முதலாம் காதல் யுத்தம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 24,327 
 

”மனோ, நாம பிரிஞ்சிடலாமா?” என்றாள் தீப்தி.

எதிர்பாராத விபத்து போலவோ… எதிர்பாராத மழையைப் போலவோ, திடீரென்று அவள் இதைக் கேட்டுவிடவில்லை என்பது எனக்குத் தெரியும்.

எதிர்பார்த்த கேள்விதான் இது. சில நாட்களாகவே அவள் மனதில் அசை போட்டு ஒத்திகை பார்த்த கேள்விதான் இது.

‘காபி சாப்பிடலாமா?’ என்கிற கேள்விக்கு ‘சரி’ என்றோ, ‘வேண்டாம்’ என்றோ, கேள்வி தன் கேள்விக் குறியை அணிவதற்கு முன்பே பதிலைச் சொல்லிவிட முடியும். இந்தக் கேள்விக்கு எப்படி உடனே பதில் சொல்வது?

எதிர்பார்த்த கேள்வி என்றாலும்… எப்போது கேட்டாலும் இதைத்தான் சொல்ல வேண்டும் என்கிற தயாரிக்கப்பட்ட பதில் எதுவும் என்னிடம் இல்லை.

‘சரி’, ‘வேண்டாம்’ என்கிற இரண்டு பதில்கள் தவிரவும் மூன்றாவதாக ஒரு பதில் என்னிடம் இருக்கிறது. ஓர் எதிர்க் கேள்விதான் அந்தப் பதில்.

”ஏன் தீப்தி?”

இந்த ஒரு வார்த்தைக் கேள்விக்கு ஒரு வார்த்தையால் பதில் சொல்ல முடியாமல் மௌனம் அணிந்தாள். எங்கள் பார்வைகளின் உரசலைத் தவிர்த்தாள். அந்த மொட்டை மாடி உணவகத்தில் அவள் கழுத்தை 90 டிகிரி இடது புறம் திருப்பினால், தவழ்ந்து வரும் கடல் அலைகளைப் பார்க்கலாம். திருப்பினாள். பார்த்தாள். நான் அதே 90 டிகிரி இடது புறம்!

இருவரும் எத்தனை நேரம் பார்த்துக் கொண்டு இருந்தோம் என்று நினைவு இல்லை.

”நீ இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலை” என்றாள் திரும்பாமல்.

”நீயும்தான்” என்றேன்.

”காரணம் உனக்குத் தெரியாதா?”

”உண்மையான காரணம் தெரியாது.”

”எது பொய்? வந்தனா பொய்யா? அப்படி ஒருத்தி இல்லவே இல்லைனு சொல்லப்போறியா? அசோகமித்திரனோட கதாபாத்திரம்னு நம்பிக்கணுமா நான்?”

”இது குதர்க்கம் தீப்தி. அராஜகமாப் பேசறே!”

”நீங்க நடந்துக்கிட்டது அராஜகம் இல்ல, நான் பேசறதுதான் அராஜகமா?”

”நேசிக்கிறது அராஜகம்னா, நீயும் நானும் நேசிக்கிறதும் அராஜகமா? என்ன பேத்தல் இது?”

”மறைச்சதை நியாயப்படுத்துவியா மனோ?”

”யெஸ்!”

”எப்படி?”

”ரெண்டாவது தடவை காதலிக்கிறதை எந்தச் சட்டமும் மறுக்கலை தீப்தி.”

”சுத்தறே, என் முகம் பார்த்து நேரா சொல்லு. எப்படி மறைக்கலாம்?”

”நீதான் முகத்தைத் திருப்பிக்கிறே தீப்தி… விமன் ஆர் டூ பொசஸிவ். டே ஒன்லயே உங்கிட்ட சொல்லியிருந்தா, என்னோட பழகியிருப்பியா? மனசைத் தொட்டுச் சொல்லு!”

”நாம பழக ஆரம்பிச்சு டூ இயர்ஸ் ஆயிடுச்சு மனோ!”

”ஸோ வாட்?”

”இப்பக்கூட நீயா சொல்லலை.”

”ஆமாம். சொல்லலை.”

”நானா தெரிஞ்சிக்கிட்டுக் கேட்டேன்!”

”இல்லைனு மறுக்கலையே…”

”கல்யாணம் ஆகியிருந்தாலும் மறைச்சிருப்பியா?”

”ஷ்யூர்! சாகற வரை நானா சொல்லியிருக்க மாட்டேன்!”

”யார் சாகற வரைக்கும்?”

”அப்படியும் வெச்சிக்கலாம்.”

”இதான்டா ஆம்பளைத் திமிரு!”

”லூஸு மாதிரிப் பேசறே தீப்தி.”

”உன்னை லவ் பண்ணேன் பாரு. நான் லூஸுதான்!”

”அழப்போறியா? கர்ச்சீப் வேணுமா?”

”நான் ஏன் அழணும்?”

”குரல் விம்முன மாதிரி இருந்துச்சு…”

”நான் அழறதைப் பார்க்கணுமா உனக்கு?”

”உங்க பாட்டி செத்தப்போ நீ அழுது நான் பார்த்திருக்கேன். அழறப்பகூட நீ அழகா இருக்கேனு என்னால பிட்டு போட முடியாது. அழறப்ப எல்லாருமே அசிங்கமாத்தான் இருப்பாங்க… ஐஸ்வர்யா ராயாவே இருந்தாலும்!”

”வாட் இஸ் யுவர் பாய்ன்ட் மேன்?”

”எதுல?”

”எப்படி மறைக்கலாம்? நான் கன்வின்ஸ் ஆகலை!”

”மறைக்கறது வேற… சொல்லாம இருக்கறது வேற! ட்ராப் லைட்டுக்குக் கீழ மேப் வரைஞ்சு, பெருசா பிளான் எல்லாம் போடலை. வேணாம்னு தோணுச்சு. சொல்லலை!”

”நோ… இப்பவும் நான் கன்வின்ஸ் ஆகலை!”

”ஐ ம் நாட் கன்வின்ஸிங். ஐ ம் ஜஸ்ட் ஆன்ஸரிங்!”

”நான் கன்வின்ஸ் ஆகணும்னு உனக்கு அவசியம் இல்லையா?”

”கன்வின்ஸ் ஆகத் தயாரா இருந்தா ‘பிரிஞ்சிடலாமா?’னு அணுகுண்டுக் கேள்வி வராது தீப்தி.”

”உன் முதல் காதல் செய்தி எனக்கு அணுகுண்டு இல்லையா?”

”ஓ… நீ பழி வாங்கறியா?”

”எனக்கு வலிக்கவே வலிக்காதா?”

”எனக்கும் வலிக்கணும். அதானே?”

”ஆனா, வலிச்ச மாதிரி தெரியலையே! உனக்கென்ன… வந்தனா இல்லைன்னா, ஒரு தீப்தி. தீப்தி இல்லைன்னா, ஒரு ப்ரீத்தினு போய்டுவ!”

”என்னை என்னதான் புரிஞ்சிட்டிருக்கே நீ?”

”சுயநலத்துக்காகப் பொய் சொல்றவன்னு புரிஞ்சிக்கிட்டதுதான் லேட்டஸ்ட்!”

”அப்புறம்?”

”நீ என்ன பண்ணாலும், பண்ணிஇருந்தாலும் நான் கேள்வியே கேக்காம அக்செப்ட் பண்ணிக்கணும்னு நினைக்கிற ஆணாதிக்கம் பிடிச்சவன்!”

”அதான் கேள்வி கேள்வியாக் கேட்டுக்கிட்டு இருக்கியே!”

”ஆனா, அக்செப்ட் பண்ணிக்க மாட்டேன்!”

”வெல். உனக்கு ரைட்ஸும் இருக்கு. சாய்ஸும் இருக்கு. லைஃப் இஸ் யுவர்ஸ்!”

”நான் என்ன முடிவு பண்ணாலும் உன்னால சந்தோஷமா ஏத்துக்க முடியும்ல?”

”வருத்தமோ, சந்தோஷமோ… அது என் பிரச்னை. உனக்கென்ன கவலை?”

”ஸாரி சொல்ற நாகரிகம்கூட இல்லையா மனோ உங்கிட்ட?”

”எதுக்கு ஸாரி?”

”மறைச்சதுக்கு!”

”சுத்திச் சுத்தி அங்கேயே வந்து நிக்கிற. என் வரைக்கும் நியாயமாப்பட்ட ஒரு விஷயம் அது. எதுக்கு ஸாரி கேக்கணும்?”

”இவகிட்ட நான் ஏன் ஸாரி கேக்கணும்னு உனக்கு ஒரு சூப்பர் ஈகோ!”

”இவனை ஸாரி கேக்கவைக்கணும்னு உனக்கு ஒரு சூப்பர் ஈகோன்னும் நான் நினைக்கலாமா?”

”வாதம் பண்றே!”

”இல்ல… எதிர்வாதம்!”

”அதுவும் இல்ல… பிடிவாதம்!”

”மே பி! காந்தியோட பிடிவாதம்தான் நம்ம நாட்டுக்கு…”

”ஸ்டாப் இட் ஐ ஸே… காந்தியோட கம்பேர் பண்ற அளவுக்கு நீ உத்தமன் இல்ல!”

”உன் டிக்ஷனரில உத்தமனுக்கு விளக்கம் என்ன?”

”அட்லீஸ்ட் பொய் சொல்லாம இருக்கறது!”

”நான் பொய் சொல்லலையே!”

”உண்மையைச் சொல்லாம மறைக் கிறதும் பொய்தான்!”

”வள்ளுவர் படிச்சிருக்கியா? நன்மை பயக்கும்னா…”

”உன் புலமையை புரூவ் பண்ண அவசியம் இல்லை. கடகடன்னு சொல்லு. எங்க, எப்படிப் பாத்திங்க? ஏன் அவளை லவ் பண்ணே? எத்தனை நாள், இல்லை… எத்தனை வருஷம்? ஏன் பிரிஞ்சீங்க?”

”அவசியம் சொல்லணுமா தீப்தி?”

”அப்பதான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும்!”

”என்னன்னு?”

”நம்ம காதல் தொடரணுமா, வேணாமானு!”

”நம்ம காதலைக் காப்பாத்தச் சொல்லி நான் என்ன கருணை மனு போட்டேனா?”

”அடங்குடா, சொல்லு… ம்… சீக்கிரம்!”

”வேணாம் தீப்தி… வலிக்கும்.”

”பரவால்ல… தாங்கிக்கறேன்.”

”எனக்கு வலிக்கும்னு சொன்னேன்!”

”பார்த்தியா? அப்ப அவளை உன்னால மறக்க முடியலைல்ல?”

”அஃப்கோர்ஸ், நம்ம வாழ்க்கைல நடந்த எந்த ஒண்ணையும் நினைக்காம இருக்கலாம். மறக்க முடியாது. இப்ப நீயே ‘குட் பை’ சொல்லிட்டுப் போயிட்டேனு வெச்சிக்க… உன்னை என்னால எப்படி மறக்க முடியும்? ஆத்திரமா ஆயிரம் திட்டிட் டுப் போனாலும் உன்னாலயும் மறக்க முடியாது. தீப்தி… இந்த நிமிஷம் நீ என்னை வெறுத்தாலும்… போன நிமிஷம் வரைக்கும் விரும்பினது நிஜம். அந்த நிஜம் உன்னை மறக்க விடாது!”

”அத்தனை அக்மார்க் சூப்பர் காதல்னு சொல்றே?”

”காதல்ல சுமாரான காதல், சூப்பரான காதல்னு தரம் பிரிக்க முடியுமா என்ன? வந்தனாவோட எனக்கு இருந்த காதலும் உண்மையானதுதான். இப்போ உன்னோட எனக்கு இருக்கிற காதலும் உண்மையானதுதான். அவளைப் பிரிஞ்சப்பவும் ரகசியமா அழுதேன். உன்னைப் பிரிஞ்சாலும் ரகசியமா அழுவேன். உன் பிரச்னை அது இல்லை. உனக்குத் தெரிய வேண்டியது வேற!”

”வாட் டு யூ மீன்?”

”உன் மனசுல இருக்கற நிஜமான கேள்விக்கு இப்ப பதில் சொல்றேன். தீப்தி… வந்தனாவோட நான் கைகோத்து நடந்திருக்கேன். கட்டிப் பிடிச்சிருக்கேன். ஒவ்வொரு சந்திப்புலயும் முத்தம் கொடுத்து இருக்கேன். இதெல்லாம் நமக்குள்ளேயும் இப்ப நடந்துக்கிட்டு இருக்கு. அதுக்கு மேல நாங்க போகலை… இப்ப நாம போகாத மாதிரியே!”

”அதாவது, வேற தப்புத்தண்டா எதுவும் நடக்கலைன்றே!”

”ஜீன்ஸ் பேன்ட்டும் ட்யூப் டாப்ஸும் போட்டுக்கிட்டு ஏன் இப்படிச் சுத்தி வளைக்கிறே? அதென்ன தப்புத்தண்டா? நேராக் கேளு. நாங்க செக்ஸ் வெச்சிக் கலை. வெச்சிக்கக் கூடாதுன்னு சபதம் எல்லாம் போடலை. சந்தர்ப்பம் அமையலை!”

”இதை நான் நம்பணும்?”

”நான் நம்பச் சொல்லலை. நாங்க செக்ஸ் வெச்சிட்டிருந்தா… எத்தனை தடவைனு சொல்ற நேர்மை எனக்கு இருக்கு. மனசுக்குள்ளே கேள்விகளைப் போட்டு குடைஞ்சிக்கிட்டே இருக்காதே. புரிஞ்

சுக்கோ… அவளை ரொம்ப லவ் பண்ணேன். உன்னையும் ரொம்ப லவ் பண்றேன். லவ் பண்ற பொண்ணு மனசுக்குக் கஷ்டம் கொடுக்க எவனும் நினைக்க மாட்டான். பாரு… எவ்வளவு கஷ்டப்படறே!அதனால தான் சொல்லலை. இது திமிர் இல்லை.. ஆணாதிக்கம் இல்லை… துரோகம் இல்லை… அக்கறை! அந்தக் காதல் மாதிரி இந்தக் காதலும் முடிஞ்சிபோயிடக் கூடாதுங்கற அக்கறை!”

தீப்தி பொலபொலவென்று அழத் துவங்கினாள்.

”ஏய்… என்ன இது… பப்ளிக்ல!”

”பரவால்ல! அழறப்ப நான் அசிங்கமாவே இருந்துட்டுப் போறேன்!”

எதிர் நாற்காலியில் இருந்து எழுந்து வந்து என் பக்கத்து நாற்காலியில் அமர்ந்தாள். தோளில் சாய்ந்துகொண்டாள்.

”இனிமே கேக்க மாட்டேன் மனோ. மறைச்சதும் காதல்தான்னு புரிஞ்சுக்க முடியலை. கோபம்தான் பிரதானமா வந்திச்சு. ரொம்ப வறுத்தெடுத்துட்டேன்ல? ஸாரிடா!”

”ஸாரி எல்லாம் இருக்கட்டும். நீ கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்லலையே!”

”என்ன கேட்டேன்?”

”பிரிஞ்சிடலாமானு கேட்டியே…”

”யாரு? எப்பக் கேட்டேன்?”

முகம் நிமிர்த்தி குறும்பாகச் சிரித்தாள்.

இந்தச் சிரிப்பு இவள் முகத்தில் எப்போதும் இருக்க வேண்டும். இவள் என்னவள். என்னை நேசிப்பவள். என்னால் நேசிக்கப் படுபவள். இந்தக் காதலும் இந்த நிமிடமும் கலப்படம் இல்லாத நிஜம்!

தீப்திக்கும் ஒரு பழைய நிஜம் உண்டு. பிரசன்னா என்கிற நிஜம். எனக்குத் தெரியும். சில மாதங்களுக்கு முன்பே தெரியும். அந்த நிமிடம் அணுகுண்டு விழுந்ததைப்போலத்தான் இருந்தது. சில நிமிடங்களில் இருட்டு பழகுவதுபோல… அந்த நிஜம் பழகியது மனது!

மறைத்தது நியாயம்தானே? என்னைப் போலவே. அவள் கேட்டுவிட்டாள். நான் கேட்க மாட்டேன். இன்றல்ல… நாளை அல்ல… சாகும் வரை. கேள்விகள் வலிக்கும்… இருவருக்கும். வலிக்கச் செய்வது காதல்ஆகாது! புரிந்துகொள்வதும் ஏற்றுக் கொள்வதுமே காதல்! ஏற்றுக்கொள்வது என்றால் முழுமையாக! முன் வாழ்க்கைச் சம்பவங்களையும் சேர்த்து! அது காதலில் முடியும்… காதலால் மட்டுமே முடியும்!

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

2 thoughts on “முதலாம் காதல் யுத்தம்

  1. நன்றாக இருந்தது. வாழ்கையில் ஏற்படும் நிஜ நிகழ்வுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *