ஊர்வசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 3,645 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெயர்பெற்ற தூபான் மெயிலில் டில்லியிலிருந்து காசிக்குப் போய்க்கொண்டிருந்தேன். வண்டியில் வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம். ஆனா லும் அத்தனை பிரயாணிகளின் மத்தியில், ஒருவரே என்னுடைய கவனத்தை வசப்படுத்தினார். அவருக்குச் சுமார் முப்பத்தைந்து வயது இருக்கலாம். தேக சக்தியும் மனோசக்தியும் சேர்ந்து வாய்ந்த உருவம். அவர் ஒரு ராஜபுத்திரர் என்று பிறகு அறிந்தேன். அவருடைய முகத்தில் புன் சிரிப்பு எப்பொழுதும் தயாராகக் காத்துக்கொண்டிருந்தது. உலகத்தை வெறுத்தவர் அல்ல. எந்தச் சந் தோஷத்திலும் கலந்துகொள்ளும் சுபாவம். இருந்தாலும் அவருடைய தோற்றத்திலே, கம்பீரமும் பெருந்தன்மையும் மாத்திரமல்ல, ஒன்றுக்கும் அசையாத ஒரு மனஉறுதியும் விளங்கிற்று. “இந்தக் காரியமா? இது என்னுடைய கடமை. என்ன நேர்ந்தாலும் இதைச் செய்துதான் முடிப்பேன். இந்தக் காரியமா? சே! இது இளப்பம் என்ன லாபம் கிடைத்தாலும் இதை நான் செய்ய மாட்டேன் ” என்கிற நிச்சயம் பிரகாசித்த மாதிரி இருந்தது.

நீடித்த பிரயாணத்தின் ஆயாசத்தை ஓட்டுகிற பாவனையில் அவருடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் தொடங்கினேன். இங்கிலீஷ் பாஷையில் அவருக்குச் சொல்பந்தான் பரிசயம். என்னுடைய ஹிந்தி ஞானமோ அதிலும் குறைந்தது. இருந் தாலும் அவருடைய ஸரஸ குணமும் என்னுடைய ஆவலும் சேர்ந்து செய்த உதவியினால், பேச்சும் பிரயாணமும் ஆனந்தமாக இருந்தன. வழியில் தென்படும் ஊர்களைக் குறித்து, புஸ்தகங்களில் கிடைக்காத விநோதமான சரித்திரங்களைச் சொல் லிக்கொண்டு வந்தார். பிரயாக் (அல்லஹாபாத்) ஸ்டேஷனில் வண்டி நின்றது.

“பிரயாகைக்குள் போயிருக்கிறீர்களோ?” என்று கேட்டார்.

“போயிருக்கிறேன். திரிவேணியில் நெடு நேரம் ஸ்நானம் செய்துமிருக்கிறேன். ஆனால் அக்கரைக்குச் சென்று அங்கே சுற்றிப் பார்க்க வில்லையே என்றுதான் என்னுடைய குறை” என்றேன்.

“அங்கே என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

அவருக்குத் தெரியாத ஸ்தல புராணம் எனக்குத் தெரிந்திருந்ததில் எனக்குப் பெருமை. “அங்கே தான் ‘பிரதிஷ்டான’ நகரம் இருந்ததாகச் சமீபத்தில் படித்து அறிந்தேன். புரூரவஸ் முதலான சந்திரவம்சத்து அரசர்கள் அரசாண்ட இடம். அப் பேர்ப்பட்ட இடமே ஒரு புண்ணிய பூமி என்று நான் நினைக்கிறேன்” என்றேன்.

அவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவருடைய முகம் மாத்திரம் சற்று மாறிற்று. அது முதல் அவருடைய புன்னகைகள் முன் போல் அடிக்கடி வரவில்லை. வர வரப் பேச்சும் சுருங்கிற்று. கடைசியில், ஏதோ சிந்தனையில் மூழ்கின வராக, மௌனமாகவே இருந்துவிட்டார். எனக்கு வருத்தம் மேலிட்டது. அவருக்கு விசனகரமான ஞாபகத்தைக் கிளப்பிவிட்டேனே என்று நொந்து கொண்டேன். மொகல்ஸராய் ஸ்டேஷனை அடைந் தோம். நான் இறங்கிக் காசிக்குப் போவதற்கு வண்டி மாற்ற வேண்டிய இடம் அது. அவருடன் விடை பெறாமல் போய்விடுவது எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. மிருதுவாக அவரைத் தட்டினேன்.

“நான் இங்கே பிரிந்து போகவேண்டியிருக் கிறது. உங்களுடைய சம்பாஷணையை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். ஆனால் நான் அலௌகிகமாக ஏதோ பேசி, உங்களுக்கு வருத்தம் உண்டாக்கியதை மாத்திரம் நீங்கள் மறந்துவிட வேண்டும்” என்றேன்.

“நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. எல்லாம் என்னுடைய கர்ம வினை” என்று பெருமூச்சு விட்டார்.

நான் மீண்டும் மன்னிப்புக் கோரினேன்.

“நான்தான் உங்களுடைய மன்னிப்பைக் கேட்க வேண்டும்” என்றார். “சற்று நேரமாக உங்களுடைய வார்த்தைகளைக்கூட நான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்று பயப்படுகிறேன். ஒரு வருஷமாக, எனக்குச் சில சமயங்களில் இம்மாதிரி மனத் தடுமாறுதல் உண்டாகிறது. உங்களுடைய மேல் விலாசத்தைக் கொடுங்கள். எல்லா விவரத்தையும் உங்களுக்கு எழுதுகிறேன். பிறகு உங்களுடைய அபிப்பிராயத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பேன்” என்றார்.

சொன்ன மாதிரியே, சில தினங்களுக்கெல்லாம், அவரிடமிருந்து ஹிந்தியில் ஒரு நீண்ட கடிதம் கிடைத்தது. விஷயத்தைத் தமிழில் வெளிப்படுத்தலாமா என்று எழுதிக் கேட்டேன். தம்முடைய ஊரையும் பெயரையும் வெளியிடாத வரைக்கும், தமக்கு ஆக்ஷேபம் இல்லையென்று தெரிவித்தார். இப்பொழுது ஒரு ஹிந்தி – தமிழ் அகராதியை வைத்துக்கொண்டு, கூடிய மட்டும் சரியாக, அவர் எழுதினபடியே மொழிபெயர்த்திருக்கிறேன். இனி, “நான்” என்று வழங்குவது அந்த ராஜபுத்திரர்.

சித்திரை மாஸம் அக்கினி நக்ஷத்திரத்தின் ஆட் சிக்காலம். ஸ்தல யாத்திரையில் எனக்கு நம்பிக்கை இல்லா த போனாலும், என்னுடைய தாயின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஏதோ பீடா பரிகார்த்தமாக ஸேது ஸ்நானம் செய்துவிட்டு, அன்று கல்கத்தா மெயிலில் திரும்பி வந்துகொண்டிருந்தேன். மத்தியானத்துக் கடும் வெயிலில், வண்டியில் எங்கே தொட்டாலும், பட்டாலும், உஷ்ணமாக இருந்தது. மேலே சுழலும் விசிறியின் காற்றும் சூடாகவே வந்தது. வண்டி நின்று கொண்டிருந்த ஸ்டேஷனுக்குப் பெயர் கர்க்கப்பூர். இங்கிருந்து பத்து மணிக்கே புறப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் இன்னும் கிளம்புகிற மாதிரியாகத் தோன்றவில்லை. ஸ்டேஷன் மாஸ்டர் இந்த மெயிலை அடியோடு மறந்துவிட்ட மாதிரி இருந்தது. விடியற்காலை முதல் சாயங்காலம் சுமார் நாலு மணிக்குக் கல்கத்தாவில் என்னுடைய சிநேகிதரின் வீடு போய்ச் சேருகிறவரையில், வழியில் ஒரு ராஜபுத்திரனுக்குத் தகுந்த ஒருவித உணவும் கிடைக்காது. ஆகையால் பசிக்காக ஏற்பட்ட நாடோடியான வைத்திய முறையின் பிரகாரம், இடுப்பின் பெல்ட்டை இறுக்கிக் கட்டிக்கொண்டேன். இந்தப் பிரதேசங்களில் பிரயாணிகள் இறங்கினார்களே ஒழிய, புதிதாய் ஏறவில்லை. ஆகையால் தற் சமயம் வண்டியில் என் அறையில் நான் ஒருவனே இருந்தேன். கால்களை நீட்டிக்கொண்டு உறங்க முயன்றேன். ஆனால் கடும் பசியும் கொடிய வெயிலும் சேர்ந்து உண்டாக்கிய வேதனையால் சரியான தூக்கமும் வரவில்லை. நல்ல விழிப்பிலும் சேராமல் நல்ல நித்திரையிலும் சேராமல், ஒரு மத்திய அவஸ்தை உண்டல்லவா? அந்த நிலைமையில் கண்ணை மூடிக்கொண்டே நேரத்தைக் கழிக்கலானேன்.

அவ்விதம் இருந்தவன், ஆச்சரியத்துடன் கண்ணைத் திறந்தேன். அதற்குக் காரணம், ஒரு நந்தவனத்தின் மத்தியில் வீசும் வாசனையைப் போன்ற ஒரு செழிப்புள்ள பரிமளமானது அந்த அறை முழுவதும் பரவி, அங்குள்ள உஷ்ணத்தைக் கூடத் தணித்த மாதிரி தோன்றிற்று. எதிர்ப் பக் கத்தின் மூலையில் கூந்தலை ஆற்றிக்கொண்டு ஒரு யுவதி உட்கார்ந்திருந்ததை அப்பொழுதுதான் அறிந்தேன். யுவதி என்றால் உடனே வர்ணிக்கத் தொடங்குவது உலகம் முழுவதும் அனுசரிக்கும் வழக்கம். அவளுடைய நிகரற்ற லாவண்யத்தை என்னால் வர்ணிக்க முடியாது. ஆனால் வர்ணிக்க அவசியமும் இல்லை. ஓர் அப்ஸரக் கன்னிகையின் உருவமும் சௌந்தரியமும் எவ்விதம் இருக்கு மென்று நம்மில் ஒவ்வொருவருக்கும் மனசுக் குள்ளே ஓர் அபிப்பிராயம் இருக்குமல்லவா? அதை நீங்கள் நினைத்துக்கொண்டால் போதும். அம்மாதிரி எனக்கும் உள்ள அபிப்பிராயத்தையே ஒரு பதுமையாக வார்த்து, உயிர் கொடுத்து, அங்கே உட்காரச் செய்திருந்த மாதிரி எனக்குத் தோன்றினாள்.

நம்மை மூர்ச்சிக்கச் செய்யும்படி அழகு வாய்ந்த ஒரு ஸ்திரீயைக் கண்டால் இப்பேர்ப்பட் டவள் ஒரு தேவலோக ஸ்திரீயாகத்தான் இருக்க வேண்டும் என்று நாம் எண்ணலாம். ஆனால் அவ் விதம் எண்ணத் தொடங்கும் பொழுதே நம்முடைய உலக அனுபவம் குறுக்கே வந்து தடுக்கிறது. தேவ லோகக் கன்னிகைகள் நம்முடைய கண்ணில் தென் படுகிறதில்லையே என்று ஞாபகம் வந்துவிடுகிறது. அதன் மேல் அந்த எண்ணத்தை விடவேண்டியிருக்கிறது.

ஆனால், இவளோ, வண்டியில் ஏறுவதற்காகக் கதவைத் திறக்கிற ஓசையும், அதை அடைக்கிற ஓசையும், காலடிச் சப்தமும் இல்லாமலே அறைக் குள் பிரசன்னமாக இருப்பது, இவ்வளவு அழகு பெற்ற ஒரு யுவதி, புருஷத் துணை இல்லாமல் தனி யாக வந்திருப்பது, என்ற இரண்டு விஷயங்களை யும் ஆலோசித்தால், அம்மாதிரி ‘எண்ணாத எண்ண’த்தைச் சீராட்டுவதற்குக்கூட அநுகூலமாகவே இருந்தது.

நாம் வெளியிட்டுப் பேசும் வார்த்தைகளுக்குத் தானே ஒருவிதக் கண்டிப்பும் கட்டுப்பாடும் உண்டு. வெளிவராமல் மனசுக்குள்ளே சஞ்சரிக்கும் எண்ணங்களோ, ஒன்றுக்கும் கட்டுப்படாமல், இஷ்டப்படி தட்டாமாலையும் கண் பொத்தியும் ஆடலாமல் லவா? ஆகவே, என் மனத்தில் விதம் விதமான எண்ணங்கள் தோன்றித் திரிந்தன.

“இந்த 1945-ஆம் வருஷத்தில் வாஸ்தவமா கவே, தேவலோகத்திலிருந்து ஓர் அப்ஸர ஸ்திரீ பூலோகத்திற்கு வந்தால், எவ்வளவு அற்புத ஆனந்தமாக இருக்கும்! இவளுடைய பெயர் என்னவாக இருக்கலாம்? அதைக் கேட்கலாமா, கூடாதா? அவசியம் ஏற்பட்டாலொழிய, பரிசய மில்லாத ஸ்திரீயுடன் ஒரு புருஷன் பேச்சைத் துவக்கக் கூடாது என்று ஒரு மரியாதை நமக்குள் இருக்கிறதே! அப்ஸர லோகத்திலும் அதே ‘ரூல்’ மரியாதைகளைக் கவனிப்பதானால் நான் தானா? இப்படிக் காலை நீட்டிக்கொண்டு படுத்திருப்பது சரியா?

ஆனால், நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன் என்று நம்பி இப்பொழுது இங்கே இருக்கிறாள். நான் எழுந்து உட்கார்ந்து அவளுடன் பேசவும் ஆரம்பித்தால், அடுத்த ஸ்டேஷனில் இறங்கி அறைக்குப் போய் விடுவாளோ வேறு என்னவோ?

“நான் இப்பொழுது நன்றாய் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இது ஒரு கனவு அல்ல சந்தேகமே இல்லை. ஆனால் இவள் தேவலோகக் கன்னிகை என்பதற்கும் சந்தேகம் இல்லை. ஐம்புலனுக்கும் மேலான ஓர் ஆறாம் புலன் அதை எனக் குத் தெரிவிக்கிறது. ஆனால் கேவலம் ஒரு மனித கண்ணில் இவள் தென்படும் காரணம் என்ன?

“ஆனால் நான் காண்பது ஒரு கனவாக இருந் தால், என்ன செய்வேன்? இவ்வளவு மனோகரமான ஒரு விஷயத்தை அப்படியே நீடித்து அநுப விப்பதற்குப் பதிலாக, வீணாய்ப் பேசத் தொடங்கி அதனால் கண்விழித்துப் போய், அத்துடன் கனவு காண்பதைக் கெடுத்துக்கொள்வேனா? ஆகையால், எவ்விதத்திலும் மௌனமே உசிதம்”.

இவ்வித மெல்லாம் நான் எண்ணிக்கொண்டிருக்கையில், வண்டி ஒரு குலுக்குக் குலுக்கி விட்டுத் திடீரென்று நின்றுவிட்டது. இதுவரையில் ஜன்னலின் வெளியே பார்த்துக்கொண்டிருதவள், அப்பொழுதுதான் என் பக்கம் நோக்கினாள். நாங்கள் இருந்த வண்டியோ, சாவகாசமாய் ஒரு நுனி கீழே தாழவும், அதற்கடுத்தபடி மற்றொரு நுனி மேலே உயரவும், முடிவில் ஒரு கடிகாரத்தின் முள் சுமார் இரண்டு மணியைக் காட்டுவதானால், எவ்விதம் சாய்ந்து காண்பிக்குமோ அவ்விதம் சாய்ந்து நின்றது. தவிர, பக்க வாட்டத்தில், ஒரு பக்கமாகச் சற்றுப் புரளவும் செய்தது. நாங்கள் இருவரும் எழுந்தோம்-நான் பதறிக்கொண்டும், அவள் சாவதானமாய்க் கூந்தலை முடி போட்டுக்கொண்டும். ஒரு பக்கத்துக் கதவு கீழே இருந்த மண்ணின் குவியலால் தடைபட்டு இருக்க, மேற்புறத்திலிருந்த மற்றொரு கதவு திறக்கக்கூடியதாக இருந்தது. அதை வெகு சிரமத்துடன் திறந்தேன். அதன் மூலம் வெளியடைந் தோம். வண்டியை விட்டு நான் கீழே குதித்து, பிறகு அவள் இறங்கியும் நழுவியும் பத்திரமாகக் கீழே சேரும்படி, அவளுடைய கையைப் பிடித்து உதவி செய்தேன்.

என்ன நேர்ந்திருக்க வேண்டுமென்று சுற்றிப் பார்க்கையில் விளங்கிற்று. அந்த ஸ்தலத்தில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஒரு பாகத்தில், முந்தின ராத்திரி அடித்த கோடை மழையின் ஜலப் பெருக்கினால் இன்னும் இறுகாமலிருந்த மண் கரைந்து போனதால், பாதை பலஹீனப்பட்டிருந்தது. மெயில் வண்டியின் கனத்த என்ஜினைத் தாங்க முடியாமல் பல இடங்களில் பாதை அமுங்கவே, முடிவில் என்ஜினும் நின்று போய், பிரயாணி வண்டிகளும் தாறுமாறாய்ச் சாய்ந்துவிட்டன. நல்ல வேளை, உயிர்ச் சேதமில்லை. இருந்தாலும் எங்கும் கிளம்பிய ஆரவாரத்திற்கு அளவில்லை.

“அதோ, கால் மைல் தூரத்தில் ஒரு ஸ்டேஷன் தெரிகிறதே, அங்கே என்ன ஊரோ?” என்று ஒருவரையும் குறிப்பிடாமல் பொதுவில் கேட்கிற மாதிரியில் கேட்டேன்.

“அது ராம்ராஜ்ய ஸ்தலா. அங்கிருந்து நாலு மைல் தூரத்தில் இருக்கிறது, கல்கத்தாவில் என்னுடைய வீடு” என்று அவளே சொன்னாள்.

அவளுடைய குரலின் இனிமையையும் குணத்தையும் நான் உங்களுக்கு எவ்விதம் விளங்கச் செய்வேன்! உருவத்தைப் பார்த்த போது அவளுடைய உற்பத்தியைக் குறித்து எந்த எண்ணம் உதித்ததோ அதையே அவளுடைய குரலும் உறுதி செய்தது. தவிர அதனுடைய மகிமையால், என்னுடைய சுபாவத்திலில்லாத தைரியத்துடனும் சுலபத்துடனும் பேசலானேன்.

“நாம் இருவரும் முந்திக்கொண்டு அந்த ஸ்டேஷனுக்குப் போய்விடுவோம். ஏனென்றால், இங்குள்ள நானூறு பிரயாணிகளும் அங்கேதான் வந்து சேரவேண்டும். பிறகு நமக்கு ஒரு வாடகை வண்டியும் அகப்படாது” என்றேன்.

அவள் “சரி” என்று தலையை அசைத்தாள். மற்றவர்களுக்கும் இந்த யுக்தி தோன்றிற்றே இல்லையோ, நாங்கள் போவதை அவர்கள் கவனித்தார்களோ இல்லையோ, தெரியாது. நாங்கள் இருவரும் திரும்பிப்பாராமல், சற்று வேகமாகவே நடந்து போய், ஸ்டேஷனை அடைந்தோம். எங்களுடைய அதிருஷ்டம், ஒரு டாக்ஸி வண்டி இருந்தது. முன் ஸீட்டில் தூங்கிக்கொண்டிருந்த டாக்ஸி டிரைவரை எழுப்பிவிட்டு, வண்டி உட்கார்ந்தோம். அவளுடைய வீட்டின் விலாசத்தைத் தெரிவித்தாள். டாக்ஸி புறப்பட்டுவிட்டது.

“இனிமேலாவது என்னுடைய கையை விடலாம் அல்லவா?” என்று அவள் புன்னகையுடன் கேட்டாள்.

இது வரையில் என் கால்கள் பூமியில் பரவா மல், ஆகாயத்தின் மீது நடந்துவந்த மாதிரி எனக்கு ஒரு குதூகலம் இருந்ததே ஒழிய, முன்பு அவளைக் கீழே இறக்கிவிடுவதற்காக அவளுடைய கையைப் பிடித்தவன் இது வரையில் விடவில்லை என்றும், அதுதான் அந்தக் குதூகலத்திற்குக் காரணமென்றும் இப்பொழுது தான் உணர்ந்தேன். உணர்ந்த பிறகு இதைப் பறி கொடுப்பேனா? நானும் அவளுடைய கையை விடவில்லை, குதூகலமும் என்னை விடவில்லை. மேல் மேலே பேசுவது வெகு சுலபமாக இருந்தது. ஆலோசிக்கும் சிரமம் இல்லாமலே, வார்த்தைகள் என் வாயிலிருந்து குதித்தன.

“கையை விடுதலை செய்தால், அப்புறம் நீங்கள் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாலோ?” என்று நியாயம் பேசினேன்.

“ஒரு டாக்ஸி வண்டிக்குள்ளே, எங்கே போய் விட முடியும்? கையை விட்டுப் பார்க்கலாமே!” என்று அவள் முறுவலித்தாள்.

“அப்ஸர ஸ்திரீகள் எல்லாரும் முதலில் அப்படித்தான் சொல்லுகிற வழக்கம். ஆனால் அவர்களுடைய வார்த்தையை நம்பினால், பிறகு அந்தர்த்தானமாய்ப் போய்விடுவார்கள்” என்றேன். “அப்படியா! அவர்களுடைய வழக்கம் உங்களுக்கு என்னமாய்த் தெரியும்?”

“முன் ஒரு ஜன்மத்தில் நீங்கள் என்னை ஏமாற்றினதிலிருந்துதான் நான் அறிந்துகொண்டேன். வேறே எப்படி?”

“உங்களை நான் ஏமாற்றினேனா! அது எவ்விதம்? உங்களுடைய பெயர் என்ன?”

“அந்த ஜன்மத்தில் என்னுடைய பெயர் புரூரவஸ். இது கூட ஞாபகமில்லை போலக் கேட்கிறீர்களே!”

“அப்படியானால் நான் ஊர்வசியோ?”

“நாதா! உன்னை விட்டுப் பிரியேன்’ என்று வாக்களித்தீர்கள். அளித்துவிட்டும் பிரிந்து போனீர்கள். ஆனால் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் எனக்கு இரண்டு நிபந்தனைகள் இட்டீர்கள். நான் அவற்றில் தவறிவிட்டேன். இந்திரனுடைய வஞ்சனையால் தவறினேன். அந்தப் பாவி….”

“என்ன நிபந்தனைகள்?”

“நீங்கள் இரண்டு சிறிய ஆட்டுக்குட்டிகளை மிகச் செல்வமாக வளர்த்து வந்தீர்கள். அவை கெட்டுப் போகாமல் நான் பாதுகாக்க வேண்டு மென்று பேசியிருந்தீர்கள். ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன். ஆனால் உங்களுடன் நான் சல்லாப மாய் இருக்கும் சமயத்தில், இந்திரன் சில கந்தர்வர்களை அனுப்பி, அவற்றைத் திருடிக்கொண்டு போய்விட்டான். நான் என்ன செய்ய முடியும்? உங்களுடன் இருக்கும்பொழுது, ஒரு புருஷனுக்கு ஆட்டுக்குட்டியின் மேலாவது, வேறு எதன் மேலாவது ஞாபகம் போகுமா? நீங்களே சொல்லுங்கள்”

“இரண்டாவது நிபந்தனை என்ன?”

“அதுவா? அதைப் பற்றி நினைக்கும் பொழு தெல்லாம், எனக்குத் துக்கம் அடைத்துக்கொண்டு போகிறது. இரவில் உங்களுடைய பூரண அழகை நான் பார்க்கக் கூடாதென்று சொல்லியிருந்தீர் இதற்காக அந்தப்புரத்தில், உங்களுடைய வசதியில் நான் இருக்கும் பொழுதெல்லாம், விளக்கு ஏற்றுவதே இல்லை. அதனால் என்ன? உங்களுடைய கண்களே எனக்கு நக்ஷத்திரங்களாக இருந்தன. அப்படி இருக்கையில், ஒரு நாள், அன்றைக்குப் புதிதாய் அமர்ந்த வேலைக்காரி-பிற்பாடு நடந்ததிலிருந்து எனக்கு இப்பொழுது நிச்சயமாய்த் தெரிகிறது: அவளை இந்திரன்தான் அனுப்பி யிருக்க வேண்டும், வேலைக்காரி வேஷம் போட்டுக் கொண்டு என்னிடம் போகும்படி சொல்லி-அவள் உங்களுடைய அறையின் ஜன்னல் கதவைச் சாத் தாமல் திறந்தபடியே வைத்துவிட்டாள். அன்று பௌர்ணமி. பாதி ராத்திரியில் விழித்துக்கொண் டேன். உள் முழுவதும் நிலா வெளிச்சம். பூர்ண சந்திரனையும் தோற்கடிக்கச் செய்யும் தேஜசுடன் நீங்கள் சயனித்துக்கொண்டிருந்தீர்கள். அந்தக் காட்சியால் எனக்கு உண்டான பேரானந்தத்தில் உங்களை எழுப்பிவிட்டேன். நான் உங்களுடைய பூர்ண அழகையும் பார்த்துவிட்டேன் என்று உங் களுக்குத் தெரிந்து போனதும் தவிர, அதைக் குறித்து இந்திரனிடம் கோள் சொல்லுவதற்குத் தயாராக, சந்திரனும் தெரிந்துகொண்டுவிட்டான். இவ்விதம் அந்த நிபந்தனை விஷயத்திலும் ஏமாந்து போய்த் தவறிவிட்டேன்.”

“நடந்தது இப்படித்தானா? உங்களைக் குறித்துக் காளிதாசன் எழுதியிருக்கும் ‘விக்கிரம – ஊர்வசீய’த்திலே”

“நாடகத்தின் அவசியத்திற்காக, இரண்டொரு விஷயங்களைக் காளிதாஸன் சிறிது மாற்றி எழுதி யிருக்கிறான். நம்முடைய விருத்தாந்தத்தை, அவ னுடைய காலத்திற்கு முன்பாகவே, நடந்ததை நடந்தபடி-யஜுர் வேதத்தில் சதபதப்பிராம்மணத் தில் சொல்லியிருக்கிறதே! கடைசி நாளின் சம் பவம் மாத்திரம் அதில் கூறப்படவில்லை. உங்களை எந்த ஜன்மத்திலும் மறவாத என்னுடைய ஞாப கத்திலிருந்து அதைச் சொல்லுகிறேன்.

“வாஸ்தவத்தைச் சொல்லுங்கள்! அன்று ஜன்னல் கதவைத் திறந்தபடியே வைக்கும்படி, தாசியிடம் நீங்கள் ஆக்ஞாபிக்கவில்லையா?”

“இல்லவே இல்லை. ஆனால் புதிதாய் வந்தவளிடம் அதை அடைக்கும்படி சொல்லத் தவறியிருக் கலாம். என்னுடைய காதலின் நிர்ப்பந்தத்தினால், நீங்கள் சொல்லுகிற மாதிரி ஆக்ஞாபித்திருந் தாலுங்கூட, என்னுடைய குற்றம் தீராக் குற்றமா? மன்னிக்க முடியாததா? சொல்லுங்கள்.”

“அன்றிரவு உங்களை விட்டுப் போனவள் மறுபடியும் உங்களிடம் வரவில்லையா?”

“இதென்ன! யாரோ இதர மனுஷியரைக் குறித்து என்னிடம் விசாரித்து, நடந்த சமாசாரத்தை அறிந்துகொள்ளுகிற மாதிரியே, இன்னும் கேள்வி கேட்கிறீர்களே! நடந்ததெல்லாம் உங்களுடைய சரித்திரந்தானே! உங்களுக்குத் தெரியாததா? ஒரு வேளை, எனக்குத் தெரிகிறதா, நான் புரூரவஸ்தானா என்று பரீக்ஷித்துப் பார்க்கிறீர்களா? அன்றைக்குப் பிறகு, என்மேல் கருணை புரிந்து, ஐந்து தடவை வந்தீர்கள், எனக்கு ஐந்து குழந்தைகளைக் கொடுத்தீர்கள்-”

“அப்படி இருந்தும் உங்களுக்கு-”

“அப்படி இருந்தும் என்றால், மறுபடியும் என்னை விட்டுப் போய்விட்டீர்களே, அந்த இந்திர னுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு! அவன் பொழுது போக்கைத்தானே தேடுகிறவன்! அதற்கு ரம்பை இல்லையா? மேனகை திலோத்தமை இல்லையா? நீங்களும் வேண்டுமா, கிரீடத்தின் மேல் நவரத்தினப் பதக்கம் வைக்கிற மாதிரி? நீங்கள் இல்லாமல் அவனுடைய சுவர்க்கம் பாழாக இருந்ததா? என் மாதிரி அநியாயமாய்ப் புண்பட்ட ஒரு மனிதன் சபித்தால், தேவேந்திரன் மீதும் அந்தச் சாபம் பலிக்காதா? என்னை வஞ்சனை செய்து உங்களை வரவழைத்துக் கொண்டுவிட்டானே, அந்தக் கொடும் பாவி! அவனுடைய சுவர்க்க வைபவம் பாழாய்த் தான் போகட்டுமே!”

“வீணாகச் சபிக்காதேயுங்கள். மற்றவர் பேரில் ஆத்திரப்படுவதனால், முதலில் நம்முடைய மனசு அல்லவா சந்துஷ்டியை இழக்கிறது? மற்றவர்களை மறந்துவிடுங்கள்.”

“நீங்கள் இந்திரனுக்காகப் பரிந்து பேசுகிறீர்கள்.”

“இல்லவே இல்லை. எதற்காகப்பரிய வேணும்? அவன் என்னுடைய வல்லபனா? நூறு யாகம் செய்து இந்திர பதவியை அடைந்ததனாலே, எந்த ஸ்திரீயின் ஹிருதயமும் அவனுக்கு வசமாய்விடுமா? நாம் இங்கே பேசுவதுகூட அவன் காதை எட்டினாலும் எட்டும். இருந்தாலும் சத்தியமாய்ச் சொல் லுகிறேன், நம்புங்கள். தெருவில் கிளம்பும் இந் தப் புழுதியும் சரி, அவனும் சரி, என்னுடைய மனசில்.”

“அப்படியானால் நீ இன்னமும் என்னுடைய சொந்த ஊர்வசிதானே?” என்று அவளுடைய மற்றக் கையையும் பிடித்துக்கொண்டேன்.

“நாதா, நான் ஒரு நாளும் மாறவில்லையே! இல்லாத போனால் நான் ஏன் இப்படி உங்களைத் தேடிக்கொண்டு வருகிறேன்! ஒவ்வொரு ஜன்மத்திலும் உங்களைத் தேடி வந்து அடைகிறேன். பிறகு உங்களுடைய கர்மத்தின் பிரகாரம் நடக்கிறது. என் ஒருத்தியின் சக்தியில் மாத்திரம் என்ன இருக்கிறது?”

“காந்தே! நீ என்னைத் தேடி வந்தாயா! நான் அவ்வளவு பாக்கியசாலியா! நான் என்ன புண்ணியம் செய்தால் இனி நாம் பிரியாமலிருக்கும்படியான கர்ம பலன் எனக்குக் கிடைக்கும், சொல்லிக் கொடுக்கிறாயா? இனிமேல் இந்திரனுக்காக, என்னை விட்டு ஒரு நாளும் பிரியமாட்டாயே? மாட்டேனெனறு தயவு செய்து உறுதி சொல்லு! சொல்லு!” என்று அவளுடைய கைகளின் மேல் முத்தங்களைச் சொரிந்தேன். அவை மூலமாக, என்னுடைய பூர்வ ஜன்மத்தின் வாழ்வை, ஒரு திரையைச் சற்றுத் தூக்கின மாதிரியில், மறுபடியும் சிறிது உணர்ந்தேனே என்னவோ, நான் சொல்ல வல்லவனல்ல. ஆனந்தத்தில் தத்தளித் துக்கொண்டிருந்த என் செவியில் இன்பமான வீணையின் நாதம் கேட்கிற மாதிரி இருந்தது. அதன் மத்தியில், ஏதோ மாயா சக்தியினால், யாதொரு வார்த்தைகளின் உதவி இல்லாமலே, அவற்றால் தெரிவிக்கக் கூடிய. விஷயம் மாத்திரம், என் அறிவை எட்டியது. கீழ்ச் சமுத்திரத்தி னின்று உதயமாகும் சந்திரன், வானத்தை எட்டு கிற மாதிரி, மெல்லெனவும் அதிர்ச்சி இல்லாமலும், ஆனால் நிச்சயத்துடனும் பிரகாசத்துடலும் என் விவேகத்தை எட்டி, அமிருதத்தை உண்டவனு டைய சரீரத்தில் அதன் குணம் பரவி ஐக்கியமாகிறது போல, என்னுடைய பிரக்ஞையுடன் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டது:

‘நான் ஊர்வசி. சிருஷ்டி அமைப்பில், ஸ்திரீயின் அம்சமான காருண்யம் என்பது நான். நானே அனுதாபம். நானே வாஞ்சை. ஆத்மாவின் அழகும் நானே.

‘எவனொருவன் தன்னையே பொருள் பண்ணி, தன்னுடைய மகிழ்ச்சியையே கோருகிறானோ, என்னை ஆளுவதே எவனுடைய கருத்தோ, அவன் தேவேந்திரனானாலும் சக்கரவர்த்தி யானாலும்,
என்னை உண்மையில் அறிய மாட்டான். என்னுடைய அதிபதியாக இருக்கலாம். ஆனால் என்னுடைய ஹிருதயேச்வரன் அவன் அல்ல.

‘எவன் தன்னை நினைக்காமல் என்னை நினைத்து எனக்காக வாடி, எனக்காகத் துடிக்கிறானோ, அவனே என்னுடைய ஹிருதயேச்வரன், என்னுடைய புரூரவஸ்-‘

ஏதோ காரணத்தினால் கண் விழித்தேன். விழித்த பலன், மெயில் வண்டி சீராய்க் கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்து கூலியாட்கள் சாமான்களைப் புரட்டிக்கொண்டிருப்பதையும், என்னை வரவேற்க வந்த சிநேகிதர் என்னைத் தட்டி எழுப்புவதையும் அறியலானேன்.

இவ்விதம் அன்று எனக்குக் கிடைத்த அபூர்வ அநுபவம், இனி அதற்கு எதிர்காலம் என்பது இல்லாமல், ஒரு கனவைப் போல் க்ஷணத்திலே அவளுடைய  ஞாபகமே பறந்து போய்விட்டது.

இனி எனக்குத் துணை, எனக்குக் கதி.

‘ஒரு கனவைப் போல்’ என்று  அவசரப் பட்டுச் சொல்லிவிட்டேனே! வாஸ்தவத்தில் அந்த அநுபவம் ஒரு கனவுதானா? வேறொன்றும் இல்லையா? ஒருகால் பூர்வ ஜன்மத்தின் வாசனையாக இருக்கலாகாதா? தேகம் வருந்திய சமயத்தில் ஆத்மாவின் சக்தி வலுத்து, அந்த வாசனையை எட்டிப் பிடித்திருக்கக் கூடுமா? அல்லது பூர்வ கர்மத்தின் பலனாக இப்பொழுது கிடைத்த ஓர் உபதேசம், ஓர் எடுத்துக்காட்டு என்று என் எண்ணவேண்டியதா? இவ்விதம் புஸ்தக ஞானமாக, எனக்கே சில சம்யங் களில் தோன்றுகிறது.

இம்மாதிரி கேள்விகளுக்குச் சரியான விடை கொடுக்கக் கூடிய பண்டிதர் எவர்? அவரை எங்கே காணலாம்? அவரைக் கண்டுபிடித்தாலும் அவர் எடுத்துரைக்கக் கூடிய தத்துவங்களைப் பொறுத்துக் கேட்க என் மனசு சம்மதிக்குமா? என்னு டைய மனசார, எனக்கு இருக்கும் விசாரமெல்லாம் இதுவே. நான் அன்று அநுபவித்தது கனவா? அல்லது, அதுதான் உண்மை, இந்தக் கல்கத்தாவும் ஸேது யாத்திரையும் கனவுகளா? இந்தக் கனவுகளிலிருந்து ஒரு நாள் விழித்தவுடன், முன் போல் அவளை எதிரே காண்பேனா?

– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *