பிரளயகாலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 8,677 
 
 

”பீப்…பீப்…பீப்….”.—என் காதருகில் கர்ணகடூரமாய் போன் சத்தம்.,என் தூக்கத்தைக் கலைத்தது..

“சனியனே! உன் வாயை மூடித் தொலை.”

மூடிக் கொண்டது. என் குரலுக்குக் கட்டுப்படும். வாய்ஸ் ரெகக்னேஷன் சிப்—ன் ஜாலம்.. கணினியில் எக்ஸ்பர்ட் சிஸ்டமும், நாலெட்ஜ் இன்ஜினியரிங்கும், நுழைந்ததிலிருந்து ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் துறை வெகுவாகத் தேர்ச்சி பெற்று விட்டது.நேனோ டெக்னாலஜியும் கை கொடுக்க, இன்று அதன் வளர்ச்சியை கணிக்க முடியாது.

இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. இன்று நமக்காக அவைகள் யோசிக்கின்றன.. ஸோ யோசிக்காமல் இவர்கள் செய்துக் கொண்டிருக்கும் காரியம்—இனப்பெருக்கம். அசுர வேகம், உலகம் பிதுங்குகின்றது.. கார்ட்லெஸ்ஸை எடுத்தேன்.

“ஹேய்! கனோஜ்! “

கனோஜ்..?.,— என் வீட்டின் சேவகன், ,நிர்வாகி,கணக்கன். சம்பள உயர்வு,போனஸ் கேட்காத இயந்திரன்,வேலையாள், மின்னணு மூளை. பதிலுக்கு அது உணர்ச்சியில்லாதக் குரலில்.

“ அன்பரே!”—என்றது. வாய்ஸ் சிந்த்தஸைஸரின் மகாத்மியம்..

” ஏதும் செய்தி உண்டா?.”

“உணவுப் பொருட்கள் கையிருப்பு தீர்ந்துவிட்டன.. சரக்குகள் வந்தால் மட்டுமே நாளை உணவு கிடைக்கும்.”

“ ப்ளேஸ் த ஆர்டர்.”

“ சரியான வார்த்தைகளில் முயற்சி செய்யவும்.”

“ஓ! சரி சரி..உன்கிட்ட இது ஒரு சிக்கல். உணவுப் பொருட்களின் தேவைப் பட்டியலை கடைக்கு அனுப்பு. கூடவே பணப் பட்டுவாடா செய்ய வங்கிக்கு தகவல் தந்து விடு..”

சிந்தனையும், பேச்சும் கொண்ட மின்னணு இயந்திரங்கள் சரியாக கி.பி.2030 ல் புழக்கத்திற்கு வந்துவிட்டன. அவைகளிடம் இலக்கண சுத்தமாய் தமிழில் செப்பினால் மட்டுமே புரியும். அப்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கின்றன.. அரசின் சித்து வேலை இது. மக்களை சுத்தமான தமிழில் பேசவைக்கும் உத்தியாம். மனந்தளராத விக்கிரமாதித்தன் போல இன்னமும் கலப்பில்லாத தமிழுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாற்றமாய் மக்களிடம் கரன்ஸியின் புழக்கம் ஏறக்குறைய அற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.. அனைத்திற்கும் கிரெடிட் கார்டு மயம். அடுத்த சில வருடங்களுக்குள் கரன்ஸிகள் அச்சிடுவதை பாதியாகக் குறைத்து விடும் முடிவில் இருக்கிறது உலகம்.

“அன்பரே! இருபது நாட்களாய் கடைகள்,அலுவலகங்கள்,சாலை போக்குவரத்துக்கள், அனைத்தும் செயலிழந்துக் கிடக்கின்றன.. எதுவும் இயங்கவில்லை.இப்போது உலகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்து பற்றி உனக்குத் தெரியும்தானே?.”

“தெரியும். அதையொட்டி உலகம் முழுக்க தீவிரமாய் பந்த் அனுஷ்டிக்கப் படுகின்றன.. எங்கும் கிளர்ச்சிகளும், போராட்டங்களும், வன்முறைகளுமாய், ஒரே கொந்தளிப்பாய் இருக்கிறது. சரி..சரி..பாக்யா வரட்டும்.”

மீண்டும் அது ”அன்பரே! “—என்றது.

“ச்சூ! இப்போது என்ன. உன் பவர் செல்லை, தப்பு..தப்பு..சக்தி பெட்டகத்தை மாற்றணுமா?.”

“இல்லை உன்னு. . ”

“அதை நீ சொல்வதற்கு முன்னால் ஒரு குவளை குடிநீர் கொடு.”

“வருந்துகிறேன்.நேற்றைய நம் ஒதுக்கீடு தீர்ந்து விட்டது. இன்றைய ஒதுக்கீடு இன்னும் வரவில்லை.”

சே! என்ன கொடுமை இது. அறிவியலில் நாம் எங்கேயோ போய்விட்டோம்.ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸின் இரண்டாம், மூன்றாம் தலைமுறைகளை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம். ஜெனட்டிக் இன்ஜினியரிங்கில் பி-16 புரதத்தைக் கட்டுப்படுத்தி புற்று நோயை ஒழித்ததோடு நில்லாமல் என்றும் இளமையான,ஒரு மார்கண்டேயனுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்..மாலிக்யூலர் கம்ப்யூட்டிங்கில் எத்தனையோ வெற்றிகளை இந்த மனித குலம் பார்த்தாயிற்று. என்ன புண்ணியம்?. உணவுக்கும் தண்ணிருக்கும் ஆலாய்ப்பறக்க வேண்டியிருக்கிறது. மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் போக, பூமியில் தண்ணிர் மட்டம் நிரந்தரமாய் முந்நூறு அடிகளுக்குக் கீழே போய் விட்ட இயற்கையை என்ன செய்ய? காடுகள் பெருமளவு அழிந்து, .கரியமில வாயு கணிசமாய் பெருகி, அதனால் உலகம் சூடேறிப் போக, ஏழெட்டு வருஷங்களாகவே ஆவியாகும் கடல் நீரெல்லாம் மீண்டும் மழையாகப் பெய்கிறதுதான். ஆனால் கடலிலேயே கொட்டிக் கொண்டிருக்கிறது. விளைவு…? கடும் வறட்சியின் பிடியில் உலகம். சிரபுஞ்சி என்றைக்கோ பாலைவனமாகி விட்ட கொடுமையை என்ன சொல்ல?. ஊர்வன,பறப்பன,நீந்துவன ,அத்தனை இனங்களும் மனிதனின் தேவையில் ஒவ்வொன்றாய் உதிர்ந்துப் போய், எங்கும்..எங்கும்.. மனிதக் கூட்டங்கள். பரந்து,விரிந்து,வியாபித்து நிற்க, மனிதக் கழிவில் உலக உருண்டையே நாற்றமடிக்கிறது..

என்றோ அழிந்துப் போயிருப்போம்.கி.பி.2040-ல் ஏற்பட்ட பசுமைப் புரட்சி காப்பாற்றியது. .உப்பு நீரில் விளையும் சிலவகை நெல்,கோதுமை,காய்கறி ரகங்களை கண்டுபிடித்தது, இந்த நூற்றாண்டின் சாதனை. கடலிலிருந்து தண்ணீர் கால்வாய்களின் மூலம் நீண்ட தூரங்களுக்குப் போய், கழனிகளுக்குப் பாய்கிறது. விவசாயம் இப்போது தனி மனிதர்களிடமிருந்து விலகி கார்ப்பரேட் கம்பெனிகளிடம் போய் ரொம்ப காலமாகிறது.. மழைநீர் சேகரிப்பும்,கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும்தான் மனிதர்களின் தேவையை ஓரளவிற்கு சமாளிக்கின்றன. வாழ்க்கைப் போராட்டங்கள். உலகளவில் நெட் ஒர்க் லிங்க் வந்துவிட்டதால், காகித உபயோகம் குறைய,. அதன் நல்விளைவாய் காகிதங்களுக்காக இப்போது காடுகள் அழிக்கப் படுவதில்லை, இருந்தால்தானே?.

“அன்பரே! நேற்று நீ காரியதரிசி பூஜாவுடன் அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்தாயே அது பற்றி…”

“அய்யோடா சாமி! ராத்திரி முழுக்க தூக்கமில்லை.பெண்டு கழன்று…இல்லை..இல்லை..தப்பு, களைப்பாயிருக்கிறது, உடல் முழுக்க வலி. வருடாந்திர நிதிநிலை அறிக்கை தயாரிப்பு வேலை. சரி அதற்கென்ன இப்போ?.”

“நீ பூஜாவுடன் நிர்வாணமாய் படுக்கையிலிருந்தக் காட்சிகள் என் தற்காலிக நினைவுப் பெட்டகத்தில் பதிவாகியிருக்கின்றன. அவற்றை சேமிப்புக்கு மாற்றிவிடலாமா?.”—–—மாற்றங்கள் ஒன்றே உலகில் மாறாதது என்ற கோட்படுகளில், மாறாதது என்பதில் ஆண்களின் இதுபோன்ற துரோக சிருங்காரங்கள் என்பதையும் சேர்க்கவேண்டும்.

“அடப்பாவி! வேவு பார்க்கிறாயா நீ?. மொத்தத்தையும் அழிச்சிடு. பாக்யா வர்றதுக்குள்ள சீக்கிரம் அழி.”

“முடிந்தது.”—அது சொல்லி முடிக்கும்போது,டிஜிட்டல் ஸ்க்ரீனில் பிரதமரின் உரை ஆரம்பித்திருந்தது. ஆட்சியாளர்களால் செய்யக் கூடியது வெறும் வாய் வார்த்தைகள் மட்டும்தான் என்பதைப் போல, இருபது நாட்களாய் இதே பேச்சுத்தான். ஓயாமல், திரும்பத் திரும்ப. ஆனால் சூழ்நிலையின் குரூரம் மனசில் உறைக்கிறார் போல. இந்த உலகம் ஒரு பேரழிவை சந்திக்க இருக்கிறது என்ற நிஜத்தை பட்டவர்த்தனமாகச் சொல்லும் பேச்சு. அதை எதிர் கொள்ளும் மனவலிமையைத் தரும் பேச்சு. மறுபடியும் கனோஜ் என்ற எங்கள் இயந்திரன் குறுக்கிட்டது..

“அன்பரே! உனக்கு ஒரு துக்கச் செய்தி காத்திருக்கிறது..”

“சொல்லு. என்ன?.”

நேற்றிரவு உன் அம்மா இறந்து விட்டாள்.செய்தி-கலசப்பாக்கம் விரிவு நகரிலிருந்து.,உன் தம்பி ஷாமிடமிருந்து..”

ஆ! அம்மா…! வெளியே போகவே குலை நடுங்கும் இந்த நேரமா இது நடக்கணும்? ஆனால் உள்ளேஒரு நிம்மதி பரவியது. நாலைந்து வருடங்களாகவே அம்மா படுத்த படுக்கையில்தான் எல்லாமும்.முதுகுப் பக்கம் குழி குழியாய் படுக்கைப் புண்கள். அழுகிய .நாற்றமும், மூத்திர வாடையும். தம்பிதான் கவனித்துக் கொண்டிருந்தான். அவளுடைய செயலிழந்த சிறுநீரகங்களை மாற்றி, இதய ரத்தக் குழாயில் வந்த அடைப்பை பழுது பார்த்து,எழுந்து நடக்கவைத்து, வாழ்ந்து, ஒரு வருடத்திற்குள் மீண்டும் சிறுநீரகங்களின் செயல் குறைய, அடுத்ததாய் ஸ்டெம் செல் தெரப்பி, ஒரு கட்டத்தில் அதுவும் தோற்க, ஜெனட்டிக் இன்ஜினியரிங்கில்,ஜீனோமில் நுழைந்து, ATGCCCGCGGTCC என்கிற சூட்சும வாய்ப்பாட்டைப் படித்து, மூளை செல்களை நிரடி, திருத்தி, நின்று போயிருந்த மனித செல்களின் இரட்டிப்பு பண்பை தூண்டிவிட்டு,, எல்லாம். . .எல்லாம். ஓய்ந்து போய், என்றைக்கும் மனிதன் கடவுளின்/ இயற்கையின், பதிலியாக ஆக முடியாது என்ற கூற்றுக்கு சாட்சியாக இன்று மரணம்.

குட்டி இயந்திரன் விஷு—10 என்னிடம் ஒரு குவளை குடிநீரைக் கொடுத்து விட்டுச் சென்றது. தைவான் தயாரிப்பு. இலகு ரகம், ஐக்யூ—40 க்குக் கீழே, சிந்தனை வேகம் ஆறு டெர்ராஃப்ளாப்கள். சொல்லிக் கொடுத்த இது போன்ற சின்னச் சின்ன வேலைகளை பிசகின்றி ஒழுங்காய்ச் செய்யும் மாடல் இது
அப்போது திடீரென்று வெளியே சாலையில் பெருங் கூச்சல் கேட்டது. கடவுளே! ஆரம்பித்து விட்டதா?..தினசரி செத்து செத்துப் பிழைக்கும் வாழ்க்கையின் அநித்தியம்.. உறைக்கிறது. திமுதிமு வென்று ஆட்கள் ஓடும் சத்தம், தொம்….தொம்-அடி விழுகிறது. ஒரே அலறல், அழுகைச் சத்தம். அதைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் டக். .டக்..டக்..-பூட்ஸ் ஒலிகள். அரசுப் படைகள் வந்து விட்டன. படபட வென்று துப்பாக்கிச் சத்தம். ஐயோ! எத்தனை பிணங்கள் விழுந்தனவோ?. அவர்களுக்குக் கண்டதும் சுட ஆணை இருக்கிறது.

”ஏய்! கனோஜ்! வெளியே என்ன?.. சாதிக்கலவரமா?.,மதக் கலவரமா?.எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்னமும் இங்கே இந்த துவேஷங்கள் மட்டும் மாறாமல் இருப்பது நம் சாபக்கேடு.. மனிதர்கள் ஒருத்தரையொருத்தர் அழித்துக் கொள்ள இந்த சமூக அமைப்பில்தான் எத்தனை விதமான காரணிகள்?.”

“அன்பரே! சாதி,மதப் பிரிவினைகள் ஆள்பவர்களுக்கு அவசியம் தேவை, என்கிறது ஓஜா சித்தாந்தம்.ஆனால் இப்போது நடப்பது அதுவல்ல.. கொள்ளை. மக்களே கடைகளை சூறையாடுகிறார்கள். தடுப்பவர்களை சுலபமாய் கொலை செய்கிறார்கள். உலகம் முழுக்க இதே நிலைதான்.. திரையில் பார்..”
திரை உயிர் பெற்றது.. பெய்ஜிங் நகரைக் காட்டினார்கள். எங்கு பார்த்தாலும் வன்முறைகள்.. தேனீக்கள் போல அடைஅடையாய் மக்கள் கூட்டம்.. உணவுப் பொருட்களின் கடைகளையும், ,உணவு விடுதிகளையும், பார்த்து குறி வைத்து சூறையாடிக் கொண்டிருந்தார்கள். அடுத்து தியாமென் சதுக்கத்தையொட்டியிருந்த தானியக் கிடங்கைக் காட்டினார்கள். போலீஸ் கும்பலொன்று கொள்ளையடித்துக் கொண்டிருந்தது. பங்கு கேட்ட மக்களை சத்தமில்லாமல் லேசர் துப்பாக்கியினால் பொசுக்கினார்கள். மலிவாய்ப் போன மனித உயிர்கள். கட்டுப்பாடுகள் மிகுந்த சீனாவிலா இப்படி?. என்னடா நடக்குது அங்கே?. அமெரிக்காவில் நிலைமை இன்னும் மோசம். கடைகளை மட்டுமில்லை,அகப்படுகிற பெண்களையும் கதறக் கதற…. ச்சீ! நாய்ப் பிறவிகள். கனோஜ் இப்போது லைனில் வந்தது

“08—08—2050 அன்று இரவு எட்டு மணி செய்தியில் வந்து வெடித்ததே ஒரு நிஜம்.”

“ஆமாம்…தெரியும். கேட்டதும் மயக்கமாயிருந்தது. பிரளயம் வருவதைச் சொன்ன செய்தி.”

எஸ்! பெரிய அதிர்ச்சி அது. மறு நாளிலிருந்தே உலகம் முழுக்க பிரச்சினைகள் ஆரம்பமாகி விட்டன. முதல் நடவடிக்கையாக அரசுகள் எரிபொருட்களை முடக்கி விட்டன. அன்றே போராட்டங்களும், வன்முறைகளும் பரவலாக வெடித்தன. ஒரு வாரத்திற்குள் உச்சக்கட்டம்.,. சாலை போக்கு வரத்துகள் ஸ்தம்பித்ததால், உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை தேவையான இடங்களுக்குக் கொண்டு போக வழியில்லை, பஞ்சம், .பசி, பட்டினி., ஸோ உணவுப் பொருட்களின் கடைகள் சூறையாடப் படுகின்றன. . தடுத்தவர்களை சுலபமாய் கொலை செய்து வீசினார்கள். இப்படித்தான் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தன. இனிமேல் பட்டினிச் சாவுகளும், பெருத்த அளவில் மக்கள் சேதங்களும் தவிர்க்க முடியாதவை என்கிறார்கள் ஜியாலஜிஸ்ட்கள்.. பிரளயம் என்பது காலத்தின் கட்டாயம் என்றார்கள் ஆன்மீகப் புருஷர்கள். இப்படியெல்லாம் கூட நடக்கக் கூடுமா?,இல்லை தப்பித்து விடுவோமா?., என்ற பரிதவிப்பில் மக்கள்.

“அன்பரே! இன்றைய உன்னுடைய செயல் திட்டங்களை இன்னும் நீ பதியவில்லை..”

“எதுவுமில்லை.ஓய்வு.”

“உனக்கு ஒரு துக்க செய்தி வந்ததே..?..”

“போகவில்லை. வெளியே போனால் திரும்புவது நிச்சயமில்லை.”

“உனக்கு ஒரு தகவல் இருக்கிறது..உயில்படி உன் அம்மாவின் இறுதிச் சடங்கை செய்தால் மட்டுமே, உனக்கு சொத்தில் சரிபாதி கிடைக்கும்.இல்லையேல் முழுவதும் உன் தம்பிக்கே. சொத்தின் இன்றைய மதிப்பு அறுபது கோடி..”

“ஓ! அந்தளவுக்கு உயர்ந்து விட்டதா?.ஐயோ1 அம்மா!. ஏய்!. சீக்கிரம் பாக்யாவுக்கு தகவல் அனுப்பு. சரீ பந்த் எல்லாம் நேற்றோடு முடிஞ்சிப் போச்சுதானே? இன்னைக்கு எதுவும் தடையில்லையே..”

“நீ தினசரி செய்தி நேரங்களை பார்க்கத் தவறுகிறீர்கள்.. சி.எக்ஸ். எனும் பாலுணர்வுப் படங்களை மட்டுமே பார்ப்பதில்,. ஒரே செயலை, அதுவும் பரிச்சயமாகி விட்ட செயலை திரும்பத் திரும்ப பார்ப்பதில் சலிப்பு இல்லையா உனக்கு?.”

“டா. .ய்…!.”

“இல்லை நான் சொல்ல வந்தது வேறு புலி வருது,புலி வருது…என்று இன்று வந்தே வந்து விட்டது.ஆனால் அதை சமாளிக்கும் மாற்று திட்டங்கள் எதுவும் இன்று நம்மிடம் மட்டுமில்லை,உலகில் யாரிடமும் இல்லை. . இயற்கைக்கு முன்னால் மனிதகுலத்தால் எதுவும் செய்ய முடியவில்லை,,என்று பிரதமர் நேற்று பேசினார். அதனால் பந்த்களும், போராட்டங்களும், வன்முறைகளும் இப்போது ஓயாது.. வேறு வழியின்றி தொடர்கின்றன.”

“ஹாய் டார்லிங்!”. —பாக்யா வந்துவிட்டாள். வரும்போதே உடைகளைக் களைந்தபடி.

“சே! காலையிலேயே என்னா புழுக்கம்?.ஹும் நாமளே தேடிக் கொண்ட வினை. ஆர்க்டிக், அண்டார்டிக்கா வில் ஏறக்குறைய பனிக்கட்டி மலைகள் காலி.அய்யோ பாவம். கூட்டம் கூட்டமாய் ஸீல்களும்,பெங்குவின் பறவைகளும், பனிக்கரடிகளூம் கூட மடிவதைக் காட்டினார்கள். கோரம்பா. ஏய்! கனோஜ்!.”

“ காலை வணக்கம்.”

“குடிப்பதற்கு குளிர்ச்சியாக எதையாவது கொடு.”

ரிலாக்ஸ்டாக அவள் சேரில் உட்காரும் போது உடலில் பொட்டுத் துணி மட்டுமே மிச்சமிருந்தது. இப்படி வீட்டில் 80% நிர்வாணத்துடன் வளைய வருவதின் பிரச்சினைகளை அவள் அறிந்துக்கொள்ள வில்லை. அவள் மீது எனக்குள்ள சுவாரஸ்யங்கள் குறைந்துக் கொண்டே வருகின்றன..

“டார்லிங்! எப்படி கலசப்பக்கம் போக திட்டமிட்டிருக்கிறாய்?.”

“ஒரே வழி சைக்கிள்தான். ஆனால் போகப் போறதில்லை. வாணாம் பாக்யா வெளியே உயிர் நிச்சயமில்லை. பெரிய அளவு பூகம்பம் ஏற்படும்னு வேற சொல்றாங்க கடவுளே!.”

“ கனோஜ்! இந்த நிமிஷ நிலை என்ன?.சொல்.”

“நடுநிசி செய்தியின்படி எல்லா நாட்டு விஞ்ஞானிகளும், புவியியல் வல்லுனர்களும், தலைவர்களும் ஐ.நா.சபையில் கூடியிருக்கிறார்கள். வந்திருக்கிற ஆபத்துக்கு ஏதோ மாற்று திட்டம் தயாராவதாக பத்திரிகை ஒன்று ஹேஸ்யம் சொல்லியிருக்கிறது..”

“ஓகே டார்லிங்! நாம கிளம்புவோம். உங்கள் சொத்தின் மதிப்பு அறுபது கோடியாமே?, அமேஸிங்.”
“முட்டாளே! அழிவு நிச்சயமென்றால் சொத்து எதற்கு?.”

“ சாலையைப் பாருப்பா. எவ்வளவு மனிதர்கள்? யாராவது சாவுக்குப் பயந்து வீட்டில் முடங்கி விட்டார்களா பாரு. பூமிக்கு அழிவு என்பது அனுமானம், வராமலும் போகலாம்.யார் கண்டது?.”

என்னை இழுத்துக் கொண்டு கிளம்பினாள். சாலையில் நிறைய மனிதர்கள். கலவரத்துடன் விரைந்துக் கொண்டிருந்தனர். வ்ழியெங்கும் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டும், சாலையோரங்களிலும், மரத்தடிகளிலும், ஒரு இடம் பாக்கியில்லாமல், கொட்டி வைத்தது போல பஸ்கள்,லாரிகள், கார்கள், கண்டெய்னர்கள், வேன்கள், டூவீலர்கள், என்று கும்பல் கும்பலாய், கேட்பாரற்று தாறுமாறாக நிறுத்தப் பட்டுக் கிடந்தன.. வழியெங்கும் பெரும்பாலான கடைகள் உடைக்கப்பட்டு, கதவுகளின்றி பா வென்று திறந்துக் கிடக்க,, பொருட்கள் சூறையாடப்பட்டு, அலங்கோலமாய் சிதறிக் கிடந்தன. அங்கங்கே மனித உடல்கள்.. அப்புறப் படுத்த ஆள் இல்லை.

இரண்டாம் குறுக்குச் சாலையைக் கடக்கும் போது அந்தக் காட்சி எங்கள் கண்களில் பட்டது.

“ த்தூ! நாய் பிறப்புகள் இப்படியா நிக்கிற பஸ்ஸை படுக்கையறையா ஆக்குவது?. கும்பல் கும்பலாய் செக்ஸ்…ஓப்பன் செக்ஸ்…ச்சீய்! யாருக்கும் இங்கே வெட்கமில்லை. .”—என்றாள் பாக்யா.

“டியர்! புரிஞ்சிக்கோ செக்ஸ் பாவமல்ல., அசிங்கமல்ல. அவங்களை ஒரு தடவைப் பாரு, நடைபாதைவாசிகள். மறைவான இருப்பிடம் இல்லாதவர்கள். பாவப்பட்ட மனிதர்கள். காலங் காலமாக ஏழ்மையை ஒழிப்பதாக சூளுரைக்கும் அரசியல்வாதிகள், இன்றுவரை அவர்களின் எண்ணிக்கையைத்தான் கூட்டியிருக்கிறார்கள். நாளைக்கு இருப்போமோ இல்லையோ?. அதற்குள் வாழ்க்கையின் சில சந்தோஷங்களையாவது அனுபவித்து விட வேண்டும்.. அதில் தவறில்லையே.. எனக்குக் கூட அந்தக் கவலை இருக்கிறது. இன்னும் எத்தனை நாள் வாழ்க்கையோ?.”

“ ஹேய்! மீடியாக்கள்தான் இதை பெருசாக்குகின்றன என்றால் நீயுமா?. இயற்கை நெருக்கடிகளைத் தர்றதும், மனிதன் தன் அறிவால் அதை ஜெயிக்கிறதும் காலங்காலமாய் நடக்கிறதுதான். சர்வைவல் என்பது இதைத்தானே?. இதையும் ஜெயிப்போம் பார்..”—சொன்னவளை நான் நக்கலாய் பார்த்தேன்..

“விட்ரும்மா! ஒரு அடிப்படையுமில்லாத ஓவர் கான்ஃபிடன்ஸ் உன்னுடையது. உலக விஞ்ஞானிகளும், ஜியாலஜிஸ்ட்களும், மிரண்டு போய் பிதற்றுகிறார்கள். யாரிடமும் இதற்கு விடையில்லை. ஆனால் பெருசுகளுக்கும், உன்னைப் போன்ற ஆஷாடபூதிகளுக்கும் என்ன செய்யணும்னு தெளிவாய் தெரியுது பார்.. இந்த நூற்றாண்டிலும் மாறாத பக்தி. கோவில்களில் ஆறுகால பூஜை, நூற்றியெட்டு கலசங்கள் நிறுத்தி, யாகம் வளர்த்தி, மந்திரம் சொல்லி, சாமிக்கு சேண்டல் பவுடரில் காப்பு அலங்காரம்,. ஜேஜே வென்று கூட்டம். வர, மியூஸிக்கல் டிஜிட்டல் இண்டெர்பேஸ்ஸின் காதுகளை வருடும் இனிமையான மின்னணு இசை, வானவேடிக்கையுடன் நகர் உலா. அவ்வளவுதான். தீர்ந்தது பிரச்சினை. இனி எல்லவற்றையும் அவன் பார்த்துப்பான். செய்த அலங்காரங்களை ஏற்றுக் கொண்டு கடவுள் இந்த உலகத்தை உய்விக்க வேண்டும். லஞ்சம்—கடவுளுக்கும்..”

“அது லஞ்சமில்லை. நம்பிக்கை.”

“அவன் பார்த்துப்பான் என்பது நம்பிக்கையில்லை. பாகீ! எஸ்கேப்பிஸம்.”.

“ சரி சரி வேகமா மிதிப்பா. அம்மாவின் சவ அடக்கம் மாலை ஆறு மணிக்கு. ஷாம் மூணு தடவை தகவல் அனுப்பியிருக்கார்..”

சாலையில் கும்பல் கும்பலாய் நடக்கும், ஓடும், சைக்கிள் மிதிக்கும், எல்லோர் முகங்களிலும் சொல்லொனா வேதனை. ஒரே நாளில் நாடகத்தின் அடுத்த காட்சி போல., அனுபவித்து வந்த அத்தனை வசதிகளும், சுகங்களும், மறைந்து, நூறு, நூற்றைம்பது வருடங்கள் பினோக்கி பயணித்து விட்டது போன்ற வருத்தம். இந்த சூழலில் பொருந்திக் கொள்ளத் திணரும் வருத்தம். செல் ஸ்க்ரீனில் முதல்வர் மக்களுக்கு ஆறுதல் என்ற பெயரில் ஏற்கனவே சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.. அடுத்த சேனலில் எதிர் கட்சித் தலைவர் வழக்கம் போல் முதல்வரை வசை பாடிக் கொண்டிருந்தார்..
கனோஜிடமிருந்து அழைப்பு.. ஆன் பண்ணி வால்யூமைக் கூட்ட,

“அன்பரே! எச்சரிக்கை. இந்தியப் பகுதியில் இன்றிரவு பூகம்பம் தாக்கக் கூடுமாம்.. அளவு-எட்டு ரிக்டர். மதியத்திலிருந்தே உலகின் பல இடங்களில் பூமியின் அதிர்வுகள் பதிவாகின்றனவாம்..”.—
பாக்யா அவனை பின்புறமிருந்து அணைத்தாள்.

“பயப்படாதே அன்பே!. சீஸ்மிஸிட்டி எர்த்க்வேக் ஸொனில் நம் ஏரியா இல்லை.. கி.பி.2050 ஆம் வருஷத்திலேயே உலகப் பேரழிவா?.கிரேஸிப்பா. அவ்வளவு சீக்கிரமெல்லாம் உலகம் அழியாதுப்பா..”
கூடவே சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த நவீன மோஸ்தர் உடை அணிந்திருந்த கோவில் குருக்கள் ஒருத்தர்

‘சார்! சிட்டி நெலமை மோசமாயிடுத்தாம். ரவுடிகள் கும்பல் கும்பலாய் போயி கொள்ளையடிக்கிறாளாம், தடுக்கிறவாளை வெட்றாளாம். போலீஸ் வெட்றவாளை சுட்டுத் தள்றாளாம்.சிட்டியே காலியாறதாம். ஐயோ! பகவானே! என் பொண்ணு அங்கன்னா ஒர்க் பண்றா. கிருஷ்ணா!.”

“எல்லாம் பசிதாங்க.. ஒரு நாளைக்கு ஆயிரம் லாரி உணவுப் பொருளுங்க கொண்டு செல்லப் பட்டு, அழியற இடம். அது. இப்ப இருபது நாளா ஒரு லாரி சிட்டிக்குள்ள போவல.. சாலை போக்குவரத்து நின்னாலே பிரளயம் தானே?.. மனுஷன் பசிக்காக எதை செய்தாலும் அது நியாயம்தான்.”.

பூகம்பம் வரப்போகிற செய்தியைக் கேட்டுவிட்டு சாலையில் மக்கள் அதற்குள் தத்தம் கூட்டுக்குள் அடைய, பீதியுடன் ஓடிக் கொண்டிருந்தார்கள் நாங்கள் திவம—பிரிவு எண்—1- ஊரை அடையும் போது இரவு 07-30..-பழைய பெயர்-போளூர்.. சாலையில் மனித சஞ்சாரம் குறைந்திருந்தது.. பாக்யா ஆறுதலாக என் முதுகில் தட்டினாள்.

“சாரி டியர்! இந்நேரம் அம்மா நெருப்பாகியிருப்பாள்.”

“இட்ஸ் ஓகே. யோசிச்சால் இதுதான் நியாயமும் கூட. அம்மாவுக்காக நான் ஒரு துரும்பையும் எடுத்துப் போட்டதில்லை.”

என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை.. இரவு கலசப்பாக்கம் போய் தங்கி, அம்மாவுக்காக ஷாமுடன் சற்று அழுதுவிட்டு, காலையில் கிளம்பிவிட்டோம். வழியெங்கும் மீண்டும் ஒரு முறை கொள்ளைகளை, சூரையாடல்களை, இறந்துக் கிடந்த உடல்களையெல்லாம் பார்த்து, ஒரு இடத்தில் வன்முறை கும்பலிடம் சிக்கி, தப்பியோடி பசியுடன் வீடு வந்து சேர்ந்த போது மாலை நாலு மணி… வீட்டில்.எந்த உணவும் இல்லை.. கடைகளில் விற்பனைக்கு சரக்குகள் இல்லையாம். சே! கனோஜ் ஏன் பூகம்பம் வராது?. என்பதற்கான ஏகப்பட்ட கால்குலேஷன்களை போட்டு வைத்திருந்தது.. ஒண்டர்ஃபுல், இண்ட்ரெஸ்டிங், பூகம்பம் வரவில்லை.

இரவு எட்டு மணிக்குஇருந்த சிறிதளவு ரொட்டியையும், பிஸ்கட்டையும்,கடல் பாசியில் செய்த கேக்குகள் சிலவற்றையும், சாப்பிட்டு விட்டு, நானும், பாக்யாவும் உட்கார்ந்திருக்க, டி.வி.யில் எதிர் கட்சித் தலைவர் பொதுக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருப்பதை லைவ் ஆக ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

“ஆகவே தோழர்களே! உலகத்திலுள்ள எல்லா பெட்ரோல் எண்ணைக் கிணறுகளும் ஒரு வார இடைவெளியில் ஒட்டுமொத்தமும் திடீரென்று வற்றிப் போய்விட்டன. இனி பூமிக்கடியில் எங்கும் சொட்டு பெட்ரோல் இல்லையாம். இன்னும் பத்து வருடங்களுக்கு இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த விஞ்ஞானிகளின் ஆருடம் பொய்த்து விட்டது. ஐயோ! என்ன செய்யப் போகிறோம்?. தெரியவில்லை. . இங்கே நடக்கும் இவ்வளவு வன்முறைகளுக்கும் அதுதான் காரணம். அப்படி கூடவா நடக்கும்?. ஆமாம் நடந்து விட்டது.. அப்படி நடப்பது ஒரு பெரிய அளவில் பூகம்பம் வருவதற்கான அறிகுறியாம். ஜியாலஜிஸ்ட்கள் கணித்து சொல்லியிருக்கிறார்கள் .நாடே அலறிக் கொண்டிருக்கிறது.. நல்லவேளை இதுவரை அப்படி எதுவும் நடக்க வில்லை. நடக்காது என்று நம்புவோம்.

இன்றைக்கு மின்சாரமும், பெட்ரோலும், நாம் விடும் மூச்சுக் காற்று போன்றது. இரண்டில் எது இல்லையென்றாலும் அழிந்து போய்விடுவோம்….அந்தளவுக்கு மக்கள் தொகை பெருகிக் கிடக்கிறது. . சரி ஆட்சியாளர்களைக் கேட்கிறேன், எரிபொருளுக்காக என்ன மாற்று ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கிறீர்கள்?. இப்படி ஒரு நிலை சீக்கிரமே வரும் என்று சூப்பர் கம்ப்யூட்டர், பரம்—5. ஏற்கனவே அறிக்கை கொடுத்திருக்கிறது. காற்றாடி மின்சாரம், பேட்டரி மின்சாரம், சோலார் எனெர்ஜி, பயோடீசல், சூப்பர் கண்டக்டிவிட்டி, இப்படி தெரிந்த அத்தனை முறைகளையும் முயற்சி செய்து பார்த்து விட்டோம். இவைகள் எதனாலும் ஹைட்ரோகார்பன் எனும் பெட்ரோல், டீசல் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. என்று அறிவித்தாயிற்று. அப்புறம் இதுவரை என்ன செய்கிறது உங்கள் ஆட்சி?. விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்?..அடுத்த தலைமுறையின் எரி பொருள் ஹைட்ரஜன் தான். அப்போது கடல் நீரெல்லாம் பெட்ரோல் ஆகும் . அப்படீன்னு இப்ப சொல்றிங்களே. அப்ப இந்தத் தலைமுறையின் கதி என்ன?. என்ற கேள்விக்கு திறமையில்லாத இந்த அரசிடம் பதில் கிடையாது. மனிதசக்தியை நம்ப வேண்டுமாம். சொல்கிறார்கள். தமிழ்நாட்டு அரிசி வட இந்தியா வரை போகணும், அங்கே விளையும் கோதுமை, இங்கே வரணும், காய்கறிகள் விளையும் இடங்களிலிருந்து வரணும். எப்படி?. தலைச் சுமையாய் வரப் போகிறதா?. ஹ.ஹ..ஹா…

ஆகவே தோழர்களே! நான் இங்கே ஒரு உறுதிமொழியை அளிக்கக் கடமைப் பட்டுள்ளேன். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது தமிழ் நாட்டில் எங்கும் தடையில்லாமல் பெட்ரோல், டீசல் வழங்கப்படும், ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு இந்த அரசு மான்ய விலையில் பெட்ரோல் வழங்கும்..”

இந்த இடத்தில் சற்று பேச்சை நிறுத்தினார். கூட்டத்தினர் படபடவென்று கைத்தட்டி, விசிலடித்து, ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். எப்படி?, என்று ஒருத்தர் கூட கேள்வியெழுப்ப வில்லை. எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.

“ என்ன சொல்றார் இந்த ஆளு?.பூமியிலேயே இல்லையென்கிறப்போ, ஒரு வேளை அதுக்குன்னு வேற கிரகத்தை கண்டுபிடிச்சி வெச்சிருக்காரா?.”—பாக்யா சிரித்தாள்.

“.எனக்குத் தெரிஞ்சிபோச்சி, தமிழ்நாட்டுக்கு அடுத்த முதல்வர் இவர்தான் பாகீ.”

“ எப்படி சொல்ற?.”

“ எப்பவும் அதோ கைத்தட்டி, விசிலடிச்சி, கூக்குரல் போட்டு சந்தோஷிக்கும் அவர்கள்தான் ஆட்சியைத் தீமானிக்கிறார்கள். நாமல்ல.”

மீண்டும் தலைவர் தன் பேச்சை ஆரம்பித்தார்.

“ பூமியில் எங்கும் பெட்ரோல் இல்லையென்று விஞ்ஞானிகள் கை விரிச்சிட்டப்புறம், இந்த சாமானியனால் மட்டும் எப்படி முடியும்?, என்று தமிழனின் திறமையை குறைவாய் மதிப்பிட்டு விடாதீர்கள். நம்மால் முடியும். திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிளானும் ரெடி, பிளாண்ட்டும் ரெடி. இதற்கான மாஸ்டர் பிளான் இதோ இவருடையதுதான். பிறவி விஞ்ஞானி மிஸ்டர். பாமர்.”
ஒரு கருத்த வழுக்கை மனிதரைக் காட்டினார்கள் கும்பிட்டார்..

”நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் தயாராகப் போகிறது. அது அடுத்த வருடம் இரட்டிப்பாகும்..”
கூட்டத்தினர் எழுந்து நின்று உற்சாகக் குரல் எழுப்பினர்.

“தயாராகப் போவது. . .? மூலிகைப் பெட்ரோல்.”—-என்று தலைவர் முடித்தார். அதன் வொக்கபுலரியில் தமிழல்லாத இந்த வார்த்தை எப்படி கலந்தது என்று தெரியவில்லை

“ அட டுபாக்கூரு! .”— என்றது கனோஜ் உள்ளிருந்தபடியே. . வெளியே வன்முறை வெறியாட்டங்கள் கூடுதல் பலத்துடன், அரங்கேறிக் கொண்டிருக்கின்றன., பட்டினிச் சாவுகளும்தான்.

Print Friendly, PDF & Email
நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள் என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *