பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 16,673 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாண்டிய நாடு குமரிமுனை வரை பரவியிருந் தது. தெற்குக் கோடியில் பிசிர் என்ற ஊர் உண்டு. அவ்வூரில் ஆந்தையார் என்ற புலவர் இருந்தார். இவரைப் பிசிராந்தையார் என்று அழைத்தல் வழக் கம். இளமைக் காலத்திலேயே தொல்காப்பியம் போன்ற நூல்களைச் சிறக்கப் படித்து அறிஞ ராய் விளங்கினார். வெற்றுப் படிப்பளவில் இவர் அறிவு நின்றதில்லை. ஒழுக்கம் என்ற விழுமிய குணம் கல்வியினும் சிறந்தது. ‘ஓதலிற் சிறந் தன்று ஒழுக்க முடைமை,’ என்பர் கற்றோர். ஆதலினாலே, விழுப்பம் தரும் ஒழுக்கத்துடன் விளங்கினமையே இவருக்குத் தனிச் சிறப்பாகும்.

இல்லற நெறியில் வாழ விரும்பினார் ஆந் தையார். ஆகவே, கற்புக் கடம் பூண்ட பொற் புடைப் பாவை ஒருத்தியை மணந்தார். அந்த அம்மையார் பெண்ணெனப் படுவாள் எவ்வா றிருக்க வேண்டுமென்பதைப் பெற்றாரும் உற்றா ரும் கற்பிக்க அறிந்த கற்புச் சிறப்புடையவள், “ தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண், ” என்பது நம் அருமொழி. கற்பினின்றும் வழு வாது தன்னைப் பெண்ணென்பாள் காத்துக் பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் 61 கொள்ளல் வேண்டும். பின்னர்த் தன்னைக் கொண்ட கொழுநனை உண்டி முதலியவற்றால் பேணல் வேண்டும். அடுத்து, இருவர் மாட்டும் அமைந்த புகழை வளர்த்துக்கொள்ளல் வேண் டும். இங்ஙனம் நற்குண நற் செய்கைகளை விடாப்பிடியாகக் கொண்டு அவ் வம்மையார் சிறந்தனள். கற்றுச் சிறந்த பிசிராந்தையார் கற்புச் சிறந்த இல்லத்துணையுடன் இன்புற இல் லறத்தை மேற்கொண்டார். இருவரும் ஒரு பசுவின் தலைக்கண்ணே காணப்படும் இரண்டு கொம்புகளைப் போல, வேறுபாடில்லாத உள்ளத் துடனிருந்தனர்.

செல்வங்கள் பல வகைப்படும். அவற் றுள் ஒன்று மக்கட் செல்வம். அறிவறிந்த மக்களினும் சிறந்த செல்வம் உலகத்தில்லை என் னலாம். அதனாலேதான் திருவள்ளுவர், “பெறு மவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த, மக்கட் பேறல்ல பிற,” என்றார். அழியாத கல்விச் செல் வத்தைப் பெற்ற புலவர் சிறந்த புதல்வர்ப் பேற் றினையும் அடைந்து விளங்கினார்.

தாம் மனைவி குழந்தைகள் எனப் பல்கிய குடிக்கு ஏவலாளர் சிலர் வேண்டியிருந்தனர். ஏவல் செய்வோரும் புலவர் குறிப்பறிந்து வேண்டியவற்றைக் காலம் இடம் அறிந்து செய்தனர் – ஆதலின், எவ்வழியானும் குறைவின்றிப் புலவர் வாழ்ந்தார்.

அவர் வாழ்ந்த நாளில் பாண்டிய நாட்டை அறிவுடைநம்பி என்ற அரசன் ஆண்டு வந்தனன். ஆண்மக்களுட் சிறந்தவரை நம்பி என்று சொல்வர். இவன் வெற்று நம்பியாக இருக்கவில்லை. அறிவையே தன் செல்வமாகப் பெற்று வாழ்ந்தான். ஆதலினால் இவன் அறிவுடை நம்பி ஆயினன். குடிமக்கள் அறிவுடை நம்பியை நம்பி வாழ்ந்தனர்.

மக்களுக்குக் குற்றம் செய்தலே இயல்பு. பாண்டி மன்னனின் அரசியல் ஏவலாளர் மிகக் கொடுமையாக வரி வசூலித்தனர். அச் செயல், மக்களுக்கு மிகுந்த துன்பத்தை உண்டாக்கியது. புலவருக்கு இச்செயல் அளவு கடந்த மனவலியை உண்டாக்கிற்று. அரசனுக்கு இதனை அறிவித்துக் கண்டித்தற்காக அரசன் அவைக்களம் சேர்ந்தார். மன்னனும் இன்முகத்துடன் வரவேற்று இருக்கை தந்தான்.

அமர்ந்த புலவர் அரசன்கீழ் வாழ்வோர் செய்யுமவற்றை விளக்கமாக எடுத்துக் கூறு கின்றார். சொல்லவந்த ஒன்றை அவ்வாறே கூறு வதினும் உவமையால் விளக்குவது உயர்ந்தது. ஆதலின், கதை சொல்லுகின்றவரைப் போல்

பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் 63 தொடங்கினார். “ஒரு யானை இருந்தது. அதற்கு உணவு இடவேண்டுமல்லவா? அதற்காக அந்த யானையைக் காய்த்து விளங்கும் நெற்கதிரோடு கூடிய நூறு செய் அளவுள்ள நிலத்தில், அதனை வளர்த்தோர் விடுத்தனர். அவ்வளவு பெரிய நிலமும் பாழாயிற்று. ஆனால், யானையின் பசி நீங்கவில்லை. ஏன் ? அதன் வாயுள் புகுந்த வற்றினும் காலால் மிதிபட்டு அழிந்தவை மிக்கவை. யானையை வளர்த்தோருக்குச் சிறிது அறிவு தோன்றிற்று. மிகச் சிறிய அளவாகிய ‘மா’ எனும் அளவு நிலத்திலுள்ள நெற்கதிரை அறுவடை செய்தனர். நெல்லைத் தனியாகப் பிரித்தனர். அரிசியாக்கி உணவு அமைத்துக் கவளமாக உருட்டி யானைக்குத் தந்தனர். யானை கண்டு மகிழ்ந்தது. ‘இனி வேண்டாம்,’ என ஒரு பகுதியை ஒதுக்கியது.” இவ்வளவும் கூறி வந்தவற்றில் அரசன் மனம் நன்றாக அழுந்தியிருந்தது.

அரசனே! யானை ‘ அறிவற்ற நெறி யில் தன் பசியை நீக்கிக்கொள்ள முயன் றது. தானும் பசியைப் போக்கிக்கொள்ளவில்லை. நிலப்பகுதியும் வீணே கெட்டது. அவ்வாறே நெறியறிந்து இறையைக் கொள்ளுவா யாயின் நீயும் நீடூழி வாழலாம். குடிமக்களும் நின்னை வாழ்த்துவர். அவ்வாறின்றி, நின் அரசியலை நின் கீழ் வாழும் கொடியோர் கையில் விடுத்தனை. அவர்கள் யானையைப்போல் தாம் பெறும் பொரு ளுக்காக மக்களைத் துன்புறுத்துகின்றனர். அத னால், குடிமக்கள் நின்னை வெறுப்பர். நெறி யறிந்து அரசிறையைக் கொள்ளுக. அவ்வாறு செய்யின் கோடிக்கணக்கான பொருளை ஈட்டி நாடு பெரிதும் செழிக்கும்,” என்றார்.

ஆ! புலவர் அறிவுறுத்திக் கூறும் சொற்களின் – பெருமையை என்னென்பது! மாறுபாடு சிறிதுமில்லா மனத்துடன் அரசன் புலவர்சொல் வழி நின்றனன். மக்கள் மகிழ்ந்த னர். நாடு, உயர்ந்தது.

இவ்வாறு அரசனையும் இடித்துக் கூறித் திருத்தினார் இவர், என்று இவர் புகழ் எங்கும் நிறைந்தது. அக்காலத்தில் உறையூரைத் தலை நகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டவர் கோப்பெருஞ் சோழர் என்பவர். அரசராக இல்லற நெறியில் வாழ்ந்தார் இம் மன்னர். இவருக்கு முழு மூடர்களாகிய பிள்ளைகள் பிறந்தனர். அவர்களால் மன்னர் மனம் துன்புற்றது. ஆதலின், ‘இயல்பாகவே உலகம் நிலையாதது; நிலைத்த பரம்பொருளை வணங்கல் வேண்டும்” என்ற துறவு எண்ணம் அவருக்குச் சிறந்தது. அரச முனிவராக அவர் விளங்கினார்.

செந்தமிழ்ப் புலமை சிறந்து விளங்கும் அறிவு அவருக்குண்டு. இனிய செய்யுளை எழு தும் பெருமையும் அவர் அடைந்திருந்தார். இத்தகைய சிறப்புக்கள் எல்லாம் அவர்பால் பொருந்தி இருந்தன. அக்காரணத்தினால், அவரைச் சிறந்த சோழர் எனவும், தலைமைக் குணம் உடையவர் எனவும் குடிகள் புகழ்ந்தனர். ஆதலின், அவர்தம் இயற்பெயர் மறைந்தது. கோப்பெருஞ்சோழர் என்ற சிறப்புப் பெயரே அவருக்குப் பெயராயிற்று.

அம்மன்னர், நெடுந்தொலைவில் பாண்டி நாட்டுக்குத் தெற்குக் கோடியிலுள்ள பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆந்தையாரைப்பற்றிக் கேள்வி யுற்றார். அவருடன் நேரிற் கலந்து பழகும் நட்புரிமையை விரும்பினார். இக் காலத்தே போல், நெடுந் தூரத்திலுள்ளோர் ஒன்று இரண்டு நாட்களில் ஓரிடம் சென்று சேர்தற் குரிய எளிய வசதிகள் அக்காலத்தில் இல்லை. மன்னரோ, அரசியலில் ஈடுபட்டவர். ஆதலின், பல நாட்கள் தம் அரசியலை விடுத்துச் செல்லும் நிலைமையில் அவர் இல்லை. அன்றியும் அவர் புதல்வர்களின் தொல்லையும் அவரை ஒருபுறம் வாட்டிற்று.

இருவரும் ஓரிடத்தில் இருந்து நட்பினர் களாகப் பழகும் பெருமையினைப் பெறவில்லை ஆயினும், இருவருடைய உள்ளங்களின் உணர்ச் சிகள் ஒத்தன. இவர்கள் நட்பு, பிறைமதி போல வளர்ந்தது. நட்பு என்னும் செடி, பெரு நிலம் பிளக்கும்படி வேர் வீழ்த்தது. ஒருவர் உருவத்தை ஒருவர் காணவில்லை. ஆயினும் ஒரு வர் உள்ளத்தை விட்டு ஒருவர் அகன்றதே இல்லை. புலவர் எப்போதும் அரசன் அருங்குணங்களை நினைந்து நினைந்து இன்புறுவார். அரசரும் அங்ஙனமே புலவரின் உயர்ந்த குணச் சிறப்புக்களை எண்ணி எண்ணி , ‘அன்னாரை என்று காண்போம்’ என்று ஏக்கமுற்றிருப்பார்.

“புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்”

என்ற வள்ளுவனார் வாக்கிற்குப் பொருந்திய இலக்கியமாக இருவரும் விளங்கினார்கள்.

2.அன்னச் சேவல் தூது

அறிவு நிறைந்தோர் பலர் வாழும் ஊர் பிசிர். அதன்கண் வாழ்ந்த, கோப்பெருஞ் சோழரின் நண்பர், ‘என்று நான் பாண்டி நாடு விட்டு உறையூர் செல்வேன்? என்று என்னுள் ளத் தமர்ந்துள்ள தோழரைக் காண்பேன்? என்று அவருடன் கலந்து உரையாடி மகிழ்வேன் ?” என்ற எண்ணங்களே மிக, வெளியிடத்தில் நின்று கொண்டிருந்தார்.

விண்வழி ஒரு பறவைக் கூட்டம் அப்போது பறந்து சென்றது. அக் கூட்டத்தை ஒட்டி அழகிய தோர் அன்னப் பறவையும் பறந்து சென்றது. அவை வடக்கு நோக்கிச் செல்வதை அவர் அறிந்தார். என்றும் எப்பொழுதும் மறவாது நின்ற கோப்பெருஞ் சோழரைப் பற்றிய நினைவு அவருக்கு மிகுந்தது. அம் மன்னராகிய தம் இன்னுயிர் நண்பர் வாழும் நாடு நோக்கிப் பறந்து செல்லும் பறவை போல் தாமும் பிறக்கவில்லையே என்று வருந்தினார். பறக்கும் ஆற்றலைத் தரும் சிறகுகளைப் பெற்றிருந்தால் சடுதியில் சென்றிருப்பார். நடந்து செல்வதென்னில் அது மிக்க தொல்லை தருவதோர் காரியம் என்று அதனைக் கைவிட்டார்.

அன்னச் சேவலைக் கண்ட அவர், அத னிடம் சில கூறி அனுப்ப ஆவல் கொள்கின் றார். தம் எண்ணத்தின் அழுத்தத்தினால், அறிவு இல்லாத பறவை, தாம் கூறுபவற்றைக் கேட்டறியுமா? சென்று அவ்வாறே சொல்லுமா? என்பனவற்றை மறந்தார். வாய்விட்டுத் தம் எண்ணத்தை எங்ஙனமேனும் கூறுதலிலேயே அவர் கருத்து நிற்கின்றது. துன்பமோ, இன்பமோ, இரண்டிலொன்று மிகுந்த காலத்தில் அதனை வாய்விட்டுக் கூறுவதாலே சிறிது ஆறுதல் உண்டாகும்.

“அன்னச் சேவலே! அன்னச் சேவலே!! இம் மாலைக் காலம் மிக நன்றாக இருக்கின்றது. தண்ணிலா தன் கதிர்களைப் பரப்பி மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது. யான் பார்க்கும் மக்களெல் லாரும் மகிழ்வுடன் காணப்படுகின்றனர். என் மனமோ தோழரை என்று காண்பது என்று வருந்துகின்றது. நீயோ குமரித் துறையில் அயிரை முதலிய மீன்களை உண்டு மகிழ்ந்திருக்கின்றாய். நின் மனைவிக்கு அணி வகை சில தருதல் வேண்டும் – என்று நான் ஆவல் கொள்ளு கின்றேன். அவை என்பாலில்லை. ஆதலின், யான் கூறுமிடத்திற்குச் செல்லுவாயாயின் அவற்றைப் பெறலாம். நீ இமயம் நோக்கிப் பறந்து செல்லுகின்றாய். இப்பாண்டி நாட்டைக் கடந்து செல்வாயாயின் சோழநாட்டைக் காண்பாய். அந் நாட்டின் தலைநகரம் அழகிய கோழி என்னும் உறையூர். அவ்வூரில் மிக உயர்ந்த அரண்மனை இருக்கின்றது. அம்மாளிகையின் வெளியில் காவலாளர் நின்றிருப்பர். அவரிடம் கூறிய பின்பே உள்ளே செல்ல வேண்டுமென்பதில்லை. உனக்குத் தடை ஒன்றும் இராது; நேரே செல்லலாம். சென்று, அவையில் வீற்றிருக்கும் கோப்பெருஞ் சோழரைக் காண்பாயாக. கண்டு, அவர் கேட்கும் வண்ணம், ‘பிசிர் எனும் ஊரிலிருந்து வருகின்றேன். பிசிராந்தைக்கு அடித் தொழில் புரிபவன் யான்,’ என்று கூறுக. அவர் மனம் மகிழ்ந்து நின் மனைவி அணிய அணிகள் தருவார்,” என்றார்.

இவ்வாறு தனித்திருந்த காலத்தும், பிறவற் றைக் கண்ட காலத்தும் தோழரின் பெருமை யைப் புலப்படுத்திக் கூறினார் பிசிராந்தையார். மற்றொரு முறை, ‘ நும் தலைவர் யார்?’ என்று கேட்டாரை நோக்கி, “என் தலைவர் யார் என்று கேட்கின்றீர்கள். அவர் வளம் சிறந்த நாட்டினர். தம்மை அடைந்த பாணர் பசியை உடனே போக்குபவர். உறையூர் எனும் ஊரில் வசிப் பவர். கோப்பெருஞ் சோழன் என்ற பெயருடை யார். குற்றமற்ற நட்புரிமையை நன்றாகக் கொண்டவர். பொத்தி என்ற நண்பரை அருகி லேயே என்றும் உடையவர். அந் நண்பருடன் மெய்யாக மகிழ்ந்து விளங்குபவர்,” என்று கூறினார்.

நாடு இடை கிடந்தும் நட்பு வளரலாயிற்று. உண்மைத் தோழர்களாக இருவரும் சிறந்து நின்றனர்.

3.இறுதி நாட்கள்

“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.”

ஒருவன் ஏழு பிறப்புக்களிலும் தீமையின்றி வாழ்வான். எப்போது? மக்களைப் பெறுவானானால். எத்தகைய மக்களை? ‘பழி பிறங்காப் பண்புடை மக்களை;’ பிறரால் பழிக்கப்படாத நற்குணமுள்ள மக்களைப் பெறுதல் வேண்டும். ஆகவே, பிள்ளை களைப் பெற்றால் நற்குண முள்ளவர்களைப் பெறுதல் வேண்டும்; இன்றேல் பெற்றோருடைய நற்பெயர் கெடும்.

கோப்பெருஞ் சோழர் நட்பால் சிறந்தார். நட்புச் செல்வம் அவருக்குக் கிட்டியது. நன் மக்கட் பேறு அவருக்கு இல்லை. அவர் பிள்ளைகள் மிகுந்த கொடுமைக் குணத்தினர். தம்மைப் பெற்று வளர்த்துத் தமக்குரியன செய்தவர் தந்தை; ஆதலின், அவர் சொல்வழி நிற்கவேண்டும் என்ற குணம் அவர்களிடத் தில்லாது ஒழிந்தது. அவ்வளவோடு நின்றிருந்தாலும் கெடுதி இல்லை. தம் தந்தையினையே அரசபதவியினின்றும் நீக்க வேண்டும் என்று எண்ணினர். தீய எண்ணம் தீச் செயலை விளைத்தே தீருமல்லவா? ஆகவே, அப் புதல்வர்கள் தம்மால் இயன்றதொரு படையைத் திரட்டினர். மன்னர்மேல் சண்டைக்கும் வந்தனர்.

கோப்பெருஞ்சோழர் நடந்தவற்றை அறிந் தார். அவர் மனம் புண்பட்டது. தம் மக்களின் தீய நடையைக் கண்டிக்க வேண்டியது இன்றியமையாதது. அதற் கென்ன செய்வது என்று அரசர் சிந்தித்தார். தாமும் அவருடன் சண்டை செய்து அவருடைய ஆற்றலை அடக்கி நல்லறிவு கொளுத்த வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். சேனைத் தலைவரை நோக்கித் தன் படையைத் தன் மக்கள் படைக் கெதிராக அனுப்புமாறு கட்டளை இட்டார்.

சோழருடைய நண்பர்களுள் புல்லாற்றூர் எயிற்றியனூர் என்பவர் ஒருவர், ‘முகம் நக நட்பது நட்பன்று.’ காணுங் காலத்தில் முகம் மலர நகை செய்து நிற்றல் நட்பாகாது. ‘அழிவினவை நீக்கி ஆறுய்த்தலே,’ நட்பினர் செய்யவேண் டியவை. தம் நண்பர் கேடு தரும் தீ நெறிகளில் செல்லின் விலக்கல் வேண்டும்; பின்னர் நன்னெறி களில் செலுத்துதல் வேண்டும். இவைதாம் நட் புடையார் மேற்கொள்ள வேண்டியவை. இவற்றை நன்றாக அறிந்த புலவர் புல்லாற்றூர் எயிற்றிய னார். ஆதலால், அரசர் தம் மக்கள் மேல் படை கொண்டு செல்கின்றார் என்பதை அறிந்த அவ் வளவிலேயே, அரசர் இருக்கும் இடத்தை விரைந்தடைந்தார்.

அரசர் முகம் முழுவதும் செக்கச் செவே ரெனச் சிவந்திருக்கின்றது. கண்கள் அனலை ஒத்து விளங்குகின்றன. ஆண்டுகள் பல கடந்த அவருடல் முறுக்குடன் வீரத்தால் சிறந்து நிற் கின்றது. ஆதலின் மெல்ல, “எந்தப் போரிலும் வெற்றியையே பெற்ற வேந்தே! நிலப் பகுதியை முழுவதும் வென்று அச் சிறப்புத் தோன்ற வெண் கொற்றக் குடையின் நீழலில் வாழ்வீர்!” என்றார்.

தம் பண்டை வெற்றிகளில் மன்னர் மனம் செல்கின்றது. அவர்தம் எண்ணம் – ஒரே எண்ணம் – மக்களை அடக்க வேண்டும் என்ற எண்ணம்- நெகிழ்கின்றது. அதனால் புலவர் கூறுகின் றவற்றைக் கருத்துடன் கேட்கின்றார் அரசர்.

“அரசரே! நும்முடன் சண்டையிட வந் தோர் இருவர். அவர்கள் யாவர் என்று எண்ணினேன். நின் பழங்காலப் பகைவரோ என்று கருதினேன். அவர்கள் நின் பகைவரல்லர் என்றுணர்கின்றேன். ஆனால், நீவிர் அவர்தம் பகைவரோ என்றால் அவ்வாறும் கூறுதற்கில்லை.”

உலகில் பகைவர்களே போர் செய்பவர். பகைவரல்லாத இரு சாரார் போர் செய்தலை யாண்டும் கேட்டுமில்லை ; கண்டுமில்லை. இவ்வுண்மைக் கருத்தினை உள்ளீடாக வைத்துக் கொண்டார் புலவர். அரசருடைய நல்ல உள்ளம் வெகுளியால் சிறிது துன்பமடைந்திருக் கின்றது. அத்துன்பத்தினை நீக்க முற்படுகின்றார். இங்ஙனம் சொல்லிய காலத்தில் அரசர் புலவரைக் கூர்மையாகக் காண்கின்றார். காலம் அதுவே,’ என்றறிந்த புலவர் தொடர்ந்து கூறுகின்றார்.

“அறிவிற் சிறந்த அரசர் ஏறே! சிறந்த புகழுடையீராக நீவீர் வாழ்கின்றீர். பிறந்தபின் மாய்தல் உறுதி. ஆதலின், மேலுலகத்தை நீவிர் அடையுங்காலத்து இவ் வரசியலை ஒழித்துச் செல்வீர். அப்பொழுது இவ் அரசியலை ஏற்று நடத்துபவர் யார்? இன்று நும் முன் பகைவராய் நிற்பவர்களல்லவா நும்பின் அரசாள்வோர்? மேலும், யான் கூறுகின்றவற்றைக் கேட்பீராக. நும் பகைவரென நிற்கும் இவ்விளைஞர் தமக்கு ஆற்றல் உண்டு என்று நம்பினர். ஆதலினால், தம் உண்மை அறிவை இழந்தனர். இவர் இக்களத்துத் தோற்றால் இந்த அரசச் செல்வத்தை யாருக்குக் கொடுப்பீர்? போரில் வெற்றி ஒருவரையே சாரும் என்று சொல்லுதற்கில்லை. ஆகவே, நீவிர் தோற்றுவிட்டால் நேர்வதென்ன? உம்முடைய பழம் பகைஞர் மகிழ மாட்டார்களா? உலகத்தில் பெரும் பழிச்சொல் களுக்கல்லவோ இடமாகுவீர்?”

இவ்வினாக்களால் மன்னன் உள்ளத்தில் புது ஒளி உண்டாயிற்று. மக்கள் மேலிருந்த வெகுளி சிறிது சிறிதாக அழியத் தொடங்கியது. தாம் இனிச் செய்ய வேண்டியது யாது என்றறியாமல் மன்னர் மனம் தடுமாற்றம் அடை கின்றது. புலவர் நன்றாக மன்னர் எண்ணங்களை உணர்ந்தார். ஆதலின் அடுத்து, மன்னர் இனி இதனைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டளை இடுகின்றார்.

“எம் உயிரனைய பெருந்தகையீர்! நும் வீர உணர்ச்சிகள் ஒழிவதாக.. நும் உள்ளம் நன்று உணர்ந்து வாழ்வதாகுக. இனி, உமக்கு அரசியல் தொல்லை வேண்டாம். வயது நிறைந்த நும் மக்களே ஆள்வதற்கு அவ் வரசியலை விட்டு விடுவீர். நும் உயிர்க்கு ஆவன செய்தல் வேண்டும். அஞ்சினோர்க்குப் புகலிடமாக நும் திருவடிகள் விளங்கின. நும்மை விருந்தினர் எனத் தேவர் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்குரிய நற்றவத்தை நீவிர் செய்தல் வேண்டும். செய்யத் தக்கது அதுவே,” என்று கூறி முடித்தார்.

மன்னர் தம் முன்னைய எண்ணங்களை எல் லாம் அறவே மறந்தார். புலவர் கூறியவாறே தவத்தை மேற்கொண்டார். எப்படிப்பட்ட தவம்? வடக்கு நோக்கி ஓரிடத்தில் இருத்தல் ; உடலை மெலிவித்தல்; யோகப் பயிற்சியால் உயிரை நீத்தல் ; எனுமிவையாகிய வடக்கிருத்தல் என்ற தவத்தை மேற்கொண்டார். மன்னர் உடையை ஒழித்தார் ; முனிவர் போன்று உடுத்துக்கொண்டார்.

இதனை நாட்டு மக்கள் அறிந்தனர். அறிஞர்களும் புலவர்களும் மன்னரைச் சூழ்ந்த னர். பொத்தியார், கண்ணகனர், கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனர் ; முதலிய புலவர்கள் சேர்ந்து நின்றனர். உள்ளம் மிக வருந்தினர்.

அவர்களைக் கண்ட அரசர், அவர்களுக்குத் தேறுதல் கூறும் முறையில் பின்வருமவற்றைக் கூறினார் : “அறிஞர்களே! மனம் வருந்தாதீர். உலகத்துப் பிறந்தோர் யாவரும் நல்வினையைச் செய்தல் வேண்டும். குற்றப்பட்ட நெஞ்சினோர் அறவினையைச் செய்வோமோ அல்லோமோ என்று கருதுவர் ; தம் ஐயம் நீங்கார். அவர் இழிந்த குணத்தினர் ஆவர். யானையை வேட்டை யாடச் சென்றவன் யானையையும் பெறுவான்; குறும்பூழ் – எனும் மிகச் சிறிய பறவையை வேட்டையாடச் சென்றவன் அது கிடைக்கப் பெறாமலும் மீளலாம். ஆகவே உயர்ந்ததாகிய அறம் செய்யும் எண்ணமுடையோர்க்கு இப் பிறப்பிலேயே அதன் பயன் கிடைக்கப்பெறாமற் போயினும் அடுத்த பிறப்பிலேயாயினும் கிட்டும். மாறிப்பிறத்தல் இல்லை என்று சிலர் சொல்லலாம். அவ்வாறாயின், சிறந்த புகழை நிலை நிறுத்திக் குற்றமில்லா உடம்பொடுகூடி இறத்தல் சிறந்தது; அதனால், எவ்வாறும் நல்வினையைச் செய்தலே நன்று.’

பின்பு, அரசர் தாம் வடக்கிருந்த இடத்திற் கருகில் ஓரிடத்தை ஒழித்துவைக்குமாறு தம்பால் இருந்தார்க்குக் கூறினார். ‘அவ்விடம் எதற்கு?’ என்ற ஐயம் அவர்களுக்கு உண்டாயிற்று. அதனை அறிந்த அரசர், “அறிஞர்களே! தென்னம் பொருப்பன் நன்னாடு பாண்டி நாடு. அந் நாட்டில் என் உயிரைப் பாதுகாப்பவர் ஒருவர் இருக்கின்றார். அவர் பிசிர் என்னும் ஊரில் வாழ்கின்றவராவர். யாம் செல்வத்துடன் சிறந்த காலத்தில் அவர் வரவில்லை; ஆயினும், யாம் இன்னாமை அடையும் இக்காலத்து வருவார்: ஐயம் உங்களுக்கு வேண்டியதில்லை. இட மொழித்து வையுங்கள்” என்றார்.

அறிஞர்கள், “அரசே! உங்களைப் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ளார். நீங்களும் அவ் வாறே கேட்டறிந்திருக்கின்றீர்கள். இவ்வாறே யாண்டுகள் பல கழிந்திருக்கின்றன. ஒரே இடத்திலிருந்து நிரம்பப் பழகியிருக்கும் நண்பினராயினும் அவ்வழியில் ஒழுகுவது மிகக் கடினம். ஆதலின் அவ்வெண்ணத்தை மாற்றிக் கொள்ளல் நலம், ” என்றனர்.

அவர்தம் சொற்களைக் கேட்ட மன்னர், “சிறந்த அறிஞர்களே! நீங்கள் எவ்வகை ஐயமும் எள் துணையளவும் கொள்ளாதீர்கள். பிசிர் எனும் ஊரில் வாழும் அவர் இனிய குணக்குன்று; உயிருடன் பிணிக்கும் உயர்ந்த நட்பினர்; புகழை ஒழிக்கும் பொய்க்குப் பகை; மெய்யையே அணியும் மேன்மையோர்; புகழையே வாழ்வெனக் கொள்ளும் உயர்ந்தோர்; என்னை வேறாக வும் தம்மை வேறாகவும் கருதும் இயல்பு அவர்பாலில்லை. அவர் பெயரைக் கேட்டால், ‘என் பெயர் சோழன்,’ என்பார். அவ்வாறு பேதை யாகிய என்னுடைய பெயரையே தம் பெயர் என்று சொல்லும் வேறுபாடு இல்லாத அன்பினர். இத் தகைய காலத்தில் தனித்து நில்லார்; வந்தே தீருவார். ஆதலின் என்னை மறுக்காது அவருக்கும் இடம் ஒழித்துவையுங்கள்,” என்று கூறினார்.

உணர்ச்சி யொன்றே சோழனாட்டு மன்னரை யும் பாண்டி நாட்டுப் புலவரையும் ஒன்றாகச் சேர்த்தது. அவ் வுணர்வால், புலவர் தம் தோழராகும் அரசருக்கு உற்றதை உணர்ந்தார். நாடு நீங்கினார். காடு பல கடந்தார். சோழனாட்டைச் சேர்ந்து மன்னரிருக்கும் இடத்தை அடைந்தார். பொத்தியார், வந்த புலவரைக் கண்டார்: கண்ணாகனார் கண்டார். பூதநாதனார் கண்டார். பிறரும் கண்டனர். மற்றைய அறிஞர்களும் கண்டனர். வியப்புக் கடலில் ஆழ்ந்த னர். ஒன்றும் பேசுத லாற்றாது நின்றனர்.

சங்க_இலக்கியக்_கதைகள்78துன்பம் நிறைந்த காலம் அது. அப்போது ஆந்தையார் வந்தது ஒரு கிளர்ச்சியையே யாவருக்கும் உண்டாக்கியது. ஆதலின் பொத் தியார் வாய் திறந்து “இதனை நினைத்தாலே வியப்பை உண்டாக்குகின்றது. தம் சிறப் புக்கள் எல்லாவற்றையும் கைவிட்டுப் புலவர் இங்கே வருதற்குத் துணிந்தது மிக்க வியப்பை உண்டாக்குகிறது. வேற்று நாட்டு மன்னரிடத்துத் தோன்றிய நட்பையே பற்றுக்கோடாகக் கொண்டு இத்தகைய காலத்து இங்கே வருதல் அளவிறந்த வியப்பை உண்டாக்குகின்றது. ‘வருவான் பிசிரோன்,’ என்றார் மன்னர்; அவ்வாறே வந்தார் புலவர். இவ்விருவருடைய அறிவு ஒற்றுமையை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும், வியப்பு எல்லை கடந்து செல்கின் றது. சோழன் செங்கோல் செல்லாத் தேயம் – பாண்டி நாடு. அங்கு வாழ்ந்த புலவர் நெஞ்சினைத் தமதாகக் கொண்டார் மன்னர். இவரை இழக்கும் இவ் வுலகம் எவ்வாறு இனி வாழும்!” என அங்கு நடந்தவற்றைக் கூறி மன்னர்க்காக வருந்தினார்.

ஞாயிற்றைக் கண்ட தாமரை மகிழ்ந் தலரும். தண்ணிலவைக் கண்ட ஆம்பல் இனிமையாக மலரும். மேகத்தைக் கண்ட தோகைமயில் மகிழ் வால் நடிக்கும். தாய் முகங் கண்ட சேயின் உள் ளத்தின் மகிழ்வும் இயம்பப்படுமதோ? ஆந்தை யாரைக் கண்ட மன்னர் அவ்வாறு ஆயினார். இன்மொழிகள் சிலவற்றை இயம்பினார். காணாது நட்ட இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்ச்சி எனும் கடலில் ஆழ்ந்தனர்.

பின்னர், அங்குக் கூடி இருந்த முதிய புலவர் ஆந்தையாரை நோக்கி, “ஐயரே, நுமக்கு ஆண்டுகள் பல ஆயின என்று அறிவோம்; ஆனால் அதற்கறிகுறியாகிய நரை இன்றி இருக்கின்றீர்களே; காரணம் இன்னதெனக் கூறலாமோ?” என்றார்.

புலவர், “சொல்லுகின்றேன் ; கேளுங்கள் : என் மனைவி மாண்பு நிறைந்தவள் ; நற்குண நற்செய்கைக ளுடையவள். என் மக்களும் என் மனைவியைப் போன்றே உயர்ந்த குணங்களை உடையவர். என் ஏவலாளர் என் கருத்திற்கு வேலைசெய்வர். என் நாட்டு அரசன் ஒத்த ஒழுங்குடன் அரசாள்கின்றனன். மேலும், யான் வாழும் ஊரில் அடக்கம் முதலிய உயர்குணங் கள் நிறைந்த சான்றோர் பலர் வாழ்கின்றனர்; அவர்களுடன் யான் என்றும் பழகுகின்றேன். இத்தகைய நலங்களாலே எனக்குக் கவலை என் பது இல்லை. ஆதலின், கவலை உள்ளாரைப் பிணிக்கும் கவலைப்பிணி என்றனக் கில்லை. அப் பிணியுடையாரையே நரை தனக்கு உரிமையாக் கிக்கொள்ளும். எனக்குக் கவலையும் இல்லை; நரையும் இல்லை,” என்று கூறினார்.

சான்றோர் யாவரும் வியப்புக் கடலில் ஆழ்ந்தனர். நடந்தவற்றை யெல்லாம் கண்டார் கண்ண கனார் என்னும் ஒரு புலவர். அவர் தாம் எண்ணிய சிலவற்றைக் கூற விரும்பினார்.”பொன், பவளம், முத்து, மணி ஆகியவை ஒரே இடத்தில் தோன்றுவன அல்ல. மண்ணிலும், கடலிலும், மலையிலும் அவை தோன்றுகின்றன. ஒன்றற் கொன்று இயைபில்லா நெடுந்தொலைவில் பிறக் கின்றன. ஆயினும், நல்ல அணிகலன்களைச் செய்யுங் காலத்துக் கோவையாய் ஒரே இடத்தில் சேர்கின்றன. அவ்வாறே, சான்றோர் வெகு தொலைவி லிருந்தாலும் ஒன்றுசேர்வர் ; இதற்கு ஐயமில்லை,” என்றார்.

புலவரும் அரசரும் வடக்கிருந்தனர். அப்போது பொத்தியாரும் அரசருடன் வடக்கிருக்க முற்பட்டார். அவரைக் கண்ட மன்னர், “நும் மனைவி, மகன் பெற்ற பின்னர் வருக ! இப்போது வேண்டாம்” என்று தடுத்தார். நாட்கள் பல ஆயின. உடல்வலி யிழந்த புலவரும் புரவலரும் உயிர் துறந்தனர். அவர்கள் உயிர் நீங்கிய இடத்தில் கற்கள் நடப்பட்டன. அவற்றில் அவர் கள் உருவங்கள் எழுதப்பட்டன; அவர்தம் பெருமையும் பொறிக்கப்பட்டிருந்தது.

மகனைப் பெற்றவுடன் பொத்தியாரும் வந் தார். நடுகல் உருவத்தில் சோழனைக் கண்டார். “தோழனே! மகனைப் பெற்ற பின்னர் ‘வருக’ என்றனை. மகனைப் பெற்று வந்தேன். எனக்கு இடம் எங்கே?” என்றுரைத்துக் கசிந்து நின் றார். நடுகல் வெடித்து ஒரு புறம் புலவருக்கு இடம் தந்தது.

மாணவர்களே! அரசரின் சீரிய குணத்தைக் கண்டீர்களா? நடுகல்லாகியும் நண்பனைக் கைவிட வில்லை; பொத்தியாரும் வடக்கிருந்து உயிர் நீத்தார். சிறுவர்களே! இக்கதையைப் படித்தீர்கள். இதன்கண் நீவிர் சிறந்ததொரு படிப்பினையைக் காண்கிறீர்கள். காணாத இருவர் கலந்த தோழராயிருந்தனர். ஒருவருக்குத் துன்பம் வந்தபோது மற்றவரும் அதைத் தம்முடையதாகக் கருதினார். ஆகவே, தோழர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை இது அறிவிக்கின்றதல்லவா?

– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *