கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 15, 2013
பார்வையிட்டோர்: 13,627 
 

1

“விளக்கை அணைச்சுடட்டுமா?”
வினயா விநோத்தை திரும்பிப் பார்த்தாள், அவளது உள்ளங்கையில் ஒரு மின்மினிப் பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது.

அது ஊர ஊர, அவள் உள்ளங்கை குறுகுறுத்தது. ஒரு லைட்டைப் போட்டுப் போட்டு அணைப்பது போல், மின்மினியின் வால்புறத்தில் மிளிர்ந்து அணையும் ஓர் ஒளித்துளி.

திரும்பிய வினயாவின் முகவெட்டுத் தோற்றத்தில் ஒரு செல்லக் கோபம். இகழ்ச்சி. ‘சீ, நீ இவ்வளவு மட்டமா?’

“ஏய்.. வௌக்கை அணைச்சா மின்மினி எஃபெக்ட் நல்லாத் தெரியும்னு சொன்னேன்.”

வைபவிகண்களைத் திருப்பி வினயா மின்மினியைப் பார்வையிட்டாள்.

அவன் துணிந்து விளக்கை அணைத்தான். சுருட்டி வைத்திருந்த பாய் விரிவது போல் இருள் விரிந்தது. அந்த மின்மினி தவிர அறையில் வேறு வெளிச்சமில்லை.

விநோத்தின் கன்னம் வினயாவின் கன்னத்தோடு இழைந்தது. இரண்டு கன்னங்கள் ஒட்டிய இருமுகங்களும் மின்மினியைப் பார்த்தன.

“வீட்டிலே யாருமில்லேங்கறதே தெரியாது. ஆக்சுவலா எல்லார்ட்டயும் சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன்.”

அவள் பேசவில்லை. அவன் நெருக்கம். அவன் வாசனை. தன் கழுத்தின் மீது படர்ந்த அவனது இடது கை.

“நான் நாளைக்குப் பொறப்படறேன் வினய்.”

அவள் எதிர்பார்த்த முத்தம்… வருடல்… இல்லை. அவன் கண்ணியம் கடைப்பிடித்தான்.

“அப்புறம் எப்ப?” – அவள் சுவாசம் அவன் மீது படர்ந்தது.

“தை மாசம்… தயாராயிரு… மாப்பிள்ளையாத்தான் வருவேன்.”

அவள் பெருமூச்செறிந்தாள்.

நடுவிரல் நுனி தொட்ட மின்மினி. பயணம் முடிந்தது போல் நின்றது. பிறகு திகைத்து, தலைகீழாக விரல் மீதே நகர்ந்தது.

அதன் சௌகர்யம் உத்தேசித்து அவள் உள்ளங் கையைத் திருப்பினாள்.

“இதை எங்கேருந்து புடிச்சே?”

“வீட்டுக்கெணத்துக்குள்ளே! தூக்கணாங்குருவி கூடு கட்டியிருக்கு. தூக்கி உள்ளார பார்த்தேன். உள்ளே புளியங் கொட்டை அளவு களிமண்லே இதைக் குருவி ஒட்ட வச்சிருக்கு. ரிலீஸ் பண்ணிக் கொண்டு வந்தேன்” என்றாள் வினயா.

“பாவம் குருவி. இன்னிக்கு ராத்திரி அதுக்கு லைட் இருக்காது.”

“ஆஆமாஆம்… நீ எவ்வளவு கெட்டிக்காரனோ அதைவிட அது க்ளவர். வேற மின்மினி தேடிக்கும்.”

“என்ன சொல்றே… நான் வேற மின்மினியைத் தேடிப்பேங்கறியா?”

“மாட்டியா என்ன? மைசூர்ல மின்மினிகளுக்கா பஞ்சம்?”
விநோத் கோபித்துக் கொள்ளவில்லை.

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்?”

“ஆல்ரைட்… ஓக்கேன்னு.”

“அது மெய்யாக இல்லேன்னாலுமா?” கழுத்திலிருந்து அவன் கை விலகித் தோளில் ஒரு புறா போல் கனமின்றி அமர்ந்தது.

“த பார் விநோத்! இந்த தெய்வீகக் கதைகள்ளாம் வேணாம். அதெல்லாம் குட் ஓல்ட் கதைகள்.”

சட்டென்று தன் கன்னத்தில் ஈரம்! கண்ணீரா?

“ஏய்… ஏய்.. விநோத்! சும்மா விளையாட்டுக்கு…”

அவனிடம் பதில் இல்லை.

“விநோத்… விநோத்.”

மௌனம். அவள் விளக்கைப் போட்டாள்.

அவன் கர்ச்சீப்பால் முகம் துடைத்தான்.

“நான் வர்றேன்.” வருத்தம் மறையாத சிரிப்பு. விடைபெற்றான். என்ன சொன்னோம்? ஏன் இப்படி ஆனான்…? அவன் போன பிறகு ஒரு மின்மினி வெளிச்சம். இதயத்தில் ஒட்ட வைத்த வெளிச்சம்.

2

“எப்படா ஆஸ்பத்திரியிலேர்ந்து கொண்டாந்து வீட்டிலே தள்ளுவோம்னு காத்துக்கிட்டிருந்தீங்களா?”

விநோத்தை மட்டும் எதிர்பார்த்த வினயா கட்டிலில் படுத்தவாறே பொரிந்து தள்ளினாள்.

பின்னாலேயே நயனதாரா. மைசூர் யூனிவர்ஸிட்டியில் விநோத்தின் சகா.

சங்கடமான முகத்தைச் சரிப்படுத்தி, ‘ப்ளீஸ் கம் இன்’ என்று நயனதாரா வருவதை வினயாவுக்கு உணர்த்தினான்.

KanavuPoo2‘நர்ஸிங் ஹோமி’லிருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்து அழைத்து வந்தவன், மூன்று மணி நேரம் காணாமல் போன எரிச்சலை வினயா ஒரு நாசூக்கு முகமூடியால் மறைக்க வேண்டி வந்தது.

சிரிப்பினால் நயனதாரா அந்தச் சூழலுக்கே ஒளியேற்றுவது மாதிரி வந்தாள். ஒரு கையில் ‘பொக்கே.’ இன்னொரு கையில் பிறந்திருக்கிற குழந்தைக்கு ஒரு கிஃப்ட்.

நயனதாராவுக்கு கறுத்து அடர்ந்த இமைகள். பார்ப்பவர்களை ஒரு மயிலிறகு வருடும். ஒரு காந்த மையம் கவரும்.

கருள்முடி, சுண்டி இழுக்கும் உதடு. காஷ்மீர் நிறம். அவள் வந்தாலேயே வினயாவுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை எழும். ராஜகன்னிகையைச் சந்திக்கிற சேடிப்பெண் போல.

“ஹாப்பி வெட்டிங் டே!” நயனதாரா சிரித்துச் சிரித்து, வினயாவின் உள்ளே திரண்ட அழுக்கைத் துரத்த முயன்றாள்.
‘அட, இன்னிக்கு செப்டெம்பர் நாலா? எனக்கு மறந்தே போச்சே! இவளுக்கு எப்படித் தெரியும் விநோத் சொல்லாமல்?’

“தாங்க்யூ” என்று சிரித்தவாறே பரிசுகளை ஏற்றாள்.
பக்கத்தில் தொட்டிலில் உறங்கிய மின்னியின் கன்னத்தை லேசாகத் தட்டிவிட்டு, “ஹவ் நைஸ் எ பேபி!” என்றாள் நயனதாரா.

‘உட்காருங்கோ” என்று வினயா நாற்காலி காட்டினாள்.
பிறகு விநோத்தைத் திரும்பிப் பார்த்து, “இவங்களுக்கு ப்ரிஜ்லேருந்து ஜூஸ் கொண்டு வாங்களேன்” என்றாள்.

“நோ… வேண்டாம்! இப்பத்தான் விநோத் ட்ரீட் குடுத்துச்சு…” அவள் கண்களின் இங்கிதமான வெள்ளையான மறுப்பு.

மானச கங்கோத்ரி வாழ்க்கை. மைசூர் வெய்யில். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சின்னஞ்சிறு அசைவுகள் கூட ஏற்படுத்தும் நிறைவு.
இப்படி கால் மணிநேரம் பேசிக் கொண்டிருந்தாள். வினயாவுக்கு ஜலதரங்கம் கேட்ட மாதிரிஇருந்தது. அவள் விடை பெற்றுச் சென்ற பின் விநோத் நெருங்கினான்.

உறங்கும் சிசுவின் உச்சந்தலையில் உதடு பதித்தான். பின்பு தன் சட்டைப் பையிலிருந்து ஒரு மோதிரப்பெட்டி எடுத்துத் திறந்தான்.
தன் விரல் ஒன்றில் மாட்ட வந்த கையை வினயா உதறினாள்.

“என்னோட மேரேஜ் டே எனக்கே ஞாபகமில்லே. எவளுக்கோ ஞாபகமிருக்கு. இவ்வளவு நேரம் அவளோட போய்ச் சுத்திக் கூத்தடிச்சதுக்கு இப்படி ஒரு லஞ்சமா?” வினயா வெடித்தாள்.

“அவ எவளோ இல்லே. என்னோட சகா.”

“எதுல… உங்க செக்ஷணூவல் லைஃப்லயா?”
அவன் பளீரென்று கன்னத்தில் அறை விழுந்த மாதிரி உதடுகளை இறுக்கினான்.

“வினயா… நீ ரொம்ப ‘வீக்’ காயிட்டே!”

“ஷ்ஷ்… இந்த சமாளிப்பெல்லாம் வாணாம்.”

“ஆல்ரைட்… நான் என்ன சொல்லணும்?”

“எங்கே போனீங்க இவவளவு நாழி?”

“இது நம்மோட மூணாவது திருமணநாள். ஒனக்கு ஒரு சின்ன ‘சர்ப்ரைஸ் கிஃப்ட்’ தர நயனாவை அழைச்சிட்டு ஜ்வல்லரிக்குப் போனேன். செலக்ஷன்ல நான் எவ்வளவு ‘புவர்’னு ஒனக்கே தெரியுமே!”

“நோ… நோ… யூ ஆர் நாட் புவர். நயனதாராவை செலக்ட் பண்ணியிருக்கீங்களே.”

மோதிரப் பெட்டியை உள்ளங்கையில் மடித்து, அவன் மார்பில் குறுக்கே கைகட்டி நின்றான்.

“என்னை லவ் பண்றதுக்கு முன்னாடியே இவளோட ஒங்களுக்குச் சவகாசம்… உண்மைதானே!”

அவன் அவளைச் சலனமின்றிப் பார்த்துத் தலையசைத்தான்.
“யூ லவ்ட் ஹெர்!”

இப்போது அவன் இறுகிய முகம் நெகிழ்ந்தது. மெதுவாக உறுதியாகச் சொன்னான்.

“இப்பவும் கூட.”

“இப்படிச் சொல்ல ஒங்களுக்கு வெக்கமால்லே?”

“உண்மை வெட்கப்படாது வினயா!”

“தென் கெட் அவுட். போங்கோ… ரெட்டை வேஷம் வேண்டாம். போய் அவளோடேயே பொழையுங்கோ. டிவோர்ஸுக்கு நான் தயார்!”

விநோத் காலியாக இருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தான். லாபரட்டரியில் சுடர்விடும் ஸ்பிரிட் விளக்கைப் பரிசீலிப்பது போல் அவளையே பார்த்தான்.

“வினயா… நான் உன்னை ‘லவ்’ பண்ற விஷயத்தை மொத மொதல்ல இவகிட்டத்தான் சொன்னேன். அவதான் என்கரேஜ் பண்ணினா… அவதான் தைரியம் கொடுத்தா!”

அவள் வியப்போடு விநோத்தைப் பார்த்தாள்.

“லவ்! ஒனக்கு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியிலே… ஒரே குறுகலான அர்த்தம்தான் தெரியும். ஒனக்கு பொஸஷன். அதான் பொறாமை. அதான் எல்லாம் மஞ்சள் காமாலைக் கண்ணாத் தெரியறது.”

அவன் இத்தனையையும் சுடாமல் இதமாகப் பக்குவமாகச் சொன்னான்.

அவள் அவன் கண்களைப் பார்த்தாள். மெய்சிலிர்த்தது. இதயத்தில் ஒட்ட வைத்திருந்த ஒரு மின்மினியை அவள் விடுவித்தாள்.

3

தூக்கம் வராத இரவுகள் தொடங்கியது என்று?

மொட்டை மாடியில் புறங்கைகளைத் தலைக்குப் பின் கோத்து யோசித்தான் விநோத்.

நட்சத்திரங்கள் இப்போதெல்லாம் அவனிடம் அடிக்கடி பேசுகின்றன. அடிக்கடி உறக்கம் கலைந்து விடுகிறது.

தொட்டு உலுக்கினாலு கலையாத தூக்கம் நயனதாராவோடு போய் விட்டதா?

கீழே பெட்ரூமில் வினயா படுத்திருக்கிறாள். எழுந்து வந்ததைக் கவனித்திருப்பாளோ? இருக்கலாம். விசாரிக்கச் சோம்பலுற்றுத் திரும்பிப் படுத்திருக்கலாம்.

அவளுக்கும் வேலை; ஒழியாத வேலை. மின்னி வளர்ந்து விட்டாள். ஜெகனும் வளர்ந்து விட்டான். விழித்து எழுந்ததும் அவர்களுக்குப் பிரஷ்ஷில் பேஸ்ட் பிதுக்கி நீட்டுவது முதல் இரவில் வாயிலிருந்து அவன் சூப்பும் விரலை அகற்றி, குப்புறக் கவிழ்ந்து படுத்திருக்கும் மின்னியின் முகம் திருப்புவது வரை, ஒன்று தொடர்ந்து ஒன்றாகச் சங்கிலிகோத்த வேலைகள்.

அத்தோடு இப்போது ஆபீஸும் சேர்ந்து கொண்டது. ஆச்சா போச்சாவென்று சமையல் கட்டிலிருந்து விடுபட்டு ஆபீஸுக்கு ஓடும் ஓட்டம்.

“வேலையை விட்டுடு வினயா!”

பலமுறை சொல்லிப் பார்த்து விட்டான். இரண்டு பேரும் ஓடி உழன்று சம்பாதிக்கிற பணம், நாலு பேருக்காகக் காட்டும் ஆடம்பரத்தில் கரைவதைச் சுட்டிக் காட்டினான்.

“விநோத், வெறுமே பணம் சம்பாதிக்கத்தான் ஆபீஸ் போறேன்னு நெனைக்கறீங்களா?”

அவனுக்கே கூடத் தெரியும். அவன் அவ்வளவு முட்டாளல்ல. இருந்தும் சொன்னாள். “எனக்கு வேற ஒரு உலகம் வேண்டியிருக்கு!”

அவள் மேலும் வளர்ந்தாள்.

“நேத்திக்கு மீனாட்சி பட் வீட்ல என்ன நடந்தது தெரியுமா? இஸ்திரி வண்டிக்காரி அயர்ன் பண்ணிக் கொண்டு போன துணிகளை எல்லாம் தேச்சு, வீடு வீடாக் கொண்டு போய்க் கொடுக்க வந்திருக்கா. திடீர்னு ஒரே இடி மின்னல். பயந்து போய், மீனாட்சி பட் வீட்டிலேயே வச்சுட்டுத் திரும்பிட்டா.

“ராத்திரி பேஞ்ச மழையிலே மீனாட்சி தெருவிலே ஒவ்வொரு வீட்லயும் தண்ணி உள்ளே பூந்துட்டது. சோபா… ப்ரிஜ்… வாஷிங் மெஷின் எல்லாம் ஹோகயா.

“சலவைத் துணி கதியைச் சொல்லவே வேணாம் பாவம் சலவைக்காரி! மறுபடியும் எடுத்துட்டுப் போய் அவளா மெனக்கெட்டுத் துவைச்சு அயர்ன் பண்ணிக் கொண்டு வந்திருக்கா. மீனாட்சி தெருவிலே ஒவ்வொரு வீட்லயும் இப்ப தண்ணி தான் விஸிட்டர்.”

“எதற்கு இந்தக் கதை? எதைத் தொட்டு, ஏன் வளர்க்கிறாள்?’

“வெளியே வேற உலகம். நோ, பல உலகங்கள் இருக்கு விநோத். நாலு சுவர் தாண்டி, இந்த நாலு சுவரை நிக்க வைக்கப் படாதபாடு படற உலகங்கள் சொழல்றது, எந்த மையப் புள்ளியிலே எந்தெந்தத் தொடு கோணங்கள்ளே நம்ப நாலு சுவர் நிக்கறதுன்னு புரிஞ்சுக்க வேணும் எனக்கு! சுத்திப் பார்க்க பார்வை வேணும். அதுக்கு ஆபீஸ் ஒரு லெவல் க்ராஸிங்.”

இப்போதெல்லாம் வினயா அன்றாடம் வளர்கிறாள். வளர்ந்து கொண்டே வருகிறாள். அவள் வளர வளரத் தன்னை விட்டு விலகிக் கொண்டிருப்பது போல் விநோத்துக்குள் ஒரு தனிமை.

பழைய நாட்களில் இப்படித் தூக்கம் கலைந்து மொட்டை மாடிக்கு வந்தால், ஐந்தாவது நிமிஷம் குட்டியைத் தேடும் தாய்ப்பூனை மாதிரி, பின்தொடர்ந்து வருவாள்.

இப்போது தலை தூக்கிப் பார்த்து விட்டுப் படுத்து விடுகிறாள்.
அலட்சியம் அல்ல. களைப்பு.

விநோத்தின் மனசில் ஓர் ஆந்தை இப்போது அடிக்கடி உட்காரப் பார்க்கிறது. கொட்டக் கொட்ட அவனையே பார்க்கிறது. விரட்ட முயன்றாலும் போக்குக் காட்டி விட்டு மீண்டும் வருகிறது. உட்கார்கிறது. பேசுகிறது.

‘நீ தனிமையுற்றுப் போனாய் சகோதரா! என் பெயர் ஆதி துக்கம். நானும் நீயும் ஒரே வார்ப்பு. இங்கேயேதான் ரொம்ப நாளா இருக்கேன். நீ கண்டுக்கிட்டதே இல்லே.

நயனதாரா இருந்தா! நீ என்னைக் கண்டுக்கலே. அப்புறம் வினயா… சுத்தமா மொகம் திருப்பிட்டே.

நயனதாரா இப்போ நட்சத்திரத்திலே சேர்ந்துட்டா. வினயா இப்போ விவேகி ஆயிட்டா. ஹிஹ்ஹி… லெட்ஸ் மீட் நௌ!’

மன ஆந்தை பேசவில்லை. அலறியது. சட்!

விநோத் எழுந்தான். நேரே நடந்து எதிர்ப்பக்கக் கைப்பிடிச் சுவருக்குப் போனான். தூரக் கிழக்கில்அந்த மயானம். இப்போதும் ஒரு பிணம் எரிகிறது. தீவட்டி வெளிச்சம் போல் பிணம் எரியும் ஜ்வாலை.
இதே மயானத்துக்குத்தான் ட்ரௌமா கேர் யூனிட்டிலிருந்து நயனதாராவையும் கொண்டு போனார்கள்.

டில்லி தியேட்டர் தீப்பிடித்ததில் தன் சகோதரனும் செத்ததாக, ஒரு மழு ஏந்திய மௌன பாரத்தோடு சொன்ன அதே நயனதாரா, ஒரு நாற்சந்தி விபத்தில் போய் விட்டதாகச் செய்தி வந்தபின், விநோத் போனான். மயானம் வரை போனான்.

திரும்பி வீடு வந்து தலை முழுகும் போது வெந்நீர் விளாவிக் கொண்டே வினயா சொன்னாள்.

நயனதாராவுக்கும் தனக்கும் மத்தியில் என்னென்ன?… எவ்வளவு?
எல்லாம் தெரிந்தவள் வினயா.

எனினும் மறக்கச் சொல்கிறாள்.

ஒரு பெண்ணாக அல்ல. ஒரு மனைவியாக அல்ல. ஒரு மனுஷியாக, சர்வ சாதாரணமாக.

‘வினயா… நீ ஏன் இப்படி வளர்ந்து கொண்டு போகிறாய்? நார்மலா இரேன்.

‘எவளோ ஒருத்தி செத்தாளேன்னு புருஷங்காரன் மாதிரி உருகறியே. பெண்டாட்டி நான் ஒருத்தி கல்லாட்டம் இருக்கேன். நீ உருப்படுவியான்னு சபியேன். பொறாமையிலே தகிச்சுப் புகையேன். வாயிலும் வயித்திலும் அடிச்சுக்கயேன்.’

‘அப்ப நான் ஒங்கூட மல்லுக்கட்டிப் போராடறப்ப ஒரு மாறுதல் வந்து நயனதாரா நெனைப்பை மாத்திக்குவனே.’

‘இதை அவளிடம் வாய்விட்டுச் சொல்ல முடியாது. நீ ஏன் வளரவே மாட்டேங்கறே விநோத்துன்னு ஸ்கூல் டீச்சர் மாதிரி பார்ப்பா.’
அல்லது, ‘உன் காதல்செத்துப் போச்சு விநோத்! நீ என்னைச் சார்ந்திருக்க ஆரம்பிச்சுட்டே. நையி நையின்னு என்னண்டயே சுத்தி வர்றே. சார்ந்திருப்பதற்குப் பெயர் காதல்இல்லே.அது அடிமைத்தனம். காதல் சுதந்தரமானது. அது உபகிரகம் அல்ல. தானாய் ஒளி விடும் தனிக் கிரகம் என்று தத்துவ முத்துக்களாக எடுத்துத் தட்டில் வைக்க ஆரம்பித்து விடுவாள்.’

அந்த இரண்டினாலும் மன ஆந்தை வெளியேறாது.
விநோத் தூரத்தில் எரியும் பிணத்தின் ஜ்வாலையையே உற்றுக் கவனித்தான். அதனிடம் கேட்டான்.

காதல் என்பது என்ன?

தெரிந்த அர்த்தங்கள், பழக்கங்கள், சுவைகள், படிய வைத்த படிமங்கள், பிரமைகள், எல்லாம் அந்தக் கேள்வியின் கல்வீச்சில் திடீரென்று விலகி, நிறமற்ற சுத்த ஜலம் தெரிந்தது.
காதல் காதல் காதல்… காதல் போயிற் சாதல் சாதல் சாதல் என்று ஏன் சொன்னான் மகாகவி.

அது போய் விட்டதா?

வழி தெரியாத காட்டின் வெட்ட வெளியில் நிற்கும் திகைப்பில் நின்றான் விநோத்.

தூரத்தில் ஒரு நாய் குரைப்பதும் ‘பாரா உஷார்’ என்று மானச கங்கோத்ரியின் கூர்க்காக் குரலும் கேட்டன.

பின்னால் காலடிச் சப்தம் கேட்டது. திரும்பினால், வினயா.

“என்ன இன்னிக்கும் தூக்கம் வரலியா?” என்று இரண்டு கைகளையும் பின்னால் வளைத்து சோம்பல் முறித்து தூக்கக் கலக்கம் விலகாமல் நின்றாள்.

“ஆமாம்.”

“நயனதாரா?” அவள் நினைவா என்று கேட்கிறாள்.

“…….”

“ஸீ விநோத்! கான் ஈஸ் கான். ஒங்களை நான் மறக்கச் சொல்லலே. அவஸ்தைப் படுத்திக்கணுமா?”

“……..”

“ஆயிரம் நடக்கிறது. மீனிங்ஃபுல் அண்ட் மீனிங்லெஸ். அதை அதை அப்பப்ப ஒரு லாக்கர்ல வச்சுப் பூட்டிட வேண்டியது தானே!”
உனக்கு முடியுமா என்று கேட்க நினைத்தான்.

“ஒங்களுக்கு ஆண்ட்டி டிப்ரஸென்ட் மாத்திரை தேவைப்படறது. நாளைக்கு ஒரு சைக்கோதெரபிஸ்டைப் போய் கன்ஸல்ட் பண்ணுவம்!”

விநோத் தனக்குள் கசப்பாகச் சிரித்தான். கனத்த பிரேம் மாட்டிய மஹாபவர் கண்ணாடி பின்னே தெரியும், சைக்கோதெரபிஸ்டின் கண்கள் தெரிந்தன.

காதல் என்பது என்ன டாக்டர்?

கேட்டால் ரியாக்ஷன் எப்படி இருக்கும். வினயா அவனை நெருங்கினாள்.

நட்சத்திர வெளிச்சம் மட்டும் தெரிந்த அரையிருளில் மூன்று விரல்களால் அவன் மோவாயை உயர்த்தினாள்.

‘ப்ச்… ப்ச்… ப்ச்” என்று இது சரியில்லை என்பது போலப் பரிவோடு உரிமையோடு தலையசைத்தாள்.

நெருங்கி வந்து அவன் கழுத்தைச் சுற்றிக் கை கோர்த்து அணைத்தாள். பிறகு அவன் முகத்தை அருகே இழுத்துத் தன் அதரங்களின் மீது அவன் உதடுகளைக் கவிழ்த்துக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து விலகினாள். பெருமூச்சு விட்டாள்.

“நேரமே கெடைக்கறதில்லே விநோத்!”

எதைச் சொல்கிறாள்? எதற்குச் சொல்கிறாள்?

“நீங்க லோன்லியாய்ட்டது புரியறது. ஆக வேணடாமே. அவசியம் இல்லியேன்னு தோணும். எல்லாம் இயற்கையாச்சே. வருத்திக்கலாமான்னு சொல்லத் தோணும். சொன்னா சரிப்படாது. ஒருவேளை யூ மே நீட்இட். கொஞ்ச காலத்துக்கு.”

அவள் நேற்றை விட இன்று வளர்ந்திருப்பதை விநோத் ஒரு பயம் கலந்த வியப்போடு கவனித்தான்.

“விநோத்… விநோத்… விநோத்… ஐ ஆல்வேஸ் லவ் யூ விநோத்.
நூறு நயனதாரா வரட்டும் போகட்டும். ஐ வில் லவ் யூ.”

வினயா திடீரென்று உடைந்தாள். விம்மத் தொடங்கினாள்.

“வினி… வினி” என்று அவன் பதறி அவளை அணைத்துக் கொண்டான்.

அவன் மனசில் அந்த ஆந்தை பறந்து விட்டிருந்தது.
ஆட்டோ

பத்தே காலுக்குத்தான் அட்சதை தருவார்கள். முகூர்த்தம் ஒன்பது பத்தரை. இருந்தாலும் மித்ரா வீட்டார் மகா சாங்கியக்காரர்கள். ஒரு சடங்கு விட்டு வைக்கவோ அவசரப்படவோ மாட்டார்கள்.
கடைசி கால் மணி நேரத்தில் தான் மாங்கல்ய தாரணம் நடக்கும். மூன்றாம் வருஷம் மித்ராவின் அக்கா சௌம்யா கல்யாணத்தல் போய் உட்கார்ந்து, இப்படி லேட் ஆகி ஆபீசுக்குப் பதினொன்றுக்கோ அதிகமாகவோ போன ஞாபகம்.

கல்யாணி உட்கார்ந்திருந்த ஆட்டோ, டிரைவர் விநாயகம் வீட்டெதிரில் நின்றிருந்தது.

“ஒரு டூ மினிட்ஸ் மேடம்! ஊர்லருந்து தங்கச்சி வந்திருக்கான்னு பையன் வந்து சொல்லிட்டுப் போனான். தலைய காட்டிட்டு வந்துட்றேன்.”

அவள் அனுமதி பெற்றுத்தான் வீட்டிற்குள் போயிருந்தான். அது அலுவலகம் போகிற வழி. இரண்டு நிமிஷம் ஐந்து நிமிஷமாகப் போகிறது. டிரைவர் விநாயகம் வரவில்லை.

வரட்டும். பத்து நிமிஷமானாலும் பரவாயில்லை. அவனைக் கடிந்து கொள்ள முடியாது. மாமூல் ஆட்டோ என்பதற்கு மட்டுமல்ல.
மித்ராவின் கல்யாணத்திற்கு அவள் போகப் போவதில்லை. நேராக ஆபீஸுக்குப் போகிறாள். அது அவனுக்குத் தெரியும்.

பாவம் மித்ரா! ரொம்ப எதிர்பார்ப்பாள். தன்னை விட நாலு வயது இளையவள். இருபத்து நாலிலேயே அவளுக்குத் தாலி பாக்கியம் லபித்து விட்டது.

கல்யாணி கசப்போடு சிரித்துக் கொண்டாள். இந்தப் பெண்கள் ரேஷன் கியூவில் மண்ணெண்ணெயோ பாமாயிலோ கிடைத்து விட வேண்டும் என்று பறப்பது போல் இந்தக் கல்யாணத்துக்கு என்ன பரபரக்கிறார்கள்.

இத்தனைக்கும் மித்ராவின் அக்கா சௌம்யா கல்யாணம் ஒரு தோல்வி.

கியூவில் மண்ணெண்ணெய் கிடைக்காமற் போனவர்களின் மன இடிவு தனக்கு வந்துவிடக்கூடாது என்று என்ன அலை அலைந்தாள் – மித்ரா.

கல்யாணத்திற்குக் கட்டாயம் போக வேண்டும். போவாள் என்றுதான் விநா – டிரைவர் விநாயகத்தின் ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் – எதிர்பார்த்தான். அவள் உயிர்ச் சிநேகிதி என்று விநாவுக்குத் தெரியும்.

ஆட்டோ ஸ்டாண்ட் கல்யாணி வசிக்கிற தெரு முனையில் அவன் ஆட்டோ கொண்டு வந்து நிறுத்தி நாலு வருஷமாகப் போகிறது. அவள் பஸ் சவாரி நிறுத்தி ஆட்டோ ஏறத் தொடங்கி மூன்று வருஷம்.

அவள் குடும்பமே அவனுக்குத் தெரியும். ரிடையராகிப் பென்ஷன் பேப்பர் எங்கோ சிக்கிவிட அதற்கு மல்லாடிக் கொண்டிருக்கும் அப்பா, எப்போதும் வாழ்க்கையைச் சபிக்கிற அம்மா, நாலுபேர் போல சுரிதார் அணிய முடியாமல் சலிக்கிற ப்ளஸ்டூ படிக்கிற தங்கை, பி.எஸ்ஸி. படிக்கும் தம்பி.

எல்லாம் தெரியும்.

அவளது ரிசப்ஷனிஸ்ட் உத்தியோகத்தில், ஒற்றைச் சம்பளத்தில், குடும்பச் சக்கரம் முக்கல் முனகல்களோடு சுற்றுவதும் தெரியும்.
பல கல்யாணங்களுக்கு அவன் ஆட்டோவிலேயே போய் கல்யாணி தலைகாட்டி அட்சதை தூவி மொய் எழுதி வந்திருக்கிறாள்.
அவன் சாட்சி.

அவர்கள் எல்லாம் அவ்வளவு நெருக்கமில்லை. இந்தக் கல்யாணம் அப்படியல்ல. மித்ரா மிக மிக நெருக்கம். எல்லோருக்குமே தெரிந்த விஷயம் அது.

கல்யாணத்திற்குப் போய் நின்றவுடனே ஒப்பீடு தொடங்கிவிடும்.
தான் இருபத்தெட்டில் வெறுங் கழுத்தோடு நிற்க, இருபத்து நாலில் அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறுவதை, மௌனமாகவோ வாய்விட்டோ அலசுகிற கூட்டம் எல்லாக் கல்யாண மண்டபங்களைப் போல் அங்கும் இருக்கும். அதற்கே போக விரும்பவில்லை.

வரவர இந்த உணர்வு ரொம்பத்தான் உறுத்துகிறது. தனக்குக் கல்யாணம் ஆகாதது தன் குற்றம் என்கிற மாதிரி.
ஏதோ பெண்ணாகப் பிறந்த ஒவ்பவொருத்தியின் இறுதி லட்சியமே அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகிவிட வேண்டும்என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவிட்ட பிரமை.
வேளை வர வேண்டும் என்று வாய்ப் பசப்பலாகப் பேசுகிறவர்களுக்குக் கூட வரத் தாமதிக்கும் அந்த வேளைத் தவறுதலுக்கு, தன் துரதிருஷ்டமே காரணம் என்ற உள்ளெண்ணம்.
விநா மட்டும்தான் அவளை நன்கு புரிந்து கொண்டான். அவன் தன்னை விட மூத்தவன். முப்பத்திண்டு. தன் மாதிரியே குடும்பச் சூழ்நிலை. தன் மாதிரியே, தப்பித்துக் கொண்டு, தன்னலம் தன் சுகம் தேடாமல் குடும்ப வண்டியில் சக்கரம் தள்ளுபவன்.

எத்தனை வகையான ஆண்கள். அலுவலகம், வெளியுலகம். அடடா எத்தனை வழிசல்கள்! எத்தனை பேடி விண்ணப்பங்கள்! எவ்வளவு ஊமைக் காமங்கள்!

இருபத்தெட்டு வரை கட்டு விடாமல், முகப் பொலிவு மங்காமல், ஒரு கல்யாணமாகாத பெண் தென்பட்டால் மனுஷ புத்தி என்னமாய் வக்கரிக்கிறது!

விநாவும் அவளை ஏற்றிச் சென்ற முதல் சவாரியில் இப்படிச் சிறிது அசடு வழிந்திருப்பானோ!

சீச்சீ… அவன் ஜென்டில்மேன்.

ஜென்டில்மேனானால் என்ன? முதலில் ‘மேன்’ ஆண். கல்யாணமாகாதவன்.

நான் பெண். கல்யாணமாகாதவள். அவனுக்கு அப்படி ஓர் எண்ணம். இருந்திருக்கலாம். இப்போது இல்லை. அவனுள்ளிருந்த ‘மேன்’ மாறி ஜென்டில்மேனாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது.

அவன் எதெதற்கு சாட்சியாக இருந்திருக்கிறான்!

மித்ராவின் அக்கா சௌம்யா விவாகரத்திற்கு, தக்க விவேகமான துணையில்லாததால், வக்கீலிடம் கல்யாணி அலைந்திருக்கிறாள் அவன் ஆட்டோவில்.

கணவனை விட்டு ஓடி வந்து பதினெட்டு நாள் புகலிடம் தேடி வந்தாளே பூர்ணிமா. அந்தக் கணவன் வீட்டுக்குக் கல்யாணி சமரசம் செய்ய அலைந்திருக்கிறாள் அவன் ஆட்டோவில்.
ஐந்தாறு வரன்கள் அவளைப் பார்க்க வந்த போதெல்லாம், அவர்கள் திரும்பிப் போக அவன் ஆட்டோவைத்தான் அமர்த்த வேண்டி வந்திருக்கிறது.

விநா ஒரு நபரல்ல.

இன்னும் துடிக்கும் கருணை, பரிவு, கண்ணியம் என்ற மனுஷத் தன்மையின் சிறு துளித் தத்தளிப்பு. ஒருவேளை அதுவும் வற்றிப் போகலாம். போகட்டும் போ.

“கல்யாணி, உன் கல்யாணம் என்னவாயிற்று? எப்போ எங்களுக்கெல்லாம் சாப்பாடு போடப் போறே? நீயா முயற்சி எடுக்கலேன்னா ஒங்க வீட்டிலே யாருக்கும் ஒறைக்கப் போறதில்லே. கல்யாணி, பருவத்தே பயிர் செய்யணும்மா.”

ஆட்டோக்கார விநாயகத்திற்கும் அவளுக்கும் சிநேகமாம் என்ற கசமுசல், டைனிங் டேபிளில் அவளில்லாத போது ஓடி உலவிய பின் எத்தனை ஞானோபதேசங்கள்!

பொறுக்க முடியாமல் ஒருத்தியிடம் கல்யாணி முகத்திலறைந்தாற் போலச் சொல்லி விட்டாள்.

“த பாரு நீலா! நான் கல்யாணம் பண்ணிக்கறதாயில்லை. அந்த ஆட்டோக்காரனை வச்சிண்டிருக்கேன். நோ ட்ரபிள். போறுமா? நீங்கள்லாம் கல்யாணம் பண்ணி, காதல் பண்ணி என்ன கிழிச்சு எந்தக் குப்பை – என்ன குப்பை கொட்டினீங்க?”

“அடியேய், அடியேய்ய்ய்…” என்று நீலாவுக்கு உடல் நடுங்குவது கண்கூடாய்த் தெரிந்தது. அவள் நம்பி விடப் போவதில்லை. இருந்தாலும் தங்கள் ‘டேபிள்வம்பு’ ரகசியம் தெரிந்து கல்யாணி இந்தப் போடு போடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரு வாரம் அலுவலகத்தில் அவளைச் சுற்றி மயான அமைதி.
கல்யாணிக்கு ஒரு குரூர திருப்தி, தினவெடுத்த நாக்குகளை ஒரு வாங்குவாங்கிய நிறைவு.

என்ன? வாய் கொழுத்தவள் என்று விமர்சனம் நிலவும்! கவலையில்லை.

இப்படிச் சொன்னதை யாரிடமாவது சொல்லிச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. விநாவிடமே சொன்னாள், சிரித்துக் கொண்டே.
அவன் சட்டென்று வண்டியை நிறுத்தினான்.

“என்ன விநா?”

மெல்லிய விசும்பல்.

“விநா… விநா… விநா…”

அவன் வாய்விட்டு ஒரு பெண் மாதிரி அழுதான். என்ன இவன்? இவ்வளவு அசடா! இவனைப் போய் ஜென்டில்மேன் கின்டில்மேன் என்று நினைத்தோமே!

ஒருவேளை நான்தான் வெறுப்பேறி வக்கரித்துப் போனேனோ!
சீ, இதைப் போய் இவனிடம்…

ஆனால் இவன் வெறும் இவன் இல்லையே! நானாய் அப்படி நினைத்தேனா?

இப்படிச் சொல்வது அவன் தப்பாக எடுத்துக் கொள்ளத்தானே
சே, இவன் ஏன் அழுகிறான் இதற்கு?

அன்று ஐந்து நிமிடம் கல்யாணி மௌனமாயிருந்தாள். அப்புறம் தொண்டை கனைத்துப் பேசினாள்.

“ரொம்ப ஸாரி விநா.”

“இனிமே நீங்க வேற ஆட்டோவில் போறதா இருந்தாலும் போங்க மேடம்!” கம்மிய தொண்டை.

“பச்! இதான் கோழைத்தனம். அத விடு நீ ஏன் அழுதே?”
இன்று வரை விநா அதற்குப் பதில் சொல்லவில்லை. அவன் பார்வை, அவன் காட்டும் மரியாதை இவற்றில் ஒரு மாற்றம். கூடுதல் பரிவு. கை கூப்பும் கருணை.

“விநா, எனக்கு இது பிடிக்கலப்பா. பீடம் உயர்த்தி நீயும் என்னை ஒரு விலக்கத்தில் வச்சுடாதப்பா.”

கல்யாணி கெஞ்சவில்லை. பார்த்தாள், புரிந்திருக்கும். ஆனால் அவன் அந்த மரியாதையை மாற்றிக் கொள்ளவில்லை.

திடீரென்று ஒரு நாள் ஆட்டோ பயணத்தில் அவள் சிரித்தாள்.

“என்ன மேடம் சிரிக்கிறீங்க?”

“ஒண்ணு ஞாபகம் வந்தது.”

“சரி!” அவன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

“சொல்லட்டுமா?”

“இஷ்டப்பட்டா சொல்லுங்க.”

“ஆமாம். கேட்டுட்டு நீ பொம்பள மாதிரி அழுவே.”

“இல்லே மேடம்!” விநா தேறியவன் போல் சொன்னான்.

“இந்த வேலைக்கு முன்னாடி நான் பொன்னேரி தாலுக்கா ஆபீஸ்ல, டெம்பரவரியா கிளர்க் வேல பார்த்தேன். தெனம் ரெண்டு முறை ஸ்டேஷன் தரிசனம். அப்ப ஒரு சமயம் ஸ்டேஷன்ல ஒரு கூட்ஸ் என்ன காரணத்தாலோ ரொம்ப நாள் நின்னு போச்சு.
லைன் ஓரமா நடந்து ஸ்டேஷனுக்கு வருவேன். ரெண்டு மாசம். கூட்ஸைப் பாத்தா ஐயோ பாவம்னு இருக்கும். அப்புறம் இது எப்படா கௌம்பிப் போவும்னு எனக்கே ஒரு ‘போரா’ப் போச்சு.”

‘ம்ம், அப்புறம்?”

“ஒருநாள் அது பொறப்பட்டுப் போயிடுச்சு. அப்புறம் ஸ்டேஷன் வெறிச்சோடிப் போச்சு.”

விநா சிரித்தான். ஏன் எதற்குச் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டான். அழுவதை விடச் சிரிப்பது மேலென்று முதிர்ச்சி வந்திருந்தது.

“எங்கேயும் எதுவும் லேட்டாயிடக் கூடாதுன்னு ஏண்டா பதர்றோம்னு அப்ப நெனச்சேன்.”

அது என்றோ ஒருநாள் சொன்னது. வர வர மனசு சலித்து வருகிறது. வெறுப்பு, எதைப் பார்த்தாலும் கடுப்பு. இது நல்லதில்லை என்று தனக்கே கூட உறைக்கிறது.

எதிரில் வந்த ஓர் ஆட்டோ நின்று கல்யாணியின் சிந்தனை கனவு கலைந்தது.

“நிறுத்துப்பா, நிறுத்து!” என்று கட்டளை யிட்டது ஒரு தெரிந்த குரல். சௌம்யா. அடடே, கூட நீலாவும்!

இருவருமே இறங்கி வந்தனர். ஆட்டோவில், தான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு வருகிறார்களோ? தங்கை மித்ராவின் கல்யாணத்தை விட்டு விட்டு சௌம்யா எங்கே வந்தாள்?

“ஒன்னைப் பாத்துட்டுத்தான் கல்யாணி எறங்கினேன்!”

“என்ன விஷயம்?”

“கல்யாணத்துக்கு தானே வந்துண்டிருக்கே?”

என்ன சொல்வதென்று தெரியாமல் கல்யாணி மௌனமாய் இருந்தாள்.

“கொஞ்சம் அவசரமா என்னோட வர்றியா? என்னோட டிவோர்ஸுக்கு வாதாடின வக்கீல் ராமபத்ரனை அர்ஜண்டா கூட்டிண்டு வரணுமே!”

“ஏன்… என்ன சங்கதி?”

“காலைலே பிடிச்சு என் விவாகரத்து விஷயம் ஒரு இஷ்யூவாகி மித்ரா கல்யாணம் இழுபறி ஸ்டேஜுக்கு வந்துட்டது.”

திடுக்கிட்டாள் கல்யாணி.

இழுபறி நிலையா? கல்யாணம் நின்றுவிடுமா? சேச்சே, அப்படி நடக்கக் கூடாது. பாவம் சௌம்யா வீட்டார்! என்ன ஆவார்கள் இந்த மற்றோர் அதிர்ச்சியால்?

“யார் தகராறு பண்றது?”

“மாப்பிள்ளையோட அப்பா! யாரோ அவருக்குத் தெரிஞ்சவன், எங்காத்துக்கு வேண்டப்படாத ஆசாமி என்னமோ கயிறு திரிச்சு விட்டிருக்கான்.”

“என்னண்ணு?”

“என்னோட நடத்தை சரியில்லேண்ணு தான் ஆம்படையான்காரன் விவாகரத்து வாங்கிண்டு போயிட்டான்னு.”

“வாட் ரப்பிஷ்?”

“நாம் அப்படி சொல்லலாம். அவா நம்பணுமே?”

கல்யாணியின் முகம் வெளுத்தது. விஷயமே தலைகீழ். அவன் நடத்தை கெட்டவன். அதற்காக சௌம்யா வாங்கிய விவாகரத்து அது.

“ஜட்ஜ்மெண்ட் காப்பி ஒன்னண்டே இல்லியா? எடுத்து அவங்க மொகத்திலே விட்டெறியறது தானே!”

“அதெல்லாம வக்கீலண்டயே கொடுத்துட்டேன்!”

“சரி, நீ கல்யாண மண்டபத்துக்குப் போ! நான் அந்த ஜட்ஜ்மெண்ட் காப்பிய வாங்கிண்டு, வக்கீலையும் கையோட அழச்சுண்டு வர்றேன்.”

“நீ மட்டும் தனியாவா போறே? நானும் வர்றனே.”

“வேணாம். இந்த நேரத்திலே நீ என்னோட வந்தா ஏதோ செட்டப் பண்றாப்பிலே ஆயிடும்.”

“நீலாவையாவது கூட அழைச்சுண்டு போயேன்!”
விநாவைக் கல்யாணியோடு இணைத்து டேபிள் வம்பு பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட நீலா, முகம் கறுத்துத் தலை தொங்கி நின்றாள்.

“வர்றதானா வரட்டும். இது விநாயகத்தோட ஆட்டோ”
சௌம்யாவுக்கு அவர்களிடையே நடந்தது தெரியாது.

“ஏன், இந்த ஆட்டோவிலே இவ ஏற மாட்டாளோ? அப்படீன்னா நான் வந்த ஆட்டோவில் போய்க்கயேன்.”

கல்யாணி நீலாவைப் பார்த்தாள்.

அதற்குள் விநா ஓட்டமும் நடையுமாக வந்தான்.

“ஸாரி மேடம்! ஒங்களைக் காக்க வச்சுட்டேன் ஆபீஸுசுக்கு லேட்டாவப் போவுது… அட இவங்க எங்க வந்தாங்க? தங்கச்சி கல்யாணமில்லே.”

நீலா அவனது மாசற்ற சௌஜன்யத்தைப் பார்த்தாள். அவன் முகம் குன்றியது.

“இந்த ஆட்டோவிலேயே போய்க்கறேன், சௌம்யா.” என்று நீலா திரும்பி அவளிடம் சொன்னாள்.

“சீக்கிரம்… சீக்கிரம்… எல்லாம் ஒன் கைலயும் வக்கீல் கைலயும் தான் இருக்கு கல்யாணி!”

சௌம்யாவின் முகம் பரிதவித்தது.

“நீ கவலையே படாதே!”

விநா இருவரையும் மாறி மாறிப் பாரத்தான்.

நீலா வந்து உட்கார, ஆட்டோவிற்குள் இடம் விட்டு நகர்ந்தாள் கல்யாணி.

“விநா, வண்டியத் திருப்பிக்கோப்பா! வக்கீல் ராமபத்ரன் வீட்டுக்குப் போகணும்.”

மறுகேள்வி கேட்காமல் விநா ஆட்டோவை வளைத்துத் திருப்பினான்.

“கொஞ்சம் வேகமாப் போகணும் விநா! முகூர்த்த நேரம் முடியறத்துக்குள்ளற வக்கீலைக் கல்யாண மண்டபத்துக்குக் கையோட கூட்டி வரணும்!”

ஏதோ பிரச்சினை என்று விநாவுக்குப் புரிந்தது. வேறொருத்தி கூட உட்கார்ந்திருந்ததால் என்னவென்று கேட்க விரும்பவில்லை.
ஆட்டோவின் வேகம் கூடியபோது, கல்யாணி இன்னும் இன்னும் அதன் வேகம் அதிகரிக்காதா என்று பதைத்தாள்.

இந்த நீலா, இந்த விநா, சற்று முன்பு நெஞ்சில் உயர்ந்திருந்த வெறுப்பின் கரையான் புற்று, எல்லாமே சிறுத்துச் சிதிலமாகி சாமான்யமாகி விட்டனர்.

மித்ரா… மித்ரா…

‘ஒரு வக்கீல் வந்து, ஒரு ‘ஜட்ஜ்மெண்ட் – காப்பி’ பார்த்து, ஒரு தற்காலிக சமரசம் நேர்ந்து, உன் கழுத்தில் மூன்று முடிச்சு, நீ அலையோஅலை என்று அலைந்த மூன்று முடிச்சு விழுந்து விட்டால் மட்டும் போதுமா?

அப்புறம்? ஆரம்பத்திலேயே அபஸ்வரம் வாசிக்கிற இவர்களிடம் நீ எப்படி குப்பை கொட்டுவாய்?’

கல்யாணி அந்தக் கவலையை ஒத்திப் போட்டாள்.

வக்கீலிடம் என்ன பேசுவது? எப்படி அவரை அழைத்து வருவது?
பரபரவென்று யோசனைகள் மொட்டு விரிந்து ஒவ்வொன்றாய் உதிர்ந்தன. அவள் உள்ளேயிருந்து வேறொரு கல்யாணி, ஒரு குதிரை வேகம் கொண்ட பஞ்ச கல்யாணி வெளியேறி வந்தாள்.
நின்றுவிட்ட ஆட்டோவுக்கு ‘செல்ஃப்’ எடுத்து வண்டியோட்டம் சிந்தித்த மாதிரி, ஒரு தன் – இயக்கம் உணர்ந்தாள் கல்யாணி என்ன விடுதலை அது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *