தரும சங்கடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2022
பார்வையிட்டோர்: 4,832 
 

(1922ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உடம்பு சரிப்படவில்லை யென்று கடிதம் வந்திருக்கிறதே. நான் போய் பார்த்துவிட்டு வரட்டுமா? கடிதம் வந்து நாலுநாளாகிறது. ஒரு பதிலும் போடவில்லையே. நான் போடவும் கூடாதென்று சொல்லுகிறீர்கள்”.

“கடிதம் என்ன போட இருக்கிறது? அவளைப்பற்றி நமக்கென்ன கவலை?”

“ஏண்டா, அதைத்தான் தொலைத்துத் தலைமுழுகி யாகி விட்டதே. அதைப்பற்றி என்ன ஸதா ஞாபகம்? கூடாது என்று தானே பிறந்தகத்திற்கு அவளை அனுப்பினது. பிறகு அவள் எப்படி யானாலென்ன?”

கடைசியில் பேசினவள் தூர்ஜ்ஜடி. முதலில் பேசின சாந்தசீலனுடைய தாயார். அவனுடைய மனைவிக்கு உடம்பு சரியாகவில்லை யென்று பிறந்தகத்திலிருந்து கடிதம் வந்தது. அவனுடைய தகப்பனார் வீரபத்ரர் கடிதத்தை முதலில் தன் புத்ரனிடம் காட்டவேயில்லை. மறுநாள் தற்செயலாக சாந்த சிலன் அதைப்பார்த்து, இரண்டு நாளாகத் தன் தாயிடம் மாமனர் ஊர்போக உத்தாவு கேட்டுக்கொண்டிருந்தான். இருவரும் கோபதாபங்களின் இருப்பிடம். பிறர் வாழச் சகியார்கள். எவரும் தங்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்பது அவர்களுடைய அபிப்பிராயம். சாந்தசீலனுடைய மாமனார் கல்யாண காலத்தில் செய்ய வேண்டிய சீர்வரிசைகளை சரிவர செய்யவில்லை யென்றும், வரதக்ஷிணை அதிகம் கொடுக்கவில்லை யென்றும் அவர்களுக்குக் கோபம், துர்ஜஜடிக்கு இவற்றோடு வேறுகோபமும் உண்டு. சாந்தசீலனுடைய மனைவி ஹிரண்மயி கபடு சூது அறியாத இளம்பெண்.

கல்யாண தினம் முதலே சாந்தசீலனிடம் பிரியங்கொண்டவள். அதனால் அவள் சாந்தசீலனை எப்போதும் ஸந்தோஷப்படுத்தி அவனுடைய பிரியத்தையும் ஆதரவையும் ஸம்பாதித்து வந்தாள். சாந்தசீலனும் அவ்விதமே ஹிரண்மயினிடம் அதிக அன்பாயிருந்து வந்தான். இருவரும் இப்படி அன்யோன்யமாயிருப்பது பழைய நாளைய ஸம்பிரதாயம் கொண்ட தூர்ஜ்ஜடிக்குப்பிடிக்கவில்லை. தான் மூன்று குழந்தை பெறும்வரையில் தன் புருஷனிடம் பேசினதே கிடையாதென்று தூர்ஜ்ஜடி பெருமைபாராட்டிக்கொள்வாள். ருதுவாவதற்கு முன்னால் ஒரு பெண் புருஷனுடன் பேசி தன் சுக துக்கங்களைச் சொல்லிக்கொள்வது அவளுக்குப்பிடிக்குமா? பெண் புக்ககத்துக்கு வந்தவுடனேயே தூர்ஜ்ஜடி எடுத்ததற்கெல்லாம் குறை சொல்ல ஆரம்பித்தாள், என்ன தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் ஹிரண்மயி மாமியாரிடம் வசைமொழி கேட்காமலிருப்பதில்லை. கிழக்கே என்றாள், மேற்கே நின்றாள், பின்னனத் தொங்கவிட்டுக் கெண்டாள், சமையலைக் கெடுத்து விட்டாள், சொன்னவுடன் செய்ய வில்லை. என்றிப்படிப் பலவிதத்தில், தப்பில்லாமலிருக்கும் போது கூட தூர்ஜ்ஜடி அவளைக்குறைகூறித் திட்டிவந்தாள். மாமனாராகிய வீரபத்திரய்யரும் தமது மனைவிக்குப் பக்கபலமாக இருந்தார். கடைசியில் ஹிரண்மயியைப் பிறந்தகம் அனுப்பி விட்டார்கள்.

சாந்தசீலன் உண்மையில் சாந்தசீலனே. தனது பிரியத்துக்குப் பாத்ரையான மனைவியைப் பிறந்தகம் அனுப்பும்போது கூட அவன் ஒன்றும் சொல்லாமலிருந்தான். தன்பெற்றோர் வார்த்தைக்குக் குறுக்குச் சொல்லக்கூடாதென்பது அவனுடைய சித்தாந்தம். என்ன நேர்ந்தாலும் அவர்களுடைய இஷ்டத்துக்கு விரோதமாக நடப்பதில்லை யென்று தீர்மானித்திருந்தான். தன்னை அருமையாக வளர்த்து படிப்புச் சொல்லிவைத்து., ஆளாக்கிவிட்ட தாய் தந்தையரை, இன்று வந்த ஒரு பெண்ணின் மேலுள்ள ஒரு காதலால், அல்லது ஒரு மயக்கத்தால், அலக்ஷியம் செய்வது கூடாதென்பது அவன் கருத்து. ஆனால் தன் மனைவியிடத்தில் கொஞ்சமாவது பிரியம் குறைந்தவனல்ல அவளிடம் உண்மையில் யாதொரு குற்றமுமில்லை யென்பது அவனுக்குத்தெரியும். அனாவசியமாக, எதோ வேறு சாக்கு வைத்துக்கொண்டு, அவளைத் தன் பெற்றோர்கள் ஹிம்ஸித்தார்கள் என்பதும் அவனுக்குத்தெரியும். கொஞ்ச காலத்துக்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடுமென்று எண்ணியிருந்தான்.

தன் மனைவி உடம்பு அசௌகரியமாயிருப்பதாக கடிதம் வந்ததைப் பார்த்ததும் உடனே அவளைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எண்ணினான். நாலைந்து மாதமாக அவளை விட்டுப் பிரிந்திருந்தது, நாலைந்து வர்ஷங்களாக இருந்தன. அதற்காக, தான் எப்போது போவதாயிருந்தாலும் ரஜா கொடுக்கும்படியாக தனது ஆபீஸில் ஏற்பாடு செய்திருந்தான்.

ஆனால் அவனது தாய் தந்தையர் ஒரே பிடிவாதமாக இருந்து விட்டார்கள். தர்மத்தைப்பற்றிய தனது அபிப்பிராயத்தின்படி, தான் சும்மாயிருக்கவேண்டியது தான் என்று எண்ணி, தன் பெற்றோர்கள் மறுதளிக்கவே, வேட்டகம் போவதை நிறுத்திவிட்டான்.

II

இரண்டு மாஸங்களாயின. சாந்தசீலன் ஆபீஸ் வேலையாக கிருஷ்ணாபுரம் போய் அங்கு ஒரு வாரம் தங்கவேண்டியிருந்தது. அதற்கும் தன் மாமனார் ஊருக்கும் ஒரு மைல் தூரம் உண்டு. கிருஷ்ணபுரத்தில் சாப்பாட்டுக்குத் தக்க சௌகரியமில்லை. சாந்தசீலன் வைதீகப்பற்று அதிகம் உள்ளவன். அதிக ஆசாரம் கொண்டாடுவான். அனாசாரமான ஹோட்டலில் சாப்பிட்டுப் பழக்கமில்லை. அதனால் அருகிலுள்ள தன் மாமனார் ஊருக்குப் போய்த் தங்கி, அங்கிருந்து தினம் கிருஷ்ணாபுரம் போய் வேலை பார்த்து வந்தான். மாப்பிள்ளை கூட பொல்லாதவன் என்று எண்ணியிருந்த அவனது மாமனார் மாமியார் அவன் வரவைக் கண்டு ஸந்தோஷம் கொண்டு, அவனுக்கு ராஜோபசாரம் செய்து உபசரித்தார்கள். விரண்மயியும் தன் புருஷன் தன்பக்கம் பேசாமல், தன்னை பிறந்தகம் அனுப்பும்போது சும்மாயிருந்து விட்டதைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததால், இப்போதாவது அவர் மனம் திரும்பி இங்கு வந்தாரே யென்று ஸந்தோஷங்கொண்டு, அவனிடம் எப்போதும் போல குதூகலமாயிருந்தாள்.

சாந்தசீலன் ஹிரண்மயியை ஊருக்கு அழைத்துக் கொண்டு போக எண்ணினான். அது தன் பெற்றோர்களுக்கு விருப்பமாயிரா தென்று தெரிந்திருந்தும், ஒரு கால் அவர்களூடைய மனம் மாறாதா என்று யோசித்தான். ஒரு சமயம் அவர்களைக் கேட்காமல் செய்வது தவறு என்று எண்ணினான். இன்னது செய்வதென்று தோன்றாமல் கடைசியாக அழைத்துக் கொண்டுபோவோம்; அவர்கள் இஷ்டப்படாவிட்டால், திருப்பி ஊருக்கு அனுப்பிவிடுவோம் என்று எண்ணி, தன் மாமனாருடன் சொல்லி, தன் ஆபீஸ்வேலை முடிந்து ஊருக்குப் போகையில், ஹிரண்மயியைக் கூட்டிக் கொண்டு போனான்.

வீடு போனதும் தன் தாய் தந்தையர் செய்த ஆசீர்வாதத்துக்கு அளவு இல்லை. முதலில் மாமனார் ஊர் போனதே தப்பு; அங்கு அத்தனை நாள் தங்கியிருந்தது பெரும் பிசகு, ஹீரண்மயியைக் கூட்டிக் கொண்டு வந்தது மன்னிக்க முடியாத தப்பு. ஆனால் இவ்விஷயம் வசை மொழியுடன் அப்போது முடிந்தது. என்ன காரணமோ, ஹிரண்மயியை பிறந்தகம் அனுப்ப வீரபத்திரய்யராவது, தூர்ஜ்ஜடியம்மாளாவது நினைக்கவேயில்லை. அந்த மட்டில் பிழைத்ததாக ஹிரண்மயி நினைத்து சந்தோஷப்பட்டாள். சாந்தசீலனும் தன் மனைவியை அழைத்துவந்தது. சௌகரியமாய்ப் போயிற் றென்று எண்ணினான் ஆனால், முன் போல வீரபத்திரரும் தூர்ஜ்ஜடியும் ஹிரண்மயியை தூசாமலிருக்கவில்லை. பழையபடியே அவளை நடத்தி வந்தார்கள்.

இப்படி இரண்டு மாஸமாயிற்று. சாந்தசிலனுக்கு சிறிது காய்ச்சல் வந்தது. சாமான்யமாக இருந்து சீக்கிரம் போய்விடும் என்று எண்ணிக் கொல்லையிலிருந்த புல் பூண்டுகளையெல்லாம் பிடுங்கிக் கஷாயம் போட்டார்கள். அது தேகத்தைக் கெடுத்து விட்டது. பணச் செலவில்லாத வைத்யம், அதிலும், ஸுலபமாகக் கிடைக்கக்கூடிய தழை வேர் இதை எது நல்லதென்று, யார் சொன்ன போதிலும், சிரமம்பாராட்டாமல் தாய் தந்தையர்கள் கஷாயமோ, கல்கமோ தயார் செய்து கொடுத்து வந்தார்கள்.

பெரிய வைத்தியர்களையும் யோசனை கேட்பதுண்டு. யோசனை யோடு சரி. இனாமாகக் கிடைக்கும் ஆஸ்பத்திரி மருந்தைத் தவிர தக்க வைத்யர்கள் சொல்லும் வேறு மருந்து எதுவும் கொடுப்பதில்லை. இப்படி இருக்க, குடும்பங்களில் கலகம் மூட்டி, தாயாருக்கும் பிள்ளைக்கும்– தகப்பனுக்கும் பிள்ளைக்கும், புருஷனுக்கும் பெண்சாதிக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும்- ஆக வொட்டாமல் செய்வதில் தேர்ச்சிபெற்ற ஒரு கிழ விதவை வந்து சேர்ந்தாள். ஹிரண்மயியின் குணங்களைப் பற்றி தூர்ஜ்ஜடியிடம் அவள் ஏற்கனவே கேட்டிருக்கிறாள். அவளுடைய பெண்ணும் தூர்ஜ்ஜடியினுடைய பெண்ணும் புக்ககத்தல் கஷ்டப்பட்டுக் கொண்டு தங்கள் புருஷர்களிடம் தினம் அடியும் உதையும் பட்டுக்கொண்டிருக்க, ஹிரண்மயி மாத்திரம் புருஷனுடன் இன்பமாகக் காலங் கழிப்பது அந்த விதவைக்குப்பிடிக்கவில்லை. ஏன் ஒரு ஸ்திரீ மாத்ரம் புருஷனை வசப்படுத்த முடிகிறது, வேறு ஸ்திரீக்கு முடிவதில்லை? வசியப்படுத்த ஏதாவது உபாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று, பலவித உபாயமும் செய்தும், தன் பெண்ணாவது தூர்ஜ்ஜடியின் பெண்ணாவது புருஷனை வசப்படுத்த முடியவில்லை. ஹிரண்மயி சாந்தசீலனை வசப்படுத்தினதற்குக் காரணம் அவள் அவனுக்கு மருந்திட்டிருக்க வேண்டும் என்பது அந்த விதவையின் சித்தாந்தம். ஆகவே, சாந்தசீலனுக்கு புல் பூண்டின் பிரயோகத்தால் வியாதி குணமாகாமல், நாளுக்குநாள் அதிகரிக்கவே, விதவையின் சித்தாந்தம் ஸ்திரப்படுத்தப்பட்டது. விரண்மயி பிறந்தகம் போனாள். விதவையும் மற்றவர்களும் வயிற்றிலுள்ள மருந்தை எடுக்க ஊரிலுள்ள பச்சிலைகளை ஒன்று விடாமல் பரீக்கலானார்கள். மருந்தெடுக்கும் வைத்யத்தில் தேர்ச்சியுண்டென்று பிரவித்திப்பெற்ற வைத்தியர்களை மாத்ரம் வரவழைக்கவில்லை. இருபது முப்பது கொடுத்தாலும், அவனும் பச்சிலை தானே கொடுப்பான் என்பது அவர்களபிப்பிராயம்.

III

ஹிரண்மயி பிறர்தகம் போய் இரண்டு மாஸமாயிற்று. சாந்தசிலன் நாளுக்கு நாள் உடம்பு மெலிந்து வந்தான். ஆகாரம் குறை ந்து போயிற்று. அதிகமாக எழுந்து நடமாட முடியவில்லை. மருந்து என்ற பேர்கொண்டு கொடுத்துவந்த இலைகளால் அவன் நாக்கு மறத்துப்போய் எதைக் கண்டாலும் தின்னப் பிடிக்க வில்லை. அவன் தகப்பனார் பையனுடைய தேகஸ்திதியைக் கண்டு கொஞ்சமும் கவலைப் படவில்லை. அதைப்பற்றி யாரா வது பேசினால், “அதற்கென்ன செய்கிறது. அது அவனே செய்து கொண்டது, சொன்ன பேச்சு கேட்காமல், வேட்டகம் போனான், பலமாக மருந்து வைத்து விட்டார்கள். என்ன வைத்யம் செய்தாலும் குணப்படவில்லை. அவன் செய்ததற்குப் பலன் அவனே அனுபவிக்கிறான்” என்று ஸமாதானம் சொல்லி விடுவார். தக்க வைத்தியர்களை அழைத்து வந்து வைத்தியம் பார்க்கும்படி யாராவது சொன்னால் “எல்லாரும் என்ன கொடுக்கப் போகிறார்கள். ஏதாவது மூலிகையை அரைத்து விழுங்கு என்பார்கள், எல்லா வைத்தியமும் செய்து பார்த்தாயிற்று. ஒன்றிலும் பலிக்கவில்லை. அவன் தலையிலெழுத்து அது. எங்களுக்கு அவ்வளவு தான் கொடுத்து வைத்தது. அவர்கள் அவனுக்கு மிருத்துயுவாக வந்து சேர்ந்தார்கள்”. என்பார். இனாமாக ஒருவர் வைத்தியம் செய்வதாக வந்தபோதுகூட, பின்னால் பணங் கொடுக்காமலிருக்க முடியுமா என்று சொல்லி அதற்காக பயந்து அந்த வைத்யரை சாக்குப் போக்குச் சொல்லி யனுப்ப விட்டார்.

தூர்ஜ்ஜடிக்கு புத்ரனிடம் உள்ள வாஞ்சை வீரபத்ரய்யரு டையவாஞ்சையைவிட அதிகமல்ல. அவளுக்குத் தன் பெண்ணை ப்பற்றிய விசாரமே பெரிய விசாரம், அவள் புருஷன் ஒரு ஏழை. எழைக்கேற்றாற்போல நான்கு பெண்களும் இரண்டு பிள்ளைகளும் உள்ள ஒரு பெரிய குடும்பி. தாயார் தகப்பனார் உள்ளவன். அறுத்துப்போன ஒரு சகோதரி குடும்பத்தில் நாட்டாண்மை செய்யும் பாக்கியம் பெற்றவன். அந்த சகோதரியின் பிள்ளையை பி. எ.-க்குப் படிக்கவைத்து கலெக்டர் பரீகைக்கு சீமைக்கு அனுப்பவேண்டுமென்று ஆகாசக்கோட்டை கட்டிக்கொண்டிருப்பவன். அதனால் அந்தப் பிள்ளையை ராஜோபசாரமாக வளர்த்து வந்தான். இதற்கெல்லாம் செலவுக்கு அவனது பிதி சார்ஜித ஸொத்தில் வரும் வரும்படியும், தனது உத்தியோக — ஜவுளிக்கடையில் கணக்கு வேலை – வரும்படியும் போதா. அதற்காக தனது மனைவியை இரண்டு மாஸத்துக்கொருதடவை பிறந்தாத்துக்கு அனுப்பிவிடுவான். தூர்ஜ்ஜடிக்குப் பெண்பிறந்தகம் வந்தால் அதிக ஸந்தோஷம். தன்பேரன் பேர்த்திகளை அன்புடன் ஆதரித்து வருவாள். திரும்பிப் போகும் போது, தன் பெண்ணிடத்தில் வீரபத்திரய்யருக்குத் தெரியாமல் பத்து இருபது கொடுத்தனுப்புவாள். இவ்விதம் பணங்கொண்டு வந்தால் தான் தன் பெண்புக்ககம் போய் அதிக அடியும் உதையும் இல்லாம லிருக்க முடியுமென்பது தூர்ஜ்ஜடியம்மாளுக்கு நன்றாய்த் தெரியம், வீரபத்ரய்யர் மாத்ரம் பணம் எதுவும் கொடுப்பதில்லை அவர் எச்சில் கையால் காக்கையோட்டினால், அவைகள் அடிக்கடி தம் வீட்டைச்சுற்று மென்றும், அதுபோல் ஒரு தடவை பெண்ணுக்குப் பணம் கொடுத்தால், அவள் புருஷன் பணத்துக்குத் தட்டு ஏற்படும்போதெல்லாம் பிறந்தகம் அனுப்பிவிடுவானென்றும் சொல்லுவார்: –

இப்போது தூர்ஜ்ஜடியின் பெண் “சாகக் கிடக்கும்” தன் தம்பியைப் பார்க்க வந்தாள். “ஐயோ, பாவம், அன்யாயமாக என் தம்பியை மருந்து வைத்துக் கொன்று விட்டார்கள். அவர்கள் அந்த மாதிரிக் கூட்டந்தானே. அது தெரிந்து தானே அவனை வேட்டகம் போக வேண்டா மென்றார்கள். அவன் கேட்கவில்லை. போனான். அகப்பட்டுக் கொண்டான். இப்போது அனுபவிக்கிறான். எது, எனக்குத் தோன்றவில்லை, பிழைப்பா னென்று,” என்று வந்தவன்றே தனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி ‘அங்கலாய்த்தாள்.’

ஒருநாள் எல்லோரும் சாந்தசீலன் படுத்துக் கொண்டிருந்த அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சாந்தசீலன் தூங்கிக் கொண்டிருந்தான் அந்த ஸபையில் கிழ விதவையும் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் லம்பாஷணையை ஆரம்பித்தாள். அவளுக்கு மெதுவாய்ப் பேசத் தெரியாது. அவள் பேச ஆரம்பித்ததும், சாந்தசீலன் விழித்துக் கொண்டான். ஆனால் கண்ணைத்திறக்கவில்லை.

“இருக்கிற தேக ஸ்திதியைப் பார்த்தால் பிழைக்கமாட்டான் என்று தோன்றுகிறது. என்ன பாவம்! அன்னியாயமாக மருந்து வைத்துக்கெடுத்து விட்டார்களே. ஒரு குடும்பம் வீணாகப் போகிறதே!”

ஸபையில் கூட இருந்த பக்கத்து வீட்டுக்காரர், எதையும் ஈச்வர ஸங்கல்பம் என்று சொல்லி ஸமாதானம் செய்து கொள்ளும் ஸ்வபாவமுள்ளவர், “என்ன செய்கிறது, நமக்குக்கொடுத்துவைத்தது தானே கிடைக்கும். அவனுக்கு இப்படி நேர வேண்டு மென்று தலைவிதியிருந்தால், யார் என்ன செய்தால் தான் என்ன? அதை மாற்ற முடியுமா? உங்களுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். அந்தியகாலத்தில் இந்த துக்கம் ஏற்படவேண்டு மென்று ஈசுவராக்கினை போலும் ” என்றார்.

சற்று நோம் யாவரும் பேசாமல் சிந்தையிலாழ்ந்தார்கள், மறுபடியும் பக்கத்து வீட்டு வேதாந்தி, “உங்களுக்குத்தான் சிரமம் அதிகம், வயது காலத்தில் ஆதரிப்பார் இல்லாமல், நாளைக்குத் தலை சாய்த்தால், அவன் கையால் ஒரு நெருப்பு வாங்கிக் கொள்ள முடியாமல்,–பாவம்! பாவம்! என்ன உலகம்! எது சாச்வதம் ! ஒன்றுமில்லை. இப்படி சேருமென்று யார் நினைத்தார்கள். ஒரு குழந்தையாவது இருக்கிறதா? வம்சம் விளங்க. அதுவும் இல்லை. என்ன ஸம்பாதித்து என்ன, என்ன ஸொத்திருந்தென்ன ? புத்திரபாக்கியம், தீர்க்காயுனான புத்திரனில்லாவிட்டால் எது இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன? எதுவும் பிரயோஜனமில்லை.” என்று சொல்லி முடித்தார்.

மறுபடியும் எல்லாரும் சற்று மௌனமாயிருந்தார்கள்.

தூர்ஜ்ஜடியம்மாள் பேச ஆரம்பித்தாள். “அதற்கென்ன செய்கிறது? அவனாகச்செய்து கொண்டு, எல்லாருக்கும் கஷ்ட முண்டாக்கிவிட்டான். இனிமேல் மேலே நடக்க வேண்டியதை யோசிக்க வேண்டியது தான். வம்சம் விளங்க ஏதாவது செய்ய வேண்டும்.”

அவளுடைய எண்ணம் இன்னதென்று எவருக்கும் விளம்காததால் யாவரும் அவளைப் பார்த்தார்கள். உடனே தூர்ஜ்ஜடி,

“அது தான், ஏதாவது ஸ்வீகாரமாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத் தான் சொல்லுகிறேன்”.

மறுபடி நிசப்தம்.

“நம்ப ஸாவித்திரி குழந்தைகளில் யாரையாவது தான் ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். மாப்பிளை என்ன சொல்லுகிறாரோ, அவர் தகப்பனார் தாயார் என்ன சொல்லுகிறார்களோ.” என்றாள்.

“அவர்கள் என்ன சொல்ல இருக்கிறது. எனக்கிஷ்டம் தான். சிவனே யென்று சங்கரனைக் கொடுக்கிறேன். அவன் தான் இங்கே இருக்க பிரியப்படுகிறான். அவன் தான் ஸதா இங்கே வாவேண்டுமென்று சொல்லுகிறான்.” என்றாள் தூர்ஜ்ஜடியின் பெண் ஸாவித்திரி.

வீரபத்திரய்யர் ” அதெற்கென்ன, யாரையாவது ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். சங்கரனைத்தான் எடுத்து கொள்வோமே” என்றார்.

சாந்தசீலன் இதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு துக்கம் பொறுக்க முடியவில்லை. இன்னும் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்க விரும்பி, துக்கத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு இன்னும் தூங்குவதாகப் பாசாங்கு பண்ணிக் கண்ணை மூடிக்கொண்டிருந்தான்.

பக்கத்து வீட்டு வேதாந்தி, “இன்னும் ஏதாவது வேறு வைத்தியம் பார்க்கிறது தானே. ஒரு சமயம் குணமாகாதா? சங்கபுரி நாராயண பண்டிதன் ரொம்ப கெட்டிக்காரன் என்று சொல்லுகிறார்களே. அவனை அழைத்து வந்து காட்டுகிறது தானே. ரொம்ப கை ராசியாமே தொட்ட இடம் கெட்டுப் போனதே யில்லையாமே,” என்றார்.

வீரபத்ரய்யர் சற்று கோபம் கொண்டார். “இதுவரை பார்க்காத வைத்தியமில்லை. ஆயிரம் ரூபாய் வரையில் செலவழித்தாயிற்று. தக்க மருந்தாக உடம்பில் ஏறியிருக்கிறது. எதற்கும் அசையவில்லை. வீணாக அவனை அழைத்து வருவதில் பணச் செலவைத் தவிர வேறு பிரயோசனம் எதுவும் இல்லை. கொடுத்த மருந்துக்குக் கணக்கு வழக்குண்டா? எதற்கும் அசையவில்லையே வியாதி” என்றார்.

தூர்ஜ்ஜடியம்மாளும் இதற்கு ஒத்துப்பாடினாள். ஸாவித்திரி வீணாகப் பணம் செலவழிப்பதற்குப் பதிலாகத் தனக்கு ஒரு நல்ல புடவையாக “நாள் கிழமைகளில் கட்டிக்கொள்ள ஒன்று வாங்கிக் கொடுத்தால் “எந்நாளும் வைத்துக்கொண்டு கட்டிக் கொண்டிருப்பேன்” என்று வாய்கூசாமல், ஆனால் சற்று மெதுவாகச் சொன்னாள். இதை விட சாந்தசீலனுக்கு ஆதரவான வார்த்தைகள் வேறு என்ன வேண்டும். சம்பாஷணை வேறு விஷயங்களில் சென்றது. சாந்தசீலனும், விழித்துக்கொண்டான்.

நாள் செல்லச் செல்ல சாந்தசீலனுடைய உடம்பு மெலிவடைந்தது. மனமும் தளர்ச்சியடைந்தது. சீக்கிரம் யமனுலகு போகவேண்டுமென்று நிச்சயித்துவிட்டு மன அமைதி அடைந்தான். தன் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கெட்டோமென்ற எண்ணம் மாத்திரம் அவனுக்கு உண்டாகவில்லை. தான் உலகில் அனுபவிக்கவேண்டிய அனுபவம் அவ்வளவுதான் என்று எண்ணி ஸமாதானம் செய்து கொண்டான்.

ஒரு நாள் காலையில் கஞ்சி சாப்பிட்டு விட்டு, சாய்ந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கையில், திடீரென்று முன்பின் தகவல் தெரிவிக்காமல், அவனது மனைவியம் மாமனார் மாமியாரும் எதிரில் வந்து நின்றார்கள் அப்போது தான் தூர்ஜ்ஜடியம்மாள் ஆற்றங்கரைக்குப் போனாள். வீரபத்ரய்யர் கழனிக்குப் போயிருந்தார்.ஸாவித்திரி வீட்டின் பின்புறத்தில் ஏதோ வேலையாக இருந்தாள்.

திடீரென்று தன் மனைவியும் மாமனார் மாமியாரும் வந்ததும் சாந்தசீலனுக்கு ஒன்றுந்தோன்றவில்லை. வந்தவர்களை வா வென்று உபசரிக்கக் கூடத் தோன்றவில்லை.

மாமனார் “என்ன, சாந்தா, உடம்பு துரும்பாய்ப் போய்விட்டதே. ஒரு தகவல் எங்களுக்குத் தெரிவிக்கக்கூடாதா? இன்னுமா அப்பாவுக்கடங்கி கடுதாசிகூடப் போடாம லிருக்க வேண்டும். ஒரு வைத்தியங்கூட இல்லையாமே. நேற்றுத்தான் தெரிந்தது. ஓடிவந்தோம்” என்றார். சாந்தசீலனுடைய மனைவி ஹிரண்மயி, அவனைப்பார்த்து சற்றுநேரம் ஒன்றுந்தோன்றாமல் நின்று கொண்டிருந்து பிறகு தன் தாயார் தகப்பனாரைக் கூட கவனிக்காமல், ஓடிவந்து “நாதா, இப்படியா அநாதையாகப் போனீர்கள், நானிருந்து கூட உங்களுக்கு ஒரு உபகாரமும் செய்யமுடியாதபடி செய்து விட்டீர்களே” என்று சொல்லிக் கொண்டே அவனைக் கட்டிக்கொண்டு “ஹோ” என்று அழுதாள்.

“என் கண்மணி, என்ன செய்வேன். போதாத காலம் இப்படியாயிற்று. என் மேல் தப்பு தான், உன்னையனுப்பி விட்டது. உன்னை எப்போது பார்ப்பேன் என்று ஸ்தா சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்கோ எழுந்து நடமாட சக்தியில்லை உங்களுக்குக் கடிதம் போடவும் சரிப்படவில்லை. நல்ல வேளையாக வந்து சேர்ந்தீர்கள்.”

“அப்போதும் இப்படித்தான் சொன்னீர்கள். மறுபடி கூட்டிக்கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்து, பிறகு அவர்கள் சொன்னதும் அனுப்பிவிட்டீர்கள்.”

சாந்தசீலனுக்கு இதுராமபாணம் போல் தைத்தது. ஒன்றும்பதி சொல்லத்தோன்றவில்லை. கண்ணீர் உதிர்த்து துக்கப்பட்டான்.

“அடி, போதுமடி இளைத்த உடம்பில் இப்படி யெல்லாம் சொல்லாதே. நாளைக்கு உடம்பு ஸௌக்கியமானால் அவனெங்கு போகிறான். வேண்டிய மட்டும் கண்டி. இப்போது அவனை ஆதவாகப் பேசி உடம்பை ஸ்வஸ்தப் படுத்தவல்லவா பார்க்க வேண்டும்.- அப்பா சாந்தா, யார் வைத்தியம் பார்க்கிறார்கள்?”

“அந்த வெட்கக் கேட்டை யென்ன சொல்லட்டும். வைத்தியமே கிடையாது. தழையும் தாம்பும் அறைத்து விழுங்குகிறேன். அது தான் வைத்தியம்.” –

“என் நல்ல வைத்தியனாக ஒருவனை அழைத்துப் பார்க்கிறது தானே?”

“அதெல்லாம் நடக்கிற காரியமல்ல. அது அவர்களுக்கு யோசனையில்லை. வேறு யோசித்து வருகிறார்கள். யாரை ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளுகிறதென்று அவர்கள் யோசித்து வருகிறார்கள்.”

“உன்னைப்பற்றி நிச்சயம் செய்து விட்டார்களோ?”

“அவர்கள் கவனிக்கா விட்டால் போகிறதம்மா. நாமே யாராவது வைத்தியனைக் கூட்டிக் கொண்டு வருவோம். இங்கே யாராவது தக்க வைத்தியர்கள் உண்டா?”

“உண்டு, சங்கபுரி நாராயண பண்டிதன் கெட்டிக்காரன். ஆனால் என் தகப்பனாருக்கு இஷ்டமில்லை. பணம் அதிகம் கேட்பானென்று பயப்படுகிறார்.”

அந்த வைத்தியனையே அழைத்து வருவதாகத் தீர்மானம் செய்தார்கள். வீரபதாய்யரும் தூர்ஜ்ஜடியும், வீட்டில் வைத்தியம் பார்க்க ஆக்ஷேபித்தால் வேறு வீட்டில் ஜாகை வைத்துக் கொள்வதாயும், அதுவும் சரிப்படாவிட்டால் (மாமனார்) ஊருக் குப் போய் விடுகிறதென்றும் தீர்மானித்தார்கள்.

வைத்தியம் பார்க்க வந்தவர்களாதலால், சம்பந்திகளை வீரபத்ரய்யரும் தூர்ஜ்ஜடியம்மாளும் ஒன்றும் தூஷிக்கவில்லை. ஹிரண்மயியும் வசைமொழி கேட்கவில்லை. சங்கபுரிவைத்தியன் மாலையில் வந்தான். சாந்தசீலனைப்பார்த்தான். வியாதி அதிக பலமாயிருக்கிறதென்றும், இரண்டுவாரம் மருந்து கொடுக்க வேண்டுமென்றும், மொத்தமாக நூற்றைம்பது ரூபாய் கொடுப்பதாக இருந்தால் வைத்தியம் பார்ப்பதாகவும் மருந்துச் செலவுக்கென்று நூறு ரூபாய் கொடுக்கவேண்டுமென்றும் சொன்னான். நாராயண பண்டிதனிடம் பணம் குறைப்பதைப்பற்றிப் பேசுவது கூடாது. அவன் அது விஷயத்தில் ஒரே கண்டிப்பாயிருப்பான். அவனாக இஷ்டப்பட்டால் ஏழைகளுக்கு பணம் ஒன்றும் வாங்காமல் வைத்தியம் செய்வான். வீரபத்திரய்யர் பணக்காரர் என்றும் லோபியென்றும் தெரியும். அதனால் சரியாகக் கேட்டு விட்டான்.

வீரபத்திரய்யர் அதற்கு சம்மதிக்கவில்லை. இனி பிழைப்ப தேது, அனாவசியமாசப் பணம் செலவழிப்பானேன் என்று சொல்லிவிட்டார். தூர்ஜ்ஜடியோ எப்படியாவது போகட்டும் என்று சொல்லிவிட்டு சும்மாயிருந்தாள். சாந்தசீலனுடைய மாமனார் ரொம்ப ஏழை. இருநூற்றைம்பது ரூபாய்க்கு திடீரென்று எங்கு போவார். தமது ஊராயிருந்தாலும் ஏதாவது பிரயத்தனப்பட்டுப் பார்க்கலாம். அயலூரில் அவரை நம்பி யார் அவ்வளவு பெரிய தொகை பணம் கடன் கொடுப்பார். இன்னது செய்வதென்று தோன்றாமல் கையைப் பிசைந்தார். அவர் மனைவியோ அழுது கொண்டு தன் பெண்ணுக்கு பல வகையிலும் கஷ்டம் வருகிறதே என்று விசாரப்பட்டுக் கண்ணீர் உதிர்த்தாள். வைத்தியன் என்ன சொல்லுகிறீர்கள், போகட்டுமா என்று பலமுறை கேட்கிறான். எவருக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. கடைசியில் வைத்யன் போக எழுந்தான். உடனே ஹிரண்மயி “வைத்யரே, சற்று இரும், பணத்துக்கு விசாரம் இல்லை. உமக்கேற்க குணமாகுமென்று தோன்றுகிறதா? எங்களுக்கு பிரிய வார்த்தையாகச் சொல்லவேண்டாம். வாஸ்தவமாக உமக்கு என்ன தோன்றுகிறதோ சொல்லும்.” என்றாள்.

“அம்மணி வியாதி பலமானது, நாள்பட்டது. தேகத்தில் ஊறியிருக்கிறது. சிரமப்பட்டால் முடியுமென்று தான் சொல்லமுடியும். அதற்கு மேல் என்ன சொல்ல சாத்தியப்படும். நாங்கள் என்ன பிரமதேவனா, நிச்சயமாகச் சொல்ல?”

“அம்மா, வைத்யம் செய்யட்டும். பணத்துக்கு விசாரப் படவேண்டாம். என் நகைகளை யெல்லாம் விற்று விடுங்கள். அவருக்கு உபயோகப்படாத நகைகள் எனக்கு இருந்தென்ன இல்லாமலென்ன.- வைத்தியரே, இன்றைக்கே முடியுமானால் மருந்து கொடுக்க ஆரம்பியும் நகைகளை விற்று நாளைக்கு உமக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுக்கிறோம்.”- என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு நகையாகக் கழற்றித் தன் தாயாரிடம் கொடுத்தாள்.

வைத்தியன் பிரமித்துப் போய்விட்டான். “அம்மணி, இப்போது வேண்டாம். அப்புறம் வாங்கிக் கொள்ளுகிறேன். சொஸ்தமான பிறகே வாங்கிக் கொள்ளுகிறேன். இன்னும் சற்று நேரம் கழித்து மருந்து கொடுக்கிறேன். பத்யம் மாத்ரம் தவறாமல் பார்த்து வாருங்கள்.” என்று சொல்லிவிட்டுப்போனான். சற்று நேரத்துக்கெல்லாம் வைத்தியன் மருந்து கொண்டு வந்து கொடுத்தான், ஹிரண்மயியே அருகிலிருந்து சாந்தசீலனுக்கு மருந்து கொடுத்து உபசாரம் செய்தாள்.

“ஹிரணி, உன்னைப்போல் புத்திசாலியும், என்னைப்போல் ‘அசடும்’ உலகத்தில் கிடையாது இரண்டு தடவை உன்னை ஊருக்கு அனுப்பும்போது நான் சும்மாயிருந்தேன். அப்படி யிருந்தும் நீ நகைகளை விற்றாவது வைத்தியம் செய்ய தீர்மானிதாய் எனக்கே வெட்கமாயிருக்கிறது”.

“நீங்கள் எப்படியாவது குணப்பட்டு விட்டால் போதுமானது அப்புறம் நகைகள் கிடைப்பதா கஷ்டம்?”

“உனக்கிருக்கும் சிரத்தையும் கவலையும் என் தாயார் தகப்பனாருக்கு இல்லையே நான் பிழைக்க வேண்டுமென்ற கவலையே அவர்களுக்குக் கிடையாது”- அவர்கள் பேசும் போது வேறு எவரும் அருகிலில்லை.–”நான் போய் விடுவேனென்றே தீர்மானித்திருக்கிறார்கள். நான் போனபிறகு ஸ்வீகாரம் செய்துகொள்வதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.”

“நாதா, அதிகம் பேசினால் உடம்பு அலுப்பாகும். சும்மாயிருங் கள். இப்பொழுதாவது உங்கள் மனம் திரும்பிற்றே என்று எனக்கு ஸந்தோஷம். சற்று நேரம் சும்மாயிருங்கள்.” என்று சொல்லி அவனை ஆலிங்கனம் செய்து முத்தமிட்டாள். சாந்த சீலன் ஆனந்த ஸாகரத்தில் மூழ்கினதாக எண்ணியிருந்தான்.

வா வர பத்தியம் கடுமையாயிற்று. உடம்பும் குணமடைந்து வந்தது. ஆனால் செலவு அதிகமாயிற்று. வீரபத்ரய்யர் அதிக செலவாகிறதென்றும், இப்போது குணமாயிருக்கிறபடியே விட்டு விட்டால், இனி தானாக குண மேற்பட்டுவிடு மென்றும் சொல்லி விட்டார். தூர்ஜ்ஜடியும் அப்படியே சொல்லிவிட்டாள். சாந்த சீலனுடைய மாமனார் மாமியார் இன்ன சொல்லுவதென்று தெரியாமல் விழித்தார்கள்.

இந்த விஷயத்தைக் கேட்ட சாந்தசீலன் யோசிக்கலானான் “இப்போது நமக்கு குணமாகி வருகிறது. இன்னும் கொஞ்ச தாளில் பூராவும் ஸ்வஸ்தமாகிவிடும். வைத்தியன் சொல்லுகிற படி பத்தியம் முதலியவற்றில் ஜாக்கிரதையாக யிருந்தால் தான் நல்லது. இப்போது அப்பாவைக் கேட்போம், வைத்யத்தை நிறுத்த உத்தேசமா? ஏன்? என்று. எனக்கு சாப்பாடு போட முடியாதா? அவர் சரிவா பதில் சொல்லாவிட்டால், அல்லது வைத்தியத்தை நிறுத்த இஷ்டப்பட்டால்.- அப்புறம் நாம் யோசிக்க வேண்டிய தென்ன ? அப்பா அம்மாவைக் கவனிப்பதா? மனைவியை கவனிக்கிறதா ? யார் பேச்சைக் கேட்பது? இரண்டு பேர்களும் சேர்ந்திருக்கப் போகிறதில்லை. சேர்ந்திருந்தால் கலகம் தான் உண்டாகும். ஆகவே பிரிந்து தான் இருக்கவேண்டும். அப்படியானால் நான் யார் பக்கம்.”

சாந்தசீலன் தன் தகப்பனாரைக் கேட்டான். அவர் சரிவா பதில் சொல்லவில்லை. வழவழ வென்று பேசிவிட்டார். “என்ன சொல்லுகிறது! ராஜ வைத்தியமாக இருக்கிறது. தினம் இரண்டுபடி பாலும் அரைப்படி நெய்யும் என்றால் யாரால் முடி கிறது. கையிகோ பணமில்லை. இன்னும் எதோ மருந்து செய்யவேண்டும், பணம் வேண்டுமென்கிமூன். ஒன்றிரண்டா ? இருபது முப்பதாகக் கேட்கிறான். நான் சொல்லுவதென்ன. இப்போது வைத்தியத்தை நிறுத்தி வைப்போம். நாளடைவில் சரியான சாப்பாட்டில் குணப்பட்டுவிடும்.” என்றார்.

மேல்கொண்டு என்ன செய்கிறது என்று சாந்தசீலனுக்குத் தோன்றவில்லை. யாரைப் பணம் கேட்கிறது? தன் மனைவியை நகை விற்றுப் பணம் கொடு என்று எப்படிக் கேட்கி றது? அவனுக்கு யார் பணம் கடன் கொடுப்பார்கள். அவன் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த போது சற்று தூரத்தில் ஹிரண்மயி நின்று கொண்டிருந்தாள். தந்தை போனவு டன் அவள் வந்து புருஷன் துக்கமாக இருப்பதைப்பார்த்து, “ஏன் விசாரப்படுகிறீர்கள். பணத்துக்காக விசாரப்படுகிறீர்களா? யாரையாவது அழைத்து இந்தச் சரட்டை விற்று விடுங்கள். நாளைக்கு நீங்கள் பண்ணிப் போடுவீர்கள். அந்த தைரியம் எனக்குண்டு” என்று சொன்னாள்.

சாந்தசீலன் சற்று யோசித்தான். அவள் முகத்தைப் பார்த்தான். சற்று புன்னகை கொண்டான். “நான் பணக்காரன் வீட்டில் பிறந்தும் எனக்கு வைத்தியத்துக்குப் பணமில்லாமல் போயிற்றே. நீயல்லவா கொடுக்கும்படியாக நேருகிறது.”

இதன் மேல் சாந்தசீலன் யோசிக்கலானான். தன் தாயார் தகப்பனாருடைய கடின சித்தத்தையும் லோபத்தையும் பிரிய மின்மையையும் நண்குணர்ந்து கொண்டான். இனியவனுக்கு ஆப்தமானவர்கள் யார். தாயார் பெண்ணின் மேலும், அவளுடைய புருஷன், குழந்தைகள் இவர்கள் பேரிலுமே கண்ணும் கருத்துமாயிருக்கிறாள். ஏதடா, ஒரு பிள்ளையாயிற்றே, அவன் பிழைக்க நூறு இரு நூறு செலவழிந்தா லென்ன என்று தன் புருஷனிடம் சொல்லாமல், புருஷனுடன் சேர்ந்து பாடுகிறாள். வீரபத்திரய்யரோ ஒரு காசு செலவழிவதனாலும் பயப்படுகிறார். புத்ரனுடைய உடம்பு பெரியதாக இல்லை. மாமனார் மாமியாரோ ரொம்ப ஏழை அவர்கள் மேல் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. தற்போது ஹிரண்மயியே ஆதரவாக இருந்து வருகிறாள். இரண்டு தடவை புக்ககம் விரட்டியும், அதை ஒரு பொருட்டா யெண்ணாமல், தன் நகைகளை விற்றாவது புருஷன் பிழைக்க வைத்யம் செய்ய வேண்டு மென்று சொல்லுகிறாள், ” அவளை உல்லங்கனம் செய்தது பிசகு’ தாயார் தகப்பனாருக்கு பிரதியாக எதுவும் செய்வது கூடாது தான். அசற்கும் ஒரு அளவில்லையா. அதற்காக கட்டின மனைவியை அலக்ஷியம் செய்யலாமா? எது தர்மம்? யாரைக் கைவிடலாம்” என்றிப்படி யோசித்துக் கடைசியில், தன் மனைவியைக் கூப்பிட்டான்.

“ஹிரணி, உன் தகப்பனாரைக் கூப்பிடு இதுவரையில் புத்திப்பிசகால் செய்யவேண்டியது எது, தள்ள வேண்டியது. எது என்பதையறியாமல் தவித்தேன். இப்போது அறிந்துகொண்டேன். நீ என் உயிரைக் காப்பாற்றினாய். என் தாயார் தகப்பனார் என்னை லக்ஷியம் செய்யவில்லை என் வைத்தியத்தை இரண்டு தடவை நிறுத்தப் பார்த்தார்கள். இரண்டு தடவையும் உன்னால் தான் வைத்தியம் நடக்கிறது. இனி அவர்களால் எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. இனி உன்னைவிட்டுப் பிரிந்திருக்கமுடியாது. நான் அவர்களுடன் சேர்ந்திருந்தால் மறுபடியும் அவர்கள் பேச்சைக்கேட்டு புத்தி மோசம் போய் நான் உன்னை விட்டுப்பிரிய நேரிடுமோ என்று பயமாயிருக்கிறது. ஆகையால் இப்போதே வேறு இடம் ஜாகைபோகவேண்டும். உன் தகப்பனாரைக் கூப்பிடு, தெருக்கோடியில் ஒரு வீடு காலியாயிருக்கிறது. இப்போதே அவ்விடம் போவோம்.”

“பிரிந்து போவதைப்பற்றி யோசித்துச் செய்யுங்கள். வீணாக என்மேல் அபவாதம் உண்டாகும். நான் ஏதோ உங்கள் மனஸைக்கலைத்து விட்டாதாக ஏற்படும்.”

“அதெல்லாம் பார்த்துச் சரிப்படாது. இங்கு ஒரு க்ஷண மும் இருக்கமுடியாது. சீக்கிரம் உடம்பு குணமாகிவிட்டால், ஏதோ ஈசுவரன் கொடுத்த உத்யோகம் இருக்கிறது. நமக்குச் சாப்பாட்டுக்குப்போதும். உன்னுடைய ஆதரவும் அன்பும் சம்பளக்குறைவை சரிப்படுத்திவிடும். செலவுக்கு வரும்படி முன்னைப் பின்னாக இருந்தாலும் நிம்மதியாயும் ஸந்தோவுமாயும் இருக்கலாம். இங்கே இருக்கிறவரையில் எனக்கு எப்போதும் துக்கந்தான் உனக்கோ இங்கு ஒரு நாழிகை இருக்க சரிப்படாது.”

ஹிரண்மயி புருஷனருகில் புன்சிரிப்புடன் வந்து உட் கார்ந்தாள். உடனே சாந்தசீலன் அவளை ஆலிங்கனம் செய்து சொண்டு, “இனி எப்போதும் நாம் ஸந்தோஷமாக வாழ்ந்திருப்போம். பழைய துக்கங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடு” என்று சொல்லி முத்தமிட்டான். அவளும் “அப்படியே ஆகட்டும். அப்பாவை கூப்பிடுகிறேன்” என்று சொல்லியவனைக் கட்டி முத்தமிட்டுக் கொஞ்சி விளையாட ஆரம்பித்தாள். தூர்ஜ்ஜடி அவர்களைக்கண்டு வயிறெறிந்து போவதையாவது, தூர்ஜ்ஜடியின் பெண் கண்டு ஹேளனம் செய்து கொண்டு போனதை யாவது அவர்கள் கவனிக்கவில்லை.

– சிறுகதைகள், முதற் பதிப்பு: 1922, வி.நாராயணன் & கம்பெனி, மதராஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *