இந்த நிலைக்கு ஆளாகிப் போன தங்கள் நிலையையும் அதற்குக் காரணமான காதலர்களையும் எண்ணி இரவிரவாக மனதுக்குள் துன்பப்பட்டிருப்பார்கள்; என்றும் அவருக்குத் தெரியும்.

தாமரையையும் கேசவனையும் யோசித்தால் தாமரை சொன்னதுபோல், ‘நாங்கள் வெளியே வந்திருந்தால் எங்களைப் பிரித்திருப்பார்கள்’.

அவர்களின் காதலின் ஆழம் அவரை மெய்சிலிர்க்க வைத்தது. தாய்தகப்பன்,ஊர் உலகம் எல்லாம் எதிரானபோதும்,ஊரே இரண்டாகி நான்கு நாள் போரை நடத்தியும் தங்கள் காதலை விட்டுக்கொடுக்காமல் ஓடிப்போய்க் கல்யாணம் செய்த அவர்களின் உயரிய காதல் அதிகாலையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும்போது பல சிந்தனைகளை மனதில் பரப்பின.

இந்தக் காதல் சண்டையால் அவர் கண்ட விசித்திரமான சில மனிதர்களை அவர் நினைத்துப் பார்த்தார்,

-தங்களின் உண்மைக்காதலுக்காக ஊர் உலகத்தையே எதிர்க்கத் துணிந்த கேசவன்-தாமரை

– காதலர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயாரான கேசவனின் உண்மை நண்பன் கண்ணனின் உயரிய பண்பு

-போலிஸ் அதிகாரியாயிருந்தும் மனித உணர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து வைத்திருக்கும் போலிஸ் இன்ஸ்பெக்டர்.

அன்பும் காதலும்தான் உலகின் உயரிய பண்புக்கு உதாரணங்கள்.அதைக் கண்ணன் பெரிய படிப்பு படித்த டாக்டருக்குத் தன் செயல்கள் மூலம் காட்டிவிட்டான். இந்த உலகத்தில் தங்கள் மரியாதை,மானம், என்பதைக் காட்டக் காதலைக் காரணம்காட்டிப் பல போர்கள் நடந்திருக்கின்றன என்று அவருக்குத் தெரியும்.

குளித்துவிட்டு வந்தவர்,அவர் காதலித்துக் கலயாணம் செய்துகொண்ட மனைவியை அணைத்து முத்தமிட்டார்.

கணவரின் காலைச் சாப்பாட்டுக்கு இடியப்பமும் கத்திரி;காய்க் குழம்பு,தேங்காய்ச் சம்பல்,பால்சொதி வைத்துக் கொண்டிருந்தவள் அவரின் ஈரம் தோய்ந்த அணைப்பில் நாணத்துடன் நெளிந்து கொண்டு அவரை வியப்புடன் பார்த்தாள்;.

‘காதல் வாழ்க என்றார்’; சிரிப்புடன் சொன்னார் அவளின் அன்பான டாக்டர் கணவர்.

Print Friendly, PDF & Email

1 thought on “காதலுக்கு ஒரு போர்

  1. இக்கதையின் மூலம் இலங்கையின் போர் காலத்தின் நிகழ்வுகளையும் மக்களின் பல்வேறு சிந்தனைகளையும் மிகவும் நேர்மையாக கூறியதாக நான் கருதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *