கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 18,153 
 

சைக்கிள் கொளத்து பாசாவை அடைந்திருந்தபோது, பின்சீட்டில் அமர்ந்திருந்த தம்பி காலியாயிருந்த முன் சீட்டை வேகமாகத் தட்டி சைக்கிளை நிறுத்தச் சொன்னான். இடப்பக்கம் ஒரு கலன் டின்னில் அம்பாட் செகி ரொட்டி மற்றும் கோப்பி ஓ-வும், மறுப்பக்கத்தில் கட்டிப்பால் சாக்கு சொருகப்பட்ட மூன்று கலன் வாளியும், பின்சீட்டில் தம்பியுமாக தள்ளி வந்த சைக்கிளை லேசான செம்மண் புழுதிப் பறக்க நிறுத்தினாள் அக்கா.

தன்னை இறக்கிவிடுமாறு கைகளை அக்காவை நோக்கி விரித்தப்படியே கெஞ்சினான் தம்பி. மெலிதாகத் தலையை அசைத்துக் கொண்டே தம்பியை பத்திரமாக இறக்கி விட்டாள் அக்கா. ‘வெள்ள பாப்பாத்தி, வெள்ள பாப்பாத்தி’ என குளத்து பாசாவின் திசையை நோக்கி கத்தினான் தம்பி. கொளத்து பாசாவின் ஊடே மெல்லிய ஒலியுடன் ஓடும் ஓடையின் மேலே வெள்ளை வண்ண பட்டாம்பூச்சிகள் கூட்டமாக பறந்துக் கொண்டிருந்தன. இன்னும் மறையாத காலைப் பனியினூடே ஈரமான இரப்பர் மரங்கள். ஓடையைப் பாவி செழித்திருந்த பசும்புற்கள். அக்காட்சி தன் வீட்டில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டியின் சித்திரத்தோடு ஒப்பிட்டு வியந்தாள் அக்கா.

அக்காவுக்குத் தோள்களில் இரு வெள்ளைச் சிறகுகள் முளைத்தன. வெள்ளை பட்டாம்பூச்சிகளின் கூட்டத்தோடு இணைந்து ஓடையின் மேல் பறக்கத் தொடங்கினாள். சிறகை அசைக்கும்போது உதிரும் பனி அக்காவின் உடலில் சிலிர்ப்பை உணரச் செய்தது. தம்பி தெளிந்த நீரில் அலைந்துக் கொண்டிருந்த கெண்டைகளை உற்சாகமாக பார்க்கத் தொடங்கினான். குனிந்து நின்றிருந்தவன் ஓடையில் விழுந்து விடாமல் இருக்க தோள்களைப் பற்றி கொண்டாள் அக்கா.

‘அக்கா, எனக்கு சின்ன மீன்தொட்டி வாங்கி தறீயா, மார்டின் வீட்ல இருக்கே அந்த மாதிரி’. மையமாக தலையாட்டினாள் அக்கா.

‘ஆனா கெண்ட மீனு வேணா, நீல கலாரு சண்ட மீனுதான் வளப்பேன்’. அதற்கும் மையமாக தலையாட்டு.

தலையாட்டுவதைத் தவிர வேறுவழியில்லை. இன்று கிளாஸ் துடைக்கச் செல்வது தோட்டத்தின் மூலையில் இருக்கும் ‘C’ வெட்டுக்கு. தம்பியைத் துணைக்கு நிச்சயம் கூட்டிச் செல்ல வேண்டுமென்பது அம்மாவின் உத்தரவு. காலையில் எழுப்பும்போதே முரண்டுப் பிடித்தான். ‘கொசு கடிக்குங்கா’ பாயில் கால்களை உதறியவாறே அடம்பிடித்தான். அம்மா வந்ததும் கேக் வாங்கி தர வேண்டுமென கோரிக்கை வைத்தான். அதுவும் கிஸ்மிஸ் பழ கேக்குதான் வாங்கி தர வேண்டுமென உறுதி வாங்கிக் கொண்டான். அதற்கும் மையமாக தலையாட்டு.

அக்கா வெள்ளை பட்டாம்பூச்சியின் நினைவில் மூழ்கியிருந்தாள். சென்ற இறுதியாண்டு சோதனைக்குப் பின் இந்திரா டீச்சர் வகுப்பினில் கேட்டக் கேள்வி இப்பொது அவள் நினைவை வருடிச் சென்றது. பெரியவர்களானதும் என்னவாக விருப்பமென டீச்சர் கேட்டிருந்தார். அவள் தருணம் வந்தபோது பாப்பாத்தியாக வேண்டுமென பதிலளித்தாள். டீச்சரைத் தவிர வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் சிரித்தார்கள். மற்றவர்கள் போலவே ஆசிரியையாகவோ, மருத்துவராகவோ என்றிருந்தால் சிரித்திருக்க மாட்டார்களோ? என்ற யோசனையில் இருந்தாள் அக்கா.

‘பாப்பாத்தியில்லமா, பட்டாம்பூச்சினு சொல்லு’ என்று திருத்திவிட்டு ‘ஏன் அப்படி ஆகுனும்னு ஆசப்படற?’ மீண்டும் கேட்டார். தோட்டப்புறத்தில் பாப்பாத்தியென்றுதானே சொல்வவர்களென அக்கா நினைத்துக் கொண்டாள்.

சிரித்து மழுப்பிவிட்டாலும் அக்காவிடம் பதிலில்லாமலில்லை. அக்காவுக்கு மனுஷியாக இருக்கவே பிடிக்கவில்லை. பட்டாம்பூச்சியாக மாறிவிட்டால் அம்மாவைப் போல் சாண் வயிற்றுக்காக இப்படி கஷ்டபடவேண்டியிருக்கிறதே என அங்கலாய்க்கத் தேவையில்லை. மாத இறுதியில் பக்கத்து வீட்டுகாரர்களிடம் அரிசியோ பருப்போ கடன் வாங்க வேண்டியதில்லை. ‘ஓராங் துவா’ குடிக்க காசு கொடுக்காதததால் அப்பாவிடம் அடிவாங்கி அழ வேண்டாம். இரண்டு நாள் தேய்த்துக் குளித்தாலும் துர்நாற்றம் போகாத கட்டிப்பால் துடைக்கத் தேவையில்லை. பட்டாம்பூச்சியாக இருந்தால் சோற்றுப் பருக்கையில் நூறில் ஒரு பகுதி போதும். வெள்ளை பட்டாம்பூச்சியை நினைத்த மாத்திரமே அக்காவிற்கு வெள்ளைச் சிறகுகள் முளைத்துவிடும்.பிறகு பறப்பாள். பறப்பாள். எல்லையற்ற வானத்தில் பறந்து கொண்டே இருப்பாள்.

மீண்டும் தொடர்ந்த பயணத்தில் அவர்கள் ஒரு மேட்டுப் பகுதியைக் கடக்க வேண்டியிருந்த சமயம் சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது. அக்காவால் அந்த பெரிய சைக்கிளின் இரும்புகளிடையே கால் நுழைத்து ஓட்ட மட்டும்தான் இதுவரை முடிகிறது. காலை மறுபக்கம் தூக்கிப் போட்டு சீட்டில் அமர்ந்து ஓட்ட இன்னும் ஒரு வருடம் ஆகலாமென அம்மா சொல்லியிருந்தார். சைக்கிளிலிருந்து அக்காவால் கீழிறக்கி விடப்பட்டத் தம்பி சைக்கிளைப் பின்னாலிருந்து தள்ள உதவினான். சைக்கிள் சிரமப்பட்டு மேட்டுப்பகுதியை கடந்துக் கொண்டிருக்கும் சமயம் அக்காவின் முதுகில் வெள்ளைச் சிறகுகள் முளைத்தன. அக்கா அப்படியே சைக்கிளையும் தம்பியையும் தூக்கிக் கொண்டு மேட்டுப் பகுதியைப் பறந்துக் கடக்கத் தொடங்கியிருந்தாள்.

‘C’ வெட்டுக்கான பெரிய பாதை முடிந்து கிளைப்பாதையின் தொடக்கத்தில் சைக்கிள் தள்ளுவதை மெதுப்படுத்தினாள் அக்கா. மரங்கொத்தியின் கொத்தும் டொக் டொக் ஓசையைக் கவனித்துக் கேட்டாள். கிளைப்பாதையில் இருபது நிமிடம் நடந்தால் வெட்டு வந்து விடும், இரப்பர் மரங்களின் வேர்கள் கிளைப்பாதையின் ஊடுருவி பாம்புபோல் படுத்திருக்கும். சில வேர்கள் கால் தடுக்கி கீழே விழச் செய்யும் அளவுக்குப் பெரியவை. தம்பி தலையைச் சுற்றிப் பறந்த கொசுக்களை விரட்டிக் கொண்டே முன்னால் நடக்க, அக்கா சைக்கிளைத் தள்ளிக் கொண்டே கவனமாக பின்னால் நடக்கத் தொடங்கினாள்.

அவர்கள் C வெட்டை அடைவதற்கும் பக்கத்து வெட்டு பக்சிக் அமாட்டின் மகன்களான ரிசால் மற்றும் சிடேக்கும் தங்கள் தந்தையின் பழைய ஹோண்டா மோட்டார் சைக்கிளில் தீம்பாரின் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும் சத்தத்துடன் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. அவர்கள் அக்காவைப் பார்த்து மெலிதாகப் புன்னகைப் புரிந்தார்கள். அக்காவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

அம்மா இன்று B வெட்டில் மரம் சீவிக் கொண்டிருக்கிறார். B வெட்டில் நேற்றே கட்டிப்பால் துடைத்தாகிவிட்டது. எப்போதும் மரம் சீவுவதும் கட்டிப்பால் துடைப்பதும் ஒரே நாளில் நடப்பதுதான். மரத்திற்கு மருந்து பூசப்படும் வாரங்களில் மட்டும் கட்டிப்பாலை ஒரு நாள் முன்னதாக துடைத்துவிடும் வழக்கம். மரத்துக்கு மருந்து பூசும் சமயங்களில் பால் அதிகமாக வடியும் என்பதால் கட்டிப்பாலும் நிறைய பால் மங்குகளில் உறைந்துக் கிடக்கும். இடுப்பில் கம்பிச் சொருகப்பட்டிருக்கும் டின்னைக் கட்டி மரம் சீவிக் கொண்டே கட்டிப்பாலையும் துடைத்துக் டின்னில் சேகரித்துக் கொள்வதுதான் அம்மாவின் வழக்கம். சாதாரண சமயங்களில் இரண்டு பத்திக்குப் பிறகு நிறையும் கட்டிப்பால் டின், மரத்துக்கு மருந்துப் பூசப்படும் நேரங்களில் ஐந்தாறு மரங்களில் நிரம்பிவிடும். பாதி மரம் சீவி முடிப்பதற்குள் முதலில் சீவப்பட்ட மரங்களில் பால் மங்குகளில் பால் நிரம்பி வழியத் தொடங்கிவிடும். அந்தப் பாலை வேறு சேகரிக்க வேண்டும். யாவற்றையும் ஒருவராக சமாளிக்க அம்மா மிகவும் சிரமப்படுவார். அதற்காகதான் ஒரு நாள் முன்னரே அடுத்த நாள் வெட்டின் கட்டிப்பாலைத் துடைக்கும் ஏற்பாடு.

எதிர்பார்த்தது போலவே கட்டிப்பால் பால் மங்கினையும் மீறி வழிந்து உறைந்துக் கிடந்தது. கொண்டு வந்திருக்கும் பெரிய கட்டிப்பால் சாக்கு போதாதுப் போல் தெரிந்தது. இவ்வாறான சமயங்களில் எப்படிக் கட்டிப்பால் துடைக்க வேண்டுமென அம்மா ஏற்கெனவே கற்றுக் கொடுத்துள்ளார். 12 பத்திகளாக பாய் போல விரிந்திருக்கும் வெட்டை இரு பகுதிகளாக பிரித்துக் கொள்வது. முன்பகுதி தம்பிக்கு. பௌண்டர் வரை விரியும் பின்பகுதி அக்காவுடையது. முன்பகுதி முடியுமிடத்தில் மரங்கள் சரியாக வளராமல் பட்டுபோனதால் அப்பகுதியில் மரங்கள் குறைவுதான். அதனால் தம்பிக்கு இந்த ஒப்பந்தம் பிடித்தது.

பின்பகுதிக்கு செல்லும் முன் கொண்டுவந்திருந்த வரக் கோப்பியை கூஜாவின் மூடியிலூற்றி கொஞ்சம் தொண்டையை நனைத்துக் கொண்டாள் அக்கா. பஞ்சரைப் பிடித்துக் கோட்டுப்பாலைக் கவனமான உரித்தாள். செத்தப் பாம்பைபோல் அக்காவின் கையில் தொங்கியது கோட்டுப்பால். கீழே உதிர்ந்துக் கிடந்த இரப்பர் இலைகளைச் சேகரித்தாள். தம்பி கட்டிப்பால் சேகரிக்கப் போகும் டின்னின் பிடிக்கம்பியில் இலைகளை மொத்தமாக சுற்றிக் கோட்டுப்பாலை வைத்து இறுக்கிக் கட்டினாள். இல்லாவிட்டால் பிடிக்கம்பி, கட்டிப்பாலின் பாரத்தால் தம்பியின் கையைப் பதம் பார்த்துவிடும்.

கட்டிப்பால் துடைத்து முடிக்கும்வரை ‘சிட்டுக்குருவி’ இந்த பக்கமே வரக் கூடாதென்று தோட்டத்து முச்சந்தியில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் முனியாண்டி சாமியிடம் மானசீகமாக வேண்டிக் கொண்டாள் அக்கா. ‘சிட்டுக்குருவி’ என்பது தோட்டத்து பெரிய கிராணியான இப்ராஹிம். வீட்டுத்தூணில் தன்னிச்சையாய் வந்தமரும் சிட்டுக்குருவியைப் போல் கட்டிப்பால் துடைத்துக் கொண்டிருக்கும்போது திடீரென நம் பின்னால் நின்றிருப்பார் இப்ராஹிம். தன் வருகையை யாரும் உணராமலிருக்க தூரத்திலேயே தன் ஸ்கரேம்பல் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஓசை எழுப்பாமல் வருவார். ஓசை எழும்பாமல், காய்ந்த இரப்பர் இலைகளையும் சருகுகளையும் மிதிக்காமல் ஒருவரால் எப்படி இவ்வளவு வேகமாக தீம்பாரில் நடக்க முடிகிறதென அம்மாவே வியந்து ஒரு முறை சொன்னார்.

பெரியகிராணிக்கு தம்பி வயதொத்த பிள்ளைகள் மங்குத் துடைப்பது அறவே பிடிக்கவில்லை. கட்டிப்பாலை மங்கிலிருந்து பிடுங்கும்போது மங்கைக் கீழே தவறவிட்டு உடைத்துவிடுவதுதான் அதன் காரணமாக இருந்தது. கண்ணாடி மற்றும் மண் மங்குகள் எளிதாக உடைந்தாலும் இறுகிய கட்டிப்பாலை சுத்தமாக துடைக்க அவையே வசதியாக இருந்தன. பிளாஸ்டிக மங்குகள் உடையாவிட்டாலும் காய்ந்த பால் அவற்றில் ஒட்டி சுத்தமாக துடைக்க முடியாது. உற்பத்தியை அதிகப்படுத்தும் கண்ணாடி, மண் மங்குகளையே பெரிதும் விரும்பினார் பெரியகிராணி. அவை உடைபடுவது அவர் தலையே உடைப்படுவது போலிருந்திருக்க வேண்டும்.

இரண்டு வாரத்திற்கு முன்பு தம்பி மங்கு துடைப்பதைப் பார்த்துவிட்ட பெரியகிராணி போட்ட சத்தத்தில் மரங்களில் அண்டியிருந்த பறவைகள் விதவிதமான ஒலியெழுப்பலோடு பறக்கத் தொடங்கின. தலையைத் தொங்கப் போட்டு அம்மா நின்றிருந்தார். சிவந்துவிட்ட பெரியகிராணியின் முகத்தில் குருதிவழிவதை அக்கா கண்டாள். தம்பிக்குப் பெரியகிராணியைப் பிடிக்காமல் போனது. அன்றிலிருந்து வீட்டு தூணில் சிட்டுக்குருவிகள் வருவது நின்றிருந்தன. தம்பியின் கற்களுக்கு அஞ்சியோ என அக்கா நினைத்துக் கொண்டாள்.

வழக்கமான நாட்களென்றால் முன்பகுதியிலிருந்து ஒரு பத்தியில் கட்டிப்பால் துடைத்துக் கொண்டே போய் அவன் பகுதி முடியுமிடத்தில் மறுபத்திக்குத் தாவி முன்பகுதிக்கு வரும்போதுதான் அவனுடைய ஒரு கலன் டின் நிறையத் தொடங்கியிருக்கும். இன்று ஐந்தாறு மரங்களிலேயே டின் நிறையத் தொடங்கியிருந்தது. ஒரு பத்தி முடிவதற்குள் இருமுறை முன்பகுதிக்கு வந்து சைக்கிள் நிறுத்துமிடத்தில் கட்டிப்பாலைக் கொட்டிவிட்டு மீண்டும் கட்டிப்பால் துடைக்கத் தொடங்கினான். அக்கா கட்டியிருந்த இலைகளையும் மீறி கம்பி பாரம் அவன் கையை அழுத்தியதால் கை வலிக்கத் தொடங்கியது.

ஐந்து பத்திகள் துடைத்து முடித்தபோதுதான் வலது உள்ளங்கையில் உருவாகியிருந்த அழுத்தமான சிவந்த கோட்டைக் கவனித்தான் தம்பி. இடது விரல்களால் அக்கோட்டைத் தொட்டுப் பார்த்தான். ரொம்பவும் வலித்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். கண்ணுக் கெட்டியவரை இரப்பர் மரங்களே தெரிந்தன. பக்கத்திலிருந்த மரத்தைப் பற்றியவாறே குனிந்தமர்ந்தான். இரண்டு சொட்டுக் கண்ணீர் காய்ந்த இலைகளின் மேல் விழுந்தன. சத்தமில்லாமல் கொஞ்ச நேரம் அழுதான். எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். கொசுக்கள் தம்பியின் தலையைச் சுற்றி பறந்துக் கொண்டிருந்தன.பெரியகிராணியோ அக்கவோ அங்கில்லாதது அவனுக்கு திருப்தியாக இருந்தது. மீண்டும் கட்டிப்பால் துடைக்கத் தொடங்கினான் தம்பி.

இரண்டு பத்தி துடைத்தவுடனேயே கொண்டு வந்திருந்த ஒரு கட்டிப்பால் சாக்கு போதாதென அக்காவுக்குப் புரிந்தது. எல்லா மரங்களிலும் கட்டிப்பால் மங்குகளை நிரம்பி கட்டியிருந்தன. சில மரங்களில் இன்னும் சரியாக உறையாத கட்டிப்பாலை மங்கிலிருந்து துடைக்கும்போது இரப்பர் பால் முகத்தில் தெறித்தது அக்காவுக்கு எரிச்சலாக இருந்தது. மறுபக்கம் கூடுதலான கட்டிப்பால் என்றால் கூடுதலான சம்பளம் என்பது அம்மாவுக்கு மகிழ்ச்சியான விஷயம். அம்மாவுக்கு மகிழ்ச்சியென்றால் அக்காவுக்கும் மகிழ்ச்சிதான்.

இருந்தும் கட்டிப்பால் வாளியில் நிறைய நிறைய, அக்காவுக்கு கை வலியோடு பாரத்தை சமன்படுத்த கொஞ்சம் சாய்ந்துக் கொண்டு நடந்ததால் இடுப்பும் வலிக்கத் தொடங்கியது. தனக்கே கை இப்படி வலிக்கும்போது தம்பியின் நிலையை நினைத்தவுடன் மேலும் வருத்தம் கூடியது. விரைவாக தன் பகுதி மரங்களை முடித்துவிட்டு தம்பிக்குச் சென்று உதவ வேண்டுமென நினைத்துக் கொண்டாள். மீண்டும் வெள்ளைச் சிறகுகள் முளைத்தன. கணநேரத்தில் மீதமிருந்த தன் பகுதி மரங்களின் கட்டிப்பாலைப் பறந்தப்படியே துடைத்துக் கொண்டிருந்தாள்.

தன் பகுதி மரங்களின் கட்டிப்பாலே சாக்கை முக்கால் பகுதி நிறைந்திருந்தது. மாறி மாறி வாளி தூக்கியதில் இரு உள்ளங்கைகளிலும் சிவப்பு கோடு உருவாகியிருந்தது. அக்கா கட்டிப்பால் சாக்கை இழுத்துக் கொண்டு சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு நகரும்போதுதான் ‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி’ என கத்திக் கொண்டே அக்காவை நோக்கி ஓடி வந்தான். இருவரும் பக்கத்திலிருந்த பெரிய மரத்தின் பின்னால் மறைந்துக் கொண்டனர். அக்காவுக்கு சிறுநீர் வருவது போல் இருந்தது. கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. சைக்கிள் நிறுத்துமிடத்தில் இடுப்பினில் கை வைத்தவாறு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த சிட்டுக்குருவி, சிறிது நேரம் கழித்து பக்கத்து வெட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

கட்டிப்பால் சாக்கில் நிறைந்தும் வாளியில் பாதியும் டின்னில் முக்காலுமாக இருந்தன. அக்காவிற்குப் பசியால் கொஞ்சம் மயக்கம் வருவதுபோல் இருந்தது. கொண்டு வந்திருந்த அம்பாட் செகி ரொட்டியைத் தம்பியே சாப்பிட்டு முடித்திருந்தான். இன்று அவன் அதிகமாகத்தான் வேலை செய்திருக்கிறான். கொசுக்கடியால் வீங்கியிருந்த தம்பியின் நெற்றியைத் தடவியவாறே தலையையும் கோதிவிட்டாள். மீதமிருந்த கோப்பி ஓ-வை பருகியதும் மீண்டும் தெம்பானாள்.

இரண்டு முறை கட்டிப்பால் சாக்கை சைக்கிளின் பின் சீட்டில் சிரமப்பட்டு இருவரும் தூக்கி வைத்தபோதும் சைக்கிள் பாரம் தாங்காமல் கீழே சாய்ந்து விட்டது. இம்முறை தம்பி கை வலி தாங்க முடியாமல் சிணுங்கத் தொடங்கினான். செய்வதறியாது அக்கா சுற்றும் முற்றும் பார்த்தாள். மோட்டார் சைக்கிளின் பின்சீட்டில் கட்டிப்பால் சாக்கைக் கட்டிக் கொண்டிருந்தனர் ரிசாலும் சிடேக்கும். மோட்டார் சைக்கிளை முடுக்கி தீம்பார் அதிரும் வண்ணம் அவர்களைக் கடந்து சென்றான் ரிசால். ஒரு குச்சியால் கிளைப் பாதையைக் கீறியவாறே நடக்கத் தொடங்கினான் சிடேக். சைக்கிள் சாய்ந்திருப்பதைக் கண்டதும் அவர்களை நோக்கி நடந்து வந்தான். தம்பி சைக்கிளைப் கட்டியாகப் பிடித்துக் கொள்ள, அக்காவும் சிடேக்கும் கட்டிப்பால் சாக்கைத் தூக்கிவைத்து இறுக்கமாக கயிற்றால் கட்டினர். அக்கா முறுவலித்துக் கொண்டே சிடேக்கிடம் நன்றி சொன்னாள். பதிலுக்கு சிரித்து விட்டு புரியாத பாடலை சீட்டியடித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினான் சிடேக்.

இரப்பர் மரங்களின் மேலாக சைக்கிள் பறக்கத் தொடங்கியிருந்தது. இரப்பர் மரங்களினூடே சிவப்பு பாம்பைப் போல செம்மண் சாலை வளர்ந்து கிடந்தது. சைக்கிள் மேகங்களை ஊடுருவும் ஒவ்வொரு முறையும் தம்பி ஆனந்தமாக சிரிக்கத் தொடங்கினான். அக்காவின் தலைமுடி காற்றில் சுதந்திரமாக பறந்துக் கொண்டிருந்தன. அக்காவின் உடல் எடை இழந்திருப்பது போல் இருந்தது. அடுத்த முறை பறக்கும் பயணத்தில் அம்மாவையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென தீர்மானித்துக் கொண்டாள் அக்கா. சைக்கிளின் வேகம் அதிகரித்து கொண்டே போகும் சமயத்தில் சைக்கிள் மரக் கிளையில் மாட்டி பூமியில் செங்குத்தாக விழுந்தது.

தம்பி கிளைப்பாதையை மறித்திருந்த அந்த பெரிய வேரைக் கோபமாக உதைத்தான். பிறகு வலியில் காலைப் பிடித்துக் கொண்டு பாதையில் படுத்தவாறு கதறி அழத் தொடங்கினான். விழுந்த வேகத்தில் சாக்கு கிழிந்து இன்னும் உறையாத கட்டிப்பாலின் திரவம் அக்காவின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தெறித்திருந்தது. சட்டையைத் தூக்கி முகத்தைத் துடைத்தாள். கழுத்து பகுதியிலிருந்த திரவத்தைத் துடைக்கும்போதுதான் தோளின் வெறுமையை உணர்ந்தாள். தம்பியின் தோளைத் தேற்றுவதற்காக பற்றியபோது அக்காவுக்கு முட்டிக் கொண்டு வந்தது.

– ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *