என் பிரச்சினை எனக்கு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 8,720 
 

எனக்கு இருக்கும் தொந்தரவுகளிலேயே பெரும் தொந்தரவு படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுவதுதான். எனக்கு பத்து வயதாக இருந்திருந்தால் இதைப்பற்றி நான் வருந்தியிருக்கமாட்டேன். உங்களுக்கும் இது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால் எனக்கு இந்த ஏப்ரல் வந்தால் முப்பத்தி நான்கு வயது முடிகிறது.

தொட்டில்பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்ற பழமொழி எனக்கு இந்த விவகாரத்தில் முழுவதுமாகப் பொருந்துகிறது. ஐந்து அல்லது ஆறு வயது வரைக்கும் நான் அப்பாவிடமும், தம்பி அம்மாவிடமும் படுத்துக் கொள்வது வழக்கம். நான் படுக்கையை நனைக்கும் போதெல்லாம் அப்பாவையும் நனைத்து வைப்பதால், அப்பா தன் லுங்கியை மாற்றிக் கொள்வார். எனக்கும் வேறு ட்ரவுசரை மாற்றிவிட்டு கீழே பாய் போட்டு படுத்துக் கொள்வோம். மறுநாள் காலையிலேயே நான் நனைத்த மெத்தையை வெயிலில் காய வைப்பார்கள்.

எனக்கு பத்து வயதாகும் போது அப்பா தினமும் பாதி இரவில் எழுந்து தூக்கம் கெடுவது குறித்து சலிப்படைந்திருக்க வேண்டும். நான் அம்மாவிடமும், தம்பி அப்பாவிடமும் இடம் மாறிக் கொண்டோம். த‌ம்பி உற‌க்க‌த்தில் உதைப்ப‌தாக‌ அப்பா அவ்வ‌ப்போது புல‌ம்பி இருக்கிறார். இருந்தாலும் அடுத்த‌ ஐந்து வ‌ருடங்களுக்கு பெரிய‌ மாற்ற‌மிருக்க‌வில்லை. இந்த‌ ஐந்து வ‌ருடங்களும் அம்மா த‌ன் புட‌வையை நடு இரவில் மாற்றிக் கொண்டிருந்தார்.

ப‌தினைந்து வ‌யதிற்குள்ளாக என் விவகாரம் உற‌வின‌ர்க‌ளுக்கு எல்லாம் தெரிந்துவிட்ட‌து. கூட்ட‌மாக‌ இருக்கும் போது பேசுவதற்கான விஷயத்திற்கு பற்றாக்குறை வரும் போதெல்லாம் என் குறைதான் அவ‌ர்களுக்கு சிரிப்புக்கான‌ பொருள். அதுவும் அம்மாவின் தாய்மாம‌ன் இருக்கிறார் பாருங்க‌ள். அழிச்சாட்டிய‌ம் செய்வார்.

தூங்குவ‌த‌ற்கு முன்னால் ‘அதில்’ த‌வளையைக் க‌ட்டி வையுங்க‌ள். சிறுநீர் க‌ழிக்கும் போதெல்லாம் த‌வ‌ளை ஈர‌ம் க‌ண்ட‌ உற்சாக‌த்தில் துள்ளிக் குதிக்கும், ப‌ய‌த்திலேயே நிறுத்திவிடுவான் என்பார். என‌க்கு உண்மையாக‌வே செய்துவிடுவார்க‌ளோ என்ற‌ ப‌ய‌ம் தொற்றிக் கொள்ளும். வெட்கமும் வேறு வ‌ந்துவிடும். இத்த‌னை பெண்க‌ள் முன்பாக‌ இப்ப‌டி பேசுகிறாரே என்ற‌ கோப‌த்தில் கிணற்று மேட்டில் அம‌ர்ந்து அழுது கொண்டே அவ‌ரை திட்டிக் கொண்டிருப்பேன்.

அப்பொழுது பார்த்து அம‌த்தாக் கிழ‌வி கிணற்று மேட்டுக்கு வ‌ந்துவிடும்.(அம்மாவின் அம்மா). “எஞ்சாமீ…இங்க‌ வ‌ந்து பொக்குன்னு அழுவுது பாரு…உங்க‌ப்பாரு கிட‌க்குறான்…அவுனுந்தான் க‌ண்ணால‌த்து வ‌ரைக்கும் ப‌டுக்கையில‌ ஒண்ணுக்கு போனான்” என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தும். என‌க்கும் கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌ இருக்கும். என்னை ச‌மாதான‌ம் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது நான் கிண‌ற்று மேட்டில் த‌னியாக‌ அழுத‌தாக‌ப் ப‌ரிதாப‌மாக அமத்தா சொல்லும் போது, என‌க்கே என் மேல் சுய‌பச்சாதாப‌ம் வ‌ந்துவிடும். பொத்துக் கொண்டு அழுகை வரும். கூட்டமாக இருப்பதால் கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிக் கொள்வேன். அடுத்த‌ க‌ணமே அப்பாரு தன்‌ கிண்ட‌லை ஆர‌ம்பித்துவிடுவார்.

குதிரை முடியை எடுத்து ‘அதன்’ மீது க‌ட்டி வைத்தால் சிறுநீர் க‌ழிப்ப‌தை நிறுத்திவிடுவான் என்று சொல்லி ‘கெக்க‌பிக்கே’ என‌ச் சிரிப்பார். அது உண்மையா அல்லது பொய்யா என்று ஒருவருக்கும் தெரியாது. அவ‌ர் ச‌ரியான‌ குதிரைப் பிரிய‌ர். உல‌கின் அத்த‌னை நோய்க்கும் குதிரையிட‌ம் ம‌ருந்து இருப்ப‌தாக‌ ந‌ம்புவார். குதிரை முடி விவ‌கார‌த்தை அவ‌ர் சொன்ன‌வுட‌ன் அம்மாவும் ந‌ம்பிக்கையில் ‘அப்ப‌டியா மாமா?’ என்பார். என‌க்கு வ‌ந்த‌ கோப‌ம் இருக்கிற‌தே, அடுத்த‌ முறை அப்பாரு வ‌ரும் விழாக்களுக்கு வ‌ர‌வே கூடாது என்று முடிவு செய்து கொள்வேன். ஆனால் என் கையில் ஒன்றுமே இருக்காது. அடுத்த‌ முறை வ‌ரைக்கும் என் ப‌டுக்கை ப‌ழ‌க்க‌ம் எந்த‌ மாற்ற‌முமில்லாம‌ல் தொட‌ரும். அப்பாரையும் ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும்.

என‌க்கு என்ன‌ செய்வ‌து என்றே தெரிய‌வில்லை. சோம‌சுந்த‌ர‌ம் டாக்ட‌ரிட‌ம் அழைத்துச் சென்றார்க‌ள். இது மன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து என்றும் வ‌யதாகும் போது ச‌ரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார். என‌க்கு கொஞ்ச‌ம் அறிவுரை சொன்னார். என‌க்கு ஒன்றுமே காதில் விழ‌வில்ல‌. அருகில் நின்று சிரித்துக் கொண்டிருந்த‌ ம‌லையாள‌ ந‌ர்ஸ் மீதுதான் கோப‌ம் வ‌ந்து கொண்டிருந்து. வெளியே வ‌ரும்போது ‘ஞான் பார்க்கட்டா?’ என்று அம்மாவிட‌ம் கேலியாக‌க் கேட்டாள். நான் த‌ற்கொலையே தேவ‌லாம் என்று நினைத்துக் கொண்டேன்.

ப‌த்தாம் வ‌குப்பின் விடுமுறைச் ச‌ம‌ய‌த்தில் தொட‌ர்ச்சியாக‌ ஒரு ப‌த்து நாள் ப‌டுக்கையில் சிறுநீர் க‌ழிக்க‌வில்லை. பெரும் வெற்றிவீரனாக‌ உல‌வ‌ ஆர‌ம்பித்தேன். சிறு சிறு வெற்றிக‌ளை எல்லாம் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் த‌ம்பட்ட‌ம் அடித்துக் கொள்ளும் நான் இந்த‌ வெற்றியை ம‌ட்டும் நானே கொண்டாடும்ப‌டி ஆகிவிட்ட‌து. அம்மாவுக்கு என் ‘வெற்றி’ குறித்து அப்ப‌டியொரு ச‌ந்தோஷ‌ம்.

அன்று ம‌திய‌ம் மொட்டை வெயிலில் கிரிக்கெட் விளையாடினேன். கைகால் எல்லாம் ப‌ய‌ங்க‌ர‌ வ‌லி. சிறுநீர் க‌ழிக்க‌ வேண்டும் போலிருந்த‌து. சாக்க‌டையில் நான் இந்த‌ப்ப‌க்க‌மும், லாரிக்கார‌ர் பைய‌ன் செந்தில் அந்த‌ப்பக்க‌மும் நின்று சிறுநீர் க‌ழித்தோம். பாதி க‌ழிக்கும் போதுதான் தெரிந்தது,எல்லாமே க‌ன‌வென்று. என் லுங்கி ந‌னைந்து போயிருந்த‌து. மெதுவாக‌ எழுந்து விள‌க்கைப் போட்ட‌தும் அம்மா விழித்துவிட்டார். ‘அட‌க் கிறுக்கா!’ என்று சிரித்துக் கொண்டார். நான் நொந்துவிட்டேன்.

இப்ப‌டி அவ்வ‌ப்போது ப‌டுக்கையை ந‌னைப்ப‌து அடுத்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்குத் தொட‌ர்ந்து க‌ல்லூரிக்கும் வ‌ந்துவிட்டேன். இப்பொழுதும் என் ப‌ழ‌க்க‌ம் தொட‌ர்கிற‌து என்றாலும், நான் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை. இர‌வில் நான் எழும்போதெல்லாம் அறையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எதைப்ப‌ற்றியும் க‌வ‌லைப்ப‌டாம‌ல் உற‌ங்குவார்க‌ள். நான் பொறுமையாக‌ லுங்கியை மாற்றிக் கொண்டு, ஈர‌ லுங்கியிலேயே பாயை சுத்த‌மாக‌ துடைத்துவிட்டு, துவைத்த‌ லுங்கியின் க‌த‌க‌த‌ப்பிலும் சோப்பு ந‌றும‌ண‌த்திலும் உற‌ங்கிவிடுவேன். ந‌ல்ல வேளையாக‌ க‌ல்லூரியில் என் விவ‌கார‌ம் யாருக்கும் தெரிய‌வில்லை. தெரிந்திருந்தால் ப‌ட்ட‌ப்பெய‌ர் வைத்து சாக‌டித்திருப்பார்க‌ள்.

க‌ல்லூரியும் முடித்து வேலைக்குப் போகும் போதும் நான் மாறியிருக்க‌வில்லை.ஆனால் இன்னும் அதிக‌மான‌ சுத‌ந்திர‌ம் கிடைத்த‌து. த‌னி அறையில் நான் க‌வ‌லையே ப‌ட‌ வேண்டிய‌தில்லாம‌ல் இருந்த‌து. அவ்வ‌ப்போது ந‌ள்ளிர‌வில் எழுவ‌துதான் எரிச்ச‌லை உண்டாக்கும். ஆனால‌ அது ப‌ர‌வாயில்லை. என்ன‌தான் இப்பிர‌ச்சினை என‌க்கு தொந்த‌ர‌வாக‌ இருந்தாலும், பகல் வேலையில் க‌ளைத்துப் போன‌ நாட்க‌ளில் என் ஊர் சாக்க‌டையில் சிறுநீர் க‌ழிப்ப‌து போன்ற‌ க‌ன‌வுக‌ளின் மூல‌மாக‌ ப‌டுக்கையில் சிறுநீர் க்ழிப்ப‌தும், தொட‌ர்ந்து வ‌ரும் லுங்கியின் க‌த‌க‌த‌ப்பும், சோப்புத்தூளின் ந‌றும‌ண‌மும் என்னைக் க‌வ‌ர்வ‌தாக‌வே இருக்கின்ற‌ன‌.

இருப‌த்தொன்ப‌து வ‌ய‌தில் க‌ல்யாண‌ம் ந‌ட‌க்கும் போதுதான் அனைத்து எதிர்கால‌க் க‌ன‌வுக‌ளையும் மீறி இந்த‌ விவ‌கார‌ம் ப‌யமாக‌த் துருத்திக் கொண்டிருந்த‌து. ஆனால் இத‌ற்காக‌ க‌ல்யாண‌ம் வேண்டாம் என்று சொல்வ‌து என்னைப் போன்ற‌ ஒரு ‘வீரனுக்கு’ (நானாக‌ அவ்வ‌பொழுது சொல்லி என்னை உற்சாக‌மூட்டிக்கொள்வேன்.)அழ‌கில்லை என்ப‌தால் ச‌ம்ம‌திட்துவிட்டேன்.

ஷ‌ர்மிளாவுக்கு என் விவ‌கார‌த்தைச் சொல்ல‌வில்லை. ஆணாதிக்க‌ ம‌ன‌ப்பான்மை உள்ள‌ என்னால் இதை வெளிப்ப‌டையாக‌ ஒத்துக் கொள்ள‌முடிய‌வில்லை. திரும‌ண‌த்திற்குப் பிற‌கு மூன்று நான்கு ஆண்டுக‌ள் என‌க்கு பிர‌ச்சினையில்லை. ந‌ந்துவும் பிற‌ந்துவிட்டான். அவ‌ன் எனக்கும், ஷர்மிக்கும் இடையில் ப‌டுத்துக் கொள்வான். அவ‌னுக்கு நாப்கின் அணிவிக்காம‌ல் ப‌டுக்க‌ வைப்ப‌தில்லை.

ப‌ழைய‌ வ‌ழ‌க்க‌ப்ப‌டி இன்று எதேச்சையாக என் க‌ன‌வில் சாக்க‌டை வ‌ந்துவிட்ட‌து. விழித்துப் பார்க்கும் போது ந‌னைந்து கிட‌ந்தேன். ஷ‌ர்மிளாவுக்கு இது தெரிந்தால் என‌க்கு அவ‌மான‌மாகிவிடும். ம‌னைவிதான் என்றாலும் என‌க்கு அவ‌ளிட‌ம் சொல்ல‌ வெட்க‌மாக‌ இருக்கிற‌து. அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ நந்துவின் நாப்கினை க‌ழ‌ட்டி குப்பைக் கூடையில் எறிந்துவிட்டு, ஷ‌ர்மியை எழுப்பினேன். கொஞ்ச‌ நேர‌ம் முன்பாக ந‌ந்து சிணுங்கிய‌தாக‌வும் நாப்கினை நான் தான் க‌ழ‌ட்டி படுக்க வைத்தேன் என்றும், இப்பொழுது அவ‌ன் மீண்டும் சிறுநீர் க‌ழித்துவிட்ட‌தாக‌வும் சொன்னேன்.

சோம்ப‌ல் முறித்து எழுந்த‌வ‌ளிட‌ம், ‘நீ ப‌டுத்துக்கடா செல்ல‌ம், நான் பாக்கிறேன்’ என்று சொன்னேன். அவ‌ளுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்திருக்குமா என்று தெரிய‌வில்லை.

இதை எழுதுவ‌தற்காக‌ டேபிள் மீது அம‌ரும் போது இந்த இரவு நேர‌த்தில் அப்ப‌டி என்ன‌ அவ‌ச‌ர‌மாக‌ எழுதுகிறீர்கள் என்றாள். க‌தை எழுதுவ‌தாக‌ச் சொன்ன‌தும் நாளை காலையில் ப‌டிக்கிறேன் என்று சொன்னாள். நான் எப்படியாவது மறைத்துவிடுவேன். நீங்கள் இதைப் ப‌டித்துவிட்டு ஷ‌ர்மியிட‌ம் சொல்லிவிடாதீர்க‌ள்.ப்ளீஸ்.

– அக்டோபர் 1, 2007

Print Friendly, PDF & Email

1 thought on “என் பிரச்சினை எனக்கு

  1. ஹாஹாஹாஹா செம காமெடி சூப்பர் .. ஆனா இந்த பழக்கம் தான மாறும் வரை அப்படியே தொடரும்னு தான் நினைக்கிறன் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *