எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 4,376 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

7ஆம் அத்தியாயம் 

திருகோணமலையைப்பற்றி ரகு நிறையக் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அங்கு ஒருமுறைகூடச் செல்லும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அவனுக்குத் தெரிந்த இரண்டொருவர் திருகோணமலை செல்வம் கொழிக்கும் பூமி என்று கூறிக்கொண்டு அங்கு வேலை தேடிச் சென்றது அவனுக்கு ஞாபகம் இருந்தது. 

திருகோணமலையின் இயற்கைத் துறைமுகம், திருக் கோணேஸ்வரம், வெந்நீரூற்றுக்கள், கடற்படைத் தளம் போன்ற சரித்திர சம்பந்தமான இடங்களைப்பற்றியும் படித் திருந்தான். அந்த வயதில் இப்படியான இடங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவனிடம் உண்டாகிய துண்டு. ஆனால் வளர்ந்தபின் அந்த ஆசைகள் கருகிப் புதிய ஆசைகள் தோன்றின. 

இடையில் படித்துவிட்டு வேலையில்லாமல் சில வருடங்கள் அவன் அலைந்து திரிந்தபோது திருகோண வேலை மலைத் துறைமுகக் கட்டுஸ்தாபனத்தில் சுலபமாக எடுக்கலாம் என நண்பர்கள் தூண்டியபோது அவன் அங்குச் செல்ல நினைத்தான். ஆனால் சின்னையா அவனைப் பிரிய மனம் ஒப்பவில்லை. 

ஆனால் இன்று எதிர்பாராதவிதமாக அவன் திரு கோணமலைக்கு வந்துவிட்டான். அதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி. அங்கு யாருமே அவனுக்கு அறிமுகமில்லாதிருந்த தால் இன்னும் சாதகமாகப் போய்விட்டது. அவன் மெது வாக நடக்கத் தொடங்கினான். சிறிது தூரம் நேராக நடந் தான். அவனுக்குப் பசியும் களையும் அதிகரித்திருந்ததால் ஏதாவது சாப்பிடவேண்டும் போல் தோற்றியது. ஆனால் அவன் நடந்து கொண்டிருந்த நேர்ப்பாதையில் கடலையும் சில கட்டடங்களையும் விட வேறு கடைகள் காட்சியளிக்க வில்லை. எலிபென்ற் ஹவுஸ் ‘ செல்லக் கூடிய அளவுக்கு அவனிடம் பணமும் இருக்கவில்லை. உடையும் இருக்க வில்லை. ஆகவே அவன் முதலாவது தென்பட்ட ஒழுங்கை வழியாகத் திரும்பி நடக்கத் தொடங்கிய போது அங்கே அவன் தேடிவந்த ஒரு தேனீர்க் கடை இருந்தது. அவன் உள்ளே நுழைந்து அருகிலிருந்த ஓர் வாங்கின் மேல் அமர்ந்து கொண்டான். தன்னிடம் இருந்த இரண்டு ரூபாவில் ஐம்பது சதத்திற்குச் சாப்பிட்டுவிட்டு மிகுதியைப் பத்திர மாக மடிக்குள் செருகிக்கொண்டு நடக்க முற்பட்டபோது அவன் எதிரே ஒருவர் பத்திரிகையும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அதை வாங்கிப் பார்த்தான். 

வல்வையில் புயலின் நாசம், கடலுக்குச் சென்ற மீனவர்கள் பலர் திரும்பாததால் கடற்கரையில் மரண ஓலம் என்று கொட்டை எழுத்துக்களில் காணப்பட்ட தலை யங்கத்தைப் படித்ததும் அவனுக்கு சின்னையாவின் ஞாபகம் வந்தது. அண்ணன்மார் இதுவரை வீடு திரும்பாமல் இருந் திருந்தால் சின்னையாவின் கெதி என்ன ஆகியிருக்குமோ என்று நினைத்துப்பார்க்கவே அவன் பயப்பட்டான். யாரிட மாவது யாசித்துப் பணம் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் செல்லலாமா என்று கூடச் சிந்தித்தான். ஆனால் அங்குத் திரும்பிப் போவதால் இன்னும் தன் மனக்கவலையை அதிகரித்துக்கொள்ள வேண்டி வரும் என்ற எண்ணத்தில் இனிமேல் யாழ்ப்பாணம் போவதில்லை என்ற தீர்மானத் திற்கு வந்தான். இதுவரை அவன் கடலோடு கடலாக மாண்டு அழிந்து விட்டதாகச் சின்னையாவுக்கு மருமகனாக இருந்த ரகு மாண்டேபோகட்டும் என்று நினைத்தவன், இனித்தன் பெயர் ரகு அல்ல ராமு என்று மாற்றிக் கொண் டான். அவன் பிரயாணந் தொடர்ந்தது. பல சந்துகளை யும், தெருக்களையும் கடந்து அவன் நடந்து கொண்டிருந்த போது கோயில் கோபுரம் ஒன்று தெரியவே அவன் அதை நோக்கி நடந்தான். அருகருகே அமைந்த இரு கோயில்கள் தென்பட்டன. முதலாவது கோயில் அம்பாள் கோயில் என்பதை முகப்பில் இருந்து தெரிந்து கொண்டு கைகூப்பி வணங்கிவிட்டு அவன் அடுத்த கோயிலுக்கு நடந்தான். அது ஒரு பிள்ளையார் கோயில். அம்பாள் கோயிலைவிட அது கொஞ்சம் சிறிதாக இருந்தது. அதன் எதிர்ப்புறத்தே பச்சைப் பசேலென்ற பெரிய முற்றவெளியும் சற்றுத் தூரத் தில் அதற்குக் கரைகட்டினாற்போல் கடலும் அமைந்திருந் தது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பிள்ளையாரைத் தரிசித்துவிட்டு அங்கே தோன்றிய இயற்கை எழிலைச் சில நிமிடநேரம் நின்று ரசித்த ரகு மீண்டும் அம்பாள் கோயிலுக்குச் சென்று திறந்திருந்த பெரிய மண்ட பத்தின் ஒரு தூணோடு சாய்ந்து அமர்ந்து கொண்டான். 

அந்தக் கோயிலுக்கு அண்மையில் ஒரு மேல்மாடிக் கட்டடம் இருந்தது. அது அமைத்திருந்த விதத்தில் அது ஒரு பாடசாலையாக இருக்க வேண்டும் என்று அவன் ஊகித்துக் கொண்டான். அவன் பார்வை கோயில் கதவில் சென்று நிலைத்த போது அவனுக்குத் தன் எதிர்காலத் தைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அம்பாள் கருணையுள்ளவள். எப்படியும் தனக்கொரு வழி காட்டுவாள் என மனதைச் சாந்திப்படுத்திக் கொண்ட போதும் அடுத்த நேர உணவுக்கு வழி என்ன என்ற பிரச்சனை அவனைக் குழப்பிக்கொண்டேயிருந்தது. அவன் என்ன வேலை செய்து தன் உடலைக் காப்பாற்ற முடியும்….? முதல், முன்பின் அறிமுகமில்லாத அவனுக்கு யார் வேலை கொடுக்கப் போகிறார்கள்…? என்றெல்லாம் சிந்தித்தபடியே அந்தச் சீமேந்துத்தரையில் சாய்ந்தவன் தன்னையறியாமலே கண்ணயர்ந்தான். 

திரும்பவும் யாரோ அவனைத் தட்டியெழுப்பியபோது தான் அவன் கண்விழித்தான். ‘ என்னப்பா மதிய பூசைக்கு. மணியடித்துவிட்டது. அந்த ஓசை கூடக் கேட்காமல் என்னமாத் தூங்குகிறாய். போய் முகங் கால் கை கழுவிக்கொண்டு வந்து சாமியைக் கும்பிடு.. என்ன கவலை இருந்தாலும் காளியம்மன் கருணையில் மாறி விடும்.. எழுந்திரு…’ அவன் பக்கத்தில் தலை நரைத்துப் போன ஒரு பெரியவர் நின்று அவனை எழுப்பிக் கொண்டிருந்தபோது அவனால் சின்னையாவை நினைக் காமல் இருக்கமுடியவில்லை. அவர்தான் தன் பக்கத்தில் நின்று எழுப்பவது போன்றதோர் பிரமையில் திமிர்முறித்த படியே எழுந்திருந்த அவன் அவரை நன்றிப்பெருக்குடன் பார்த்துவிட்டு அப்பால் நகர்ந்தான். அப்போது பூசைக்கு ஆயத்தமாக மணியடிக்கவே அவன் தெருவோரத்தில் இருந்த குழாயடிக்குச் சென்று முகங் கை கால் கழுவிக்கொண்டு கோயில் மண்டபத்திற்குத் திரும்பவும் வந்து ஒரு ஓரமாக நின்று தொடங்கினான். காளியிடம் எதைக் கேட்பது எதை விடுவது என்பது புரியாத நிலையில் ‘பராசக்தி அகிலாண்டேஸ்வரி எனக்கு நல்லதைச் செய் ‘ என்று மட்டுந் தான் அவனால் வாய்விட்டு வணங்க முடிந்தது. பூஜை முடிந்து விபூதி சந்தனம் பெற்றுக்கொண்டதும் அவன் தெருவில் இறங்கி முற்றவெளிப்பக்கமாக நடந்தான். அப்போது எதிரே ஒரு சைவ ஓட்டலுக்குள் நுழைந்து பசிதீர சோறு சாப்பிட்டுவிட்டு எழுந்தபோது அவனிடம் ஒரு பைசா கூட மிஞ்சியிருக்கவில்லை. இரவுக்கு என்ன செய்வது. என்று நினைக்க அவனுக்குக் கதறியழவேண்டும்போல இருந் தது. ஆயினும் அவன் ஒரு அசட்டுத் தைரியத்துடன் அங் கிருந்தபடியே பின்புறம் திரும்பி அந்தக் காளி அம்மன் கோயிலைக் கரந்தூக்கி ஒருமுறை வணங்கிவிட்டு முற்ற வெளிக்குள் இறங்கி நடந்தான். 

அங்கே காணப்பட்ட இயற்கைக் காட்சியின் அழகு அவன் உள்ளத்தை ஈர்த்தெடுத்தது. அதனால் அவன் முற்றவெளித் தொங்கல்வரை நடந்தான். முற்றவெளி எல்லைவரை ஒட்டியபடி சென்ற தார்ப்பாதையைக் கடந்ததும் அவன் கடற்கரையில் நின்றான். அதில் நின்ற படியே சிறிது நேரம் அந்தக் கடலை உற்றுப் பார்த்தான். அந்தக் கடல் அவனுக்கு வல்வையை நினைவூட்டியது. ஆயினும் அங்கே காணப்பட்ட மலைகளும் அதன் மேல் அமைந்திருந்த பெரிய கட்டடங்களும் அந்தக் கடலுக்கு ஒரு தனியழகையும் வனப்பையும் கொடுத்தன. அவன் அந்தக் கடற்கரையோரமாகச் சிறிது தூரம் நடந்து விட்டுச் சற்று தூரத்தில் தென்பட்ட ஒரு பூவரச மரத்தி னடியில் அமர்ந்து மணலின் மேல் மல்லாந்து படுத்தான். மேலே ஆகாயமும் கீழே பூமியுமாக அவனுக்கு இவ்விடம் அமைத்துக் கொடுத்திருந்தன. தன் பிறந்த ஊராகிய வல்வெட்டித்துறையில் கூட அவன் இப்படிக் கடற்கரையில் ஒரு நாள் படுத்திருக்கமாட்டான். தன்நிலையை நினைக்க அவனுக்குச் சிரிப்பும் அழுகையும் மாறி மாறி வந்தன. சிந் தனையின் கோரப்பிடியில் இருந்து தப்புவதற்காக அவன் கண்களை இறுக மூடிக் கொண்டு தூங்க முயற்சித்தான். 

திரும்பவும் அவன் கண்விழித்தபோது பக்கத்தில் பெரிய ஆரவாரமாக இருந்தது. அவன் மணலைத் தட்டிக்கொண்டு எழுந்து பார்த்த பொழுது பல மீனவர்கள் ஒன்று சேர்ந்து வலையை இழுத்துக்கொண்டிருந்தனர். ரகு அவர்கள் அண்மையில் சென்று நின்று கொண்டான். அவர் களுக்கு உதவுவதற்கு அவன் கால்களும் கைகளும் துடித்த போதும் அவன் பயத்தில் எந்த உதவியுஞ் செய்ய முற்பட வில்லை. அப்போது அந்த மீனவர்களில் ஒருவர் அவன் பக்கந் திரும்பி ஏன் தம்பி அப்படியே நிற்கிறாய்…. கொஞ்சம் உதவி செய்யன்…. அந்த வலையில் பிடித்து எங்களுடன் சேர்ந்து இழு தம்பி ‘ என்றதும் அவர் கூறுவதற் காகவே காத்திருந்தவன் போல் தன் வேட்டியை முழங் கால்வரை தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு வலையைப் பிடித்து அவர்களுடன் சேர்ந்து ஏலையா போட்டபடி இழுக்கத் தொடங்கினான். இரவு முழுவதும் துடுப்பு வலித்த வலி இடையிடையே அவனைத் துன்புறுத்தியபோதும் அதைப் பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் வலை இழுத்த ரகு வைக் கண்டு மற்றவர்களும் பெரிய சத்தத்துடன் இழுக்கத் தொடங்கினர். அப்பாடா! ஒரு படியாக வலை இழுத்து முடிந்தது. அங்கு ரகுவின் அதிர்ஷ்டமோ அல்லது அவர்கள் அதிர்ஷ்டமோ என்றுமில்லாதபடி நிறையக் கீரைமீன் பட் டிருப்பதாக அவர்கள் பேச்சில் இருந்து ரகு புரிந்துகொண் டான். எப்படியோ தன்னால் அவர்களுக்கு உதவ முடிந் ததே என்ற திருப்தியில் ரகு மெளனமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அப்போது தம்பி…தம்பி என்ற குரல் கேட்டுத் திரும்பினான். ஆரம்பத்தில் அவனிடம் உதவி கேட்ட அதே நபர் அவனை அழைத்துக்கொண்டிருந் தார். அவ்விடத்தில் நின்றபடியே அவன் அவரைப் பார்க்க அவர் கை நிறைந்த மீனுடன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். இரண்டு கரங்களிலும் நிறைந்து வழிந்த அந்த மீனை அவர் அவனிடம் நீட்டியபோது அவன் திகைத்துப்போய் இதென்ன ஐயா…… இதெல்லாம் எதற்கு’ என்றான். மற்றவர்கள் தாங்களாகவே வந்து வலையிழுத்துவிட்டுக் கூலிக்கு மீன் தரும்படி சண்டை போடும் இந்த நாட்களில் நாங்கள் கூப்பிட்டதற்காக உதவிப் போட்டு நாங்கள் மனமுவந்து தரும் மீனைக்கூட வேண்டாம் என்று சொல்லும் நீ யாரப்பா. இந்தா இதைக் கொண்டு போய் வீட்டில் கொடுத்து நன்றாகச் சமைத்துச் சாப்பிடு. முடிந்தால் நாளைக்கும் இந்த நேரத்திற்கு வா’ என்று அந்த மனிதர் கூறியதும் மறுவார்த்தைக்கு இடமின்றி அவர் கொடுத்த அவ்வளவு மீனையும் ரகு தன் கையை நீட்டிப் பெற்றுக்கொண்டு ஒரு மறைவான இடத்திற் சென்று அந்த மீனையெல்லாம் மணலில் பரப்பி விட்டுப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். எந்தத் தொழில் செய்வதற்காகத் தன் காதலை இழக்க நேரிட்டதோ அதே தொழில் அவனைத் துரத்தி வந்து கைகொடுத்ததை எண்ணித் தனக்குள்ளாகவே சிரித்துக்கொள்கிறான் அவன். 

அந்த மணற் பரப்பில் கிடந்த அத்தனை மீன்களும் தன்னைப் பார்த்து நகைப்பது போன்றதோர் பிரமையில் அவன் அவற்றையே பார்த்த படியிருந்தான். என்ன தம்பி மீன் விலைக்கா …? அவ்வழியே சென்ற ஒரு வயோதிப மாதின் குரல் கேட்டு நிமிர்ந்தான். அந்தக் கேள்வி அவனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. ‘ஆம்’ என்பது போல் தலையை மட்டும் அசைத்துவிட்டு மீண்டுந் தலையைக் குனிந்து கொள்கிறான் அவன். முழு மீனும் என்ன விலை தம்பி….? அந்தப் பெண்ணிடம் இருந்து வந்த அடுத்த வினாவுக்கு ‘இரண்டு ரூபாய் ‘ என்று பதில் அளிக்கிறான். மறு வார்த்தையின்றி அந்தப் பெண் தன் மடியில் இருந்த பணத்தில் இரண்டு ரூபாயை இழுத்துக் கொடுத்துவிட்டு அவ்வளவு மீனையும் பெற்றுக்கொண்டு செல்கிறாள். அந்த இரண்டு ரூபா பணத்தை எடுத்துப் பலமுறை தன் கண்களில் ஒற்றிவிட்டு அவ்விடத்தைவிட்டு எழுந்து நடக்கிறான் ரகு. அவன் மனம் காளியம்மனை வாழ்த்திக் கொள்கிறது. வந்த வழியே நடந்து சென்று அவன் காளிகோயிலை அடையும்போது நன்றாக இருட்டி விடுகிறது. 

கோயிலில் தீபாலங்காரங்கள் நடைபெறுவதைக் கண்ட ரகு அந்தக் குழாயடியில் சென்று திரும்பவும் முகம் கை கால் கழுவிக்கொண்டு முன்கடையில் அந்த இரண்டு ரூபா பணத்தை மாற்றி இருபது சதத்திற்கு இரண்டு தட்டுக் கற்பூரம் வாங்கிவந்து கோயில் முன்றிலில் கொளுத்தி அம் கோயில் பூசை மனைத் தன் மனதார வணங்குகிறான். முடிந்ததும் அவன் பக்கத்துக் கடைக்குச் சென்று பணத்திற் கேற்றதாக ஏதோ சாப்பிட்டுவிட்டு முற்ற வெளியில் இருந்த ஆசனம் ஒன்றில் சிறிது நேரம் இருந்துவிட்டுத் திரும்ப வும் காளிகோயிலுக்குச் சென்று அந்த மண்டபத்தின் ஓர் ஓரத்தில் படுத்துக்கொள்கிறான். மாரிக்காலமாக இருந்த தால் சீமெந்து நிலம் அவனுக்குப் பனிக்கட்டி போலக் குளிர்கிறது. அந்தக் கோயிலின் நான்குபுறமும் திறந்த வெளியாக இருந்ததால் அடிக்காற்று அவனுக்கு உதறல் எடுக்க வைக்கிறது. அவனுடன் கூட அங்கே படுத்திருந்த இரண்டொருவரிடம் படுக்கப் பாயும் போர்வையும் இருந் தது. ரகுவால் படுக்கமுடியவில்லை. குளிரில் நடுநடுங்கிய படி அவன் எழுந்து கூனிக்குறுகி அமர்ந்து கொண்டபோது என்ன தம்பி.. ? இந்த இடத்துக்குப் புதிய ஆள்போல் இருக்கு… ஏன் . . . . பழைய வேட்டிகீட்டி இல்லையாப்பா போர்வையில்லாமல் இந்தக் குளிரில் எப்படிப் படுக்கப்போகி றாய் என்று பக்கத்தில் படுத்திருந்த ஒரு பெரியவர் கேட்க 

“என்னிடம் ஒன்றுமே யில்லையப்பா..” என்று விரக்தியுடன் சுருக்கமாகப் பதில் அளித்துவிட்டுத் தன்னை இந்தக் கொடுமைக்கு ஆளாக்கிய விதியை நொந்து கொண்டான். “உம்….நம்மைப்போலப் பரதேசி என்று சொல்லு… உன்னைப் பார்க்கப் பாவமாகக் கிடக்கு இந்தா இதில் ஒன்றைவிரித்து மற்றதைப்போர்த்திக்கொண்டு படப்பா’ என்று கூறியபடி அந்தப் பெரியவர் தன் பக்கத்தில் இருந்த துணி மூட்டையில் இருந்து இரண்டு பழசுகளை எறிந்தபோது அந்தப் பெரியவர் அவனுக்கு மனித உருவில் வந்த கடவுளாகவே தோன்றினார். 

பெரியவர் கூறியபடியே ரகு அதில் ஒன்றை விரித்து மற்றதைப் போர்த்துக்கொண்டு படுத்தான். அதன் பின்பு அவர்கள் இருவரும் பலநாட்கள் பழகியவர்கள் போலக் குசலம் விசாரித்துக்கொண்டனர். ரகு தான் ஓர் அநாதை யென்றும் தன் பெயர் ராமு என்றும் அறிமுகப்படுத்திக் கொண்ட அதே வேளையில் அந்தப் பெரியவர் ஒரு காலத் தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்தவர் என்றும் ஏதோ ஒரு வியாபாரத்தில் பணமெல்லாந் தொலைந்து கெட்டழிந்து பின்பு தன்னை யாருந் தேடுவதில்லையென்றும் தனக்கிருந்த ஒரே ஒரு மகன் கொழும்பில் நல்ல நிலையில் இருப்பதாகக் கேள்விப்பட்டதாகவும் தான் பிச்சையெடுத்துத்தான் தன் வாழ்நாளைக் கழிப்பதாகவும் கூறியபோது ரகுவின் இதயம் இவருக்காக வேதனைப்பட்டது. சின்னையாவின் இரண்டு பிள்ளைகளும் இதுவரை திரும்பியிருக்காவிட்டால் ஒரு வேளை அவருக்கும் இந்தக் கெதிதான் ஏற்படுமோ என்று அவனால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

தான் உயிருடன் தப்பிய பின்னும் அவர்களைப்பற்றிய அக்கறையின்றி இப்படி ஒரு பிச்சைக்காரனைப்போல் பிறி தொரு ஊரில் வாழ்க்கை நடத்துவது பெரிய துரோகமாகப் பட்டது அவனுக்கு. ஆயினும் அவன் தன் ஊருக்குச் சென்று நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதைவிட இப்படி ஊர் பெயர் தெரியாத இடத்தில் ஓட்டாண்டியாகக் காலங்கழிப்பது எவ்வளவோ தேவலை என நினைத்துக் கொண்டான். வல்வைக்குத் திரும்பிப் போக நேர்ந்தால் நிச்சயமாக. அவனால் உமாவைப் பார்க்காமல் இருக்கமுடியாது. அவ ளும் பார்க்காமல் இருக்கமாட்டாள். அதனால் பல அநர்த்தங்கள் விளையலாம். பல குடும்பங்கள் நாசமடை வது ஒன்றும் ஆபத்தான காரியமல்ல என்று எண்ணினான். அத்துடன் இதுவரை வல்வையில் அவன் கடலோடு கடலாக மறைந்துவிட்டான் என்று நினைத்துத் துக்கங் கொண் டாடியிருப்பார்கள். இந்தச் செய்தி கண்டிப்பாக உமா வுக்கும் எட்டியிருக்கும். எ எஞ்சினியர் ஏகாம்பரத்தின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருந்திருக்காது. எனது மரணத் தில் அவரது மகிழ்ச்சியும் உமாவின் நல்வாழ்வும் இருக்குமாக இருந்தால் அவர்களுக்காக ஒருதரமல்ல நான் இன்னும் பலதரம் மரணமடையச் சித்தமாக இருக்கிறேன். உமா வாழவேண்டும். ஆமாம்! என் உமா வாழ வேண்டும் ! என்று நினைத்தபடியே கண்ணயர்ந்தான் ரகு. 

8ஆம் அத்தியாயம் 

அடுத்த நாள் புலருவதற்கு முன்பே ரகு எழுந்து விட்டான். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அங்கே அவனோடு கூடப் படுத்திருந்த மற்றவர்கள் நிம்மதியாகக் குறட்டையொலியுடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். அவர்களைக் குழப்ப மனமில்லாத நிலையில் சில மணி நேரம் எழுந்து உட்கார்ந்துவிட்டுத் திரும்பவும் படுத்துக் கொண்டான் அவன். அன்றையப் பொழுது குருவிகளின் ரீங் கார இன்னிசையுடன் புலர்ந்தபோது பிள்ளையார் கோயில் மணி டாங் டாங் என ஒலித்தது. அந்த மணியோசை கேட்டு ரகு எழுந்த போது முதல்நாள் இரவு அவனுக்குப் படுக்கையும் போர்வையும் உதவிய பெரியவரும் எழுந்து கொண்டார். இருவரும் பேசிக்கொண்டே குழாயடிக்குச் சென்று முகங்கைகால் கழுவிக்கொண்டு பிள்ளையார் கோயி லுக்குப் பூசை காணச் சென்றனர். பூசை முடிந்ததும் ரகு அழைத்ததன் பேரில் அவனுடன் சேர்ந்து அந்தப் பெரியவ வரும் தேநீர் அருந்தக் கடைக்குச் சென்றார். அவருக்காகிய பணத்தையும் ரகுவே முன்வந்து கொடுத்தபோது அந்தப் பெரியவர் அவனை நன்றியுடன் பார்த்து நீ என் பிள்ளையை விட நல்லவனப்பா என்று வாழ்த்தியபோது ரகுவின் கண்கள் பனித்தன. 

“தாய் தந்தையற்ற எனக்கு நீங்கள் கூட ஒரு அப்பா மாதிரிதான். இன்று முழுவதும் நீங்கள் பேசாமல் கோயில் மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும். நான் இருக்கும் வரை இனி உங்களுக்குச் சாப்பாடு போடுவது என் கடமை ஐயா நீங்கள் சென்று ஓய்வெடுங்கள். நான் மத்தி யானச் சாப்பாட்டுடன் வந்து பார்க்கின்றேன் ” என்று கூறிவிட்டுத் தெருவில் இறங்கிக் கால் போன திக்கில் நடந் தான் ரகு. அந்தப் பெரியவரை அவன் சின்னையாவின் வடிவத்திற் கண்டான். சின்னையாவுக்குச் செய்ய முடியாத உதவியை அந்தப் பெரியவருக்குச் செய்வதில் அவனுக்கொரு நிம்மதி. அதனால் அந்தப் பெரியவருக்காக அவன் எங்கா வது வேலை தேடும் நோக்கத்தோடு நடந்தான். 

அவன் கால்கள் அவனை முதல் நாள் இட்டுச் சென்ற கடற்கரைக்கே இழுத்துச் சென்றன. முதல் நாள் வலை இழுத்த இடம் வெற்றிடமாக இருக்கவே அவன் கடற் கரையோரமாகச் சிறிது தூரம் நடந்தபோது சற்றுத் தூரத் தில் ஒரு வள்ளம் வருவது தெரிந்தது. அவன் அந்த வள்ளத் தின் வரவையே எதிர்பார்த்து நின்று வள்ளம் கரையை அடைந்ததும் அதை மணல்மேட்டில் ஏற்றுவதற்கு வேண்டிய ஒத்தாசை செய்ய உதவி செய்தான். 

அந்த வள்ளம் நிறைய சூரன் மீன் பட்டிருந்ததால் அன்று அந்த வள்ளத்தைக் கரையேற்ற உதவி செய்த அனைவருக்கும் தலைக்கு இரண்டு சூரன் மீன் கிடைத்தது. ரகு அதைப் பெற்றுக்கொண்டு சென்ற வழியில் சூட் அணிந்த இளைஞன் அதை மூன்று ரூபாய் கொடுத்து ரகுவிடம் இருந்து பெற்றுக்கொண்டான். அன்றையப் பாட்டுக்கு அது போதுமானதாக இருக்கவே ரகு வந்த வழியே திரும்பி நடந்தான். அன்று அந்தப் பெரியவரும் அவனும் வயிறு புடைக்க உண்டனர். பெரியவர் அவனை வாயார வாழ்த்தியபோது ரகு சின்னையாவை நினைத் தான். இப்படியாக ரகு இரு வாரத்தைக் கடத்தினான். அதற்கு மேலும் அப்படி இழிவாக வாழ்வதை அவன் விரும்ப வில்லை. ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்ற சிந்தனையில் அவன் கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்தான். அக்கம் பக்கம் மற்றவர்கள் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். இனிமேல் என்ன செய்வது என்று தலையைப் போட்டு அவன் உடைத்துக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கோயில் குருக்கள் அவன் பக்கத் தில் வந்து நின்று அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். 

ஆகாயத்தில் அரைச்சந்திரன் பவனி வந்து கொண் கடிருந்ததால் சுற்றுப்புறமெங்கும் பால் போன்ற நிலவு எறித் துக்கொண்டிருந்தது. அதனால் ஒருவர் முகத்தை ஒருவர் நன்றாகக் கூர்ந்து பார்க்கக் கூடியதாக இருந்தது. ரகுவும் தன்னை வெறித்துப் பார்த்த குருக்களை முறைத்துப் பார்த்துவிட்டு நிலத்தில் தன் பார்வையைப் பதித்துக் கொண் டான். “என்னடா பெரிய சண்டியனைப் போல் முறைக் கிறாய். இந்தக் கோயில் வர வர கள்ளக் கூட்டத்துக்கு உறைவிடமாகப் போகிறது. இரவு கோயிலில் இருந்த ஒரு குத்துவிளக்கைக் காணாதபோதே நினைத்தேன் இந்தப் பர தேசிக் கூட்டத்தில் ஒரு புதுப்பயல் சேர்ந்திருக்கிறான். அவன்தான் திருடியிருக்க வேண்டும் என்று, அது வீண் போகவில்லை. இப்போது நாளைய சாப்பாட்டுக்கு என்ன திருடலாம் என்று சிந்திக்கிறா யாக்கும்.. ? அதுதான் அந்தப் பெரியவரையும் உன் கைக்குள் போடப் பார்க் கிறாய், சீச்சீ இந்தக் கள்ளக் கூட்டத்தை அப்புறப் படுத்தினால்தான் இந்தக் கோயில் உருப்படும். திருட்டுப் பசங்கள்….! 

அத்தனை நேரமும் பொறுமையுடன் கேட்டுக்கொண் டிருந்த ரகு குருக்கள் வரம்பு மீறிப் பேசியபோது தன் பொறுமையை இழந்தான். “என்ன ஐயா நீங்கள் வாய்க்கு வந்தபடி பேசித் தள்ளுகிறீர்கள். கோயில் குருக்கள் என்று மரியாதை கொடுக்கப் போனால் நீங்கள் என்னைத் திருட னாக முடிவுகட்டி விட்டீர்கள். நீங்கள் சொன்னபடியே: திருட்டுத்தொழில் செய்திருந்தால் இந்தக் கோயில் மண்ட பத்தில் படுத்துக் குளிரிலும் பனியிலும் நடுங்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது. அந்தத் தொழில் கேவல மானது என்ற ஒரேயொரு காரணத்திற்காகத்தான் நான் உடல் வருத்தி உழைத்து ஒரு நேர உணவுடன் காலந்தள்ளி’ வருகிறேன் ஐயா…. என் உயிர் போவதாக இருந்தாலுங் கூடத் திருட்டுத்தொழில் செய்ய மாட்டேன் என்னை நம் புங்கள். நான் நல்லாய் இருந்தவன். ஏதோ விதி வசத்தால் இப்படியாகிவிட்டேன். இன்னுமொரு முறைக்கு என்னைத். திருடன் என்று மட்டும் கூறிவிடாதீர்கள்…” என்று குருக்களுக்கு ஒரு குட்டிப் பிரசங்கமே செய்த போது “டேய் எனக்கு நீ பிரசங்கமா செய்கிறாய். உங்கள் எல்லோரையும் இந்தக் கோயிலைவிட்டுக் கலைத்துப் போட்டுத் தான் நான் மறு வேலை பார்க்கிறது. பாவம் என்று கொஞ்சம் இடங்கொடுக்கப் போனால் அவன் என்னையே தட்டிப் பேச ஆரம்பித்துவிட்டான். உம் எழுந்திரு… நீ முதல்ல இந்த இடத்தைவிட்டுப் போ…. அப்புறம் நான் மற்றவர்களைப் பார்த்துக் கொள்கிறேன்..உம்.. போகமாட்டாயாக்கும்.அப்ப போலீசைத்தான் கூப்பிட வேண்டுமோ..” 

குருக்களின் கோபம் உச்சநிலையை அடைந்தபோது” அவரது பொறுமையை அதற்கு மேலும் சோதிக்க விரும்பாத ரகு “உங்களுக்கு அந்தச் சிரமம் எல்லாம் வைக்கவிரும்ப வில்லை. நானாகவே போய் விடுகிறேன். நான் நேற்று வந்தவன் ஐயா…. ஆனால் இவர்கள்! ஆமாம், இங்கே படுத்துத் தூங்குபவர்கள் இந்தக் கோயிலையே தங்கள் உறைவிடமாக நம்பி வாழ்பவர்கள் அதனால் என்னால் அவர்களுக்கு வீண் தொல்லை உண்டாக்க வேண்டாம். நான் போய்விடுகிறேன். அவர்களைத் தயவு செய்து ஒன்றுஞ் செய்துவிடாதீர்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டே ரகு அந்த இடத்தைவிட்டு நகரத் தொடங் கினான். திருட்டுப்பயல் போலீஸ் என்ற பெயர் கேட்டதும் பயந்து போய் ஓட்டம் பிடிக்கிறான். என்று குருக்கள் கூறுவது அவன் காதில் தெளிவாகக் கேட்கிறது. 

ரகுவின் உள்ளம் வேதனையால் துடித்துவிடுகிறது. எங்காவது ஆற்றிலோ குளத்திலோ போய் விழுந்து அல்லது நாக்கைப் பிடுங்கிக்கொண்டு இறந்துவிட்டால் தேவலை போல் இருக்கிறது. அவன் செல்லுமிடமெல்லாம் துரஷ்ட மும் அவனைத் துரத்திக் கொண்டே வந்தது. 

திருடன் என்ற பட்டம் பெற்ற பின்பு இனிமேலும் அந்த ஊரில் வாழ்வது மரியாதைக் குறைவு என்ற எண்ணத் தில் ஏதோ ஒரு திடமான முடிவுக்கு வந்தவனாகக் கடற் கரையை நோக்கி நடந்தான். கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்வது என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான். அவன் வாழ்க்கையில் ஒளிவிளக்காகக் கலங்கரை விளக்கமாக இருந்த உமாவையே இழந்தபின் இப்படி ரோசங்கெட்டு ஒரு வாழ்க்கை வாழவேண்டுமா என்ற விரக்தி மனப் பான்மை அவன் இதயத்தைக் கல்லாக்கியது. 

உமா மட்டும் அவனுக்குக் கிடைப்பாள் என்ற நம்பிக்கை இருந்திருந்தால் அவன் எந்த அவமானத்தையுந் தாங்கிக் கொண்டு வாழத் தயாராக இருந்திருப்பான். ஆனால், இனி அவன் யாருக்காக வாழவேண்டும். எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வாழ முயற்சிக்க வேண்டும்..? இனி அவனைப் பொறுத்தவரை வாழ்வும் சாவும் ஒன்றுதான். 

அவன் கடற்கரையை அடைந்து விட்டான். கடந்த ஒரு வாரமாக நடந்து நடந்து அவனுக்குத் திருகோண மலையின் மூலை முடுக்குகள் எல்லாம் பாடமாகிவிட்டன. மூன்று முறை அவன் கோணேசர் ஆலயத்துக்குச் சென் றுள்ளான். கோணேசர் மலையில் இருந்து கடலுக்குள் குதித்தால் கஷ்டமில்லாமல் மரண தேவதையை அணைத் துக்கொள்ளலாம் என்று அவனுக்குத் தெரியும். ஆயினும் புனிதமான ஒரு கோயில் ஸ்தலத்தைக் களங்கப்படுத்த. அவன் துளிகூட விரும்பவில்லை. வாழும்போதுதான் அவனால் ஒரு நல்ல காரியத்தைச் செய்யமுடியாவிட்டாலும் கூடக் கெட்ட காரியம் ஒன்றைச் செய்யாமல் இருப்போம் என்ற எண்ணத்தோடு வழக்கமாக அவன் அமர்ந்து கொள் ளும் மணல் மேட்டில் நின்றபடியே கடலைப் பார்த்தான். அது முன்னிலவுக் காலமாக இருந்ததால் சந்திரன் சிறுகச் சிறுகத் தன் ஒளியைக் கொண்டபோது எங்கும் காரிருள் சூழ்ந்துவந்தது. அத்துடன் மழைக்காலமாக இருந்ததால் விண்மீன்கள் ஒன்றுகூட இல்லால் வானம் மப்பும் மந்தார முமாக இருந்தது. 

கடல் கோரமாகச் சத்தஞ் செய்து அலைகலை அள்ளி’ வீசிக் கொண்டிருந்தது. அந்த அலைகள் கோணேசர் ஆலயத்தின் அடிவாரத்தைத் தழுவிக் கொண்டு வரும் அழகை அவன் பகல் வேளைகளில் நின்று பார்த்திருக்கிறான். குளித்து திருக்கிறான். குரைகடலோரம் நித்திலங் கொழிக்கும் கோண மாமலை யமர்ந்தாரே ‘ என்ற சம்பந்தரின் கோணேஸ்வரப் பதிகத்தைப் பலமுறை இந்தக் கடற்கரை யோரத்தில் தனிமையாக நின்று பாடிப் பரவசமடைந்திருக் கிறான். அந்தக் கோணேசர் ஆலயம் மலை உச்சியில் பல வெளிச்சங்களோடு கெம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அவன் கைகள் அந்த ஸ்தலத்தை நோக்கிப் பக்தியுடன் சிரசில் குவிந்து கொள்கின்றன. 

‘கோணேசா காளித்தாயையும் உன்னையும் நம்பித் தான் இந்த ஊரில் கடந்த இரண்டு மூன்று வாரங்கள் காலந் தள்ளினேன். நீங்களே எனக்குத் திருட்டுப்பட்டம் சூட்டியபின்பு நான் எதற்காக வாழவேண்டும் அப்பனே.. இதோ நீ அளித்த பெரிய இயற்கைக் கொடை மக்கள் துன்பத்தின் எல்லையை அடையும்போது தன்மடி மீது என்னை அரவணைத்துக் கொள்ளும் பரந்த சமுத்திரம் அழைத்துக்கொள்ள ஆரவாரத்துடன் தயாராகிக் கொள் கிறது. தற்கொலை பாதகமான செயல்; கோழைகளின் கடைசி ஆயுதம் என்று தெரியும். ஆயினும் எனக்கு வேறு வழி….? பிறந்த ஊரும் புகுந்த ஊரும் என்னை விரட்டிக் கலைத்த பின் எனக்கு வேறு யார் தஞ்சம் அருளப்போகி றார்கள். அதனால்தான் இந்தக் கேவலமான முடிவுக்கு வந்தேன். இந்த வகையிலாவது எனக்கு நிம்மதி கிட்ட அருள் செய் இறைவா. என்னை மன்னித்துவிடு என்று மூடிய கண்களுடனும் கூப்பிய கரங்களுடனும் அவன் வணங்கிவிட்டு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு இரண்டடிகள் முன் வைத்து நடக்க எத்தனித்தபோது அந்த இருளில் எங் கிருந்தோ ஓடி வந்த ஒரு உருவம் கடலை நோக்கி வேக மாகச் செல்வது அதன் அசைவாட்டத்தில் இருந்து அவனுக் குத் தெளிவாகப் புரிந்தது. ஒருவேளை பேய் பிசாசாக இருக் குமோ என்றுகூட எண்ணத் தோன்றியது அவனுக்கு. ஆயினும் அவற்றைக் கண்டு பயப்படும் நிலையைக் கடந் திருந்தான் அவன். அதனால் அந்த உருவத்தின் செயல் களையே ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினான். 

கடவுளே இந்த ஊரில் தற்கொலை செய்து கொள் ளக்கூட நீ தடைவிதிக்கிறாயா..? என் மனதை மரணத் திற்குப் பக்குவப்படுத்திய பின் எதற்காக இப்படியொரு குழப்பத்தை உண்டுபடுத்தி என் மனதைச் சபலமடையச் செய்கிறாய்..? என்று அவன் சிந்தித்துக்கொண்டிருந்த போதே வந்த உருவம் கடலைக் கிட்டிவிட்டது. கரையில் நின்றபடியே அது குனிந்து ஏதோ செய்வது அவன் கூரிய கண்களுக்குத் தெரிந்தது. வல்வெட்டித் துறைபக்கம் இரவில் இருளோடு இருளாக இப்படித்தான் கள்ளக்கடத்தல் செய் வார்கள் என அவன் கேள்விப் பட்டிருக்கிறான். ஒருவேளை அப்படி ஏதாவது செய்யும் நோக்கத்துடன் வந்த நபராக இருக்குமோ என்று மிகவும் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கினான். இருளில் ஆணோ பெண்ணோ என்று அவனால், கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவன் நின்று கொண்டிருந்தபோது அந்த உருவம் கடலுக்குள் இறங்கி நடக்கத் தொடங்கியது. 

அதற்கு மேல் அவன் பொறுமையிழந்து அந்த உரு வத்தைப் பின் தொடர்ந்து கடலை நோக்கி ஓடினான். தன்னைப் போல் விரக்தியடைந்த நிலையில் யாராவது தற்கொலை செய்ய வந்திருக்கலாம் என நினைத்தபோது அவன் உடல் பதறியது. அவன் கடலுக்குள் அந்த உருவத்தின் அண்மையில் வந்துவிட்டான். அவன் வந்த வேகத்தில் தண்ணீர் சலசலத்தபோது யாரோ தன்னை நோக்கி வருவதை உணர்ந்த அந்த உருவம் கண்ணை மூடிக் கொண்டு கடலுக்குள் ஓடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ரகுவும் ஓடினான். அப்போது திடீர் என எழும்பிய அலையொன்றில் அந்த உருவம் மறைந்தது. இருந்தும் ரகு மனந்தளரவில்லை. ஐந்து வயதிலிருந்து கடந்த இருபது வருடங்களாகத் தான் நீந்தி விளையாடிய கடல் தன்னைக் கைவிடாது என்ற நம்பிக்கையில் நீரோடு நீராக மூழ்கி சுழியோடத் தொடங்கினான். சில மணி நேரப் போராட்டத்தின் பின் அவன் கைகளில் ஏதோ கனமாகத் தட்டுப் பட்ட போது அவன் அந்தப் பொருளைக் கெட்டியாகப் பிடித்து இழுத்துத் தன்னுடன் அணைத்துக் கொண்டு நீரின் மட்டத்திற்கு வந்து நீந்தத்தொடங்கினான். 

ஒருமணி நேரம் கடலுடன் போராடியதால் ஏற்பட்ட களைப்பு அவனை மிகவும் வேகமாக நீந்த வைத்தது. எப்படியாவது கரையை அடைந்துவிட வேண்டும். என்ற, வெறியில் அவன் நீந்தத் தொடங்கினான். முடிந்தால் அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும் அல்லது இருவருமே கட லுக்குள் சங்கமமாகி விடவேண்டும் என்ற விரக்தி மனப் யான்மையில் நீந்திக் கொண்டிருந்தான் அவன். 

ஒருபடியாக மரணப் போராட்டத்தின் பின் கரை யேறிய அவன் அந்த உருவத்தை மணல் மேட்டில் மெது வாகக் கிடத்திவிட்டுத் தனக்குத் தெரிந்த முதலுதவி செய்வதில் முனைந்தான். சிறுகச்சிறுக பிரக்ஞை பெற்றுக் கொண்டு வந்த அந்த உருவம் சற்று அசையத் தொடங்கி யதும் அவன் வெற்றிப் புன்னகையுடன் சற்றுத் தள்ளி மணல் தரையில் மல்லாக்காச் சாய்ந்து தன் காலை நீட்டி ஓய்வெடுக்க முனைந்தான். அப்போது அந்த உருவத்திடம் இருந்து கிளம்பிய முனகல் சத்தம் அந்த உயிருக்கு இனி ஆபத்து இல்லை என்ற நம்பிக்கையை அவனுக்குக் கொடுத் துக் கொண்டிருந்தது. தப்பித் தவறிக் கூட யாராவது அந்த இடத்துக்கு வந்துவிடக்கூடாது என உள்ள தெய்வங் களை யெல்லாம் அவன் பிரார்த்தித்துக் கொண்டான். அந்த நேரம் இறைவனின் திருவிளையாடலை நினைத்து அவனால் வாய்விட்டுச் சிரிக்காமலும் இருக்க முடியவில்லை. 

தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற துணிவுடன் வந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ன்னோர் உயிரைக் காப்பாற்ற வேண்டி வரும் என்று அவன் கற்பனைகூடச் செய்து பார்க்கவில்லை. இப்படித் திடும் என ஏற்படும் அற்புதமான செயல்களால்தான் இறைவன் ஒருவன் இன்னும் இருக்கிறான் என்ற நம்பிக்கை மக்களுக்கு அற்றுப்போகாமல் இருக்கிறது என்று எண்ணி யவனாய் அந்த உருவத்தின் அருகிற் சென்று மிகவும், நெருக்கமாய் நின்று பார்த்தான். அதை விசித்திரமென்று” சொல்வதா அல்லது விநோதம் என்று சொல்வதா என்று சிந்திக்கச் சில நிமிட நேரம் பிடித்தது அவனுக்கு. 

ஒரு பெண்ணை இழக்க ஏற்பட்டதால் தற்கொலை செய்யத் துணிந்த அவன் இன்று ஒரு பெண்ணை வாழ வைப்பதற்காக அந்த எண்ணத்தையே மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தான். ஆமாம் ! அங்கே அவன் முன் மணல்மேட்டில் கிடந்தவள் ஒரு பெண். ஆனால்- ஆடை அவிழ்ந்து அலங்கோலமான நிலையில் இல்லாமல் ஆடை சிறிதுகூட நெகிழ்ந்து போகாதபடி அவள் கிடந்த நிலையைப் பார்க்க நிச்சயமாக இந்தப் பெண் தற்கொலைக்கு ஆயத்தமாக வந்திருக்கிறாள் என்பது அவனுக்கு மிகவும் சுலபமாகப் புரிந்தது. அவன் கண் மூடிப் படுத்திருந்த அந்தப் பெண் உடலில் சூடு வந்து விட்டதா என்று பார்ப்பதற்காகத் தன் கரத்தை அவள் நெற்றியில் வைத்தபோது அதுவரைபிணம் போலக் கிடந்த அந்தப் பெண் எழுந்து அமர்ந்து அவனைப் பார்ப்பது அந்த இருளில்கூட அவனுக்குத் தெரிந்தது. 

நீ யார்… எதற்காக என்னைக் காப்பாற்றினாய்? இப்போது நீ என்னை என்ன செய்யப் போகிறாய்’ என்று அந்தப் பெண் கேட்டுவிட்டு வாய்விட்டுக் கதறியழத். தொடங்க ரகு பேசச் சக்தியற்று நடைப்பிணமாக நின்றான்!” 

9ஆம் அத்தியாயம் 

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என அவன் கற்றிருந்த பழமொழி அவனைப் பொறுத்த வரையில் அன்று உண்மையாகிவிட்டது போன்றதோர் பிர மையில் அவன் அந்தப் பெண்ணைப் பார்த்துத் தங்கச்சி என அழைத்தான். அவளது குரலிலும் உடல் கட்டிலும் இருந்து அவள் பருவமடைந்த பதினெட்டு வயது மங்கை. யாகத்தால் இருப்பாள் என்றொரு யூகம் அவனுக்குத் தோன்றியது. அத்துடன் அவளை எப்படியோ ஒருமுறை சொல்லி அழைத்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் ஏற் பட்டிருந்தது. 

தன்னைவிட வயோதிப நிலையில் இருந்திருந்தால் அவளை அவன் ‘ அம்மா’ என்றே மரியாதையாக அழைத் திருப்பான். ஆனால் அவளது வயதையும் இளமையையும் நினைத்துப் பார்த்தபோது அப்படி அழைக்க அவன் பயப்பட்டான். அத்துடன் அவளும் அதை விரும்பியிருக்க மாட்டாள் என்பதும் தெரிந்திருந்தது. அலுவலகத்தில் பல பெண்கள் மத்தியில் வேலை செய்து பழகிய அனுபவம் இருந்தது அவனுக்கு. அத்துடன் தற்போதைய நிலையில் அவள் வேறொன்றும் செய்துவிடாமல் அவளைத் தன் அதி’ காரத்துக்குட்படுத்த விரும்பியதால் அவளுக்குத் தன் அண் ணன் முறையாவதே உசிதமாகப்பட்டது அவனுக்கு. 

‘தங்கச்சி…. என்னை மன்னித்துவிடம்மா . . மனிதத் தன்மை படைத்த எந்தவொரு மனிதனுஞ் செய்யக்கூடிய ஒரு காரியத்தைத்தான் செய்தேன். எனது நிலையில் நீ இருந்திருந்தாற்கூட அதைத்தான் செய்திருப்பாய். அது தான் மனிதத்தன்மையுங்கூட. ஆமாம் ! இவ்வளவு சிறிய வயதில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இள மைப் பருவத்தில் நீ ஏனம்மா சாகத் துணிந்தாய்….? ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில்தான் உன்னைக் காப்பாற்றினேனே தவிர வேறு எந்தக் கெட்ட எண்ணத்துடனும் நான் உன்னைக் காப் பாற்றவில்லை. அத்துடன் உன்னைக் கடலில் தேடித் தூக்கும்வரை நீ ஒரு பெண் என்ற உண்மையே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நீ எனக்கு ஒரு தங்கைபோல் உன்னைக் காப்பாற்றியதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் தெரியுமா….? 

அவன் கேள்வியைத் தொடர்ந்து அந்தப் பெண் பயங் கரமாகச் சிரித்தாள். அவளுக்குப் பைத்தியமோ என்று கூட ரகுவை நினைக்கத் தூண்டியது அந்தச் சிரிப்பு. அவன் எதுவுமே பேசக்கூடிய திராணியற்று நின்றபோது என்னைக் காப்பாற்றியதில் நீங்கள் தற்போது அடைந்திருக்கும் பெரு மகிழ்ச்சி நான் இருக்கும் நிலையை உங்களுக்கு எடுத்துரைத் தால் ஒரு நொடிப்பொழுதில் மறைந்துவிடும். நீங்கள் என்னைக் காப்பாற்றியிருக்கவே கூடாது. மனிதன் கடைசி வரை எவ்வளவு கஷ்டப்பட்டாயினும் வாழத்தான் ஆசைப் படுகிறான், எந்த மனிதனும் சாக ஆசைப்படுவதில்லை. அது மனித இயற்கை. மனிதன் மரணப் படுக்கையிற் கூட நம்பிக்கையில் தான் வாழ்கிறான். வாழ்வுக்கும் சாவுக்கும் அப்படியான ஒரு ஒட்டாத உறவு நிலைத்திருக்கும்போது என்போன்றவர்கள் எதற்காகச் சாக விரும்புகிறார்கள் என்று மட்டும் நீங்கள் சிறிதாவது சிந்தித்துப் பார்த்திருந்தால் நிச்சயம் நீங்கள் என்னைக் காப்பாற்றியே இருக்கமாட் டீர்கள். ஆமாம்! வாழ்க்கையில் துன்பத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டி இனி மரணத்தில்தான் அமைதியைக் காணமுடியும் என்று நான் எவ்வளவோ பிரயாசைப்பட்டு என் திட்டத்தை நிறைவேற்றப்போன சமயம் நீங்கள் என் மனக்கோட்டையையே சிதைத்துவிட்டீர்கள். சரி, என் உயிரைக் காப்பாற்றிவிட்டதில் இவ்வளவு மகிழ்ச்சி கொள்ளும் நீங்கள் என் எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்…? என் எதிர்காலம் முழுவதும் எனக்கு ஒத்தாசையாக இருந்து இப்போது என்னைப் புனிதமான முறையில் ‘தங்கச்சி’ என்றழைத்தீர்களே அந்த உறவு நிலைக்க அண்ணாவாகி என்னை நீங்கள் காப்பாற்றுவீர்களா…? ஆமாம்! இதென்ன பிரமாதம் என்று கூறு வீர்களாக்கும்… ஆனால் நான் மூன்று மாதக் கர்ப்பிணி என்பது தெரிந்தால் என்னைப் போய்க் கடலில் விழத்தான் சொல்வீர்கள். என் வயிற்றில் விளைந்திருப்பது ஒரு அவ மானச் சின்னம் என்று கூறிவிட்டு இம்முறை அவள் அடக்க மாக அழத்தொடங்கியது இடையிடையே வெடித்த விம் மலின்போது தெரிந்தது. 

சற்றுமுன் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்தான் இவ்வளவு நேரமும் பேசினாள் என்ற சந்தேகந் தெளிய ரகுவுக்குப் பலநிமிட நேரஞ் சென்றது. அவள் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவளை அவன் என்ன செய்வது. வயிற்றில் குழந்தையோடு இருக்கும் பெண்ணை அவன் அழைத்துப் போனால் ஊர வர்கள் கண்டபடியெல்லாம் பேசிக்கொள்வார்கள். திருட் டுப்பட்டம் போய் விபசாரப்பட்டமும் தனக்குக் கிடைக்க லாம் என்று சிந்தித்தவன் அவள் கூறியபடியே அவளை மீண்டும் கடலில் போய் விழுந்து உயிரை மாய்த்துக்கொள் களும்படி கூறலாமா என்றுகூட நினைத்தான். கடவுள் தன்னை அதிகமாகச் சோதிப்பதாக எண்ணியபடி அந்தப் பெண்ணைப் பார்த்துத் ‘தங்கச்சி நீ கூறுவது உண்மையா அம்மா ‘ என்று கேட்டான். 

அந்தக் கேள்வி அந்தப் பெண்ணைச் சிரிக்கத் தூண்டியது. அவள் பைத்தியக்காரி போலப் பெரிய சத்தமிட்டுச் சிரித்துவிட்டு பாவம் பயந்து விட்டீர்களாக்கும் ‘யாரும் பயப்பட வேண்டிய விடயந்தானே. ஆனால் உங்கள் வினாதான் என்னை இப்படிச் சிரிக்க வைத்தது. ஒரு பெண்ணுக்கு இப்படியான ஒரு அவமானத்தை விடக் கேவல மாக வேறு எதுவும் நடந்துவிட முடியாது. திருமண மாவதற்கு முன்னே தன் பெண்மையை மாசுபடுத்திப் புனித மான தாய்மைத் தன்மைக்கும் இழிவு தேடித் தரும் என் போன்றவர்களைப் பெண்குலம் மன்னிக்கவே முடியாது. 

“திருமணமாவதற்கு முன்பே நானும் அவசரப்பட்டு என் பெண்மையை இழந்துவிட்டேன். பணத்திற்காகவோ பருவக் கோளாறினாலோ என் பெண்மை போயிருந்தால் நான் அதையிட்டுக் கவலைப்பட்டிருக்கமாட்டேன். ஆனால் நான் பெண்மையை அளவுகடந்த நம்பிக்கையால் இழக்க நேரிட்டது என்பதைக் கூறும் போது ஆண்குலத்தின் மீதே எனக்கு ஆத்திரமாகத்தான் வருகிறது. அந்த ஆண் குலத் தைச் சேர்ந்த ஒருவர்தானே நீங்களும். இளமைப் பரு வத்தவள்; பருவ மங்கை என்ற பூரிப்பில் என்னைக் காப் பாற்றியிருப்பீர்கள். இப்போது வயிற்றில் சுமையோடு இருக்கும் நான் தங்களுக்குப் பெரிய சுமையாகத் தோன்றலாம். 

“எவரும் தீமையைத் தயங்காமல் செய்வார்களே தவிர அதன் பலாபலன்களை அனுபவிக்கத் தயாராக இருக்க மாட்டார்கள். அதற்கு நீங்கள் ஒன்றும் விதிவிலக்கல்லவே. உண்மையை உங்களிடம் இருந்து ஒளிக்க நான் விரும்ப வில்லை. அது பெண்குலத்தின் பலவீனம்…. ஏன் சாபக் கேடு என்றுகூடக் கூறிக்கொள்ளலாம். நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம். என்னை என்பாட்டுக்கே விட்டு விடுங்கள். உங்கள் கண் முன்னிலையில் நான் தற்கொலை செய்து கொள்ளாமல் வேறு எங்காவது சென்று விடு கிறேன் ‘ கூறிவிட்டு அவள் சில நிமிட நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். 

அவள் பேச்சு ரகுவைச் சில நிமிடநேரஞ் சிந்திக்க வைத்தது. ஒரு சில நெறி கெட்ட ஆண்கள் தம் சிற்றின்ப வேட்கையைத் தணித்துக்கொள்ள இப்படியான அப்பாவிப் பெண்களைப் பலியாக்கிவிடுவதால்தான் ஆண்குலமே அவ மதிக்கப்படுகின்றது என்று நினைத்தபோது அவனுக்கு அவளைக் கெடுத்து அந்தப் பரிதாப நிலைக்கு ஆளாக்கிய மனிதன்மேல் கோபங் கோபமாக வந்தது. அவன் மட்டும் அந்த நேரம் ரகுவின் கண்ணிற்பட்டிருந்தால் நிச்சயமாக அவன் கூண்டோடு கைலாயம் சென்றிருப்பான். அந்தப் பெண்ணினது நிலையை ரகு நன்றாகப் புரிந்துகொண்டான். 

உமாவைப் பிரிய நேரிட்ட ஒரு காரணத்திற்காக அவனே தற்கொலை செய்ய முயற்சித்தவன். அவன் ஒரு ஆண்பிள்ளையாக இருந்தபோதும் ஒரு பெண்ணின் பிரிவை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதே நிலையில் அந்த ஆண்மகன் கொடுத்த நம்பிக்கையில் அவனையும் இழந்து தன் பெண்மையையும் பறிகொடுத்த பின் இந்தக் கொடுமையான உலகத்தில் எப்படி உயிர் வாழ்வது. அவளை வாழவைக்கும் அளவுக்கு இன்னும் இந்தப் பாழுஞ் சமூகம் முன்னேறவில்லை என்பது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. 

சில மணித்தியாலயங்களுக்கு முன் வாழ்க்கையில் எந்த விதக் குறிக்கோளும் இல்லாமல் காதலில் தோல்வியடைந்து விட்ட ஒரு காரணத்திற்காகத் தன் உயிரையே போக்கிக் கொள்ள வந்த ரகுவின் தோள்களில் இப்போது ஒரு பெருஞ் சுமை அழுத்துவது போன்ற பிரமை ஏற்பட்டது. ஆம்! அவன் எந்தப் பெண்ணைச் சாவின் எல்லையில் இருந்து காப்பாற்றி னானோ அந்தப் பெண்ணுக்கு வாழ்வளித்து அவள் எதிர் காலத்தைக் கலங்கரை விளக்கமாக்குவது தன் கடமை என உணர்ந்தான். அந்த உணர்வு அவன் உடலில் ஒரு வலுவை” யும் உள்ளத்திற்கு ஒரு தென்பையும் கொடுக்க அசட்டுத் தைரியத்துடன் ‘ தங்கச்சி…. நீ பயப்பட வேண்டாம்….நீ நினைப்பதுபோல நான் ஒரு கோழையல்ல உன்னைக் கைவிட்டுச் செல்ல, இதுவரை எதுவித இலட்சியமுமின்றி வாழ்ந்துவந்த நான் இனி ஒரேயொரு இலட்சியத்திற்காக உயிர் வாழ்வதாகத் தீர்மானித்துவிட்டேன். ஆமாம்! என் தங்கையைக் கூட்டிச்சென்று பாதுகாத்து அவளைக் கெடுத்தவனைக் கண்டுபிடித்து அவனிடம் அவளை ஒப்புவிப்பது அல்லது அவனைப் பழிக்குப் பழி வாங்குவது, இந்த நிமிடத்தில் இருந்து திக்கற்ற நாம் இருவரும் சகோ தரர்கள்….இணைபிரியாத—இறைவனால் ஒன்று சேர்க் கப்பட்ட சகோதரர்கள் தங்கச்சி” என்று அவன் பேசி  முடித்தபோது உணர்ச்சி வேகத்தில் அவன் உடல் பட படத்தது. 

“அண்ணா” முதல் தடவையாக அன்பொழுக உரிமையுடன் அழைத்தாள் அவள். உங்களைப் போன்ற ஒரு சில ஆண்களும் இந்த உலகத்தில் இருப்பதால்தான் ஆண்குலமே இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அன்று இராவணன் செய்த தீமையால் அழிந்த இலங்காபுரிகூட இராமனால்தான் பிழைத்து இன்றும் நிலை பெற்றிருக்கிறது. உங்கள் பெருந்தன்மையை நான் போற்றுகிறேன். உங்களை என் இதயம் நெஞ்சார வாழ்த்துகிறது. ஆயினும் சகோதரி என்ற உரிமையில் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன் அண்ணா. 

“பெண்ணாகப் பிறப்பதும் பாவம்; பெண்ணோடு கூடிப் பிறப்பதும் பாவம் என்று இந்த உலகந் தோன்றிய நாள் முதலாகப் பல அறிஞர்கள் கூறி வந்திருக்கிறார்கள். அந்த வகையில் உங்கள் பேச்சில் இருந்து நீங்கள் அப்படி யான பாவஞ் செய்யவில்லை என்று தெரிகிறது. அப்படி யிருக்கும்போது நீங்கள் எதற்காக வலிந்து ஒரு பாவ மூடையைச் சுமக்க ஆசைப்படுகிறீர்கள். நான் கறைபட்ட வள். சந்திரனில் உள்ள களங்கத்தை எப்படி அகற்ற முடியாதோ அதே போல் என் களங்கத்தையும் நான் உயிர் வாழும்வரை உங்களால் அகற்ற முடியாது. என் பொருட்டு நீங்கள் வீணாகக் கஷ்டப்படவேண்டாம்….’ என்று கூறிய போது அவள் குரல் குமுறியது. 

“தங்கச்சி. . . . தயவு செய்து உன்னை வாழவைக்கும் உரிமையை மட்டும் எனக்குத் தர நீ மறுத்துவிடாதே. அந்த ஒரு நல்ல காரியத்தையாவது நான் செய்வதற்கு எனக்கு அனுமதி கொடு. அதற்காகவாவது நான் உயிர் வாழட்டும். இந்த உயிர் இனி எனக்குச் சொந்தமானது. ஆமாம்! தங்கச்சி நமக்குள் இந்த உறவு ஏற்பட்டதே ஒரு விசித்திரம். என் கதைகூடக் கிட்டத்தட்ட உன் மாதிரிதான். என் உள்ளத்தில் ஏற்பட்ட விரக்தி மனப் பான்மையால் என் உயிரைப் போக்கிக் கொள்ளும் நோக் கத்தோடு இந்தக் கடலை நம்பி வந்த நான் கடைசியில் ஒரு பெண்ணுக்காக உயிர்வாழ வேண்டி ஏற்படும் என்று கனவுகூடக் காணவில்லை. உன்னை உன் காதலன் ஏமாற் றியதால் சாகத் துணிந்தவள் நீ. ஆனால் என்னை எவரும் ஏமாற்றவில்லை. என்னைக் காதலித்தவள் என்னைக் கடைசி வரை ஏமாற்றமாட்டாள் என்ற உண்மை அறிந்து அவளின் நல்வாழ்வுக்காக சாகத் துணிந்தவன் நான். என்னைக் காதலித்துக் கலியாணஞ் செய்துகொள்ள விரும்பியவளின் பெற்றோர் அவளை மறந்து அவளுக்கு நல்வாழ்வு அளிக்கும் படி கோரியதன் விளைவுதான் எனது தற்கொலை முயற்சி என்று அவன் தன் சரித்திரத்தை ஆதியோடு அந்தமாக அவளுக்குக் கூறி வைத்தான். 

அதைக் கேட்ட பின் அவளும் தன் சோகக் கதையை அவனுக்குக் கூறிவைத்தாள். அவள் கூறியதிலிருந்து அவளும் அவனைப் போன்ற ஓர் அநாதை என்றும் தனக்குச் சிற்றன்னையாக வேண்டிய ஒருவளுக்குக் குற்றேவல் செய்து கொடுத்துத் தான் வாழ்ந்ததாகவும் அங்குச் சாப்பிட்டு வந்த இளைஞன் ஒருவனிடம் அன்புகொண்டு அவன் கூறிய போலி வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துத் தன் பெண்மையை இழந்து விட்டதாகவும் அறிய முடிந்தது. அவளிடம் அவனைப்பற்றி மேன்மேலுந் தூண்டிக் கேட்டதன் பேரில் அவள் தான் மூன்று மாதக் கர்ப்பிணியாகிய செய்தியை அவனுக்கு அறிவித்தபோது ஊருக்குச் சென்று பெற்றோரின் அனுமதி பெற்று வந்து அவளை ஏற்றுக்கொள்வதாகக் கூறிச் சென்றவன் திரும்பி வரவேயில்லையாம். இரண்டு மூன்று வாரத்தின் பின் அவனுக்குத் திருமணமாகி இருப்பதாகவும் அதனால் சொந்த ஊருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்ட தாகவும், அதன் பின் தான் அவள் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அறிந்து கொண்டான். அதைக்கூட மிகுந்த சிரமப்பட்டுத்தான் அவளிடம் இருந்து அறிந்து கொண்டான். 

அவ்வளவையும் கூறிய அவள் அவன் ஊரையும் பேரை யும் சொல்ல மறுத்து சந்தர்ப்பம் வரும்போது கூறுவதாக வாக்களித்தாள். 

ரகுவும் அதற்குமேல் அவளை வற்புறுத்தவில்லை. அடுத்து என்ன செய்வது என்பதே அவனுடைய தற் போதைய பிரச்சனையாக இருந்தது. என்ன வந்தாலும் இனிமேல் ஒரு நாள்கூட இந்த ஊரில் தங்குவதில்லை என்று முடிவுகட்டினான். அடுத்த நாள் பொழுது புலர்வதற்குள் எங்காவது சென்றுவிட வேண்டும் என்று எண்ணியபடி அன்றைய மிகுதி இரவுப் பொழுதை எங்கே கழிக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கினான். காளி கோயிலுக்குத் திரும்பப் போவதை அவன் விரும்பவில்லை. அந்த வழி யால்கூடப் போவதை அவன் வெறுத்தான். அந்தப் பெரியவரைக் காண நேர்ந்தால் பாசம் பிரிவைத் தடுத்து விடும் என்ற பயம் இருந்தது. அதற்கு மேலாகத் தற்போது தன் அருகில் தன் பொறுப்பில் ஒரு பெண் இருப்பதையும் அவன் மறக்கவில்லை. 

அவள் திருகோணமலைக்கு அடுத்துள்ள கும்புறுபிட்டி என்ற கிராமவாசியென்பதை அறிந்து கொண்டதில் அவ னுக்கு ஒரு துளி நிம்மதி ஏற்பட்டது. அவள் பேசிய தோரணையில் அவளும் அவனுக்காக வாழத் துணிந்து விட்டாள். ஆகவே அவளுடன் கலந்துரையாடி அன்றைய இரவை எங்காவது ஒரு கோயில் திண்ணையில் படுத்துறங்கி கழித்துவிட்டு விடிய இருவரும் கொழும்புப்பட்டணம் செல் வதாக முடிவு கட்டினர். அதன் மேல் நனைந்த உடை களுடன் குளிரில் உடல் நடுநடுங்க மாற்றி உடுப்பதற்குக் கூட ஒருமுழத் துண்டு கிடைக்காத நிலையில் இருவரும் கடற்கரையைத் தாண்டித் தெருவழியாக நடந்தனர். நேர்ப் பாதையால் நடந்து கொண்டிருந்தபோது முற்றவெளியில் நடுவே இருந்த நகரமண்டபம் ரகுவின் கண்களுக்குக் காட்சியளித்தது. அவன் உள்ளத்திலும் ஒரு நிம்மதி உண்டாகியது. 

அவளையும் அழைத்துக் கொண்டு அவன் வேகமாகத், தெருவைக் கடந்து முற்றவெளிக்குள் இறங்கி நகரமண்ட பத்தை நோக்கி நடந்தான். திறந்தவெளியில் நாலு பக்க மும் இருந்து வீசிய காற்றில் அவள் உடல் நடுங்கிப் பல்லோடு பல் கிட்டியது அவன் காதுகளுக்குக் கேட்டபோது அவனுக்குப்’ பரிதாபமாக இருந்தது. எப்படியும் மாற்றி உடுப்பதற்கு அவளுக்காவது ஒரு நல்ல புடவை வாங்கிக் கொடுக்க வேண் டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாக வலை இழுத்து மீன் விற்று சேகரித்த பணத்தில் மிகுதியைத் தன் மடிக்குள் இருந்து வெளியே எடுத்துக் கைக்குள் வைத்துக் கொண்டான். 

நல்லவேளை மடிக்குள் இறுக்கி முடிந்திருந்தபடியால். கடலில் அது தொலையவில்லை. நகரமண்டபத்தை அண் மித்தபோது அந்த வெளிச்சத்தில் அவன் முதல் முறையாக அவளை உற்றுப் பார்த்தான். அந்த அழகு அவனைச் சொக்க வைத்தது. எவரையும் பைத்தியமாக்கக்கூடிய அற்புதமான அழகுச் சிலையாக ஈரப்புடவையில் பருவத் தின் வளர்ச்சி பொங்கிப் பூரிக்க அவள் நின்றுகொண்டிருந்த காட்சி அவனை என்னவோ செய்தது. அவளிடம் அவன் உமாவைக் கண்டான். இதே நிலையில் அவன் உமாவையும் ஒருமுறை பார்த்து ரசித்திருக்கிறான். அவள் நினைவு நிறையப் பெற்றவனாக அவன் நின்றபோது “என்ன அண்ணா…” என்ற குரல் அவனை இந்த உலகத்துக்கு, மீட்டது. அவன் தன்னைச் சமாளித்துக்கொண்டு கையில் இருந்த பணத்தைக் கணக்குப் பார்ப்பது போல எண்ணத், தொடங்கினான்.

– தொடரும்…

– எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு… (நாவல்), முதற் பதிப்பு: 1993, காந்தளகம், மறவன் புலவு, சாவகச்சேரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *