மேலே போகும் சக்கரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,450 
 

தூர இருந்து பார்க்கும் போதே, வீடு பிரமாண்டமாக இருந்தது. இரண்டு கிரவுண்டு நிலம்; மாடி வீடு. கட்டடமே மூவாயிரம் சதுர அடி இருக்கும். டைல்சும், மார்பிளும் இழைக்கப் பட்டிருந்தன. வழுவழுவென்று பெயின்ட். தேக்கு மரக் கதவுகள், வாசற்படிகள், ஜன்னல்கள், கிரில் எல்லாம் புதுப்புது டிசைன்.
வீட்டைச்சுற்றி தோட்டமிருந்தது. செடி, கொடிகள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. தோட்டக்காரன் ஒருவன், நீண்ட ஹோஸ் பைப்பை கையில் பிடித்து, செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.
போர்டிகோவில் கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது; இளம் சிவப்பு நிறம். சற்று குட்டையாகவும், நீளமாகவும் இருந்தது. “ஏசி – நோ ஹாண்ட் சிக்னல்…’ என்று அதில் எழுதியிருந்தது.
மேலே போகும் சக்கரம்வீடு, கார், தோட்டம் எல்லாமே பிரமாண்டமாக இருக்கிறது. வீட்டினுள் எல்லா நவீன வசதிகளும் கண்டிப்பாக இருக்கும். சமையலுக்கு, வீட்டு வேலைகளை செய்ய எல்லாம் தனித்தனியாக ஆட்கள் இருப்பர்.
இவ்வளவு சவுகரியங்களோடு தன் தங்கை பிரியா, “ஓஹோ’வென்றிருப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை குமார். மகாராணி போல இருக்கிறாள். சுகத்தை அனுபவிப்பதைத் தவிர, வேறு வேலை இல்லை அவளுக்கு.
காம்பவுண்டு கேட்டருகே வந்து நின்றான் குமார். உள்ளே போக தயக்கமாக இருந்தது. அப்படியே நின்று உள்ளே பார்த்தான்.
அவன் தங்கை பிரியா, இடுப்பில் ஒரு, “கொழு, கொழு’ குழந்தையுடன் வாசற்கதவு வரை வந்து நின்றாள்.
தோற்றத்தில் பணக்காரக் களை தெரிந்தது.
காதில், மூக்கில், கழுத்தில் எல்லாம் டாலடிக்கும் தங்க நகைகள். வண்ணங்கள் வாரியிறைக்கும் வைரங்கள். கண்ணிமைக்காமல் தங்கை பிரியாவைப் பார்த்தான் குமார்.
அவளும், அவனை பார்த்து விட்டாள்.
“அண்ணா… அண்ணா…’ என்று அவனைப் பார்த்ததும் அழைத்தபடி ஓடி வருவாளென்று எதிர்பார்க்காவிட்டாலும், தன்னைப் பார்த்ததும் ஒரு புன்னகையாவது அவள் முகத்தில் மலரும் என்று எதிர்பார்த்தான் குமார்.
அவள் முகம் இறுகிப் போயிருந்தது.
ஓரிரு நிமிடங்கள் அவனை பார்த்து விட்டு, “சடா’ரென்று திரும்பி வீட்டுக்குள் போய் விட்டாள் பிரியா.
குமாரின் முகத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது அவள் செய்கை.
இதையே தாங்க முடியவில்லை.
கதவை படாரென்று அடித்து சார்த்திக் கொண்டு போயிருந்தால்?
நெஞ்சை பிடித்துக் கொண்டான் குமார்.
சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். மேலே இருக்கும் சக்கரம் கீழே வரும்; கீழே வரும் சக்கரம் மேலே போகும் என்பது எவ்வளவு சரி.
இப்படித் தானே அன்று, குமாரும் நடந்து கொண்டான்.
குமாரின் மூத்த தங்கை பிரியா. அப்பா, அம்மா மறைந்த பிறகு, அவன்தான் அவளுக்கு தாயும், தந்தையுமாக இருந்தான்.
அவளை வளர்க்க, படிக்க வைக்க, நல்ல வேளையாக குமாருக்கு கல்யாணமாகி விட்டிருந்தது.
அவன் மனைவி கல்யாணி, அவனைப் போல் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள் தான்; ஆனால், மிகவும் நல்லவள். தன் கணவனுக்கு தங்கை பிரியாவிடம் கொள்ளைப் பாசம், பிரியம் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தாள் கல்யாணி. குமாரைவிட அதிகமாக பிரியாவிடம் பாசம், பிரியம், அன்பெல்லாம் காட்டி வளர்த்தாள். ஓஹோ என்று பிரியாவை வளர்க்க முடியவில்லை. அவள் கேட்டதை, ஆசைப்பட்டதை எல்லாம் அவளால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.
காரணம், குமாரின் சம்பாத்தியம் தான்.
அவனுக்கு ஒரு சாதா கம்பெனியில் தான் வேலை. காலையில் போனால், இருட்டத் தொடங்குகிற போது தான், வீட்டிற்கு வருவான். அப்படி ஒரு உழைப்பை, கம்பெனிக்காக உழைத்துக் கொண்டிருந்தான். ஆனாலும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை.
இதைவிட அதிக ஊதியம் கிடைக்கும் வேலை, அவ்வூரில் கிடைக்க வாய்ப்பே இல்லை.
வருகிற சம்பாத்தியம் வாய்க்கும், வயிற்றுக்கும் எட்டாமலே இருந்தது.
கல்யாணி அவசியமான செலவுகளையே சுருக்கி செய்ததாலேயே, கஷ்டம் பெரிய கஷ்டமாகாமல் இருந்தது.
அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களை கரையேற்றும் வேலை இப்போதில்லை என்றாலும், அதை எப்படி செய்து முடிக்கப் போகிறோமோ என்ற கவலை, பயங்கரமாக இருந்தது குமாருக்கும், கல்யாணிக்கும்.
இப்போது கல்யாணத்துக்கு தயாராகி வீட்டிலிருந்த பிரியாவின் கல்யாண கவலையும், அவர்களை பற்றிக் கொண்டது. பிரியாவுக்கு இன்னும் ஒரு தங்கை இருக்கிறாள். பிரியாவுக்கு கல்யாணம் செய்து வைத்த ஓரிரு வருடங்களிலேயே, சின்னத் தங்கை சித்ராவின் கல்யாணத்தையும் செய்தாக வேண்டும்.
என்னதான் சிக்கனமாகவும், குறைத்தும் செய்தாலும், பிரியாவின் கல்யாணத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டும். ஐம்பது ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை இன்னும்.
“வரன் தேடிக் கொண்டே இருப்போம்… என்கிட்ட அஞ்சு பவுன் இருக்கு… அப்பாவும் பிரியா கல்யாணத்தின்போ அங்கே இங்கே புரட்டி ஐந்தாயிரம் ரூபாயாவது கொடுப்பார்… எப்படியாவது பிரியாவோட கல்யாணத்தை நடத்திடலாம்!’ என்றாள் கல்யாணி.
“கம்பெனியில் பத்தாயிரம் கடன் வாங்கலாம் கல்யாணி… வீட்டுச் செலவை குறைக்கலாம்… துணி மணி வாங்குவதை நிறுத்தி விடலாம்… ஒரு பேன் சுத்தினால் போதும்… சாயங்காலம் டீதான்… ராத்திரி மோர் சாதம். வெளியூர் போவதை நிறுத்தலாம். இரண்டாம் தரம், மூன்றாவது தாமான பொருட்களை வாங்கலாம்…
“எந்தெந்த காய்கறி எப்பப்போ கிடைக்கிறதோ, அதையே வாங்குவோம்… நாலு நாளைக்கு ஒருமுறை காய்கறி, கீரை தான் தினமும்… வீட்டின் பின்னால் முருங்கை மரம் இருக்கிறது. அதன் கீரையை சமையலுக்கு உபயோகப் படுத்தலாம். ராத்திரி சாதம் வடிக்க வேண்டாம்… காலையிலேயே சேர்த்து சாதம் வடித்து விடு. நான் வேலைக்கு நடந்தே போகிறேன்…’ என்றான் குமார்.
“பண்ணையார் வீட்டில் சமைக்க ஆள் தேவையாம்… நான் சமைக்க போகட்டுமா?’ என்றாள் கல்யாணி.
“உழைத்து சம்பாதிப்பதில் தவறே இல்லை கல்யாணி… அதுவும் பிரியாவின் கல்யாணமென்கிற நல்ல காரியத்துக்கு, நாலு காசு சேர்க்க பாடுபடுவதில் தப்பே இல்லை. நானும், இரவு நேரத்தில், ஏதாவது கடைகளுக்குப் போய், கணக்கு எழுதுகிற வேலை கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்!’ என்றான் குமார்.
குமாரும், கல்யாணியும் உழைப்பது அதிகமானது. வீட்டில் சிக்கனம் கடைப்பிடிப்பதில் கஷ்டம் அதிகமாயிற்று. ஏற்கனவே ஆறு ஜீவன்கள் அரை வயிறு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தன; இப்போது கால் வயிராகிவிட்டது.
ஒரு நாள் பசியாலும், அதிக உழைப்பாலும் வேலைக்குச் சென்றுவிட்டு வரும் போது, மயங்கி விழுந்து விட்டான் குமார். நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியதாயிற்று.
கல்யாணியும் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரும், தனக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில், தங்களை தாங்களே அழித்துக் கொள்வதை பார்த்த பிரியா, ஒருநாள் வீட்டிலிருந்து மறைந்துப் போனாள்.
ஓட்டல் ஒன்றில் சர்வராக இருக்கும் ராஜதுரை என்பவனை, தான் நேசிப்பதாகவும், அவனையே மணந்து கொள்ள வீட்டை விட்டு போவதாகவும் கடிதம் எழுதி வைத்து விட்டுப் போய் விட்டாள் பிரியா.
அவள் கல்யாணத்துக்காக, தாங்கள் உயிரை கொடுத்து பாடுபட்டுக் கொண்டிருக்க, தங்களுடைய எண்ணத்தை, ஆசையை, முயற்சியை சிறிதும் மதிக்காமல், உற்றார், உறவினர் ஏற்க முடியாத ஒருவனை கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறேன் என்று பிரியா, வீட்டைவிட்டு சென்று விட்டது, குமாரையும், கல்யாணியையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வெளியில் தலைகாட்ட முடியாதபடி செய்து விட்டாளே பிரியா.
தனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அண்ணனுக்கு இரண்டு பெண்கள் இருக்கின்றனரே, அவர்கள் கல்யாணமெல்லாம் சுமுகமாக நடக்க முடியாத படி குடும்பத்துக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி விட்டாளே பிரியா.
மறுநாள் அந்த ராஜதுரையை ஏதோ ஒரு கோவிலில் வைத்து, கல்யாணம் செய்து கொண்டு மாலையும் கழுத்துமாக வந்த பிரியாவை, வீட்டினுள் அனுமதிக்கவில்லை குமார்.
“நீயும் வேண்டாம், உன் உறவும் வேண்டாம், போ…’ என்று சொல்லி வாசற் கதவை அறைந்து மூடிவிட்டான் குமார். கல்யாணியும் மனக்கஷ்டம் தாங்க முடியாமல் கத்தினாள்.
“அக்கா… என் வாழ்க்கையைப் பற்றி நீ கொஞ்சம் கூட நெனைச்சு பார்க்கலியே, போடி!’ என்று இரைந்தாள் சித்ராவும்.
வருடம் இரண்டு ஓடிவிட்டது.
பிரியா உள்ளூரில் தான் இருக்கிறாளா என்று கூட விசாரிக்கவில்லை குமார். அவளைப் பற்றி பேசும் போதெல்லாம், “அவளை தலைமுழுகி விட்டேன்…’ என்று சொல்லிக் கொண்டிருந்தான் குமார்.
நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறதென்று, குமார் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த கம்பெனியின் கதவை, ஒருநாள் இழுத்து மூடிவிட்டனர்.
சொற்ப வருவாயும் நின்று போய்விட, அன்றாட சாப்பாட்டுக்கே குமாரும், மற்றவர்களும் திண்டாடும் நிலை வந்து விட்டது. வேறு வேலைக்கு முயற்சி செய்தான் குமார். வேலை கிடைப்பதாக இல்லை.
ஓட்டலில் சர்வர் வேலை கிடைத்தால் கூட போதும் என்று அவன் சொன்ன போது, “உன் தங்கையின் கணவர் ராஜதுரை இன்று ஒரு பெரிய ஓட்டலின் சொந்தக்காரர். அவரிடமே நிறைய வேலை இருக்குமே!’ என்றனர்.
அந்த ஓட்டலின் முன் போய் நின்று பார்த்தான் குமார். ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நிகராக இருந்தது அது. இரண்டு வருடங்களில் ராஜதுரைக்கு எப்படி பணம் காசு செழித்தது, இவ்வளவு பெரிய ஓட்டலுக்கு சொந்தக்காரராகி விட்டான்?
ஓட்டலே இவ்வளவு பெரிதென்றால், அவன் வீடு எவ்வளவு பெரிதாக இருக்கும்? பிரியா எவ்வளவு உயர்ந்திருப்பாள்? எவ்வளவு வசதிகள் பெற்றிருப்பாள்?
அவள் வீட்டை விசாரித்துக் கொண்டு போனான் குமார்.
பிரியா முகத்தை திருப்பிக் கொண்டு வீட்டினுள் சென்றதும், மனமுடைந்து போன குமார், அங்கிருந்து நகரத் தொடங்கிய போது,
“”அண்ணா… அண்ணா…” என்று பிரியா, அன்பாக அழைப்பது கேட்டது.
திரும்பி பார்த்தான் குமார்.
பிரியாதான் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கூடவே ராஜதுரையும் வந்து கொண்டிருந்தான்.
“”என்னை நீ வெறுத்து ஒதுக்கியது போல, உன்னைக் கண்டதும் நான் முகத்தை திருப்பிக் கொண்டு வீட்டினுள் செல்லவில்லை அண்ணா… இவர், என் கணவர், வீட்டினுள் இருந்தார்… அவரையும் வெளியே அழைத்து வந்து, உன்னை என் வீட்டிற்குள் கூட்டிக் கொண்டு போகலாம் என்று தான் வீட்டினுள் சென்றேன்,” என்றாள் பிரியா.
அகமும், முகமும் மலர, “”வாங்கண்ணா வீட்டுக்குள்ளே!” என்றாள்.
ராஜதுரையும், “”இது உங்க வீடுதான் சார்… உள்ளே வாங்க… வாங்க…” என்றான்.
அவர்களுடைய அன்பிலும், பரிவான பாசத்திலும் இவர்களிடம் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டோம் என்றெண்ணி, வெட்கி தலைகுனிந்தான் குமார்.
“”நீங்கள், உங்களுடன் எங்களை சேர்த்துக் கொள்ளாமல் விரட்டியது, எங்கள் மனதில் ஒரு வைராக்கியத்தை உருவாக்கியது அண்ணா… உயர்வதற்கும், நாங்க நன்றாக வாழ்வதற்கும், ஜாதி ஒரு தடையல்ல என்பதை காட்ட வேண்டுமென்ற உறுதி உண்டாயிற்று எங்களுக்கு, வாழ்க்கைக்கு மனம் தான் முக்கியம்; சமூக ஏற்றத் தாழ்வுகள் முக்கியமல்ல என்பதை நிரூபித்துக் காட்ட, நாங்கள் பெருமுயற்சி செய்து, முன்னேறி விட்டோம்.
“”உங்களை பழிவாங்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல… எங்கள் மனதில் ஒரு உறுதி ஏற்படச் செய்த உங்களிடம், நன்றி காட்டவேண்டும்; எங்களால் முடிந்ததை எல்லாம் செய்ய வேண்டுமென்பது தான், எங்கள் எண்ணம் அண்ணா… அது இன்று ஈடேறிவிட்டது அண்ணா… மன்னி, தங்கை, குழந்தைகளை எல்லாம் அழைத்து வாருங்கள்… இங்கேயே இருக்கலாம்!” என்றாள் பிரியா.
“”எங்கள் ஓட்டலின் புதுக் கிளை ஒன்றை திறக்கப் போகிறோம்… அதை நீங்கள் தான் நடத்த வேண்டும்; நிர்வகிக்க வேண்டும். சில ஆண்டுகளில் அதை நீங்கள் உங்கள் உடைமையாக்கிக் கொள்ள வேண்டும்,” என்றான் ராஜதுரை.
அவர்கள் எதிரே நிற்கவே கூசினான் குமார்.

– செப்டம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *