கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 1,449 
 

வினய் நிலை கொள்ளாமல் தவித்தான். தரையில் இருந்து 350 கி.மீ உயரத்தில் சலிக்காமல் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் மிதக்கும் விண்வெளி ஆய்வு மையத்தின் (ஐ.எஸ்.எஸ்) தற்போதைய தலைமை விஞ்ஞானி அவ‌ன்.

முப்பத்தேழாவது முறையாக அந்த வீடியோவை பார்த்தான். இரண்டு மாதங்களுக்கு முன் எக்ஸ்பெடிஷன் 23ல் கொண்டு வரப்பட்டு ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட அந்த அதி நவீன கேமிரா அப்பழுக்கின்றி வினயின் வீட்டு வாசலைப் படம் பிடித்திருந்தது. வினய்க்கு சந்தேகமே இல்லை, அது தன் மனைவி ஸ்வேதா என்பதில், ஆனால் அவளுடன் இருக்கும் அந்த அவன்? கடந்த ஒரு வாரமாக சரியாக மாலை ஆறு மணிக்கு வினயின் வீட்டிற்கு வரும் அவன் எட்டு மணிக்குத்தான் வெளியேறுகிறான். அதுவும் ஒவ்வொரு நாளும் அவன் வெளியேறும்போது வாசலில் வைத்து இருவரும் உதட்டோடு உதடு பொருத்தி… சட்… வீடியோவை அணைத்தான் வினய்.

ஆறு வருட காதலிலும் மூன்று வருட திருமண வாழ்விலும் தேனாய் இனித்த அதே முத்தம், இப்போது எட்டிக்காயாய்க் கசக்கிறது. ஏன்? ஐ.எஸ்.எஸ்.ஸில் முப்பது மாத அசைன்மென்ட் வந்தபோது அவளைப் பிரியக்கூடாது என்பதற்காகவே அதை மறுத்தவன் வினய். ஆனால் இதை விடச் சிறந்த வாய்ப்பு வேறு எப்போதும் கிடைக்காது என்பதையும், பிரிந்திருந்தால் அன்பு அதிகம் ஆகுமே தவிர குறையாது என்றும் கூறி வினயைச் சம்மதிக்க வைத்தவள் அவளேதான்.

ஆனால் ஏன் இப்போது இப்படி? தனக்காக உயிரையும் தருவாள் என்று நம்பியது பொய்யா? நாசாவில் வேலை கிடைத்து கலிஃபோர்னியாவிற்கு இடம் பெயர்ந்த போது தன்னுடன் இருப்பதற்காகவே வேலையை விட்டு விட்டு வந்தது பொய்யா? ஒரு வருட பிரிவில் காதல் கசந்து விட்டதா? அல்லது காதலைக் காமம் வென்று விட்டதா? கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்.. வினய் குழம்பினான். ஆனால் கண்முன்னால் சாட்சி வீடியோவாய் ஓடும்போது எப்படி நம்பாமல் இருக்க முடியும்!!!

சிறுவயதில் பெற்றோர் யாரென்றே தெரியாமல் அநாதை இல்லத்தில் வளர்ந்து, உடன் படிக்கும் மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி, அந்த வைராக்கியத்தில் வெறியாய்ப் படித்து கோல்டு மெடல் வாங்கி, அமெரிக்கா வந்து நல்ல வேலையில் சேர்ந்து, அடுத்து என்ன செய்வது என்று இலக்கில்லாமல் இருந்தவனுக்கு வந்து சேர்ந்த முதல் உறவு ஸ்வேதாதான்.

அவளைத்தவிர வேறு உலகம் இல்லை என்று நினைத்தவனுக்குக் கடந்த வாரம் அந்த இடி இறங்கியது. புதிய கேமிராவை சோதனை செய்துக் கொண்டிருந்தவன் தற்செயலாக அதைத் தன் வீட்டை நோக்கித் திருப்பினான். அப்போதுதான் அவனைப் பார்த்தான். அதன் பின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குக் கண்காணிக்க, ஒரு நாள் விடாமல் அவன் வருவதும், 8 மணிக்கு திரும்பிச் செல்வதும், வாழ்வின் மிகக் கொடுமையான காலகட்டமாக இந்த ஒரு வாரம் மாறியிருந்தது.

‘இனி என்ன? எனக்கிருக்கும் ஒரே உறவும் என்னை ஏமாற்றுகிறாளா? இனி அவளுடன் எப்படி வாழ முடியும்? நான் திரும்பிச் சென்றதும் எப்படி அவளிடம் இதைக் கேட்க முடியும்? அவன் நான் இருக்கும்போது வரப்போவது இல்லை, அவளிடன் அதைப்பற்றிக் கேட்கும் தைரியமும் எனக்கு இல்லை. வாழ்நாள் முழுவதும் போலி வாழ்க்கை வாழப்போகிறேனா? ஒவ்வொரு முறை இனி அவளை முத்தமிடும்போதும் இந்தக் காட்சி வந்து மனதில் அறையாதா. இனிமேல் யாருக்காக‌ இந்த‌ வேலை, ப‌ண‌ம் எல்லாம்?’

‘இல்லை, இனிமேல் நான் உயிர் வாழ்வ‌தில் அர்த்த‌மே இல்லை. இனி தின‌ம் தின‌ம் ஒவ்வொரு வினாடியும் செத்துச் செத்துப் பிழைப்ப‌தை விட‌ ஒரேடியாய் இற‌ப்ப‌தே மேல். என் உயிர‌ற்ற‌ உட‌ல் கூட‌ அந்த‌த் துரோகிக்குக் கிடைக்க‌க் கூடாது’

முடிவு செய்த‌வ‌னாய் ஐ.எஸ்.எஸ்.இன் பின் புற‌ டாக்கிங் (Docking) ஏரியாவிற்கு சென்றான்.

இப்போதைக்கு பூமியிலிருந்து எந்த விண்கலமும் வரவில்லை என்பதால் ஆள் அரவமற்று அமைதியாக இருந்தது. கழிவுகளை வெளியேற்றும் இடத்திற்கு அருகில் வந்து நின்றான். அடுத்த இரண்டு நிமிடங்களில் கழிவுகளை வெளித்தள்ள ப்ரோக்ராம் செட் செய்துவிட்டு கழிவுகளை வைக்கும் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான். இன்னும் இரண்டு நிமிடத்தில் ஐ.எஸ்.எஸ்.இல் இருந்து தூக்கி எறியப்படுவான். விண்வெளி நடைக்கான உடை, ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் வெளியேறிய உடனே அவன் உயிர் அவனை விட்டு பிரியப் போகும் வினாடிக்காகக் கண்களில் நீருடன் காத்திருக்க ஆரம்பித்தான் வினய்.

அதே விநாடி, 350 கி.மீ. கீழே, ஸ்வேதா அவனுக்கான இமெயில் மெசேஜை டைப் செய்து கொண்டிருந்தாள்.

“என் அன்பு புருஷா.. ரெண்டு வாரமா கொஞ்சம் பிஸி, இந்த ரெண்டு வாரமா உனக்கு மெயில்கூட‌ பண்ணாம பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்குது. உங்க ஆளுங்ககிட்ட சொல்லி வாரம் ஒரு அஞ்சு நிமிசக் காலுக்கு பர்மிசன் வாங்கக் கூடாதா?

எனக்கு டென்வர்ல வேலை கிடைச்சிடுச்சி, போன வாரமே வந்து சேர்ந்துட்டேன். இன்னும் ஒன்றரை வருசத்துக்கு நீ திரும்பி வர்ற வரைக்கும் இங்கதான் இருக்கப் போறேன். அப்புறம் இன்னொரு விசயம், மனசைத் தேத்திக்கோ. உன் மச்சினிக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி. இப்ப அவ கலிஃபோர்னியால நம்ம வீட்டுலதான் இருக்குறா. அவளோட உட்பியும் பக்கத்துலதான் வேலை செய்யுறாரு. தினமும் சாயங்காலம் ஆபிஸ் முடிஞ்சதும் வந்துடறாரு. ரெண்டு பேரும் ஒரே அட்டகாசம்தான்.”

அவங்களைப் பாத்தா அப்படியே எனக்கு நம்ம காதல் காலம்தான் நெனப்புக்கு வருது. உனக்கு ஞாபகம் இருக்கா, நாம முதல் முதல்ல டூர் போனப்ப….”

– ஜூன் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *