மத்தாப்புச் சுந்தரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2023
பார்வையிட்டோர்: 724 
 

(1949 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னுரை

“கதாசிரியரின் தர்ம சங்கடங்கள்.” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதலாமென இருக்கிறேன். ஒரு நல்ல கதை எழுதவேண்டும், அதை ரசிகர் கள் படித்து மகிழ்ந்து பாராட்டவேண்டும் என்ற ஆர்வத்தோடு கதை எழுத உட்காருவேன். ஏதாவது மனத்தில் தோன்றினால் தானே? ம்ஹும். சகாரா பாலைவனம் போல் மூளை வரண்டு காணப்படும். கதைக்கான கரு எங்கோ ஓடி ஒளிந்துகொள்ளும். அன்றாட காரியாலய வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதோ புதுப் புது கற்பனைகள் ஒன்றன்பின்னொன்றாக உதயமாகும்! இதை முன்னிட்டுத்தானோ என்னவோ மகாகவி பாரதியாரும்,

“அடி, என்னோடிணங்கி மணம்புரிவாய் என்று
போற்றிய போதினிலே – இளம்
புன்னகை பூத்து மறைந்து விட்டாளம்மா! “

என்று வாணிமீது ஆயாசப்பட்டார் போலும்.

இது ஒருபுறமிருக்க, கதை உருப்பெற்று ஏதாவது செய்தித் தாளில் வெளிவந்துவிட்டதோ வந்தது விபத்து! தெரிந்த நண்பர்களும் தெரியாத நண்பர்களும் வலுச் சண்டைக்கு இழுக்கிறார்கள். என் அந்தரங்க விஷயங் களை ஏன் ஐயா, சந்திக்கு இழுத்து என் மானத்தை வாங்குகிறீர்? உமக்கு என்ன ஐயா, தீங்கிழைத்தேன்? நீர் என்ன கதை எழுதுகிறவரா? சிண்டு முடிந்து விடுபவரா? இப்படி.

சரி. தொலையட்டும். இனி கதையே எழுதுவ தில்லை. நமக்கேன் இந்த வீண் வம்பு? என்று அடங்கி ஒடுங்கி மூலையில் முடங்கிக் கிடந்தாலோ, பத்திரிகாசிரிய நண்பர்கள் விடுகிறார்களா? ஏதேதோ சமாதானம் கூறி வெளியில் இழுத்து வைக்கிறார்கள்.

என் மன மோகினிதான் வாளாவிருக்கிறாளா? அதை எழுது, இதை எழுது என்று ஆசை காட்டிக் கொண்டே இருக்கிறாள். அவளுடைய ஆணைக்கு அடி பணியத்தான் வேண்டியிருக்கிறது.

ஆமாம். “மத்தாப்புச் சுந்தரி” கதை எழுதும் நேரத் தில் ஏன் இந்தத் தொண தொணப்பு? என்று முணு று முணுக்கிறீர்கள், அல்லவா? இந்தக் கதையில் வரும் சம் பவங்கள் யாரையும்-உங்களையும் சேர்த்துத்தான்-குறிப் பிடுவன அல்ல என்பதை வற்புறுத்துவதற்காகத்தான். நல்லது. இனி, கதையைத் தொடருங்கள்.

1

அவளை எங்கோ பார்த்ததுபோல் தோன்றிற்று ஆயினும் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த இளைஞன் சாவதானமாக என் அறைக்குள் வந்து, “வணக்கம்” என்றான். என்னையறியாமல் என் வாய் “வணக்கம்” என்றது. வேறு வார்த்தைகள். எழவில்லை.

“நீர் ஏன் இவ்வாறு விழிக்கிறீர்? காந்தியைச் சுட்டுக் கொன்றதுபோல் உம்மைக் கொன்றுவிடமாட்டேன். என் மனத்துயரை உம்மிடம் கூறி ஆற்றிக் கொள்ளலாமென்றே வந்தேன். நீர் அதற்கு இணங்கத் தான் வேண்டும்.” என்று அன்புப் பிடியாகக் கட்டளையிட்டது எனக்கு உடும்புப் பிடிபோல் தோன்றியது. வேறு வழியின்றித் தலையசைத்தேன். அவனும் என் எதிரில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து, சிறிது நேரம் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்துவிட்டு ஆரம்பித்தான்:-

மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இங்கு – சிங்கப்பூருக்கு – வந்தேன். இரண்டு மாதம் அலைந்து திரிந்த பிறகு ஒரு மோட்டார் கம்பெனியில் வேலை கிடைத்தது.

என்னுடன் வேலை பார்த்த நண்பரொருவர் இந்நக ரத்தின் ஒதுக்குப்புறமான சந்திலுள்ள சிறிய அறை யொன்றில் தனியாக வசித்து வந்தார். தற்காலிகமாக நான் அவருடன் இருக்கை வைத்துக்கொண்டேன். என்னைப் போல அவரும் பிர்மச்சாரிதான்.

சிறிது ஆசாரப் பேர்வழி. வெளியில் சாப்பிடமாட்டார். கைச் சமையல்தான். நானோ கண்ட கண்ட இடங்களில் என் வயிற்றை நிரப்பி வந்தேன்.

ஒருநாள் என் நண்பர் தமது சமையலைப் பற்றிய என் அபிப்பிராயத்தை அறியும் பொருட்டு என்னைப் பிட வாதமாக சாப்பிடவைத்தார். உண்மையிலேயே நளனிடமும் பீமனிடமும் இவர் பாக சாஸ்திரம் பயின்றவரோ எனத் தோன்றிற்று. அவ்வளவு நேர்த்தியாக இருந்தது.

அவருடைய குணாதிசயங்களில் வியப்புக் கொண்டிருந்த நான் இப்பொழுது அவருடைய கையால் தயாரித்த உணவுக்கும் அடிமையானேன். தினசரி எனக்கும் சிறிது அமுது படைக்கும்படி வேண்டிக்கொண்டேன். அவரும் இசைந்தார்.

என் பெற்றோர்க்கு நான் ஒரே பிள்ளை. அம்மாவின் செல்லம். அப்பாவின் வளர்ப்பு. சமையற்கட்டில் தலை காட்டக்கூடாது என்ற கண்டிப்பு. எனக்கு எப்படி சமை யல் வேலை தெரியும்? கடைச் சாமான்களை வாங்கிக் கொடுப்பதும், ஏதாவது சில்லறை வேலைகள் செய்வ தோடு என் “கடமை” முடிந்துவிடும். பெரும்பகுதி சமையல் வேலைகளை அவரே கவனித்துக் கொள்ளுவார்.

ஒவ்வொரு நாளும் என் முதல் வேலை பசாருக்குச் சென்று, காய்கறிகளை வாங்கி வரவேண்டும். இவ்வேலை முதலில் எனக்கு உற்சாகமாகவும், பிறகு, சலிப்பாகவும், அதன் பிறகு, தொந்தரவாகவும் ஆகிவிட்டது.

சிங்கப்பூருக்கு நான் புதிதாகையால் எனக்கு மலாய் மொழி சரியாகப் பேசவராது. ஆனால், புளிய இலை போன்ற சின்னஞ் சிறு கண்களையுடைய சீன வியாபாரி களிடத்தில் வம்பளக்க வேண்டுமென்ற ஆசையால் உந்தப்பட்டு, என் அரைகுறை மலாயை வைத்துக்கொண்டு பேரம் பேசி, ஒருவாறு சாமான்களை வாங்கிச் சேகரிப்பேன். ஓரோர் சமயம் நான் அந்தப் ‘பூணூல் போடாத பார்ப்பனர்’களால் ஏமாற்றப்படுவதுமுண்டு. அதற்காக நான் கவலைப்படுவதில்லை. அவர்கள் என்னை ஏமாற்றிய திறத்தைப் பாராட்டி வியப்படைவேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஐயா, நான் அந்த அம்மாளைச் சந்தித்தேன்,

2

“எந்த அம்மாளை?” என்று நான் இடைமறித்துக் கேட்டேன்.

இருங்கள். இருங்கள். உங்களுக்கு எப்படித் தெரி யும். அந்த அம்மாளை? நானும் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் அந்த அம்மாள் இந்தச் சிங்கை நக ரில் நிரம்பப் பெயர் பெற்றவர்களென்று.

அவர்களும் நான் தினந்தோறும் போகும் பசாருக்கு வருவதுண்டு. சொல்லி வைத்தாற்போல் நான் அங்கே போவதற்கும் அவர்கள் அங்கே வருவதற்கும் சரியாக இருக்கும். அதுமட்டுமல்ல. நான் எந்தெந்தக் கடைகளில் வாடிக்கையாக வாங்குகிறேனோ அதே கடைகளில்தான் அவர்களும் வாங்குவார்கள். நாளடைவில் நாங்கள் இரு வரும் சேர்ந்தே பண்டங்கள் வாங்க ஆரம்பித்தோம்.

பெரும்பாலும் அவர்கள் உதவிதான் எனக்குத் தேவைப்படும். சீனமும் மலாயும் கலந்த மணிப்ரவாள நடை அவர்களுக்குத் தண்ணீர் பட்ட பாடு. சில சீனக் கடைக்காரர்களின் வாய்வீச்சு அவர்களிடம் சாயாது.

ஒரு நாள், ஏதோ பேச்சுவாக்கில், “ஏன், தம்பீ? உங்கள் சம்சாரத்திற்கு இறைச்சி மீன் பிடிக்காதோ? எப்போதும் காய் கறிகளையே வாங்கிக்கொண்டு போகிறீர்களே?” என்று கேட்டார்கள். நான் நகைத்துக்கொண்டே, “சம்சாரமா? அவள் இனிமேல்தான் வரவேண்டும். நான் தற்சமயம் என் நண்பரோடு சமைத்துச் சாப்பிடுகிறேன்.” என்றேன்.

இதைக் கேட்டதும் அந்த அம்மாள் வியப்புடன் கண்களை அகல விரித்து, பிரமச்சாரி என்னும் பொருள் பட, “என்ன? நீங்கள் காலி ஆளா? நான் இதை நம்ப மாட்டேன்.” என்றார்கள்.

அப்போது எதிர்பாராது தோன்றிய உற்சாகத்தோடு நான் பிரமச்சாரிதான் என்பதை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி, அவர்களை நம்பச் செய்தேன்.

இவ்வுரையாடல் நடந்த அன்றிலிருந்து அவர்கள் என்னிடம் நடந்துகொண்டது வேறுவிதமாய் இருந்தது.

அந்த அம்மாளுக்கு வயது 40 இருக்கும். சிறு நரை காணும் தலை. ஆனால், நெற்றிச் சுருக்கம் விழாத களை பொருந்திய முகம். உள்ளத்தை ஊடுறுவும் கண்கள் தமது யௌவன பருவத்தில் எவரையும் மயக்கக்கூடிய வசீகர சக்தி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். வாலிப வயதென்ன? இப்பொழுதுகூட அவர்கள் மனம் வைத்தால் எவரையும் ஓர் ஆட்டம் ஆட்டிவைக்கலாம்.

நன்மைக்கோ தீமைக்கோ நான் அவர்கள் அன்புக்கு அடிமையாகிவிட்டேன். என்னைத் தம்மோடுபிறந்த சொந்தச் சகோதரன்போல் பாவிப்பதாகவும், இனித் தம்மிடம் “வேற்றுமை” பாராட்டக் கூடாதென்றும் அவர்கள் அன்புடன் எச்சரித்தார்கள்.

ஒரு நாள் வழக்கம்போல் வாங்குவதைவிட ஏராளமான காய் கறிகள், மீன் இறைச்சி முதலியவைகளை வாங்கிச் சேகரித்தார்கள். வீட்டில் ஏதோ விசேஷம் போலும் என்று எண்ணினேன்.

எங்கள் பசார் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போதுஎன் காதோடு காதாக, “என் மகள் சுந்தரி வயது வந்துவிட்டாள். அதற்கு நாளை தலைக்குத் தண்ணீர் விடப்போகிறோம். வருகிறாயா? ஆனால், இதை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். உன்னோடு இருக்கும் உன் நண்பருக்குக்கூட தெரியவேண்டாம். நாங்கள் யாருக்கும் சொல்லிச் செய்யவில்லை. வீட்டுக்கு மட்டாக – சிக்கனமாக -இத்தேவையை முடிக்கிறோம். நாளை காலை வாயேன். எங்கள் வீட்டு எண் 47” என்றார்கள்.

இதைக் கேட்டதும் என் உடம்பு புல்லரித்தது. இனந் தெரியாத குதூகல உணர்ச்சி ஒன்று மேலோங்கிப் பொங்கிற்று. இது ஏனோ தெரியவில்லை. இதனால்தான் “வாலிப பருவம் பயங்கர காலம்” என்று எச்சரித்தார்களோ?

பதில் கூற என் நா எழவில்லை. மௌனமாகத் தலையசைத்துவிட்டு வீடு திரும்பினேன்.

இரவு உறக்கம் வரவில்லை. எதை எதையோ நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தது இந்தப் பாழும் மனம். உங்களிடம் சொல்வதற்கு என்ன வெட்கம்?…ஆம். அந்தச் சுந்தரியைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன்.

“பசாருக்கு வரும் அந்த நடுத்தர வயதுள்ள அம்மாளே அத்தனை அழகாக இருக்கிறார்களே? அவர்கள் மகள் எவ்வாறிருப்பாள்? தாயைப் பார்த்தால் மகளைப் பார்க்க வேண்டாம் என்று சொல்வார்களல்லவா? ஆகா! நமக்கு அந்தப் பெண்ணை மணக்கும் பாக்கியம்கிட்டுமா? பெண்ணின் தாயார் என்னமோ என்னிடம் பிரியமாகத் தான் இருக்கிறார்கள். பெண்ணின் தகப்பனார் எப்படியோ? இருவரும் சம்மதித்தாலும், பெண் சம்மதிக்க வேண்டுமே?” என்றெல்லாம் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தேன்.

மறுநாள் பொழுது விடிந்ததும், நன்றாக அலங்கரித்துக்கொண்டு வெளியே புறப்பட்டேன்.

என்றுங் காணாத இந்தப் புதுமையைக் கண்ட அன்ன மிடும் நண்பர், “எங்கே புறப்பட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார்.

“இன்று ஞாயிற்றுக்கிழமையல்லவா? என் நண்பர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். தட்டமுடியாது.”

“அப்ப, மதியம் சாப்பாட்டுக்கு வரமாட்டீங்க?”

“ஆமாம்.”

“ஓ! அதனால்தான் இன்னிக்கி பசார் வேலையை சீக்கிரமா முடிச்சுகிட்டு வந்துட்டீங்களோ? விருந்து சாப்பாட்டை விடக்கூடாது. ஜமாச்சுட்டு வாங்க.” என்று ஆசீர்வதித்து அனுப்பினார் நண்பர்.

நான் நேரே கடைத்தெருவுக்குச் சென்று, ஒரு பட்டுப்புடவை, ஜாக்கெட் துணி, வாசனை சோப், செண்ட், கதம்பம் முதலியவைகளை வாங்கிக்கொண்டு, அந்த அம்மாள் தெரிவித்த வீட்டு நம்பரைக் கண்டு பிடித்துப் போய்ச் சேர்ந்தேன்.

வீட்டு வாசலில் என் தலையைக் கண்டதுமே, ஏதோ அவசர காரியமாய் இருந்த அந்த அம்மாள் எல்லாவற் றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு, “தம்பி வந்திருக்கு!” என்று கூறிக்கொண்டு ஓடோடி வந்து, என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார்கள். என் மனம் ஆனந்த சாகரத்தில் அமிழ்ந்தது.

வீடு கலகலப்பாய் இருந்தது. ஆண்களும் பெண் களும் குழுமியிருந்தனர். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் ஆண்களைவிட பெண்களே அதிகமாக இருந்தார்கள். ஆண்களிலும் வயோதிகர் ஓரிருவரைத் தவிர, மற்றவர் இளங்காளையரே. பொறாமையும் வெறுப்புங் கலந்த அவர்கள் பார்வைதான் எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அதை எவ்வாறு வெளிக்கு காண்பிக்க இயலும்? நவீன நாகரிகத்திற்கு ஏற்ப, யாதுமறியாதது போல் நடித்தேன்.

3

அன்று தைப்பூசம். மக்கள் திரள் திரளாகக் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடு ஒருவனாக நடந்து கொண்டிருந்தேன்.

இயல்பாகவே எனக்குத் தெருவில் போவோர் வரு வோரைக் கவனிக்கும் பழக்கம் கிடையாது. புற்றீசல் போலப் புறப்பட்டு வரும் பலவகை வாகனங்களுக்கிடையிலும், மக்கள் கூட்டத்தின் நடுவிலும் நடந்து செல்வதே ஒரு தனிக் கலையென்றுதான் சொல்லவேண்டும். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதுபோல் மயிரிழை தவறினாலும் விபத்து நிச்சயம்.

எதிரே “டிரைஷா” என்று அழைக்கப்படுகிற மூன்று சக்கர வண்டியொன்று வந்துகொண்டிருந்தது. முன் பக்கம் மூடப்பட்டிருந்த படுதாவின் மேலே இரண்டு பெண்களின் தலைகள் காணப்பட்டன. எக்காரணத்தாலோ என் கண்கள் கவரப்பட்டன.

ஒன்றின் தலைமுடி மட்டுமே தெரிந்தது. மற்றொன்றின் நெற்றியும் கண்களும் தெரிந்தன.

ஆகா! அதன் லாவண்யத்தை என்னென்று சொல்ல? நீராயிருந்தால், மூன்றாம் பிறை போன்ற நெற்றியென் றும், மான் விழியென்றும் வர்ணித்திருப்பீர். என் மனம் என் வசமில்லாமல் அவ்வழகைப் பருகத் துடித்தது. கண்கொட்டாமல் குளுமையானதும் ஆளை விழுங்கக் கூடியதுமான அவ்விழிகளைப் பார்த்த வண்ணமிருந்தேன்.

நெற்றியும் கண்ணுமே இத்தனை அழகுடையதாய் இருந்தால் அவள் நாசி? அதரம்? அங்க அவயவங்கள்? இவை போன்ற சிந்தனைகளில் இறங்கிச் சஞ்சரித்தது என் மனம்.

அவ்வண்டி எனக்குச் சில அடிகள் முன்னாலேயே நிறுத்தப்பட்டது. நான் என் நடையைக் குறைத்துக் கொண்டேன். அவ்வழகியை நன்றாகக் கண்டு களிக்கவே தான்.

பசாரில் எனக்கு அறிமுகமான அந்த அம்மாளும் அவளும் வண்டியைவிட்டு இறங்கினார்கள். நானும் அவர்களை நெருங்கினேன்.

கனவிலும் நனவிலும் காட்சியளித்துக் கொண்டிருந்த என் “காதலி”யாக இருக்கலாமோ வென்ற சபலம் தட்டிற்று.

ஆசை பொங்க அம்மாதரசியைக் கூர்ந்து நோக்கினேன்.

மறு கணம் “பளார்” என்று என் கன்னத்தில் அடி விழுந்தது! பொறி தட்டி மயக்கமுற்றுக் கீழே விழுந்தேன். ஆயினும், சில நிமிடங்களில் சமாளித்துக் கொண்டு எழுந்து நின்றேன்.

இதற்குள் அந்த அம்மாளுக்கும் என்னை அடித்த இரும்பு மனிதனுக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது

“அவரை ஏன் அடித்தீர்?” என்று ஆத்திரம் பொங்கக்கேட்டாள் அந்த அம்மாள்.

“பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை முறைத்துப்பார்ப்பது போல் பார்த்தால்?”

“அவர் பார்த்தால் உமக்கென்ன? நீர் யார்? அவள் யார்?”

“நான் யாரா? மீனாட்சி! மீனாட்சி! நீ தான் பேசுகிறாயா? அல்லது இந்த நோஞ்சான்மீது ஏற்பட்ட இரக்கத்தால் இவ்வாறு உளறுகிறாயா?”

“நானா உளறுகிறேன்? நீர் அவரை அடித்தது தவறு, தவறு, முற்றிலும் தவறு என்று முக்காலும் சொல்கிறேன்.”

“வழியில் போவோர் வருவோரெல்லாம் உன் மகள் சுந்தரியைக் காமப் பார்வையுடன் பார்ப்பதை என்னால் சகிக்க முடியாது.”

இதற்குள் அவ்விடத்தில் கும்பல் கூடிவிட்டது.

“அப்படிப் பார்த்தால் நீரும் வழியோடு போகிறவர்களில் ஒருவர்தான். எங்கள் காரியங்களில் ஏன் அனாவசியமாகத் தலையிடுகிறீர்?”

“மீனாட்சி! உன் மனம் இப்பொழுது சரியில்லை. வா. நாம் கோயிலுக்குப் போவோம்.”

“நாங்கள் எப்படி வந்தோமோ அப்படியே போகிறோம். உமது ஜோலியைப் பார்த்துக்கொண்டு போம்.”

“ஹும். அவ்வளவுக்கு வந்துவிட்டதா? இருக்கட்டும் உன்னையும் இந்தப் பொடிப் பயலையும் பார்த்துக்கொள்கிறேன்” என்று கருவிக்கொண்டே அந்த மனிதன் கூட்டத்தில் மறைந்துவிட்டான்.

கலகம் நடக்குமென்று காத்துக்கொண்டிருந்த கும்பலும் ஏமாற்றத்துடன் கலைய ஆரம்பித்தது.

அந்த அம்மாள் என்னை நோக்கி, “தம்பீ! அவன் கிடக்கிறான், ராஸ்கல்: நீங்கள் வருத்தப்படாதீர்கள். நாங்கள் கோயிலுக்குப் போகிறோம். நீங்களும் வருகிறீர்களா?” என்று கேட்டார்கள்.

நானும் “சரி”யென்று அவர்களுடன் சென்றேன்.

கோயிலில் ஒரே கூட்டமாக இருந்தது. நாங்கள் மூவரும் நெருக்கி இடித்துக்கொண்டு, உள்ளே சென்றோம்.

சிறிது கூட்டம் குறைந்திருந்த ஓரிடத்தில் என்னை யும் சுந்தரியையும் நிற்கவைத்துவிட்டுத் தேங்காய் பழம் சூடம் பூ முதலியவைகளை வாங்கி வருவதற்காக அந்த அம்மாள் வெளியே போய் விட்டார்கள்.

இப்பொழுது என் காதலியை நன்றாகப் பார்க்கவும். அவளுடன் வார்த்தையாடவும் எனக்கு வாய்ப்பு ஏற் பட்டது. ஆனால், வாயிலிருந்து ஏதாவது புறப்பட்டால் தானே? விவரிக்கமுடியாத ஓர் அச்சம் என் உள்ளத்தைக் கவ்விக்கொண்டு வார்த்தைகளை வெளிவர வொட்டாமல் செய்தது.

அவ்வணங்கு குனிந்த தலை நிமிராமல் நின்றுகொண்டிருந்தாலும், நான் அவளைக் கவனியாதபோது என்னைக் கடைக் கண்களால் அவள் நோக்குவது கண்டு புளகாங்கிதம் கொண்டேன்.

அப்போது அலகு குத்திய காவடி ஒன்று ஆட்ட பாட்டத்துடன் நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் எங்கள் இருவரையும் நெருக்கித் தள்ளிற்று. நான் அப்பெண்மணியைக் காப்பாற்றும் பொருட்டு, அவளைச் சுற்றி என் கைகளை வளையமாகக் கோர்த்துக்கொண்டேன். அவளும் என் அணைப்பில் அகப்பட்டாள். கூட்டம் நெருக்க நெருக்க அவள் உடலைச் சுற்றியிருந்த என் கைகள் தாமாகவே இறுக ஆரம்பித்தன. அவளும் அச்சத்துடன் என்னைத் தழுவிக் கொண்டாள்.

ஐயா! கதாசிரியரே! அப்பொழுது நானடைந்த இன்பத்தை எப்படி வருணிப்பேன்? மந்த மாருதம் தழுவுகின்ற மாலைப்போதில் சிறகு முளைத்து வானத்தில் பறந்து செல்லும்போது, மலர் மாரி பெய்து உடம்பை மறைப்பது போல் குளு குளுவென்றிருந்தது. ஊழூழிக் காலம் இவ்வாறே இருக்கக் கூடாதா என்று ஏங்கினேன்.

“தம்பீ! தம்பீ ! இங்கே வாங்க. கூட்டம் அதிகமில்லை.” என்று அந்த அம்மாள் அழைத்தது எனக்கு எரிச்சலாக இருந்தது.

4

இப்பொழுது நான் அந்த அம்மாள் வீட்டுக்கே வந்துவிட்டேன். எனக்கென்று தனி அறை. அதில், கட்டில் மெத்தை அலமாரி நிலைக்கண்ணாடி மேஜை நாற்காலி முதலிய தட்டுமுட்டுப் பொருட்களும், சுவர்களில் அரை நிர்வாண நங்கையர் படங்களும் கண்ணைப் பறித்தன. மேஜைமீது சில தமிழ் நாவல்களும் சினிமா இதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

வெகு விரைவில் நானும் அவர்கள் குடும்பத்தார்களுள் ஒருவனாகிவிட்டேன். சாப்பாடும் அவர்கள் வீட்டிலேயே வைத்துக்கொண்டேன். நாகரிகத்தின் உச்சாணிக் கிளையில் ஏறிவிட்டதாகக் கனவு கண்டேன்.

விதவிதமான உடுப்புகள் அணிவதிலும், நிலைக் கண்ணாடியின் எதிரில் நின்றுகொண்டு கிராப்புத் தலையை நெளி நெளியாக வாரி விடுவதிலும், மேனாட்டு உயர்தர வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவதிலும், “டிப்- டாப்பாக” இருப்பதிலும், நெஞ்சை நிமிர்த்தி நேராக நடப்பதிலும் விசேடக் கவனம் செலுத்தினேன். உடலுக்கு வலுவைத்தரும் டானிக்குகளை வாங்கி இரகசியமாகச் சாப்பிட்டேன். காலை மாலை நேரங்களில் உடற்பயிற்சியும் எடுத்துக்கொண்டேன். இதன் விளைவாக என் உடம்பும் சில மாதங்களுக்குள் கொழு கொழுவென்று கட்டிளங் காளைபோல் பெருத்துக் கவர்ச்சியுடன் காணப்பட்டது.

என் காதலி சுந்தரியும் எனக்குச் சிறிதும் இளைத்தவள் அல்ல போல் தோன்றியது. அவளைக் காணும் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாகக் காட்சியளித் தாள். காலையில் இந்தியக் குடும்பப் பெண்போல் தோன்றினால், மாலையில் மேனாட்டிலிருந்து அப்பொழுதுதான் வந்திறங்கிய ஆங்கில மாதுபோல் நடமாடுவாள். மற்றும்சில சமயங்களில் சீனப்பெண் போலவும் மலாய் நங்கை போலவும் மாறி என்னை மயக்குவாள், சுருங்கச் சொன்னால், நான் அவள் கவனத்தைக் கவர விரும்பியது போலவே, அவளும் என் நினைவைக்கவர்ந்து எப்போதும் என்னையே சுற்றித் திரிந்து கொண்டிருக்க முயல்பவள் போல் தோன்றியது.

ஒருநாள் எனக்கு மலேரியா சுரம் வந்தது. மூன்று நாள் என் நினைவிழந்து படுத்த படுக்கையாகக் கிடந்தேன். இடையில், “டாக்டரின் ஆலோசனையின்படி கொடுக்கப்படுவதாக” எனக்கு முட்டை கலந்த பிராந்தி கொடுக்கப்பட்டது. செய்யத் தகாத காரியத்தைச் செய்வதுபோல் முதலில் தோன்றினாலும், அந்த அம்மாளும் மற்றவர்களும், “உயிர் பிழைக்க வேண்டுமானால் அதைச் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டு” மென்று வற்புறுத்திய தால் மனமின்றி சிரமத்துடன் சிறிது சிறிதாக அருந்த னேன்.

ஆ! சில விநாடிகளுக்குள்ளே எனக்கு என்றுமில்லாத உற்சாகமும் தெம்பும் ஏற்பட்டது. அக்கணமே சுரமும் பறந்துவிட்டது போல் பிரமை தட்டிற்று. இன்ப வெற யுடன் கூடிய மயக்க நிலை இனிய கனவுலகத்திற்கு அழைத்தேகிற்று.

இதைத் தொடர்ந்து மேலும் நான்கு நாட்களுக்கு இந்த மருந்தையே? (பிராந்தியும் முட்டையும்) சாப்பிட்டேன். நோய் நீங்கிற்று. அதற்குப் பதிலாகக் குடிப் பழக்கம் என்ற நோய் குடிபுகுந்தது.

ஒருநாள் காலை நான் என் ஷர்ட்டை எடுத்தபோது அதன் பையிலிருந்து ஒரு துண்டுக் கடிதமும் வெள்ளை ரோஜா மலரொன்றும் விழுந்தது. மலரை என் ஜேபியில் போட்டுக்கொண்டு, கடிதத்தை ஆவலுடன் பிரித்துப் படித்தேன். முத்து முத்தான எழுத்துக்களால் சுருக்கமாக வரையப்பட்டிருந்த அக்கடிதத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். கடிதம் இதுதான்:-

“அன்பும் பண்பும் நிறைந்த அத்தான் அவர்களுக்கு அடியாள் சுந்தரி அடிபணிந்து வரையும் மடல்.

அன்று கோயிலில் உங்களைச் சந்தித்ததிலிருந்து என் மனம் என் வசத்தில் இல்லை. உங்களையே சுற்றிச் சுற்றி வருகிறது.

என் வற்புறுத்தலினால்தான் என் அன்னையார் தங் ளை இவ் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள். இதனால் தங்களை எந்நேரமும் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டிற்று.

எனினும் தங்களுடன் தனிமையில் உரையாடி மகிழும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிட்டவில்லை. வயது வந்த மணமாகாத ஒரு பெண் மணமாகாத ஒரு வாலிபருடன் தனிமையில் பேச எந்த இந்தியப் பெற்றோர்தாம் சம்மதிப்பர்?

என் ஆசை கட்டு மீறுகிறது. அதன் விளைவே இந்தக் கடிதம்.

இன்று இரவு சுமார் 2 மணிக்கு நான் தங்கள் அறைக்கு வருவேன். தயவு செய்து இந்தக் கடிதத்தை உடனே கிழித்தெறியவும்.

தங்கள், சுந்தரி.”

இக்கடிதத்தை எத்தனை முறை படித்தேனோ, தெரியாது. படிக்கப் படிக்கப் புதுப் புது கிளர்ச்சிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது அந்த ஆசைக் கடிதம்.

அவள் கேட்டுக்கொண்டிருந்தபடி அதை கிழித்தெறிய என் மனம் துணியவில்லை. அரைக் காசுக்கும் விதியற்ற ஏழை ஒருவன் யாருமற்ற தனியிடத்தில் பொற்காசுகள் நிறைந்த புதையலொன்றைக் கண்டெடுத்ததுபோல், அதைப் பத்திரமாக என் “மணிபர்ஸில்” வைத்துக் கொண்டேன்.

உடனே சுந்தரியைப் பார்க்க வேண்டுமென்று மனம் துடித்தது. ஆனால், சுந்தரியோ அன்று முழுவதும் என் கண்களில் படாமல் எங்கோ ஒளிந்து கொண்டுவிட்டாள்.

அன்றிரவு மனத்துக்கு ஒரு குதூகலமளித்தது. அப்பொழுதுதான் மழை பெய்து நின்றிருந்தது. குளிர்ந்திருந்த பூமியில் ஜிலு ஜிலுவென்று வீசிய காற்று உறக்கத்திலிருந்த செடி கொடிகளையும், மரங்களையும் உசுப்பி எழுப்பிக் கொண்டிருந்தது. பால் போன்ற தன்னொளி யைப் பரப்பிக் கொண்டு வான்மதி உதயமாகிக் கொண் டிருந்தது.

வீட்டிலுள்ள எல்லோரும் என்னையும் என் காதலியையும் தவிர நன்கு உறங்கிக் கொண்டு இருந்திருப்பார்கள். கைக்கடிகாரத்தைப் பார்த்த வண்ணமிருந்தேன். பாழும் மணி மெது மெதுவாக நத்தை போல் ஊர்ந்து சென்றது. கூடத்திலிருந்த சுவர்க்கடிகாரம் 11 அடித்தது. இன்னும் மூ…ன்…று மணி நேரம் போகவேண்டுமே?

படுக்கையில் படுத்திருக்கவும் பிடிக்கவில்லை. ஏதாவது புத்தகங்களைப் படிக்கலாமென்றாலோ, ஏடுகளைப் புரட்டிக்கொண்டிருந்தேனே தவிர அதில் கருத்துச் செல்லவில்லை. காரணமின்றி அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து நடந்து என் கால்களும் வலிக்க ஆரம்பித்தன.

ஒருவாறாக மணி ஒன்றாயிற்று. இனி, எந்த நிமிஷத்திலும் அவள் வருவாள். முன் ஜாக்கிரதையாக விளக்கை அணைத்துவிட்டு, அறைக் கதவையும் சிறிது திறந்து வைத்துவிட்டு, காற்றுக்காக ஜன்னலருகில் உட்கார்ந் திருப்பதுபோல் நாற்காலியில் அமர்ந்து, வானத்தில் பவனி வரும் சந்திரனை வெறுமே பார்த்துக் கொண்டி ருந்தேன். என்னையறியாமலேயே என் வாய்,

“மேனி கொதிக்குதடி – தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானி லிடத்தை யெல்லாம் – இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்.”

என்ற பாரதியின் பாட்டை முணு முணுத்தது உள்ளத் தினுள்ளே அடங்காத ஆசையும் அச்சமும் பொங்கிக் கொண்டிருந்தது. மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது.

சிறிது நேரத்திற்கெல்லாம் திறந்திருந்த கதவை ஓசை யெழாமல் விலக்கிக்கொண்டு அவள் வந்தாள்.

கை வளையல்கள் குலுங்க, புதுப் புடவை “சர சர” வென்று ஒலிக்க, மல்லிகை மணம் வீச, தெய்வ மங்கை போல் வந்தாள். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு தயக்கத்துடன் உள் நுழைந்த அவளைக் கண்டதும் என் கால்கள் என்னையறியாமல் காந்தம்போல் அவள் வசம் இழுத்துச் சென்றன.

அலையோடு அலை மோதியதுபோல் அவளே முதலில் என்னைத் தழுவிக்கொண்டாள். ஒரு கையால் அவளை அணைத்துக்கொண்டு, மறு கையால் லாவகமாக கதவை ஓசையெழாமல் மூடிவிட்டு, அவளை அப்படியே தூக்கிச் சென்று, பஞ்சணையில் கிடத்தினேன்.

ஆறு மாதங்கள் பறந்தோடின. அதன் பிறகு?

இன்ப நினைவுகளில் மிதந்துகொண்டிருந்த என் மனப்படகை துன்பக் கடலுள் கவிழ்க்கச் செய்தது இந்தியாவிலிருந்து வந்த ஒரு கடிதம்.

என் மாமன் மகள் மரகதம் “வயது வந்து”விட்ட தாகவும், அடுத்த ஆவணி மாதத்தில் விவாகத்தை முடித்துவிட வேண்டுமென்று இறக்கும் தறுவாயிலிருக் கும் என் பாட்டி ஆசைப்படுவதாகவும், ஆதலால் நான் வேலை பார்க்கும் கம்பெனியில் லீவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உடனே வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, மறு கப்பலில் புறப்பட்டு வரும்படியும் என் தந்தையார் எழுதியிருந்தார்.

நான் இங்கு வரும்பொழுது மரகதம் 16 வயது நிரம்பியும் ருதுவாகாமல் இருந்தாள். இது எல்லோருக்கும் கவலையளித்தது. பருவ காலத்தைப் பிரதிபலிக்கும் அவய வங்களெல்லாம் நன்கு வளர்ந்து கண்டோர் மனத்தைக் கவர்ந்தது இந்தக் குறையை மேலும் அதிகப்படுத் திற்று. பாட்டன் பாட்டி முதலானோர். “இது ஏதேனும் தெய்வக் கோளாறாக இருக்கு”மென்று பல தெய்வங்களுக்கு வேண்டிக்கொண்டனர். அவர்கள் மனக்கவலை தீர இப்பொழுது மரகதம் குறையற்ற மங்கையாக மிளிர்ந்தாள்.

மரகதம் மாநிறமாயிருந்தாலும் நல்ல அழகி. அத்துடன் அவள் தந்தை கொழுத்த பணக்காரர். தமது ஒரே மகளுக்குச் சீதனமாக தமது திரண்ட சொத்தின் ஒரு பகுதியை எழுதி வைப்பதாகச் சொல்லிக்கொண்டி ருந்தார். இப்படிப்பட்ட இடத்தை விட்டுவிட யார்தான் துணிவர்? என் தந்தையார் என்னைத் துரிதமாக அழைத்திருந்ததின் காரணம் இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதல்லவா?

சுந்தரியின் பேரழகில் மனத்தைப் பறிகொடுத் திருந்த எனக்கு இந்தக் கடிதம் வேம்பெனக் கசந்தது. ஓரோர் சமயம் என் மாமன் மகள் மரகதத்தை மணப்பதால் கிடைக்கும் கவலையற்ற சுக வாழ்வை எண்ணி மனம் பேதலிக்கும். மறு விநாடி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சுந்தரியின் ஈடு இணையற்ற காத லுக்கு அது ஈடாகுமா என்று அதே மனம் எண்ணிக் குழம்பும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. சுந்தரியின் 18-வது பிறந்த நாள். எனது அன்பளிப்பாக பட்டுத் துணிகளும் 16 பவுனில் ஒரு கழுத்துச்சங்கிலியும் வாங்கி அளித்தேன்.

தை பூசத்தன்று என்னை அடித்து வீழ்த்திய அந்த முரட்டு மனிதரும் அன்று வந்திருந்தார். அந்த அம்மா ளின் பெரிய தந்தையின் பிள்ளைதானாம் அவர். மாமன் வரிசையென்று சில ஜவுளி வகைகளை வாங்கிக்கொண்டு வந்து, அவைகளை ஆடம்பரத்துடன் எல்லோருக்கும் காண்பித்து, “இதன் விலை இவ்வளவு; அதன் விலை அவ்வளவு” என்று பீற்றிக் கொண்டிருந்தார். இச் செய்கை என் பொறாமைத் தீயைக் கிளறிவிட்டுக் கொண்டிருந் தது. ஆனால், வாட்ட சாட்டமான அந்த முரட்டு மனிதரைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. இந்த மனிதன் எப்போது இந்த வீட்டை விட்டுப் போவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்று இரவு விருந்து. சுவையான கோழி பிரியாணி யுடன் பிராந்தியும் குடித்தோம். நான் அளவுமீறி குடித்துவிட்டேன் போலிருக்கிறது. குடி மயக்கத்தில் நான் சுந்தரியைப் பற்றி ஏதேதோ உளறியிருக்க வேண்டும். ஏனெனில், மறுநாளே எனக்கும் அவளுக்கும் திருமணம் புரிவிக்க ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன!

நான் “இரு தலைக் கொள்ளி எறும்பு” போலானேன். கலியாண நாள் நெருங்க நெருங்க, என் மாமன் மகள் மரகதத்தின் நினைவே மேலோங்கி நின்றது. “வலிய வருகிற சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுவதா? காதல் மயக்கத்தில் என் வருங்கால செல்வ வாழ்க் கையை வீசியெறிவதா? கானல் நீர் போன்ற இந்த அற்ப சுகபோகத்திற்காக நிரந்தரமான இன்ப வாழ்க் கையைத் துறப்பதா? “தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல்” இனி நான் மேற்கொள்ளும் காரியங்கள் இருக்கும். விஷயம் முற்றிவிட்டது. கடவுளே வந்து குறுக்கே நின்றாலும் இந்தக் கலியாணத்தைத் தடுத்து நிறுத்த முடியாதுபோல் தோன்றுகிறதே” யென்று மனங் கலங்கினேன்.

நான் கலங்கியபடியே குறிப்பிட்ட நாளில் எனக்கும் சுந்தரிக்கும் திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

வெகு விரைவில் எனது இல்லற வாழ்க்கை கசந்து விட்டது. அன்பும் அழகுமுள்ள மனைவி, தாயன்பு கொண்ட மாமியார், கவலையற்ற வாழ்க்கை வசதிகள் யாவும் இருந்தும், இந்தப் பாழும் மனம் மட்டும் இந்தியாவிலுள்ள மரகதத்தை மணந்து கொண்டிருந்தால் எனது உற்றார் பெற்றோரிடையே எவ்வளவு கண்ணியமாக இருக்கலாமென்று கோட்டை கட்டத் தொடங்கிற்று.

என் கவலையறியாது சுந்தரி மனம் குழம்பினாள். ஏதேனும் விபரீதம் நேருமோவென்று மாமியார் அஞ்சி நடுங்கினார். என் உள்ளக்கிடைக்கையை வெளியிடத் துணிவின்றித் தவித்துக் கொண்டிருந்தேன் நான்.

வருடமும் இரண்டாகிவிட்டது. நானும் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானேன்.

ஐயா, கதாசிரியரே! என் வரலாற்றின் இறுதிக் கட் டம் நெருங்குகிறது. இனிமேல்தான் நீர் கவனமாகக் கேட்கவேண்டும். என் மனத் துயரம் மாறுவதற்குரிய மார்க்கத்தைக் கூறவேண்டும்.

என் மனைவிக்கு மாமன் உறவு கொண்ட அந்த முரட்டு மனிதர் இப்பொழுது அடிக்கடி என் இல்லத்திற்கு வர ஆரம்பித்தார். இது எனக்கு வெறுப்பை மூட்டிற்று. பொறாமைத் தீயை கிளப்பிவிட்டது. அவரைவிட உடல் வலு குறைந்தவனும் கோழையுமான எனக்குத் தாழ்வுணர்ச்சியின் காரணமாக அம் மனிதர் மீதும் என் மனைவி மீதும் சந்தேகம் உண்டாயிற்று.

சுந்தரியுடன் வீண் வம்பு வளர்த்து, சண்டையிட்டு என் அதிருப்தியைக் காட்டிக் கொள்ளலானேன். தினந் தோறும் பொழுது புலர்ந்ததும் ஆத்திரம் நிறைந்த என் குரல்தான் முதலில் கேட்கும். அதைத் தொடர்ந்து நாள்முழுவதும் முணுமுணுப்பும் இறைச்சலும் சண்டையுந்தான்.

சில சமயங்களில் சுந்தரி எதிர்த்து வாதாடுவாள். அவளுக்குத் துணையாக அந்த அம்மாளும் சேர்ந்து கொள்வார்கள். இந்தச் சமயங்களில் அந்த முரட்டு மனிதர் வந்துவிட்டால் யாதும் நிகழாததுபோல் இருவ ரும் அடங்கி ஒடுங்கி நழுவிப் போய்விடுவார்கள். குடும் பச் சச்சரவுகளை வெளியாருக்குக் காண்பிக்கக் கூடாதென்ற உயரிய மனப்பான்மையோ, எனக்கும் அவருக் கும் ஏதேனும் அடிதடி சண்டை விளையுமென்ற அச்சமோ அறியேன்.

ஆனால், கயவனாகிய நானோ இந்தியாவிலுள்ள என் மாமன் மகளுக்கும் அவள் செல்வத்திற்கும் ஏக்கம் பிடித்து இங்கு குற்றமற்றவர்கள் மனம் கொதிக்க ஏசிப் பேசி இழிவு தேடிக்கொண்டேன். அது மட்டுமல்ல. இரகசியமாக சென்னைக்குச் செல்லும் கப்பலுக்கு டிக் கெட் ஒன்று வாங்கி, யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் கப்பலும் ஏறிவிட்டேன்.

ஊரில் போய்ப் பார்த்த பிறகுதான் அங்குள்ள நிலைமை தெரிந்தது. என் மாமன் எனக்காகச் சில மாதங் கள் காத்திருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், என்னைவிட நல்ல வரன் அவருக்குக் கிடைத்ததும் தமது உறுதியைத் தளர விட்டுவிட்டார். பி.ஏ பட்டம் பெற்ற அரசாங்க ஊழியரான மற்றொருவருக்கு மரக தத்தை மணமுடித்துவிட்டார்.

என் தந்தையார் எவ்வளவோ எதிர்த்துப் பார்த்தாராம். அவர் முயற்சி பலிக்கவில்லையாம்.

உலகமே இப்பொழுது தலை கீழாகச் சுற்றுவதுபோல் எனக்குத் தோன்றிற்று. மனமிடிந்து பித்தனைப்போல் திரிந்தேன்.

இதற்கிடையில் கையிலிருந்த பணமும் செலவழிந்து போயிற்று. ஒரு நாள் போவது ஒரு யுகம் போல் தோன்றிற்று.

சுந்தரிக்கு இழைத்த அநீதியை நினைந்து உருகினேன். அதே கவலையால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானேன். பெற்றோரும் மற்றோரும் அருகிலிருந்து ஆறுதல் கூறி என்னைத் தேற்ற முயன்றனர்.

ஆறு மாதங்கள் பறந்தோடின. சுந்தரியிடம் அழுது முறையிட்டு மன்னிப்பு பெற்றாலன்றி என் மனம் சாந்தி யடையாதென்று தோன்றிற்று. கப்பல் டிக்கெட்டுக்கு ஒரு நண்பனிடம் கடன் வாங்கி, சிங்கப்பூரிலிருந்து இரக சியமாக இங்கு வந்ததைப் போலவே யாருக்கும் தெரி யாமல் கப்பலேறி, திரும்பவும் சிங்கை வந்து சேர்ந் தேன்.

என் ஏமாற்றத்தை என்னென்று சொல்ல? இங்கு வந்து பார்த்தால், சுந்தரியையும் காணோம், மற்றவர் களையும் காணோம். சுந்தரி என் விவாகத்தை ரத்து செய்துவிட்டுத் தன் மாமனையே மறுமணம் புரிந்து கொண்டாளாம். அவர்கள் எல்லோரும் இப்போது பினாங்கில் இருக்கிறார்களாம்.

சுந்தரியைக் குறை கூற என்னால் இயலாது. அவளைக்கண்டு, என் தவறுகளைக் கூறி அவள் மன்னிப்பைப் பெற வேண்டுமென்றே துடிக்கிறேன். ஆனால், எந்த முகத்தோடு அவள் முகத்தில் விழிப்பேன்?

எனக்கு அன்னமளித்த அந்தச் சைவர்தான் எனக்கு ஆறுதல் கூறி, மீண்டும் எனக்கு அன்னம் படைத்து வருகிறார். இதற்கு என்ன செய்யலாம்? என் மனக்கவலை தீரும் மார்க்கம் என்ன்?” என்று அந்த மனிதர் தமது வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தார்.

இப்பொழுது அவருக்கு எனது கருத்தைக் கூற எளிதாகப் போய்விட்டது.

“நண்பரே! உம்மைப் போன்ற மனோபாவம் கொண்டவர்கள் தற்போது ஒரு சிலரே இருக்கிறார்கள்.

இங்குமில்லாமல் அங்குமில்லாமல் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக அல்லற்படுகிறார்கள். இந்நாட்டுப் பெண்மணிகளைக் கடைச் சரக்குபோல் மதித்து நடக்கிறார்கள். இங்கு இருக்கும்வரை, கணவன் – மனைவி என்று சுகமனுபவித்துவிட்டு, சமயம் வாய்த்ததும் இங்கு மணந்த மனைவிகளைப் புறக்கணித்துவிட்டு, இந்தியாவுக்குக் “கம்பி நீட்டி விடுகிறார்கள்!” உங்களைப் போன்றவர்களால்தான் இந்தியாவின் பெருமை குலைகிறது. அண்டி வந்தவரை ஆதரிப்பதும், கடமை தவறாதிருப்பதும் தமிழனின் தலையாய சிறப்பு. அதைக் கெடுக்கப் புல்லுருவிகள் போல் நீங்கள் தோன்றியிருக்கிறீர்கள்.

“நீர் சுந்தரியிடம் மன்னிப்பு பெறவேண்டியதில்லை. உமக்கு நல்ல பாடம் கற்பிக்கவே அந்தப் பெண்மணி மறுமணம் புரிந்து கொண்டார். இனி, உம் பச்சாதாபத்தை அவர் எதிர்பார்க்க வேண்டியதில்லை. உம் காரியத்தைப் பார்த்துக்கொண்டு நீர் போம்.” என்று எச்சரித்தேன்.

“ஐயா! உம் அறிவுரைக்கு நன்றி. நீர் இவ்வரலாற்றைக் கதையாக எழுதினால். கதையின் தலைப்பு “மத்தாப்பு சுந்தரி” என்று இருக்கட்டும். பிரகாசமான ஜோதியை ஒருகணம் காட்டிவிட்டு மறையும் மத்தாப்பு போல, சுந்தரி என் வாழ்க்கையில் கலந்து ஒளி வீசி மறைந்துவிட்டாள்” என்றார்.

அதை முன்னிட்டுத்தான் இதன் தலைப்பு “மத்தாப்புச் சுந்தரி”

– 1949, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *