கடிவாளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 7,742 
 

சாயங்காலம் வந்துடுவியா? இல்லை ரவைக்குத்தான் வருவியா, சொல்லிட்டு போ, சேர்த்து வடிக்கணுமா வேணாமா? என்று கேள்வியை எறிந்து விட்டு பதில் வராமல் போகவே, குடிச்சுட்டு வந்தா கஞ்சி கிடையாது சொல்லிப்புட்டேன்! ஆமா! என்று உலை அரிசியைக் களைந்து அடுப்பில் ஏற்றி பானையில் போட்டவாறே வெளம் வந்தது போல கத்தினாள் மிளகி.

வந்துடுதேன்… புள்ள! சோலியா போகையில… மணி குறிச்சிட்டா வரமுடியும், ஆபீஸர் உத்யோகமா பாக்குறேன்… முன்னபின்னா ஆனா என்ன கெட்டுப் போகுதாம்? என்று இழுத்தவாறே, கைலியில் சுற்றி சொருகியிருந்த பீடிக்கட்டில் கடைசிப் பீடியை எடுத்துக் கொண்டு, பேப்பரை கசக்கி அடுப்பில் அங்கிருந்தவாறே எறிந்தான். அது அடுப்பில் விழாமல், நீட்டிக்கொண்டிருந்த விறகு முனையில் பட்டு அங்கேயே விழுந்தது. திரும்பி அவனை முறைத்தாள் மிளகி. மிளகியின் கணவன். அவளின் தாய்மாமன், அவளுக்கும், அவனுக்கும் பதினாலு வருஷ வித்யாசம். சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்றெல்லாம் இல்லை, இவ தான் அழகர் மாமனைத்தேன் கட்டுவேணுண்டு, கட்டிக்கிட்டா! சிலசமயம், ஏன்டா அப்படி கிறுக்குப் பிடிச்சு அலைஞ்சோம்?னு அவளுக்குத் தோணும்.

கசக்கி எறிந்த பேப்பர், முன்னாடியே விழுந்தது, அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. எதைப்பாத்தாலும் இப்படித்தான் தூக்கி எறியறது! கையில கொடுக்குறது தானே! நட்டமா நிண்ணு எறியாட்டி தான் என்ன? என்றவள், அதை எடுத்து அடுப்பினுள் எறிந்தாள். பொசுக்கென்று எரிந்து கருகியது.

கொஞ்சம் கொள்ளிக்கட்டைய உருவு… பீடி பத்தவச்சுட்டுத் தாரேன்! என்றவன் குனிந்தவாறே அவள் முதுகில் வழியும் வேர்வையப் பார்த்தான். கருப்புத் தோலுக்கும் அதுக்கும் மினுங்கியது முதுகுத்தோல். வேக்காடாய் இருந்ததால், மிளகி, முந்தானை பிரிபோல ஆக்கி கழுத்தில் சுத்தி முன்பக்கம் போட்டிருந்தாள். அரக்கு சிவப்பு ரவுக்கையும், அவ முதுகும் ஒண்ணோடொண்ணு ஒட்டிப்போயி ஒரே மாதிரி தெரிந்தது. பின்பக்கம் தளர்ந்திருந்த புடவை மடிப்பு உள்ளே போகும் முதுகுத் தண்டு, திரண்டிருந்த முதுகுப்புறத்தின் குழிவுக்குள் மறைந்திருந்தது. புட்டம் ரெண்டையும் கிள்ள வேண்டும் போலத் தோன்றியது அவனுக்கு. அடக்கிக் கொண்டான். அவளுக்கு வேண்டாம் எனும்போது தொட்டால், அவளுக்கு கோபம் வரும்.

மிளகிக்கும் இவனுக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. மிளகி என்றால் அழகருக்கு நிறைந்து நிறைந்து தளும்பும் பிரியம். மிளகி பதுக்கு பதுக்குண்ணு ஒரு மாதிரியான அழகு. வெயில்ல கொள்ளைத்தொலவு இருந்து பார்த்தாலே, மினுக்குன்னு இருக்கிற கருப்பு. அழகரின் பெரிய அக்காவோட ஒரே பொண்ணு. அக்கா போல நெறம் இல்லேன்னாலும், களையான முகம். ரெண்டு மூக்கும் குத்தி, கோஸ் மூக்குத்தி போட்டிருப்பாள். காதில வெறும் வேப்பங்குச்சி, அல்லது வெளக்கமாத்து குச்சி. சன்னமா ஒரு சங்கிலியும் மஞ்சக்கயிறும் பாம்பு மாதிரி பிண்ணிக்கிடக்குற கழுத்து. காதோரமும், பிடரியிலும், கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்து விட்ட மயிர். தூக்கி சொருகிய கொண்டையில் பிரிபிரியாய் சிலும்பி நிற்பதை பார்க்க பார்க்க அழகாய்த் தெரிந்தாள் மிளகி.

மிளகிக்கு, சின்ன பொய் சொன்னாலும் பிடிக்காது, தெரிஞ்சுட்டா திங்குதிங்குன்னு குதிப்பா. அதுக்கப்புறம் ரெண்டு நாளைக்குப் பேசமாட்டாள், சாப்பாடு வைக்கிற தட்டு, கிண்ணம் எல்லாம் அவளுக்கு பதிலா சத்தமாப் பேசும். தன் மேல இவ வச்சிருக்கிற பிரியம்தான் தான் யோக்கியமா இருப்பதற்கு காரணம் என்று நினைத்துக் கொள்வான் அடிக்கடி. ஆனாலும் இப்ப உள்ள நடைமுறைக்கு பொய்யோ, சின்ன பித்தலாட்டமோ இல்லாமல் இருப்பது எப்படி என்று அவனுக்கு இன்னும் தெரியவில்லை.

கொள்ளிக்கட்டைய கையில் தராமல், இந்தா! குனிஞ்சு பத்த வைச்சுக்கோ! என்று நீட்டினாள், அவனின் முகத்துக்கு நேராக. எப்போதுமே மரியாதை கொடுத்ததில்லை, போ வா பொட்டக்கண்ணா தான். நுனிக்கங்கில் பீடியை பத்தவச்சு, பல்லில் கடித்தபடி ரெண்டு இழு இழுத்தவன், போதும் புள்ள! என்று வெளியே கிளம்பினான். இந்த பீடி சனியனைத் தான் குடிக்காம இருந்தா என்ன? பக்கத்துல வரும்போதே நாத்தம் குடலை பிரட்டும் அவளுக்கு. அவளோட அப்பா கூட சுருட்டு குடிப்பார், சேவல் மார்க் சுருட்டு. இவ தான் வாங்கிக் கொடுப்பா, வாயே குப்பைத்தொட்டி மாதிரி நாறும். இத எப்படித் தான் பிடிக்கிறாய்ங்களோ என்று நினைத்துக் கொண்டாள். அதிலும் குடிச்சிட்டு இல்லைன்னா பொய் சொல்லைல தான் ஆத்திரம் ஆத்திரமா வரும் அவளுக்கு. மிளகிக்கு, அவனோட வளப்புதான் சரியில்லை என்று தோன்றும் அனேக நேரங்களில்.

தெருவில் இறங்கி யோசித்துக் கொண்டே நடந்தான் அழகர். இன்னைக்கு ரெண்டு மூணு வெள்ளாட்டங்குட்டிய பிடிச்சாரணும். ஆறுமுகக்கோனார் கொட்டிலு பூரா செம்மறிக்குட்டிக தான் இருக்கு. வெள்ளாட்டங்குட்டின்னாத்தான் வெரசாத்தீரும். அதுலயும் தலையும், நுரையீரலும் மிஞ்சிப் போகும். தினம் நுரையீரலும், குடலும் சாப்பிட்டே அவனுக்கு அலுத்துப் போச்சு. அழகருக்கு தலைக்கறி தான் ரொம்ப பிடிக்கும். அதுவும் மிளகி வைக்கிற மணத்துக்கும், ருசிக்கும் அவ கால் மாட்டிலேயே கிடக்கலாம்னு தோணும். பக்குவமா அடுப்புல வாட்டி, அவ பண்ற குழம்பு, கொண்டா கொண்டான்னு இழுக்கும் அழகருக்கு, கூட ரெண்டு தட்டு உள்ள போகும்.

சிலசமயம் கறி வியாபாரம் சுத்தமா இருக்காது, புரட்டாசி மாசமும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளும் பொதுவாகவே கறி வியாபாரம் மந்தமாத்தான் இருக்கும். மிஞ்சுற கறியை, அப்படியே உப்புக் கண்டமாப் போட்டு, வீடெங்கும் கட்டி விட்டு தோரணமாய் தொங்கும் அது. கறி காய்ந்ததும், எடை குறைஞ்சு போகும். நாலஞ்சு கிலோ போட்டாத்தான், ஒரு கிலோ உப்புக்கண்டம் தேறும். அதனாலேயே அது வெலை கிராம் கணக்கில தான். பழைய சாதத்துக்கு, லேசா எண்ணெய் விட்டு வதக்கினா போதும், சட்டி திங்கலாம் என்று நினைக்கும் போதே அவனுக்கு எச்சில் ஊறியது.

அழகர் முழுநேர கறிக்கடைக்காரன் கிடையாது. ஞாயிற்றுக்கிழம மட்டும் தான் கடை போடுறது வழக்கம். முந்தி அவனோட அப்பா, சித்தப்பாங்க எல்லாம் ஒண்ணா இருந்தப்போ, சொந்தமாவே ஆட்டு மந்தை இருந்தது. இருநூறு முன்னூறு ஆடுகளுக்கு மேல் இருந்தது. பெரும்பாலும் வெள்ளாட்டங்குட்டிக தான், அதுவும் உசிலம்பட்டில இருந்து பிடிச்சுட்டு வந்தது. தெரிஞ்சவுங்களுக்காக மட்டுமே அறுக்க ஆரம்பிச்சு, அப்புறம் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் கடைபோடுறது ஒரு பழக்கமாயிடுச்சு, அவங்க அப்பா காலத்திலேர்ந்தே. வெள்ளாட்டங்குட்டி எல்லாத்தையும் வித்து திண்ண பின்னாடி கூட, சந்தையில வாங்கி விக்கிற பழக்கம் வந்துடுச்சு. ஒரு நாள்ல ஐந்நூறு ரூவா வரைக்கும் கிடைக்குங்குறதால, தொடர்ந்து பண்ணிக்கிட்டிருக்கான் அழகர்.

கூலிக்குத் தனியா ஆள் வைக்காததால, மிஞ்சுறது எல்லாம் அவனுக்குத் தான். மிளகியிடம் எப்போதும் முழுப்பணத்தைக் கொடுப்பதில்லை. இவனுக்கு என்று ஒரு கால்வாசிப்பணத்தை ஒதுக்கிவிடுவது வழக்கம், அதை அவளிடம் சொல்வது கிடையாது. குடிக்கிறதுக்கும், சீட்டு விளையாடுறதுக்கும் தனியா எடுத்து வச்சுக்கிறது அவளுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான், ரெண்டா பொளந்துறுவா, ஆனாலும் இவன் கேக்கும்போது அவள் காசு தருவதில்லை. அதனால இந்த குட்டி அறுக்குறத அவன் விடவில்லை.

அழகருக்கு தொழில்னு பாத்தா பால் பண்ணைக்கு கறவைக்குப் போறது தான், அங்க தினக்கூலி முப்பது ரூவா, தினமும் வேலையிருக்கும். ஈரோட்டில மெஷின் வச்சு தான் கறக்குறதாம், பண்ணையில. இவன் வேலை பாக்குற பண்ணையிலேயும் கொண்டு வரப்போறதா சொல்றாங்க என்று கேள்விப்பட்டதில் இருந்து இவனுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. மெஷின் வந்துட்டா வேலை இருக்காது, இவனைப் போன்ற ஆட்களுக்கு. ஒரு வேளைக்கு குறைஞ்சது இருபது மாடாவது கறக்கணும். இவனோட கறவை மட்டுமே நூறு லிட்டருக்கு மேல வரும். காலையில வந்து கறந்துட்டு, கொட்டில சுத்தம் செய்துட்டு, மாடக் குளிப்பாட்டிவிட்டுட்டு போகணும். அப்புறம், சாப்பாடு முடிஞ்சதும் ஒரு ரெண்டு மணிக்கு வந்து திரும்ப கறக்கணும். கட்டை விரலை மடக்கி, விளக்கெண்ணெய் தடவின காம்புகளை இழுக்கும் போது ஒண்ணும் தெரியாது. ஆனா சாயங்காலம் வீட்டுக்கு போகையில, குத்தவைச்சு உட்கார்ந்த முழங்காலும், கணுக்காலும், மடக்கி கறந்த கட்டை விரலும் வின்வின்னுன்னு தெறிக்கிற வலியில் உயிர் போகும். அதனால தான் அப்பைக்கப்போ அவன் குடிப்பதே, அதுவே கூடாது மிளகிக்கு.

அழகர் மாதிரி பால் பண்ணையில் பத்து பேருக்கு மேல வேலை பார்க்கிறார்கள். பால் பண்ணையில இருந்து பெரும்பாலும், இது ஓட்டல்களுக்கு தான் ரெகுலர் சப்ளை. அது போக பக்கத்துல இருக்கிற வீடுகள்ல இருந்து வர்ற சில்லறை கிராக்கிங்க!. அதிலிருந்து தான் இவனுக்கு அரை லிட்டர் போல கிடைக்கும். சேதுராமன் தான் போய் ஓட்டலுக்கெல்லாம் போடுறான். அவனுக்கும் ஓட்டல் சரக்கு மாஸ்டருங்களுக்கும் ஏதோ கணக்கு வழக்கு ஓடிட்டு இருக்குகிறது என்று பிறர் சொல்ல கேட்டிருக்கான். நிறைய காசு அடிக்கலாம், பொய்யா பால் கணக்கு எழுதி, கிடைக்கிற காசுல ஆளுக்கு பப்பாதி என்று பிரித்துக் கொள்வார்களாம். எப்படி இப்படி ஏமாத்துறத்துக்கு மனசு வருது என்று தோன்றும். ஆனாலும் இது போல பால் வினியோகம் செய்தால், கூடுதல் காசு கிடைப்பது எத்தனை உதவியாய் இருக்கும் என்பதை யோசிக்காமல் இல்லை அவன்.

சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு, மத்தியான கறவைக்காக உள்ளே நுழைந்தான். பட்டியக்கல் போட்ட தரையில் தண்ணித்தொட்டி, கஞ்சித்தொட்டி என்று இரண்டு வாய்க்கால்கள் போல கட்டி விடப்பட்டிருக்கும். தரையில் ஆழப்பதித்த கம்பிகள், மாடுகளின் எண்ணத்திற்கு தக்க இருக்கும். இது போல பனிரெண்டு வரிசைகள். உள்ளே நுழைந்ததும், சாணமும், மூத்திரமும், பால் கவிச்சியும் கலந்து ஒரு வாடை அடிக்கும். இது தான் பால் பண்ணையின் அடையாளம் என்று தோன்றும் அவனுக்கு. முதலாளி மாதத்துக்கு ஒரு முறையோ ரெண்டு முறையோ தான் வருவார். ஒரு மேனேஜர் அப்புறம் கணக்கு வழக்கு இத்யாதிகள் பார்க்கிறதுக்கு ஒரு ஆள், அது தான் ஆபீஸ். ரெண்டு மேஜை நாலு சேர், ஒரு மண்பானைத்தண்ணீர், ஒரு பீரோ, கொஞ்சம் கணக்கு புத்தகங்கள், பதிவேடுகள், சில பில் புத்தகங்கள், ஒரு டேபிள் பேன் இது தான் ஆபீஸ். மேனேஜர் பெரும்பாலான சமயங்களில் இருக்க மாட்டார். கணக்குப்புள்ள மட்டும் தான்.

உள்ளே நுழைந்து, கணக்கப்பிள்ளையைப் பார்த்து, வணக்கம் அண்ணாச்சி! என்று சலாம் வைத்தான். பதிலுக்கு வணக்கம், சொல்லாமல்,

இன்னைக்கு நீ கறக்க வேண்டாம். போயி, கிருஷ்ணவிலாஸுக்கும், அம்பீஸ் கபேக்கு மட்டும் பால் கொடுத்துட்டு வந்துடு. மத்த ஓட்டல்காரனுங்க அவனுங்களே ஆளணுப்பி வாங்கிக்கிறாங்களாம்.” “இன்னைக்கு சேதுராமனுக்கு உடம்புக்கு முடியலையாம், அவன் பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போச்சு! என்று முடித்தார்.

அவனுக்கு சந்தோஷம் தாங்கலை. கறக்க வேணாம் என்பது நிம்மதியாய் இருந்தது. அதும்போக ஓட்டலுக்கு பால் கொண்டு போகும் போது, சரக்கு மாஸ்டரிடம் பேசி, கொஞ்ச கமிஷன் நகர்த்த வேணும் என்று நினைத்துக் கொண்டான். கையில கொஞ்சம் அதிகம் காசு கிடைச்சா நல்லது தான். இவனோட கைச்செலவுக்கு ஆகும், மிளகிக்கு ஏதாவது வாங்கிட்டுப் போகலாம், ஆனா, ஏது என்னன்னு கேட்டு உயிர வாங்கிடுவா, அதனால் அவளுக்குத் தெரியாமல் இருப்பது தான் நல்லது. கேனுக்கு அஞ்சுலிட்டர் அதிகமாச் சொன்னாலும், இருபது கேனுக்கு, நூறு லிட்டர் ஆச்சு. லிட்டருக்கு பத்து ரூபாய்னாக் கூட ஆயிரம் ரூபாய், அதுல பாதி கிடச்சாலும் ஐந்நூறு ரூபாய் என்று விரல் விட்டு கணக்குப் பார்த்த போது சந்தோஷமாய் இருந்தது. மிளகிக்கு ஏதாவது வாங்கிட்டுப் போகலாம். அவளுக்குத் தெரிஞ்சு போய் கேட்டா என்ன பண்றது என்று யோசனை வேறு வந்தது அவனுக்கு. சமாளிச்சுக்கலாம் என்று இன்னோரு புறம் தோன்றியது.

கிருஷ்ணா விலாஸ் ஓட்டலுக்குப் போன போது ஓட்டலின் சைடில் இருந்த கதவை திறந்து விட்டார்கள், உள்ளே போய் கேனை இறக்க ஆளிருக்கிறதா என்று பார்த்தான். அங்கு வயதானவராய், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேஷ்டி கட்டி, தோளில் துண்டு போட்டிருந்தவரைப் பார்த்து, அண்ணே சன்முகம் அண்ணாச்சி இருக்காரா? என்றான். ஆரும்லே நீயு? என்றார் அவர். கோதா பால் பண்ணையில் இருந்து வருவதாய் சொன்னது, சேதுராமனுக்கு என்னாச்சுலே? என்றார். மேலுக்கு முடியலையாம், அவம்பொஞ்சாதி வந்து சொல்லிட்டுப் போனதா, கணக்கப்பிள்ளை சொன்னாரு என்றான். பையனுங்க யாரையாவது அணுப்புங்க! கேன, உள்ள கொண்டார என்று அவரைப் பார்த்தான். பார்க்கவே கொஞ்சம் சிடுசிடுன்னு விழற ஆள் மாதிரி தான் இருந்தார் அவர். வெள்ளையும் சொள்ளையுமா இருந்தாலும், குரலும், பார்வையும் தடிச்சு இருந்தது.

உள்ளே கிரைண்டரில் ஏதோ மாவாட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, ஏலே! போய் ஆறுமுகத்த வரச்சொல்லு என்று வருவான்! என்று இவனைப் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். மாவாட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்து, ஆருண்ணே இது? என்று கேட்க இவரு தாம்லே சம்முவ அண்ணாச்சி என்றான். அடப்பாவி, சேதுராமன் சொல்றதப் பாத்தா, ஏதோ தோள்ல கைபோட்டு பேசுற சேக்காளி மாதிரி சொல்வான், இவரு என்னடான்னா நம்மள மிரட்டுற மாதிரி பேசுறாரு என்று நினைத்துக் கொண்டான். கேன் தூக்க வந்தவன், கிரைண்டரில் மாவு அள்ளிக் கொண்டிருப்பவனைப் பார்த்து என்னலே கூப்பிட்ட? என்றான். மாவு அள்ளிக் கொண்டிருந்தவன், இவன் பக்கம் கையக்காட்டி, பால் கேனைத் தூக்கிட்டு வந்திரு! என்றான். கையை ஆட்டி ஆட்டிப்பேசியதில் மாவு புள்ளி புள்ளியாய் கீழே விழுந்தது. வந்தவன் சடைச்சுக்கிட்டே இவனைப் பார்த்து, எங்க? என்று கண்ணாலேயே கேட்டான். ரோட்டின் முன்னாடி நின்ற வண்டியைக் காட்டினான். எடுத்து உள்ளே வைத்தவுடன், சன்முக அண்ணாச்சியப் பாக்கணும் என்றான், கமிஷன் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையுடன்.

வந்தவர், என்னலே, சோலி முடிஞ்சிட்டா? கிளம்பும்! என்று சொல்லிவிட்டு திரும்பவும் உள்ளே போய்விட்டார். இவனுக்கு ஏனோ அந்த ஆள் இவனை அவமானப்படுத்தியது போல இருந்தது. மாவு அள்ளிக் கொண்டிருந்தவன், எதற்கோ சிரித்தான், தன்னைத் தான் கிண்டல் பண்ணுகிறானோ என்று தோன்றியது. ஒன்றுமே சொல்லாமல் வெளியே வந்துவிட்டான். திரும்பவும் வண்டியைத் தள்ளிக் கொண்டு அம்பீஸ் கபே போகலாம், அங்கேயாவது ஏதாவது தேறுதா பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே வண்டியை மிதித்தான்.

அங்கே ராமனாதன் தான் சரக்கு மாஸ்டர், பால் பண்ணைக்கு வந்திருக்கும் போது இவனும் பார்த்தது உண்டு. நல்லா சிரிச்ச முகம், அணுசரனையா பேசுவார். அங்கு இவனை பாலை இறக்கி வைத்தான், வந்தவர், நீங்க எதுக்கு தம்பி இதெல்லாம் தூக்குறீங்க? எப்படி இருக்கீங்க தம்பி? காப்பி ஏதாவது சாப்பிடுறீயளா? என்று சொன்னதோடு நிற்காமல், சமையக்கட்டுக்குள் நுழைந்து ஒரு காப்பியை எடுத்துக் கொண்டு வந்தார். பில்டர் காப்பி போல நல்ல மணமாய் இருந்தது, ஆனா காப்பி எதுக்கு இப்போ என்று தோன்றியது. ஒவ்வொரு கேனையும் மூடியைத் திறந்து பார்த்தவர். என்னவோ நினைத்துக் கொண்டு தலையை ஆட்டினார். இவன் காப்பியை உறிந்து கொண்டே அவரைப் பார்த்தபடி நின்றான். சரி தம்பி நான் வாரேன், ஜோலி கிடக்கு என்றார். அண்ணாச்சி… என்று இழுத்தான். இந்தா வச்சுக்கோ என்று கையில் இருந்த பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

இன்னைக்கு பொழப்பு இப்படி ஆச்சே? கேவலப்பட்டு போயாச்சே? என்று தலையைத் தொங்கப்போட்டபடி வீடு வந்து சேர்ந்தான். அப்போது தான் ஞாபகம் வந்தது வெள்ளாட்டங்குட்டிகள பிடிக்காம வந்துட்டமே? என்று. வாசலோரம் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான். வாசலில் கட்டியிருந்த அகத்திக் கீரைக்கட்டுகளைப் பார்த்தான். மண்டையடியா இருக்கு கொஞ்சம் வரக்காப்பி போட்டுத்தாரீயா? என்றான். இன்னைக்கு கறவை இல்லை புள்ள! கிருஷ்ணவிலாஸ் ஹோட்டல், பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குல அங்கயும், அம்பீஸ் கபே லயும் போய் பால் கொடுத்துட்டு வர்றேன் என்று சொல்லிக் கொண்டே, வாசலுக்கு முன்னால் தெரியும் சக்கரத்தைக் காட்டினான். பாலுக்கு பொய்க் கணக்கக் கொடுத்துட்டு, கமிஷன் அடிக்கிறான் சேதுராமன், ஓட்டல் சரக்கு மாஸ்டர்களோட சேர்ந்துக்கிட்டு! என்று மிளகியிடம் கதை சொல்ல ஆரம்பித்தான் அழகர். அவனுக்கு அதைச் சொல்லும்போது ஏனோ ஒரு மாதிரியான நிம்மதி இருந்தது போலத்தோன்றியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *