பலூன்கார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 8,773 
 

அன்று மாலை கடற்கரையில் உப்பு காற்றில், ஊதா,சிவப்பு,மஞ்சள் இன்னும் பல நிறங்களில் ஆடிய பலூன்கள். அதை பார்க்கும் பொழுதே நினைத்தேன் உடன் இருக்கும் என் அக்கா மகனின் கவனம் அங்கு தான் செல்லும் என்று.

“மாமா, பலூன்!”,என்றான் மழலை.

வாங்கி தர்றேன்! வாங்கி தர்றேன்! என்று வாங்கி அவன் கையில் தந்தேன்.

அந்த கருப்பு முகத்தில் அந்த மழலை சிரிப்பு !,அதை காணவே எத்தனை பலூன் வேண்டுமானாலும் வாங்கி தரளாம் எனத் தோன்றியது.

ஏன் நானும் ஒரு காலத்தில் பலூன்களை பார்த்து ரசித்தவன் தானே !.

தொண்ணூறுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவு எப்படியும் பூரி தான் இருக்கும். அதனால் அன்று பூரி கட்டையால் அடி விழுந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. நல்லெண்ணெய் குளியலுடன் ஆரம்பிக்கும் நாள். பூரி சாப்பிடும் போதே, மதியத்திற்கான கறி வந்துவிடும். இருந்தாலும் எனக்கும் அக்காவுக்கும் போட்டி பூரியை சாப்பிட்டு விட்டு யார் முதலில் வீட்டு வாசலில் நிற்பதென்று.

ஏன் இவ்வளவு அவசரம்? எதற்காக இவர்கள் வாசலில் நிற்பதற்காக போட்டி போடுகிறார்கள் என்று தோன்றலாம் . இந்தகால குழந்தைகள் போல கிடையாது எங்கள் உலகம். ஆண்ட்ராய்ட் பேசியும்,சைனா பொம்மைகளும் அல்ல எங்களின் கனவு. அன்றே வாங்கி அன்றே வெடித்துப் போகும் “பலூன்” தான் எங்களின் மிகப்பெரிய கனவு,சந்தோஷம்,உலகம் எல்லாம். எங்கள் தெரு தான் குழந்தைகள் நிறைந்த தெரு என்பதால் ஞாயிற்றுக்கிழமை தான் எங்கள் தெருவிற்கு வருவார் அந்த பலூன்கார்,என்றாலும் மற்ற நாட்களில் எங்கள் தெருவில் அவரை காண இயலாது.

பலூன் மட்டுமே அவரின் வியாபாரம் அல்ல!,அவரின் வளையல்கள்,ஊக்கு,சாந்து,ஸ்டிக்கர் முதலிய பொருட்களுக்காக தாய்மார்களும்,பெண்களும் கூட காத்திருப்பார்கள்.

எப்போதும் வாசற்படிக்கு நான் தான் முதலில் போவேன். அக்காவுக்கு பலூனைவிட பூரிதான் விருப்பம் .வாசலில் நிற்கும் போது, ‘கீச் கீச்’ என்று பலூனை உரசும் சத்தம் கேட்கும் போதே மனதில் ஆரவாரம் ஏற்படும்.அவர் நடந்து வர வர அவரின் தோற்றம் பெரிதாகும். பலூன் மற்ற பொருட்களையும் சேர்த்து பெரிய அட்டையில் வைத்து ஒரு கழியில் முட்டு கொடுத்து வைத்திருப்பார். அதை தன் தோற்பட்டையில் சாய்த்து நடந்து வருவார். அதை பார்க்கும் போது சிலுவையை தாங்கிய ஏசுநாதரே என்னை அருள் வந்தாற் போல இருக்கும்.

“அம்மா,பலூன்கார் வந்துட்டார்”, என்றபடி ஓடுவேன்.

அம்மா வருவாள் அப்பாவிடம் வசை வாங்கிக்கொண்டே.

ஐந்து ரூபாயில் ஒரு பலூன் ஒதுக்கீடு எப்போதும் நமக்கு,காலம் போக போக அக்கா பலூனில் இருந்து பொட்டு,ஸ்டிக்கர்,கம்மல் என்று மாறியது.அம்மா எப்போதும் பத்து ரூபாய்க்கு ஊக்கு, சீப்பு ,காது குடையும் பஞ்சு வாங்குவாள்.

பலூன் கைகளில் வந்தால் அவ்வளவு தான் மத்தள இசை,கால்பந்து,கைப்பந்து என்று கலைகட்டும்.சாப்பிடும் போது பலூன் கைகளில் இருந்தால் அப்பாவின் வசை கிடைக்கும். மாலையில் பலூன் வெடித்து விடும்,வெடித்த தோலாள் டம்ளரில் பறையிசை, விரலில் கட்டி சின்ன பலூன்,சின்ன பலூனை உள்ளங்கையில் தேய்த்து சத்தம் ஏற்படுத்துவது என்று சேட்டைகள் தொடரும்.

இரவு தூங்கும் போது பலூனின் பிரிவு சோகத்தை ஏற்படுத்தும். அதனால் பலூன்காரரை மனம் தேடும்.கண் அடுத்த ஞாயிறை நோக்கி காத்திருக்கும்.

ஒருநாள் அப்பா மகிழ்ச்சியாக வீட்டிற்கு

வந்தார்.

“என்ன ஒரே சந்தோஷமா இருக்க”,என்றால் அம்மா.

“இந்தியா எக்கனாமிக் பாலிசிய மாத்த போதுடி!”,என்றார்.

“புரியுற மாதிரி சொல்லுங்க”,கடிந்தாள் அம்மா.

“தாராளமயம்,தனியார்மயம்,உலகமயமாக்கல் போதுடி இனிமே நிறைய தனியார் கம்பெனி,வெளிநாட்டு கம்பெனி,கார்ப்பரேட்ஸ் எல்லாம் நம்ம நாட்ல தொழில் செய்யும், வெளிநாட்டு காரு பைக்ளா இந்தியால கிடைக்கும்டி”,என்றொரு நீண்டதொரு உரையை முடித்தார் அப்பா.

“மேலும் இனிமே பல ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்,சூப்பர் மார்க்கெட்ளா நம்ம ஊர்லயே ஆரம்பிக்கலாம்”,என்றார்.

என்னை நோக்கி வந்தார்.”நீ இனிமே பலூன் என்ன, பலூன் பாக்கெட்டே வாங்களாம்”,என்றார்.

கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கிய உணர்வு மனதில் எனக்கு .அப்போ பலூன்கார் என்னாவார் என்பதே சிந்தனையாக இருந்தது.

ஆனால் எப்போதும் போல வார இறுதியில் வந்தார் பலூனகார்.நான் அவரிடம் போய் என் அப்பா சொன்னதையெல்லாம் ஒப்பித்தேன்(பல பிழைகளுடன்).பலூன்கார் சிரித்துக்கொண்டே என் அப்பாவிடம்,”என்ன சார் சொல்றான் தம்பி ?”,என்றார்.

அவன் அப்படி தான் ஏதாவது உளறுவான்,என்றார் அப்பா.

ஆறு,ஏழு மாதங்கள் போனது,எங்கள் ஊரில் முதல் கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட வந்தது.நாட்டிலும் பல வந்தன.

மக்கள் தேவைகளுக்கில்லாமல் விளம்பரங்ககளுக்காக பொருட்களை வாங்கினார்கள். ஊருக்குள் பலூன்காரின் தேவை குறைந்தது.

ஞாயிற்று கிழமைகள் பலூன்கார் வரவு இல்லாத வறட்சி கிழமைகள் ஆயின.அப்பா கூட ஒரு பலூன் பாக்கெட் வாங்கி தந்தார்.பலூன்கார் தந்த ஒரு பலூனில் இருந்த இன்பம் ஏனோ அந்த பலூன் பாக்கெட்டில் இல்லை.

அலைபேசி கதிர்வீச்சில் நம்மை அறியாமல் கொல்லப்படும் சிறு உயிரினங்கள் போல,காணாமல் போனார் அந்த பலூன்கார்.இது தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் குற்றமா?அல்ல அந்த முடிவை எடுத்த அரசின் குற்றமா?அல்ல அதை ஏற்பட வேலை செய்த வல்லரசுகளின் குற்றமா?இல்லை சிதறி போன ஒரு யூனியனின் குற்றமா?அல்ல ஆட்சியை தக்கவைத்து கொள்ளத் தெரியாத இரண்டு ஆட்சியாளர்களின் குற்றமா ?யாரின் குற்றம் என்றபடி நின்றேன்.

“மாமா அம்மாகிட்ட”,என்றான் மழலை.

“சரிடா செல்லம் என்றபடி”,அந்த இடத்திலிருந்து நகர்ந்தேன் பலூன்களோடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *