திருதராஷ்டிரன், தன் மனக் குறையை வியாசரிடம் சொல்லிப் புலம்பினான்: ”பகவானே! சூதாட்டத்தால் எவ்வளவு தீமைகள் விளைந்து விட்டன? பீஷ்மர், துரோணர், விதுரன், காந்தாரி என எவருமே சூதாட்டத்தை விரும்பவில்லை. இது அறியாமை யால் நடந்து விட்டது. துரியோதனன் அறிவற்றவன் என்பது தெரிந்திருந்தும், புத்திர பாசத்தின் காரணமாக, என்னால் அவனை விட முடியவில்லை!”
அவனை அமைதிப்படுத்தி, ஆறுதல் கூறும் விதமாக வியாசர் பேசத் தொடங்கினார். ”திருதராஷ்டிரா, நீ சொல்வது உண்மையே! புத்திரனே மேலானவன். புத்திரனைக் காட்டிலும் உயர்ந்த செல்வமும் இல்லை. இந்த நிலையில் காமதேனுவுக்கும் இந்திரனுக்கும் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன், கேள்…” என்றவர் மேலும் விவரித்தார்.
”ஒரு முறை, பசுக்களின் தாயும், சொர்க்கத்தில் இருப்பதுமான காமதேனு அழுது கொண்டிருந்தது. இதைப் பார்த்து இரக்கம் கொண்ட இந்திரன், ‘மங்கலகரமானவளே! ஏன் அழுகிறாய்? தேவதைகள், மனிதர்கள், பசுக்கள் ஆகியோர் நலமாகத்தானே உள்ளனர்? சிறு விஷயத்துக்காக நீ இப்படி அழ மாட்டாயே! ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டான்.
கண்களில் நீர் வழிய நின்றிருந்த காமதேனு, ‘தேவேந்திரா, உனக்கு ஒரு கவலையும் இல்லை. ஆனால் நான், என் பிள்ளையை எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறேன்.
பலம் இல்லாத என் குழந்தையை தார்க்குச்சியால் குத்துகின்றனர். கலப்பையில் கட்டி அடிக்கின்றனர். உணவின் மீது ஆசைப்பட்டு, கஷ்டப்படும் என் கடைக் குட்டியை, மிகவும் துன்புறுத்துகின்றனர். இத்தனை வேதனைகளால் தளர்ச்சியுற்று கிடக்கும் என் பிள்ளையைப் பார்த்துதான் வேதனை எனக்கு!
பலம், பிராணன் எல்லாம் குறைந்து, இளைத்து, நரம்பெல்லாம் வெளியே தெரியும்படி இருக்கும், என் பிள்ளை படாதபாடு பட்டு பாரத்தைச் சுமக்கிறது. இதை எண்ணியே வருந்துகிறேன்” என்றது.
இந்திரன் விடவில்லை. ”காமதேனுவே! உனக்கு ஆயிரக்கணக்கான பிள்ளைகள். இருந்தும், இந்த ஒரு பிள்ளை கஷ்டப்படுகிறான் என்று இப்படி அழுகிறாயே?” என்றான்.
”தேவேந்திரா! எல்லா பிள்ளைகளும் எனக்குச் சமமானவர்கள்தான். இருப்பினும் கஷ்டப்படும் பிள்ளையின் மீதே இரக்கம் அதிகமாக உண்டாகிறது” என்று பதில் அளித்தது காமதேனு.
இதைக் கேட்டு, ஆச்சரியப்பட்ட தேவேந்திரன் ‘உயிரை விட, பிள்ளையே மேலானவன்’ என்பதை புரிந்து கொண்டான். உடனே பெரும் மழையை பெய்வித்தான். மழையால் பணிகள் நின்றன; மாட்டுக்கு விடுதலையும் ஓய்வும் கிடைத்தது. காமதேனுவின் துயரமும் தீர்ந்தது!”
– கதையைக் கூறி முடித்த வியாசர், ”திருதராஷ்டிரா! உன் பிள்ளைகளிடமும், உன் தம்பி பாண்டுவின் பிள்ளைகளிடமும் நீ பொதுவாக அன்பு செலுத்தினாலும், கஷ்டப்படும் பாண்டவர்களிடமே நீ அதிக அளவு அன்பு செலுத்த வேண்டும்!” என்றார்.
– பி.சந்த்ரமௌலி (மார்ச் 2008)