(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4
“இது வெறும் நட்பும்மா! ஆனா, அவன் என்கிட்ட ‘ஐ லவ் யூ’ன்னுதான் ஆரம்பிச்சான். ஆனா நான்தான் ‘இந்த காதல் கத்திரிக்காயெல்லாம் எனக்கு கட்டோட பிடிக்காது. நீ வேற ஆளைப் பாரு. சும்மா நட்போடு பழகறதா இருந்தா பழகு’ன்னேன். ‘சரி’ன்னு அவனும் மனசை மாத்திக்கிட்டான்.”
அந்த தொலைபேசி செய்தி, லட்சுமியை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது. சமீபகாலத்தில் அவளுக்கு எதிராக இப்படி யோர் ஆவேசத்தை யாரும் காட்டியதில்லை. இருந்தும்… நொடிகளில் சுதாரித்துக் கொண்டவள், அடுத்த நொடியே நல்ல மணிக்குத்தான் போன் செய்தாள்.
“தெரியும் லட்சுமி… நீ எதுக்கு இப்ப போன் பண்ணி இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும். அந்த ராஜதுரை எனக்கும் போன் பண்ணினான். நாய் மாதிரி நிறையவே குலைச்சான். ஆனா, அவனால ஒண்ணும் பண்ண முடியாது. நீ தைரியமா இரு. அவன் விஷயம், என் விஷயம்…” என்றார், அவரும்.
“இல்லய்யா… நீங்க அவசரப்பட்டுட்டீங்க. இந்த மாதிரி விஷயத்துல மிச்சமே வைக்கக்கூடாதுய்யா… ஆனா, நீங்க வெச்சுட்டீங்க…”
“வாஸ்தவம்தான். உனக்கு நான் ஒரு உண்மையைச் சொல்றேன். அந்த நாகமாணிக்கக் கல் மட்டும் என் கிட்டையே இருந்திருந்தா நான் நிச்சயம் சரியா காரியத்தை முடிச்சிருப்பேன். அது உன்கிட்ட வரவும் எனக்கு விஷயம் தப்பாயிடிச்சு…”
“என்னய்யா நீங்க… அவன் என்னையும்தானே குத்தம் சொல்லி இருக்கான். இந்த கல்யாணம் எப்படி நடக்குது பார்க்கலாம்னு வேற சொல்லி இருக்கான்…”
“நான் இப்பவும் சொல்றேன்… உன்னை இனி யாராலேயும் எதுவும் செய்ய முடியாது. உனக்கு ஒரு நல்ல காலம் ஆரம்பிச்சாச்சு. நீ யாரையாவது கொலையே செஞ்சாலும், அதை கொலைன்னு இந்த சமுதாயம் சொல்லாது. ஒரு வீரச்செயலாத்தான் பார்க்கும்.”
“நீங்க என்னை சமாதானப்படுத்த என்னென்னவோ சொல்றீங்கன்னுதான் எனக்கு தோணுது.”
“சத்தியமா இல்ல, லட்சுமி. நான் சொன்னது எவ்வளவு பெரிய சத்தியமான உண்மைன்னு நீ போகப் போக பார்ப்பே. ஒரு பேச்சுக்கு சொல்றேன். அந்த நாகமாணிக்க கல்லைத் தொட்டு கும்பிட்டுட்டு, நடக்கவே நடக்காதுங்கிற ஒரு காரியத்துல நீ இறங்கிப் பார். அப்ப தெரியும், அதோட மகிமை…”
”சரிங்க… எதுக்கும் இனி கவனமா இருங்க. என் மகளும் பரிட்சை எல்லாம் எழுதி முடிச்சிட்டு வந்துட்டா. நான் கொஞ்சம் அவளோட சந்தோஷமா இருக்க ஆசைப் படுறேன்.”
“அமோகமாக இரு. அப்படியே கல்யாண விஷயத்தையும் பேசிடு. இந்த பய படுத்தபடுக்கையா இருக்கும்போதே நாம் இந்த கல்யாணத்தை முடிச்சிடணும். விபத்துல தப்பிச்ச அவன், கல்யாண செய்தியைக் கேட்டு சாவணும்.”
“அதுக்குமுந்தி அவன் வாயை அடைக்க பாருங்க. இன்னிக்கெல்லாம் பத்திரிகைகாரங்க எங்க எது சிக்கும்னு அலைஞ்சுகிட்டு இருக்காங்க. அதுலேயும் மேல்மட்ட விஷயம்னா அவங்களுக்கெல்லாம் அப்படி மூக்குல வேர்த்துருது…”
“பத்திரிகைல ஒரு வரி வராது… நம்மளபத்தி அந்த பயலுக்கு நல்லாவே தெரியும். ஏதோ அடிபட்ட ஒரு வேகத்துல அவன் கொஞ்சம் கொந்தளிச்சுட்டான். அவனை நான் ரெண்டு நாளில் சமாதானப்படுத்திடுவேன். நீ தைரியமா ஆகவேண்டியதைப் பாரு. அப்புறம், அந்த நாகமாணிக்க கல்லுக்கு தினமும் சாம்பிராணி தீபம் காட்டு. தீட்டோடு அதுகிட்ட நெருங்காதே. இன்னொரு விஷயம்! அது இப்ப உன்கிட்ட இருக்கிறதால உன் வீட்டை சுத்தி சர்ப்ப நடமாட்டம் இருக்கும். ஆகையால, சர்ப்பங்களுக்கு கட்டோட பிடிக்காத நாக தாளி வேர்களை வாங்கி, வீட்டை சுத்தி அங்கங்கே கட்டித் தொங்கவிடு.
அழகர் கோயில் பக்கம் உள்ள மூலிகை தோட்டத்துல சிரியாநங்கைன்னு ஒரு மூலிகைச் செடி கிடை அதையும் நட்டுவை. ஒரு சர்ப்பமும் வீட்டுக்குள்ள வராது. க்கும். தப்பித்தவறி வந்தாலும், பதற்றத்துல சர்ப்பங்களை அடிச் சிடாதே. பிடாரனை கூப்பிட்டு, பிடிச்சிகிட்டு போகச்செய். இதை எல்லாம் நான் அப்பவே சொல்ல நினைச்சேன். மறந்துட்டேன்” என்றார், நல்லமணி.
லட்சுமியும் “சரிங்க” என்று அந்த மட்டோடு முடித்துக் கொண்டாள். அவளுக்கு பெரிதும் ஆயாசமாகக்கூட இருந்தது.
உள்ளே போய் உடை மாற்றிக்கொண்டு ஒரு ‘ஜீன்ஸ் பேண்ட், டீ-ஷர்ட்’டில் துள்ளிக்குதித்தபடி வந்தாள், பிரியா என்கிற பிரியதர்ஷினி!
மகளைப் பார்க்கப் பார்க்க லட்சுமிக்கு கண்களில் கண்ணீர் திரண்டு வர ஆரம்பித்தது.
“என்னம்மா… எதுக்கு இப்படி கண்கலங்குறீங்க?”
“இது ஆனந்தக்கண்ணீர், பிரியா. உன்னை ஒரு மான்குட்டி போல பார்க்கும்போது, மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா?”
“போதும்மா… சினிமாக்கார அம்மா மாதிரியே நீயும் ‘டயலாக்’ அடிக்கிறே. ஆமா… இன்னிக்கு உன் நிகழ்ச்சி என்னம்மா?”
”உன் நிகழ்ச்சி எல்லாம்தான் இனி என் நிகழ்ச்சி…”
”ஓ… நன்றிம்மா!” – பிரியா மகிழ்ந்தபோது, அவள் டீ-ஷர்ட்டில் கிடந்த செல்போனிடம் சிணுங்கல்.
அம்மாவை பார்த்தபடியே அவளது அவரைக்காய் காது மடல்மேல் அந்த செல்போன் அமர்ந்துகொள்ள – மறுபக்கமாய் அர்ஜுன்!
“பிரீ… பிரீயாயிட்டியா?”
“ஓ அர்ஜுன்… அதுக்குள்ள கூப்பிடுறியா? இப்பத்தானே ‘டாடா’ காட்டிட்டுப் போனே?”
“போ பிரியா… நீ தப்பா சொல்றே. கடிகாரத்தை பார்! ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது.”
“இல்ல, அர்ஜுன். நான் இப்பத்தான் என் அம்மாகூட பேசவே ஆரம்பிச்சிருக்கேன். இப்ப என்னால எங்கேயும் வரமுடியாது. நாளைக்கு நீ கூப்பிடு…”
லட்சுமி எதிரிலேயே கலகலப்பாக பேசியவள், செல்போனை முடக்கினாள். ஆனால், அதற்குள்ளேயே லட்சுமிக்கு முகத்தில் முத்துமுத்தாக வியர்த்துவிட்டது.
“அம்மா… என்னாச்சு உடம்புக்கு?”
“என் உடம்புக்கு ஒண்ணுமில்ல, பிரியா… ஆமா, யார் அது அர்ஜுன்?”
“என் ‘பாய் பிரண்டு ‘ம்மா. என்னை பிரிஞ்சு அவனால் ஒருநாள்கூட இருக்க முடியாது” – பிரியா சொல்லச் சொல்ல லட்சுமிக்குள் இதயத் துடிப்பு அதிகமாகியது.
“பிரியா… என்னம்மா சொல்றே? அப்ப நீ அந்த அர்ஜுனை ‘லவ்’ பண்றியா?” – லட்சுமி அப்படி கேட்கவும், ‘குபீர்’ என்று சிரித்துவிட்டாள், அவள்.
“என்னடி சிரிக்கிறே?”
“சிரிக்காம! ஏம்மா இப்படி? ஒரு பொண்ணு, ஆண்கூட பேசினாலே காதல்தானா?”
“அப்ப இதுக்கு என்ன அர்த்தம்?”
“சாதாரண நட்பும்மா… ஆனா, அவன் என்கிட்ட ‘ஐ லவ் யூ’ன்னுதான் ஆரம்பிச்சான். நான்தான் ‘இந்த காதல் கத்திரிக்காயெல்லாம் எனக்கு கட்டோட பிடிக்காது… நீ வேற ஆளைப் பாரு… சும்மா நட்போட பழகிறதா இருந்தா பழகு’ன்னேன். ‘சரி’ன்னு அவனும் மனசை மாத்திக்கிட்டான்.”
பிரியா ஏதோ ஜாலியாக ‘ஜோக்’ அடித்தபடி ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே பேசுவது போலத்தான் பேசினாள். இருந்தும், லட்சுமியின் வயிற்றை அது பிரட்டியது. அப்படியே… நல்லமணி பேரன் பற்றியும், வரும் முகூர்த்தத்திலேயே அவனை பிரியா திருமணம் செய்து கொள்வது பற்றியும் சற்று தடுமாற்றமும் ஏற்பட்டது.
“ஏம்மா… என்ன யோசனை? நான் சொல்றதை நம்பு. நான் உன் பொண்ணு. காதல் அது இதுன்னுல்லாம் மாட்டமாட்டேன்.”
“அப்படி இல்ல, பிரியா… இந்த வயசுக்குன்னு சில ஆசைகள் உண்டு. அந்த ஆசைக்கு பெருசா வாழ்க்கை பத்தின அறிவு கிடையாது… நீ என்னதான் உறுதியா இருந்தாலும், சில நேரத்துல நீ நெகிழ்ந்து போயிடலாம், இல்லையா?”
“இல்ல… நீ தேவையில்லாம கற்பனை பண்ணிக்கிறதே. உன் எதிர்க்க நான் அர்ஜுன்கூட பேசியிருக்கக்கூடாது. அது என்தப்பு, போகட்டும். நாம மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் ரொம்ப நாளாச்சு… போயிட்டு வருவோமா?”
“கோயிலுக்கா… என் கண்ணு, நீயா கேக்கிறே?”
”ஏம்மா… எனக்குப் பக்தி இல்லேன்னு நினைக் கிறியா, நீ?”
“அதுக்கு இல்லேடா… நீயா இதைக் கேக்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு, எனக்கு. இரு. வந்துடுறேன்.”
லட்சுமி உடை மாற்றிக்கொண்டு வர… இருவரும் கிளம்பினர்.
அரசு பொதுமருத்துவமனை.
ஜெனரல் வார்டில் சில தையல்கள் போடப்பட்ட நிலையில், ஒரு ‘பேண்டேஜ்’ உருவமாக கிடந்தார், ராஜதுரை. அருகில் அவரது தொண்டரடிப் பொடிகள். அடிக்கடி பெருகும் கண்ணீரைத் துடைத்தபடியே அவர் மனைவி ருக்மணியும் அருகில் இருந்தாள்.
பத்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு போலீஸ்காரர் வந்து அவர்காதில் ஏதோகூறிவிட்டுப் போக, ராஜதுரையின் முகத்திலும் அவ்வப்போது உணர்ச்சிக் கொந்தளிப்பு.
ராஜதுரை சார்ந்த கட்சியின் துணைத் தலைவர் உள்ளூர் சுற்றுப்பயணத்தில் இருந்தவர், ஆஸ்பத்திரிக்கு பார்க்க வந்திருந்தார்.
”என்னய்யா… பார்த்து போறதுக்கென்ன? இப்ப பார்த்தியா? டாக்டருங்களை கேட்டா முதுகுத்தண்டுல அடி… ஆபரேஷனுக்குப் பிறகு தான் எதையும் சொல்ல முடியும்கிறாங்களே?”
“அதாங்கய்யா எனக்கும் பயமா இருக்கு. இப்படி படுத்தபடுக்கையா இவர் ஆயிட்டா, அப்புறம் எங்க குடும்பம் என்ன கதியாவறதுங்க?” – ராஜதுரை மனைவி ருக்மணி மூக்கைச் சிந்தினாள்.
“ஏ புள்ள ருக்கு… சும்மா இரு புள்ள. நான் நிச்சயமா திரும்ப எழுந்திருப்பேன். இனிமேதான் பெருசாசாதிக்கவே. போறேன்.”
அந்த நிலையிலும் ராஜதுரையிடம் ஆவேசம்.
துணைத் தலைவரும் தோளைத் தடவிக் கொடுத்து விட்டு, “உடம்பை பாத்துக்கய்யா… நானும் ‘டீன்’கிட்ட சொல்லிட்டுப் போறேன்” என்றபடியே கிளம்பிப் போனார்.
அவர் போகவும், டாக்டர் வந்து ‘கேஸ் ஷீட்’டை பார்த்தார். டாக்டரை கண்களாலேயே ராஜதுரை அருகில் அழைத்தார்.
“சொல்லுங்க சார்…”
“எப்படியாவது என்னை பொழைக்க வைச்சுடுங்க, டாக்டர்.”
“இப்ப உங்களுக்கு எதுவும் இல்லையே. நல்லாதானே இருக்கீங்க?”
“படுத்தபடுக்கையா இருக்கிறதுக்கு நான் செத்துடுறது மேல். என்னை நீங்க நிமிர்த்தி, உக்கார்த்தி வைக்கணும். அப்படி மட்டும் செய்துட்டா, உங்களுக்கு பத்து லட்ச ரூபாயை ஒரு பொட்டியில் போட்டு தந்துடுறேன். ”
டாக்டருக்கே அதைக் கேட்க சற்று பிரமிப்பாக இருந்தது.
“சரி சார்… நிச்சயம் நான் முயற்சி பண்றேன்.”
“பண்றீங்க இல்ல… பண்ணி முடிக்கிறீங்க!” ராஜதுரையிடம் ஒரு கட்டளை கலந்த ஆக்ரோஷம் டாக்டரும் மவுனமாக தலையை அசைத்தார்!
மீனாட்சி அம்மன் கோயில்!
திருப்பதிக்கு போட்டியாக அப்படியொரு கூட்டம். லட்சுமியை பார்க்கவும், பலரும் போட்டி போட்டுக் கொண்டு கும்பிட்டனர். பட்டுச்சேலையும், வைர நெக்லசுமாய் ‘லயன்’லட்சுமி ஜொலித்தாள். பிரியாவும் ஒரு பருத்தி சேலைக்குள் சும்மா ‘ஜிலுஜிலு’வென்று இருந்தாள். அவர்கள் இருவரையும் பார்த்து வாயைப் பிளக்காதவர்கள் இல்லை. பட்டர்களும் பக்குவமாய் அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்தனர்.
அன்னை மீனாட்சியும் திவ்வியமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தாள். மதுரையின் தேவதை அவள்.
எல்லா தெய்வங்களும் கையால் வரம் தருவது போலதான் காட்சி தருவர். இவளோ கிளியும், கையுமாய் நிற்பவள்! எனக்கு கண் இரண்டு மட்டும் போதும் என்று கூறிடும் அங்கயற்கண்ணி, அவள்!
அந்த சந்நிதியில் பிரியா நிற்கும்போது, திருமணப் பேச்சை இங்கேயே எடுப்பதுதான் மனதுக்கு மங்கலமான ஒன்றாகப்பட்டது, லட்சுமிக்கு.
“பிரியா…நல்லா கும்பிட்டுக்கோ… அம்மா இந்த சந்நிதியில் வைச்சு உனக்கு ஒரு விஷயம் சொல்லப்போறேன். வர்ற முகூர்த்தத்துல உனக்குக் கல்யாணம் ஆகப் போகுதும்மா” – ‘லயன்’ லட்சுமி சொல்ல -பிரியாவுக்கு ‘பகீர்’ என்றானது.
அத்தியாயம்-5
‘பயப்படாதே… நான் இருக்கிறேன்! இனி நான்தான் உன் எஜமானன்… நான் சொல்வதை நீ கேட்டால் போதும்… உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும். என்னாலோ உனக்கு பல காரியங்கள் ஆகும். ஆகவே, எதற்கும் கவலைப் படாதே!’
மீனாட்சி அம்மன் சந்நிதியில் – அம்பிகை முன்னாலே ‘லயன்’ லட்சுமி சொன்ன அந்த கல்யாண தகவல், மகள் பிரியாவை ஒரு விநாடி ஓர் உலுக்கு உலுக்கியது. தன் தாய் இவ்வளவு அவசரப்படுவாள் என்று பிரியா கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவள் சலனப்படுவதை அவள் முகமே காட்டிக் கொடுத்தது.
ஆனால், அந்த சூழ்நிலையில் கற்பூரத்தட்டுடன் பட்டர் வரவும், லட்சுமிக்கு கவனம் அவர் பக்கம் சென்றுவிட்டது.
பட்டர் குங்குமப் பிரசாதம் தரும்போது, கூடவே ஒரு சிறு பொட்டலத்தையும் தந்தார். பிரியாவும் அதைக் கவனித்தாள். “நீங்க கேட்ட உத்தரவு உங்களுக்கு கிடைச் சிருக்கு. அம்பாள் திருவடியில் திருவுளச்சீட்டு போட்டு எடுத்தேன். பூ வந்திருக்கு பாருங்கோ! நீங்க நினைச்சகாரியம் அமோகமா நடக்கும்” என்றார், பட்டர்.
லட்சுமிக்கு முகமெல்லாம் மலர்ந்துவிட்டது. தட்டில் ஐநூறு ரூபாய் நோட்டை போட்டாள்.
பட்டர் உடனேயே பரவசமாகிவிட்டார். ”நீங்க ரொம்ப நன்னா இருக்கணும். சேமமா இருக்கணும்” என்று பால் போல பொங்கி வழிந்தார்.
“என் காலம் முடிஞ்சுபோச்சு சாமி… இனி எனக்கு எல்லாமே என் மகள்தான். என் பேரை இவ காப்பாத்தினா போதும்…” என்று பிரியாவின் காதில் விழும்படி பேசிக் கொண்டே சந்நிதியை வலம்வரத் தொடங்கினாள், லட்சுமி.
பிரியாவும் மவுனமாக அம்மாவைத் தொடர்ந்தாள்.
வழிபாடு முடிந்து வெளியே வந்து, காருக்குள் அமர்ந்தபோது – பிரியா முகத்தில் ஒரே இறுக்கம்.
லட்சுமியும் கவனித்தாள்.
“பிரியா…”
“…”
”என்னம்மா… ஏன் எதுவும் பேசாம ‘உம்’முன்னு இருக்கே…?”
“பின்ன என்னம்மா… இப்ப எனக்கு கல்யாணத்துக்கு என்னம்மா அவசரம்?”
“ஓ… அதுவா விஷயம்?”
“அதுவேதான் விஷயம்… நான் ஒரு அஞ்சாறு ஆண்டுக்காவது சுதந்திரமா இருக்க விரும்புறேம்மா…”
”உன் வயசுல நானும் இப்படித்தான் பேசினேன். ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு ஒரு வாரத்துல மாறிட்டேன். வர்ற புருஷனை மட்டும் நல்லா புரிஞ்சு நடந்துகிட்டா, கல்யாண வாழ்க்கைதாம்மா ஒரு பொண்ணுக்கு சொர்க்கம்…”
“இப்படி எதையாவது சொல்லி என் வாயை நீ அடைக்க முடியாது. எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்மா…”
“அட என்ன பிரியா நீ… கோயில்ல மீனாட்சியும் உத்தரவு கொடுத்துட்டா… உன் எதிர்லதானே பட்டர் சொன்னார்.”
“என் கல்யாண விஷயமா உத்தரவு போட மீனாட்சி யாரும்மா…? அது என் விருப்பம் சம்பந்தப்பட்ட விஷயம். நல்லா புரிஞ்சுக்கோ…” – பிரியா சற்று ஆவேசமானாள்.
கார் மதுரை நகர சாலைகளில் நெளிந்து கொண் டிருந்தது. அவளது கோபமும், குழப்பமும் லட்சுமிக்கும் நன்கு புரிந்தன. ஒரு விதத்தில் அவளது அந்த கோபத்தை லட்சுமி ரசிக்கவும் செய்தாள்.
“பிரியா… நீ கோபப்படுறதுலயும் அர்த்தம் இருக்குடா… உனக்கு என்னைப் பிரிய மனசு இல்லை. சரிதானே?”
“அதுமட்டும் இல்லம்மா… எனக்கு இந்தக் கல்யாண சடங்குலேயே நம்பிக்கை கிடையாது. பொம்பளை மட்டும் தாலி கட்டிக்கணும், ஆம்பளை கையை பிடிச்சுகிட்டு பணிவா மேடையை சுத்தி வரணும், எல்லார் காலிலேயும் பொம்பளை விழுந்து எழுந்திரிக்கணும், அப்புறம் முதல் ராத்திரியில் பால் எடுத்துகிட்டு போகணும். புருஷன் கால்ல விழணும்கிறதை எல்லாம் எனக்கு நினைக்கக்கூட பிடிக்கலை. இதுல முழுக்க முழுக்க பெண் அடிமைத்தனம் தான் தெரியுது. கல்யாணம்கிறது சமமான நிலையில் நடக்கணும். அது ஒரு ஒப்பந்தம்! அவ்வளவுதான்… இரண்டு பக்கமும் பரஸ்பர நல்லெண்ணமும், பொறுப்புணர்ச்சியும் இருக்கணும். அதை விட்டுவிட்டு…”
பிரியா ஒரு புதுமைப் பெண் என்பதும், அதிலும் இக்காலத்து ‘ஹைடெக்’ பெண் என்பதும் அவள் பேச்சில் தெரிந்தது. லட்சுமி அடுத்த நொடியே அவளுக்கு திருஷ்டி கழித்தாள்.
”கண்ணு… எனக்கு பிறகு நம்ம குடும்பத்தையும், சொத்து பத்தையும் நிச்சயம் நீ நல்லவிதமா காப்பாத்துவே. எனக்கு உன்னோட இந்தத் தைரியமும், சிந்தனையும் ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ சொல்றதுல இருந்து ஒண்ணு எனக்கு நல்லா புரியுது. பதிவு கல்யாணம்தான் எனக்கு பிடிக்கும்னு சொல்லாம சொல்லிட்டே… சரிதானே…?”
“ஆமாம்… அதுக்காக நான் இப்ப கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டதா நினைச்சுடாதே. குறைஞ்சது அஞ்சு வருஷம்… நீ கல்யாணம் பத்தியே என்கிட்ட இப்படி பேசக்கூடாது…”
பிரியா, கட்டளையே போட்டாள். லட்சுமி அதையும் ரசித்தாள்.
அதே நேரம் அவர்களது பங்களாவும் வந்து, காரும் உள்ளே நுழைந்தது. பக்கவாட்டில் கணவரின் சமாதி அமைந்த நினைவாலயம். அதைப் பார்த்து நெகிழ்ந்தபடியே காரைவிட்டு லட்சுமி இறங்கினாள். பிரியாவோ அவளுக்கு முன்துள்ளிக்கொண்டு பங்காளவினுள் நுழைந்தாள்.
லட்சுமி, மகளின் அந்த வேகத்தையும் வெகுவாக ரசித்தாள். நிதானமாக காரைவிட்டு இறங்கி, அவள் உள்ளே நுழைந்த அந்த வேளையில், அவளது உதவியாளன் சிட்டிபாபு நெளிந்தபடி எதிரில் வந்தான்.
“என்ன சிட்டி?”
“மேடம்… ஒரு முக்கியமான விஷயம்…”
“சொல்லு.”
“நரிக்குடி ஜமீன்தார் நல்லமணியின் ஆள், நீங்க வெளியே போயிருந்தப்போ போனில் பேசினாங்க.”
“விஷயத்தை சொல்லு.”
“அவருக்கு திடீர்னு மாரடைப்பாம். ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்களாம்.”
சிட்டிபாபு சொன்ன தகவலில் லட்சுமியின் நெஞ்சிலும் ஒரு பெருங்குத்து விழுந்தது.
”என்னய்யா சொல்றே?”
“ஆமாங்க மேடம். உங்களைப் பார்க்கணும்னு ரொம்பவே அவர் ஆசைப்படுறாராம்.”
லட்சுமி, சிட்டிபாபுவின் பேச்சை கேட்டபடி அப்படியே சோபாவில் சோர்வோடு விழுந்தாள்.
மேலே மாடி அறையில் ஒரு மேற்கத்திய சி.டி.யின் பாட்டு சத்தம். கூடவே, பிரியா அதோடு சேர்ந்து ஆடும் அரவமும் கேட்டது.
அதை கேட்டபடியே எழுந்தாள். டிரைவர் ஞானமணி, மீனாட்சியம்மன் கோயில் பிரசாதத்துடன் அவளருகே வந்து நின்றான்.
“இதை எடுத்துகிட்டு காருக்கு போ… நாம இப்போ ஆஸ்பத்திரிக்கு போகணும்” என்றாள்.
“அம்மா… ஆஸ்பத்திரியில் யாரும்மா?” என்றான், ஞானமணியும் சற்று பதற்றமாக.
“உம்… என் சம்பந்தி! போய் வண்டியை எடு, நான் சேலை மாத்திகிட்டு வந்துடுறேன்” என்று அவனிடம் சற்று எரிந்து விழுந்துவிட்டு, உடை மாற்ற வேகமாக உள்ளே சென்றாள்.
ஆஸ்பத்திரி…
மயக்க ஊசியின் பிடியில் இருந்து மெல்ல கண்விழித்தார், மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரை! முதுகுப் பக்கம் ஆபரேஷன் முடிந்திருந்தது. வயிற்றோடு வளைத்து ஒரு பெரிய கட்டு. எழுந்து உட்கார்வது என்பதெல்லாம் குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்கு முடியாத காரியம்!
படுத்தபடுக்கையாக கிடந்த ராஜதுரை எதிரே இப்போது சிலர்! அவர்களில் சடைபிடித்த தலையும், நெற்றி கொள்ளாத விபூதியுமாக ஒரு காவி வேட்டிக்காரர் இருந்தார். அவரது இடுப்பில் விபூதிப் பை. அதில் ஒரு சிட்டிகை விபூதியை எடுத்து, மந்திரம் சொன்னபடியே ராஜதுரையின் நெற்றியில் இட்டார், அவர்!
அவருக்கு அருகில் இருந்தவர் – ராஜதுரையிடம், அவர் யார் என்று சொல்லத் தொடங்கினார்.
“மாப்ளே…சாமி பேர் சங்கரானந்தம்! சதுரகிரி மலைப் பக்கமா திரியறவர். செப்படி வித்தை எல்லாம் சாமிக்கு சர்வசாதாரணம். பார்த்துக்கிட்டு இருக்கும்போதே மாயமா மறைஞ்சிடுவார், அப்படியொரு சக்தி. உனக்கு இப்படி ஆனது தெரிஞ்சு நாங்கதான் படாதபாடுபட்டு அவரை கூட்டிகிட்டு வந்தோம். சாமி மந்திரம் சொல்லி விபூதி போட்டுட்டா, எப்படிப்பட்ட நோவும் பறந்துபோயிடும்ப்பா.” சொன்னவர், ராஜதுரைக்கு மாமா முறை. ராஜதுரையும் அந்த சாமியாரைப் பார்த்து, சிரமப்பட்டு கைகளை கூப்பினார். சாமியார், கூப்பிய அவரது கையை தன் கரங்களால் பற்றினார்.
சாமியாரது கையிரண்டும் ஜில்லென்று பிணத்தின் கைகளை தொட்டது போல் இருந்தன. அதேவேளை, ராஜதுரை உடம்பில் ஒரு புது மின்சாரம் பாய்ந்த மாதிரியும் தெரிந்தது.
“கவலைப்படாதேப்பா… உனக்கு எல்லாம் சரியாயிடும். வெள்ளைக்காரன் மருந்து ஒரு பக்கம், நான்சில குளிகைகள் (மாத்திரை) தரேன். அதை சாப்பிடு. முதுகு, இரும்பு போல மாறிடும்” என்று அவர் ஆறுதலாகப் பேசினார்.
“ஆமாம் மாப்ளே… சாமி இத்தனை நாளா மலையை விட்டு வந்ததே இல்லை. உனக்காக நாங்க கூட்டிகிட்டு வந்துருக்கோம். சாமி நம்மகூட இருந்தா… நூறு யானை பலம், நமக்கு” – திரும்பவும் மாமாதான் பேசினார்.
ராஜதுரைக்கும் அந்த சோர்வான வேளையில் அப்படியோர் ஆறுதலான பேச்சும், அரவணைப்பும் தேவைப்பட்டன. படுத்த நிலையிலேயே நன்றி என்கிற மாதிரி சாமியாரை பார்த்தார்.
சாமியார், ராஜதுரையின் கண்களையே உற்றுப் பார்க்கத் தொடங்கி இருந்தார். உள்ளுக்குள் மனதின் குரல்!
‘பயப்படாதே…
நான் இருக்கிறேன்…
இனி நான்தான் உன் எஜமானன்…
நான் சொல்வதை நீ கேட்டால் போதும்…
உன்னால் எனக்கு பல காரியம் ஆக வேண்டும்.
என்னாலோ உனக்கு பல காரியங்கள் ஆகும்.
ஆகவே, எதற்கும் கவலைப்படாதே!’
அந்த சாமியார் மனதுக்குள் பேசாமல் பேசியது, ராஜதுரைக்குள் அப்படியே இறங்கியதில், ராஜதுரையும், “சாமி…எல்லாம் உங்க சித்தம் சாமி… எனக்கு அந்த பொம்பளையோட கொட்டத்தை அடக்கணும் சாமி” என்றார்.
ராஜதுரை இப்படி எடுத்த எடுப்பில் சொன்னதைக் கேட்டு, சாமியார் ஒரு சிரிப்பு மட்டும் சிரித்தார். பின்னர் மெல்ல தலையை வருடிக் கொடுத்தார். “இப்போதைக்கு ஓய்வு எடு… எங்கே, வாயைத் திற” என்றார்.
ராஜதுரையும் வாயைத் திறக்க -கையை உயர்த்தி ஒரு மரத்தில் இருந்து பழம் ஒன்றை பறிப்பது போல பறித்ததில் ஒரு வாழைப்பழம்!
அதுவும் நல்ல செவ்வாழைப்பழம்! அந்தரத்தில் அது எப்படி வந்தது என்கிற ஆச்சரியம் எல்லோரிடமும், அதை மெல்ல உரித்தவர், பழத்தை கிள்ளி – நடுவில் ஒரு மிளகு போல குளிகை ஒன்றை வைத்து – கிள்ளிய மீதி பழத்தை திரும்ப வைத்து – ராஜதுரை வாயருகே கொண்டுசென்று, ”உம்… சாப்பிடு” என்றார்.
மாமாவுக்கு விளங்கிவிட்டது.”மாப்ளே… சாமி உனக்கு பழத்துல மருந்து வைச்சு தர்றாரு… நாளைக்கே நீ எழுந்து உக்காருவே பாரு” என்றார், ஒருவித பரவசமுடன்.
பின்னர் மாமாவுடன் சாமியார் அந்த வார்டைவிட்டு வெளியே வந்தார். வார்டில் நடந்தபடியே மாமாவிடம் மெல்லிய குரலில் கேட்டார்-
“அந்த நாகமாணிக்கக் கல் இப்ப யார்கிட்ட இருக்குன்னு இந்த ராஜதுரைக்கு தெரியும்தானே?”
அவர் கேட்டவிதமே, அவரது தேவை எது என்பதை மாமாவுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டது!
அத்தியாயம்-6
‘அவங்க அப்படித்தான். விஞ்ஞானம் பேசுறவங் களுக்கு கண்ணால பார்க்கறதும், காதால கேக்கறதும்தான் கணக்கு. ஆனா, அவங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இந்த உலகத்துல எல்லா விஷயத்தையும் பார்க்க முடியாது, கேட்கவும் முடியாது!’
அந்த சாமியார் கேட்ட கேள்விக்கு மாமாவும் ஆர்வமாக பதில் கூறத் தொடங்கினார்.
”சாமி… நாகமாணிக்கக் கல் இப்ப அந்த பொம்பள கிட்டதான் இருக்கு. அவ இனத்துலதான் பொம்பள. ஆனா, நூறு ஆம்பளைக்கு சமம். உக்காந்த இடத்துல மதுரையையே ஆட்டி வைக்க தெரிஞ்சவ.”
“தெரியும்… நானும் கேள்விப்பட்டு இருக்கேன். எப்பவும் இனம் இனத்தோடுதான் சேரும். பணமும், பணத்தோட சேரும். நாகமாணிக்கம்கறது ஒரு அசுர வலிமை. அது தன்னைப் போலவே ஒரு வலிமையானவளை தேடிப் போயிடிச்சு. அவ்வளவுதான் விஷயம்!”
“சாமி…” மெல்ல நடந்தபடியே மாமா நிறைய கேள்விகளுக்கு தயாராகிவிட்டார்.
“என்ன சம்பந்தம்? சர்வசித்தியும் உடைய எனக்கு எதுக்கு அந்த நாக மாணிக்கம்னுதானே கேக்கப்போறே?”
“ஆமாம் சாமி… அதே நேரம் இன்னொரு கேள்வியும் கூட…”
“என்ன?”
“நாக மாணிக்கம்கறதே பொய்யி… அப்படி ஒண்ணே உலகத்துல இருக்க வாய்ப்பு இல்லைன்னு விஞ்ஞானம் பேசுறவங்க சொல்றாங்களே சாமி…”
“அவங்க அப்படித்தான்! விஞ்ஞானம் பேசறவங்களுக்கு கண்ணால பார்க்கறதும், காதால கேக்கறதும்தான் கணக்கு. ஆனா, அவங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இந்த உலகத்துல எல்லாத்தையும் பார்க்க முடியாது, எல்லாத்தையும் கேட்டுடவும் முடியாது.”
“அது எப்படி சாமி… எனக்கு புரியலீங்களே…”
“இதுல புரிய என்ன இருக்கு? நீ பொறந்ததுல இருந்து உன்கூடவேதான் இருக்கு உன் வயிறு. அதுக்குள்ள சிறுகுடல், பெருங்குடல்னு என்னென்னவோ இருக்கு. அதை உன்னால நேரில் பார்க்க முடியுமா?”
“சாமி…!”
“ஆயிரம் பேர் முதுகை நீ பார்க்கலாம். உன் முதுகை உன்னால் பார்க்க முடியுமா?”
”என்ன சாமி நீங்க… பாக்காட்டியும் அது இருக்கிறதை உணர முடியுமே சாமி… “
”சரியா சொன்னே… சில விஷயங்களை உணர மட்டும்தான் முடியும். பார்க்க முடியாதுங்கிறதை இதுல இருந்தே நீ தெரிஞ்சிகிட்டா சரி…”
“அது சரி சாமி… நாக மாணிக்கத்தை அது நாகமாணிக்கம்தாங்கறதை எப்படி சாமி உணர்றது…?”
“கடவுளை எப்படி உணர்றதுன்னும், மறு ஜென்மத்தை எப்படி உணர்றதுன்னும், பாவ புண்ணியங்களை எப்படி உணர்றதுன்னும் இந்த உலகத்துல நிறைய கேள்விகள், விடைக்காக காத்துக்கிட்டிருக்கு. அதுக்கான பதிலை இப்படி நடந்துபோகிற போக்கிலெல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது சம்பந்தம்.”
“அப்ப எப்படித்தான் சாமி புரிஞ்சுக்கறது?”
”என்கூட இனி இருப்பேல்ல… அப்ப உனக்கு எல்லாமே தானா புரியும்.”
“நல்லது சாமி…அதே சமயம் அந்த நார் நாகமாணிக்கத்தை எப்படி அடையறதுன்னும் யோசிக்கணும் இல்லையா?”
சம்பந்தம், விஷயத்தைப் பிடித்தார். சாமியார் மர்மமாக சிரித்தார்!
தனியார் ஆஸ்பத்திரி – ‘ஐ.சி.யூ.’வில் ஆக்சிஜன் இணைப்போடு கிடந்தார் நல்லமணி. வார்டுக்கு வெளியே ஒரு பெரும் கூட்டம். விஷயம் தெரிந்து மாவட்ட கலெக்டர்கூட வந்துவிட்டுப் போனதை அங்கே கிடந்த பூங்கொத்து சொல்லிக்கொண்டிருந்தது.
லயன் லட்சுமி வரவும், கூட்டம் திரும்பிப் பார்த்தது. தலைமை டாக்டர், லட்சுமியோடு வந்தபடி இருந்தார். சலசலவென்று பேசிக் கொண்டிருந்தவர்கள்கூட, லட்சுமி வரவும் – அடங்கிப் போனார்கள்.
அந்தக் கூட்டத்தில் நல்லமணி அய்யா பேரன் ரமேசும் இருந்தான். லட்சுமியைப் பார்க்கவும், அவனிடம் ஒரு சுறுசுறுப்பு. பெரிதாக படித்திராவிட்டாலும், பேண்டு சட்டை, கூலிங்கிலாஸ் என்று படுஜபர்தஸ்சாக காட்சி தந்தான்.
லட்சுமியும், அவனைப் பார்த்தாள். ஆளிடம் நல்ல வாட்டசாட்டம். பிரியாவுக்கு பொருத்தமான தோற்றம்தான். ஆனால், பிரியாதான் இப்போதைக்கு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாளே…!
‘ஐ.சி.யூ.’வில் யாரையும் அனுமதிப்பதில்லை. இருந்தும் லட்சுமிக்கு சிறப்பு அனுமதி!
உள்ளே நுழைந்தவள், நேராக நல்லமணி முன்தான் போய் நின்றாள். அவரும் ஏறிட்டார். பஞ்சடைத்துப்போன பூஞ்சை விழிகள்… லட்சுமியை ஆவலாதியோடு பார்த்தன.
“ஐயா …”
“வந்திட்டியா லெட்சுமி…”
“என்னங்க இது. திடுதிடுப்புன்னு.”
“வயசாயிடுச்சுல்ல… அந்த நாகமாணிக்கக்கல்லு ஊட்டுல இருந்தவரை தெம்பா இருந்தேன். இப்ப போயிடுச்சே. அதான் கிரகங்கள் விளையாடிப் பார்க்குது.”
“தைரியமா இருங்க. உங்களுக்கு எதுவும் ஆகாது.”
“பைத்தியக்காரி… எனக்கு தெரியாதா என் உடம்பை பத்தி. அதைவிடு… இப்ப உன் மகளுக்கும், என் பேரனுக்கும் கல்யாணம் நடந்தாகணும். அதை நானும் பார்த்தாகணும்… சீக்கிரம்…”
”ஐயா…”-லட்சுமி மெட்டினாள்.
அதை கவனித்துக் கொண்டே இருந்த டாக்டர் படுவேகமாக “சரின்னு சொல்லுங்கம்மா… ஒரு நெகட்டிவான விஷயம்கூட இங்க… இப்ப இவர்கிட்ட பேசக்கூடாது” என்றார்.
லட்சுமிக்கு தர்சங்கடமாகி விட்டது.
“சரிங்கய்யா…. நான் வேகமா ஏற்பாடு பண்றேன். ஆனா ஒண்ணு.. ஊரை கூட்டி பந்தல் போட்டெல்லாம் பண்ண கால நேரம் இல்லை. பதிவு திருமணம்தான் பரவாயில்லையா?”
லட்சுமியும் ஒரு முடிவுக்கு வந்து, தெளிவோடுதான் பேசினாள்.
“என் பேரன் உன் மாப்பிள்ளையானா போதும், நான் முன்ன சொன்னதுதான். அந்த நாகமாணிக்கம் பத்திரம்” – நல்லமணி எச்சரித்துவிட்டு, கண்களை செருகவிட்டுக் கொண்டார். டாக்டர் அதன் பின் லட்சுமியை பேச அனுமதிக்கவில்லை.
“போதும் மேடம்… இதுவே அதிகம். கொஞ்சம் வெளியே போங்க. போய் இவர் விருப்பப்படி நடக்கிற வழியை பாருங்க” என்ற டாக்டர், லட்சுமியின் காதருகே வேகமாகக் குனிந்தார்.
“அம்மா தப்பா எடுத்துக்காதீங்க. சார் பொழைக்கிறது ரொம்ப கஷ்டம். இதயத்துல பன்னிரண்டு இடத்துல அடைப்பு இருக்கு. எப்ப வேணா எதுவேணா நடக்கலாம். நீங்க வேகமா செயல்படுறதுலதான் எல்லாம் இருக்கு.”
லட்சுமியின் முகத்திலும் ஈயாட்டமில்லை. காலம் அவளை சவாலுக்கு அழைப்பது போலத்தான் உணர்ந்தாள். டாக்டர் சொன்னதை மவுனமாக அங்கீகரித்தவளாக வெளியே வந்தாள்.
தாடையை தடவிக்கொண்டு எதையோ பார்த்துக் கொண்டிருந்தான், பேரன் ரமேஷ்.
கூடவே, நிறைய உறவுக்காரர்கள். அவர்களில் பட்டுச்சேலையும், காசு மாலையுமாக ஒரு கிழவியும் இருந்தாள். அவள், லட்சுமியை நெருங்கி வந்தாள்.
“ஆத்தி… ஐயாவை பார்த்தியா? ராசா மாதிரி இருந்த மனுசன், பொக்குன்னு சுருண்டுட்ட கொடுமையைப் பார்த்தியா?”
“பதற்றப்படாதீங்க… வயசாயிட்டா உடம்புக்கு வர்றது சகஜம்தானே… ஐயா ரொம்ப நல்லவர். அவருக்கு எதுவும் ஆகாது.”
“என்னவோ போ… இப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க. ஆனா, வீட்டுல ஈசானத்துல ஒரு பல்லி விடாமல்ல கொட்டு சத்தம் போட்டுகிட்டிருக்கு…”
“இல்ல, ஐயா நல்லாயிடுவார்.”
“ஆகணும். எல்லாம் உன் கையிலதான்! இப்பதான் இந்த பேராண்டியைக் கூப்பிட்டு ஏதோ பேசினாரு. ”
அவள் ரமேஷை காட்ட, அவன் முதல்தடவையாக மரியாதையாக கை உயர்த்தி கும்பிட்டான். அவளும் கும்பிட்டாள். அவன் கைபிசைந்தபடி அருகில் வந்தான்.
“அம்மா…ஐயா வேகமா இவங்க கல்யாணத்தை பண்ணச் சொல்லிட்டாரு. நானும் வீட்டுக்குப் போய் ஜோசியரை கூப்பிட்டு, நேரம் குறிக்கப்போறேன். இப்ப நான் செய்யவேண்டியது அதைத்தான்.”
லட்சுமி மளமளவென்று சொல்லிவிட்டு, ரமேஷை பார்த்தாள். அவனும் வாயை திறந்தான். “தாத்தா என்கிட்டேயும் பேசினார். ஆனா, எனக்கு இப்ப கல்யாணத்துல விருப்பமில்லை.”
அவனும் கிட்டத்தட்ட பிரியா போலவே பேசியது அவளை சற்று அதிரச் செய்தது.
“இருந்தாலும் தாத்தா சந்தோஷத்துக்காக அரை மனசா சம்மதிக்கிறேன். அதேசமயம், உங்க பொண்ணை கல்யாணம் கட்டுறதுக்கு முந்தி உங்ககிட்ட நான் சில விஷயங்களை தெளிவா பேசி முடிவு செய்தாகணும்…”
அவனது பீடிகை பலமானதாக இருந்தது. அது லட்சுமியையும் சற்று என்னவோ செய்தது.
“தம்பி… எதுவா இருந்தாலும் வீட்டுல வச்சு பேசலாம்… இங்க வேண்டாமே” என்றாள்.
“அப்ப சரி… எங்க பங்களாவுக்கு வந்துடுங்க.”
அவனது அடுத்த பதில் அவளை ஓர் இடி இடித்தது.
“தம்பி இப்ப இருக்கிற நெருக்கடியில் உங்க வீட்டுக்கு நான் வந்து திரும்ப நேரமாகும். நீங்க என் பங்களாவுக்கு வரலாமே?”
“மன்னிக்கணும். நான் உங்க பொண்ணு கழுத்துல தாலிகட்டின பிறகும்கூட உங்க இடத்துக்கு எவ்வளவு தூரம் வருவேன்கிறது பெரிய கேள்விக்குறி. ஏன்னா.. மாமியார் வீடுங்கிறது என்வரையில் கொஞ்ச தூரத்துலதான் இருக்கணும். அப்பதான் எனக்கு மதிப்பிருக்கும். பொண்டாட்டிங்கிறவளும் புருஷனுக்கு அடங்கினவளா இருக்கிறது அதைவிட முக்கியம்.”
அப்படி சொன்னதில் இருந்தே அவன் எப்படி என்பது லட்சுமிக்கு விளங்கிவிட்டது. பிரியாவின் கருத்துக்கு எல்லாவிதத்திலும் எதிர்திசையில் நின்று பேசும் இவனோடு தன் மகளால் ஒத்துப்போக முடியுமா?
லட்சுமிக்குள் அங்கேயே கவலை தன் அரிப்பை காட்டத் தொடங்க – அவனிடம் மேலும் வாயைக் கொடுக்காமல் அங்கிருந்து வேகமாக விலகினாள்.
வெளியே வந்து காருக்குள் ஏறி அமர்ந்தவளிடம் பெரிய அளவில் குழப்பம். அப்போது செல்போனில் அலறல். அடுத்து காதைக் கொடுத்தாள். மாவட்ட கலெக்டர் பேசினார்.
“மேடம்… வாழ்த்துகள்.”
“எதுக்கு சார்?”
“உங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சி இருக்கு. முதல்வரும் எந்த எதிர்ப்பும் பண்ணலை.”
“உண்மையா?”
கலெக்டர் பேசி முடிக்கவும், ஆனந்தத்தில் தலையே சுற்றும் போல இருந்தது.
நல்லமணி சொன்னது போலவே நாகமாணிக்கக் கல் தன் வேலையை காட்டுகிறதோ?
அவளுக்குள் முதல்தடவையாக அந்த கல்மேல் ஓர் அலாதி மரியாதையும், மதிப்பும்…
அதே நேரம், கார் ஒரு ‘ரெயில்வே லெவில் கிராசிங்’கில் தேங்கி நின்றது.
காருக்கு முன்னால் அவளையே வெறித்தபடி அந்த சாமியார் நடந்து கொண்டிருந்தார்!
– தொடரும்…
– யாரென்று மட்டும் சொல்லாதே… (நாவல்), முதற் பதிப்பு: 2009, திருமகள் நிலையம், சென்னை.