நடக்காதென்பார்… நடந்துவிடும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் நகைச்சுவை
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 10,499 
 

50 வயதில் ரவிக்குமாரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாதுதான்…. ஆனால் என்ன செய்வது?… உலகத்தில் நாகரீகம் வெகுவாகத்தான் மாறிப் போயிருந்தது. வாலிபத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் மருந்து ஒன்றை இந்தியாவில் ஒரு சித்த வைத்தியர் கண்டுபிடிக்க…. அம்மருந்து உடனேயே உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது! அதன் காரணமாக ஆங்காங்கே சில நகைச்சுவையான சம்பவங்கள், சில சோகமான சம்பவங்கள், சில கொடூரமான சம்பவங்கள், என அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது….

ரவிக்குமாரின் வாழ்க்கையில் ஒரு கொடூர சம்பவம்…. அவருக்கு இரு மனைவிமார்கள். முதல் மனைவி மூலம் பிள்ளைப்பேறு கிடைக்காததால் அவரின் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்..,.எல்லோரும் ஒற்றுமையாக ஒரே வீட்டிலேயே தான் குடித்தனம் செய்து வந்தனர்…. அந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை.

அப்பொழுது தான் அவரின் முதல் மனைவி சரளாவுக்கு அந்த விபரீத ஆசை வந்தது. ‘அந்த மருந்தை உட்கொள்ளவேண்டும்…. வாலிபத்தை திரும்பப் பெறவேண்டும்…. மறுபடியும் பிள்ளைப்பேறு உண்டாகுமா என்று முயன்று பார்க்க வேண்டும்’…. என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.

ரவிக்குமாருக்கு இந்த நாகரீகம் சிறிதும் பிடிக்கவில்லை… வாலிபத்தை திரும்பப் பெற்று புது வாழ்வு வாழ்வதால் பலவித குடும்பப் பிரச்சினைகள், நோய்கள், இன்னும் இதர இன்னல்கள் உருவாகி நாடே சீரழிந்து போகும் என்பது அவரது வாதம்.

ஆனால் சரளா கேட்கவில்லை துணிந்து சென்று ஒரு நாள் அந்த மருந்தை உட்கொண்டு வந்தாள். உட்கொண்ட ஒரு மாதத்திற்குள் அவள் இருபது வயதில் இருந்தது போல் மாறி விட்டாள்!!

உடல் மட்டும் தானா மாறியது?…. மனமும் மாறியது! அவளைக் கண்டு அக்கம்பக்கத்து கணவர் இல்லாத அரை, முக்கால், முழு கிழவிகள் என எல்லோரும் வாலிபத்தை திரும்பப் பெற மருந்தை உட்கொண்டு கூட்டம் சேர்ந்து கூத்தடிக்கலானார்கள்!

சரளாவின் அழகைக் கண்டு ஒரு 25 வயது வாலிபன் காதல் வயப்பட்டான். புது வாலிப உணர்வும் சரளாவை அவன் பக்கம் ஈர்த்தது….அவர்கள் அடிக்கடி ரகசியமாக சந்தித்தனர். பிறகு ஒரு நாள் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தனர்.

“உன் வயசென்ன? அவன் வயசு என்ன?… நம்ம குடும்ப கௌரவம் எல்லாம் என்னவாகிறது?… ஏன் இப்படி புத்தி கெட்டு திரியற?” ரவிக்குமார் மன்றாடினார்.

சரளா காதில் வாங்கிக் கொள்ளவில்லை, “நீங்க மட்டும் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளலாம்?…. நான் செய்து கொள்ளக் கூடாதா?” என்று வாதித்து விவாகரத்து வேண்டும் என்று நச்சரிக்கத் தொடங்கினாள்.

அப்படி ஒரு சமயம் இருவரும் சண்டை போட்டுக்கொண்ட போது வார்த்தைகள் எல்லை மீறி போக ரவிக்குமார் வெறிபிடித்து சரளாவை நன்றாக அடித்தார். துரதிருஷ்டவசமாக சரளாவுக்கு மண்டையில் பெரிய காயம் ஏற்பட்டு இறந்து போனாள். சரளாவின் உறவினர்கள் ரவிக்குமார் மேல் பழி சுமத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

ரவிக்குமார் 10 வருட காலம் சிறையில் இருக்க நேர்ந்தது…..

பத்து வருட கால சிறைத் தண்டனைக்குப் பின் ரவிக்குமார் இப்பொழுது விடுதலை ஆகி வெளியே வந்தார்.

சிறைக்குச் சென்ற பின் சில காலம் வரை அவரது குடும்பத்தார்கள் அவ்வப்பொழுது அவரை சந்தித்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்களின் சந்திப்பு குறைந்து பிறகு முற்றுப்பெற்றது. கடிதப் போக்குவரத்தும் இருக்கவில்லை.

இந்த நிலையில் விடுதலை ஆகி வெளியே வந்தவர் குழம்பினார். பழைய விலாசங்களில் அவருடைய சுற்றமும் நட்பும் யாரும் இருக்கவில்லை.

வாலிபத்தை திரும்பப் பெற்று நிறைய ஜனங்கள் வேலை தேடி புதுப்புது நகரங்களுக்கும் வெளிநாட்டிற்கும் படையெடுத்து கொண்டிருப்பதாக அவர் தினசரி பத்திரிகை மூலம் அறிந்தார். வாலிபத்தை திரும்பப் பெற்றதால் வேலையில்லாத் திண்டாட்டமும் உச்சத்தில் தாண்டவமாடிக் கொண்டிருந்தது…. அதுமட்டுமல்லாமல் பிரசவ எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருவதாக அரசாங்க புள்ளிவிபரம் தெரிவித்தது… கவலையும் பட்டது…. இதன் காரணமாக அந்த மருந்துக்கு அடுத்த மாதம் தடை விதிக்கப்போவதாக அறிவித்திருந்தது. சில முக்கியமான பேர்களுக்கு மாத்திரம் அரசு அனுமதியுடன் அந்த மருந்து அளிக்கப்படும் என்றும் தினசரியில் செய்தி இருந்தது……

தலைமேல் கை வைத்தவாறு அனைத்தையும் படித்த ரவிக்குமார், தான் இனி என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். உறவினர்களும் நண்பர்களும் விலகிப் போய்விட்டனர்… வயதோ அறுபது நெருங்கிவிட்டது… என்ன செய்ய?… என்ன செய்ய? என்று யோசித்தார். குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்த காலம் வரை சொந்த வீடு என்று ஒன்றும் இருக்கவில்லை…. இருந்திருந்தால் சொந்தபந்தம் விலகி போயிருக்க மாட்டார்கள்… வங்கியில் இருந்த பணத்தையும் சிறைக்குச் சென்ற சில மாதங்களிலேயே சுரண்டி எடுக்கப்பட்டு விட்டது….

வயதும் சோர்வும் அவர் உயிரை பிரித்துவிட தயாராகி தக்க தருணத்தை எதிர் நோக்கியது! வாடகைக்கு ஒரு சிறு வீடு தேடினார். அப்போது ஒரு சின்ன வீட்டில் ஒரு ரூம் வாடகைக்கு உள்ளது என்று அறிந்து அங்கு சென்றார். அந்த வீட்டில் இருந்த வக்கீலிடம் தன் கடந்த கால வாழ்க்கையை கூறினார்.

எல்லாவற்றையும் கேட்ட அந்த வக்கீல், “நீங்க ஒன்னு பண்ணலாம்… உங்கள மாதிரி வயசான, விடுதலையான கைதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க அரசாங்கம் அந்த மருந்தை அனுமதிக்கிறது…. இலவசமாகக் கொடுக்கிறார்கள்! நீங்கள் விருப்பப்பட்டா, அந்த மருந்தை எடுத்துக்குங்க….நீங்க புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.

முதலில் ரவிக்குமாரின் மனம் அதை ஒப்புக் கொள்ளவில்லை தான்…. ஆனால் இரண்டு வாரம் நரக வேதனையை அனுபவித்து, கொடூர மன உலைச்சலுக்குப் பின், அந்த மருந்தை உட்கொண்டு தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தார்.

இதோ ஒரு மாதம் கழித்து….

இப்பொழுது ரவிக்குமார் 25 வாலிப தோற்றத்திற்கு திரும்பிவிட்டிருந்தார்… இல்லை இல்லை… திரும்பிவிட்டிருந்தான்!

சம்பாதிக்க ஒரு சிறு வேலையும் கிடைத்தது…புதுப் பொலிவும் தெம்பும் பெற்ற ரவிக்குமார் ‘கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்று எண்ண ஆரம்பித்தான். சுமார்

ஒரு வருடம் நன்றாக சம்பாதித்து சேர்த்து வைத்த பின் தினசரி பத்திரிக்கை ஒன்றில் ஜோடிப்பொருத்தம் தேட ஆரம்பித்தான்!

‘அழகான மங்கைக்கு ஒரு ஆண் துணை வேண்டும். மனைவியை இழந்த / விவாகரத்து செய்த கணவராக இருந்தாலும் பரவாயில்லை. பொருத்தம் அமைந்தால் உடன் திருமணம். தொடர்பு கொள்க…’ என்று ஒரு விளம்பரம் கிடைத்தது.

ரவிக்குமார் அந்த விலாசத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஞாயிறு அன்று தொலைபேசியில் பேசிக் கொண்ட பின் அந்த வீட்டை நேராகச் சென்று அடைந்தான். அழைப்பு மணியை அழுத்தினான்.

அவள்….அவள்… சில வினாடிகள் கழித்து வந்து கதவை திறந்தாள். ‘அவள்… அவள்…. அவள்….’ ரவிக்குமாருக்கு பேயறைந்தது போல் தலை விண் விண்ணென்றது.

‘அவள்… இவள்… என் இரண்டாம் மனைவி சுசீலாவா?…. அல்லது…. அல்லது…. சுசீலாவுக்கும் எனக்கும் மகளாக பிறந்த யசோதாவா?’ இப்படி அவன் மனம் பேதலிக்க….

‘இவன்…. இவன்….இவர்…. சிறைக்கு சென்ற என் கணவனா?… அல்லது…. அல்லது… நமக்கு மகனாகப் பிறந்த பிரபுவா?’ என்று அவள் மனம் பேதலித்தது!!

இருவருக்கும் ஒருகணம் மூச்சு நின்றது…. என்னவென்று அழைப்பது என்று இருவருக்குமே புரியவில்லை!!

ரவிக்குமாருக்கு இந்த முகத்தை எல்லாம் பார்த்து இப்பொழுது சுமார் 12 வருடம் ஆகிவிட்டது….

அவளுக்கோ, மகன் பிரபு துபாய் சென்று அங்கு உண்டான ஒரு பெரிய விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக சுமார் 9 வருடம் முன்பு தகவல் மட்டும் கிடைத்ததில் குழம்பி…..

“நீ சுசீலா தானே?” ரவிக்குமார் கேட்டான்.

“ஆமாம்… நீ… நீங்க….?”

ரவிக்குமாருக்கு இப்பொழுது குழப்பம் தெளிந்து…. கோபம் வந்தது.

‘நான் இருக்கிறேனா இல்லையா என்பது கூட தெரிந்து கொள்ளாமல்…. இப்படி வாலிபத்தை திரும்பப் பெற்று இன்னொரு வாலிபனை வலைவீசி தேட விளம்பரம் போட்டு இருக்கிறாளே?!’ என்று இரண்டாவது முறையாக வாழ்க்கையில் வெறி பிடித்தவன் போலானான்… ஆனால் சிறை வாழ்க்கை கொஞ்சம் நிதான புத்தியை எப்படி வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் கற்பித்து இருந்ததால் வெறியை சில வினாடிகளில் அடக்கிக் கொண்டான்.

“குழம்ப வேண்டாம்….நான் ரவிக்குமார் தான்….உன் புருஷன் தான்… உள்ளே வரலாமா?” என்றான் ரவிக்குமார்.

கண்களில் நீர் ததும்ப அவள் அவனை “வாங்க” என்றாள் “எப்படி இருக்கீங்க?…எப்போ வெளியே வந்தீங்க?…. எப்போ அந்த மருந்தை ஏத்திக்கிட்டீங்க?”

“ஏன்?.. நான் திரும்ப வந்துட்டேன்னு கோபமா இருக்கா?… என்ன ஆச்சு?.. ஏன் யாரும் வந்து என்னை பார்க்கலை?… இத்தனை வருஷமா ஏன்?…..”

ரவிக்குமார் முடிப்பதற்குள், ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள் சுசீலா…. அவள் அழுகை அடங்க பத்து நிமிடம் ஆனது அழுகையோடு அவன் மடியில் வந்து விழுந்தாள்… ஆனால் அவன் அவளை கோபத்துடன் விலக்கினான்.

“நான் என்னத்தை சொல்வேன்?… என்னத்தை நம்ப வைப்பேன்?… நீங்க ஜெயிலுக்கு போனப்புறம்… உங்களை அப்பப்ப வந்து பார்த்துக்கிட்டு தானே இருந்தேன்?… ஆனா அப்படி நான் உங்களை பார்த்து விட்டு வந்ததாலே என் மனசு ரொம்ப வேதனைப்பட்டு இருந்துச்சு… அப்படியே உங்களை நினைச்சு நினைச்சு அழுது…. காலத்தையும் மறந்து… என்னை மறந்து… மூலையில் கிடக்க ஆரம்பிச்சேன்… நீங்க ஜெயிலுக்குப் போய் ஒரு வருஷம் ஆகியிருக்கும்… அப்போ ஒரு நாள் ஒரு டாக்டர் வந்து 2 ஊசி போட்டார்… அதுக்கப்புறம் நான் இப்படி ஆயிட்டேன்… எனக்கு அந்த ஊசியை நம்ம பையன் பிரபு தான் போட வைத்தான்னு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது…. ‘வாழ்க்கை வாழத்தான் அம்மா… இப்படி நீ பைத்தியம் பிடிச்சு மூலையில் கிடக்கிறது பார்க்க என்னால சகிக்க முடியலை அம்மா… அப்பாவை மறந்துடு…காலம் ரொம்ப மாறிடுச்சு அம்மா…. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ… நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்’ ன்னு பேசி என் மனசை மாத்த பார்த்தான்… நான் மசியல….அடிக்கடி நாங்க சண்டை போட்டுகிட்டோம்…. அப்புறம் அவன் ஒரு நாள் திடீர்னு ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னான்…. அவளைப் பற்றி விசாரித்தேன்… அவளும் நம்ம மாதிரி 60 வயசுல…. அந்த கிழவி…. அந்த மருந்தை எடுத்துக்கிட்ட அப்புறம் தள தளன்னு தக்காளிப்பழம் மாதிரிஆயிட்டு… இப்படி பிரபுவை கட்டிக்கிட்டு…….”

ரவிக்குமாருக்கு தலை கிர்கிர்ரென்று…. வேதனை, கோபம், ஆத்திரம், எல்லாம் ஒன்று சேர்ந்து வந்து அவன் மனதை தாக்கியது.

சில நொடிகள் கழித்து “அப்புறம்?” என்று வினவினான்.

“துபாய்ல வேலை கிடைச்சதுனு பிரபு அங்கே போனான்… அங்கே நடந்த பெரிய விபத்தில் அவன் உரு தெரியாம செத்துட்டான்… அவன் பொணத்தை கூட பார்க்கமுடியாமல்….” சுசிலா தேம்பினாள்.

“அந்த மருமக… அந்தக் கிழவி…. அவ என்ன ஆனா?” ரவிக்குமார் கேட்டான்.

“அவகிட்டயும் சண்டைதான்…. ‘உன்னால தாண்டி என் பையன் செத்துட்டான்னு’ ஒரு நாள் சண்டை போட்டேன்… அன்னிக்கு வீட்டைவிட்டு போனவ தான்… என்ன ஏது எங்கே எப்படி இருக்கிறாள்னு இதுநாள் வரைக்கும் தெரியாது….. நான் பாட்டுக்கு வளவளன்னு பேசிக்கிட்டே இருக்கேன்…. என்ன சாப்பிடுறீங்க?… முதல்ல காபி கொடுக்கட்டுமா?” சுசீலா படபடவென பேசினாள்.

ரவிக்குமார் இருந்த மனநிலையில் “காப்பியும் வேணாம்… ஒரு மண்ணும் வேணாம்…. நம்ம யசோதா எங்கே?… அவளாவது உயிரோட இருக்காளா?…. நான் அவளைப் போய் பார்க்க வேண்டுமே…. இனி உன் முகத்துல முழிக்க எனக்கு இஷ்டம் இல்லை…. எல்லாம் எப்படியாவது கெட்டுப்போங்க…. எங்கே இருக்கா யசோதா?” என்று சீறினான்.

அவள் விலாசம் கூறியபின் கூடவே வேறு ஏதோ சொல்ல வாய் எடுத்தாள்…. அவன் சீற்றத்தைக் கண்டு அடக்கிக்கொண்டாள்.

“நான் போறேன்” என்று ரவிக்குமார் கிளம்பினான்.

“ஆனால் திரும்பி வந்துவிடுங்க…. நான் இப்படி ஆகி விட்டதால் தான் உங்க முகத்துல முழிக்க எனக்கு இனி வக்கில்லைன்னு நினைச்சு…. உங்களை பார்க்க வராமல் இருந்தேன்…. இப்ப நீங்களே வாலிபன் மாதிரி மாறிட்டீங்க…. ஏன் நாம திரும்பி வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கக்கூடாது?… யோசிச்சுப் பாருங்க…” சுசீலா கெஞ்சினாள்.

“சீ ….போ..!” ரவிக்குமார் மேலும் சீறினான்.

அவள் அவன் கால்களில் விழுந்து அழுது புரண்டாள் “என் மேல ஒரு தப்பும் கிடையாது… எல்லாம் அந்த பிரபுனால வந்த வினை…” அவள் தலையில் அடித்துக்கொண்டு கதறினாள்.

“சரி யோசித்துப் பார்க்கிறேன்…. இப்போ விடு” என்று அவளை விலக்கி விட்டு ரவிக்குமார் கிளம்பினான்.

அவனுக்கு ‘யசோதாவை பார்க்க வேண்டும்….. ‘காலமிது… காலமிது… காலமிதைப் பாரடி!’ என்று பாட்டு பாடி ஒப்பாரி வைத்து அழ வேண்டும் போல் நெஞ்சு துடித்தது.

‘யசோதா நல்லவள்… சாந்தமானவள்…. கடவுளே இந்த நவீன இத்துப்போன காலத்தில் அவள் எப்படித்தான் வாழ்கிறாளோ?!’ ….மனம் பதைத்தவாறு சுசீலா வீட்டை விட்டு கிளம்பி அவன் நேராக யசோதா வீட்டை அடைந்தான்…. அழைப்பு மணியை அழுத்தினான்.

“கம்மிங்..” ஒரு ஆணின் குரல் கேட்டது.

‘அந்தக் குரல்…. அந்தக் குரல்… எங்கேயோ கேட்டது போல் அல்லவா இருக்கிறது?!’ கதவு திறக்கப்பட்டதும் ரவிக்குமாரின் குழப்பம் நீங்கியது… குழப்பம் நீங்கி…. அதிர்ச்சி தாக்கியது…. ‘அவனா இவன்?!’ கதவைத் திறந்த அவனும் ரவிக்குமாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்… இருவரும் பேச்சு மூச்சு இன்றி நின்றவாறு ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே இருந்தனர்….

“யார் வந்திருக்காங்க?” என்றவாறு ஒரு பெண் அவனுக்கு பின்னால் வந்து நின்றாள்.

‘மீண்டும் சுசீலாவா?…. இல்லை இல்லை…. சுசீலா 40 வயதில் அரை கிழவியாக எப்படி இருந்தாளோ…. அந்தத் தோற்றத்தில்…. இங்கே யசோதா!…. ஆனால் என் பால்ய நண்பன் ரகுநாதனுக்கு இங்கு…. இவளுடன்…. வாலிபனாக?…. இங்கு என்ன நடக்கிறது?’ ரவிக்குமாருக்கு தலை சுற்ற……

“உள்ள வா…. ரவிக்குமார்” என்றவாறு ரகுநாதன் திடீர் என ஒரு புன்சிரிப்பை வரவைத்து உபசரித்தான்.

“வாங்கப்பா….” யசோதா, ‘இவன்… இந்த வாலிபன்…. என் அப்பாவா?’ என்று அதிசயமான குழப்பத்துடன் ரவிக்குமாரை உபசரித்தாள்.

அனைவரும் உள்ளே சென்றனர். அனைவரது நெஞ்சம் நெருடிக் கொண்டிருந்தது… இதயத்துடிப்பு… ‘தட்புட் தட்பட்’…..என்று அடித்துக் கொண்டது…..

திடீரென்று ரகுநாதன் ரவிக்குமாரின் காலில் விழுந்து “என்னை மன்னிச்சுடுடா ரவி” என்றான்….

ஒரே நாளில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில்…. இரண்டு பெரிய அதிர்ச்சிகள்…. ரவிக்குமாருக்கு இப்பொழுது அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்வதற்கு பழக்கப்பட்டவனாகவே மாறிப்போய்…. சலனமற்று காணப்பட்டான்!!

“என்ன ஆச்சு?…. நிதானமாகவே சொல்லு…. யசோதா, நீ போய் காப்பி கொண்டு வா” ரவிக்குமார் சொல்ல…. குழப்பத்துடன் அப்பாவின் வாலிப தோற்றத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்த அவள்…. சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டு காப்பி போட சமையலறைக்குள் புகுந்தாள்.

ரகுநாதன் பேசலானான் “நீ ஜெயிலுக்கு போனப்புரம்….ஆறுதலா ஏதாவது சொல்லலாம்… செய்யலாம்னு… அடிக்கடி உன் வீட்டுக்கு போய் வந்து கொண்டிருந்தேன்… உன் பொண்டாட்டி சுசீலாவுக்கு கொஞ்ச நாள் பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தது… அவ இப்ப எங்கே இருக்கிறா என்று தெரியுமா?… அவளை பார்த்தியா?”

“பார்த்தேன்…. நீ உன் கதையை சொல்லு”

“சொல்றேன்….உன் பொண்ணு யசோதா நல்லா அழகா இருக்கான்னு நானே உன்கிட்ட அடிக்கடி முன்னே சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கலாம்…. ஆனா அப்ப எல்லாம் அல்பத்தனமா எதையும் நினைத்ததில்லை…. அப்புறம் என் பொண்டாட்டி காலமாகிவிட்டா…”

“எப்போ?… என்ன ஆச்சு அவளுக்கு?” ரவிக்குமார் உண்மையிலேயே பரிதாபத்துடன் கேட்டான்.

“நீ ஜெயிலுக்கு போய் 2 வருஷம் இருக்கும்…. டயாபட்டீஸ்…. கண்ட்ரோல்ல வெச்சுக்காம…. அவள் இஷ்டத்துக்கு இருந்ததால…. அப்புறம் ஒரு நாள்…..” ரகுநாதன் கண்ணீர் வடித்தவாறு… கையை மேலே அசைத்தவாறு கூறினான்.

சில நொடிகள் கழித்து “அப்புறம்?…. சொல்லு…” என்றான் ரவிக்குமார்.

“என் பொண்டாட்டி காலமாகிவிட்டா…. கொஞ்ச நாள் நானும் துக்கமா…. வாழவே பிடிக்காம இருந்தேன்…. அப்போ உன் பையன் பிரபு, சுசீலாவுக்கு அந்த மருந்தை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா அவ மனசை மாத்திக்கிட்டு வந்ததை கவனித்தேன்…. நான் கவனிக்கிறது தெரிஞ்சுக்கிட்டு…. பிரபுவும் என்கிட்ட அந்த மருந்தைப் பற்றி சொல்லி எடுத்துக்கச் சொன்னான்….. நானும் யோசிச்சு பார்த்து ‘காலத்தோடு ஒத்து போய்த்தான் பார்ப்போமே’ ன்னு அந்த மருந்தை எடுத்துக் கொண்டேன்……அதுக்கப்புறம் யசோதா மேலே என் பார்வை வேற விதமா போய்விட்டது!.. அவகிட்ட என் மனசை வெளிப்படையாக சொன்னேன்… ‘எனக்கு உன் மேலே பைத்தியம் பிடிக்கிற போல இருக்குன்னு’ ஒரு நாள் அழுதிட்டேன்… அப்போ தான் அவள் மனசு மாறி கல்யாணம் பண்ணிப்போம்னு முடிவு பண்ணி…. பண்ணிகிட்டோம்!…. “ரகுநாதன் ரவிக்குமாரின் பார்வையை தவிர்த்து பேசினான்.

‘….அறுபது வயது கிழவன்…. என் பால்ய நண்பன்…. எனக்கு இப்போது மருமகனா?’ நினைத்துப் பார்த்த மாத்திரத்தில்…… இடியாக அது தாக்க…. ரவிக்குமார் எழுந்துகொண்டான்.

யசோதா காபியுடன் வந்தாள்…. “எப்படியோ…. நீங்க நல்லா இருங்க!” என்று கூறிவிட்டு விறுவிறுவென நடையை கட்டினான் ரவிக்குமார்.

“அப்பா… அப்பா….”என்று கத்தியவாறு வீதிவரை ஓடி வந்தவளை… ‘ஒரு வாலிபனை பார்த்து அப்பா என்கிறாளே!’ என்று வீதியில் சில ஜனங்கள் வேடிக்கை பார்த்தது!!

ரவிக்குமார் நிற்காமல் நடையை இன்னும் வேகமாக்கி…. பஸ் நிலையத்தை அடைந்து… பஸ்ஸுக்காக காத்திருந்தான். அவனால் இருப்புக் கொள்ள முடியவில்லை…. யோசித்து யோசித்து மனம் பித்து பிடித்துவிடும் போலிருந்தது!!

சுற்றும் முற்றும் பார்த்தான்…… ஒரு அழகான பெண் தன்னையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தான்…. சில நொடிகள் கழித்து திரும்பினால்….. மறுபடியும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது!

அவனைப் பார்த்து சந்தோஷத்தில் அவள் முகம் பிரகாசமானது போல் இருந்தது… ‘யார் இவள்?…. ஏன் என்னை இப்படி சைட் அடிக்கிறாள்?’ ரவிக்குமார் மறுபடியும் குழப்ப நிலைக்கு மாறினான்…. பஸ் வந்தது…. அவன் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தான்.

அவளும் அவனை தொடர்ந்து வந்து அவனருகில் அமர்ந்து புன்னகைத்தாள்!!

அவனுக்கு இருந்த மனநிலையில் எரிச்சல் எரிச்சலாக வந்தது…. இறங்க வேண்டிய இடம் வந்ததும், தாவிப் போய் இறங்கினான்…. அவளும் இறங்கிவிட்டாள்…. அவன் தன் ரூமுக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டான்.

மனசு கேட்கவில்லை… ‘யார் இவள்?… ஏன் என்னை இப்படி தொடர்கிறாள்? வாலிப வயசுக் கோளாறா?…. கடவுளே!’ ஜன்னலை மெதுவாக திறந்து பார்த்தான்… அவள் அங்கே தெருவில் நின்று இருந்தாள்.

சில மணி நேரம் கழித்து மழை கொட்டியது…. ரவிக்குமார் மறுபடியும் ஜன்னலை திறந்து பார்த்தான்…. மழையில் நனையாமல் கொஞ்சம் ஓரமாக அவள் இன்னும் நின்று கொண்டிருந்தாள்!

அவன் கவலைப்படாமல் தூங்கச் சென்றான். மறுநாள் எழுந்து வேலைக்குச் சென்றான்…. அவளும் அவனை மறுபடியும் தொடர ஆரம்பித்தாள்….

“யார் நீ?”

“என் பெயர் வனிதா… உன் பெயர்?”

“ரவிக்குமார்”

அதைக்கேட்டு அவள் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தாள்.

“உனக்கு என்ன வேணும்?… ஏன் இப்படி என் பின்னாலேயே வந்துக்கிட்டு இருக்க?”

“எனக்கு நீ வேணும்!…. கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“நீ என்ன பைத்தியம் பிடிச்சு போய் அலையறியா?”

“ஆமாம்….காதல் பைத்தியம்…. செத்துப் போவேன் போல இருக்கு!” அவள் அழ ஆரம்பித்தாள்.

அவன் சட்டை செய்யாமல் நகர்ந்தான்…. இனி இந்த உலகில் வாழ வேண்டும் என்றால் மனதை கல்லாக்கிக் கொண்டால் தான் முடியும் என்று முடிவு கட்டினான்.

ஆனால் அவளோ அவனை தொடர்வதை நிறுத்தவில்லை… அருகாமையில் வரும் பொழுது அழாமல் விடவில்லை… ஏன் என்று அவனுக்கு புரியவில்லை… சிலசமயம் உண்மையில் அவள் பைத்தியம் தானோ என்று எண்ணினான்…. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை அவர்களின் சந்திப்பு தொடர்ந்தது….

மருந்தை உட்கொண்டு அதன் காரணமாக அவனின் வாலிப உணர்வும் அவன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பித்தது….

“நீ யாரு?”

“நான் ஒரு விதவை…. கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு மாசம் கூட புருஷனோட ஒன்னா வாழவில்லை…. அதுக்குள்ளே….” அவள் தேம்பினாள்.

“எப்படி?…. எப்படி செத்தான் உன் புருஷன்?”

“ஒரு விபத்துல…”

“உன்னை பெத்தவங்க… உறவினர்கள்… அவங்க எல்லாம் எங்கே?”

“பெத்தவங்க இப்ப உயிரோட இல்ல…. உறவினர்கள்…. உறவினர்களை மறந்துவிட்டதாக வாழ நினைக்கிறேன்….”

இன்னும் சில தினங்கள் சந்தித்து உரையாடிய பின்… ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர் ரவிக்குமாரும் வனிதாவும்.

சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்….ஒரு நாள் அவர்கள் ஒரு கல்யாண வைபவத்திற்கு சென்றிருந்த சமயம்….அங்கு வந்த ஒருவன் இவனைப் பார்த்து “ஏய் பிரபு…. நீ இன்னும் உயிரோட தான் இருக்கிறாயா?…. துபாயில் செத்துப் போயிட்டதா சொன்னாங்க?….” என்று கேட்க….. பெரிய இடி தாக்கியது போல் உணர்ந்தான் ரவிக்குமார். வனிதா விறைத்துப் போய் நின்று கொண்டிருந்தாள்….

“அப்படின்னா?…. வனிதா… உன்… உன் புருஷன்…. என் பையன் பிரபுவா?…”

“உங்க பையன் தான் பிரபுன்னு எனக்கு தெரியாது…. ஆனா நீங்க பிரபு மாதிரியே இருந்ததால…. பிரபு கூட நான் கொஞ்ச காலம் கூட வாழாததால…. உங்களைப் பார்த்ததும்… உங்களோட….. உன்னோட வாழனும்னு தோணுச்சு… அதனால தான் உங்க பின்னாடியே பைத்தியம் மாதிரி தொடர்ந்து தொடர்ந்து வந்தேன்… நான் பிரபுவை கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் தான் சந்தோஷமா இருந்தேன்… அப்புறம் அவன் துபாய் போய் ஒரு விபத்துல இறந்துட்டான்னு…நானும் உங்கள மாதிரி மருந்து எடுத்துக் கொண்டவ….என் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை… உங்களை எதேச்சையாக பார்த்தேன்… பிரபு மாதிரியே இருக்கிறதனால… பைத்தியம் பிடிச்சி… பின்னாடியே தொடர்ந்தேன்… பிரபு கூட வாழற மாதிரியே இருக்கும்னு நினைச்சு உங்களைத் துரத்தித் துரத்தி கடைசியில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…. என்ன மன்னிச்சிடுங்க!”

ரவிக்குமாருக்கு மீண்டும் தலைசுற்றியது… ‘ஒரு கிழவி…. என் மகனின் மனைவி…. எனக்கு மருமகள்…. எனக்கு இப்போது பொண்டாட்டியா?… கடவுளே!… வாலிபம் மட்டும் திரும்பக் கிடைத்தால் போதுமா?… பழைய நினைவுகளை சுமந்து கொண்டு மனதளவில் கிழவனாக…. உடலளவில் வாலிபனாக… எப்படி வாழ முடியும்? கடந்த வாழ்க்கையை மறந்து வாழ்வதற்கு ஒரு மருந்தை கொடுக்க மாட்டாயா??’

அதன்பின் ரவிக்குமார் எதிர்கொண்டவர்களிடம் எல்லாம் “மறந்து வாழ மருந்து கொடு…. மறந்து வாழ மருந்து இருக்கா?” என்று கேட்டு கேட்டு திரிய…. கடைசியில் ஒரு மருந்தும் கிடைத்தது….

அது தான் பைத்தியம்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *