கரிசல் காட்டு காதல் கதைகள்! – 4

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 10,305 
 

பொழுது கருத்துக்கிட்டு வர்றதைப் பார்த்ததும் சரோசா பெருமூச்சு மேல பெருமூச்சா விட்டா. நாலு நாளைக்கு முன்னாடிகூட ஆசை ஆசையா இருட்டு எப்போ வரும்னு காத்துக் கெடந்தவளுக்கு, இப்போ இருட்டைப் பார்த்தாலே மனசு கனத்துப் போகுது.

கண்ணும் மணியுமா இருந்த அவளுக்கும் அவ புருசன் சக்திக்கும் கண்ணேறு பட்டது மாதிரி சடவு வந்துடுச்சு. ‘‘சரோசா… சரோசா’’னு இவளையே சுத்திச் சுத்தி வந்தவன், இப்போ மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்கிடுதான். எப்பயும் அவளும் தன்னோட சேர்ந்தேதேன் சாப்பிடணும்னு அடம் பிடிக்கிறவன், கொலை பட்டினியா கெடக்கான். அது பார்க்க பொறுக்காம சாடை மாடையா கூப்பிட்டாலும் பேச்சே இல்ல. ‘அவுக குடும்பத் துக்கே புடிமுறண்டு (பிடிவாதம்) சாஸ்தி’னு கேள்விப்பட்டிருக்கா. அது நெசம்தேன் போல!

‘எல்லாம் இந்த பவுனால வந்த வினை’னு முணுமுணுத்தா சரோசா. சக்தி கூட நின்னு கருதடிக்கிறவன் பவுனு. அந்தக் களைப்பு போக நல்லாச் சாப்பிடுறவன்.

அதுலயும் கம்மாத் தண்ணி வத்திட்டதால, மடையோரம் தேங்கிக் கெடந்த தண்ணியில அயிரை, கெண்டை, கெளுருனு மீனுகள்லாம் சலசலத்துக் கெடந்துச்சு. கருதறுக்குற ஆம்பளையாளுகளும் பொம் பளையாளுகளுமா வேட்டியை யும், முந்தியையும் தண்ணிக் குள்ள விட்டு, ஒரு ராத்து ராத்தினா போதும்… மீனு குவிஞ்சிடும். இப்பவெல்லாம் வயக்காட்டுல நெல் வாசத்தைவிடவும் மீன் கொழம்போட வாசம்தான் அதிகமாயிடுச்சு.

அங்கதேன் பவுனு கொழம்போட மீனையும் அள்ளி, அள்ளிச் சாப்பிடுறதைப் பார்த்திருக்குறான் போல… அன்னிக்கு ராத்திரி கும்பாவுல வெச்ச சோறும் கொட்டு கூடையில (கிண்ணம்) வெச்ச சொரக்கா வெஞ்சனமும் சீந்தாம அப்படியே கெடந்துச்சு.

‘‘என்ன மச்சான், சோத்தக் கண்டா பறந்து போயி விழுங்குதவரு இப்பிடி பேசாம உக்காந்து இருக்கீரு. பாம்புலுக்கும் (பகல் முழுக்க) வேல செஞ்ச வெறிச்சில வவுத்துப் பசி உம்ம ஈரக் கொலயவில்ல கவ்விக்கிட்டு இருக்கும்’’னு ஆச்சர்யமா கேட்டா சரோசா.

‘‘பசி கவ்வத்தேன் செய்யுது. இந்த வெஞ்சனத்தக் கண்டாத்தேன் எனக்குப் புடிக்கல. நிதமும் காயா தின்னு அலுத்துப் போச்சி!’’னு என்னிக்கும் இல்லாத திருநாளா சொன்னான் சக்தி. அதோட நிக்காம, அவ காது பக்கத்துல வந்து மெள்ள கிசுகிசுப்பா, ‘‘சரோசா, ஒரு நாளைக்கு அயிர மீனு வாங்கி கொழம்பு வையி’’னு சொன்னதும் திகிலடிச்சுப் போய்ட்டா சரோசா. ‘‘என்ன மச்சான்… உமக்கென்ன கிறுக்கு கண்டு புடிச்சுப் போச்சா? கறி திங்காத சைவ சாதியில பொறந்துட்டு மீனு கொழம்பு கேக்கீரே. உமக்கே இது நல்லா இருக்கா?’’னு கேட்டா.

‘‘ருசிய மீறுன சாதி எனக்கு தேவயில்ல’’னு சக்தியும் வீறாப்பா சிடுசிடுத்தான்.

‘‘உமக்கு என்ன… ஒரு வார்த்தயில சொல்லிட்டீரு. நானு அப்படி இருக்க முடியுமா? உமக்கு மீனு கொழம்பு வச்சி கொடுத்தேன்னு தெரிஞ்சா உம்ம ஆத்தாளும், அய்யாவும் என்னப் பிச்சிருவாகளே. அம்புட்டு எதுக்கு… பக்கத்து வீட்டுல இருக் காளே உங்கக்கா. அவ வெடிச்ச மூக்குக்கு ஒரு வாசம் தப்பாதே. அவ ஒருத்தி போதும். ஊரு முழுக்க சாட்டிட்டு வந்துருவா. அதனால உசுரு கொல்லி சனங்க கணக்கா ருசிக்கு அலயாதீரும்’’னு அவ சொல்லவும், ஒரு உறுமலோட கும்பா சோத்தை அப்பிடியே வெச்சுட்டு எழுந்தவன்தான்… இன்னி வரையிலயும் ஒரு பேச்சில்லை, வார்த்தையில்லை. சிரிப்பும் சிணுங்கலுமா இருந்த வீடு, இப்போ அத்துவானமா வெறிச்சிட்டுக் கெடக்கு.

அந்த நெனைப்பாவே நடந்தவளுக்கு ஒரு யோசனை தோணவும், வயலுக்குள்ள எறங்கினா. இடுப்புல சொருகியிருந்த கருதறுக்குற அரிவாளை எடுத்து, கட்டை பாய்ஞ்சு கெடந்த நெல்லோட தூரை (அறுவடை முடிந்த வயலில் மிச்சமுள்ள தாள்) ஒரு பிடி அறுத்து, மடியில வெச்சுக்கிட்டு வீட்டைப் பார்த்து நடந்தா, ஒரு சிரிப்போட.

பொழுது அடையுறதுக்கு முன்னயே சரோசா வீட்டுல மசாலா வாசனை மூக்கைத் துளைச்சது. வாசல்ல கயிறு திரிச்சுக்கிட்டிருந்த புருசனை ஓரக் கண்ணுல பார்த்துக்கிட்டே பக்கத்து வீட்டு ராசாத்தி கிட்ட, ‘‘எக்கா… எங்க வீட்டுல இன்னிக்கு மீனு கொழம்பு. வேண்ணா இம்புட்டு வாங்கி சாப்புடு’’னு சொன்னா.

‘‘சரோசா… நெசாமாத்தேன் மீன் குழம்பு வச்சயா?’’னு சக்தி ஆசையா கேக்கவும், ‘‘பெறவென்ன பொய்யா சொல்லுதேன். யாரு என்ன சொன்னாலும் எனக்கு எம் புருசன்தேன் பெருசு. வாரும்… இன்னைக்காச்சிலும் ஆச தீர சாப்பிடும்’’னு கூப்புட்டா புருசனை.

மசால்ல ஊறுன மீனை ஆசையோட அள்ளி வாயில வெச்சவன் முகம் வக்கரித்துப் போச்சு. ‘தூ… தூ…’னு துப்பினான்.

‘‘இதென்னத்தா… இதுவா மீன் கொழம்பு? ‘வதக்கு, வதக்கு’னு ஒரு ருசியுமில்ல. இதவா அம்புட்டு சனமும் அள்ளி, அள்ளி மொக்குதாக’’னு அவன் கேக்க, சரோசா சிரிச்சுக்கிட்டே சொன்னா… ‘‘மச்சான்… வேம்பு தின்னவகளுக்கு வேம்பு ருசி, கரும்பு தின்னவகளுக்கு கரும்பு ருசி’’னு.

‘‘அடடா… நானு ஒரு கிறுக்குப் பய! இந்த ருசிக்கு ஆசப்பட்டு எதுக்க இருந்த ருசிய விட்டுட்டேனே’’னு சக்தி தன் பொஞ்சாதியை அணைச்சுக்கிடவும், நெல்லோட தூரு மீனான கதையை நினைச்சு, தனக்குள்ளேயே நமட்டுச் சிரிப்பா சிரிச்சுக்கிட்டா சரோசா.

– மார்ச் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *