பாட்டி பெயர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 8,210 
 

முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் கொள்ளை மகிழ்ச்சி கோபுவுக்கு. ஆண்பிள்ளையானால், பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு வயதானகாலத்தில் பெற்றோர்களைத் தனியே தவிக்க விடுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு.

எல்லாரும் தன்னைப்போல் இருக்க முடியுமா? எவ்வளவோ வற்புறுத்தியும், அப்பா தான் வாழ்ந்த வீட்டைவிட்டு இவனுடன் வர மறுத்துவிட்டார். அதனால் என்ன? அவன் மனைவி தன் அம்மாவை மட்டுமின்றி, பாட்டியையும் அவர்களுடனேயே தங்க வைத்திருந்தாள்.

பெண்களுக்குத்தான் இப்படி அரவணைத்துப்போகும் குணம் என்று யோசித்த கோபு மனைவி கர்ப்பமாக இருந்தபோதே அவள் வயிற்றுக்கருவிற்குப் பெயரும் நிச்சயித்துவிட்டான்.

“குழந்தைக்கு என்ன பேருடா வைக்கப்போறே?” அப்பா கேட்டார்.

”பாட்டி பேருதான்!”

அப்பாவுக்கு லேசான அதிர்ச்சி. “அந்தப் பேரையா வெக்கப்போறே!”

“போங்கப்பா. ஒங்களுக்கு எப்பவுமே பாட்டியைக் கண்டா ஆகாது”.

“அதுக்குச் சொல்லலேடா,” என்று எதுவோ சொல்ல ஆரம்பித்த அப்பாவை மேற்கொண்டு பேச விடவில்லை கோபு. “பாட்டி இத்தனை வயசாகியும் அவங்கம்மாவை தன்கூட வெச்சுப் பாத்துக்கறாங்க. ஏன், அம்மாகூடத்தான்! என் பொண்ணும் நாளைக்கு அப்படி இருப்பா!”

மகள் வளர, வளர, அவளுக்கு எந்த குறையுமில்லாது பார்த்துக்கொண்டான் கோபு.

மேல்படிப்புக்கு வெளிநாட்டுக் கல்லூரியில் உபகாரச்சம்பளத்துடன் அவளுக்கு இடம் கிடைத்தபோது அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. ஒரே மகள் திரும்பி வந்ததும், அவள் நிழலில் எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தை வசதியாகக் கழிக்கலாம் என்று அவன் கனவு விரிந்தது.

“ஒன் பொண்ணு எப்போ திரும்பி வராளாம்?”

சோகமாக கணினியை முதியவர்பக்கம் திருப்பினான் கோபு. “அவ அனுப்பி இருக்கிற ஈ-மெயில். படிச்சுப்பாருங்கப்பா!”

`எனக்கு இங்கேயே நல்ல வேலை கிடைத்துவிட்டது. இங்கு ரொம்ப குளிர். அம்மாவாலும் உன்னாலும் தாங்க முடியாது. அதனால என்ன! எப்போ வேணுமானாலும் ஸ்கைப்பில பாத்து பேசிட்டாப்போச்சு!

இங்க என் பேர் ஒருத்தர் வாயிலேயும் நுழையறதில்லே. அதனால சுருக்கி வெச்சுக்கிட்டேன். லவ் யூ.

ஸாம்’.

படித்து முடித்த அப்பாவின் முகத்தில் சிறு புன்னகை. மகனைப் பார்த்துப் பரிதாபப்படாமலும் இருக்க முடியவில்லை.

“ஏம்பா? ரெண்டு மூணு குழந்தை இருந்தா, யாராவது ஒருத்தரோட இருந்திருக்கலாம், இல்லியா? இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சு. நானும் அவளும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்துக்கிட்டு..!” பெருமூச்செறிந்தான் கோபு.”

“அதுக்குத்தான் நான் மோதல்லேயே கேட்டேன், எதுக்கு பாட்டி பேருன்னு”.

அவனுக்குப் புரியவில்லை.

“பாட்டி பேரு என்ன, சொல்லு!” அவனை மடக்கிவிட்ட பெருமிதத்துடன் அப்பா கேட்டார்.

“சம்பூர்ணம். தெரியாதமாதிரி கேக்கறீங்களே!”

“ஒங்க பாட்டி அவங்க அப்பா அம்மாவுக்கு பதிமூணாவது குழந்தை. அவங்களுக்கு முன்னாடி பிறந்த ஏழெட்டு சின்ன வயசிலேயே செத்துப்போச்சு. குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்கவும் அவங்களுக்குத் தோணலே. இனிமே குழந்தையே வேண்டாம்னு சம்பூர்ணம்னு பேரு வெச்சாங்க. அதாவது, முழுமை அடைஞ்சிடுச்சு அப்படின்னு. பாட்டிதான் கடைசி!”

சம்பூர்ணம் என்ற பெயர் வைத்தால், அதற்குப்பின் குழந்தைகளே பிறக்காதா?

முதல் குழந்தைக்கே அப்பெயரை வைத்து, வேறு குழந்தைகள் பிறக்கவே வழியில்லாது செய்துவிட்டது தன் தவறோ?

`நீங்க ஏம்பா மொதல்லேயே என்னை எச்சரிக்கலே?’ என்று அப்பாவைக் கேட்க நினைத்து, பின் வாயை மூடிக்கொண்டான்.

`நான் சொல்லவந்ததை நீ எங்கே முழுசா கேட்டே?’ன்னு அவன்மேலேயே பழியைத் திருப்புவார்!

“ஸாம் என்கிற பேருதான் நாகரீகமா இருக்கு. இல்லேப்பா?” என்றான் கோபு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *