ராஜாத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 20,288 
 

என் பெயர் ரகுராமன். .

வயது இருபத்தியாறு. சொந்தஊர் சென்னையின் தியாகராயநகர்.

மிகச் சமீபத்தில் அரசுடைமையாக்கப்பட தேசிய வங்கி ஒன்றில் வேலை கிடைத்து திருநெல்வேலியின் ஒரு சிறிய கிராமமான திம்மராஜபுரத்தில் போஸ்டிங். .

வங்கியில் சேர்ந்த முதல் வாரமே மிகவும் சீனியரான வரதராஜனின் நட்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். திம்மராஜபுரத்தைப் பற்றி நிறைய என்னிடம் அரட்டையடித்தார். தன் ஒரே மகள் சரோஜாவை எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார்.

திம்மராஜபுரம் ஒரு அழகான கிராமம். அதன் அக்கிரஹாரத் தெருவின் மேற்கே பெருமாள் கோவிலும் அதன் பக்கவாட்டில் ஒரு பிள்ளையார் கோவிலும், அதனையொட்டி ஒரு பெரிய அரச மரமும், அடுத்து தாமிரபரணியிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு வாய்க்காலும், கிழக்கே சிவன் கோவிலும் அதைத்தாண்டி பனங்கூடலும் என அழகுற அமைந்திருந்தது.

ஆனால் தற்போது அது தன் அக்கிரஹாரத் தன்மையை இழந்து பிற ஜாதிச் சகோதரர்களும் குடியேறிவிட்டனர் என்று வரதராஜன் சொன்னார். அவ்வித குடியேற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அங்கு வசித்துவந்த நாராயண வாத்தியார். அவர் பல வருடங்களுக்குமுன் ஒரு மார்கழி மாத சாயங்காலம், அக்கிரஹாரத் தெருவில் சகஸ்ரநாமம் உச்சரித்தபடி பக்தர்களுக்கு வீபூதி கொடுத்துக்கொண்டே போனாராம். அப்போது ஒரு வீட்டின் வாசலில் நின்ற அவ்வூரின் கணக்கப்பிள்ளை பக்தியுடன் விபூதியை வாங்கிக்கொள்ள தானும் கையை நீட்ட, நாராயண வாத்தியார் அவரை அவமதிக்கும் விதமாக வீபூதி தராமல் அவரைக் கடந்து சென்றுவிட்டாராம். ஏனென்றால் அவர் பிராமணர் அல்லாத பிள்ளை ஜாதியாம்.

தான் அவமதிக்கப்பட்டதால் வெகுண்ட கணக்கப்பிள்ளை, நாராயண வாத்தியார் வீட்டின் எதிரிலேயே ஒரு வீட்டை அதிக விலைக்கு வாங்கி குடியேறிவிட்டாராம். அதைத் தொடர்ந்து பலரும் குடியேறிவிட, நாராயண வாத்தியார் உபயத்தால் தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டு அந்தத் தெரு அக்கிரஹாரத் தெரு என்கிற அந்தஸ்தை இழந்துவிட்டதாம்.

கடவுளின் பெயரால் ஒரு சகமனிதனை அவமதித்ததற்கு தண்டனையாக நாராயண வாத்தியாரின் ஒரு மகனும், மூன்று மகள்களும் வாழ்க்கையில் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்களாம்.

வரதராஜன் இப்படி பல விதமான கதைகளை என்னிடம் சொல்லி தினமும் அரட்டையடிப்பார். இந்த விதமான அவரின் அரட்டைகளில் எனக்கு லயிப்பு சுத்தமாக கிடையாது எனினும், சரோஜாவின் பால் என் ஈர்ப்பு தினமும் அதிகமானது.

சரோஜா கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவள் என்று தெரிந்ததும் தினமும் மாலை வேளை அவள் வீட்டிற்கு தவறாது சென்றேன். இசையில் எனக்கு இருந்த சிறிது ஞானத்தையும், ஆர்வத்தையும் புரிந்துகொண்ட சரோஜா, தன் சங்கோஜம் குறைந்து இசைபற்றி என்னிடம் நிறைய பேசலானாள்.

ஸ்ரீரங்கபுர விஹாரவை பட்டம்மாளுக்கு அப்புறம் நான் மிகவும் ரசித்தது சரோஜா பாடியபோதுதான். அப்படியொரு கம்பீரமாக பாடிக்காட்டினாள் ப்ருந்தாவன சாரங்காவை. ராகமாலிகையில் அவள் பாவயாமி பாடினால் என் கண்களில் நீர் மல்கும். சுதா ரகுநாதனையும், விஜய்சிவாவையும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும்தான்.

அமைதியான காமதேனு போன்ற அவளின் அழகு என்னை அடித்துப்போட்டது நிஜம். அவளைப் பார்ப்பதற்கு அந்தக் காலத்து ஹிந்தி நடிகை நூடனைப்போல் நீள முகவாக்கில் சிரித்த முகத்துடன் இருப்பாள். அவளிடம் நட்பும் காதலும் சேர்ந்த ஒரு கலவையாக எனக்குள் பெருக்கெடுத்தது.

என் வீட்டில் எனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் பெண்களைப்பற்றிய புரிதல் எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற குறுகுறுப்பு எனக்குள் ஏராளம்.

என்னைப்பற்றி நான் தெரிந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான உண்மை – நான் ரொம்ப ரொம்ப மென்மையானவன் என்பதுதான். என்னைப் பொறுத்தவரை எந்தப் பெண்ணுமே ஒரு நேர்மையான ஆடவனுக்கு நல்ல சிநேகிதியாக இருக்க முடியும். அதற்கு ஆண்-பெண் உறவு மேன்மையான நட்பை அடிப்படையாகக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். ஆணுக்கு பெண்ணோ அல்லது பெண்ணுக்கு ஆணோ – பாலுணர்வு வடிவமாக மட்டும் தெரிதலே அத்தனை விதமான மனக் கசடுகளுக்கும் ஆரம்பம். . பாலுறவு – பரஸ்பர புரிதலின் ஒரு பகுதி மட்டுமேயன்றி அதுவே உறவுக்கு அடிப்படை கிடையாது. மனதில் கல்மிஷம் இல்லாத உறவு ஏகாந்தமானது.

ரொம்ப அன்பும் பாசமும் ஒருவரிடம் எனக்கு இருந்தால் நான் அவர்களை ராஜாத்தி என்று அழைக்கிற சகஜ மனநிலை எனக்குள் ஏற்பட்டுவிடும். எனது இரண்டு தங்கைகளையும் அவ்விதம் அடிக்கடி அழைப்பதுண்டு. அதே மனநிலை எனக்கு சரோஜாவிடமும் ஏற்பட்டது.

அன்று வைகுண்ட ஏகாதசி தினம். ஞாயிற்றுக் கிழமை. மாலை சரோஜாவைப் பார்த்துப்பேச அவள் வீட்டிற்கு சென்றேன். அவள் எம்.எஸ் கச்சேரியை ஸி.டி.யில் போட்டு ரசித்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

என்னைப் பார்த்ததும், ஸி.டியை மெதுவான சத்தத்தில் வைத்தாள்.

“என்ன ராஜாத்தி வீட்ல யாரும் இல்லையா?” என்று இயல்பாகக் கேட்டேன்.

சரோஜா சட்டென திகைத்துப்போய் என்னைப் பார்த்தாள். இணக்கம் இல்லாத பாவனை அவள் முகத்தில் தெரிந்தது. சில கணங்கள் மெளனமாக என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, “இன்னிக்கி வைகுண்ட ஏகாதசி அதனால பெருமாள் கோவிலுக்கு போயிருக்கா” என்றாள்.

மறுபடியும் எதோ ஒரு யோசனையில் இருந்தாள்.

எனக்குப் புரிந்துவிட்டது. ராஜாத்தி என்று கூப்பிட்டதற்கு அவளிடம் மன்னிப்புக் கேட்டுவிடலாம் என்று நான் ஒரு வினாடி யோசிக்கும்போதே, அவள் என்னை முந்திக்கொண்டு உறுதியான மெல்லிய குரலில், “ப்ளீஸ்… ராஜாத்தி என்றெல்லாம் என்னைக் கூப்பிட வேண்டாம்… அப்படிக் கூப்பிடுகிற உரிமை என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவருக்கு மட்டும்தான் உண்டு” என்றாள்.

சட்டென எனக்குள் அவளிடம் மலர்ந்திருந்த ஒட்டுதல் உதிர்ந்துவிட்டது.

சரோஜாவின் சொற்கள் என்னைக் காயப்படுத்தி விடவில்லை எனினும் அவளிடம் என் மனசே விட்டுப்போய்விட்டது.

ஒரு அசாதாரண இறுக்கமான சூழ்நிலை அங்கு நிலவியது. “என்னை மன்னிச்சிடுங்க” என்று சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

அதன் பிறகு சீனியர் வரதராஜன் எத்தனையோ முறை என்னை அவர் வீட்டிற்கு கூப்பிட்டாலும், நான் பலவித காரணங்களைச் சொல்லி அவர் வீட்டிற்கு செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்தேன்.

திம்மராஜபுரம் எனக்கு கசந்தது. அடுத்த ஆறு மாதத்தில் மாம்பலம் டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

ஒரு வருடம் கழித்து சரோவுக்கு கல்லிடைக்குறிச்சியில் கல்யாணம் என்று என்னை வரதராஜன் போனில் அழைத்து பத்திரிக்கையும் அனுப்பினார். மரியாதை நிமித்தம் நானும் சென்றேன். மாப்பிள்ளை பெரிய இடம். சரோஜாவுக்குப் பொருத்தமாக கம்பீரமாக இருந்தார்.

அதற்கு அடுத்த வருடம் வரதராஜன் எனக்கு போன் பண்ணி சரோவுக்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னார். எனக்கும் வீட்டில் பார்த்துவைத்த சங்கீதாவுடன் திருமணமாயிற்று. நான் அவளுடன் சந்தோஷமாக குடித்தனம் நடத்தலானேன்.

பல வருடங்கள் ஓடிவிட்டன…

அன்று மாலை நானும் சங்கீதாவும் தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். தரிசனம் முடிந்து, பிரகாரம் சுற்றிவிட்டு வெளியே வந்தோம். அப்போது கோவிலுக்குள் நுழையும் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் பார்த்துப் பழகிய முகமாய் எனக்குத் தோன்றியது. அவளும் என்னைப் பார்த்தாள். சற்று திகைத்தவளாக நின்று, பிறகு உடனே கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் என்னை நோக்கி வந்தாள்.

அவள் யார் என்பது இப்போது எனக்குப் புரிந்துவிட்டது.

“என்னை உங்களுக்குத் தெரியுதா?” மெல்லிய குரலில் கேட்டாள்.

“ஓயெஸ்…நல்லா தெரியுது, செளக்கியமா?”

அவளை உடனே சங்கீதாவுக்கு அறிமுகப் படுத்தினேன்.

அப்பா ரிடையர்ட் ஆகி தற்போது அனைவரும் சென்னை வந்துவிட்டதாக சொன்னாள்.

“நீங்க பேசிகிட்டு இருங்க, நான் போய் செருப்பை எடுத்து வருகிறேன்.” சங்கீதா கிளம்பிச் சென்றாள்.

பொதுவான விஷயங்களை என்னிடம் பேசிக்கொண்டிருந்தவள், சட்டென ஒரு தயங்கிய மெல்லிய குரலில், “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்றாள்.

நான் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என் கணவர் ஒரு நாள்கூட என்னை ராஜாத்தின்னு கூப்பிட்டதே கிடையாது.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *