ந்யூமாவின் நகல்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 49,485 
 
 

ராகுலன் – 00. 003398 G II – இந்திய அரசின் தலைமை அணுக்கரு விஞ்ஞானி – 4.3.2094. 17: 58 : 245 மணி

“திரு. ராகுலன், தாங்கள் இந்திய அரசின் அணுக்கரு விஞ்ஞானத் தலைமையகக் கணிப்பொறியால் அழைக்கப்படுகிறீர்கள்.”

‘கோக்’ பானம் குடித்துக் கொண்டிருந்த ராகுலன் நகர்ந்து வந்து அகலமான மானிட்டர் முன்பு அமர்ந்தான்.

“ஆஜர். செய்தி என்ன?”

“ வணக்கம் ராகுலன்! கடந்த 2600 நானோ விநாடிகளாகத் தாங்களுக்கும், தலைமையகத்துக்கும் இருக்கும் தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டே இருக்கிறது. விடியோ பிம்பங்கள் குழப்புகின்றன. தங்கள் கம்யூனிகேஷன் சிஸ்டத்தில் ஏதும் கோளாறா என்று பார்த்துக் கொள்ளவும்”

“இல்லை. அப்படி எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எதற்கும் சரி பார்க்கிறேன் “ என்று தன் பிஸியை அருகில் இழுத்து விரல்களால் கொத்தினான்.

“வணக்கம் குரு! என்ன வேண்டும் என்றது பிஸி.

“நிவா! நமக்கும் தலைமையகத்துக்குமான சானல்களில் எதுவும் கோளாறா? பார்த்துச் சொல்”

“பொறுங்கள். ஆராய்கிறேன்.” என்று அது சொன்னபோது, தலைமையகத் தொடர்புக்கான மானிட்டரில் வெறும் கோடுகள் மட்டுமே சலனித்துக் கொண்டிருந்தன. ராகுலன் கவலையானான். தனது ரிஸ்ட் ஃபோனோ, வேறு எந்தத் தொலைத் தொடர்புச் சாதனமோ சுத்தமாக உயிர் விட்டிருந்தன. நிவாவைத் தவிர. சூரிய பாட்டரிகளின் உதவியால் வீடு வெளிச்சத்தில் இருந்தது.

“நிவா! என்ன இது? “

“மன்னிக்கவும். ஆராய்ந்து கொண்டுதானிருக்கிறேன். “ என்றது 10ஆம் தலைமுறைக் கம்ப்யூட்டர் நிவா.
“அப்பா! என் பிஸியை நொறுக்கப் போகிறேன். ராஜாவுக்குச் செக் வைச்ச நேரத்தில் அணைஞ்சு போயிடுச்சு “ என்றபடி பக்கத்துப் பாலிவினைல் அறையிலிருந்து வந்தாள் க்ரியா(3).
“குரு! விஷயம் இதுதான். நாமும், நமது பாலிவினைல் வீடும் வினாடிக்கு 2500 கி.மீ வேகத்தில் புவிஈர்ப்பு விசைக்கெதிராகப் புறப்பட்டுச் செல்கிறோம் – சரியான வார்த்தை – கடத்தப்படுகிறோம். நாம் நம் வசத்தில் இல்லை.”

“கடவுளே! கிளார்க் பெல்ட்டைத் தாண்டி விட்டோமா?”

“பால் வீதியையே தாண்டியாயிற்று.”

“எங்கே போகிறோம்? “ ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

“ தெரியாது. என்னுள் பதிந்த விபரங்களின் எல்லையைத் தாண்டி விட்டோம். “

ராகுலன் கோபத்தில் க்ரியா விளையாடும் ரோபோ டைனோசரஸை எட்டி உதைத்தான்.

அணுக்கரு விஞ்ஞானத் தலைமையகத்தில் அனைவரும் பரபரப்பின் விளிம்பில் இருந்தார்கள். காந்தப் பாட்டையில் அங்குமிங்கும் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாரும் கம்ப்யூட்டருடன் போராடினார்கள். சாரிசாரியாக ஹைட்ரஜன் கார்கள் வந்து நின்றன.

“பிரதமருக்குச் செய்தி போயிருக்கிறது. தொலைந்தது ராகுலன் மட்டுமல்ல. ஒரிசாவின் ஜாட்குடாவிலிருந்து 500 டன் யுரேனியத் தாது கடத்தப்பட்டிருக்கிறது. விஷயத்தை விளம்பரப்படுத்த வேண்டாம். தேசத்தின் ரகசியத்தைக் காக்கச் சொல்லி பிரதமரிடருந்து ஆணை வந்துள்ளது.”

“தேசமாவது, மண்ணாங்கட்டியாவது. அவருக்குத் தேர்தல் ஜூரம். விஷயம் வெளியே வந்தால் மெஜாரிட்டி போயிரும்னு பயப்படுறார். “

வெட்டியாப் பேசாதீங்க. “ வெடித்தார் தலைமையகச் செயலர். “ 500 டன் யுரேனியம், அணுக்கரு விஞ்ஞானி ராகுலனின் தொழில்நுட்பம் இரண்டும் இணைந்தால் . . . ஒரு கிரகத் தொகுதியையே அழிக்க முடியும். “ செயலருக்கு வியர்த்தது. பிளாஸ்டிக் கோட்டுக்குள் கைவிட்டு பேஸ் மேக்கரைச் சரி செய்து கொண்டார்.

ராகுலன் – வியாழனில் நடந்த ஐக்கிய கிரகங்களின் மாநாட்டில் மிகச் சிறந்த அணு விஞ்ஞானிக்கான விருது மூன்று முறை வாங்கியவன். அணு விஞ்ஞானத்தில் சூரிய குடும்பத்துக்கே முதல்வன். நிபுணன். இன்றைய தேதி அணுக்கரு இயலின் இதயத் துடிப்பு.

“என்ன எளவாவது செஞ்சு அவனக் கண்டுபிடிங்க. எனக்கு அவன் வேணும் “ என்றார் செயலர்.

வல்லமை பொருந்திய ஜூபி கிரகத்துக்கு உங்களை வரவேற்கிறோம். “ என்றபடி தன் முன் குனிந்து வணங்கியவர்களை உற்றுப்பார்த்தான் ராகுலன். மிகவும் கறுப்பாய் மூன்று அடி உயரத்தில் இருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடை குரோமியம் போல் இருந்தது. தலைப்பகுதியில் ஒற்றை உணர் கொம்பு இருந்தது.

“எதற்காக எங்களை இங்கே கடத்தினீர்கள்?”

“சொல்ல அனுமதியில்லை.! தாங்கள் எங்கள் தலைவன் பிந்த்ராவிடம் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள்.”

அவர்கள் வீடு ஆக்சிஜன் திரவ அறைக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து காந்தப்பாட்டையில் நழுவினார்கள்.

பூமியின் சூழ்நிலைக்கு மிகவும் வேறுபட்டிருந்தது அக்கிரகம். வாகனங்கள் ஹைட்ரஜன் வாயுவில் ஓடின. கட்டிடங்கள் கன் மெட்டலால் உருவாக்கப்பட்டிருந்தன. ஜூபிக்கள் ஹீலியத்தை சுவாசித்தார்கள். பூமிப்பெண்கள் மாதிரியே ஜூபிப்பெண்கள் அழகாயிருந்தார்கள். தலையில் உணர்கொமபைக் கொண்டை மாதிரி அலங்கரித்திருந்தார்கள். அந்தக் கிரகத்துச் சூரியன் கண் கூசாத நீல வெளிச்சம் கொடுத்தது.

“ஜூபிக்கு நல்வரவு! அமருங்கள் என்றான் ஜூபிக்கள் தலைவன் பிந்த்ரா. ரேடியம் கிரீடம் அணிந்திருந்தான். அவர்கள் ஆக்சிஜன் கூண்டுக்குள் பிளாட்டினம் நாற்காலிகளில் அமர்ந்தார்கள். ராகுலன் நிவாவைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டான். க்ரியா, “ அப்பா! ஒண்ணுக்கு.” என்றாள்.

“ராகுலன் 00.003398 G II அவர்களே! எங்கள் ஜூபி இனம் சர்வ வல்லமை வாய்ந்தது. அறிவியலில் உங்களை விட நூறு மடங்கு முன்னேறி விட்டோம். அணு இயல் தவிர. இங்கு யுரேனியம் கிடையாது. ஆனால் அணுகுண்டு எமது வல்லமையை இன்னும் பெருக்கும் என்று தெரிந்து கொண்டோம். இந்த விண்மீன் குடும்பத்தில் எங்கள் கிரகம் பிற கிரகங்களை வெற்றி கொண்டு ஒருங்கிணைந்த ஜூபி கிரகம் உருவாக்க வேண்டும் என்பதே லட்சியம். உங்கள் தொழில்நுட்ப அரிவால் இங்கு கடத்தி வரப்பட்ட யுரேனியத்தி அணுகுண்டு தயாரிப்பதன் வழிமுறைகளை எங்கள் தலைமைக் கம்ப்யூட்டர் ந்யூமாவில் பதிவு செய்து விடுங்கள். ஜூபியைக் கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் அது. இதையும் பதிவு செய்து விட்டால் அண்டத்தில் ஜூபிதான் வல்லமை பெற்று விளங்கும். இதை நீங்கள் செய்யவில்லை எனில் லேசர் கதிர் பட்டு உயிர்விட நேரிடும். “ என்றான்

ராகுலன் முகம் இறுகிற்று. இதற்கு ஒத்துக் கொண்டால் பரிபூர்ண அழிவு நிச்சயம். வேறு வழியும் இல்லை.

“சரி. செய்கிறேன் “ என்றான் உறுதியான குரலில்.

“ஜூபி – 008! இவர்களை அழைத்துக் கொண்டுபோய் ந்யூமா கம்ப்யூட்டரின் முன்னிலையில் விடு. உங்களுக்கு உதவியாக அந்த எகாலஜிஸ்டும் வருவார்.

அப்போதுதான் அவரைப் பார்த்தான். ஆக்சிஜன் கூண்டுக்குள் சோகமாய் இருந்தார். இவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

கடைசியில் அவர்கள் ந்யூமாவின் முன்னிலையில் இருந்தார்கள். ந் – யூ – மா. ஜூபி கிரகத்தைக் கட்டுப்படுத்தும் கணிப்பொறி. ஜூபியின் காவல் தெய்வம். வாழ்க்கைத் தடங்களை நிர்ணயிக்கும் கர்த்தன். “ந்யூமா! உன்னைத் தொட்டேன் என்று நான் யாரிடம் சொல்ல முடியும்? அண்டமே அழிந்த பிறகு.”

அதன் முன் அமர்ந்து அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ள ராகுலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. வியந்தான். “ஜூபிக்கள் அறிவாளிகள்”

“அழகானவர்களும் கூட. பெண்களைக் கவனித்தாயா! ஒற்றை முலைதான். பார்த்தால், ‘ பெயல் துளி முகிலென பெருத்த நின்னிள முலை’ ன்னு பாடணும் போல இருக்கு. “ என்றார் எகாலஜி புரஃபசர்.
ராகுலன் அவரை முறைத்தான்.

“ஹி. . . பழந்தமிழ்ல ஈடுபாடு உண்டு” என்றார்.

இருள் வந்தது. ஜெட்லாக்கினால் ராகுலனுக்குத் தூக்கம் வரவில்லை. க்ரியாவுக்கு மாத்திரை போட்டுப் படுக்க வைத்தான். புரஃபசரும் தூங்கி விட்டார். நிவாவைப் பார்த்தான்.

“என்ன குரு பார்க்கிறீர்கள்? “ என்றது நிவா.

ராகுலன் நிவாவின் உயிர் நிலையைத் திருகினான். சட்டென்று செத்தது நிவா.

முதலில் க்ரியாதான் கண் விழித்தாள்.

“அப்பா! பயமா இருக்குப்பா. வீட்டுக்கு எப்பப்பா போவோம்? “ என்றாள்.

“நம்ம வீடே பூமிக்குப் போயிட்டு இருக்கும்மா. “ என்றான் ராகுலன்.

துள்ளினார் புரஃபசர். “எப்படி . . .இது எப்படி சாத்தியம்?” என்றார் நம்பிக்கையற்று.

“ஆமாம், அதெப்படி முடியும்? எனக்கு ஒண்ணுமே புரியல. மசமசன்னு இருக்கு. “ என்றது நிவா. ராகுலன் உயிர் கொடுத்திருந்தான்.

“நீதான் . . .நீதான் நிவா, நாம் தப்பக் காரணம். “

“நானா?. . .நானா? . . .”

“ஆமாம். நீயேதான். ந்யூமாவின் நகல். “

“ஏய் கொஞ்சம் தெளிவா சொல்லு. “ என்றார் புரஃபசர்.

“ கேளுங்கள் புரஃபசர். ந்யூமாதான் ஜூபியை இயக்கும் கணிப்பொறி. அதன் சகல பகுதிகளையும் அக்கு வேறாய் ஆராய்ந்து அதிலிருந்த ஜூபிக் கிரகத்தை இயக்கும் ஆணைகளை நமது நிவாவில் பதித்தேன். இப்போது நிவா ந்யூமாவின் நகல். ஜூபி கிரகமே அதற்கு அடிமை. நிவா எனக்கு அடிமை. எப்படி? “ என்றான்.

“வொண்டர்ஃபுல். “ என்றார்.

“இதெல்லாம் நெனவே இல்லையே. என்னாச்சு எனக்கு? “ என்றது நிவா.

“அத்தனையும் அழித்து விட்டேன். நீ ந்யூமாவின் நகலாய் இருந்தபோது நீ கொடுத்த ஆணைப்படி யுரேனியத்தின் மீது தொடர்ச்சியாய் ந்யூட்ரான்களை மோத விட்டிருக்கிறேன். அவை யுரேனியத்தின் உட்கருவைத் தாக்கித் தொடர்வினையில் நெப்டியூனியம், புளுட்டோனியம், அம்ரீஷியம், என்று ஹாஃப்னியம் வரை ஆல்ஃபாத் துகள்களை உமிழ்ந்து கொண்டே போகும். 500 டன் உருத்தெரியாது போய் விடும். ஆல்ஃபாத் துகள்கள் வளியில் ஹீலியமாக மாறி விடும். முட்டாள் ஜூபிக்கள் ஹீலியத்தைச் சுவாசித்தபடி அணுகுண்டுக் கனவில் இருப்பார்கள். “ என்றான் நகுலன்.

“ஆயிரம் பத்தாம் தலைமுறைக் கம்ப்யூட்டர்கள் உங்களுக்கு ஈடாகாது குரு. “ என்றது நிவா.

ராகுலன் பூமியின் செயற்கைக் கோள் தகவல் தொடர்பு எல்லைக்கு வந்த பின் பூமிக்குத் தகவல் கொடுத்தான். ஜூபி கிரகத்திலிருந்து கடத்தி வந்த விண்கலன் மெதுவாய்த் தரையிறங்கிற்று.

25 – 11. 1994

பதினேழு வருடங்களாயிற்று இதை எழுதி. எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள் தவிர எதுவும் மாற்றாமல் வெளியிட்டிருக்கிறேன். ஜூபிச் சூரியன் கொடுத்த மஞ்சள் வெளிச்சத்தை மட்டும் நீலமாக மாற்றியிருக்கிறேன். கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் போது, நாலகத்தில் வாசித்த கலைக்கதிர் என்ற அறிவியல் இதழில் அறிவியல் கற்பனைக் கதைப் போட்டி வெளியிட்டிருந்தார்கள். ஒற்றை அறை கொண்ட எங்கள் வீட்டின் தரையில் அமர்ந்து, குனிந்தபடி எழுதும் சித்திரம் என் கண்முன் தோன்றுகிறது. இக்கதை இரண்டாம் பரிசு பெற்றது. ஆயிரம் ரூபாய். முதல் பரிசு ஆர்னிகா நாசருக்கு என்பதுதான் பணத்தை விட மகிழ்ச்சி அளிக்கிற விஷயமாய் இருந்தது. நாம் ஒரு தேர்ந்த எழுத்தாளனின் அளவுக்கு எழுதுகிறோம் என்று என்னையே வியப்படைய வைத்தது.

– ஜனவரி 2012

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் ஆசிரியர் பணி புரிந்து வருகிறார். வேதாந்த தத்துவம் பயின்று வருகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுகிறார். ஆங்கிலத்தில் இவர் மொழியாக்கம் செய்த கதைகள் ப்ரொமிதியஸ் ட்ரீமிங்க், இந்தியன் பீரியாடிகல்ஸ், ஸ்பில் வோர்ட்ஸ், The Academy of Heart and Mind, Piker Press போன்றவற்றில் வெளியாகியுள்ளன. இவரது தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை போன்ற இதழ்களிலும், இவரது வலைத்தளத்திலும் காணக்கிடைக்கின்றன. வலைத்தள முகவரிதமிழ்:…மேலும் படிக்க...

2 thoughts on “ந்யூமாவின் நகல்

  1. Writer of different genres. But your scifi trillers must be your cup of tea!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *