விரல் வித்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 8,233 
 

எனக்குத் தெரிந்து அவன் கைகளை கழுவியதே இல்லை. சாப்பிடுவதற்கு முன் என்றால் கூட பரவாயில்லை, சாப்பிட்ட பின்னும் கூட. அவன் கைகளை துடைப்பதற்கென்று ஒரு கைகுட்டை வைத்திருக்கிறான். அந்த கைகுட்டையைப் பற்றி சிறு குறிப்பு ஒன்று வரைவதென்றால்………..

வாழ்வின் கடைசி காலத்தில் இழுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரியவருக்கு அது பயன்படக்கூடும்.

அனஸ்தீஸியா மருந்து தீர்ந்து போன நேரத்தில், அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுவரப்பட்ட, அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய ஒரு பேஷண்ட்டுக்கு அது உதவக்கூடும்.

நம்முடைய பரம்பரை எதிரி நம் கண்முன் நிற்கிறான் என்றால், அவனை ஒரு நொடியில் தீர்த்துக் கட்ட உதவக்கூடும்.

அல்லது யாருக்கேனும் அஜீரணமாக இருந்தால் அதை முகர்ந்து பார்க்கலாம் (பி.கு: உயிருக்கு உத்தரவாதம் இல்லை) வயிற்றின் குடல் பகுதியில் ஒன்றுமே இருக்காது. அனைத்தையும் வெளியே கொண்டு வந்து விடும்.

அந்த கைகுட்டையை பயன்படுத்தி பாசிடிவ் எண்ணம் கொண்டவர்கள் இன்னும் பல நல்ல விஷயங்களை சாதித்துக் கொள்ளலாம். ஹெச் 1 என் 1 ………. இசட் 1 வரையிலான அனைத்து வகையான கிருமிகளும் அதில் குடியிருக்கலாம். அவை அவனின் செல்லப் பிராணிகள், அவனை அவை ஒன்றும் செய்வதில்லை.

அவன் எங்கள் அறைக்கு குடிபெயர்ந்து 3 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் மொத்தம் 3 பேர். சகிப்புத் தன்மை பற்றி பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமானால் எங்களை தொடர்பு கொள்ளலாம். பாண்டி, பாலா, சரவணன், இந்த மூவரில் பெருமையும், சிறப்பும் வாய்ந்த அந்த நபர், த கிரேட் பாண்டி.

மதுரை அருகே மஞ்சநாயக்கன்பட்டியிலிருந்து கூளிங்கிளாஸ் போட்டபடி சென்னைக்கு வந்தான். அறைக்குள் வந்து அரைமணி நேரம் ஆகியும் அந்த கூளிங் கிளாசை கலட்டாமல் இருந்த போதே நாங்கள் யோசித்திருக்க வேண்டும். விதி எங்களை வென்றுவிட்டது.

அவனை பற்றிய முன் உரையை படித்துவிட்டு அவனை சோம்பேறி என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். அவனிடம் 5 நிமிடம் பேச வேண்டும் என்றால் 2 நாட்களுக்கு முன் அப்பாயின் மென்ட் வாங்க வேண்டும். அவ்வளவு பிசி அவன். அவன் ஒரு 24 மணி நேர அரசியல் தொண்டன். 5ம் கிளாஸ் பெயிலான அவன் காமராஜரை பற்றி எங்கோ கேள்வி பட்டிருக்கிறான் போல. உதாரணம் காட்டுவதற்கு, தமிழர்களுக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும். காமராஜரை கடந்த 5 வருடமாக அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறான். படிக்காத மேதை என்ற பட்டத்திற்கு ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. நின்று பேச கூட நேரம் இல்லாத அவனுக்கு சாப்பிட்ட முன்னும் பின்னும் கை கழுவுவதற்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது.

ஆனால், அன்று நடந்த அந்த நிகழ்ச்சி எங்களை நிலைகுலையச் செய்து விட்டது. நானும், பாலாவும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உரைந்து போனோம். இந்த பூமியில் இப்படிக் கூட நடக்குமா? என்ற ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டோம். ஒரு வேளை இது கனவாக இருக்குமோ? என்று எங்களை நாங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது. இது சாத்தியமில்லைதான். ஆனால் உண்மை. பாண்டி தனது கைகளை சோப்பு போட்டு கழுவிக் கொண்டிருந்தான். நல்ல வேளை இருதய நோய் எதுவும் இல்லாததால், இத்தகைய அதிர்ச்சிக்குப் பின்னரும் நாங்கள் உயிரோடிருக்கிறோம். கலிகாலத்தில் இப்படிக் கூட நடக்குமா? என்பதை நினைத்துப் பார்க்கையில் பயம் நெஞ்சை கவ்விக் கொண்டது. அந்த அற்புத நிகழ்ச்சியை கண்காணிப்பதற்காக அலுவலகத்திற்கு விடுமுறை போட வேண்டியதாகப் போய்விட்டது. நின்று, நிதானித்து அ;ந்த அற்புதக் காட்சியை எனது செல்போன் காமிராவில் படம் எடுக்க முயற்சித்த பொழுதுதான் கவனித்தேன். அவன் குறிப்பாக தனது விரல்களை மட்டும் தான் கழுவிக் கொண்டிருந்தான். அப்படியும் கூட சொல்ல முடியாது. தனது நடுவிரலை மட்டும் தான் அவன் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தான். அந்த விரலில் கருநீலக் கலரில் மையிடப்பட்டிருந்தது. பிறகுதான் எனக்கு எல்லாம் புரிய வந்தது.

அன்றைய தினம், முக்கியத்துவம் வாய்ந்த தினம், ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டிய தினம். நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற தினம். பதவிகள் கைமாறக் கூடிய தினம். அன்று ஓட்டுப் போடும் தினம். பாண்டி தனது ஜனநாயகக் கடமையை 30வது தடவையாக நிறைவேற்றிக் கொண்டிருந்தான். அவன் தனது கடமையுணர்ச்சியை இதோடு கூட நிறுத்திக் கொள்வான் என்று தோன்றவில்லை. கடந்த ஒரு வாரமாக ஊரில் இறந்து போனவர்களையெல்லாம் கணக்கெடுத்துக் கொண்டிருந்தான். இப்பொழுதான் புரிந்தது அது எதற்காக என்று. இறந்தவர்களின் ஓட்டுக்களையெல்லாம் சரமாரியாக குத்திக் கொண்டிருந்தான். அந்த கருப்பு மையை அழிப்பதற்குள் தனது விரலை இழந்து விடுவான் போல தெரிந்தது. ஆனால் அதற்கெல்லாம் அவன் கவலைப் படுபவனாகத் தெரியவில்லை.

ஒரு போலியான கட்சி, இவனைப் போன்ற போலியான மனிதர்களின் உதவியால் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்கிற பதைபதைப்பில் நானும் எனது ஓட்டை பதிவு செய்ய கிளம்பினேன். நான் அவசர அவசரமாக கிளம்புவதைப் பார்த்த பாலா என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தான். அதன் அர்த்தம் அப்பொழுது புரியவில்லை.

இந்தியாவில் வாழ வேண்டுமானால் வரிசையில் நிற்கப் பழகிக் கொள்ள வேண்டும். தலை சுற்றல் வருவதற்கு காரணம் ஒரு நீண்ட வரிசையாகக் கூட இருக்கலாம் என்பதை நம்ப முடியவில்லை. ஒரு வயதான கிழவரைப் பார்த்து என்னைத் தேற்றிக் கொண்டு வரிசையில் நின்றேன்.

2 மணி நேரம் ஒரே இடத்தில் நிற்பதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. நின்று கொண்டே தூங்கும் குதிரைகள் மேல் இருந்த ஆச்சரியம் எனக்கு தற்பொழுது தான் நீங்கியது. நானும் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டேன். நின்று கொண்டே என்ன ஒரு வசதி. ஆனால்……….. ஆனால்…………. அவ்வளவு நேரம் கால் கடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன் என்கிற ஒரே காரணத்துக்காகவாவது என்னை ஓட்டு போட அனுமதித்திருக்கலாம். அல்லது வாழ்க்கையில் முதல் முறையாக கோபப்பட்டு பொறுப்பு மிகுதியால் ஓட்டுப் போட வந்தேன் என்கிற காரணத்துக்காகவாவது அனுமதித்திருக்கலாம். எனக்கு எப்படி புரியாமல் போனது இறந்தவர்களின் ஓட்டை எல்லாம் தேடிப் பிடித்து போட்டவன், ஒரே அறையில் உள்ள நண்பர்களை விட்டுவிட மாட்டான் என்று. ஆனால் அவன் இதை ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்னராவது சொல்லியிருக்கலாம். நாடாவது, ஜனநாயகமாவது, அரசாங்கமாவது அநாவசியமாக கவலைப் படாமல் சென்றிருப்பேன். நமது முன்னோர்கள்தான் அழகாக சொல்லி வைத்திருக்கிறார்களே. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? உழைத்தால் தான் சோறு என்று. அய்யோ முன்னோரிகளின் வார்த்தையை மீறிவிட்டேனே. ஒரு நிமிடத்தில் உணர்ச்சிவசப்பட்டு விட்டேனே. என்னை மன்னித்து விட அவர்களுக்கு உரிமை உண்டு.

3 மணி நேரம் வீணாய் போனது குறித்து நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை ஆச்சரியமாக கவனித்தபடி அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். உண்மையில் நேரம் வீணாய் போவதை நான் விரும்பவில்லை போல. இந்த உண்மை எனக்கே இப்பொழுது தான் புரிந்தது. இனிமேல் வெட்டியாய் நேரத்தை கழிக்காதே என்று எவனும் என்னைப் பார்த்து சொல்ல முடியாது. தலையை தொங்க விட்டபடி அறைக்குள் நுழைந்தேன். அந்த தேசத்துரோகி அங்கே இல்லை. அவன் தன் விரல் நுனியில் வித்தைகளை செய்து கொண்டிருந்தான். அவன் தனது விரல் நுனியில் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்துக் கொண்டிருந்தான். அதனாலென்ன, கோபத்தில் புலுங்கி, புலம்புவதற்கு நல்ல ஆரோக்கியமான மனமும், ஆறுதலடைவதற்கு முன்னோர்களின் அறிவுரைகளும் இருக்கும் வரை…..அதனாலென்ன…..

அறைக்குள் நுழைந்ததும், நுழையாததுமாக நண்பன் பாலா கூறினான் (அதே நக்கல் சிரிப்போடு) சுவற்றை பார்த்தபடி விரக்தியாக.

‘ராமன் ஆண்டாலேன்ன…………………………..”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *