பக்கத்து வீட்டுக்காரி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 7,490 
 

எங்கள் காலனியில் பக்கத்து வீடு திறந்திருக்க .. யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தேன்.

” என்னங்க. ..! ” என் மனைவி காபியும் பூரிப்புமாக எதிரே வந்தாள்.

” என்ன. ..? ” காபியைக் கையில் வாங்கிக்கொண்டு பார்த்தேன்.

” பக்கத்து வீட்டுக்குக் குடி வந்தாச்சு.”

” யார். .? ” காபியை உறிஞ்சினேன்.

” ஒரு பெண் ! ”

” பொண்ணா. .? ! ”

” ஆமாம். அம்மா, அப்பாவோட சண்டையாம்! . தனியே வந்துட்டாளாம் ! ”

” கலியாணமாகிடுச்சா. .? ”

” ஆகி. . விவாகரத்து ஆனவள். ”

” குழந்தைங்க. .? ”

” இல்லே. . தனி ஆள். ! ”

” என்ன செய்யிறாளாம். ..? ”

” ஏதோ. . ஒரு கம்பெனியில வேலையாம். ..! ”

‘ அழகா இருக்காளா. .? ‘ – கேட்க ஆசை. கேட்டால் …..தர்மபத்தினி சும்மா விடுவாளா. .? !! அடக்கிக்கொண்டேன்.

” எல்லாம் நீயா போய் விசாரிச்சியா. .? ”

” பின்னே. ..? ”

” தலைவலின்னு வீட்டுல இருந்ததுக்கு இந்த வேலை பார்த்தியா. .? ” காலி டம்ளரைக் கீழே வைத்தேன்.

” பக்கத்துல துணை இல்லேயேன்னு எத்தனை நாள் தவமிருந்தேன் தெரியுமா. .. அதான் வந்ததும் போய் விசாரிச்சிட்டேன். ”

” நல்லது ” நகர்ந்தேன்.

”எக்ஸ்கியூஸ்மீ. ..” – வாசலில் ஒரு அப்ரசரஸ் நின்றாள்.

” வாங்க வாங்க. ..” என் மனைவி முந்திக்கொண்டு ஓடிப்போய் வரவேற்றாள்.

” இவுங்கதான் பக்கத்து வீட்டுக்கு குடி வந்த்திருக்கிறவங்க. .” உள்ளே வந்த அவளை எனக்கு அறிமுகப்படுத்தினாள்.

” வணக்கம் ” சொன்னேன்.

அவள் கூச்சத்துடன் வணக்கம் சொல்லிவிட்டு. ..

” ஒரு உதவி. …” மெல்ல சொல்லி கையைப் பிசைந்தாள்.

” என்ன. .? ” என் மனைவி கேட்டாள்.

” வீட்டுக்குக் கொஞ்சம் பொருள் வாங்கனும் …! நான் வர்ற வரைக்கும் வீட்டு சாவி இங்கே இருக்கட்டும்!.” – நீட்டினாள்.

” அதுக்கென்ன …? ” மனைவி வாங்கிக் கொண்டாள்.

அவள் திரும்பிப் போனாள்.

நான் அறைக்குப் போய் அலுவக வேசம் கலைத்துவிட்டு, குளிர்சாதனப்பெட்டியில் குளிர்ந்த நீர் குடித்து விட்டு, தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தேன் .

ராதாவும், ராஜனியும்… ஆடல் பாடல் … ஆடினார்கள்.

அதற்குள் என் மனைவி மிக்ஸியில் மாம்பழச்சாறு அடித்துக்கொண்டு வந்தாள்.

” ஆளை பார்த்தால் நல்ல மாதிரி தெரியுதுல்லே. .! ‘ என்னிடம் கொடுத்துக் கொண்டே பக்கத்தில் உட்கார்ந்து கேட்டாள்.

” ம்ம். ..” என் கண்கள்… திரையில் இருந்தது. வாயில்… மாம்பழச்சாறு இனித்தது.

” அப்பா. அம்மாகிட்ட என்ன சண்டையா இருக்கும். .?!…. ”

” தொணதொணக்காம இரு. ..” அதட்டிவிட்டு திரையை ப் பார்த்தேன்.

நான் கொஞ்சம் மனோதத்துவம் தெரிந்தவன். பெண்கள் பேசுகிறார்களே என்று நாமும் அவர்களுடன் சேர்ந்து அடுத்தவளைப் பற்றிப் பேசியினால் சந்தேகப்படுவார்கள். அதை விடுத்து அதை விரும்பாதவன்போல் அலட்சியமாக இருந்தால் சந்தேகப்பட மாட்டார்கள். சந்தோசப்படுவார்கள்.

கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் சிறு மூட்டையுடன் வந்தாள்.

” என்ன அது. .? ” என் மனைவி சாவியைக் கொடுத்துக் கொண்டே கேட்டாள்.

” சமைக்க அலுமினியப்பாத்திரம், கொஞ்சம் மளிகை. ”

” இனிமேதான் சமைச்சி சாப்பிடலாம்னா. ..என் வீட்டிலேயே சாப்பிடலாம். ” இவள்.

” நன்றி. நான் ஓட்டல்லேயே முடிச்சிட்டு வந்துட்டேன். ” அவள்.

”சிரமம் பார்க்காதீங்க. பக்கத்துப் பக்கத்து வீடு. உதவி ஒத்தாசையா இருக்கணும். ”

” சரிங்க. .” அவள் போய்விட்டாள்.

இரவு வெகுநேரம்வரையில் அவள் வீட்டில் விளக்கு எரிந்தது.

‘ வாங்கி வந்த சாமான்களை எடுத்து வைப்பாள். அல்லது படிப்பாள். ! ‘ – கண்களை மூடினேன்.

என் மனைவி குறட்டை விட்டாள்.

‘ ஆள் அசத்தும் அழகு. தனியாக இருக்கிறாள். விவாகரத்து வாங்கியவள். தாம்பத்திய ருசி கண்டவள். கொஞ்சம் முயற்சி செய்தால் வளைத்து விடலாம். !’ – உள்ளே குரங்கு மனம் குட்டையைக் குழப்பியது.

இது ஆண்களுக்கே உள்ள அடிப்படையானது. அழகான மனைவி இருந்தாலும் அசிங்கமாக இருக்கும் அடுத்தவளைப் பார்த்தால் சபலப்படும் சாபக்கேடு.!!

‘ எப்படி நெருங்கலாம். .? ‘ புரண்டு புரண்டு யோசனை செய்தேன்.

கடைசியில் மனம் மின்னலடித்தது.

” இனிமே நீயும் நானும் வேலைக்கு ஒண்ணாப்போய் ஒண்ணா வரணும்ன்னு அவசியமில்லே… வசந்தா. .! ” காலையில் கண் விழித்ததுமே அடித்தளம் போட்டேன்.

” ஏன். ..? ”

” ஒருத்தொருக்கொருத்தர் காத்துக்கிட்டிருக்க வேண்டியதும்மில்லே. நீ புறப்பட்டா நீ வந்துடலாம். நான் புறப்பட்டா நான் வந்துடலாம். ”

” புரியும்படி சொல்லுங்க. ? ” – அடுப்படியில் அவள் வேலைப்பார்த்துக்கொண்டே காது கொடுத்தாள்.

” பக்கத்து வீட்ல நாம சாவி கொடுத்துட்டுப் போனோம்ன்னா. .. யார் அலுவலகம் விட்டு முன்னே பின்னே வந்தாலும் வீட்டைத் தொறந்து வேலையைப் பார்க்கலாம். ”

” நல்ல ஐடியாங்க. குடித்தனம் மாறினதுனால அவள் ஒரு வாரம் விடுப்புன்னு கூட சொன்னாள். செய்யலாம்ங்க. .” என் மனைவி சம்மத்தித்து விட்டாள்.

அதுபோல ஆயத்தமாக கிளம்பி….

” விடுப்புல தானே இருக்கீங்க. நாங்க வந்து சாவியை வாங்கிக்கிறோம். ” வசந்தா கொடுக்க. .நான் வாசலில் ஸ்கூட்டர் மீது தயாராக இருந்தேன். வழக்கம் போல் வசந்தாவை அவள் அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு நான் என் அலுவலகத்திற்குப் போகலாம் ! எண்ணம்.

அலுவலகத்தில் வேலை ஓடவில்லை.

‘ ஒரு மணி நேரம் முன்னதாகப் போய் அவளிடம் சாவி வாங்கும் சாக்கில் கையைத் தொடலாமா. .? இல்லை. ..அர்த்தமான பார்வை பார்க்கலாமா. ..? உதவி கேட்பதாய் உள்ளே அழைக்கலாமா. .? ‘ நிறைய யோசனைகள்.

‘ எந்த வழியிலாவது நம் மனது சரியில்லை என்பதைக் காட்ட சின்ன ‘க்ளூ ‘ கொடுத்து விடவேண்டும்! ‘ – மெல்ல நேரத்தைப் போக்கி ஒரு மணி நேரம் முன்னதாகவேப் புறப்பட்டேன்.

எனக்கு முன் வீட்டு வாசலில் வசந்தா இருந்தாள். ! – திக்கென்றது.

” நானும் நேரத்தோட வந்தாச்சு. தலைவலின்னு சீக்கிரம் வந்தேன். வீடு பூட்டி இருக்கு ” சொன்னாள்.

” நானும் அதே கேசுதான். ” சமாளித்து…….

” ஆளில்லையா. .? ” கேட்டேன்.

” எங்கேயோ வெளியில போயிருக்காப்போல. உட்காருங்க. வந்ததும் வீட்டுக்குள்ள போகலாம். ” படியில் உட்கார்ந்தாள்.

‘ மாட்டாமல் தப்பித்தோம் ! இன்றைக்கில்லாவிட்டால் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் !’ உட்கார்ந்தேன்.

அரை மணி நேரம் கழித்து எதிர்முனை பாட்டி வந்தாள் .

” என்ன தம்பி நீங்க இங்க உட்கார்ந்திருக்கீங்க. .? ” கேட்டாள்.

” ஏன். ..? ”

” நீங்க வீடு மாறிட்டதா சொல்லி நேத்தி வந்த பொண்ணு உங்க வீட்டு சாமான்ங்களையெல்லாம் லாரியில ஏத்திக்கிட்டு வந்தாளே…..! ” – அவள் சொல்லி முடிக்கவில்லை. ..

வசந்தா, ” ஐயோ…! ” அலறினாள்.

எனக்கு மயக்கம் வந்தது. !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *