“நீங்கள் உங்கள் இலக்கை அடைந்து விட்டீர்கள்,” கூகுள் மேப்ஸ் பெண்மணி பெருமையுடன் அறிவித்தார்.

ரமேஷ் காரை நிறுத்தி விட்டு சுற்றிலும் பார்த்தான். ஒன்றாவது கிராஸ் ரோடும் மூன்றாவது கிராஸ் ரோடும் சந்திக்கும் அந்த இடத்தில் அவன் எதிர்பார்த்த ஹம்சா உணவகத்தைக் காணோம். நான்கு பக்கங்களிலும் வேலியிடப்பட்ட ஒரு காலி இடம் தான் அங்கு இருந்தது.
குழப்பத்துடன் தன் போனை மறுபடி பார்த்தான். அங்கு தான் ஹம்சா உணவகம் இருக்க வேண்டும் என்று கூகுள் அடம் பிடித்தது. எரிச்சலும் பசியும் கோபத்தைக் கிளற, அருகில் ஏதாவது நல்ல பீட்சா உணவகம் இருக்கிறதா என்று கூகுளிடம் கேட்டான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் வழி தவறிய இடத்திலிருந்து சிறிது தொலைவில், ஒரு பார் உணவகம் மதிய உணவிற்கு வந்த கூட்டத்தை அனுப்பி விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. யாரும் பார்க்காத எழுபது இன்ச் ப்ளாட்-ஸ்கிரீன் டிவியில், உள்ளூர் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்த செய்தியாளர் அப்பொழுது சொன்னது-
வட இந்திய உணவுப் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. நகரத்தில் ஒன்றாவது கிராஸ் ரோடும் மூன்றாவது கிராஸ் ரோடும் சந்திக்கும் இடத்தில் தங்களின் இரண்டாவது உணவகத்தை திறக்கப்போவதாக ஹம்சா உணவகம் அறிவித்துள்ளது.
பின் குறிப்பு: இந்தக் கதைக்கு தூண்டுகோலாக இருந்தது சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவம். அதைப் பற்றிய விவரம் இங்கே- https://au.news.yahoo.com/its-not-real-spooky-detail-on-google-maps-image-062956993.html