பொன்னம்பலம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 3,030 
 

ஒரு பிரளயமே நடந்து முடிந்து மைதிலி வீட்டை விட்டு வெளியேறி அலுவகத்திற்குச் சென்றாள்.

அமைதியாக கூடத்தில் அமர்ந்து நாளிதழ் பார்த்துக்கொண்டிருந்த பொன்னம்பலத்திடம் வந்தாள் செண்பகம்.

“என்னங்க…?” முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அழைத்தாள்.

“என்ன..?” நாளிதழை இறக்கி ஏறிட்டார்.

“இன்னைக்குத்தானே ஏலம்.?”

‘என்ன ஏலம்?’ – புரியாமல் மனைவியைப் பார்த்தார்.

“நாம போட்டிருக்கிற ரெண்டு லட்ச ரூபாய் ஏலச்சீட்டு..”

“ஆமாம்!”

“அது இன்னைக்குப் பணமா என் கைக்கு வரனும்…”

“ஏன்..???…”

“நம்ம மைதிலிக்கு உடனே திருமணம் முடிச்சாகனும்..!”

“என்ன சொல்றே..? “திடுக்கிட்டார். துணுக்குற்று மனைவியை ஏறிட்டார்.

“நம்ம பொண்ணு மைதிலிக்கு உடனே திருமணத்தை முடிச்சாகனும். சொல்றேன்.” சூடாகி அழுத்தம் திருத்தமாகக் கொஞ்சம் சத்தமாகச் சொன்னாள்.

‘இப்படி திடுதிப்புன்னு முடிவெடுத்து முடிக்கிற அளவுக்கு என்னாச்சு மைதிலிக்கு..?’ – நினைத்த பொன்னம்பலம்..

“மொதல்ல கோபத்தைக் குறை. இங்க உட்கார்.” அவளை சாந்தப்படுத்தும் விதமாகச் சொன்னார்.

“உட்காரல.! இப்ப நடந்த ரகளை எல்லாம் கேட்டுக்கிட்டுத்தானே இருந்தீங்க..? ” என்று முறைத்த செண்பகம்…

“நாம சீக்கிரம் முடிக்கலைன்னா…நம்ம மானம் மரியாதை எல்லாம் காத்துல பறந்துடும்!”

“புரியல..?!!…” குழப்பமாகப் பார்த்தார்.

“உங்களுக்கு என்னைக்கு எதுதான் புரிஞ்சுது..?” என்று சிடுசிடுத்த செண்பகம்….

“அவ எவனையோ காதலிக்கிறாளாம்..?” வெறுப்பாகச் சொல்லி விசயத்தை உடைத்தாள்.

“காதலிக்கட்டுமே..!! ” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கி மனைவியை ஆழமாகப் பார்த்தார்.

“ஆள் வேத்து சாதி !”

“……”

“நம்ம தகுதி, தராதரத்துக்கு ஒத்து வராது. !”

நம் சம்பாத்தியத்திலும். பெண் சம்பாத்தியத்திலும் வாழ்க்கை வண்டி சீராக ஓடினாலும்… பழையது மிஞ்சினால் நினைக்கும் பணக்கார, நடுத்தர வர்க்கம் நாம். இதிலென்ன தகுதி, தராதரமிருக்கிறது..? – நினைத்த பொன்னம்பலம் மனைவியைப் பார்த்தார்.

“மைதிலி அவனைக் கட்டிக்கக்கூடாது. உடனே அவளுக்கு வேற இடத்துல முடிக்கனும். அதுக்குத்தான் அந்தப் பணம்..! ”

பொன்னம்பலத்திற்குப் புரிந்து விட்டது.

“சரி. இப்படி சட்டுபுட்டுன்னு ஏற்பாடு பண்ணறதுக்கு மாப்பிள்ளை..? “கேட்டார்.

“என் தம்பி இருக்கான் !”

“அவனா..??!!…”கொஞ்சமாக அதிர்ந்து அலறினார்.

“ஏன்..? அவனுக்கென்ன…? “முறைத்தாள்.

“நீ நல்ல சுயநினைவோடதான் பேசுறீயா..?”

“அப்படித்தான் பேசுறேன் !”

“அவன் பொறுக்கி நாய். இல்லாத கெட்டப்பழக்கமே கிடையாது ! “வெடித்தார்.

“நாக்கை அடக்கிப் பேசுங்க…”திருப்பி வெடித்த செண்பகம்…

“கலியாணம் முடிச்சா சரியாகிப் போவான் ! “சொன்னாள்.

“எனக்கென்னமோ இது சரியாப்படல..”சொன்னார்.

“உங்களுக்குச் சரியாப்படலை என்கிறது எனக்குத் தெரியும். உங்களுக்கு அவனை ஆரம்பத்திலிருந்து பிடிக்காது. அதனால அவன் எது செய்தாலும் உங்களுக்குத் தப்பாப் படுது. வயசுப் பிள்ளை அப்படி இப்படித்தான் இருப்பான். அதெல்லாம் பெரிய குறை கிடையாது. நான் என் தம்பி மாறனுக்கு மைதிலியை முடிச்சே ஆகனும்… “வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொன்னாள்.

“நீ இப்படி நினைக்கலாம். கட்டிக்கப்போறவள் சம்மதிக்கணுமே..?”

“அதை நான் பார்த்துக்கிறேன். இப்போ எனக்குப் பணம் வேணும்.”

பார்த்தார்.

“என்ன பார்க்குறீங்க..? “\

“இந்த பணத்துல எப்படி திருமணத்தை நடத்த முடியும்..?”

“அதெல்லாம் எனக்குத் தெரியும். !”

“எப்படி..?”

“அரைப்பவுனுல தாலி. இரண்டு பேருக்குப் புதுத் துணி.ரெண்டு மாலை. கோயில்ல கலியாணம்…!”

“ஓ…. அப்படிப் போவுதா கதை..?! இதை உன் தம்பிக்குத் தெரிவிச்சுட்டீயா..?”

“அவன் எந்த நிமிசமும் தயார். !”

“மைதிலிக்குப் பிடிக்காது…?”

“அவ கிடக்குறா அடங்காப்பிடாரி. பெத்தவளை மதிக்கத் தெரியாதவள்.!”

“செண்பகம்…!”

“இதோ பாருங்க. நீங்க எதுவும் சொல்லாத தேவை இல்லே. கலியாணம் முடிக்க வேண்டியது என் பொறுப்பு. பணம் கொண்டு வர்றது உங்க பொறுப்பு ! “காட்டமாகச் சொல்லிவிட்டு வெடுக்கென்று நடந்து உள்ளே சென்று மறைந்து விட்டாள்.

மனைவியின் ஏட்டிக்குப் போட்டி பேச்சு, எடுத்தேன் கவிழ்த்தேன் செயல் பொன்னம்பலத்திற்கு மட்டுமில்லாமல் மைதிலிக்கு பிடிக்காது. இதனாலேயே தாய்க்கும் மகளுக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். இன்றைக்கு முற்றி வினை !!

காலையில் இவர் நாளிதழ் எடுத்து விரிக்கும் போதே ஆரம்பித்து விட்டது ரகளை !

மைதிலி அலுவலகத்திற்குக் கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் நிலையில்… அடுப்படியிலிருந்து அவள் முன் வந்து நின்ற செண்பகம்….

“நீ இன்னையிலேர்ந்து வேலைக்குப் போக வேணாம் .! “அதட்டலாய்ச் சொன்னாள்.

“ஏன்…? “மைதிலி திடுக்கிட்டாள்.

“உண்மை தெரியனுமா..?”

“ஆமாம் !”

“நீ அங்கே எவனையோ காதலிக்கிறீயாம்..?”

“ஆமாம் !”

“அவன் நம்ம சாதி இல்லே. அவனை எனக்குப் பிடிக்கல.”

“நான் அந்த ரவீந்தரைத்தான் கட்டிப்பேன்.”

“அவன்தான் உனக்கு உசத்தின்னா… நான் செத்துடுவேன். !”

“எனக்கு ஆட்சேபனை இல்லே !”

“மைதிலிஈஈ…..”

“இதோ பாரும்மா. இந்த அதட்டல், உருட்டல், மிரட்டல் வேலை எல்லாம் என்கிட்டே வேணாம். எனக்கு சாதி , மதம் தேவை இல்லே. அவனை எனக்குப் பிடிச்சிருக்கு. கலியாணம் கட்டிப்பேன். இது நிச்சயம். !”

“என்னை மீறி நடப்பியா..?”

“நடப்பேன் !”

“மைதிலீஈஈ…”

“ச்ச்சூ..! வீணா சத்தம் போட்டு ஊரைக் கூட்டாதே. உன்னால என்ன செய்ய முடியுமே செய்ஞ்சிக்கோ. தடுக்க முடிஞ்சா தடுத்துக்கோ. நீ செத்துத் தொலையிறதுன்னாலும் தொலை ! “அதிரடியாய் சொல்லி விட்டு விறுவிறுவென்று பையை மாட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டாள்.

பொன்னம்பலம் நடந்தார்.

தாய்க்கும் மகளுக்கும் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இது இரண்டாம் பேருக்குத் தெரியாமல் ரொம்ப சுலபமாக முடிக்க வேண்டிய காரியம்.

மைதிலி காதல் தாய்க்குத் தெரிந்தாலும், தாயே மகளுக்குச் சொல்லி இருந்தாலும்…

“அப்படியா..! இது சரி வராது மைதிலி. “என்று அன்பாய் அனுசரணையாய் கூறி நல்லது கெட்டதுகளை பொறுமையாக எடுத்துக் கூறினால் மைதிலி மனசு மாறுவாள்.

அப்படி மாறாவிட்டால்.. காலத்தை அனுசரித்து , ‘ உன்னிஷ்டம் ! ‘ என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டால் தாய்க்கு மரியாதை கொடுப்பாள். அதை விடுத்து தன் சொல்தான் கேட்க வேண்டும், தன் விருப்பப்படிதான் நடக்க வேண்டுமென்றால் எந்த பெண்தான் ஒத்துக்கொள்வாள்..?

ஆரம்பம் முதலே பிடிக்காத தாயும் மகளும் இப்போது எதிரும் புதிருமாகி விட்டனர்.

செண்பகத்திற்குக் கூட மைதிலியைத் தன் தம்பிக்கு முடித்து வைக்கும் எண்ணம் மனசார இல்லை. அடாவடியாய், வீட்டிற்கு அடங்காத பிள்ளையாய் நடக்கும் அவனை இவளுக்கும் பிடிக்காது. மகளின் எதிர்ப்பு அவளை இப்படி யோசிக்க வைக்கிறது. கழுதை கஷ்டப்படட்டுமே என்று கட்டாயத் தாலி கட்ட வைக்க நினைக்கிறது. அந்த கஷ்டத்தில் தன் பலத்தை மகளுக்கு உணர வைக்கத் துடிக்கிறது. ஒரு தாய்க்கு இந்த மனநிலை கூடாது. ஆனால் வருகிறது, வந்திருக்கிறது. !!

இப்படியெல்லாம் யோசித்து பொன்னம்பலம் மெதுவாக நடந்தார்.

மனைவியைத் தடுக்கலாம். தடுத்தாலும் கேட்கமாட்டாள். ஆரம்பம் முதலே அடங்காப்பிடாரி. கொண்டதே கொள்கையாக நினைப்பவள். நினைத்ததைச் சாதிக்க முயல்பவள், முடிப்பவள்.

“டேய் ! அப்பனும், மகளும் ஒன்னு. ரெண்டும் அசந்து இருக்கிற நேரம் பார்த்து அவளைத் தூக்குடா. கோவில்ல வைச்சு தாலி காட்டுடா ! “- என்று ஆத்திரத்தில் அறிவிழந்து தம்பியைத் தூண்டுவாள். நினைத்தைச் சாதிக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வாள்.

அவன் செய்வான். அவன் எதற்கும் துணிந்த போக்கிரி. மேலும் பெண்ணைப் பெற்ற அம்மா – தன் கூடப் பிறந்த அக்காளே பக்க பலமாக இருக்கும்போது… கோழைக்குக் கூட துணிச்சல் வராதா என்ன..? இந்த முரடன் பொறுக்கிக்குக் கேட்கவே வேண்டாம். இந்த பலத்தாலேயே போலீஸ்,கீலீஸெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு வருவார்கள்.

செண்பகத்திற்கு மைதிலி பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாது. அதுவுமில்லாமல் ஒற்றையாக இருந்திருக்கக் கூடாது. அப்பன், ஆத்தாள், மகளென்று மூன்று துருவங்களை ஆண்டவன் என்னமாய் முடிச்சி போட்டு வேடிக்கைப் பார்க்கிறான்..!

மைதிலியைத் தடுக்கலாம்.

“அம்மா சொல்றது சரிதானேம்மா. நீ காதலிக்கிற பையன் யாரோ, எவரோ..? உனக்கு அவன் நல்லவனாய்த் தெரியலாம். உள்ளுக்குள் கெட்டவனாய் இருந்தால் என்னம்மா பண்றது..? பின்னால உன் வாழ்க்கைதானே பாழ்..? அம்மா தம்பி தாய் மாமனைப் பிடிக்கலைன்னா… வேற ஆளை முடிக்கலாம். “சொல்லலாம்….ஆனால் மனைவிக்குப் பரிந்து கொண்டு பேசும் அற்ப கணவனாய், கையாலாகாத அப்பனாய் நினைப்பாள். முதுகெலும்பில்லாத புழுவாய் நினைத்துத் துச்சமாகப் பார்ப்பாள்.

மைதிலிக்கு உதவலாம். ஓடிப்போ ! சொல்லலாம். அவன் எப்படிப்பட்டவன்.? ஆழம் தெரியாமல் பெண்ணிற்கு எப்படி உதவுவது..? – யோசித்தவாறே… ‘ ஆதிரா நிதியகம் ‘ கட்டிடத்திற்குள் நுழைந்தார்.

ஏல அறைக்கு வெளியே பலர் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள்.

இவரும் கடைசியாக இருக்கும் காலி நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில்…

“ஐயா ! வணக்கம் ! “அழைத்து பக்கத்து நாற்காலிக்காரர் கை எடுத்துக் கும்பிட்டார்.

இவரும் பதிலுக்கு வணங்கி மரியாதைக்கு மரியாதை செய்தார்.

“ஏலத்துக்குத்தானே வந்திருக்கீங்க..?”

“ஆமா..”

“ஒரு உதவி…”

“சொல்லுங்க..?”

“இந்த சீட்டை எனக்கு விட்டுக்கொடுக்கனும்..”

“……”

“ஒரு அவசர காரியம். நான் முன்னாடியே வந்து எல்லாரிடமும் கேட்டேன். ஒத்துக்கிட்டாங்க. நீங்கதான் பாக்கி. நீங்க ஒத்துக்கிட்டா கோடி புண்ணியம்.”

“வந்து… வந்து….”

“ஒன்னும் யோசிக்காதீங்க. என் பையன் ரவீந்தர் தன்னோட வேலை பார்க்கிற மைதிலி என்கிற பொண்ணைக் காதலிக்கிறானாம். அது காலையில வீட்டுக்கு வந்து… ‘என் அப்பா அம்மாவுக்கு விசயம் தெரிஞ்சி போச்சு. நாம சீக்கிரம் கலியாணம் முடிக்கனும். நாளைக்கே முடியனும்!’ ன்னு கண்டிப்பா சொல்லிச்சு. என் பையன் ரொம்ப நல்லவன். அதும் பார்க்க ரொம்ப யோக்கியமான பொண்ணாய்த் தெரியுது. காதலிச்சுட்டுப் போறவங்களை நாம ஏன் கெடுக்கனும்..? எந்த நல்லது கெட்டதுக்கும் அவுங்கதானே பொறுப்பு..? அதான் நான் சரின்னுட்டேன்.

நீங்க உதவினா… இந்த ஏலச் சீட்டு பணத்திலேயே அவனுங்க விருப்பப் படி கலியாணத்தை முடிச்சுடுவேன். மத்தபடி கையில மடியில ஏதும் இல்லே. பையனிடமும் பெரிசா சேமிப்பு இல்லை. தன் ரெண்டு தங்கைகளைக் கட்டிக் கொடுத்து வெறுமையா நிக்கிறான். கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா. மனசு வையுங்கைய்யா..” பரிதாபமாகக் கெஞ்சினார்.

சிறிது நேரம் மெளனமாக இருந்த பொன்னம்பலம்…

“சரி!” சொல்லி வெளியே நடந்தார்.

வானம் கருத்த மேகங்களாய் இடி மின்னலுடன் ஒரு பெருத்த மழைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. பொன்னம்பலத்திற்கு அது வீட்டில் நாளை நடைபெறும் காட்சிகளை நினைவூட்டியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *