யாருமற்றதொரு குடிசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 7,771 
 

அந்த குடிசையின் ஒற்றை அறையில் பனைஓலைப்பாயில் பிணமாகப் படுத்திருந்த தனது கணவனின் தலையை தனது மடியில் வைத்து ஓலமிட்டு அழ ஆரம்பித்தாள் மரியா. அவளுக்குத் துணையாக மூத்த மகள் செவிலியும், இளையவள் ராசாத்தியும் அழுதுகொண்டிருந்தார்கள். ஐந்து வயது கடைசி மகன் எரிந்துகொண்டிருந்த் ஊதுபத்தியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மாலை மூன்று மணிக்கு பிணம் அடக்கம் செய்ய தயாரானது. இறுதி அழுகை இன்னும் பலம் கூடியிருந்தது.

உடல் அடக்கம் செய்ய எடுத்து சென்றபோது பிணத்தின் முன்பும் பின்பும் சென்ற உறவுக்காரர்களின் கூட்டம், அடக்கம் முடிந்து திரும்பி வந்த போது பாதியாக்க் குறைந்திருந்தது. பத்து பதினைந்து உறவினர்கள் அந்த குடிசையில் தங்க அன்றைய இரவு அழுகையினூடே நகர்ந்தது.

மூத்த மகள் செவிலி வயசுக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. ராசாத்தி இன்றோ நாளையோ என்றிருந்தாள். இத்தனை காலமும் தனது கணவனின் கூலி வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் தத்தளிக்கவே செய்தது. அந்த மனுசனும் போய் சேர்ந்துவிட்டான் இனி இவர்களை வைத்து எப்படி காலம் தள்ளுவது என்ற கவலை மரியாவை அலைக்கழித்தது. இளையவன் முருகேசன் வழக்கம் போல அறுந்துபோன சைக்கிள் டயரை சிறு குச்சியால் தட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த செவிலி படிப்பை நிறுத்திவிட்டு பக்கத்திலிருந்த முந்திரி ஆலையில் தினசரி கூலியாக சேர்ந்து கொண்டாள். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ராசாத்தி திருச்சியில் ஒரு வீட்டில் வேலைக்காரியாக அனுப்பி வைக்கப்பட்டாள்

காலம் அதி வேகமாய் கடந்து கொண்டிருந்தது. செவிலியை யார் தலையிலாவது கட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணம் மரியாவின் மனதில் தினமும் எழுந்து அடங்கியது. சேமிப்பு பணமோ, நகைநட்டு எதுவுமின்றி எந்த ராஜகுமாரனும் வந்து அவளை சீண்டவில்லை.

மரியாவின் குடும்ப நிலவரங்களை கேட்ட பொன்னுவுக்கு சபலம் தட்டியது. தினமும் அவனது வீட்டைத் தாண்டி முந்திரி ஆலைக்குச் செல்லும் செவிலியைப் பார்த்து எச்சில் விழுங்கினான். பொன்னுவுக்கு நாற்பது வயதுக்கு மேலிருக்கும். ஏற்கனவே திருமணம் ஆனவன். அவனது கொடுமை தாங்காமல் அவனது மனைவி தாய் வீட்டுக்குப் போயிருந்தாள். தனியாக காலத்தை தள்ளும் பொன்னுவுக்கு ரெண்டாந்தாரமாக யாரையாவது கட்டிக்கொள்ளும் ஆசை இருந்தது. அவனது முரட்டுக் குணம் பார்த்து யாரும் பெண் தர முன்வரவில்லை.

மார்கழி மாத சாயங்கால நேரத்தில் மரியாவின் குடிசை வீட்டுக்கு வந்து சம்பந்தமில்லாமல் எதைஎதையோ பேசி காலம் கடத்தினான் பொன்னு. செவிலி வீட்டு முற்றத்தில் குழம்புக்காக வாங்கி வந்த சாளை மீனை கழுவிக் கொண்டிருந்தாள்.

“நேரம் இருட்டப்போவுது நீங்க புறப்படுங்க!’’ அம்மியில் அரைத்துக் கொண்டிருந்த மரியா சொன்னபோது பொன்னுவுக்கு தனது எண்ணத்தை எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான். தனது வயதுக்கும் செவிலியின் வயதுக்கும் இருபத்திஐந்து வருட வித்தியாசமிருந்தது. எப்படி கேட்பது என்று தயங்கி இறுதியில் துணிந்து தனது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தினான்.

”நீங்க கிளம்புங்க என் மககிட்ட குடும்ப சூழ்நிலைய பேசி சம்மதிக்க வெச்சுடுறேன்’’ மரியாவின் வார்த்தைகளைக் கேட்டு பொன்னு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தான். செவிலி எனக்குத்தான் என்று அவளை நோக்கி ஒரு பார்வையை வீசி விட்டு நகர்ந்தான்.

“இவனா எனக்கு மாப்பிள்ளை. இவன கட்டுறதுக்குப் பதிலா கல்யாணம் பண்ணாம நான் வீட்டுலேயே இருந்துடுவேன்!” செவிலி தீர்மானமாகச் சொன்னாள் .

“உங்கப்பா பெரிசா எதையும் சம்பாரிச்சு வெச்சுட்டு போகல. மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் அதிகம் தான். ஆனா நல்ல வசதியிருக்கு. இந்த குடிசையில நீ கஷ்டப்படுறதவிட, அவரக் கட்டிகிட்டா நீ நிம்மதியா இருக்கலாம்!” மரியாவின் பேச்சில் செவிலி பதிலெதுவும் பேசாமல் அடங்கிப்போனாள். தனது உணர்வுகளைப் புதைக்க அம்மா குழி தோண்டுவது அவளுக்கு லேசாகப் புரிந்தது. அவளது மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு மறுநாள் காலை பொன்னுவுக்கு விபரம் தெரிவிக்க அன்றிரவு வந்து மகள் கழுத்தில் தாலி கட்டி அழைத்துச் செல்வதாகக் கூறினான்.

முந்திரி ஆலைக்குப்போகத் தயாரான செவிலியைத் தடுத்து நிறுத்தி இன்று இரவு உனக்குக் கல்யாணம் என்றபோது அதிர்ந்தாள் செவிலி. தனது மனவருத்தத்தை வெளிக்காட்டாமல் மூடி மறைத்தாள்.

“அம்மா முந்திரி ஆலையுல பாக்கி சம்பளத்த வாங்கிகிட்டு வந்திடுறேம்மா!” கெஞ்சிக்கேட்ட செவிலியின் வார்த்தைகளுக்கு சம்மதித்தாள் மரியா.

மாலை ஆறு மணிக்கு பொன்னு வந்திருந்தான். மரியாவுக்கு பயம் தொற்றிக்கொண்டது. காலையில் சம்பளம் வாங்கிவிட்டு வந்துவிடுகிறேன் என்று புறப்பட்ட செவிலியை காணாமல் பரபரப்பானாள். சட்டென்று உடை மாற்றிவிட்டு முந்திரி ஆலைக்கு விரைந்தாள்.

“செவிலி சம்பளத்த வாங்கிகிட்டு காலையில பத்து மணிக்கே புறப்பட்டாளே!” செக்யூரிட்டியின் பதிலைக்கேட்டு மேலும் பதட்டமானாள். மனம் புயல் அடங்காத கடலைப்போல கொந்தளித்தது.

நடையில் சுரத்தின்றி வீடு வந்து சேர்ந்தாள். அடங்க மறுத்த கண்ணீர் பொலபொலவென்று வந்திறங்க வாய்விட்டு அழுதாள். தனது நம்பிக்கைகள் மெல்ல மெல்ல நொறுங்குவதைப்போல உணர்ந்தான் பொன்னு. மரியாவின் அழுகைச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டார் ஒன்று கூடி விபரம் கேட்டு கொதித்துப்போனார்கள். மிரண்டு போயிருந்த பொன்னுவை நழுவ விடாமல் கேள்விக்குமேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“ஏலேய் இந்த வயசுல உனக்கு பதினாறு வயசு பொண்ணு கேக்குதா? உனக்கு ஏத்த பொண்ணு செவிலி இல்ல. அவ அம்மா மரியா தான். அவளும் ஒரு விதவை. நீ அவள இல்ல கட்டிக்க ஆசப்படணும். ஏய் மரியா! உனக்கும் புருஷன் இல்ல. கஷ்டப்பட்டு குடும்பம் நடத்துற. பேசாம பொன்னுவ கட்டிக்க!” கூட்டத்திலிருந்த செல்வமணி உரக்கச்சொன்னபோது மரியா பதிலெதுவும் சொல்லாமல் நின்றாள். பொறியில் சிக்கிய எலியைப்போல ஊர்க்காரர்களிடம் சிக்கினான் பொன்னு. இரவு நகர நகர ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. ஊர்க்காரர்களின் தர்ம அடிக்குப் பயந்து மரியாவை கட்டிக்க சம்மதித்தான் பொன்னு.

அந்த அர்த்த ராத்திரியில் நாள், நட்சத்திரம், நல்ல நேரம் எதுவும் பார்க்காமல் மரியா கழுத்தில் தாலி கட்டினான் பொன்னு. தூங்கிக் கொண்டிருந்த தனது இளைய மகனை தோளில் போட்டு, மாற்று உடைகள் திணித்திருந்த துருப்பிடித்த இரும்புப்பெட்டியை தூக்கிக்கொண்டு பொன்னுவோடு பயணமானாள் மரியா. அவர்கள் வாழ்ந்த குடிசை யாருமற்றதொரு நிலையில் அனாதையாக நின்றது.

மூன்று மாதம் ஓடிப்போனது. அடித்த வெயிலுக்கு குடிசையின் கூரை நைந்து போய் சருகாய் மாறியிருந்தது. சற்று இளைப்பாறலாம் என்று பறந்து வரும் பறவைகள் வந்தமர்ந்தால் கூட பொத்தல் விழும் அளவுக்கு சிதிலமாகியிருந்தது. நைந்து போன ஓலைகளுக்கடியில் வைக்கப்பட்டிருந்த கம்புகள் உளுத்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலையில் இருந்தன.

பெரும் மழை பெய்து ஓய்ந்ததில் கூரை, சுவத்துக்குள்ளே தஞ்சமடைந்து குடிசை வெட்டவெளியானது. ஒரு பாழடைந்த வீட்டைப்போல அந்த குடிசையின் மண்சுவர்கள் அனாதையாக நின்றது. மழையின் போக்கு நின்றபாடில்லை. மண் மழை நீரை முழுவதுமாகக் குடித்து கொஞ்சம் கொஞ்மாக சரியத் தொடங்கியது. ஒரு குடிசை இருந்த எந்த சுவடும் இன்றி மண்மேடாய் காட்சியளித்தது அந்த குடிசை.

பொன்னுவின் முரட்டுகுணம் பிடிக்காமல் வாழாவெட்டியாக திரும்பிய மரியாவுக்கு இருந்த ஒரே குடிசையும் மண்ணோடு மண்ணாகிப்போனதில் மரியாவின் மனதில் பாரங்கள் அடர்ந்திருந்தன. அன்றிரவு பள்ளிக்கூட வராந்தாவில் தனது மகனோடு ஒதுங்கினாள். ஒரு ஓலைக்குடிசையாவது கட்டிவிட வேண்டும் என்ற வெறி அவளை துரத்த தூக்கம் வர மறுத்த போதிலும் இரவு வழக்கம்போல் நகர்ந்துகொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *