விடாப்பிடி

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,457 
 

“எனக்கு ஏதாவது லெட்டர்ஸ் உண்டா?” என்று அப்புசாமியைச் சீதாப்பாட்டி விசாரித்தாள்.

அவர் ஒரு இன்லண்ட் லெட்டரைத் தப்பாகக் கிழித்துவிட்டு, எதை, எந்தப் பகுதியோடு இணைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்தார்.

“எப்போதும் உங்களுக்கு ‘ஹேஸ்ட்’ தான். இப்படி தாறுமாறாகவா கிழிப்பது?” என்று அதை வாங்கிச் சரிசெய்து படித்தவள் அடுத்த கணம், “ஆ! கெட்டது குடி!” என்று கூவியவாறு சோபாவில் இடிந்துபோய் உட்காந்துவிட்டாள்.

மலை குலைந்தாலும், நிலைகுலையாத தன் மனையாட்டியைக் கலகலத்துப் போய் உட்கார வைத்த அந்தக் கடிதத்தை மனத்துக்குள் பாராட்டியவராக அப்புசாமி, “என்ன கடிதம்? யாரிடமிருந்து? என்றார்.

“ஜேங்க்ளூர் பெய்ராம்! ஜேங்க்ளூர் பெய்ராம்…’ இந்த் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் சீதாப்பாட்டியால் பேச முடியவில்லை. அவள் கைகள் நாதசுரம் இல்லாத நாதசுர உறை போலத் தொளதொளத்துத் தொய்ந்துவிட்டது. மங்கோலியரைத் தோற்கடிக்கும் அவள் மஞ்சள் நிறமும் வெளிறியது.

மிகவும் துணிகரமான ஒரு பேய், தன் மனைவியைப் பின்பக்கமாக வந்து ஓர் அறை விட்டதோ என்று அப்புசாமி ஐயுற்றார்.

“சீதே…சீதே…” என்று பதறியவராக ஓடிப்போய்ச் சிறிது நீர் கொண்டுவந்து முகத்தில் தெளித்தார்.

‘ஜேங்க்ளூர் பெய்ராம்!’ என்பது என்ன? அந்த வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு மனைவி மயக்கமடைவானேன்?

சீதாப்பாட்டிக்குத் தன் நினைவு திரும்பியதும் அவருக்கு விடை கிடைத்தது.

‘ஜேங்க்ளூர் பெய்ராம்!’ என்று சீதாப்பாட்டி சொன்னது தவறு. திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் வாய் குழறிச் சொல்லிவிட்டாள்.

பெங்களூர் ஜெயராம் என்பதே சரியான வார்த்தை.

தன் நினைவு வரப்பெற்ற சீதாப்பாட்டி விளக்கினாள். “நம்ம ஹெளஸ் ஓனர் இருக்கிறாரே பெங்களூர் ஜெயராம், அவர் இந்த வீட்டை விற்கப் போகிறாராம் யாருக்கோ! நாம் காலி செய்யவேண்டுமாம். உடல்நிலை ரொம்ப ஸீரியஸாக இருக்கிறதாம்.!

அதைக்கேட்ட அப்புசாமி முற்றிய அபன்டிஸைடிஸ் கேஸ் மாதிரி அலறித் துடிக்கத் தொடங்கினார்.

அடுத்த இரண்டு மூன்று நாள் அந்த வீட்டில் ஒரே ஷெனாய் வாத்திய ஒலிதான்-அதாவது சோக கீதம்தான்.

உற்சாகத்துக்கு ரேடியோவை அப்புசாமி போட்டால்கூடச் சீதாப்பாட்டி பாய்ந்துவந்து அணைப்பாள்.

புறக்கடையிலிருந்த கறிவேப்பிலை மரத்தை அவள் பாசத்துடன் தடவியவாறு சகுந்தலைபோல் பெருமூச்செறிந்தாள். அவள் கையால் நட்டுப் பெரிய மரமாக வளர்ந்தது அது.

பாட்டிகள் முன்னேற்றக் கழகத்துக்காக அமைத்த பாட்டிமிண்டன் கோர்ட் சீதாப்பாட்டியை,’ என்னிடம் யார் இனிமேல் விளையாடுவார்கள்?’ என்று கேட்டது. சீதாப்பாட்டி தான் வழக்கமாகக் காற்றாட மாடியில் உட்காரும் பிரம்பு நாற்காலியில் போய் உட்காந்தாள். அவள் கண்கள் கலங்கின. அப்புசாமிக்கெனத் தனியாக மாடியில் சொந்த செலவில் அமைத்த ‘அமைதிக் குடில்’கூடத் தன் மோனத்தைக் களைந்து சீதாப்பாட்டியை வினவியது: ‘எங்களை விட்டுவிட்டுப் போகப் போகிறாயா?’ என்று. சீதாப்பாட்டியின் கண்கள் கலங்கின.

அவள் கண்ணீரை அப்புசாமி பார்த்துவிட்டார். மனைவியின் தோளை ஆதுரமாகப் பற்றி, “அழுகிறாயா சீதே! எதற்கும் கலங்காத நீயும் கலங்கி விட்டாயா?” என்றார்.

சீதாப்பாட்டி கண்களைத் துடைத்துக் கொண்டாள். பெருமூச்சு விட்டபடி, “இல்யூஷன்! மியர் இல்யூஷன். இந்த வீடு என்றைக்கிருந்தாலும் நமக்கு வாடகை வீடுதான். இதை நமது ஓன் ஹெளஸ் மாதிரி நினைத்துக்கொண்டு நாம் இவ்வளவு நாள் இருந்துவிட்டோம். மாயை என்பது இதுதான் போலும்,” என்று எழுந்தாள்.

அப்புசாமி, “இந்த வீடு மாதிரி நமக்கு வேறு வீடு எங்கே கிடைக்கும்? இதை எல்லோரும் நம்முடைய சொந்த பங்களா என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாற்பது ரூபாய் வாடகை சொன்னால் ஒருத்தரும் நம்பக்கூட மாட்டார்கள். முப்பது வருடம் இதில் குப்பை கொட்டிவிட்டு, இப்போது எப்படி நாம் வேறு வீடு தேடுவது? வீட்டுச் சொந்தாக்காரப் பாவிக்கு இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது விற்கிற காலம் வர வேண்டுமா?” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

வீட்டுச் சொந்தக்காரர் கறுப்பா, சிவப்பா, சதுரமா, வட்டமா என்றுகூட அப்புசாமித் தம்பதிகளுக்கு இந்த முப்பது வருட காலத்தில் தெரியாது. அவர் பெங்களூரில் இருக்கிறார் என்பது மட்டும் தெரியும். மாதா மாதம் சீதாப்பாட்டி முதல் தேதி மணியார்டரில் வாடகைப் பணத்தை அவருடைய ஏஜண்டுக்கு அனுப்பி விடுவாள். அவர் உடனே ரசீது அனுப்பிவிடுவார்.

வெகு நேரம் இடிந்து போய் இருந்த அப்புசாமி, ‘பியூஸாக போகும் பல்ப்’ எரிவதைப் போலச் சட்டென்று ஒரு யோசனை வெளியிட்டு சீதாப்பாட்டியைப் பிரமிக்க வைத்தார்.

வீட்டுக்காரர் வேறு யாருக்கும் விற்கு முன் ஏன் நாமே அதை அவரிடம் விலைக்கு வாங்கிக் கொள்ளக்கூடாது?’ என்பதே அந்த யோசனை.

பெங்களூர் எக்ஸ்பிரஸ் மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் துரிதமாகச் சென்று கொண்டிருந்தது.

ஓடிக் கொண்டிருந்த ரயிலில் அப்புசாமி, கேட்கக் கூடாத கேள்வி ஒன்றைச் சீதாப்பாட்டியிடம் கேட்டு வைத்தார். “வீட்டுக்காரர் விலாசம் தெரியுமோ? நாம் வாடகை அனுப்பி வந்ததெல்லாம் அவரது ஏஜண்ட் விலாசத்துக்கல்லவா?” என்றார்.

சீதாப்பாட்டி, “சரி, அந்த ஏஜண்டைக் கேட்டால் போயிற்று. மாதா மாதம் எம்.ஓ. செய்து ஏஜண்ட் அட்ரஸ்தான் நமக்கு பை ஹார்ட் ஆயிற்றே? நீங்கள் வொர்ரி பண்ணிக் கொள்ளாதீர்கள். பேசாமல் என் பின்னோடு வாருங்கள்.” என்றாள்.

“பஹ¥த் அச்சா! எனக்கும் நல்லதாகப்போயிற்று. ‘சீதை இருக்கிற இடம் அயோத்தி!’ என்று நான் பாட்டுக்கு உன் பின்னாடியே வருகிறேன்.”

பெங்களூரில் வந்து இறங்கியதும் வீட்டுக்காரரின் ஏஜண்ட் முகவரியை வெகு சுலபத்தில் கண்டு பிடித்துவிட்டனர். இவர்கள் போன நேரம் ஏஜண்ட் அரை மிதப்பில் இருந்தார், அந்த அரை மிதப்பிலேயே இவர்களை வரவேற்று உபசரித்து மரியாதையெல்லாம் சரியாகச் செய்துவிட்டார். ஆனால் சீதாப்பாட்டி, “ஹெளஸ் ஓனர் அட்ரஸ் வேண்டும்? அவர் எங்கே தங்கியிருக்கிறார். அவரைப் பெர்ஸனலாகப் பார்க்க வேண்டுமே?” என்று கேட்ட போதுதான், ஏதோவொரு முகவரி உளறித் தொலைத்து விட்டார்.

ஏஜண்ட் கூறிய இல்லத்தைக் கண்டு பிடிப்பதில் அப்புசாமி தம்பதிகளுக்குச் சிரமம் ஏற்படவில்லை. வீட்டைக் கண்டு பிடித்த பின்புதான் எல்லாச் சிரமங்களும் ஏற்பட்டன.

மதுரை திருமலை நாயக்கர் மஹாலின் இளைய சகோதரனைப்போலப் பிரம்மாண்டமாக இருந்தது அந்தப் பங்களா. ஆனால், பங்களாவுக்குள் திருமலை நாயக்கரோ அல்லது வேறு ஆட்கள் யாருமோ இருப்பதாகத் தெரியவில்லை.

சீதாப்பாட்டி, “”பாலஸ் மாதிரி அல்லவா இருக்கிறது. எவ்வளவு பெரிய ஹால்,” என்று வியந்தவள், “குரல் கொடுங்கள்,” என்றாள்.

அப்புசாமி தன் கையிலிருந்த ஹாண்ட் பாக்கைக் கொடுத்தாரே தவிரக் குரல் கொடுக்கவில்லை. அவருக்கு அந்தப் பெரிய பங்களா இனம் தெரியாத பயத்தைக் கொடுத்தது.

“யாரோ திணறித் திணறி மூச்சு விடுகிற மாதிரி இல்லை?” என்று சீதாப்பாட்டி கேட்டாள்.

அப்புசாமி. “அது வேறு யாருமில்லை. நான்தான்…” என்றார் பின்னாலிருந்து.

“நீங்களில்லை. உங்களைத் தவிர இன்னும் வேறு யாரோ. நன்றாக உற்றுக் கேளுங்கள். ஏன் இப்படிக் கை காலெல்லாம் நடுங்குகிறது?” என்று கண்டித்தாள்.

மாடிப் பக்கமிருந்த அறை ஒன்றிலிருந்துதான் அந்த சத்தம் வந்து கொண்டிருந்தது.

சீதாப்பாட்டி அமைதியாக மாடிப்படி ஏறினாள். அப்புசாமியும், பயம் பின் தொடரத் தானும் பின் தெட்ர்ந்தார்.

அறையில் கண்ட காட்சி, சீதாப்பாட்டியை நெகிழ்வித்தது.

ஆஜானுபாகுவான ஒருவர் நோயாளியாகக் கண்மூடித்தனமாகப் படுத்துக் கிடந்தார். அவர் இருந்த நிலையை எந்தப் பச்சைக் குழந்தை பார்த்தாலும் அவர் இறந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிடும்.

சீதாப்பாட்டி அப்புசாமியிடம், “தெரிகிறதா யார் என்று? கடிதத்தில் வந்த விஷயம் உண்மைதான். நமது ஹெளஸ் ஓனர்தான். கண்டிஷன் ரொம்ப ‘க்ரேவ்’ ஆக இருக்கும் போலிருக்கிறதே? இப்படி அனாதைக் கணக்காக கிடக்கிறாரே? நாம் என்ன செய்யலாம்?” என்றாள்.

“பேசாமல் திரும்பி விடலாம், “என்ற அப்புசாமி “இதெல்லாம் வம்பு சமாச்சாரம். ஆசாமியோ பணக்காரன் மண்டையைப் போடுகிற போது பக்கத்தில் நாம் இருந்தால் ஆபத்து. யாராவது வந்து நீங்கள் இரண்டு பேர்தான் அவருக்கு ஏதோ செய்து விட்டீர்கள் என்றால் என்ன செய்து?” என்றார்.

சீதாப்பாட்டி கோபித்துக் கொண்டாள். “சிச்சுவேஷனைக் கொஞ்சம் ஹ்யூமன் ஆங்கிளில் பாருங்கள். முதலில் போன் இருந்தால் ஏதாவது ஒரு டாக்டருக்குப் போன் செய்யுங்கள்.”

அப்புசாமி, அந்தப் பங்களாவில் டெலிபோன் இருக்குமிடம் தேடிப் போனவர், இரண்டே வினாடிகளில், “சீதா! சீதா!” என்று ஓட்டமும், நடையுமாய் வந்து அவள் கைகளைப் பற்றிப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போய் ஹாலில் இருத்தி, ஒரு பிரம்மாண்டமான புகைப்படத்தின்முன் நிறுத்தினார்.

அந்தப் படம் சாட்சாத் இறந்து கொண்டிருந்தவருடையது. ஹால் பெரியதா, அந்தப் படம் பெரியதா என்பதைக் கூறுவது அவ்வளவு எளிதல்ல. அந்தப் படத்துக்கு அடியில் கொட்டை எழுத்தில் ‘திவான் ரூபலிங்கம் பார் அட்லா’ என்று எழுதி இருந்தது.

சீதாப்பாட்டி மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டே, “நம்ம ஹெளஸ் ஓனர் பெயர் ஜெயராம் அல்லவோ? எ பிட் கன்·ப்யூஸிங்…ஒரு கால் இருவரும் ட்வின்ஸாக இருப்பார்களோ?” என்றாள்.

அப்புசாமி, “ட்வைனுமில்லை, கயிறுமில்லை. இந்த ஆள் யாரோ, நம்ம வீட்டுக்காரன் யாரோ!” என்றார்.

“இவர் யாராயிருந்தாலும் சரி, டாக்டரைக் கூட்டி வந்து வைத்தியம் பார்ப்பது நமது ட்யூடி!” என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டாள்.

நாலைந்து நாட்கள் சென்றன. அப்புசாமி தலையில் அடித்துக் கொண்டார், தமது பத்தினி ஏதோ ஒரு முன்பின் தெரியாத கிழவருக்கு சிசுரூஷை செய்வதைப் பார்த்து, ‘இதற்கா உன் கழுத்தில் கட்டித் தங்கத்தில் கெட்டித் தாலி கட்டினேன்?’ என்று பொருமிக் கொண்டார். “உன் சொந்த வீட்டுக்காரருக்குக்கூட இப்படிப் பணிவிடை செய்ய மாட்டாய் போலிருக்கிறதே?” என்றார் வாய்விட்டு.

“நேரோ மைன்டட்! நான்ஸென்ஸாகப் பேசாதீர்கள்! நிராதரவாக இருந்த கிழவருக்கு ‘காட் சென்ட்’ மாதிரி நாம் வந்து சேர்ந்தோம். அவர் உடம்பு இப்போது தான் தேறியிருக்கிறது. பேச்சும் வருகிறது. அவரைப் பற்றிய விவரம் தெரிந்து கொள்வோம். அவசரப்படாதீர்கள்,” என்று சமாதானம் செய்தாள்.

அதே நேரம் வாக்கிங் ஸ்டிக் ஊன்றி அவர்களை நோக்கியவாறு மெதுவே நடந்து வந்தார் உடல் தேறிய கிழவர்.

“டோன்ட் எக்ஸர்ட்! உங்களை யார் படுக்கையிலிருந்து எழுந்திருக்கச் சொன்னது? அடடா! இதற்குள் நடக்கிறீர்களே!” என்று சீதாப்பாட்டி விரைந்து சென்றாள் அவர் உதவிக்கு.

“அயம் ஆல்ரைட், ஆல்ரைட்!” என்று அவர் சமாதானம் சொன்னவாறு சோபாவில் சாய்ந்தது அப்புசாமிக்குப் பொறாமையாயிருந்தது.

சீதாப்பாட்டியை நோக்கிக் கும்பிட்ட கிழவர், “என்னைப் பற்றி விவரம் தெரிந்து கொள்ளாமலேயே எனக்கு இவ்வளவு தூரம் உதவின உங்கள் இரண்டு பேருக்கும் எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியவில்லை. ஐ ஆம் எக்ஸ் திவான் அ·ப் பெய்ஜல்பூர். போன மாதம்தான் இங்கே செட்டில் ஆனேன். என் ஒரே சன் போன வாரம் நான் எவ்வளவு தடுத்தும் கேளாமல் லண்டன் புறப்பட்டுப்போனான், மேல் படிப்புக்காக. அவனை வழி அனுப்பிக் கொடுத்துவிட்டு வந்தவன்தான், தடாலென்று விழுந்தேன். அப்புறம் பிரக்ஞையே இல்லை. அவனைப் பிரிந்த ஏக்கம்தான்…வேறென்ன?” என்றார்.

அப்புசாமி சீதாப்பாட்டியிடம் கிசுகிசு குரலில் கூறினார். “விழலுக்கு நீர் இறைத்த கதையாயிற்று. அப்போதே சொன்னேன், இந்த ஆள் வேறு யாரோ என்று. கேட்டாயா?”

‘உங்கள் கணவர் என்ன சொல்கிறார்?” என்று சீதாப்பாட்டியைத் திவான் கேட்டார்.

சீதாப்பாட்டி சமாளித்துக் கொண்டு “இது ரொம்ப விசாலமான பில்டிங்காயிருக்கிறதே, எப்படிப் பாவம் தனியாக இருக்கிறார் என்று கேட்கிறார்,” என்றாள்.

திவான் பெருமூச்சுடன், “எனக்கு இந்தப் பெங்களூர் போரடித்துவிட்டது என்று சென்னைப் பக்கம் ஷிப்ட் செய்ய யோசனை பண்ணிருக்கிறேன். சென்னையில் ஒரு சின்ன பங்களா வாங்கியிருக்கிறேன். ஜெயராம் என்பவரை பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கிறேன். எனக்கு மிகவும் வேண்டியவர்.

அப்புசாமி வாயிலிருந்து “அட பழி! நீதானா அந்தப் பாவி!” என்ற வார்த்தை வெளிவந்து விட்டது. “சீதே, பாம்புக்கு பால் வார்த்த கதையாயிற்றே!” என்றார்.

சீதாப்பாட்டி, “டஸின்ட்மேட்டர்,” என்று கணவனை அடக்கிவிட்டு, துக்கத்தை அடக்கிக் கொண்ட சிரிப்புடன், “”இன்டீட்! வெரி ஸ்டிரேஞ்ச் மீட்டிங்! நாங்கள் சென்னையில் தர்ட்டி இயர்சாக எந்தப் பங்களாவில் குடியிருக்கிறோமோ அதைத்தான் நீங்கள் இப்போது வாங்கியிருக்கிறீர்கள். எங்கள் ஹெளஸ் ஓனரைச் சந்தித்து, ‘வீட்டை விலைக்கு விற்கக் கூடாது. அப்படியே விற்பதானாலும் எங்களுக்கே விற்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளவே புறப்பட்டு வந்தோம்’ வந்த இடத்தில் ராங் அட்ரஸால் உங்களை மீட்செய்யும்படி ஆயிற்று. ஒ. கே.! நாங்கள் போய் வருகிறோம்,” என்று எழுந்தாள்.

திவான் சிரித்தார். “ஒரு சின்ன சந்தேகம்…” என்றார். “என்னை நீங்கள் நோயாளியாக நினைத்தீர்களே தவிர, மனிதனாக நினைக்கவில்லை போலிருக்கிறது. எனக்கு உயிர்க் கொடுத்த உங்களுக்கு நான் அந்த மெட்ராஸ் ஹெளஸை இப்போதே கொடுக்கிறேன்!” என்றார்.

அப்புசாமி கனவோ என்று கண்களைப் பிசைந்து கொண்டார்.

சீதாப்பாட்டி அமைதியாக, “·ப்ரீயாக வாங்கிக் கொள்வது என் ஹஸ்பெண்டின் ப்ரஸ்டிஜுக்கு அழகல்ல. வீடு உங்களுடையதாகவே இருக்கட்டும். வாடகைக்கே நாங்கள் இருக்கிறோம். அப்படி நீங்கள் வேறு யாருக்காவது விற்பதாக இருந்தால் எங்களுக்கு முதல் ப்ரிபரென்ஸ் கொடுங்கள். அந்த ஆப்ளிகேஷனைச் செய்தால் போதும்,” என்று அப்புசாமியுடன் விடை பெற்றாள்.

தம்பதிகளை வாசல்வரை வழியனுப்பிக் கொடுத்தார். திவான்.

அப்புசாமி சீதாப்பாட்டியைப் பார்த்து, “சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் ஜெயித்துக் கொண்டு வந்து விட்டவள் மாதிரி நடை போடுகிறாயே?” என்றார் பொறாமையாக.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *