“அவளைத் தொடர்வதை நிறுத்திக்கொள். வேலையை மட்டும் செய்.” எனது கைப்பேசி திரையை நண்பனின் அக்கறையான கோபம் பற்றவைத்தது.
ஆழ்ந்த உறக்கம் இன்னமும் என் கண்களில் இருந்து கழன்றவில்லை. எல்லாம் அமைதியாகி விட்டது என நினைத்தேன், இனிமேல் அலை காணா கடல் போல வாழ்க்கைச் செல்ல நினைத்தேன். ஆனால், அம்மாவாசையில் உள்வாங்கும் கடல் போல வாழ்வும், பொருளும், திறமையும், செயலும் அனைத்தும் உள்வாங்கியது.
இது யாவும் நடக்கும் என தெரிந்திருந்தால் அவளைக் கண்டிருக்க மாட்டேன்; பேசிருக்க மாட்டேன்; உதவிருக்க மாட்டேன்; உதவி கேட்டிருக்கவும் மாட்டேன்.
சிந்தனை சொல்லவில்லை சொன்னால் கேட்க மனமும் தயாராக இல்லை அந்நேரம். எல்லாருக்கும் ஆரம்பம் சரியாக தான் இருக்கும், முடிவுகள் கேள்விக்குறி தான்.
அலர் அவளது பெயர். அலர் என்றால் மலர்தல், பரந்து இருத்தல் என்று தமிழில் பொருள். பெயர் போலவே அவளும், சிந்தனையும், செயலும். நன்மதிப்பானவள் நலன் என்றும் பார்ப்பவள்.
“ இதை முன்கூட்டியே தெரிஞ்சால் ஞான் பேசியிருக்க இல்லா. சிரித்து பேசி பழகினேன் சரியான காரியம் செய்தாய் நீ “ ஆம் அவளது கேரளத்து தமிழில் சொற்களை முகத்தைத் தாண்டி மனத்திலும் காயம் படும்படி தூக்கி எரிந்துவிட்டு சென்றாள்.
கல்லூரி முடிந்து 3 ஆண்டுகள். பேச என் மனமும் இன்னமும் குணமாகவில்லை. அழுது கண்கள் பலநாள் வற்றிப்போனது தான் மிச்சம். அவளிடம் நடந்தவை விளக்க நினைத்து சிந்தனையும் வற்றியது தான் மிச்சம்.
அவளை நான் முதலில் கண்டது என் பக்கத்து வகுப்பில் தான்.
“ என்னடா நேற்று கொடுத்த வீட்டுப்பாடம் செய்யல தானே.. நானும் செய்யல.. ஒன்றாகவே மாட்டிட்டு வெளியாகிருவோம் இல்லைனா இரண்டு மணி நே… “ முடிக்கவில்லை.
அதற்குள், காலை எழுந்ததும் குருவிகளின் கீச் கீச் சத்தத்தின் ஆயிரம் மடங்கான கீச்சொலி, தொந்தரவு இல்லை இனிமையாக. சட்டென அதே இடத்தில் திரும்பி அப்படியே நின்றேன். மொத்த உலகை மழையில் இருந்து அடைக்காக்க அவளது கார்குழல் காதுகளின் ஓரத்தில் முத்தம் தரித்துச் சென்றன. கண்ணாடியின் மறுபதிப்பு அவள் கன்னங்கள். மூச்சுக்காற்றே வெளிவர அடம்பிடிக்க கூர்மையாக மூக்கு. ஒரே நொடியில் என்னை வேறு வழி இல்லை என்றாக்கிய விழி. அவள் தான் நான் சொன்ன அலர்.
எல்லாம் திரைப்படத்தில் வருவது போல இருந்தது. ஆனால், எல்லாம் உண்மையாய் இருந்தது; கற்பனை அன்று. ஒருமுறையாவது பேசிவிட வேண்டிய மனத்துக்கு என்னால் ஆறுதல் ஏதும் சொல்ல இயலவில்லை. அவள் இருந்த இடங்களில் எல்லாம் தரைத் தேய்த்தேன். பேசி விடுவாள் என்னும் நம்பிக்கையில்.
அவளிடம் பேச எண்ணி சோர்ந்துப்போன ஒருநாளில், “ அலோ” திரும்பினேன்.
“ நான் அலர். எனக்கு ஓர் உதவி செய்யனும். இந்த அசைன்மென்ட் புரிய இல்ல. நான் தாமதமாக சேர்ந்ததால் எனக்குப் பிடிபடவில்லை. நீங்கள் தான் கடந்த ஆண்டு இதனில் சிறந்த மாணவன் என்ற பாராட்டு பெற்றீர்கள் என்று தோழி சொன்னால். உதவ முடியுமா ? “ அவள் நிற்காமல் ஓடும் நதிபோல் சொல்லி நின்றாள்.
அவளது மொத்த அழகும் என் இருசெவிகளையும் அடைத்து விட்டிருந்தது. எதுவும் பேசவில்லை, பார்வை அவளது கண்கள் விட்டு விலகவில்லை. யாரையும் முன்பின் இப்படி பார்த்ததும் இல்லை. “ அமுதா ! “ நண்பன் உசுப்பினான்.
“ ஆ..ஆம்.. கண்டிப்பாக செய்து தருகிறேன் “ என்னென்னமோ பேச நினைத்திருந்தேன் எல்லாம் நொடியில் காற்றாகி சென்றன. அவளே பேசுவாள் என நினைக்கவில்லை. இரண்டே நாளில் சரியாக உறக்கமும் இல்லாமல் அவளுக்கு உதவி செய்தேன்.
பின்னர் என்ன. எல்லாம் நான் இதுவரை நம்பிராத இறைவனின் அருளோ என்னவோ அவளே கல்லூரியாய் ஆகி போனது. பின்தொடர்ந்து சுற்றினேன், இப்பொழுது அவளுடனே சுற்ற தொடங்கிவிட்டேன். அண்ணன், அமுதன் ஆனான். அழகான குரலில் அமுதன், யாருக்குக் கிடைக்கும் இப்பெரும் இன்பம்.
அன்று தொடங்கியது. என் காதல். காதலா ? அது எப்படி காதல் என்றாகும் ஆழமான அன்பு எனலாம். அவளிடம் மட்டும் குறையாமல் நிரந்தரமாக படர்ந்தது. அலரில் அலர்ந்தது. ஆனால், அவளிடம் என் விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. சிறு தடுமாற்றம் சொற்களைத் தடுத்துக்கொண்டே இருந்தது. இருந்தும், சொல்லிவிடுவேன் என்ற நம்பிக்கை அதிகம்.
என்னுடைய இறுதி ஆண்டு கல்லூரி, இறுதி வாரமும். எப்படியாவது சொல்லிவிட எண்ணினேன்.
“ அரசு, அவளிடம் சொல்லிவிட வேண்டும்டா. கடைசி வாரம். இல்லை இதோடு எல்லாமும் பறந்து சென்றுவிடும் “ என்ன சொன்னாலும் கேட்க ஒரு நண்பன் இருந்தான்.
“ அமுதா ! “ அவளது குரல் மீண்டும் முதலில் வந்தது போல பின்னால் இருந்து இசைத்தது. ‘அலோ’ இல்லை அமுதனாக.
“ அலர், நானே உன்னை பார்க்கவேண்டும் என்று தான் நினைத்தேன். உன்னிடம் ஒன்று சொல்ல வே…” எனது வேண்டும் கூட அவள் முழுதாக கேட்காத அளவிற்கு அவளது செவிகளை ஏதோ அடைத்து இருந்தது.
“ இதை முன்கூட்டியே அறிந்திருக்கையில் ஞான் பேசியிருக்க இல்லா. சிரித்து பேசி பழகினேன் சரியான காரியம் செய்தாய் நீ “ நான் கொடுத்த பிறந்தநாள் பரிசை வீசிவிட்டு சென்றாள்.
அவள் சொன்னதற்கான காரணம் தெரிய நாட்கள் ஆனது. புரியாதவனாய் இருந்தேன். அலர், மலருதல் மற்றும் பூ என்பதை அடுத்து அலர் எனும் சொல்லுக்கு, வேறொருவர் இரு தரப்பினரைப் பற்றி இல்லாத ஒன்றைப் பேசுவது என்று பொருள் உண்டு என நான் அறியும் போது அவள் என்னுடன் இல்லை. எனது அன்புபோல் அவளது அன்பு என்மேல் இல்லை என உணர்ந்தேன். பேச எல்லா முயற்சியும் செய்தேன், எதையும் கேட்க அவள் தயாராக இல்லை.
பிடிக்காத ஒன்றை வற்புறுத்துதல், மனிதத் தன்மையற்ற செயல். அதனால் அவளைத் தொந்தரவு செய்வதை விட்டேன். என்றோ ஒருநாள் நண்பனிடம் சொன்னேன் “இன்று சொல்லவில்லை என்றால் பறந்துவிடும்” என்று. மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது எதுவும் மறக்கவில்லை; அன்பும் பறக்கவில்லை.
அவள் மேல் கொண்ட அன்பை அவளிடம் நானாக சொல்லாமல், மூன்றாம் ஒருவர் மூலம் தெரிந்தது தவறு. நான் சொல்லாமல் இருந்ததும் தவறு. அவளது நட்பான அன்பை நேசம் என எண்ணியதும் தவறு. இங்கே எப்பொழுதும் பெண்ணின் அன்பை அவள் அனுமதி இல்லாமல் காதலாக எண்ணுதல் ஆணின் தவறுதான். அவள் வேண்டாம் என்று சொல்லியும் தொல்லைகள் செய்வது தவறு.
பெண் அன்பிற்கானவள். பெண்ணின் அடிப்படை அன்பு. அதனை புரிந்துக்கொள்ளுதல் காதல் என்னும் உறவின் முதல் கட்டளை.
“ அம்மா உங்களது கனவர் நல்லாதான் டைரி எழுதுகிறார். அன்பாகவும் அழகாகவும் அமைதியாகவும் “ மகிழ்.
“ இருக்காதா பின்னர் உன் அப்பாவை யார் என்று நினைச்சுட்டே நீ “
“ சரி. ஏன் அம்மா எல்லாரும் மதி என்று உங்களை அழைக்கிறார்கள். உங்கள் முழு பெயர் தான் என்ன? “.
“ அலர்மதி மா. ஏன் ? “
( அழகான அன்பிற்கு உண்மையான தோழன் காலம் ).