பூக்கள் பூக்கும் தருணம்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,127 
 

கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு ஒன்றும் ஓடவில்லை. ஒரு கணம் ஏன் இந்த வேண்டாத வேலை என்று தோன்றியது. எல்லாம் நேற்று என் நண்பன் மனோகரைச் சந்தித்ததால் ஏற்பட்ட பிரச்னை.

பார்ப்பதற்கு மிகவும் சுமாரான மனோகர், கல்லூரி மேகசினில் கவிதை எழுதியே காலேஜின்… மற்றும் எங்கள் முனிசிபாலிட்டியின் ஆகச் சிறந்த அழகியான ஜோதியை வீழ்த்திவிட்டான். “”எப்படிடா?” என்று கேட்டபோது, “”மச்சி… நகைக்கு மயங்காத பொம்பளைங்க கூட இருக்கும். கவிதைக்கு மயங்காத பொம்பளைங்களே கிடையாது…” என்றான் மனோகர். நாமும் ஏன் கவிதை எழுதி ஏதேனும் அழகியை மடக்கக்கூடாது என்று தோன்றியதன் விளைவே இந்த அதிகாலைக் கவிதை முயற்சி.

பூக்கள் பூக்கும் தருணம்“ஓ… பெண்ணே…’ என்று பொத்தாம் பொதுவாக எழுதினால் கவிதை வரமாட்டேன் என்றது. எனவே நாம் காதலிக்க வேண்டிய பெண்ணைத் தேர்வு செய்துவிட்டு, அவளைப் பற்றியே கவிதை எழுதுவது என்ற முடிவுக்கு வந்தேன். அதிலும் பிரச்னை இருந்தது. இப்போது ஒரே சமயத்தில் நான்கைந்து பெண்களை சைட் அடித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் காதலிப்பது என்று முடிவு செய்த பிறகு அதில் ஒரு பெண்ணைத்தானே தேர்வு செய்ய முடியும் (நான் எவ்வளவு நியாயஸ்தன் பாருங்கள்.) பிக்அப் ஆக சாத்தியமுடைய பெண்களை மனத்தில் ஓடவிட்டேன்.

மனத்தில் முதலில் ஸ்வாதிதான் தோன்றினாள். ஸ்வாதி அழகாகத்தான் இருப்பாள். ஆனால் ஆறு அண்ணன்கள். ஹோல்சேல் மர வியாபாரம். மாட்டினால், மர குடௌனில் கட்டிவைத்து உயிரோடு கொளுத்திவிடுவார்கள். காவ்யா… ஆள் ஓகே தான். ஆனால் ஒண்ணாம் நம்பர் மக்கு. தமிழில்தான் நிறைய மார்க்கு வாங்குவாள். அதுவே பத்து மார்க்குதான். கவிதையை எல்லாம் ரசித்து, என்னைக் காதலிக்கும் அளவுக்கு அறிவு இல்லை. இப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எதிர்வீட்டு மயூரிதான் மிஞ்சினாள்.

உடனே “ஓ… மயூரி…’ என்று ஆரம்பித்துவிட்டு, ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேப்பரைப் படித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். மேற்கொண்டு ஒரு வார்த்தைகூட வரவில்லை. கவிதை எழுதும் யாரிடமாவது ஆலோசனை கேட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பல பேரை யோசித்து, கடைசியில் டைரக்டர் கணேஷிடம் கேட்பது என்ற முடிவுக்கு வந்தேன்.

டைரக்டர் கணேஷ், எங்கள் ஊர் காலேஜில் பி.ஏ. ஹிஸ்டரி படிப்பவன். சினிமா டைரக்டராவதுதான் அவன் இலட்சியம். தனது லட்சியத்தை ஊருக்கு உரக்கத் தெரிவிக்கும்விதமாக, கவர்மெண்ட் கெஜட்டிலேயே தனது பெயரை டைரக்டர் கணேஷ் என்று மாற்றிக்கொண்ட அதிதீவிர இலட்சியவாதி.

நான் டைரக்டர் கணேஷை சந்தித்தபோது, அவன் கருவக்காட்டில் அமர்ந்து, அழுக்கு லுங்கியை கட்டிக்கொண்டு, ஏதோ திரைப்படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவுடன், “”வா மோகனு…அஜித் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிட்டிருக்கேன். அஜித்துக்கும், அஸினுக்கும்; சுவிட்சர்லாந்துல ஒரு சாங்கு. அதுக்கு லீட் சீன் எழுதிக்கிட்டிருக்கேன்” என்றான்.

“”அப்படியா…” என்றேன் மிகவும் புரிந்தாற்போல். ஏதோ லீட் சீன்… அது இதுங்கிறான். ரொம்ப விவரமான ஆளா இருப்பான் போலருக்கு. இவனிடம்தான் கவிதை எழுதுவது குறித்துக் கேட்க வேண்டும்.

“”கொஞ்ச நாளா கவிதை எழுதணும்னு ஆசை… ஆனா உக்காந்தா ஒண்ணுமே வர மாட்டேங்குது. அதான் உங்ககிட்ட ஐடியா கேட்கலாம்னு வந்தேன்.”

“”மோகனு… கவிதை எழுதறது… கதை எழுதறது… சினிமா எடுக்கறதுன்னு உள்ளுக்குள்ள ஒரு ஃபயர் இருக்கணும். உன்கிட்ட இருக்கா?”

எனக்குள் எதிர் வீட்டு மயூரிதான் இருந்தாள். எனது பதிலை எதிர்பாராமல் கணேஷ் தொடர்ந்து, “”என்கிட்ட இருக்கு. இப்ப ஒரு ஸ்க்ரிப்ட் வச்சிருக்கேன் பாரு. இந்த மாதிரி இந்தியாவுலேயே, ஏன் உலகத்துலேயே வந்துருக்காது. அப்படி ஒரு ஸ்டோரி. நீ கதையைக் கேளு” என்று கூற எனக்கு லேசாக வியர்த்தது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை.

தொடர்ந்து கணேஷ், “”விஜய், விக்ரம், சூர்யா காம்பினேஷன்ல வரப்போற முதல் தமிழ்ப் படம். கதை முழுசும் நம்மூர்லயே நடக்கற மாதிரி. படம் பிகினிங்கே அனல் பறக்கும். எடுத்தவுடனே, விஜய் நம்ம அண்ணாநகர்லயிருந்து, வேகமா தேரடித் தெருவுக்கு பைக்குல வர்றாரு. அதே சமயத்துல விஜய், திருச்சி ரோட்டுலருந்தும் வேகமா கார்ல தேரடித் தெருவுக்கு வர்றாரு.”

“”எப்படிண்ணே… ஒரே சமயத்துல, ஒரே ஆளு, வேற வேற இடத்துலயிருந்து …” என்று இழுத்தேன்.

“”குழம்பிட்டீல்ல… விஜய் டபுள் ஆக்ட்” என்றதும் கதை சுவாரஸ்யமானது.

“”அப்புறம்ண்ணே…”

“”அடுத்த சீனு… நம்ப விக்ரம் மாணிக்கம் தியேட்டர் வாசல்ல சோடா வித்துட்டிருக்காரு. அதே சமயத்துல விக்ரம், ராஜா தியேட்டர் வாசல்லயும் சோடா விக்குறாரு”

இப்போது எனக்கு லேசாக பயம் வர ஆரம்பித்துவிட்டது. “”என்னண்ணே… விக்ரமும் டபுள் ஆக்ட்டா?” என்றேன்.

“”அதேதான்…” என்று கணேஷ் தொடர்ந்து கூறிய கதையை விஜய்யும், விக்ரமும் கேட்டால், சினிமாவுக்கே முழுக்குப் போட்டுவிடுவார்கள்.

“”இடைவேளைல ஒரு பயங்கர ட்விஸ்ட்” என்று கணேஷ் கூறியவுடன், எனக்கு நெஞ்சு வலிப்பது போல் இருந்தது.

“”என்னண்ணே… சூர்யாவும் டபுள் ஆக்டா?” என்றேன் பயத்துடன்.

“”எப்படிரா கண்டுபிடிச்ச? அதேதான்” என்று கூற எனக்கு அழுகையே வந்துவிட்டது. “”என்னடா… ஒரு மாதிரி இருக்க. இதுல சிவாஜிக்கும் ஒரு ரோல் வச்சிருந்தேன். ப்ச்… செத்துட்டாரு.”

“”இருந்திருந்தாலும், உன் கதையைக் கேட்டவுடனே செத்துருப்பாரு. நல்ல வேளை…” என்று மனசுக்குள் கூறியபடி, “”சூப்பர்ண்ணே…” என்று ஒரு வார்த்தையில் சொல்லிவைத்தேன்.

“”கவிதை எழுதறது பத்திக் கேட்டீல்ல… உனக்கு இந்தச் சமூகக் கோபம்லாம் இருக்கா?”

“”அப்படின்னா?”

“”அதான்டா. நாட்டுல எதுவுமே சரியில்ல. குப்பைய முனிசிபாலிட்டி எடுக்காம இருக்கு. ரேஷன் அரிசி மோசமா இருக்கு. இதுக்கெல்லாம் கோபப்படுவியா?”

“”சேச்சே… நான் ஏன்ணே இதுக்கெல்லாம் கோச்சுக்கப்போறேன். நான் பொம்பளங்களப் பத்திதான் எழுதப் போறேன்.”

“”வெரிகுட்… முதல்ல பொண்ணுங்களப் பத்தி எழுத ஆரம்பி. இந்த வயசுல அதான் நல்லாவரும். முதல்ல ஓ… பெண்ணே…ன்னு போட்டுக்கணும். அப்புறம் உன் கண்ணு கடல் மாதிரி இருக்கு. மூக்கு முயல் மாதிரி இருக்குன்னு விதவிதமா வர்ணிச்சுட்டு, கடைசில நீ இல்லன்னா நான் நாசமாப் போயிடுவேன். இப்படி எதாச்சும் எடுத்துவிடு…” என்று தொடர்ந்து கால் மணி நேரம் ஆலோசனை வழங்கினான்.

கிளம்பும்போது, “”அடுத்த வாரம் நான் ஃப்ரீயா இருக்கறப்ப வா. சிம்புக்கு ஒரு கதை வச்சிருக்கேன். சொல்றேன்,” என்றான். எனக்கு அப்போதே வயிற்றைக் கலக்க ஆரம்பித்துவிட்டது.

மாலை வேளைகளில் மயூரி மொட்டை மாடிக்குப் படிக்க வருவாள். நாமும் நம் வீட்டு மாடிக்குச் சென்று, ஏதேனும் அதி அழகான கோலத்தில் அவளைப் பார்த்தபடியே கவிதை எழுதலாம் என்ற முடிவுடன், கையில் காகிதத்துடன் மொட்டைமாடி ஏறினேன். மாடியேறி நான் மயூரியைப் பார்த்த கணத்தில், கையில் ஏதோ கதைப்புத்தகத்தை வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள். புத்தகமெல்லாம் படிக்கும் ஜாதி, கட்டாயம் கவிதையில் வீழ்ந்துவிடும்.

மயூரியை சில வினாடிகள் என் கவிதைக் கண்களால் உற்றுப் பார்த்துவிட்டு,

ஓ… பெண்ணே…
நாம் படித்ததோ ஒரே பள்ளி.
அப்புறம் ஏன் போகிறாய் தள்ளி? என்று மூன்று வரிகள் எழுதினேன். இதை எழுத எனக்கு முக்கால் மணி நேரம் ஆனது. படித்துப் பார்த்தேன். சபாஷ்டா… என்று அடுத்த வரியை யோசித்து, மீண்டும் ஒருமுறை மயூரியைப் பார்த்துக்கொள்ளலாம் என்று எதிரே பார்க்க, மயூரி இடது கையால் மூக்கைச் சிந்த… கவிதை தீபம் அர்ஜெண்ட்டாக அணைந்துபோனது.

அன்றிரவு, அந்தக் கவிதையை எப்படி முடிப்பது என்று புரியாமல், தூக்கமின்றிப் புரண்டு… நடுராத்திரி ஒரு மணிக்குத் திடீரென்று தோன்ற, வேகமாக எழுந்து கவிதை நோட்டை எடுத்தேன்.

“”தூக்குது வாசனை மல்லி..
மத்தாப்பாய் சிரிக்கிறாய் கள்ளி…
வந்து என்னை அணைத்துக்கொள் அள்ளி…” என்று கவிதையை முடித்துவிட்டுப் படித்துப் பார்த்தேன். பரவாயில்லை என்று தோன்றியது.

மயூரி சிறுவயது முதலே நல்ல பழக்கம் என்பதால், மறுநாள் கவிதையை மயூரியிடம் காட்டினேன். அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு அந்தக் கவிதையைப் படிப்பது போல் தெரிந்தது.

“”யாரப் பத்திடா இந்தக் கவிதை?”

“”உன்கிட்ட சொல்றதுக்கு என்ன மயூரி… ஒரு பொண்ணு மேல… ஒரு இது. அதான் கவிதை எழுதி கவர் பண்ணலாம்னு… கவிதை எப்படி இருக்குன்னு சொல்லு.”

“”இப்படி எழுதினா கவிதைன்னு உனக்கு யாரு சொல்லித் தந்தா? கவிதைல அடுக்குபொழி இருந்தா நல்லாதான் இருக்கும். அதுக்குன்னு இஷ்டத்துக்கு, வார்த்தையைப் போட்டு அசிங்கப்படுத்தக்கூடாது. கவிதைல்லாம் எழுதறதுக்கு முன்னாடி முதல்ல நீ உன்னைத் தயார் செஞ்சுக்கணும்… கவிதை எழுதறத எல்லாம் ஓரம் கட்டி வச்சுட்டு, முதல்ல படிக்க ஆரம்பி…”

“”என்ன படிக்கணும்?”

“”கவிதை எழுதுறதுக்கு முன்னாடி, முதல்ல நிறைய கவிதைகள படி… அப்பதான் உனக்கு ஒரு ஐடியா கிடைக்கும். அப்புறம் எழுத ஆரம்பி. நீ காதல் கவிதைதான எழுதணும். முதல்ல இதப் படி…” என்று மயூரி கொடுத்த புத்தகம் கவிஞர் மீராவின் “”கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்”

படிக்க முதலில் போராகத்தான் இருந்தது. ஆனால் படிக்கப் படிக்க, சற்று சுவாரஸ்யமாகத் தோன்ற… வேகமாக அதைப்படித்து முடித்தேன். முடிக்க முடிக்க, மயூரி புதுசு புதுசாகப் புத்தகங்கள் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

புத்தகங்கள் படிக்கப் படிக்க எனக்குப் புதிதாக ஒரு வாசல் திறந்துவிட்டாற்போல் இருந்தது. கடைசியில் மயூரியிடம் எனது காதலைத் தெரிவிக்கும் ஒரு திருப்தியான கவிதையை எழுதிவிட்டு, மயூரியிடம் காண்பிப்பதற்காக எடுத்துச் சென்றேன்.

கவிதையை ஆழ்ந்து படித்து முடித்த மயூரி, சட்டென்று என் கையைப் பிடித்துக் குலுக்கி, “”அற்புதம்… கலக்கிட்டடா” என்று கூற நான் காற்றில் மிதந்தேன்.

“”யார்டா அந்த அதிர்ஷ்டக்காரி. ஏதாச்சும் புத்தகத்துக்கு அனுப்பு. கட்டாயம் போடு வாங்க. அடுத்த மாசம் எனக்கு மேரேஜ். அதுக்குள்ள உன் கவிதை பிரசுரமாவதப் பார்த்துட்டுதான் நான் கிளம்பணும்…” என்று தொடர்ந்து மயூரி கூற, எனக்கு அதிர்ச்சியில் கால்கள் நடுங்கின.

“”என்ன மயூரி சொல்ற… என்ன திடீர்னு கல்யாணம்…” என்றேன் துக்கத்தைத் தொண்டையில் விழுங்கியபடி.

“”நேத்துதான் ஃபிக்ஸ் ஆச்சு. எங்க மாமா பையன் ஒருத்தன் துபாய்ல இருப்பான்னு சொல்வேன்ல… அவன்தான். நேத்து ராத்திரிதான் பேசி முடிவாச்சு. அடுத்த மாசம் அவரு லீவுல வர்றாரு. கல்யாணம் முடிஞ்சவுடனே அழைச்சுட்டுப் போயிடுவாரு…” என்ற மயூரி மேற்கொண்டு பேசியது எதுவும் என் மண்டையில் ஏறவில்லை.

மயூரி விரும்பியது போல், அவளுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனது கவிதை பிரசுரமானது. மயூரிக்குத் திருமணமாகி அவள் துபாய் செல்ல… நான் தொடர்ந்து காதலின் பிரிவை கவிதைகளில் எழுத… தொடர்ந்து பிரசுரமானது. பயணம் தொடர்ந்தது.

இவையெல்லாம் நடந்து ஐந்து வருடங்களாகிவிட்டன. நான் யாருக்காகக் கவிதை எழுத ஆரம்பித்தேனோ… அவள் சென்றுவிட்டாலும், இன்று நான் பிரபலமான சினிமா பாடலாசிரியர். மயூரிதாசன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். கற்றது எதுவும் வீணாவதில்லை.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

1 thought on “பூக்கள் பூக்கும் தருணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *