கானல் நீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 6,046 
 

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போறேன். நான் யாரு? கதை சொல்றவன்னு வச்சுக்கோங்க. அப்ப நீயும் இதக் கதைல வரியான்னு நீங்க கேட்டா இல்லைங்கறது தான் என் பதில். நான் கதாபாத்திரம் இல்லை ஜஸ்ட் எ ஸ்டோரி டெல்லர்.

இந்தக் கதைல ரொம்ப முக்கியமான பாத்திரம் நம்ம மனோகர். அவனுக்கு வயசு பதினாறு. அடிக்கடி கலையாத தலைமுடிய சரி பண்ணிக்கொள்ளும் இளைய தலைமுறை.

அவனோட சேர்ந்து இன்னும் ஒரு நாலு பாத்திரங்கள். அவனோட பிரெண்ட் ரமேஷ், அவன் சைட் அடிக்கற செல்வி, செல்வியோட அம்மா ராணி, செல்வியோட அப்பா ராஜமாணிக்கம். ‘ என் பேரச் சொல்லலியேன்னு’ மணி லொள் லொள் ன்னு குரைக்குது. மணி அவங்க வீட்டு நாய்.

மனோகர், ரமேஷ், செல்வி மூணு பேரும் ஒரே ஸ்கூல் தான். ஒண்ணா பேசி விளையாடிய நண்பர்கள். ஒண்ணா பஸ்சுல ஸ்கூல் போய் வருவாங்க. சேர்ந்து படிக்கறது, சேர்ந்து ஹோம் வொர்க் பண்ணறது அப்படின்னு எப்பவுமே மூணு பேரும் ஒண்ணாவே இருப்பாங்க.

அப்படி இருக்கையில மனோகர் மனசுல செல்வி மேல திடீர்னு ஒரு மூணு மாசம் முன்னாடி காதல் வந்துது. ஒரு நாள் ரமேஷ் உடம்பு சரியில்லாம லீவு போட்டுட்டான். இவங்க ரெண்டு பேரு மட்டும் ஸ்கூல் போயிட்டு வந்தாங்க. வரும்போது பஸ்ஸிலேர்ந்து மனோ முதல்ல இறங்கிட்டான். செல்வி இறங்கப் போகும்போது கண்டக்டர் விசில் கொடுத்திட்டார். சட்டுன்னு வண்டி கிளம்பின அதிர்ச்சில செல்வி தடுமாறி கீழே விழப்போனா. நம்ம மனோப் பையன் மட்டும் அவளைத் தாங்கிப் பிடிச்சிருக்கலேனா அவளுக்கு உடம்பே ரணகளமாயிருக்கும்.

ஆனாப் பாருங்க, அவளத் தாங்கிப் பிடிச்சதுனால மனோவுக்கு மனசு ரணகளமாயிருச்சு. அவளோட பேசி விளையாடி இருக்கானே தவிர தொட்டதெல்லாம் இல்ல. மொத மொதலா அவ ஒடம்ப அவன் கை தொட்டுது. அவன் ஒடம்புல சர்ருன்னு கரண்டு பாஞ்சுது. யப்பா! என்ன ஒரு அநியாயத்துக்கு மெத்து!

மனோ அந்த நிமிஷத்துல வயசுக்கு வந்துட்டான். மனசு பூரா காதல் வந்திருச்சு. அதிலேயும் செல்வி அவன ஒரு பார்வை பார்த்தா பாருங்க! சொல்லி மாளாது. பார்வையா அது? அப்படியே அவனுக்கு உள்ளார போயி அவனச் சாப்பிடுற மாதிரி ஒரு பார்வை! பொம்பளப் பிள்ளைங்களுக்கு யாரு தான் சொல்லித் தர்றாங்களோ!

மனோ அந்தப் பார்வைல அவளுக்கு அடிமை ஆயிட்டான். அவ ரொம்ப நேரம் அவனப் பார்த்துட்டு கடைசீல ‘தாங்க்ஸ் மனோ’ ன்னு சொன்னா. எப்பவும் ‘டா’ போட்டுப் பேசறவ, அன்னிக்கு அப்படிப் பேசல.

மனோ தன் மனசுக்குள்ளேயே ஹீரோ ஆயிட்டான். யாரு கிட்டேயாவது சொல்லிடணும்னு துடிச்சான். அப்புறம் ஏனோ தெரியல ஒரு ரெண்டு மூணு நாள் தன்ன அடக்கிகிட்டான். அதுக்கு மேல அவனால முடியல. ரமேஷக் கூட்டிக்கிட்டு அவங்க வழக்கமா சந்திக்கற இடத்துக்குப் போனான். அங்க போயி எல்லா விஷயத்தையும் அவன் கிட்ட சொல்லிட்டான்.

ரமேஷுக்கு ஆச்சரியம்.! மனோவா? செல்வி மேல காதலா? அவளுக்கும் ஓகேவா? கூடவே மனசுல ஒரு ஓரத்துல சின்ன வலி! தனக்கு ஏன் இது மொதல்ல தோணலன்னு நொந்துக்கிட்டான். இவனுக்கு வந்த வாழ்வான்னு கோவப்பட்டான். ஆனா வெளில மனோவ சப்போர்ட் பண்ற மாதிரி பேசினான்.

மனோ செல்வி காதல் யாருக்கும் தெரியாம, ஊர் கண்ணுல படாம எல்லாக் காதலையும் போல வளந்துது. ரமேஷும் தன பங்குக்குக் கூரியர் வேலையெல்லாம் செஞ்சான். இருந்தும் அவனுக்குள்ள இருந்த ஏமாத்தம் ரொம்பவே ஜாஸ்தியாகி ஒருநாள் மனோவுக்குத் தெரியாம செல்வி அம்மாகிட்டப் போட்டுக் கொடுத்துட்டான்.

இதக் கேட்ட ராணி (மறந்துட்டீங்க பார்த்தீங்களா? செல்வி அம்மாங்க!) அதிர்ச்சில ஒறஞ்சு போயிட்டா. ஒரு சாதாரணக் காதலுக்கேவான்னு நீங்க புருவம் ஒசத்தறது எனக்குப் புரியுது. மனோ வீட்டுல ஒரு கத இருக்கு. அவன் அப்பா வெளியூர்ல யாரையோ வச்சிக்கிட்டு இருக்கறதா ஒரு வதந்தி ஊருக்குள்ள இருக்கு. இதுதான் ராணியோட அதிர்சிக்குக் காரணம். மனோ அம்மா நல்லவதான். ஆனா குடும்ப கௌரவம்னு ஒண்ணு இருக்கே.!

செல்வியக் கூப்பிட்டு விசாரிச்சா. மொதல்ல இல்லன்னு மழுப்பின செல்வி கடசீல ஒத்துகிட்டா. ராணியோ இந்த மனோப் பய சகவாசமே கூடாதுன்னு சத்தியம் செய்யச் சொன்னா. செல்விக்குப் பிடிவாதம். காரணம் சொன்னாத்தான் செய்யுவேன்னு. வேற வழி தெரியாம ராணி பொண்ணுக்கு மனோ அப்பா கதயச் சொன்னா.

அதக் கேட்ட பிறகு நிதானமா செல்வி சொன்னா “அம்மா! மொதல்ல அவன் அப்பாக்கு அந்த தொடர்பு இருக்கான்னு யாருக்குமே நிச்சயமாத் தெரியாது. அப்புறம், அப்படி இருந்தாலும், அதுக்காக மனோ என்ன பண்ணுவான்?”

“அடிச் சிறுக்கி! அப்பன் புத்திதானே புள்ளைக்கு வரும்” என்றாள் ராணி.

அந்த மனோப் பய புத்திய உனக்கு நிரூபிச்சுக் காட்டறேன்னு ராணி சொல்ல எப்படி பண்ணுவேன்னு செல்வி கேக்க, இப்படி வாக்குவாதம் வலுத்துக்கிட்டே போயி அந்தப் ‘பெட்’டுல முடியும்ன்னு ரெண்டு பேரும் நெனைக்கல. நானும் தான் நெனைக்கல.

ராணி தன்னோட ப்ளானச் சொன்னா. கேட்ட செல்வி, ஒனக்கு புத்தி பெரண்டு போச்சும்மா. வேணாம் இந்த வெஷப் பரிச்ச. நான் அவன மறந்துடறேன்னு சொன்னா. ஆனா இந்த மனுஷ மனசு இருக்குப் பாருங்க அது ரொம்ப விநோதமானது. எப்ப எந்த விஷயத்தப் பிடிச்சிக்கிட்டுத் தொங்கும்னு சொல்ல முடியாது.

பேச்சுப் பேச்சா இருந்த சபைல திடீர்னு திரௌபதிக்கு அப்படி நேரும்னு யாரு நெனைச்சாங்க? அதே மாதிரி தான் இங்கேயும் நடந்தது. என்னன்னு கேக்கறீங்களா? அப்பன் மாதிரி தான் புள்ளைன்னு நிரூபிக்க ராணி போட்ட ப்ளான் இதுதான். தன் பொண்ணக் காதலிக்கறதாச் சொன்ன மனோகிட்ட நெருங்கிப் பழகி அவன் கவனத்த தெச திருப்பறது. அப்புறம் தன் பொண்ணு எதிர்ல அவன அவமானப்படுத்தறது.

செல்வி எத்தனைச் சொல்லியும் ராணி கேக்கல. ஒடனேயே தன் திட்டத்த ஆரம்பிச்சுட்டா. செல்வி அப்பா கடைலேர்ந்து தன் வேலைய முடிச்சிக்கிட்டு வீடு திரும்ப தெனமும் நேரம் ஆகும். என்ன நடந்ததுன்னு சுருக்கமா சொல்றேன் கேளுங்க.

அன்னியிலேர்ந்து செல்வி மனோவப் பாக்ககூடதுன்னு சத்தியம் வாங்கிக்கிட்டா. அப்புறம் மனோவ ஒரு நாள் கோவில்லு வச்சு பாத்தா. சிரிச்சா. அவனும் பதிலுக்குச் சிரிச்சான். இந்தச் சமயத்துல ராணிய பத்தி ஒரு ரெண்டு வார்த்த. அவளுக்கு ஊருக்குள்ள ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு.

ராணி மனோவோட அந்தக் கோவில்ல ரொம்ப நேரம் பேசினா. என்ன பேசினாங்கன்னு ரெண்டு பேருக்குமே தெரியாது. பேசும் போது நடுவுல தன் சேலத் தலைப்ப அடிக்கடி சரி செஞ்சுகிட்டா.

வெடலப் பையன் எதிர்ல விண்ணுன்னு ஒரு பொம்பள! எவ்வளவு நேரம் தான் தாக்குப் பிடிப்பான் நம் மனோ? அவன் சரிஞ்சுட்டாங்கறத அவளும் புரிஞ்சுகிட்டா. பொம்பளை இல்லையா?

சட்டுன்னு அவன் கையப் புடுச்சிகிட்டா.

“டே என்ன மன்னிச்சுடு. என்னமோத் தெரில. ஒன்னப் பாத்தா பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. நெறைய பேசணும் ஓங்கிட்ட. நாள மதியம் ஊர் கோவில் கொளத்தாண்ட வந்துடு. சரியா?”

“நிச்சயம் வரேங்க”

அடுத்த நாள் நடந்தது இதுதான். செல்வியக் கூட்டிக்கிட்டு மொதலிலேயே போயிட்டா. கொஞ்ச நேரம் கழிச்சு மனோ வந்தான். ஆனா அவன் செல்வியப் பாக்கல. ராணியோட மரத்துக் கீழ உக்காந்து பேச ஆரம்பிச்சான். ஒரு பதினஞ்சு நிமிஷம் பேசியிருப்பாங்க. ஆனா செல்விக்குப் போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. அவ அம்மா சொன்ன மாதிரி எதுவும் நடக்கல. சரி அம்மா போட்டில தோத்துட்டாங்கன்னு நினச்சா. அப்பத்தான் அது நடந்திச்சி.

பேசிகிட்டேயிருந்த மனோ திடும்ன்னு முன்னாடி எக்கி, ராணிக்கு ஒரு முத்தம் கொடுத்தான். ஒதட்டுல. திருவிளையாடல் படத்துல சிவாஜி பாடும்போது ஒலகமே அசந்து நிக்குமே அது போல செல்வி ஒறஞ்சு போயிட்டா. தான் மறஞ்சிருந்த எடத்துலேர்ந்து வெளில வந்தா. அவளப்பாத்த மனோ சிலை ஆகிட்டான்.

விடுவிடுன்னு அவங்க கிட்ட வந்து தன் அம்மாக் கையப் புடிச்சு இழுத்துக்கிட்டு நடக்க ஆரம்பிச்சா. “செல்வி..”ன்னு ஆரம்பிச்ச அம்மாவ “நீ ஜெயிச்சுட்ட. இப்ப சும்மா இரு” ன்னு அடக்கினா.

நாலடி நடந்துட்டுத் திரும்பி மனோவப் பாத்து ‘த்தூ’ன்னு துப்பினா.

மனோ மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி நடந்து தன் வீட்டுக்குப் போயிட்டான்.

அப்புறம் என்ன? அவங்க காதல் செடி கருகிப் போச்சு. ரெண்டு பேரும் அப்புறம் பேசிக்கல. ஸ்கூல் முடிச்சு வேற வேற ஊர்ல காலேஜ் சேந்து படிச்சு வேற வேற ஊர்ல வேலையும் தேடிக்கிட்டாங்க. செல்வி ரமேஷைக் கல்யாணம் கட்டிகிட்டா. மனோவுக்கும் இந்த சேதி கெடச்சுது. அவனுக்கும் கல்யாணம் ஆச்சு. ரெண்டு பேரும் அவங்க அவங்க வாழ்க்கைப் பாதைல பயணம் பண்ணாங்க.

ஆனாப் பாருங்களேன், அந்த மதியத்தையும், முத்தத்தையும் மறக்க முடியாம செல்வி வீட்டுல ஒரு ஜீவன் அடிக்கடி ராத்தூக்கம் தொலைக்கறது இவங்க ரெண்டு பேருக்கும் தெரியாது.

ஏன் ராஜமாணிக்கத்துக்கும் தெரியாது. ஆனா மணிக்குத் தெரியும். இருந்தும் அதுனால சொல்ல முடியாதே!

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *