கவிதை வாழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2024
பார்வையிட்டோர்: 164 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிருஷ்ண பிள்ளை ஒரு கவி.

உண்மை. அவர் இதுவரையில் ஒரு கவிதை கூட எழுதவில்லைதான். அவர் கவிதைகள் இயற்றியிருந்தால் இன்னும் வெறும் கவிஞராகவா இருப்பார்? கவிகள் போற்றும் கவிச் சக்கரவர்த்தியாக, கவிச் சக்கர வர்த்திகள் தொழுதேற்றும் மகாகவியாக, மகாகவிகள் வணங்கும் கவிதைக் கடவுளாக அல்லவா வளர்ந்திருப்பார்?

ஆனல், கவிதை எழுதினால் தானா கவிஞர்? இல்லை, கவிஞர் என்றால் சதா கவிதை எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? ஒன்பது, பத்துக் கவிதைகள் எழுதி விட்டு, வாழ்நாள் முழுதும் கவிஞர் கவிஞர் என்று தம்மைத் தாமே பெருமையோடு விளம்பரப்படுத்திக் கொண்டு திரிகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே!

கிருஷ்ண பிள்ளை கவிஞர்தான். இதுவரை ஒரு கவிதை கூட எழுதாவிட்டாலும் – கவிதை எழுதும் எண்ணம் அவருக்கு இல்லாவிட்டாலும் – அவர் கவி தான். வாழ்க்கையையே கவிதையாகச் சுவைத்து ரசித்து அனுபவித்து வாழ்கிறவர் அவர். அவருக்கு அவருடைய வாழ்க்கை தனிப்பெரும் கவிதை ஆகும். வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் சிறு சிறு மணிக் கவிதை தான் அவருக்கு.

இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் – புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள் கிருஷ்ண பிள்ளையைக் கிருஷ்ண பிள்ளையாக மதிப்பதில்லை. ‘அந்த லூஸ்’ என்றும், ‘செமி’ என்றும், ‘அரைக் கிறுக்கு’ ‘பைத்தியம்’ ‘அப்பாவி’ என்றும் குறிப்பிடுவார்கள். இப்படிப் பல பொருள்களையும் குறிக்க உபயோகப்படும். ‘சொள்ளமுத்து’ என்றும் ஒரு பெயரை அவருக்குச் சூட்டியிருந்தார்கள் பலர்.

இப் பெயர்களெல்லாம் அவருக்குப் பொருந்தும் போலும் என்று தோன்றும், கிருஷ்ண பிள்ளையின் நடவடிக்கைகளைக் கவனிக்கிறவர்களுக்கு.

வீதி வழியே – நாகரிகம் வேகமாக அலை புரளும் பெரிய ரஸ்தாக்களாயினும் சரி; ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சிறு தெருவாயினும் சரி; தேனீக்கள் மொய்ப்பது போல் ஜனங்கள் முட்டி மோதி ஆய்ந்து கொண்டிருக்கும் சந்து பொத்துகளாயினும் சரியே. எந்த இடமாயினும், எந்த நேரத்திலெனினும் – அவர் நடந்து போகிறபோது, அவரது கண்களில் தனி ஒளி சுடரிட, உதடுகள் சிறு சிரிப்பால் நெளிய, முகமே தன் னிறைவாலும் ஒருவித ஆனந்தத்தினாலும் பிரகாசிக்க (அல்லது அசடு வழிய) அவரே ஒரு வேடிக்கைப் பொருளாகக் காட்சியளிப்பார். அவரை அப்படிப் பார்க்க நேரிடுகிறவர்கள் ‘பைத்தியம் போலிருக்கு!’ என்று எண்ணாதிருக்க இயலாது. அவர்கள் என்ன கண்டார்கள், கிருஷ்ண பிள்ளை அந்நேரத்தில் கவிதா மயமான தனியொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்; ஸ்துாலமான இந்த உலகிலே அவர் உள்ளம் நிலை பெற்றிருக்கவில்லை என்பதை?

மினுமினுக்கும் உடலும், டக் டக் என்று மிடுக்கான ஒலி எழுப்பும் நடையும், கம்பீரத் தோற்றமுமாய் தகதகக்கும் புரவி மிது ஜம்மென வீற்றிருக்கிறார், வேறே யாரு? நம்ம கிருஷ்ண பிள்ளைதான். வீதி வழிப் போவோர், வீட்டு வாசலில் நிற்போர், சாளரத்தின் பின் சந்திர உதயம் சித்திரிப்பவர்கள் எல்லோரும் அவர் உலா வருகிற நேர்த்தியிலே கண்ணை மிதக்கவிட்டு, மனசை அவர்பின் போகவிட்டு உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறார்கள். ‘மச்சு வீட்டுச் சன்னலின் பின் – அச்சடிச்ச பிக்சரென– வந்தாளே ஒருத்தி – நின்று பார்த்தாளே அவளும்!’ என்று அவர் உள்ளம் கவிதை செய்ய முயல்கிறது. அவர்மீது அவள் காதல் கொண்டு விடுகிறாள். பார்க்கப் போனல் எல்லா அழகிகளும் அவர் மீது காதல் கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும், விண் மீன்களிடையே முழுமதி போல, அழகியரிடையே தனித்தன்மை பெற்ற பேரழகி அவள். யாராக இருந்தாலென்ன! அவரிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது. கண்டவுடனேயே காரிகையர் மோகம் கொண்டுவிட வேண்டியதுதான். வேறே வழி’ கிடையாது! இந்த அழகியும் இளநகை சிந்தி, சொகுசாகப் பார்க்கிறாள். பிறகு, தனது நினைவாக இருக்கட்டுமே என்று தூது அனுப்புவாள் போல் தன் கரு நெடுங் கூந்தலின் சுருள்கற்றை ஒன்றை அவர் பக்கம் வீசுகிறாள்…

கிருஷ்ண பிள்ளை நடந்து செல்கிறார். வெயிலாவது வெயில்! திடீரென்று ஒரு கார் அவர் அருகே வந்து நிற்கிறது. ‘ஹல்லோ மிஸ்டர் கிருஷ்ண பிள்ளை!’ என்று குயில் குரல் தேன் பாய்ச்சுகிறது அவர் செவியில், ‘வெயிலில் நடந்து போகிறீர்களே? காரில் ஏறிக் கொள்ளுங்கள்’ என்கிறாள் காரோட்டி வந்த மோகினி. இள வயது மங்கை கண்ணுக்கு நல்விருந்து. அவள் பேச்சு கசக்கவா செய்யும்? அவர் அவள் அழைப்பை ஏற்றுக் கொள்கிறார் ‘குட்டிச் சிறு குடிலில் குமை கிறீர்களா? ஐயோ!…அருமையான பங்களா உங்களுக்குக் காத்திருக்கிறது’ என்கிறாள்…அவள் யாரோ? எங்கிருந்து வந்தவளோ? அவரை அவள் எப்படி அறிந்து கொண்டாள்? இந்தச் சில்லறை விஷயங்கள் பற்றிப் பிள்ளையின் கவி உள்ளம் ஏன் கவலைப்படவேண்டும்? கனவு காண்பது அதன் இயல்பு. கனவுகளை வளர்ப்பது அதன் உரிமை. அதன் தொழிலை அது ஒழுங்காகச் செய்தால், குறுக்கே விழுந்து யார் தடுக்க முடியும்…?

பெரிய பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. கிருஷ்ண பிள்ளை ‘ஜாலி மூடி’ல் இருக்கிறார், பஸ்ஸின் பின்புறம் நின்று ஒரு பஸ்ஸைப் பிடித்து இழுக்கிறார் பஸ் ஒட இயலவில்லை. அதன் சக்கரங்கள் சுழன்று கொண்டு தான் இருக்கின்றன. ஆயினும் பஸ் முன்னேற முடியாது திணறுகிறது. வீமன், ஹெர்குலிஸ் போன்ற பலசாலிகளின் தம்பியாகி விட்டார் கி. பிள்ளை. அவர் விளையாட்டாகப் பிடித்திழுத்து நிறுத்தியிருக்கிற போது, பஸ் திமிறிக் கொண்டு ஓடிவிட முடியுமா என்ன?

பஸ் முன்னேற இயலாது உறுமுவதையும், டிரைவரும் பிரயாணிகளும் திகைத்துக் குழம்புவதையும் கவிக் கண்ணால் காணும் கிருஷ்ண பிள்ளைக்குச் சிரிப்பாணி அள்ளிக் கொண்டு வருகிறது. அருவி மாதிரிச் சிதறி உருளுகிறது.

தெருவோடு போகிறவர்கள், விஷயம் புரியாமல், ஆசாமிக்குப் பைத்தியம் போல் இருக்கு! என்று எண்ணினால், அதற்குப் பிள்ளை அவர்களா பொறுப்பு?

கிருஷ்ண பிள்ளையின் உள்ளம் கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம்! அங்கே குமிழியிடுகிற எண்ணங்களை, கனவுகளையெல்லாம் இவர் எடுத்துச் சொல்வதில்லை. சொன்னால் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல்தான் மற்றவர்களுக்குக் கிடையாதே!

வெயில் நல்ல பட்டணத்து வெயில் காரோடும் பெரிய ரோடுகளில் தார் இளகி ஒடும். அங்கங்கே ஒடும் நீர் போல் கானல் ஜாலம் காட்டும். எல்லோர் மீதும் வேர்வை கொட்டும். வெயிலே நிலவென மதிப்பார் போல, ரஸ்தா ஒரத்தில் நடந்து கொண்டிருப்பார் கி. பிள்ளை. அவர் உள்ளம் சொல்லும், ‘ஆகா! வெயில் எவ்வளவு அழகாக இருக்கிறது! வெயில் வெகு நன்று. அது மிக இனியது’ என்று.

இதை வாய்விட்டுச் சொன்னார் என்றால், எவர் தான் அவரைப் பாராட்டத் தயாராக இருப்பர்? ஒளிமயமாய் மிளிருகின்ற விரி வெளியை, நீலவானை, வெயிலொளியில் மின்னுகின்ற மரங்களின் பசிய இலைகளை, வண்ண வண்ணப் பூக்களை, பளிச்சிடும் கட்டிடங்கள், கார்கள், மாதர் புடவைகள், அனைத்தையும் விசாலப் பார்வையில் விழுங்கிய கண்கள் உள்ளத்தில் மீட்டிய உவகை கீதம் அது என்பதை எத்தனைபேர் புரிந்து கொள்ளச் சித்தமாக இருப்பார்கள்? வெயில் அழகாக இருக்கிறதாம்! மடையன்! சரியான மடச் சிகாமணி இவன். இந்த வெயிலில் இவன் மூளையும் இளகி நிற்கிறது போலும்! என்று தானே எண்ணுவார்கள்?

அப்படிச் சொல்லக் கூடியவர்களுக்காக அனுதாபமே கொள்வார் அவர். ‘மலரினில், நீலவானில்,மாதரார் முகத்திலெல்லாம் அழகினை வைத்தான் ஈசன்’ எவனோ ஒரு ஓவியன் காண்பதற்காக என்று ஒரு மகாகவி பாடியிருக்கிறார், அந்தக் கலைஞன் மட்டும்தான் ரசிக்க வேண்டுமென்பதில்லை. கண்ணும் மனமும் காலமும் பெற்ற எவரும் ரசித்து மகிழலாம், கிருஷ்ண பிள்ளை இம் மூன்றையும் பெற்ற பாக்கியசாலியாக்கும்’ என்று கிருஷ்ண பிள்ளையே உற்சாகமாகச் சொல்லுவார்.

கவிஞர்கள் பிறருக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும் காரியங்களைச் செய்வதில் ஆர்வம் உடையவர்கள் என்று சொல்லப்படுவது உண்டு. கிருஷ்ண பிள்ளை வாழும் கவிஞர் என்பதை அவரது செயல்கள் நிரூபிக்கும்.

பொதுவாகப் பலரும் மாலை நேரங்களில், முன்னிரவில், கடற்கரை செல்வார்கள். பிள்ளையோ காய்கதிர்ச் செல்வன் அனல் அள்ளிச் சொரிந்து கொண்டிருக்கும் பட்டப் பகலில் பீச்சுக்குப் போய் சுடுமணலைக் கடந்து, ஐஸ் மாதிரி ஜில்லென்று இருக்கும் அலை நீரில் நின்று களிப்பார். சாயங்காலம் அறை தேடி வ்ந்து முடங்கிக் கிடப்பார். மழை ‘சோ’ என்று பிடித்து விளாசும்போது, கடல் மணலில் ஹாயாக உலாவித் கொண்டிருப்பார். எதையாவது பார்த்துவிட்டு, அல்லது எண்ணிக் கொண்டு, ‘ஆகா, இந்த நேரத்தில் நான் உயிரோடிருப்பதற்காக நான் மிகவும் ஆனந்திக்கிறேன்… ஆகா, வாழ்வது அதிர்ஷ்டமான விஷயம் தான்’ என்பார். குதூகலம் கும்மாளியிடும் அவர் பேச்சிலே. அவருடைய மனப் பண்பு மற்றவர்களுக்கு–அவரோடு நன்கு பழகியவர்களுக்குக் கூட–புரியவில்லை என்றால் அவர் என்னதான் செய்ய முடியும்?

‘கிருஷ்ண பிள்ளை வறண்ட பேர்வழி. அவர் வாழ்க்கையும் வறட்சியானதே’ என்று, அவரை அறிந் தவர்கள் சிலர் அபிப்பிராயப்படுவது உண்டு. கோலக் கோதை துணையோடு குளுகுளு வாழ்க்கை அவர் வாழ வில்லை; எந்த ஒரு பெண்ணும் அவரைக் காதலித்த தாகத் தெரியவில்லை; அவரும் காதலின்பம், இல்லறம் என்றெல்லாம் பேசுவதில்லை என்பதனாலேயே அவர்கள் அவ்விதம் கருதினர். பிள்ளையின் புற வாழ்வைக் கொண்டே அவர்கள் அவ்விதம் மதிப்பிட்டனரே தவிர அவர் அவருக்காகத் தனியானதொரு அகவாழ்வு வாழ்கிறார் – அவரால் அப்படி வாழ முடியும் – என எண்ணினரல்லர்.

கிருஷ்ண பிள்ளைக்கு நாற்பது வயதுக்கும் அதிகமாகி விட்டது. அவர் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. கல்யாணம் செய்து கொண்டு எல்லோரையும் போல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஆசை தமக்கு இருப்பதாக அவர் காட்டிக் கொண்டதுமில்லை. சில உல்லாசிகளைப் போல் ஜாலி வாழ்வு வாழும் பண்பு பெறவுமில்லை அவர். அவருக்குச் சிநேகிதர்கள் என்று இரண்டு மூன்று பேர்கள் இருந்தார்கள். சிநேகிதி என்று ஒருத்தி கூட அவர் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடவில்லை. இதெல்லாம் அவரைத் தெரிந்தவர்களுக்குத் தெரியாதா என்ன?

கிருஷ்ண பிள்ளையின் நண்பர் நாராயணனுக்கும் இது தெரியும். ‘வறண்ட மனம் பெற்றவர் இவர்’ என்று நம்புகிறவர்களில் அவரும் ஒருவர். வறண்ட கோடை போன்ற பிள்ளை வாழ்வில் அவ்வப்போது குளுமை பரப்புகின்ற மென் காற்று தாமே தான் என்ற எண்ணம் அவருக்கு அடிக்கடி பிள்ளையைத் தேடி வந்து உற்சாகமாக உரையாடிச் செல்வார் அவர்.

அன்றும் நாராயணன் வந்தார். வழக்கம்போல் கிருஷ்ண பிள்ளை சோம்பிக் கிடப்பார், அல்லது, புத்தமும் கையுமாய்க் காட்சி தருவார் என்று எண்ணிக் கொண்டு தான் வந்தார். ஆனால் அவர் எதிர்பாராததை – எதிர்பார்க்க முடியாததை – அன்று காண நேர்ந்தது; பிறகு கேட்கவும் நேர்ந்தது.

அலமாரியிலிருந்தும் பெட்டிகளிலிருந்தும் புத்தகங்களை வெளியே எடுத்து எங்கும் பரப்பியிருந்தார் கிருஷ்ணபிள்ளை. அவற்றிடையே ஏதோ எண்ண ஓட்டத்தில் தம்மை இழந்தவராய் அவர் காணப்பட்டார். இத் தோற்றம் நாராயணனுக்கு ஆச்சரியம் அளித்தது. அதைவிட அதிக வியப்பாகத் திகழ்ந்தது, பிள்ளை தமது கையில் வைத்திருந்த ஒரு பொருள்.

அழகான சங்கிலி. சிறு சிறு மாம்பிஞ்சுகளைக் கோத்து மாலையாக்கியது போன்ற சங்கிலி மஞ்சளாக மினுமினுத்தது. பொன் போல் தோன்றும் பொருள். ஆனால் தங்கமல்ல. நாகரிகப் போலி அணிகளில் ஒன்று. அது பூரணமாகவுமில்லை. அது பட்டு நீளமாய் இருந்தது. புது மெருகுடன் பள பளக்கவுமில்லை அது. நாள் பட்டது போல் மங்கிப் பொலிவு குன்றிக் காணப்பட்டது.

இதை ஏன் இவர் இப்படிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? என்று குறுகுறுத்தது நாராயணன் மனம். ‘என்னய்யா அது? பொன் சங்கிலி மாதிரி இருக்கு. ஏது உமக்கு?’ என்று அவர் விசாரித்தார்.

கையிலிருந்த சங்கிலியைப் பார்த்தார் கிருஷ்ண பிள்ளை. நண்பரின் முகத்தைப் பார்த்தார். தொடர்ந்து அவர் கண்கள் வெறும் வெளியில் நீந்தின. பிறர் பார்க்க முடியாத எதையோ நோக்குவன போல் அவை நிலைபெற்று நின்றன. அவர் நீண்ட பெருமூச் செறிந்தார்.

‘என்னய்யா, என்ன விசேஷம்?’ என்று நண்பர் கேட்டார்.

‘அலமாரி பெட்டியை யெல்லாம் சுத்தப் படுத்த ஆரம்பித்தேன். ஒரு பெட்டியில் புத்தகங்களுக்கிடையே ஒரு காகிதப் பொட்டலம் கிடந்தது. என்னடா என்று பார்த்தால், இந்தச் சங்கிலி. இது அங்கே இருக்கும் என்ற நினைப்பே எனக்கில்லை, திடீரென்று இதைப் பார்க்கவும், அடுக்கடுக்காய்ப் பழைய நினைவுகள் எழுந்து, உள்ளத்தில் கிளர்ச்சி உண்டாக்கி விட்டன’ என்று கூறிய பிள்ளை மீண்டும் பெருமூச்சு விட்டார். கனவுக் காட்சிகளைக் கண்முன் கொண்டு வர முயல்கிறவர் போல் யோசனையில் ஆழ்ந்து விட்டார பிள்ளையின் போக்கு நண்பருக்கு அதிசயமாகப்பட்டது. என்ன விஷயம் என அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. ‘இது யார் சங்கிவி? என்று கேட்டார்.

‘உம்மிடம் சொல்வதற்கென்ன?’ என்று முன்னுரை கூறனார் கி. பிள்ளை. ‘நான் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. அந் நினைவுகளை நான் மறந்து விட ஆசைப்பட்டேன். என் மனக்குகை ஆழத்தில் அது புதையுண்டு விட்டதாகவே தோன்றியது. ஆனால் இந்தச் சங்கிலி அந் நினைவைப் படம் எடுத்து ஆடவைக்கும் மகுடியாகி விட்டதே!… ‘

மீண்டும் ஒரு பெருமூச்சு. நாராயணன் பார்வை அவரை அதிசயமாகவும், புதிதாக ஒருவரைப் பார்பபது போலவும் தொட்டது.அதைப் பொருட்படுத்தாமல் கிருஷ்ணபிள்ளை பேசினார். தமது நினைவுகளை உரக்கச் சிந்திப்பவர் போல், தமக்குத் தாமே பேசிக் கொள்ளும் தொனியில், அவர் சொல்லலானார்.

‘இப்போ சமீபத்தில் நிகழ்ந்தது போல் இருக்கு. யோசித்துப் பார்த்தால், பதினைத்து, பதினாறு வருஷங்கள் ஓடியிருப்பதாகப் புரிகிறது…ஊம்! காலம் ரொம்ப வேகமாகத் தான் ஒடுகிறது. அப்பொழுது எனக்கு இரு பத்தாறு வயசு, உமாவுக்கு என்ன, பதினேழு பதினெட்டு வயதிருக்கும். இருந்தாலும் அவள் சிறுமிதான். சரியான விளையாட்டுப் பிள்ளை…!’

‘உமாவா? யார் அது? நான் அவளைப் பார்த்திருக்கிறேனா?’ என்று கேட்டர் நாராயணன்.

‘நீர் பார்த்திருக்க முடியாது. நான் அப்பொழுது வேறொரு ஊரில் தங்கியிருந்தேன். ஏதோ அழுது வடிந்த ஆபீஸ் ஒன்றில் என்னவோ இழவெடுத்த உத்தியோகம் என்று வைத்துக் கொள்ளுமேன். ஆபீஸ், மேஜை, நாற்காலி எல்ல்ா ஜபர்தஸ்துகளுக்கும் குறை எதுவும் கிடையாது. அதிகாரி என்று ஒருவர் இருந்தார். அவரோ வருஷத்தில் முக்கால் வாசி நாள் லீவில் போய் விடுவார். பியூன் ஊர் சுற்றப் போய் விடுவான். நான் மட்டும் தான். தனிக்காட்டு ராஜா என்பார்களே, அது மாதிரி. நான் சோம்பேறியாக வளர்ந்ததற்கு இப்படிப்பட்ட உத்தியோகங்களே எனக்குக் கிடைத்து வந்ததும் முக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

ஆபீஸ் இருந்த வீட்டை ஒட்டி இன்னொரு வீடு. இரண்டுக்கும் ஒரே வராண்டா. அந்த வீட்டை ஒளி யுறுத்திக் கொண்டிருந்தவள் தான் உமா என் வாழ் விலும் மின்னல் போல் பளிச்சிட்டு மறைந்த பெருமை அவளுக்கு உண்டு. நான் எப்பொழுதும் போல் தான். சதா ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். அந்தப் பெண் அடிக்கடி கவனித்திருக்கக் கூடும். ஒருநாள் ஒரு சிறுவன அனுப்பி, படிப்பதற்குப் புத்தகம் வேண்டும் என்று கேட்டாள். கொடுத்தேன். இரண்டொரு நாள் பையன் வந்து போனான். பிறகு அவளே நேரில் வாசல்படி மீது வந்து நின்று புத்தகம் கேட்கத் துணிந்தாள். அப்புறம் மேஜை அருகிலேயே வர ஆரம்பித்தாள். படித்த கதைகளைப் பற்றி உரையாட முன்வந்தாள். பின், வம்பாடுவதில் உற்சாகம் காட்டினாள். திடீரென்று ஒருநாள் டம்ளரும் கையுமாக அழகுநடை நடந்து வந்தாள். ‘இப்ப நான் என்ன கொண்டு வறேனாம்’ என்று குழைவுக் குரலில் இழுத்தாள்,

‘எனக்கெப்படித் தெரியும்? ஃபஸ்ட்கிளாஸ் காப்பியாக இருந்தால் ரொம்ப நன்றி சொல்வேன்’ என்றேன்.

‘வேறு எதுவாகவாவது இருந்தால் சாப்பிட மாட்டீர்களா?’ என்றாள் அவள். அவள் முகத்தில் சிறிது வாட்டம் படர்ந்தது. ‘உங்களுக்குப் பாயசம் பிடிக்காது?’ என்று தயங்கியபடியே கேட்டாள்.

‘பேஷாகப் பிடிக்குமே!’

‘இன்று எங்கள் வீட்டில் விசேஷம். இந்தப் பாயசம் நானே தயாரித்ததாக்கும்’ என்று உமா டம்ளரை நீட்டினாள். நான் பருகி முடிக்கும் வரை பார்த்தபடி நின்று விட்டு, ‘எப்படி இருக்கிறது?’ என்று ஆவலோடு கேட்டாள்.

‘உன்னைப் போல் இருக்கிறது – ஜோராக, உன் பேச்சைப் போல் இனிச்சுக் கிடக்குது’ என்றேன்.

‘ஐயே மூஞ்சி!’ என்று சொல்லி, டம்ளரைப் பிடுங்கிக் கொண்டு ஒடினாள். அவளுக்குக் கோபம் இல்லை. ஆனந்தம் தான் என்பதை அவள் முக மலர்ச்சியும், துள்ளலும் குதிப்பும் காட்டிக் கொடுத்தன.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாய் இது வளர்ந்து வந்தது. அடிக்கடி காப்பி, கேசரி, பாயசம் என்று எதையாவது எடுத்து வந்து, ‘நான் செய்ததாக்கும். நான் செய்தேன்’ என்று விநியோகம் பண்ணுவாள். என் புகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்ப்பாள். நாளடைவில் அவள் ஒரு தொல்லையாகவே மாறி விட்டாள். ‘ஓயாமல் என்ன படிப்பு? நான் தலையைக் காட்டியதுமே புத்தகத்தை மூடி விட வேண்டாமா?’ என்று சொல்லி, நான் படிக்கும் புத்தகத்தைப் பிடுங்கி வீசி விடுவாள். எனக்கு வரும் கோபத்தைக் கண்டு கலகலவெனச் சிரிப்பாள். உமாவின் போக்கு எனக்கு வருத்தம் அளித்தாலும் அவள் பேச்சும் சிரிப்பும் மிகுந்த மகிழ்வுதான் தந்தன.’இன்பக் கதைகள் எல்லாம் உன்னைப் போல் ஏடுகள் சொல்வதுண்டோ?’ என்று அவள் கன்னத்தைத் தட்டி, விளையாட்டாகக் கிள்ள வேண்டும், நீண்டு தொங்கும் பின்னலைப் பிடித்திழுக்க வேண்டும் என்ற துடிப்பு எனக்கு எழும். அதைத் தடுத்து விடும் உறுதி எனக்கு இருந்ததுமில்லை. ஆ, சென்றுபோன அந்த இன்ப நாட்கள்!’

கிருஷ்ண பிள்ளை நினைவுச் சுழலிலே சிக்கி விட்டார் என்று தோன்றியது. சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தார் அவர்.

‘சரி ஐயா, இந்தச் சங்கிலியைப் பற்றிக் கேட்டால் நீர்பாட்டுக்கு அளக்க ஆரம்பித்து விட்டீரே?’ என்று கெண்டை பண்ண ஆசைப்பட்டார் நாராயணன். ‘மனுசன் வள்னு எரிஞ்சு விழுந்தாலும் விழுவான்! அவன் போக்கிலேயே சொல்லட்டுமே’ என்று அவர் மனம் லகானைச் சுண்டியது.

கிருஷ்ண பிள்ளை தொடர்ந்து சொன்னார்: ‘ஒரு சமயம் நான் சுவாரசியமாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். உமா பூனை போல் வந்திருக்கிறாள். அது எனக்குத் தெரியாது. படீரென்று புத்தகத்தைப் பிடித்து இழுக்கவும் நான் திடுக்கிட்டேன். அவள் விஷமச் சிரிப்போடு அதை வெடுக்கென்று பிடுங்கினாள். நான் பலமாகப் பற்றியிருந்தேன். எங்கள் பலப் பரிசோதனையில் நடுவே திண்டாடிய புத்தகத்தில் ஒரு தாள் கிழிந்து விட்டது. அருமையான புத்தகம் பாழாகி விட்டதே என்ற ஆத்திரம் எனக்கு. வெறி உணர்வோடு அவள் கன்னத்தில் ஓங்கி ஒர் அறை கொடுத்தேன். ‘சனியன்! படிக்கையிலே வந்து தொந்தரவு கொடுப்பது மில்லாமல் புத்தகத்தை வேறே நாசமாக்கி விட்டதே’ என்று முணுமுணுத்தேன். அவள் முறைத்து நோக்கினாள். ‘அதற்காக இப்படித்தான் பேய் மாதிரி அறையணுமோ? சாந்தமாகச் சொல்றது!’ என்று முனகிவிட்டு வெளியேறி விட்டாள்.

கிழிபட்ட புத்தகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபமும் ஆத்திரமும் இருந்த போதிலும், அறிவு தன் குரலைக் காட்டலாயிற்று. அவளை நான் அடித்தது தப்பு. கை நீட்டி அடித்திருக்கக் கூடாது. அந்நியளான ஒரு பெண்ணைத் தொட்டு அடிப்பது என்றால் மற்றவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள்? என்றெல்லாம் என் எண்ணமே என்னைச் சுட்டது. அதனால் மனக் குழப்பமும் வேதனையும் ஏற்பட்டன. எனக்கு வேறு வேலையே ஓடவில்லை. அவளே நினைவாகி என் உள்ளத்தை நிறைத்து நின்றாள். அவள் திரும்பவும் வந்ததும் அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.

அவள் பிறகு அன்று முழுதும் எட்டிப் பார்க்கவே யில்லை. மறு நாளும் உமா வரவில்லை. அடிக்கடி வந்து, விளையாட்டுகள் காட்டி, இனிக்க இனிக்கப் பேசும் யுவதி வராமல் நின்றுவிட்ட பிறகே, அவள் என் பொழுதை எப்படிப் பொன் மயமாக்கிக் கொண்டிருந்தாள் என்பது புரிந்தது. அவள் வராததனால் வெறுமையாகி விட்ட காலம் சுமையாய்க் கனத்து தொங்கியதாகத் தோன்றியது. ‘உமா, நீ இனிமேல் வரவே மாட்டாயா?’ என்று ஏங்கியது என் உள்ளம்.

மறுநாள் அவன் வந்தாள் – இருட்டறையில் புகும் ஒளிபோல. ஒளி வெள்ளத்தில் மினுமினுக்கும் எழில் மலர்போல் திகழ்ந்தாள் அவள். என் உள்ளத்தைத் தாக்குகின்ற ஒரு படையெடுப்புமாதிரி வந்து, அசைந்தாடி, செயல் புரிந்த உமாவின் பார்வையும் சிரிப்பும் அசைவும் நெளிவும் என்னைக் கிளர்ச்சியுறச் செய்தன. ‘உமா, என்ன மன்னித்து விடு’ என்றேன்.’மன்னித்தோம்’ என்று ஒரு ராணியின் மிடுக்கோடு அவள் சொன்னாள். அருவியெனச் சிரிப்பை அள்ளித் தெளித்தாள். பிறகு, இயல்பான சுபாவத்தோடு பேச்சை எங்கெங்கோ திருப்பி விட்டாள்.

அவளுக்கு என் மீது அளவற்ற அன்பு என்று எனக்குப்புரிந்து விட்டது. எனக்கு அவளிடம் ஆசை ஏற்பட்டிருந்தது. அவளேக் காணமுடியாத நாளெல்லாம் பலனற்ற நாளே என்றும் பட்டது. என் வாழ்வைப் பயனுள்ளதாக, இனிமை நிறைந்ததாக மாற்றுவதற்கு அவள் என் துணைவியாக வேண்டும் என்று என் மனம் ஜபம் புரியத் தொடங்கியது. அவளுக்கும் அந்த ஆசை இருந்தது. அதை நான் சிறிது சிறிதாக உணர்ந்து கொள்ள முடிந்தது-

ஒரு நாள் உமா ஒய்யாரமாக வந்து நின்றாள். ‘இன்று என்னிடம் என்ன புதுமை சேர்ந்திருக்கிறது, சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றாள். நான் அவளே மேலும் கீழுமாக நோக்கினேன். எனது தாமதத்தையும் மெளனத்தையும் பொறுக்க முடியாதவளாய் அவள் கத்தினாள். ‘ஏ மக்கு கண்ணு கூடத் தெரியலியா என்ன?’ என்று கேட்டு, அவள் விரலால் கழுத்தைச் சுட்டினாள். மாம்பிஞ்சுகளைக் கோத்து ஆரமாக்கியது போன்ற இந்தச் சங்கிலி அவள் கழுத்தைச் சுற்றி மின்னி அழகு செய்தது. என் கண்கள் மகிழ்வின் சுடரொளி காட்டின. ‘ஆகா, ரொம்ப அழகாக இருக்கிறது. உமா, ஜம்மென்று, ஜோராக இருக்கு’ என்று பாராட்டினேன்.

அவளுக்கு மகிழ்ச்சியாவது மகிழ்ச்சி! நீரூற்று போல் பொங்கிப் பொங்கி வழிந்தது குதூகலம். அவளே கும்மாளமிட்டுக் குதிகுதி என்று குதித்தாள். ஆடிப் பாடினாள் அந்த உற்சாகத்தில் அவள் என்னவோ சேட்டை செய்யவும் எனக்கு எரிச்சல் வந்தது. என் ஆத்திரத்தைத் தூண்டி ஆனந்தம் அடைய விரும்பியவளாய் அவள் மேலும் விஷமம் செய்தாள். நான் அவள் தலைப் பின்னலைப் பிடித்து இழுத்து, மண்டையில் நறுக்கென்று ஓங்கிக் குட்டுவதற்காகக் கை வீசினேன். அவள் இரட்டைப் பின்னல் போட்டு, ஒன்றைக் கழுத்தின் பக்கமாக முன்னே துவள விட்டிருந்தாள். வேகத்தில் என் கை கழுத்துச் சங்கிலியையும் சேர்த்து இழுத்து விட்டது. சங்சிலி அறுந்து போயிற்று. இதை நானோ, அவளோ எதிர்பார்க்கவில்லை.

முழுதலர்ந்த பெரிய புஷ்பம் போல களி துலங்கப் பளிச்சிட்ட அவள் முகம் அனலில் சுடப் பெற்ற கத்திரிக்காய் மாதிரிச் சுருங்கிக் கறுத்தது. அவள் கண்களில் நீர் வழிந்தது. உதடுகள் துடித்தன. ‘என் சங்கிலியை அறுத்து விட்டீர்களே. அம்மாவிடம் நான் என்ன சொல்வேன்?’ என்று துயரத்தோடு முணுமுணுத்தாள் உமா.

என் புத்தகத்தை அவள் கிழித்துவிட்டாள் என்று நான் அடைந்த கோபமும் வெறியும் என் நினைவில் மின்வெட்டின. அவள் இப்போது சீறிப் பாய்ந்திருக்கலாம். வெகுண்டு ஏசியிருக்கலாம். வெறியோடு எதையாவது எடுத்து என் மூஞ்சியில் வீசி அடித்திருக்கலாமே. அவள் அவ்வேளையில் எது செய்தாலும் அது நியாயமாகத் தான் இருந்திருக்கும். ஆனல் அவளோ வேதனையால் குமைந்து குமுறினாள். கண்ணீர் வடித்தபடியே வெளியேறினாள். அறுந்த சங்கிலியை எடுத்துச் செல்லவுமில்லை.

விதி என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது மனிதர் வாழ்க்கையில் குறுக்கிட்டு விளையாடுவதில் அதிக உற்சாகம் காட்டுகிறது என்றும் தோன்றுகிறது. நமக்குப் புரியாத – நம்மால் புரிந்து கொள்ள முடியாத – பல விஷயங்களுக்கு நாம் இப்படித்தான் சமாதானம் கூறிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

உமாவை என் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட வைத்த விதி குரூரமாக விளையாடி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

சங்கிலியை வாங்கிக் கொள்ள உமா வருவாள் என்று நான் எண்ணியிருந்தேன். மறு நாள் அவள் வீடு பூட்டிக் கிடக்கக் கண்டேன். உமாவும் அவளது பெற்ருேரும் அயலூர் எங்கோ போயிருப்பதாகத் தெரிந்தது. அவள் திரும்பி வருவதற்குள் சங்கிலியை ஒர் ஆசாரியிடம் கொடுத்துச் சரியாகப் பற்ற வைத்து விடலாம் என்று நான் ஆசைப்பட்டேன். நாளைக்குப் பார்க்கலாம்; நாளை ஆகட்டும் என்று வாய்தா போட்டு வந்தேன். அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது, முடிவில்.

அவர்கள் சென்றிருந்த ஊரில், வேகமாகப் பரவிய விஷ ஜுரத்துக்கு உமாவும் பலியாகி விட்டாள் என்று செய்தி கிடைத்தது. எனக்குப் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஆற்ற முடியாத பெருந்துயரை அடைந்து விட்டதாகவே கருதினேன். பாவிகள் எவ்வளவோ பேர் இருக்க, சாவு எனும் தண்டனையை அடைய வேண்டிய கயவர்கள், கொடியவர்கள் எவ்வளவோ பேர் இருக்க, புது மலர் போன்றவளை – வாழ்வின் வாசல் படியிலே இப்பொழுதுதான் அடியெடுத்து வைத்திருந்த யுவதியை – களங்கம் எதுவும் இல்லாத இனியாளை – பாவ நினைப்பையே அறிய முடியாத புனிதத்தை மரணம் ஏன் திருகி எறிய வேண்டும்? இந்த உலகத்தில், மனித வாழ்க்கையில் நீதி நியாயம் தர்மம் என்பதெல்லாம் உண்மையாகவே செயல்படுகின்றனவா?

இவ்வாறு அடிக்கடி என் மனம் உளையும். எனது வாழ்வே அர்த்தமற்றுப் போனதாகத் தோன்றியது. உமாவோடு நிகழ்ந்த கடைசிச் சந்திப்பு வேதனை தந்ததாக அமைந்ததே என்ற வருத்தம் வேறு. எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. நான் அந்த ஊரைத் துறந்து எங்கள் சொந்த ஊரை அடைந்தேன். அமைதி என்பதை அறியமுடியாத சுழல் காற்றைப் போல் அங்குமிங்கும் அலைந்து திரிந்தேன். பலப்பல வேலைகளைப் பார்த்தேன். காலம் எனும் வைத்தியன் என் மன வியாதியை ஒருவாறு குணப்படுத்தினான். ஆயினும் நான் உமாவை முற்றிலும் மறந்தவனல்லன். அவள் நினைவு கோயில் கொண்டு விட்ட என் உள்ளத்திலே வேறு எந்தப் பெண்ணுருவமும் எட்டிப் பார்த்து இடம் பிடிக்க முடியவில்லை……’

கிருஷ்ண பிள்ளை பெருமூச்செறிந்தார். ‘இந்தச் சங்கிலியை ஏதோ ஒரு பெட்டியில் போட்டிருந்தேன். அதை நான் மறந்தே போனேன். இன்று தற்செயலாக இது என் கையில் கிட்டியது’ என்றார்,

‘காவியத்தில், கதைகளிலே வருவதுபோல் இருக்கிறது. சாதாரண நபராகத் தோன்றும் உம்முடைய வாழ்வில் கூட சோக காவியம் அரங்கேறி, திடுமென முற்றுப் பெற்று விட்டது போலும்! அல்லது, இன்ப நாடகம் தொடக்கமாகிச் சோகக் கதையாக முடிந்து விட்டது என்று சொல்லலாம்’ என்று நாராயணன் கூறினர். ‘எனக்கு உம் மீது பொறாமை உண்டாகிறது ஐயா. உண்மையாகத் தான் சொல்கிறேன். உம்மை ஒருத்தி காதலித்தாள். காதலித்த பெண்ணுக்காக நீர் உமது வாழ்க்கையையே தியாகம் செய்து கொண்டிருக்கிறீர். இச் சங்கிலி – புனிதமான காதல் சின்னம் – ஒரு காவியப் பொருளாகவே தோற்றம் அளிக்கிறது’ என்றார். இன்னும் விரிவாகப் பேசிவிட்டுப் போனார்.

அவர் போன பிறகும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் கிருஷ்ணபிள்ளை. ‘ஊம். கொடுத்து வைக்கவில்லை! நான் சுவையாகச் சொன்ன நிகழ்ச்சியை யெல்லாம் நானே என் வாழ்வில் அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை! என்றோ ஒரு நாள் ரயில் வண்டியில், பெஞ்சு அடியில் கண்டெடுத்த காகிதப் பொட்டலத்தில் இருந்தது இந்தச் சங்கிலி. எந்தச் சிறு பெண் அணிந்ததோ? அறுபட்டு மறதியாக யாரால் விடப்பட்டதோ? உமா என்றொரு விளையாட்டுப்பெண் என் வாழ்வில் குறுக்கிட்டிருந்தால், என் வாழ்க்கை இன்னும் இனிமைமிக்கதாக – பசுமை நிறைந்ததாக – வளமுற்றிருக்கக் கூடும். காலம் தான் வஞ்சித்து விட்டதே!’ என்று முணுமுணுத்தார்.

அவருக்குச் சிரிப்பு எழுந்தது. ‘நாராயணன் நம்பி விட்டான்! ஆளுக்குள்ளே ஆளு என்பது போல, கிருஷ்ண பிள்ளையின் உள்ளே புதிரான, மர்மமான ஆளு மறைந்திருப்பது நமக்கு இத்தனை நாட்கள் தெரியாமல் போய் விட்டதே என்று எண்ணுவான். வேண்டியவர்கள், தெரிந்தவர்களிடம் எல்லாம் இதைச் சொல்லுவான். நாமும் எல்லோரிடமும் இதே பிளேட்டை வைக்க வேண்டியது தான். அங்கிங்கே சுவை சேர்க்கும் நகாசு வேலைப்பாடுகளைக் கூட்டிக் கொண்டால், இன்னும் ரசமாக இருக்கும்!’ என்று அவர் எண்ணினார்.

கிருஷ்ண பிள்ளைக்குக் கை கொஞ்சம் நீளம் தான் – பிறர் பாக்கெட்டில் போட்டு வெற்றிகரமாக வெளியே எடுக்கிற அளவுக்கு அல்ல! தனது முதுகில் தானே தட்டிக் கொள்கிற அளவுக்கு நீளம்!

நாளடைவில், உமா என்றொரு காதலி அவருக்கு நிஜமாகவே இருந்தாள், அவள் அவர் வாழ்வின் சிறு பகுதியை இன்ப வசந்தமாக மாற்றி விட்டு, திடீரென்று மறைந்து போனாள் என்று கிருஷ்ண பிள்ளையே நம்ப ஆரம்பித்து விடுவார். அதுவும் அவர் ஆற்றலுக்கு ஏற்றதாகத்தான் இருக்கும்.

– 1961

– ஆண் சிங்கம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *