யாரும் இல்லைத் தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.
(கபிலர் – குறும்தொகை)
ஓன்ராறியோ ஏரிக்கரையில் இயற்கையாக அமைந்திருந்த பெரிய கற்களில் ஒன்றில் தனிமையில் உட்கார்ந்து கரைமோதும் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ராதையின் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது.
சில நாட்களாக மனம் சோர்ந்து போயிருப்பதற்குப் பிரிவுத்துயர்தான் காரணமாய் இருக்கலாம் என அவள் நினைத்தாள். உண்மைதான், அருகே இருக்கும் போது தெரியாத அருமையை, அவன் பிரிந்த போதுதான் புரிந்து கொண்டாள்.
அவனை முதன் முதலாகச் சந்தித்த நாளை அவளால் மறக்க முடியாததாக இருந்தது. அவன் அருகே இல்லாத போது என்ன செய்ய முடியும், அவனுடனான அந்த நினைவுகளைத் தான் அவளால் மீட்டிப்பார்க்க முடிந்தது.
அவள் இந்த மண்ணுக்குப் புலம்பெயர்ந்து வந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. பனிக்காலம் வரப்போகிறது என்று எல்லோரும் அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். மழைக்காலத்திற்காக ஊரிலே எறும்புகளும், தேனீக்களும் சுறுசுறுப்பாக உணவு சேகரித்து வைப்பது போல, இவர்களும் இங்கே பனிக்காலத்திற்கான உணவு, உடை, கையுறை, பாதவணி, பனிக்குவியலை அகற்றுவாற்கான கருவிகள் என்று ஒவ்வொன்றாகச் சேகரிப்பதைப் பார்த்து இவளும், வித்தியாசமான பனிப்புல வாழ்க்கையை, இப்படியானதொரு சூழலில்தான் இனி தான் வாழப்போகிறேன் என்று நினைத்து ஆச்சரியப்பட்டாள்.
பல்கலாச்சார நாடாக இருந்தாலும், மொழி பண்பாடு கலாச்சாரத்திற்கு மதிப்பளித்துத் தைமாதத்தை ‘தமிழர் மரபுத்திங்கள்’ என்று கனடிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. சங்ககாலத்து நான்கு நிலத்திணைகளான நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகியன பின்நாளில் பாலையையும் சேர்த்து ஐந்தாகியிருந்தன. இன்று தமிழர்கள் தாய்மண்ணை விட்டு வெளியே புலம் பெயர்ந்து வாழ்வதால் ‘பனிப்புலம்’ என்பதையும் சேர்த்து நிலத்திணைகள் ஆறாகித் தமிழ் இலக்கியத்திற்கு ‘ஆறாம் நிலத்திணை’ புதியதாகிவிட்டது என்பதை ‘ஆறாம் நிலத்திணை’ என்ற கனடாவில் வெளிவந்த நூலைப் படித்தபோதுதான் நிலத்திணைகள் பற்றி விபரமாகப் புரிந்து கொண்டாள். வாசிப்பில் தேடல் கொண்ட அவளுக்குப் புலம் பெயர்ந்த மண்ணிலும் தமிழ் இலக்கியம் இப்படி எல்லாம் செழித்து வளர்வதைப் பார்த்தபோது, வியப்பாக இருந்தது.
அன்று தைப்பொங்கல் தினம்.
தமிழர்களின் முக்கிய திருநாளாக இருந்ததால், கோயிலில் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது. சிநேகிதியின் காரில்தான் இவள் கோயிலுக்கு வந்திருந்தாள். சினேகிதி வாசலில் நின்று அவசரமாக அழைக்கவே வழமையாக அணியும் பாதவணியைத்தான் அணிந்து வந்திருந்தாள்.
அவளது கூடாதகாலம் புறப்படும் போது இல்லாத பனிப்பொழிவு மெல்லமெல்ல அதிகரித்துக் கோயில் இருந்த பகுதியை அண்டியபோது உறைநிலைக்குப் போயிருந்தது. நவீன தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் முன்கூட்டியே இதை எல்லாம் அறிந்து கொள்ள முடிந்தாலும், இந்த நாட்டுக்குப் புதியவள் என்பதால் இவள் அதைக்கவனத்தில் கொள்ளவில்லை.
வண்டித் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டுச் சினேகிதி இறங்க, இவளும் மறுபக்கத்தால் இறங்கிச் சில அடிகள் எடுத்து வைத்தவள், அப்படியே பனியில் சறுக்கிக் கீழே தடார் என்று விழுந்தாள். தன்னைத் தழுவிய மென்மையான ரோஜாவை விட்டுப்பிரிய மனமில்லாமல், எழுந்திருக்க முயன்றவளை மீண்டும் தன்னோடு அணைத்துக் கொள்ளமுயன்றது தரையில் பரந்து கிடந்த அந்தப் பொல்லாத உறைபனி.
சறுக்கி விழுந்து விட்டோமே என்று அவளுக்கு வெட்கமாக இருந்ததால், சினேகிதி பார்க்குமுன் அவசரமாக எழுந்திருக்க முனைந்தாள், முடியவில்லை, மீண்டும் சறுக்கியது. பட்டகாலே படும் என்பது போல, இக்கட்டான அந்த சூழ்நிலையை எப்படித் தவிர்க்கலாம் என்று அவசரமாகச் சிந்தித்தபடி நிமிர்ந்தவளுக்கு முன்னால் கையொன்று நீண்டிருந்தது.
பனித்தரையில் இருந்தபடியே தயக்கத்தோடு பார்த்தாள். இராணுவ வீரன்போல வாட்டசாட்டமாய் குளிராடை அணிந்த ஒருவன் எதிரே கையை நீட்டியபடி நின்றான்.
‘எழுந்திருங்க, இல்லாட்டி உறைஞ்சுபோவீங்க’ என்றான் எதிரே நின்றவன்.
ஒரு கணம் தயங்கினாலும், வேறு வழியில்லாமல் அவனது உதவிக்கரத்தைப் பற்றிக் கொண்டு மெல்ல எழுந்தவளின் முகம் வெட்கத்தால் சட்டென்று சிவந்து போயிற்று.
‘வின்ரரைமில பூட்ஸ் போடணும் என்று தெரியாதா? உங்களால இந்த சப்பாத்தோட ஸ்னோவில நடக்கவே முடியாது, வாங்க கோயில் வாசலில் கொண்டு போய் விடுறேன், கனடாவுக்குப் புதிதா?’ என்றவன்,
அவளது பதிலுக்குக் காத்திராமல் அவளது கையைப் பற்றியபடி கோயில் வாசல்வரை அவள் விழுந்து விடாமல் கவனமாக அழைத்துச் சென்றான். அவளோ சூழ்நிலை காரணமாக எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல், கீழே விழுந்த வலியையும் மறந்து, அக்கினி வலம் வரும் மணப்பெண்போல, அவனது கையைப் பற்றியபடி ஒரு பொம்மைபோலப் பின் தொடர்ந்தாள்.
‘திரும்பிப் போகும்போது பார்த்துப் போங்கோ, இங்க சறுக்கி விழுந்தால் எழும்புறது கஷ்டம், கவனம்’ என்று அவன் சொல்லிவிட்டுக் கூட்டத்தில் மறைந்து விட்டான்.
அவன் சென்று மறைந்த பின்தான், அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவள், அவனுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டதை உணர்ந்தாள்.
தோழியுடன் கோயில் பிரகாரத்தைச் சுற்றிக்கும்பிட்டு, பிரசாதம் பெற்று, சற்று நேரம் உட்கார்ந்திருந்தனர். வாசல்வரை வண்டியைக் கொண்டு வந்த தோழி இவளை வீடுவரை ஏற்றிச் சென்றாள். பனிக்குளிர்காலத்தில் எப்படியான பாதவணியை அணிய வேண்டும் என்று திரும்பிப் போகும்போது அவளுக்கு அறிவுரை சொன்ன தோழி, ‘யாரடி அவன்?’ என்றாள்.
‘தெரியாது!’ என்றாள் இவள்.
‘நடக்க முடியாது என்று பாசாங்கு செய்திருந்தால் உன்னை வாசல்வரை தூக்கிட்டே போயிருப்பான் போல..!’
இவள் வெட்கத்தில் தலை குனிந்திருந்தாள்.
‘ஒற்றைக் கையால் எப்படி அவன் தன்னைச் சட்டென்று தூக்கினான்’ என்று இவள் வியந்து போயிருந்தாள். ஒரு ஆடவனின் ஸ்பரிசம் முதன்முதலாக அவளுக்குள் உறைந்து போயிருந்தது.
‘என்னடி, வெட்கப்படுகிறாயா?’
‘இல்லை, நான் அவனுக்கு ஒரு ‘தாங்ஸ்’ கூடச் சொல்லலையே!’ இவள் மனம் வருந்தினாள்.
‘இவளொருத்தி..!’ தோழி ஆச்சரியப்பட்டாள்.
அப்புறம் ஒருநாள் சென்ரானியல் கல்லூரியில் எதிரெதிரே அவனைச் சந்திக்க வேண்டி வந்தது.
‘நீங்களா, எப்படி இருக்கிறீங்க?’ என்றான் அவன்.
இவள் ‘நல்லாயிருக்கேன்’ என்று தலையை மட்டும் அவசரமாய் அசைத்தாள்.
‘இங்கேதான் படிக்கிறீங்களா?’ என்றான்.
அதற்கும் ‘ஓம்’ என்று தலையசைத்தாள்.
‘பேசவே மாட்டீங்களா? பேசாட்டிப் பரவாயில்லை, உங்க மௌனமும் பேசுது தானே.. ரேக்கெயர்’ என்று சிரித்தபடியே சொல்லி விட்டு அவன் நகர்ந்தான்.
‘மௌனமும் பேசுமாமே.. எப்படி?’ என்று அவள் தனக்குள் வியந்தாள்.
‘எனக்கு என்னாச்சு, நான் அவனைக் கண்டதும் ஏன் மௌனமாகிவிடுகிறேன்?’ என்று அவன் சென்ற பின் தன்னைத்தானே நொந்து கொண்டாள்.
ஒருநாள் சென்ரானியல் கல்லூரி உணவகத்தில் அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவனிடம் அவளாகவே தயக்கத்தோடு சென்று அவன் முன்னால் நின்றாள்.
‘என்ன?’ என்பது போல நிமிர்ந்து பார்த்தவன், ஆச்சரியத்துடன் ‘நீங்களா..?’ என்றான்.
இனியும் மௌனம் சரிவராது என்பதை உணர்ந்தவள், அன்று கோயிலில் அவன் செய்த உதவிக்கு நன்றி சொன்னாள். ஒரு புன்சிரிப்போடு அதை அவன் ஏற்றுக் கொண்டான்.
அவனிடம் விடைபெற்றுப் போகும் போது, இன்னும் கொஞ்சம் கதைத்திருக்கலாமோ என்று மனசு தவிப்பதை அவள் உணர்ந்தாள்.
அதன் பின் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். அவனை நோக்கித் தான் ஈர்க்கப்படுவதை அவள் உணர்ந்தாள். ‘பொல்லாத மனசு’ என்று அதற்கும் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். ஆனாலும் அந்தப் பொல்லாத மனசு மீண்டும் மீண்டும் அவனைத்தானே தேடியது.
சற்றுத் தள்ளியிருந்த கல்லில்தான் அவர்கள் விடுமுறை நாட்களில் அமர்ந்திருப்பார்கள். இந்த மண்ணில், சமூகக் கட்டுப்பாடுகளைக் கடந்த சுதந்திரம் இவர்களைப் போன்றவர்களுக்கு இருந்ததால், இருட்டி விட்டது கூடத் தெரியாமல் மணிக்கணக்காக உரையாடுவார்கள்.
‘என்ன மௌனமாய் இருக்கிறீங்க?’ என்றாள்.
‘இல்லை எப்படி சொல்வதென்று தெரியலை!’ என்றான்.
‘ஏன் என்னாச்சு?’ அவள் கண்களில் பயம் தெரிந்தது.
‘ஊரில் இருந்து அக்கா மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றாள். அம்மாவுக்குக் கடுமையான சுகவீனமாம், படுக்கையில் இருக்கிறாவாம், உடனே வரும்படி எழுதியிருக்கிறாள். அம்மாவை நினைச்சால் பயமாயிருக்கு.’
அவனது முகம் வாடியிருந்தது. தாயைப்பற்றிச் சொல்லும் போது, கண்கள் கலங்கி எந்த நேரமும் அழுதுவிடுவான் போலிருந்தது.
அவனது துயரத்தைத் தணிக்கக் ‘கவலைப்படாதீங்க’ என்று ஆறுதல் சொன்ன இவள் சற்று அருகே நகர்ந்து அவனது தலையை ஆதரவாய் மெல்ல வருடி விட்டாள். அதுவே அவனுக்குச் சாதகமாக, மெல்லக் கண்களை மூடிய அவன் விம்மியபடி அவளது தோளில் தலை சாய்க்க, அவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவனது சூடான மூச்சுக்காற்று அவளது மார்பில் பட்டு ஏதேதோ செய்தது. துயரத்தில் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை, தனிமையில் கட்டுப்பாட்டை மீறிவிடுவோமோ என்று அவள் பயந்தாள்.
‘அதிலே என்ன, உங்களைப் பெற்றெடுத்த தாய்தானே, போய்ப் பார்க்க வேண்டியது தானே!’ என்றாள் சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டு.
அவன் தயங்கினான்.
‘என்ன தயங்கிறீங்க, போவதற்குப் பணம் இல்லையா?’
‘இல்லையில்லை, காரணம் அதுவல்ல, உன்னைப் பிரிந்து போகவேணுமே, அதுதான்!’
‘பரவாயில்லை, கொஞ்ச நாட்களுக்குத்தானே போயிட்டு வாங்க, என்ன சொன்னாலும் அம்மா அம்மாதான், பாசத்தையும் காதலையும் போட்டுக் குழப்பிக்காதீங்க, யாராக இருந்தாலும் பிரிவுத் துயரை தாங்கித்தானேயாகணும். போகமுடியாமல் போச்சே என்று நீங்க பின்னாளில் வருந்தக்கூடாது.’
அவளுடைய விருப்பத்தோடுதான் பிரிய மனமில்லாமல் பிரிந்து, அவன் தனது தாயைப் பார்க்கத் தாயகத்திற்குக் கிளம்பிச் சென்றான்.
செல்பேசியில் அடிக்கடி கதைத்துக் கொள்வார்கள். திடீரென ஒருநாள் தாயாருக்கு வருத்தம் கடுமையாகி இருப்பதாக அறிவித்தான். மறுநாள் தாயார் மரணமாகி விட்டதாகத் துயரச் செய்தி வந்தது. நேரத்தோடு வந்தபடியால் அம்மாவோடு பேசமுடிந்தது தனக்குப் பெரும் ஆறுதலாக இருப்பதாக செல்போனில் அவன் சொல்லி அழுதான். தாயாரின் மரணச்சடங்கை முடித்துக் கொண்டு விரைவாக வருவதாகவும் சொல்லியிருந்தான். அவள் அவனது துயரத்தில் பங்குபற்றி அவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லியிருந்தாள்.
இன்பமோ, துன்பமோ புகுந்த மண்ணில் அவனது இருப்பை அருகே இருந்து உறுதி செய்வதுபோல, அவளுடைய செல்போன்தான் ஒரு தோழியைப் போல, அவளுக்குப் பக்கத் துணையாக இருந்தது.
‘தாயாரை நிரந்தரமாகப் பிரிந்த அவனது துயரோடு ஒப்பிடும்போது எனது பிரிவுத்துயர் ஒன்றும் பெரிதல்ல’ என்று அவள் தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
எட்டுச்செலவை, அதாவது காடாத்தி முடித்ததும் தாயாருக்கான கடமைகளைச் செய்துவிட்டு வருவதாக அவன் அறிவித்திருந்தான். அதன்பின் கடந்த இரண்டு நாட்களாக அவனுடன் எந்தவித தொடர்பும் கொள்ள அவளால் முடியவில்லை. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தாலும் சந்தேகத்தின் பெயரில் கைதுகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. இரண்டு நாட்களுக்கு முன் இவன் தங்கியிருந்த கிராமத்தை அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து பல இளைஞர்களை கைது செய்திருப்பதாக முகநூல் செய்திகள் தெரிவித்தன. இவனுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இவனுடைய முகம் எங்கேயாவது முகநூல் படங்களில் தென்படுகிறதா என்று நெஞ்சு படபடக்கத் தேடிப்பார்த்தாள். இவனைப்பற்றி இதுவரை எந்தச் செய்தியும் இவளுக்குக் கிடைக்கவில்லை. தாயகத்தில் அரசியல் சூழ்நிலை நன்றாக இல்லை, யாருக்கும் அங்கு பாதுகாப்பில்லை என்பதை இவள் அறிந்தே இருந்தாள். ஏற்கனவே காணாமல் போனவர்கள் எப்படிக் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற கதையும் அவளுக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் தாயகத்து சூழ்நிலை நீறுபூத்த நெருப்பு போல, ஒவ்வொருவருக்கும் பொறிவைத்துக் காத்திருந்தது. அரசியல் தெரியாத அப்பாவிகள்தான் பொறிக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அவனுடன் வேறு எந்த விதமாகவும் தொடர்பு கொள்ள முடியாமல், இருக்கிறானா இல்லையா என்பது கூடத் தெரியாமல் மனசு நிம்மதியின்றித் தவித்தது.
வழமையாக அவர்கள் அமர்ந்திருக்கும் கல்லில் கடற்புறா ஒன்று கரையில் முட்டி மோதும் தண்ணீரை, வைத்தகண் வாங்காது பார்த்தபடி தனிமையில் தவம் இருந்தது. வெள்ளை நிறமான இந்தப் பறவை அவளுக்குப் பழக்கமானது. அடிக்கடி இந்த இடத்தில் அதைக் காண்பாள், காரணம் அந்தப் பறவையின் ஒரு கால் விரல்களுக்கிடையே பொலித்தீன் பையின் ஒரு துண்டு சிக்கெடுக்க முடியாதவாறு சிக்கியிருந்தது. அதனால் அந்தப் பறவை நொண்டிக் கொண்டே ஏதாவது ஒரு கல்லில் இரைக்காக உட்கார்ந்திருக்கும். இப்படித்தான் மனிதரின் அலட்சியத்தால், பொலித்தீன் பொருட்களால் பாதிக்கப்பட்ட விலங்கினங்கள் பல இறந்து போயிருக்கின்றன. இந்தப் பறவை இவர்கள் சாப்பிடுவதில் எதையாவது போட்டால் அருகே வந்து நன்றி சொல்வது போலத் தலையை அசைத்து மகிழ்வோடு உண்ணும். தெரிந்தோ, தெரியாமலோ இந்தக் காதல் ஜோடியின் இன்ப துன்பங்களை, அவர்கள் தங்களுக்குள் களவாடிய தருணங்களைத் தினமும் அருகிருந்து பார்த்த, அறிந்தவொரு பறவையாகவும் இந்தப் பறவைதான் இருந்தது.
இவளது தனிமையைப் புரிந்து கொண்டோ, என்னவே தலையைச் சாய்த்து இவளைப் பரிதாபமாகப் பார்த்தது. ‘சீஹல்’ என்ற இந்தக் கடற்புறாக்களைப் பார்க்கும் போதெல்லாம் சங்க இலக்கியத்தில் அவள் படித்த ‘குருகு’ பறவைகளின் ஞாபகம் அடிக்கடி வரும். சங்கக்காதலர்களின் களவொழுக்கத்தைக் கண்ட சாட்சிகளாக அவை இருந்தன என்று சங்கக்கவிதைகளைப் படித்த போது இதெல்லாம் அதீத கற்பனை என்றுதான் இதுவரை காலமும் நினைத்தாள். ஆனால் இன்று இவர்களுடைய களவொழுக்கத்திற்கு இந்த சீஹல் சாட்சியாக நிற்பதை நினைத்துப் பார்த்து தனக்குள் வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டாள். பனிப்பிரதேசமான இந்த மண்ணில் இருக்கும் இந்த சீஹல் பறவைகளும் குருகு போலவே பார்வைக்கு ஓரளவு ஒற்றுமை இருந்தன. ‘சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு’ என்ற வரிகளை நினைத்து காதலனது பிரிவால் தவிக்கும் தன்னிலையையும், சங்ககாலக் காதலர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
காதலர்களின் பிரிவுத்துயரை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கவும் முடியாது, மற்றவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது. செய்கைகள் வேறாக இருந்தாலும், மனசெல்லாம் அந்தரங்க நினைவுகள்தான் ஓடிக்கொண்டிருக்கும். தங்களுடைய அந்தரங்கம் பற்றியோ, அவன் திரும்பி வரவி;ல்லை என்றோ யாருக்கும் சொல்லிக்கூடப் புலம்பமுடியாத சூழ்நிலையில் அவள் தனிமையில் இருந்து தவித்தாள்.
வழமைபோல, உறுமீனுக்காகச் சீஹல் அந்தக் கல்லில் காத்திருக்கலாம், அதற்கு எந்த மீன் அகப்பட்டாலும் அதன் தேவை ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இவளுக்கு அப்படியல்ல, அவனைத் தவிர வேறுயாரையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு அவன்மீது அவள் பைத்தியமாய் இருந்தாள்.
நல்லசெய்தி வரும், அவன் நிச்சயம் வருவான் என்ற நம்பிக்கையோடு கையிலே செல்போனை வைத்துக்கொண்டு தினமும் ராதை காத்திருக்கிறாள். அவளுக்கும் அவனுக்குமான உறவு என்னவென்பது வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ‘காணாமல் போனவர்களைத் தேடுபவர்களின் பட்டியலில் தனது பெயரும் இடம் பெறக்கூடாது’ என்று தினமும் பிரார்த்திக்கிறாள்.
அவன் வருவானா? என்ற கேள்விக்கு ‘நம்பிக்கைதானே வாழ்க்கை!’ என்ற பதிலை மட்டும்தான் இப்போதைக்குச் சொல்ல முடிகின்றது.
நன்றி: இலக்கியவெளி
இன்று மீண்டும் ஆறாம் நிலத்தினைக் காதலரைப் படித்தேன். ஜான் ரஸ்கின் சொல்வதைப் போல இன்று மேலும் பல வண்ணங்களை அந்த வாணவில் கதையில் கண்டேன்.
பழந்தமிழர் வாழ்வைத் தொட்டுக் காட்டும், ‘ஆறாம் திணை” அருமையான சிறுகதை. அரசியல் தெரியாத அப்பாவிகள்தான் பொறியில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். என்ற யதார்த்தத்தை, மிக ஆழமான கதையாக வாசகர் முன் படைத்திருக்கிறார் கதாசிரியர். அதிரடிப்படைகளின் நடவடிக்கைகளும், சிவிலியன்ஸ்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் கோடிட்டுக் காட்டிய விதம் அருமை.
‘சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு’ என்ற வரிகளை மிகப் பொறுத்தமாகக் கையாண்டிருப்பதைக் காணும்போது, கதாசிரியர் குரு அரவிந்தன் அவர்களின் பழந்தமிழ் இலக்கியப் பாண்டித்தியம் தெரிகிறது.
சிஹல் பறவையை முன்னிறுத்தி, ‘நம்பிக்கைதான் வாழ்க்கை’ என்பதை சொல்லி, நேர்மறையாக கதையை முடித்த விதம் அருமையிலும் அருமை.
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
ஜூனியர் தேஜ்
காதல் நினைவுகள், பிரிவுத்துயர், மீளச் சேர்வோம் நம்பிக்கை…என்ற உண்மைக் காதலின் இலக்கணங்களை இலக்கியமாக்கி வரையப்பட்ட சிறுகதைச் சித்திரம்.
காதலர்களின் பிரிவுத்துயரை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கவும் முடியாது, மற்றவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது. செய்கைகள் வேறாக இருந்தாலும், மனசெல்லாம் அந்தரங்க நினைவுகள்தான் ஓடிக்கொண்டிருக்கும்.
அவன் வருவானா? என்ற கேள்விக்கு ‘நம்பிக்கைதானே வாழ்க்கை!’ என்ற பதிலை மட்டும்தான் இப்போதைக்குச் சொல்ல முடிகின்றது.
மேற்கண்ட சிந்தனைகளெல்லாம் இந்தக் கதையில் மினுக்கம் வைரப் பொட்டுக்கள்.
கதாசிரியர் குரு அரவிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
ஜூனியர் தேஜ்