மாடும் மனிதனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,146 
 

மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமாரி என்று கேள்விப்பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர்.

“என்னடாபயல்களா, என்ன சேதி?”

“பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்……”

“வேலைதானே ? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!”

“முனியனுக்கு மூணு நாளாக் காய்ச்சல்னு கேள்விப்பட்டோம்……!”

“ஆமாம், அதற்கென்ன இப்போது?”

“அவனுக்குப் பதிலா எங்களில் யாரையாச்சும்…..!”

“ஓஹோ! அப்படியானால் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்; கணக்குப் பிள்ளை அவனைத்தான் பார்க்கப் போயிருக்கிறார்; வரட்டும்!”

அப்படியே அவர்கள் ஒதுங்கி நின்றனர். அதே சமயத்தில் ஒதுங்காமலும், பதுங்காமலும், நிமிர்ந்த நடையுடனும் நேர் கொண்ட பார்வையுடனும் எசமான் வீட்டு நாய் அவர்களுக்கிடையே நுழைந்தது. அதைத் தொடர்ந்து கணக்கப் பிள்ளையும் வந்தார்.

“என்னய்யா, ஆளைப் பார்த்தீரா? என்ன சொன்னான்? இன்றாவது வேலைக்கு வரப் போகிறானா, இல்லையா?” என்றார் மாணிக்கம் பிள்ளை.

“அவன் எங்கே இனிமேல் வேலைக்கு வரப் போகிறான்?” என்றார் கணக்கப் பிள்ளை.

“ஏன் வாயைப் பிளந்து விட்டானா?”
“ஆமாம்.”

“சரி, விடு கழுதையை! ஏய்! யாரடா அங்கே?” என்று திரும்பினார் மாணிக்கம் பிள்ளை.

அவ்வளவுதான்; “எசமான்”என்று விழுந்தடித்துக் கொண்டு வந்து அவருக்கு எதிரே நின்றான் ஒருவன்.

அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “வந்திருப்பவர்களில் நீதான் தேவலை என்று தோன்றுகிறது; ஒழுங்காக வேலை செய்வாயா?”

ரோஸம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவனுக்கு; “என்னா அப்படிக் கேட்டுப்புட்டிங்க, உங்க காலு செருப்பாயிருப்பேனுங்க நானு” என்று சூள் கொட்டினான்.

“என்னமோ, தலைக்குக் கிரீடமாக வந்து சேராமல் இருந்தால் சரிதான்!-ஓய், இவனைப் பண்ணைக்கு அனுப்பிவையும்; பாக்கிப் பேரை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தும்!” என்று உத்தரவு போட்டுவிட்டு மாணிக்கம் பிள்ளை உள்ளே வந்தார். மாட்டு வைத்தியர் கையைப் பிசைந்து கொண்டு அவருக்கு எதிரே நின்றார்.

“என்னய்யா, எப்படியிருக்கு?”

“என்னாலே ஆன மட்டும் பார்த்தேனுங்க; தவறிப் போச்சுங்க!”

“இரண்டுமா?”

“ஆமாங்க!”

இதைக் கேட்டதுதான் தாமதம்; ‘ஆ’ என்று அலறிய வண்ணம் அப்படியே தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் பிள்ளை.

மாட்டு வைத்தியர் அதுதான் சமயமென்று மெள்ள நழுவினார்.

“அப்போது சேரிக்கு ஆள் விடட்டுமா?”என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் மாணிக்கம் பிள்ளையின் மனைவி.

“பேசாமல் போடி, சேரிக்கு ஆள் விடுகிறாளாம் ஆள்!” என்றார் பிள்ளை எரிச்சலுடன்.

“ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது முப்பது வருஷமாவேலை செஞ்ச முனியனே போயிட்டானாம்; மாடு போனா என்னவாம்?” என்றாள் அவள்.

“மனுஷன் முதலில்லாமல் வருவான்; மாடு முதலில்லாமல் வருமா?” என்றார் அவர்.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *