முட்டைக் கோழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 3,985 
 

(இதற்கு முந்தைய ‘குண்டாஞ்சட்டி மனைவிகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

ராஜாராமனோ திருப்பித் திருப்பி அவனுடைய கட்சியையே பேசிக் கொண்டிருந்தான். ஒரு வாரம் வரைக்கும் விஷயம் இப்படியே முடிவில்லாமலேயே போய்க் கொண்டிருந்தது.

இப்படி இருக்கையில், அங்கு எர்ணாகுளத்தில் வேணுகோபால் திம்மராஜ புரத்தில்இருந்து ஒரு தகவலையும் காணோமே; விஷயம் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறதே என்கிற கவலையில் தீவிர யோசனை செய்து கொண்டிருந்தார்.

அவருக்கு ராஜாராமனை விட்டுவிட மனசே இல்லை. எப்படியும் அவனை அவரின் மூன்றாவது மாப்பிள்ளையாக்கி விடவேண்டும் என்ற குறியிலேயே இருந்தார். அதனால் வேணுகோபால் வலிமையான ஒரு புதிய பாணத்தை எர்ணாகுளத்தில் இருந்தபடியே சிவந்தி மாரியப்பன் மூலமாக ஏவினார். அந்தப் பாணம் திம்மராஜபுரத்தின் சரித்திரத்திலேயே கேள்விப் படாதது.

அது என்ன என்றால், ராஜாராமன் அவருடைய மூன்றாவது மகளைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதம் என்று ஒரே ஒரு வார்த்தை சொன்னால் மட்டும் போதும்; வேணுகோபால் என் கமலாச் சித்தியின் இரண்டு மகள்களுக்கும் அவரே நல்ல மாப்பிள்ளைகளைப் பார்த்து அவருடைய செலவிலேயே கல்யாணத்தைத் தடபுடலாக நடத்திக் கொடுக்கத் தயார்… இது அவருடைய குல தெய்வம் தோப்புக் கறுப்பன் சாமியின் மேல் சத்தியம்!

சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ட்வென்டி ட்வென்டி மாட்ச் நடக்கும் போது; வீராத் கோய்லி உயரே தூக்கி அடித்த பந்து கேட்ச் ஆகிவிடும் போல இருந்து சிக்ஸரில் போய் விழும்போது ஸ்டேடியம் பூராவும் என்னவென்று சொல்ல முடியாத மாதிரி பெரும் இன்பக் குரலில் வான் அதிர ஒலிக்குமே, அப்படி ஒரு பெரும் இன்பக் குரல் திம்மராஜபுரத்தின் வான வெளியில் கேட்டது!

அறுபதாயிரம் ஜனங்களின் இன்ப அதிர்வு ஒலி அது. யாருக்கு இப்படி ஒரு ‘லாட்டரி’ விழும்? அதுவும் கேரளா பம்பர் லாட்டரி! தேர்தல் ரிசல்டைத் தெரிந்து கொள்வதற்காக வோட்டு எண்ணுகிற இடத்துக்கு வெளியில் ஜனக்கூட்டம் நெரிபடும். அதே மாதிரியான ஒரு கூட்டம் கமலா சித்தியின் வீட்டுக்கு வெளியே திரண்டு கிடந்தது!

ராஜாராமன் என்ன சொல்லப் போகிறான்? இந்தக் கேள்விதான் கூட்டத்தில் இருந்த அத்தனை பேரின் மனதிலும். ஆனால் எவ்வளவு நேரம் கூட்டம் கூடி நின்று கொண்டிருந்தாலும், கமலா சித்தியின் கதவுகள் சாத்தப் பட்டிருந்த வீட்டிற்குள் இருந்து தேர்தல் ரிசல்ட் எதுவும் வரவில்லை. வரப்போகிற மாதிரியும் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. அதனால் திம்மராஜபுரம் ஊரே ஒருவித போதையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

கமலா சித்தியின் காலடியைத் தேடி வந்து கொட்டும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து ஊர் பிரமித்துக் கிடந்தது. ஆனால் ராஜாராமனுக்கு குண்டூசி அளவு கூட பிரமிப்பு இல்லை. தர்ம சங்கடத்தில் தலையைச் சொரிந்து கொண்டிருந்தான். தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் திடீர் திடீரென்று அறிவிக்கும் நல்வாழ்வுச் சலுகைகளைப் போலத்தான் அவனுக்கு வேணுகோபாலனின் அறிவிப்புகள் தோன்றின. எத்தனை நல்வாழ்வுச் சலுகைகளை அறிவித்தாலும் அதெல்லாம் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள எந்தக் காரியத்தையும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகளின் பதவி வெறியும் சுய நலமும்தான் காரணம்.

இது தெரியாதா டாக்டருக்குப் படித்த ராஜாராமனுக்கு? வேணுகோபாலும் அரசியல்வாதியின் அதே பாணியில்தான் புதிய சலுகைகளை அறிவித்திருக்கிறார். அவருடைய ஒரே நோக்கம் எப்படியாவது ராஜாராமனை முட்டைக் கோழியை அமுக்குவது மாதிரி அமுக்கி விடவேண்டும் என்பதுதான்! ஆனால் கோழி முட்டை இடுவேனா என்றது!

கோழி முட்டை இடாமல் யோசனை பண்ணிக்கொண்டே இருந்ததில் என் கமலா சித்தி ரொம்பவும் வேதனைப் பட்டுப்போனாள். இதற்கு மேல் ஒரு பெரிய சந்தர்ப்பம் வாழ்க்கையில் வரவே வராது என்று பரிதவித்தாள். மகனிடம் எப்படி எப்படி எல்லாமோ பேசி அவனைச் சம்மதிக்க வைக்க படாதபாடு பட்டாள். சொந்தக்காரர்களைப் போய்ப் பார்த்து ராஜாராமனுக்கு புத்திமதி சொல்லச் சொன்னாள்.

பெரியவர்கள் சொன்னால் மகன் கேட்பான் என்று நினைத்தாள். ஆனால் எந்தப் பெரியவர்களும் உடனே கிளம்பி ராஜாராமனுக்கு புத்திமதி சொல்ல ஓடி வந்துவிடவில்லை. அவர்கள் பொறாமை அவர்களுக்கு!

வேணுகோபால் அறிவித்திருக்கும் நல்வாழ்வுத் திட்டங்கள் எல்லாவற்றையும் கேள்விப்பட்டதில் இருந்து கமலாச் சித்தியின் சொந்தக்காரப் பெரியவர்கள் பல பேருக்கு சரியாகச் சாப்பாடு இறங்கவில்லையாம்! ராத்திரியில் அவர்களுக்கு நிம்மதியான தூக்கமும் கிடையாதாம்!

‘ஒரு சாண் இடம் சொந்தமா இல்லாத பிச்சைக்காரிக்கு வந்த யோகத்தைப் பாரேன்’ என்று நிறைய சொந்தக்காரர்கள் மனசு புழுங்கி வயிறு எரிந்ததாகக் கேள்வி! அப்படி இருக்கும்போது ராஜாராமனுக்கு புத்தி சொல்ல யாராவது வருவார்களா? அப்படி அவர்கள் சொன்ன புத்திமதியைக் கேட்டு ஒருவேளை ராஜாராமன் வேணுகோபால் மகளைக் கல்யாணம் செய்துகொள்ள சரியென்று சம்மதித்துவிட்டால் என்ன பண்ணுவது? குடி அல்லவா மூழ்கிப் போய்விடும்!

அதனாலேயே நூற்றுக்குத் தொண்ணூறு சொந்தக்காரப் பெரியவர்கள் ராஜாராமனுக்குப் புத்தி சொல்ல வராமலேயே இருந்து விட்டார்கள். புத்தி சொல்ல வந்த பத்துப் பேர்களும் சும்மா ஒப்புக்குச் சப்பாணி என்கிற மாதிரி வெறும் உதட்டளவில் இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டார்கள்.

அவர்கள் எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்கொண்ட சமாதானம் என்னவெனில், “ஒரே அடியா மாட்டேன்னு சொல்ற பயலைப் போய் நாம் என்ன சொல்ல முடியும்? கல்யாண சமாச்சாரம் நாம சொன்னோம் என்கிறதுக்காக பண்ணிக்கிட்டு அப்புறம் நாளைக்கு ஏதாவது ஏடாகூடமா சரியில்லாமப் போச்சுன்னா, பொறவு வந்து யாரும் நம்ம தலையைப் போட்டு உருட்டினா என்ன பண்றது… அந்த வம்பே வேண்டாம்லே …”

என் கமலாச் சித்தி வழி தெரியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் தெருவில் நிற்கிற மாதிரி நின்றாள். இந்த மாதிரி ரொம்ப இக்கட்டான நிலைமை வரும்போது எல்லாம் திம்மராஜபுரம் நாட்டு மருந்து நாச்சியப்பன்தான் என் சித்திக்குக் கிருஷ்ண பரமாத்மா மாதிரி! நாச்சியப்பன் சித்திக்கு ‘ஒண்ணுவிட்ட அண்ணன்’.

அவருக்கு நாட்டு மருந்துகள் தயாரிக்க உதவும் பல்வேறு மூலிகைகளை விற்கும் மொத்த வியாபாரம்தான் தொழில். அதனால்தான் அவர் பெயர் நாட்டு மருந்து நாச்சியப்பன். பல வருடங்களுக்கு முன்னால் எல்லா டெலிபோன்களும் ஒரே மாதிரியான கறுப்பு நிறத்தில் இருக்கும். நாட்டு மருந்து நாச்சியப்பன் கிட்டத்தட்ட அந்த மாதிரி டெலிபோன் நிறத்தில்தான் இருப்பார். நூறு கிலோ எடையில்; ஆறு அடி உயரத்தில் பார்ப்பதற்கே நம்மைப் பயமுறுத்தும் விதத்தில் இருப்பார். அதனால் எப்பேர்ப்பட்ட கூட்டத்தில் அவரைப் பார்த்தாலும் அவர் மட்டும் தனியாகத் தெரிவார்.

என் கமலாச் சித்தி அவரைப் போய் பார்க்கச் சென்றது ‘ஒண்ணுவிட்ட அண்ணன்’ என்பதனால் மட்டும் கிடையாது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *