உடையும் விலங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 7,823 
 

உமாவுக்கு காலை எட்டு மணிக்கே விழிப்புத் தட்டிவிடுகிறது.

கணவர் காந்தன் இன்னும் நித்திரை விட்டு எழும்பவில்லை. மெல்லிய குரட்டை அவருடைய நித்திரையின் ஆழத்தை உணர்த்திக் கொண்டிருந்தது.

உமா சன்னல் திரையை விலக்கி வெளியே நோக்குகிறாள். வெண்பனி எங்கும் பரந்து தரையை மூடியிருந்தது. நிறுத்தப்பட்ட கார்களில் பனிபடிந்து அவை பல்வேறு கோலங்காட்டி நின்றன. நீண்ட பைன் மரங்களில் ஆதவனின் கதிர்க்கரங்கள் பட்டுப் பனி உருகிச் சொட்டிக் கொண்டிருந்தது. அக்காட்சி காலைப் பொழுதுக்கு ரம்மியமூட்டுவதாகவே உமாவுக்குப்பட்டது.

வழமையாகப் பனி படர்ந்த பொழுதுகள் உமாவுக்கு வெறுப்பையே தரும். குளிர்கால உடுப்புகளே பாரமாக அதிகாலையில் வேலைக்குச் செல்வது என்பது வேதனையூட்டும் அனுபவமாகவே இருந்து வந்திருக்கிறது.

ஆனால்… … இன்று ஞாயிற்றுக்கிழமை. வேலை செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆறுதலாக எழும்பி வீட்டு வேலைகளை அவளும் காந்தனும் சேர்ந்து செய்வார்கள். அவர்களுடன் அவர்கள் மகள் கோதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணைந்து உதவி செய்வாள். மூவரும் சேர்ந்து இருக்கும் பொழுது கலகலப்பாகவும் இன்பம் தருவதாயும் அமையும்.

உமாவின் உள்ளத்தில் என்றுமில்லாதவாறு மகிழ்ச்சி. அதற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொறுப்பில்லை. அதற்கு மேல் ஒன்று அவள் உள்ளத்துக்கு உவகையூட்டிக் கொண்டிருந்தது. குறும்புத்தனங்களுடன் அன்புமழை பொழியும் கோதை நேற்றுவரை அவளைப் பொறுத்தவரை குழந்தையாகவே தெரிந்து வந்தாள். ஆனால்… இன்று அவள் திருமணத்துக்காக நிற்கும் பருவக் குமரி… உமாவால் நம்பத்தான் முடியவில்லை.

மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தங்கள் விழுமியங்களுக்கு ஏற்ப வளர்ப்பதென்பது தாய்நாட்டிலும் கடினமானது என்பதை உமா நன்கு புரிந்து கொண்டிருக்கிறாள். அதனால், தன் ஒரே மகளின் ஒவ்வொரு அசைவிலும் தன் முழுக்கவனத்தையும் மிக அவதானமாகக் குவித்திருக்கிறாள். உமா, கோதைக்குத் தாயாக மடுமன்றி நல்ல ஆசானாக நண்பியாக விளங்கி வந்திருக்கிறாள். கோதையின் கல்வியை அவள் விரும்பும் துறையில் ஊக்குவிக்கும் முயற்சியில் கூடத் தான் வெற்றி பெற்றதாகவே கருதினாள். கோதை இன்று பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை மாணவி. அவள் படிப்பில் காட்டும் ஆர்வம் அவளை நாளை ஒரு விரிவுரையாளராக…கால ஓட்டத்தில் பேராசிரியையாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தனது கனவு ஒன்றினைக் கோதை நிறைவேற்றுவதில் உமாவுக்கு எத்தனை பெருமிதம்.

என்னதான் பெண்களுக்கு கல்வி சிறப்பளித்தாலும் மணவாழ்க்கை அவர்கள் கல்விக்கே தடையாகிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டே… அதற்கு உமாவே ஒரு எடுத்துக்காட்டு. ஆனாலும் கோதை அதிலும் அதிர்ஷ்டசாலிதான். அவள் தனக்கு மிகவும் பொருத்தமான கணவனைத் தானே தேர்ந்தெடுத்து விட்டாள்.

*****

உமா பிரான்சுக்கு வந்து இருபத்து நான்கு வருடங்கள் ஒடி விட்டன. அவள் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்பி ஏற்றவளில்லை. தான் மனப்பூர்வமான ஈடுபாட்டுடன் செய்து வந்த ஆசிரியத் தொழிலையும் தன்னால் நேசிக்கப்பட்ட தேசத்தையும் விட்டு திருமணம் என்ற ஒரே பந்தத்தை ஏற்றுக் கொண்டு பிரான்சுக்கு விமானம் ஏறிய அந்தப் பொழுதில் அவளுக்கு எற்பட்ட வலியை அவள் மட்டுமே உணரமுடியும்.

சாதகம், சாதி, எல்லாவற்றுக்கும் மேலாக சீதனம் இத்தனை தடைகளையும் தாண்டிச் சாதாரண, கச்சேரிக் கணக்கரான உமாவின் தந்தை ஆறுமுகத்தால் உள்ளூரில் ஒரு உத்தியோக மாப்பிள்ளையை உமாவுக்குத் தேடிக் கொடுக்க முடியவில்லை. அவளுக்கு கீழ் இரண்டு தங்கைகள் பருவ வயதை எய்தியிருந்தார்கள். காந்தனின் சம்பந்தம் வந்த போது இந்த நிலமைகளை மனதில் கொண்டே கழுத்தை நீட்டினாள் உமா.

பிரான்சுக்கு வந்தபோது அந்த வாழ்க்கையை இயல்பாக ஏற்றுக் கொள்வதற்க்கு உமா பகீரதப் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது .கல்லூரிப் படிப்பை மட்டுமே முடித்திருந்த காந்தன் ஒரு கடையில் விற்பனையாளராகவே இருந்து வந்தார். பகுதி நேரமாக சிறு வேலைகளில் ஈடுபட்டாலும் வருவாய் மட்டுப்பட்டதாகவே இருந்து வந்தது. உமா தன் கணவனுக்கு இருக்க வேண்டும் என எதிர்பார்த இலட்சனங்கள் பல காந்தனிடம் இருக்கவில்லை. மிகச் சாதாரன மனிதராகவே அவர் இருந்தார். அது அவள் மனதுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்தது. அது மட்டுமல்லாது அவள் வந்த காலத்தில் பிரான்சுக்கு அதிகம் தமிழர்கள் வந்திருக்கவில்லை. அதனால் உணவு, பழகிய உறவுகள் இல்லாமை, மொழி என்பன யாவும் பூதகரமான பிரச்சனைகளாகவே அவளுக்குத் தோன்றின. வேலை செய்த அவளால் வேலையற்று வீட்டில் முடங்கிக் கிடப்பதும் சலிப்பையும் வெறுப்பையுமே தந்தது.

ஆனால்… காலகதியில் வெளிநாட்டின் வாழ்க்கைப் போக்கை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. காந்தன், குடி, சிகரட் முதலிய பழக்கம் எதையும் கொண்டிருக்கவில்லை. உமாவின் மனப் போக்கைப் புரிந்து கொண்டு மிகவும் இதமாக நடந்து கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய களங்கமில்லாத அன்பில் உமா திளைத்திருக்கிறாள். அவர்கள் அன்பு வாழ்வின் உதயமாக கோதை பிறந்த போது அவள் பூரித்துத்தான் போனாள்.

காந்தன் தனது குடும்பத்துக்காக மட்டுமின்றி தனது தங்கைகளுக்காகவும் உழைக்க வேண்டியவராய் இருந்தார். அவரது இரு தங்கைககளுக்குச் சீதனம் கொடுப்பதற்காக அவர் இரவு பகலாக வேலை செய்து கொண்டிருந்தார். அதே சமயம் உமாவினது குடும்பத்தையும் அவர் மறந்து விடவில்லை. சமயம் வரும் போதெல்லாம் அவள் குடும்பத்துக்கும் அவர் பணம் கொடுக்கத் தவறுவதில்லை. இந்த நிலையிலேயே உமாவும் வேலைக்குப் போகத் தீர்மானித்தாள். அவளது கல்வித் தகுதிக்கும் அவள் செய்யும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. மொழி முதலிய பல்வேறு காரணங்களால் படித்தவர்கள் கூட மிகச்சிறு வேலைகளில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாததாய் இருந்து வந்தது. உமாவுக்கு நோயுற்றிருந்த ஒரு பெண்ணைப் பேணும் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் அவ்வேலை அவளுக்குப் பிடிக்காவிட்டாலும் காலகதியில் அவ்வேலைக்குத் தன்னைப் பழக்கிக் கொண்டாள். தனது மகளைச் சிறப்பாக வளர்க்கவும் தனது சகோதரிகளுக்கு ஒரளவு உதவவும் தனது வருவாய் உதவிய போது தனது வேலையில் பூரண திருப்திகூட அவளுக்கு ஏற்பட்டு விட்டது. அவளது வாழ்க்கை தெளிந்த நீரோட்டம் போல அமைதியாகச் சென்றது.

தனதும் தனது கணவரதும் புரிந்துணர்வுடன் கூடிய அமைதியான வாழ்க்கைதான் கோதையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குகுக் காரணம் என்பது அவளது கணிப்பு.

*****

உமாவின் தோள்களில் கை பதித்து அவளைத் தன் பக்கம் காந்தன் திருப்பிய போதுதான் உமா தன் நினைவுகளில் இருந்து விடுபடுகிறாள்.

“உமா… உம்முடைய மகளுக்குத்தான் கல்யாணம். இங்கே என்னவென்றால் நீர் கனவு காண்றீர்“ காந்தன் கேலி செய்தபடி அவள் கன்னத்தை வருடுகிறார்.

உமாவின் இதழ்களில் காந்தப் புன்னகை ஒன்று புலர்ந்து மறைகிறது.

”ஓமப்பா… இண்டைக்கு மாப்பிள்ளை வீட்ட போக வேணும். போகேக்க ஏதாவது பலகாரம் கொண்டு போகோணுமில்லை… அதோட தங்கச்சிக்கும் போன் பண்ணிக் கதைக்க வேணும். அதுகளை மறந்திட்டு என்னமோ யோசனையில நிண்டிட்டன்.” பேசியபடியே படுக்கை விரிப்பை ஒழுங்கு செகிறாள். அவளிடம் வழமையான சுறுசுறுப்பு வந்து ஒட்டிக்கொள்கிறது.

*****

காலைக் கடன்களை முடித்துக் கொண்டு இருவரும் சமையல் வேலையில் ஈடுபடுகின்றனர்.

“அம்மா இண்டைக்கு நான் உங்களுக்கு கெல்ப் பண்ண மாட்டன்.” உமாவின் தோள்களைப் பற்றிக் கோதை கொஞ்சுகிறாள். பலகாரம் செய்வதற்கு மாவைக் குழைத்தபடி மகளை நோக்குகிறாள் உமா. அவள் பார்வையில் எங்கே போகிறாய் என்ற வினா தொக்கி நிற்கிறது.

“இண்டைக்கு என்னோட படிக்கிற மார்க்குறோசிண்ட பிறந்த நாள். அவன் பாட்டிதாறான். முகுந்தனும் வாறார். ரெண்டு பேரும் போட்டு வாரம்.” அனுமதி கேட்கிறாள் கோதை.

“அப்ப நாங்கள் முகுந்தன் வீட்ட போகேக்க அவர் நிக்க மாட்டாரோ? காந்தன் அக்கறையாக மருமகன் பற்றி விசாரிக்கிறார்.

“உங்களுக்கு முகுந்தனத் தெரியும்தானே. அதோட அனேகமாக ஐஞ்சு மணியளவில முகுந்தனும் வீட்டுக்குத் திரும்பிடுவார்.” புன்முறுவலுடன் பதில் கூறிவிட்டு அவர்களிடம் விடைபெறுகிறாள் கோதை.

*****

சுவர் மணிக்கூடு ஒருதடவை அடித்து ஓய்கிறது.

“அப்பா இந்தப் பலகாரங்கள ஒருக்கா பாசல் கட்டுங்கோ. இப்ப போன் எடுத்தாத்தான் தங்கச்சியிட்ட கதைக்கச் சுகம். பேந்து அதுகள் நித்திரைக்குப் போயிடுங்கள்.”

காந்தனுக்குக் கூறியபடி போன் எடுக்கிறாள் உமா. மறு முனையில் யாழ்ப்பாணத்தில் இருந்து அவள் தங்கை பேசுகிறாள். வழமையான குசல விசாரிப்புக்களுக்கு பின்னர் கோதைக்கும் முகுந்தனுக்கும் நிகழவிருக்கும் திருமணம் பற்றிக் கூறுகிறாள் உமா. முகுந்தன் மருத்துவத்துறை இறுதியாண்டு மாணவன் என்றும் அவனுடைய ஒழுக்க சீலம் பற்றியும் உயர்வாகக் கூறிய போது உமாவின் மகிழ்ச்சி அவள் தங்கை சிவாவையும் தொற்றிக் கொள்கிறது.

“அவை யாழ்ப்பாணத்தில எந்தப் பகுதி?” என்ற சிவாவின் கேள்வி உமா போன் எடுத்ததன் நோக்கத்துக்குக் கொண்டு வந்துவிடுகிறது.

“அதை விசாரிக்கத்தான் முக்கியமா நான் போன் எடுத்தனான். முகுந்தண்ட தாத்தா கோண்டாவிலச் சேர்ந்தவர். கணபதி மாஸ்டர் என்றால் எல்லாருக்கும் தெரியுமாம்.”

“ இது போதும் நான் விசாரிச்சுச் சொல்லுறன்.” சிவா உறுதியளிக்கிறாள்.

ஒரு பொறுப்பைச் சிவாவிடம் ஒப்படைத்த நிறைவுடன் போனை வைக்கிறாள் உமா.

*****

உமாவும் காந்தனும் முகுந்தன் வீட்டுக்குச் செல்கிறார்கள். முகுந்தனின் தந்தை பரமேஸ்வரன்தான் முதலில் அவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார். அவரைத் தொடர்ந்து அவர் மனைவி ரஞ்சியும் உமாவின் கைகளைப் பற்றி வரவேற்றுக் கூடத்தில் அமரச் செய்கிறார். அவர்களுடன் முகுந்தனின் தம்பி கரனும் இணைந்து கொள்கிறான்.

வழமையான உபசரிப்புக்களின் பின் வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார்கள். பிரான்சில் இப்படி ஒரு அழகான வீட்டுக்குச் சொந்தக்காரராக இருக்க வேண்டுமாயின் அவர்கள் மிகக் கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என எண்ணமிடுகிறாள் உமா.

பரமேஸ்வரன் நல்ல உழைப்பாளிதான். அவர் பரிஸ் லாச்சப்பலில் ஆரம்பத்தில் போன் கடை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். அதோடு இணைந்ததாக உண்டியல் முலம் பணம் அனுப்பும் நிறுவனத்தையும் நிறுவியிருந்தார். ஆரம்பத்திலேயே இம்முயற்சியில் ஈடுபட்டதனால் தொழில் போட்டியின்றி அதிக லாபத்தையும் பெறமுடிந்தது. அந்த லாபதைக் கொண்டு ஒரு ஆசிய உணவு, மற்றும் மளிகைப் பொருட்களை விற்கும் கடையையும், நகை .மற்றும் ஜவுளிக் கடையையும் திறந்த போது அவர் உண்மையில் ஒரு தொழில் அதிபராகவே மாறியிருந்தார்.

உமாவும் காந்தனும் அவர்கள் வீட்டைவிட்டு மனநிறைவோடு விடை பெறுகிறார்கள்.

“பணக்காரர்களெண்டாலும் நல்ல பண்பான மனுசர். கோதை அதிர்ஷ்டசாலிதான்.” காந்தன் திருப்தியுடன் கூறுகிறார். உமாவுக்கும் அவர்கள் குடும்பத்தை நன்கு பிடித்திருந்தது என்பதை அவள் முகமே பறைசாற்றியது.

ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

*****

உமாவின் தங்கை சிவாவிடம் இருந்து வந்த செய்தி இடியென இறங்கியது.

“முகுந்தண்ட குடும்பம் எங்கட சபை சந்திக்கு ஒத்துவராத பகுதியச் சேர்ந்தவ.”

உமாவும் காந்தனும் உண்மையில் ஆடிப்போய் விட்டார்கள். ஆழமறியாது காலை விட்டுவிட்டோமா…? கோதையின் விருப்பத்தை முன்னிறுத்தி அவசரப்பட்டுவிட்டோமா…? முகுந்தனின் கல்வித்தகுதி பணம் எங்கள் கண்களை மறைத்துவிட்டதா…? கோதைக்குச் சம்மதம் சொல்ல முன்னமேயே இது பற்றி யோசிச்சிருக்க வேண்டும ? முகுந்தன் வீட்டுக்குப் போக முன்பாவது இதைத் தெரிந்திருக்க வேண்டுமே… பலவாறு எண்ணிக் குழம்பிப் போனார்கள்.

எல்லாத்துக்கும் மேலாக கோதையிடம் இது பற்றி எப்படி விளக்கப் போகிறோம் என்ற கேள்வியே பூதாகரமாய் எழுந்து அவர்களை மருட்டியது. கோதை பிரான்சிலேயே பிறந்து வளர்ந்தவள். சாதி பற்றியும் எமது சமூகத்தில் அது பெறும் முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்கினால் எப்படிப் புரிந்து கொள்ளப் போகிறாள்.? வெளிநாடுகளில் சாதி பற்றி முணுமுணுப்பாகப் பேசுவதோடு சரி. அந்த முணுமுணுப்பின் அர்த்தம் பெரியவர்களுக்கு மட்டுமே புரியும். பெரும்பாலான குடும்பங்களில் அது பிள்ளைகளைச் சென்றடைவதில்லை. உமா சாதியைத் தூக்கியெறியும் பக்குவம் இல்லாதவளாக இருந்த போதும் தேவையில்லாது சாதியை இழுத்துக் கதைக்கும் பழக்கமில்லாதவள். உணவு ஊடாட்டங்களிலும் ஊரைப் போல் இங்கு நடந்து கொள்வதில்லை. இவற்றால் கோதைக்குச் சாதி பற்றிய எண்ணக் கரு மனதில் தோன்ற்றியிருக்க வழியில்லை.

உமாவினதும் காந்தனதும் குடும்பங்கள் ஊரில் சாதித்தடிப்பும் சமூக அந்தஸ்தும் கொண்டவையாகவே விளங்கின. ஆனால் புலம் பெயர்ந்த இடத்தில் தொழில் ரீதியாகத் தாங்கள் படியிறக்கம் பெற்று விட்டதாக உள்ளூர எழும் எண்ணங்களில் இருந்து அவர்களால் முழுமையாக விடுபட முடியவில்லை.

காந்தனின் முதலாளி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான். முதலாளி தொழிலாளி என்ற ஏற்றத்தாழ்வுக்கு “என்ன இருந்தாலும் முதலாளி என்னில் குறைந்தவர்தானே…” எனக் கூறிக் கொள்வதன் மூலமே காந்தன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலையில் சாதிப் பெருமையை விட்டுக் கொடுப்பது எப்படி? அப்படியே மகளுக்காக விட்டுக் கொடுத்தாலும் ஊர் உலகம் என்ன சொல்லும்…? ஊருலகம் கூட வேண்டாம்… உறவுகள் நாளை எங்களைச் சேர்த்துக் கொள்வார்களா…? கேள்விகள் பல எழுந்து அவர்களைக் குடைந்து எடுத்தன. நீண்ட மனப் போராட்டத்தின் பின் கோதைக்கு இந்த உண்மையை விளக்கிக் கல்யாணத்தை நிறுத்தத் தீர்மானித்தார்கள் காந்தனும் உமாவும்.

*****

பெற்றோர்களின் திடீர் கவலைக்குக் காரணம் புரியாமல் கோதை திகைத்துப் போகிறாள்.

அம்மா ஏன் ஒரு மாதிரியிருக்கிறீங்கள்..?அப்பாவிண்ட முகமும் வாடிக்கிடக்குது. என்ன பிரச்சினை உங்களுக்கு…?

கோதையின் ஆரம்பத்தைப் பூர்வாங்கமாய்க் கொண்டு தங்கள் நிலைமையையும், அது பொருட்டுத் தங்களுக்கு ஏற்படவிருக்கும் தலையிறக்கத்தையும் கோதை மனம் மாற வேண்டியதன் அவசியத்தையும் உமா விரிவாக எடுத்துச் சொன்னாள்.

ஆனால் கோதைக்கு அவரகளின் இந்த முடிவு பயித்தியக்காரத்தனமாகப் படுகிறது. அவளால் சாதி பற்றிய அவர்களது கருத்துக்களைப் பூரணமாய் விளங்கிக் கொள்ளக்கூட முடியவில்லை.

“அம்மா… எனக்கு என்னுடைய வருங்காலக் கணவரைத் தேர்ந்தெடுக்கிற முழு உரிமையும் இருக்கு..” கோதையின் பேச்சில் உறுதி தெறிக்கிறது. கோதை எவ்வளவுதான் பெற்றோர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் அவள் ஊடாடுவது மேலை நாட்டுச் சமூகந்தானே…

இந்த இருபத்தியிரண்டு ஆண்டு காலத்தில் கோதைக்கும் அவள் பெற்றோருக்கும் இப்படியொரு முரண்பாடு ஏற்பட்டதேயில்லை. பெற்றவரும் கோதையின் மனமறிந்து நடந்தார்கள். கோதையும் பெற்றவரின் விருப்பு வெறுப்புக்கு மதிப்புக் கொடுத்து வந்தாள்.

“அப்ப எங்களுக்கு உன்ற வாழ்க்கையில அக்கறையில்லை யெண்டு நினைக்கிறியோ…?” காந்தன் குரலில் கோபம் தொனிக்கிறது.

“முகுந்தனிண்ட ஒழுக்கத்திலையோ நடத்தையிலெயோ குற்றம் கண்டு சொன்னீங்களெண்டா அந்த அக்கறைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.”

“எங்கட குடும்ப கௌரவம் அங்க கலியாணம் செய்தா கெட்டுப்போகும்…” காந்தன் கடுப்புச் சிறிதும் குறையாதவராய்ச் சொல்லுகிறார்.

“நான் வேற இனத்தவரக் காதலிக்கேல்லை. சமயம் ஒண்டு. ஊர் கூட ஒண்டு. முகுந்தன் படிப்பில பண அந்தஸ்தில எங்கட குடும்பத்தை விட உயர்வான நிலையிலதான் இருக்கிறார்.” கோதை தன்பக்க நியாயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறாள்.

“ஆனால் தமிழரா இருக்கிற நாங்கள் சாதியையும் பார்க்க வேணும்.” அழாக்குறையாக உமா கெஞ்சுகிறாள்.

“நீங்கள்தானே சொலுவீங்கள் ஒருத்தனுக்கு ஒருத்தியெண்டு வாழிறதுதான் தமிழரிண்ட உயர்ந்த பண்பாடு எண்டு. ஒருத்தன காதலிச்சிட்டு சோரம் போற மாதிரி மற்றவன கட்டிறது மட்டும் சரியான பண்பாடோ…?”

கோதையின் அழுத்தமான கேள்விக்குப் பதில் கூற முடியாது இருவரும் திகைத்துப் போகிறார்கள்.

கோதையும் முகுந்தனும் மேலை நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் எல்லை மீறி நடந்ததில்லை. அவர்கள் உறவில் நேர்மையிருந்தது. நேசமிருந்தது. காலம் முழுவதும் ஒன்றாய் இணைந்து வாழும் உறுதியிருந்தது. இது உமாவுக்கு நன்றாகத் தெரியும். இதுவரை அவர்களின் நடைத்தையைக் கண்டு “கோதை எப்படியும் எண்ட பெட்டைதான்” என உள்ளூரக் குளிர்ந்திருக்கிறாள்.

“அம்மா முகுந்தனிட்ட ஒரு மனுசனுக்கு வேண்டிய எல்லா நல்ல பண்பும் இருக்கு. அதோட அவர் எனக்கு எல்லாவிதத்திலையும் தகுதியானவர். அது உங்களுக்கும் தெரியும். நல்லா யோசிச்சு இந்தக் கலியாணத்துக்கு நீங்களே சம்மதிப்பீங்கள் எண்டு நம்பிறன். என்ற முடிவில மட்டும் எப்பவும் மாற்றமில்லை…” மூச்சுவிடாமல் கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காதவளாய் அங்கிருந்து வெளியேறுகிறாள் கோதை.

கோதை தமிழர் பண்பாட்டுணர்வில் மட்டுமல்ல. உலகப் பண்புணர்விலும் உயர்ந்தே நிற்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் காலங்காலமாய் உதிரத்தோடு இரண்டறக் கலக்கப்பட்டு விட்ட சாதி உணர்வை அது தரும் பெருமித உணர்வைக் கோதை போல உடனே உதறித் தள்ளிவிட அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது.

*****

உமாவுக்கும் காந்தனுக்கும் அன்றிரவு சிவராத்திரியாகிறது. பல வழிகளிலும் அந்தப் பிரச்சினையைப் போட்டு அலசிப் பார்கிறார்கள். பாசமும் சாதிப் பந்தமும் தராசின் இரண்டு பக்கங்களில் நின்று பலமணி நேரம் ஊசலாடுகிறது. கோதை எப்படிப் பெற்றோர்களை மதிக்கிறாளோ அதற்கு மேலாகத் தனக்கு நியாயமானது என நினைப்பதைச் சாதிப்பதில் பிடிவாதமாக நிற்பாள் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. கோதையென்ற ஒளிவிளக்கில்லாத குருட்டு வாழ்க்கையை அவர்களால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

தொடக்கத்தில் சமூகம் விமர்சித்தாலும் காலகதியில் கோதை முகுந்தனின் கல்வி பண அந்தஸ்தின் முன்னர் சாதி முதன்மை படுத்தப்படாமல்தான் போகப் போகிறது. ஊரிலே இத்தகைய நிலையில் உள்ளவர்களை உமாவும் காந்தனும் தம் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். ஆக வெளிநாட்டில் சாதி சமூகத்தால் புறக்கணிக்கப்படும் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும் என்ற எதார்த்தையும் புரிந்து கொள்கிறார்கள்.

கோதை, முகுந்தனின் ஒழுக்கத்தோடு கூடிய நேசத்துக்கு அவர்களும் இதுவரை அங்கீகாரம் வழங்கி வந்திருக்கிறார்கள். அந்த நேசத்துக்கு மதிப்பளிக்காது போவது நியாயமல்ல என்ற உணர்வும் அவர்களிடம் தோன்றுகிறது. ஒருகூட்டுப் பறவைகளாக தங்கள் மூவரும் வாழ்ந்த வாழ்வுக்கு மூடு விழா வந்துவிடுமோ என்ற அச்சமும் தாம் கோதையின் உள்ளத்தில் பெற்ற உயர்ந்த இடத்தை ஒருபோதும் வழுவ விடக்கூடாது என்ற பாதுகாப்புணர்வும் ஒரே சமயம் தோன்றி அவர்கள் மனதில் தெளிவை உண்டாக்குகிறது.

தராசின் சமநிலை குலைந்து கோதையின் பக்கம் தாழ்கிறது.

*****

பெற்றோரின் மனமாற்றம் கேட்டு கோதை உளங்குளிர்ந்து புன்னகைக்கிறாள். இந்த மாற்றம் ஒருவகையில் அவள் எதிர்பார்த்ததுதான். தனது பெற்றோர் பற்றித் தான் கொண்டிருந்த உயர்ந்த படிமம் உடைந்து சிதறாமல் போனதில் அவளுக்குப் பெரும் நிம்மதி.

பழைய கலகலப்பு மீண்டும் அந்தக் குடும்பத்துக்கு ஒளி கூட்டுகிறது.

சாதியென்ற பெருஞ்சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த வளயங்களில் மேலும் சில சத்தமில்லாது விழுந்து நொறுங்குகின்றன.

*****

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *