சுண்டல் செய்த கிண்டல்

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,689 
 

சீதாப்பாட்டி அப்புசாமியின் பாதங்களைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். பத்துத் தினங்களாக அப்புசாமியின் பாதங்கள் பன் ரொட்டி போல் வீக்கத்துடன் காட்சி அளித்ததே காரணம். சீதாப் பாட்டிக்கு யானை என்றால் பயம். அதிலும் முக்கியமாக யானைக்கால் என்றால் யானைக்குப் பயப்படுவதைப் போல் நாலு மடங்கு பயப்படுவாள்.

யானைக்கே யானைக்கால் வந்தால் கூட சிகிச்சை செய்யக் கூடிய ஒரு ‘எலிபண்டயாஸிஸ் ஸ்பெஷலிஸ்ட்’டிடம் சீதாப்பாட்டி அப்புசாமியை கூட்டிப் போனாள்.

அவர் சிரித்துவிட்டு, “இந்த வீக்கத்துக்குக் காரணம் நீர்” என்றார்.

“ஐயோ நானா?” என்றாள் சீதாப்பாட்டி.

“நான் ‘நீர்’ என்றது வயோதிகர்கள் காலில் கட்டிக் கொள்ளும் நீரை!” என்று விளக்கிவிட்டுத் தன் கன்ஸல்டிங் பீஸான முப்பது ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பிவிட்டார்.

“நல்ல வேளை, ·பைலேரியம் அட்டாக் இல்லை” என்று சீதாப்பாட்டி மகிழ்ந்தாலும், வீக்கம் பத்து நாளாகியும் இறங்காமல் அப்படியே இருந்தது அவளுக்கு விசாரத்தைக் கொடுத்தது.

அப்புசாமி தன் வீங்கின பாதத்தை, பாவம், அடிக்கடி ஆள்காட்டி விரலால் அழுத்திப் பார்த்துக் கொள்வார். அழுத்தும் போது பாதத்தில் குழி விழுவதையும்,விழுந்த குழி ஓரிரு விநாடிகளில் மெதுவே, மெதுவே மறைந்து பாதம் பழையபடி தன் பன் ரொட்டிப் பரப்பை அடைவதையும் பார்த்துப் பார்த்து மகிழ்வதைப் பொழுது போக்காக வைத்துக் கொண்டிருந்தார்.

சீதாப்பாட்டி கவலையுடன், “ஏன் சும்மா எக்ஸாஜரேட் செய்கிறீர்கள்? உங்களுக்கு ஒன்றுமில்லை” என்றாள். “வயதானால் இப்படி வருகிறது உண்டாம். தானாகச் சரியாகப் போய்விடும்” என்றாள். தன்னைத்தானே தேற்றிக் கொள்வது போல்.

அப்புசாமியின் முகத்தில் விஷமப் புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது. பின்னர், “சீதே, என் கால் வீக்கத்துக்கு என்ன வைத்தியம் செய்வது என்று ஒரே ஓர் ஆசாமிக்குத்தான் தெரியும்” என்றார்.

சீதாப்பாட்டி ஆவலுடன் “யார் அவர்? வேர் இஸ் ஹி? உடனே போகலாம். ஏன் இத்தனை நாள் நீங்கள் சைலன்ட்டாக இருந்தீர்கள்?” என்றாள்.

அப்புசாமி அமைதியுடன், “அந்த வைத்தியர் வேறு யாருமில்லை. நானேதான்” என்றார்.

“வாழ்ந்தது! உங்களுக்கு நீங்களே வைத்தியம் செய்து கொள்கிறேன் என்றதும், ‘சூயிஸைட்’ செய்து கொள்கிறேன் என்பதும் ஒன்று!” என்றாள் சீதாப்பாட்டி, எரிச்சலுடன்.

அப்புசாமி தலையில் அடித்துக் கொண்டார். “உனக்குத் தெரிந்த லட்சணம் அவ்வளவுதான். வயதாயிற்றே தவிர, வயதானவர்களுடைய மனசைப் பற்றி உனக்கென்ன தெரியும்? வயதானவர்கள், கர்ப்பமானவர்கள் இவர்கள் எல்லாம் ஒருவிதத்தில் ஒரு மாதிரி. ஏதாவது பொருள்மீது, மனசுக்குள் ஆசை வைத்திருப்பார்கள். கால் பாட்டுக்கு வீங்கிவிடும். அந்தத் தீனியைத் தின்றால்தான் வீக்கம் இறங்கும். பழமொழி கூட உண்டே. “கம்பு கொழுக் கட்டைக்குக் கால் வீங்கினானாம் ஒருத்தன்” என்று!” என்றார்.

சீதாப்பாட்டிக்கு வியப்பு தாளவில்லை. ‘அட! இப்படிக் கூட ஒரு சைகாலஜியா?’ என்றவள், “உங்களுக்குக் கம்புக் கொழுக்கட்டைமீது ஆசையா, அடக் கடவுளே, சொல்லித் தொலைப்பதற்கென்ன? எனக்குச் செய்யத் தெரியாவிட்டாலும், யாரையாவது ஒரு குக்கைப் பிடித்துச் செய்து தருவேனே!” என்றாள்.

அப்புசாமி முன் வழுக்கையைத் தடவிக்கொண்டு, “கம்புக் கொழுக்கட்டையை மனுஷன் தின்பானா? நீ கம்பை எடுத்துக் கொண்டு அடித்தாலும் அது எனக்குப் பிடிக்காது” என்றவர், “சீதே! நீ சுண்டல் செய்து எவ்வளவு யுகங்கள் ஆகிறது? நினைத்துப் பார்த்தாயா?” என்றார்.

“சு…ண்…ட…ல்! ஆ! என்ன வார்த்தை சொன்னீர்கள்? ஹெளடேர் யூ அந்த வார்த்தை சொன்னீர்கள்?” என்று அடுத்த கணம் ஊழித் தீயாய்ச் சீதாப்பாட்டி மாறி, கையில் எடுத்த புத்தகத்தை ஓங்கிக் கீழே அடித்தாள்.சிலைபோல் உட்கார்ந்துவிட்டாள். பேயைப் பேட்டி கண்டவள் போல் அவள் விழிகள் நிலைத்துப் போய்விட்டன.

அப்புசாமி வெலவெலத்துப் போனார். பிறகு மெதுவே, “அறுபது வருடத்துக்கு முன்னால் நடந்ததை இன்னுமா நினைத்துக் கொண்டு கோபப்படுவது?” என்றார்.

“பேசாதீர்கள். ப்ளீஸ்! பேசாதீர்கள்!” என்று சீதாப்பாட்டி கர்ஜித்தாள்.

அறுபது வருடங்களுக்கு முன், அதாவது சீதாப்பாட்டி இளம் மருமகளாக அந்த வீட்டில் காலெடுத்து வைத்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அப்புசாமியின் தாயார், அதாவது சீதாப்பாட்டியின் மாமியார் ஒரு கடும் கொடுங்கோலி. வீர்ய கந்தகமிலமும், வீர்ய நைட்ரிக் அமிலமும் சேர்ந்தது போல. மாமனாரும் மேற்படி மேற்படியே. மருமகளைச் சக்கையாக வேலை வாங்குவார்கள். பல சமயம் மாமியார் அடித்துவிடுவாள். அந்த அடிகளையெல்லாம் சீதாப்பாட்டியால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் ஒரு தினம் மாமியார் சொன்ன வார்த்தைகள் அவளைச் சித்ரவதை செய்துவிட்டன. உயிரையே மாய்த்துச் கொள்ள முயற்சி செய்கிற அளவுக்கு அது சீதாப்பாட்டியை அந்த நாளில் துன்புறுத்தியது. ஒருதினம் மருமகளைப் பட்டாணி சுண்டல் செய்யச் சொன்னாள் மாமியார். அப்புசாமிதான் கடைக்குப் போய்ப் பட்டாணி வாங்கி வந்தார். எத்தனை யுகமானாலும் வேக முடியாத இரும்புப் பட்டாணி மாதிரி மோசமான சரக்கை வாங்கி வந்து இளம் மனைவியிடம் தந்துவிட்டார். சுண்டல் வெந்ததோ, வெந்ததோ, வெந்தது அவ்வளவு மணி வெந்தது. கடிகாரத்திலுள்ள 12 மணியும் தீருகிற அளவு வெந்தது. பயபக்தியுடன் சுண்டலை மாமியாருக்குப் போட்டாள் மருமகள் சீதா.

இலையில் சுண்டல் விழுந்ததும் மாமியார் நசுக்கிப் பார்த்தாள். அடுத்தகணம் இலையோடு சுண்டலை மருமகள் முகத்தில் விட்டெறிந்தாள். “வெந்த லட்சணம் பார்” என்று.

மருமகள் “எவ்வளவோ வேகவைத்தும் வேகவில்லை” என்று சமாதானம் சொன்னாள். “நீ அசல் பத்தினியாயிருந்தாலல்லவா வேகும்! நீலி!” என்று சொல்லிவிட்டாள் மாமியார்.  

மாமியாரின் அந்த ஒரு வார்த்தையில் உடம்பும், உள்ளமும் அன்றைய தினத்தில் எரிந்து சாம்பலானது போல் ஆகிவிட்டது. “என் ஒழுக்கத்தை இழிவு செய்தபின் நான் இருப்பானேன்!’ என்று நடு ராத்திரியில் கிணற்றில் விழப்போன அவள் காலில் முன்னதாக அப்புசாமி விழுந்து, ‘என் அம்மாவின் ஆட்சி இன்றோடு ஒழியட்டும். அவள் சொன்னபடிதான் வேண்டுமென்றே நான் வேகாத பட்டாணியாகப் பார்த்து வாங்கி வந்தேன். இனி நான் அம்மா சொன்னபடி ஜென்மத்திலும் கேட்க மாட்டேன். உனக்கே அடிமை’ என்று கதறி, சிங்கம் போல் சிலிர்த்துத் தாயாரை எதிர்த்துக் கொண்டார். அன்றைய சம்பவத்துக்கப்புறம்தான் சுண்டல் சீதாப்பாட்டியின் பரம விரோதியானது. சாப விமோசனம் பெற்ற அகல்யையிடம் ‘இந்திரன்’ என்று சொன்னால் எப்படிச் சீறுவாளோ அது மாதிரி சீதாப்பாட்டி சுண்டல் என்றால் சீறுவாள்.

“சீதே!” என்றார் அப்புசாமி. “உனக்கு இந்த விஷயம் இவ்வளவு கோபம் தருமென்று தெரிந்திருந்தால் நான் பேச்செடுத்தே இருக்க மாட்டேன். தப்பு, தப்பு! என் கால் வீங்கினாலும் சரி. உடம்பு பூராவுமே வீங்கினாலும் சரி, இனி எனக்குச் சுண்டல் ஆசை கிடையாது.

ஆனால், அப்புசாமிக்கு மறுநாள் கால் முன்னைவிட அதிகமாக வீங்கிக் காணப்பட்டது.

இதைக் கவனித்த சீதாப்பாட்டி மாலை சுமார் நாலு மணிக்கு அப்புசாமியிடம் வந்து, “டிரஸ் செய்து கொள்வதுதானே?” என்றாள்.

அப்புசாமி, திடீர் சந்தேகம் வந்தவராகப் பீதியுடன் தன்னைத் தானே ஒருதரம் பார்த்துக் கொண்டார். “டிரஸ் செய்து கொண்டுதானே இருக்கிறேன்!” என்றார்.

“பீச்சுக்குப் போய் வரலாமா? உங்கள் ·பேவரிட் சுண்டலும் அங்கு கிடைக்கும்” என்றாள்.

அப்புசாமி, “நிஜமா, இது நிஜமா?” என்று பேகடா ராகத்தில் தியாகராஜ பாகவதர் மாதிரி ஓர் ஆலாபனை செய்து தன் ஆனந்தத்தைத் தெரிவித்துவிட்டு அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு, “தயார்!” என்று குரல் கொடுத்தார்.

கடற்கரையில் அப்புசாமிக்கு மணலில் உட்கார இருப்பே கொள்ளவில்லை. ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையாயிருக்கிறதே?’ என்று உள்ளுக்குள் புழுங்கினார். சொல்லி வைத்தாற் போல் ஒரு சுண்டல் வியாபாரியாவது அவர்கள் இருந்த பக்கம் வரவில்லை. வேறு எந்தெந்த மூலையிலேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்புசாமியால் தாள முடியவில்லை. இரண்டு பர்லாங் தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கூடைக்காரனைக் கைதட்டி, “ஹேய்! ஏய்! ஏய்!” என்று கூப்பிட்டார்.

சீதாப்பாட்டி அப்புசாமியின் இந்தச் செய்கையைக் கண்டித்தாள். “கொஞ்சம் டீஸண்ட்டாக நடந்து கொள்ளுங்கள். சைல்ட் மாதிரி பிஹேவ் செய்கிறீர்களே? சுண்டல்காரன் வராமலா போய்விடுவான்?” என்றாள்.

சுண்டல்காரன் வந்தான். அப்புசாமி அவன் கையில் இருந்த சுண்டல் கூடையை அடியோடு விழுங்குபவர் போல் பார்த்தார். கண் கொள்ளாக் காட்சியாகத் தேங்காய், மாங்காய் அலங்காரங்களுடன் சுண்டல் கண்ணைப் பறித்தது. நாலைந்து எலுமிச்சம் பழ மூடிகளும் சுண்டல் பாத்திரத்தில் இருந்தன. “சீதே, உனக்கு?” என்றார் அப்புசாமி.

“சீ! சீ!” என்றாள் சீதாப்பாட்டி. அப்புசாமி தனக்கு மட்டும் வாங்கிக் கொண்டார். சுண்டல் பொட்டலத்தில் சுண்டல் போட்டு, எலுமிச்சம் பழ மூடியை எடுத்து இரண்டு பிழிபிழிந்து லாகவமாகச் சுண்டல்காரர் நீட்டினார்.

“உடம்புக்கு ஏதாவது வந்து சேரப் போகிறது. பத்துப் பைசாவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள் போதும். ஹோல்சேலாய் கூடையையே விலை பேசிவிடப் போகிறீர்கள்” என்று சீதாப் பாட்டி அவசரத் தடை ஒன்று கொண்டு வந்தாள்.

அப்புசாமி, “ஆகா! என்ன ருசி! என்ன ருசி! சீதே, ஒன்றே ஒன்று வாயில் போட்டுப் பார்” என்றார்.

சீதாப்பாட்டி முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, “இந்த மாதிரி ராட்டன் திங்ஸெல்லாம் எனக்குப் பிடிக்காது. ஐயே” என்று மறுத்துவிட்டாள். ஒரு பொட்டலத்துக்கு மேல் அப்புசாமி வாங்கவும் அனுமதிக்கவில்லை.

அப்புசாமி தன் வழக்கமான சப்த ஜாலங்களுடன் ஒவ்வொரு சுண்டலாக அசை போட்டு ரசித்துச் சாப்பிட்டார்.

அப்புசாமி, “அடடா! என்ன ருசி! எலுமிச்சம் பழம் பிழிந்தான் பார், அந்தக் காரியத்துக்கு மட்டும் பத்து பைசா தரலாம். இன்னும் ஒரு பத்துப் பைசாவுக்கு வாங்கிக் கொள்ளட்டுமா?” என்றார்.

“கோடு ஹெல்!” என்று சீதாப்பாட்டி சள்ளென்று விழவும் அப்புசாமி பூனையாய் ஒடுங்கிவிட்டார்.

“சரி போகலாமா பஸ்ஸ¤க்கு?” என்று எழுந்தாள் சீதாப்பாட்டி.

அப்புசாமிக்குக் கடற்கரையை விட்டுப் பிரியவே மனம் இல்லை. தேங்காய், மாங்காய், பட்டாணிக்கு ஈடாகத் தன் உடல் பொருள் ஆவியைத் தரச் சித்தமாயிருந்தார். ஆனால், சீதாப்பாட்டியின் கட்டளை “க்விட் இந்தியா’வுக்கும் அதிகப்படியான காட்டமாக இருக்கவும் மறுபேச்சின்றிக் கடற்கரையைக் காலி செய்தார்.

கால்மணி நேரத்தில் பஸ் வந்தது. ஆனால், விதியின் சோதனையை யாரே அறிவார்? சீதாப்பாட்டி ஏறியதும் கண்டக்டர், “அவ்வளவுதான், அடுத்த ஆள் ஏறாதே, சார் ஏறாதே” என்று தடுத்தான். அவன் அடுத்த ஆள் என்று குறிப்பிட்டது சீதாப்பாட்டியைத் தொடர்ந்து பஸ்ஸ¤க்குள் ஏற முயற்சி செய்த அப்புசாமியைத்தான்.

அப்புசாமி விடாமல், “என் சம்சாரமப்பா. சம்சாரம்” என்று கூவிப் பார்த்தவர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவராக, பஸ் கம்பியில் தான் போட்டிருந்த தாராசிங் பிடியைத் தளர்த்தினார். “சீதே! சீதே! நான் அடுத்த பஸ்ஸில் வந்துவிடுகிறேன். நீ கவலைப்படாமல் போ” என்று தைரியம் கூறியதன்றி பஸ் கிளம்புவதற்காக “ரைட்ஸ்” குரலும் கொடுத்துவிட்டார்.

பஸ் புறப்பட்டுவிட்டது. புறப்பட்டுப் போன பஸ்ஸைப் பார்த்து அப்புசாமி மர்மமானதொரு புன்னகை பூத்தார்.

சமுத்திரம் நோக்கி விரையலானார்.

இருள் மெதுவே படர்ந்து கொண்டிருந்தது. அப்புசாமி இருளுக்கும் ஒளிக்கும் நடுவில் யாரை அப்படித் தேடுகிறார்?

‘மாங்கா, தேங்கா, பட்டாணி, சுண்டல்’ காரனைத்தான். ஒரே ஒரு பொட்டலம் சாப்பிட்டதில் வெகு அதிருப்தி. இன்னும் ஓர் ஏழெட்டுப் பொட்டலமாவது சாப்பிட்டால்தான் அவர் ஆசை தணிந்து, கால் வீக்கமும் இறங்கும் போல் அவருக்குத் தோன்றியது.

அப்புசாமி சரியாகப் பதினேழு நிமிடம் அங்குமிங்கும் அலைந்து சுண்டல்காரனைப் பிடித்துவிட்டார். “ஆறு பொட்டலம்…” என்று ஆர்டர் கொடுத்தவர், “நன்றாயிருக்கிறதா பார்ப்போம்” என்று ஒரு பொட்டலத்தைச் சுண்டல்காரன் எதிரிலேயே தின்று தீர்த்து “பேஷ்!” என்று சான்றிதழும் வழங்கிவிட்டு, ஜிப்பா பையில் கைவிட்டார், பணம் தர.

அடுத்த கணம், “அச்சச்சோ!” என்று அலறினார். பர்ஸை எவரோ ‘பிக்பாக்கெட்’ அடித்துவிட்டார்கள்.

அப்புசாமி மேலும் கீழும், பக்கவாட்டிலும் உயரவாட்டிலும் தன்னைத் தேடிக் கொண்டார். ஆன்மாவைக் கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்துவிடலாம் போலிருந்தது. பிக்பாக்கெட் போன மணிபர்ஸைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

சுண்டல்காரர் அப்புசாமியை ஒரு தினுசாகப் பார்த்துவிட்டு, “என்ன சார், துட்டு இல்லீங்களா? தாரை வாத்திட்டீங்களா? பரவாயில்லை. தின்ன சுண்டலுக்குக் காசு தர வேண்டாம்” என்று கூறியவாறு அப்புசாமியின் கையிலிருந்த சுண்டல் பொட்டலங்களை வாரண்ட் இல்லாமலேயே ஜப்தி செய்து கொண்டு அவரைப் போக அனுமதித்தார், பெருந்தன்மையுடன்.

அப்புசாமிக்குத் தாளமுடியாத துக்கம் பொங்கியது. காசு இல்லாமல் இப்படித்தான் அவமானப்பட நேர்ந்ததே என்பதற்காகவா? இல்லை. சுண்டல்காரர் மாதிரி, சர்க்கார் பஸ் கண்டக்டரும் பெருந்தன்மையாக, சும்மா அவரை ஏற்றிக் கொண்டு போவாரா?

‘பளீர்’ என்று மேற்கு வானில் மேக மூட்டத்தில் ஒரு மின்னலும், அப்புசாமியின் மூளையில் ஒரு மின்னலும் ஒரே கணத்தில் பளிச்சிட்டன.

“ஏன், டாக்ஸியில் ஏறிக்கொண்டு வீட்டில் போய் ஜம்மென்று இறங்கிக்கொண்டு பணம் கொடுத்து அனுப்பினால்?’

அடுத்த கணம் இவரது துரதிருஷ்டம், ஒரு டாக்ஸி வடிவெடுத்து மாயமான் மாதிரி இவர் முன்னே உல்லாசமாகச் சென்றது. அப்புசாமி அதைப் பிடிக்க ஓடினார். அது நிற்பது போல் நின்றது, பக்கத்தில் போனால் மீண்டும் நகர்ந்தது. கையைத் தட்டினால் திரும்புவது போல் திரும்பியது. அப்புறம் திரும்பாதது போல் ஓடியது. கடைசியில் ஒருவாறு டாக்ஸியை அடைந்து ஏறியும் உட்கார்ந்துவிட்டார்.

டாக்ஸி பறந்தது.

வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் பெரிய இடி காத்திருந்தது அவருக்கு. இன்னும் சீதாப்பாட்டி வந்து சேர்ந்திருக்கவில்லை. சாவி அவளிடம்தான் இருந்தது. கதவு பூட்டியிருந்தது.

டாக்ஸிக்காரன், “என்ன சார், இறங்குங்களேன். இந்த வீடு தானே!” என்று நெட்டித் தள்ளாத குறையாக விரட்டினான்.

அப்புசாமி தன் சோகத்தை எப்படிச் சொல்லுவார்? “கொஞ்சம் இருப்பா. உன் வெயிட்டிங் சார்ஜை வேண்டுமானால் தந்துவிடுகிறேன். இதோ ஆள் வந்துவிடும். கதவைத் திறக்க….” என்று கெஞ்சினார். அரை மணியாயிற்று. முக்கால் மணி ஆயிற்று.

டாக்ஸிக்காரன் பொறுமை இழந்து, “சார்… சார்…மீட்டர் பத்து ரூபாய் தாண்டிக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் ஒரு தச்சனைக் கொண்டு வந்து பூட்டை உடையுங்கள். இல்லாவிட்டால் எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்தால் நானே உடைக்கிறேன்” என்றான்.

அப்புசாமி கொலைக் குற்றவாளி போலச் செய்வதறியாது தவித்தவர், ‘ஆ! புறக்கடைச் சுவர் வழியாக ஏறிக் குதித்தால் என்ன?’ என்ற எண்ணம் வரவும், “இருப்பா வருகிறேன்” என்று குடுகுடுவென்று புறக்கடைப் பக்கம் போய் ஒருவாறு கஷ்டப்பட்டுச் சுவர் ஏறித் தடாலென்று வீட்டு உற்புறம் குதித்தார்.

“ஆ! அம்மாடியோவ்!” என்று அடுத்த கணம் ஒரு பேரரவம் கேட்டது. அது அப்புசாமியின் கூக்குரல்தான். குதித்த இடத்தில் அம்மிக் குழவி இருந்து அவரைப் புரட்டிவிட்டு விட்டது.

அத்தனை வேதனையிலும் அப்புசாமி சிரித்தார். ‘டாக்ஸிக்காரனிடமிருந்து தப்பிவிட்டோம். அவன் நம்மைத் தேடி வருவதானால் வாசல் கதவை உடைத்து, அல்லது புறக்கடைக் கதவைப் பெயர்த்து அல்லவா வரவேண்டும்?’ அதுவரை அவருக்கு நிம்மதி.

சீதாப்பாட்டி சரியாக எழு மணிக்கு வந்தாள். அவள் ஏறின பஸ் நடுவில் ‘ப்ரேக் டவுனாகி’ அப்புறம் வேறு பஸ்பிடித்து வர அவ்வளவு நேரமாகிவிட்டது. வந்து பார்த்தால் வீட்டு வாசலில் ஒரே கூட்டம். டாக்ஸிக்காரனொருவன் ஒரு மாயக் கிழவன் தன்னை ஏமாற்றிவிட்டு மாயமாகிவிட்ட விதத்தை விவரித்துக் கொண்டிருந்தான். சீதா பாட்டி அவன் விவரித்த அங்க அடையாளங்களை வைத்து அது அப்புசாமிதான் என்பதைத் தீர்மானித்து, டாக்ஸிக்காரனுக்குப் பத்து ரூபாய் கொடுத்தாள்.பிறகு அவசர அவசரமாகப் பூட்டைப் பெயர்த்து கிரகப்பிரவேசம் செய்தாள். புறக்கடையில் அப்புசாமி சுவரில் மோதின கார் மாதிரி அலங்கோலமாக விழுந்த நிலையிலும் புன்னகையுடன் இருந்தார்.

“ஆ! ஹாரிபிள்! ஐயோ உங்களுக்கு என்ன?” என்று சீதாப்பாட்டி ஸ்தலத்துக்கு விரைந்தாள்.

அப்புசாமி ஈனஸ்வரத்தில், “சீதே, உன்னை முன் காலத்தில் சுண்டலை வைத்துப் பழிவாங்க உடந்தையாயிருந்தேன். இன்று அதே சுண்டல் என்னைப் பழி தீர்த்துவிட்டது. கால் போகட்டும்? டாக்ஸிக்காரன் போய்விட்டானா?” என்றார்.

சீதாப்பாட்டி, கண்ணீர் சிந்தக் கூட நேரமில்லாமல், “டாக்ஸி! டாக்ஸி! நில்! புத்தூர் போக வேண்டும்” என்று வாசலுக்கு ஓடினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *