அழகேசனின் பாடல்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 16,546 
 

மகேந்திரா வேன் மலைப் பாதையில் பயணித்துக்கொண்டு இருந்தபோது, மதியப் பொழுதின் வெயில் மலையின் பனியைக் குறைத்து மிதமான வானிலையால் உடலை இதமாக்கிக்கொண்டு இருந் தது. ஒழுங்கற்று ஓடிக்கொண்டு இருந்த தனத்தின் இதயம் சீராக இயங்கி, ஒரே ரிதமான துக்க நிலையை அடைந்தது. அந்த இயற்கை, துக்கத்தை போதைபோல் நெஞ்சில் மிதக்கவைத்தது. மலையின் வளைவுச் சாலையில் செல்லும்போது பள்ளத்தில் ஒரு பறவையின் இறக்கையைப்போல் மிதந்துகொண்டு இருந்த மஞ்சளாற்றை அவளிடம் காட்டி, அந்த மலைக் கிராமத்தில்தான் அவள் வாழப்போகிறாள் என்றார்கள் உறவினர்கள். அந்த ஆற்றைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே வந்தாள் தனம். மஞ்சளாற் றின் தூய்மை, மௌனமான அவள் மனக் கசப்பை, அவள் துயரை நீக்கிவிடுமா? அவள் எதையும் ரசிக்கும் மன நிலையில் இல்லை.

மலைச் சாலையோர மரத்தில் அமர்ந்து இருந்த குருவி சந்தோஷக் குரல் எழுப்பிப் பறந்து சென்றது. ‘இத்துனூண்டு மூக்கும் ஒரு விரல் அளவு றெக்கையும் மட்டுமே இருக்கிற இந்த நீலக் குருவி அம்புட்டுப் பெரிய வானத்துல பறந்து போகுது. அந்தக் குருவி மாதிரி ஆகாசத்தைக் கடக்க வேணாம். பிடிச்சவங்களோட வாழக்கூட முடியாத இந்த மனுச வாழ்க்கை கொடூரமானது’ என்று நினைத்தாள்.

மலைப் பாதையில் இருந்து இறங்கி, பள்ளத்தாக்கில் பயணமானது வண்டி. ஆற்றைக் கடந்து செல்கையில் வண்டியை நிறுத்தி அதன் அழகைப் பார்க்க இறங்கினார்கள் எல்லோரும். வண்டியில் இருந்து இறங்க மறுத்து உட்கார்ந்து இருந்தாள் தனம். ஆற்றை அருகில் இருந்து பார்ப்பது அவளுக்குப் பெரும் துன்பமாக இருந்தது. எல்லோரின் வற்புறுத்தலால் கீழே இறங்கி, மஞ்சளாற்று நீரைக் கையில் எடுத்தாள். பனி நிறைந்த நீர் குளிர்ந்து கனத்தது. நீரில் அவன் முகம் தோன்றி சிறிது சிறிதாக நீர் அலைவுற்று கடைசியில் உருத் தெரியாமல் மறைந்தது. அவன் முகம் மறைந்த நீரைக் கையில் அள்ளிப் பருகினாள். குளிர்ந்த பனி ஊசியாய் உள்ளிறங்கி தொண்டைக் குழி சிலிர்த்தது. ”விட்டுட்டுப் போகாத தனம்” – தூரத்தில் அவனது துயரக் குரல் காற்றில் சுழன்று அடித்தது.

மஞ்சளாறு கிராமத்தை அடைந்தது வண்டி. மாப்பிள்ளையின் உறவினர் வீட்டில் தனம் மற்றும் உறவினர்கள் தங்கிக்கொண்டார்கள். அடுத்த நாள் நடக்கப்போகும் திருமணத்துக்கு வேலை பரபரப்பாக நடந்துகொண்டு இருந்தது. யாருடைய கல்யாணத்தையோ வேடிக்கை பார்க்க வந்தவளைப்போல் உட்கார்ந்து இருந்தாள் தனம். அவள் அம்மா அவளை முறைத்து ”சகஜமா இருடி” என்று திட்டியபோதும் தனத்தின் முகம் துயரத்தின் சாயலை இழக்காமல் இருந்தது.

அவளுடைய அத்தனை துயரங்களுக்கும் டானா வடிவச் சந்தில் குடியிருந்ததுதான் காரணம் என்று நினைத்தாள்.

பிற்பகலில் மட்டுமே வெயில் தெருவில் விழும் டானா வடிவச் சந்தில் இருந்த கடைசி இரண்டு வீடுகளும் ஒரே வடிவமைப்பில் இருந்தன. முட்டுச் சந்தின் கடைசி வீட்டில் குடியிருந்த அழகேசன் எப்போதும் ரேடியோவில் பாடல்களை ஒலிக்கச் செய்துகொண்டு இருந்தான். அவன் ஒலிக்கச் செய்யும் பாடல்களில் தன் கனவினைக் கண்டுகொண்டு இருந்தாள், அவனுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த தனம். அரண்மனையைச் சுற்றி எழுப்பப்பட்டு இருக்கும் நெடுஞ்சுவர்களைப்போல டானா வடிவத் தெருவில் எதிர்ப்புறம் வாசல்கள் அற்ற வெறும் சுவர்களே மூடியிருந்தன. புதிர் கட்டங்களில் பாதை மூடப்பட்டு இருப் பதுபோல, அழகேசன் வீட்டோடு அந்தத் தெரு முடிந்து இருந்தது. அடுத்த தெருவுக்குக் கடந்து செல்ல வழி இல்லாத தால், விற்பனையாளர்கள் யாரும் அந்தத் தெருவுக்கு வருவது இல்லை. அது தனத்துக்குப் பெரும் துக்கமாக இருந்தது. பதினைந்து வீடுகள் தாண்டிக் கேட்கும் விற்பனையாளர்களின் குரலைக் கேட்டு தெரு வழியாக மூச்சிரைக்க ஓடுவாள். அவள் தெருவின் முனையை அடைவதற் குள் விற்பனையாளர்கள் அந்தத் தெரு வைக் கடந்து போய்விடுவார்கள். குச்சிமிட்டாய்க்காரனைத் தவறவிடும் நாட் களில் அந்தத் தெருவில் குடியிருப்பது பிடிக்கவில்லை என்று பெருங் குரலெடுத்து அழுவாள். விற்பனையாளர்களின் குரலைப் பின்தொடர்ந்து பல தெருக்களிலும் அலைந்து திரிவாள்.

அழகேசன் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது இவள் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். இவள் வாசல்படியில் தனியாக உட்கார்ந்து எழுதிக்கொண்டு இருக்கும் நாட்களில் அழகேசன் இவளைக் கிள்ளிவிட்டு ஓடுவான். அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் உட்பட அந்தத் தெருவில் வசிப்பவர்கள் பெரும்பாலான நாட்கள் காட்டுக்குச் சென்றுவிடுவதால், பிராது கொடுக்கக்கூட ஆள் இல்லாமல் இவள் எதிர்ப்புறம் இருக்கும் சுவரைப் பார்த்து அழுவாள். அவளைப்போலவே தனித்து இருக்கும் சுவர் அவள் வேதனையை மேலும் கூட்டியபடி இருக்கும். எந்த சுவாரஸ்யமும் ஒளிந்து இருக்காத அந்தத் தெருவுக்கு விளையாட வர அவளுடைய சிநேகிதிகளும் சம்மதிப்பது இல்லை. இவளே மற்ற தெருக்களுக்குப் போய் விளையாடிக்கொண்டு இருந்தாள்.

அந்தத் தெருவில் அவளுக்கு ஒரே ஆறுதல், சக்கரைக் கிழவிதான்.

அந்தச் சந்தின் தனிமையைத் தன் ஆகச் சிறந்த கதை சொல்லலால் தடவி அழிக்கும் சக்தி சக்கரைக் கிழவிக்கே உண்டு. மகன் வேறு தெருவில் மனைவி, மக்களோடு தனிக் குடித்தனம் நடத்த, டானா வடிவ சந்து தெருவின் நடுவில் இருந்த தன் பூர்வீக வீட்டில் தனியாகக் குடியிருந்தாள் கிழவி. வானத்தை நிறைக்கும் சிறகுகளால் ஓர் ஊரையே தூக்கி இன்னோர் இடத்தில் வைத்துவிடும் தேவதைக் கதைகளால் மனம்கொள்ளாப் பூரிப்பையும் அதிசய உலகத்தையும் தனத்துக்கு அளிப்பாள். அவளிடம் கதை கேட்ட நாள் முழுவதும் சிறகுகள் பறந்துகொண்டே இருக்கும் தனத்துக்கு. பறவையின் இறக்கையில் அமர்ந்து பறந்துபோவதாகக் கற்பனைகொள்ளும் தனம், அப்படி ஊர் மாறிப்போகும் தேவதைக் கதைகளிலாவது இந்தச் சந்து வீடோ, அழகேசன் வீடோ பக்கத்தில் இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

அழகேசனின் அக்காவோடு அவள் சிறிதளவு சிநேகிதத்துடன் இருந்தாள். அவள் தனத்தை அழைத்து விதவிதமாக ஜடை பின்னி அழகு பார்ப்பாள். அவளுக்குத் திருமணமாகிப் போன பின் தனம் கடைசி வீட்டுக்குச் செல்வது நின்றுபோயிருந்தது. அழகேசன் அம்மா அவளை வீட்டுக்குள் வரும்படி அழைத்தா லும் பெண் பிள்ளை இல்லாத அந்த வீட்டுக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள் தனம். அழகேசனின் அக்கா முதல் பிரசவத்துக்கு அங்கே வந்திருந்தபோது, ஒரே முறை குழந்தையைப் பார்க்கத் தன் அம்மாவோடு சென்றாள். ஏனோ தெரியவில்லை, இரண்டு குடும்பங்களுக்கான பழக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. அவரவர் காட்டு வேலைகளில் கவனமாக இருந்தார்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு முழுத் தேர்வில் தோல்வி அடைந்த பின் அழகேசன் படிப்பை நிறுத்திவிட்டு, டிராக்டர் ஓட்டப் பழகினான். அந்த நாட்களில்தான் அவனுக்குப் பாடல்கள் கேட்கும் வழக்கம் உருவானது. ஒரு டேப் ரிக்கார்டரை விலைக்கு வாங்கி, வீட்டில் எப்போதும் பாடல்களை ஒலிக்கச் செய்துகொண்டு இருந்தான். படிப்பில் கவனமாக இருந்த தனத்துக்கு அந்தப் பாடல்கள் சஞ்சலத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்தன. இப்போது எல்லாம் அவன் அவளைக் கிள்ளுவது இல்லை. அவள் தாவணி போட்டு இருந்தாள். தன் குடும்பத்து ஆண்களைத் தவிர, வெளி ஆண்களுடன் பேசுவது நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அழகேசன் கடந்து செல்லும் கணங்களில் எல்லாம் அவள் வெட்கப்படும்படியான பார்வையினை ஏற்படுத்திச் சென்றான். அவன் சிறு வயதில் கிள்ளிவைத்த நினைவில் அவன் மேல் உள்ளுக்குள் கசப்பினைக்கொண்டு இருந்தாள் தனம். அவன் ஒலிக் கச் செய்யும் காதல் பாடல்களால்கூடஅந்தக் கசப்பினை விலக்கச் செய்ய முடியவில்லை. ஆனால், அவனைத் தவிர, அவளை வெட்கப் படும்படியாகச் செய்யும் பார்வையை வேறு எவரிடமும் காணாதது அவளுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. வாசற்படியை ஒட்டி இருவரின் வீட்டு முற்றங்களும் திறந்து இருந்ததால், இரண்டு வீட்டின் பொதுச் சுவர்கள் மூடப்படாமல் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்குச் சுவர் வழியாக எகிறிக் குதித்துவிடும் அமைப்பில் இருந்தன அவர்களின் வீடுகள். அந்தச் சுவரை உயர்த்தி முற்றத்தை மூடிவிடலாம் என்று இரு வீட்டாரும் யோசிக்கவே இல்லை. அது இரண்டு வீட்டுக்கும் ஏதோ ஓர் உறவை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது.

தனம் மிகப் பெரிய படிப்பாளியும் இல்லை… முட்டாளும் இல்லை. ஆனால், படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று தீவிரமாக இருந்தாள். பத்தாம் வகுப்பு முடித்ததும் பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாள். காக்கிச் சட்டை, பேன்ட் அணிந்துகொண்டு படிக்கப் போவதுபோல் பல ஆயிரம் தடவை கற்பனை செய்து பார்த்திருப்பாள். ஆண் களைப்போல் தொழிற்சாலையில் மெக்கானிக் வேலை பார்க்க வேண்டும் என்ற அவள் விருப்பத்தை அவள் அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பாள். வீட்டில் இருந்த பழைய ஃபிலிப்ஸ் ரேடியோதான் அவளின் அந்த ஆர்வத்துக்கு வடிகால். அது பாடாமல் தன் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும்போது எல்லாம் ரேடியோவின் பாடு திண்டாட்டம்தான். ரேடியோவைப் பிரித்து அக்குவேறு ஆணிவேறாக அலசிக்கொண்டு இருப்பாள். ”அதுக்கு வாயிருந்தா அழுதிரும்” என்று சொல்லும் அம்மாவிடம் ”அதைப் பேசவைக்கத்தானே இந்தப் பாடுபடுறேன்” என்று சொல்லி அம்மாவின் வாயை அடைப்பாள். வயரைப் பிரித்து இணைத்து, கடைசியில் ரேடியோவைப் பாடவைத்ததும் பாலிடெக்னிக் படிக்க தான் தகுதியானவள்தான் என்று திருப்திப்பட்டுக்கொள்வாள்.

பத்தாம் வகுப்பு முழுத் தேர்வுக்காக அவள் தீவிரமாகப் படித்துக்கொண்டு இருந்தபோது, அழகேசன் இளையராஜா பாடல்களை டேப் ரிக்கார்டரில் ஒலிக்கச் செய்துகொண்டு இருந்தான். ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்…’, ‘ராசாவே உன்னைத்தான் எண்ணித்தான்…’ இந்த இரண்டு பாடல்களைக் கேட்கும்போது அவளுக்குக் குறுகுறுப்பாக இருக்கும். அழகேசனைத் திருமணம் செய்து கொள்வதைப்போல் கற்பனை கொள்வாள். அடுத்த நொடியே அந்த நினைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துப் படிக்கத் தொடங்குவாள். ஒரு கட்டத்தில் பாடல்களைக் கேட்டுக்கொண்டே படிக் கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டாள். அவள் தீவிரமாகப் படிப்பதைப் பார்க்கும்போது அழகேசனுக்கு எரிச்சலாக இருக்கும். அவள் பத்தாம் வகுப்பில் ஃபெயிலாக வேண்டும் என்று விரும்பினான். அப்போதுதான் அவள் தன்னைக் காதலிப்பாள் என்றும் திருமணம் செய்துகொள்வாள் என்றும் அவனுடைய நினைப்பு இருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வில் 390 மார்க் எடுத்திருந்தாள். ”பாலிடெக்னிக் படிக்க வேண்டும்” என்றதற்கு, ”பன்னிரண்டாவது முடிச்சிட்டு படிச்சிக்க” என்றார் அப்பா. அவரின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேச முடியாது. தனம் பன்னிரண்டாவது வரை பொறுமையாக இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாள்.

தனத்தின் அம்மா எப்போதும் அவளை யும் அழகேசனையும் கண்கொத்திப் பாம்பாகத்தான் கவனித்துக்கொண்டு இருந்தாள். பாட்டைப் போட்டே தன் மகளை அவன் மயக்கிவிடுவான் என்ற அவளுடைய நினைப்பில் நியாயம் இருந்தது. தனம் படித்துக்கொண்டு இருக்கும்போதே படிப்பை நிறுத்திவிட்டு, மனதை எங்கேயோ சஞ்சரிக்கவிடுவதை அவள் பல தடவை பார்த்து இருக்கிறாள். ”படிச்சது போதும்; போய் சட்டி பானையைக் கழுவு” என்று அம்மா எரிந்துவிழும்போதுதான் தனம் நிதானத்துக்கு வந்து ”பரீட்சைக்குப் படிக்கவிடுமா” என்பாள்.

”அதான் நீ படிக்கிறதைப் பார்க்கிறேன்ல” என்று சொல்லும்போது, தனம் அமைதியாகி அம்மா சொல்லும் வேலை யைச் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு விடுமுறையில் முழுவதுமாகத் தன் மனதை அழகேசனிடமும் அவன் ஒலிக்கச் செய்யும் பாடல்களிடம் இழந்திருந்தாள் தனம். ஆனால், அவனை நேருக்கு நேர் பார்க்கும்போது அலட்சியம் செய்து அவமானப்படுத்துவது ஏனென்று அவளுக்கே புரிவது இல்லை. அவள் அலட்சியம் செய்த நாளின் இரவில் நடுஜாமம் வரைக்கும் அழகேசன் சோகப் பாடல்களை ஒலிக்கச் செய்வான். அவனுடைய வேதனையைப் பொறுக்காமல், தனம் அடுத்த நாள் அவனைப் பார்க்க நேர்கை யில், வெட்கத்துடன் லேசான புன்முறுவலைப் பூக்கச் செய்கை யில் அவன் மகிழ்ந்துபோய், மீண்டும் காதல் பாடல்களைப் போடுவான். பாடல்கள் மாறி மாறிக் கேட்பதை தனத்தின் அம்மா கவனிக்காமல் இல்லை.

விபரீதம் நடப்பதற்கு முன்பே ஒரு முடிவு எடுத்துவிட வேண்டும் என்று தன் கணவனிடம் ”பக்கத்துல இளந்தாரிப் பய இருக்கிற சந்துவீட்டுக்குள் மகளை வைத்து ருப்பது சரியில்ல; கல்யாணம் செஞ்சு கொடுத்திடலாம்” என்று நச்சரிக்க… அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று தனம் அழுது தீர்த்ததை எல்லாம் கணக் கில் கொள்ளாமல், தன் உறவினர் குடும் பத்தைப் பெண் பார்க்கச் வரச் சொல்லி விட்டாள் அம்மா.

படிக்கவில்லை என்றாலும் அழகேசனை யாவது திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நினைப்பு இருந்தது தனத்துக்கு. ஆனால், அவனை நேரில் பார்க்கும்போது பேசுவதற்குத் தைரியம் இல்லை. உண்மையிலேயே ‘அவனைத் தனக்குப் பிடிக்கவில்லையோ? அவன் போடும் பாடல்கள் மட்டுமே காதல் உணர்வை எழுப்புகின்றனவோ?’ என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. மதுரையில் ஒரு சின்ன கலர் கம்பெனி வைத்திருக்கும் மணிகண்டன் அவளைப் பெண் பார்க்க வந்தான். சொந்தம் என்பதால், அவர்களின் திருமணத்தைப்பற்றி பேச பெரிதாக எதுவும் இல்லை. பெண் பார்த்துச் சென்ற அடுத்த வாரமே நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். கல்யாணத்தை அவனுடைய சொந்த ஊரான மஞ்சளாற்றில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.

அந்த நாட்கள் முழுவதும் பித்துப் பிடித்தவனைப்போல ‘ஒருதலை ராகம்’ படப் பாடல்களைத் திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டுக்கொண்டு இருந்தான் அழகேசன். தனத்தின் அம்மாவுக்கே அது கலக்கமாக இருந்தது. சீக்கிரம் திருமணத்தை முடித்து, மகளை அந்தத் தெருவில் இருந்து அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்தாள். அழகேசனின் அம்மா அவனைக் கேவலமாகத் திட்டினாள். டேப் ரிக்கார்டரைப் போட்டு உடைத்துவிடுவேன் என்று மிரட்டினாள். அவன் அப்பாவோ, தனத்துக்குத் திருமணம் முடிந்த பின் சரியாகிவிடும் என்று நம்பினார். தன் வீட்டில் யாரும் ஏன் தனக்காக தனம் வீட்டில் பேசாமல் இருக்கிறார்கள் என்று அவனுக்குக் கோபம் வந்தது. அவளைப் பெண் கேளுங்கள் என்று அவர்களிடம் சொல்வதற்கும் அவனுக்குத் தயக்கம். முரடனைப்போல அவன் தாடி வளர்த்துக்கொண்டு இருந்தது தனத்துக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதற்காக அவள் மணிகண்டனைத் திருமணம் செய்துகொண்டு, அந்தத் தெருவைவிட்டு ஓடிவிடலாம் என்று விரும்பவும் இல்லை. பாழாய்ப்போன பாடல்கள் மட்டும் இல்லை என்றால், அவள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அழகேசனைப் பற்றிக் கவலைப்படாமல் திருமணம் செய்துகொண்டு போயிருப்பாள். தன் நினைவில் இருக்கும் எல்லாப் பாடல்களை யும் அழித்துவிட விரும்பினாள். இனி எந்தப் பாடல்களையும் கேட்க முடியாதபடி செவிடாகிப் போனாலும் நல்லது என்று தோன்றியது. அவர்கள் இருவருக்கும் பகலும் இரவும் துக்கத்தால் நிரம்பிக்கொண்டு இருந்தன. இருவருமே தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையில் இருந்தார்கள். முழு மனதான காதலும் இல்லாமல், அவனைக் கைவிட்டுவிடும் மனமும் இல்லா மல் சீர்குலைந்து முடிவெடுக்க முடியாமல் பித்தாகிக் கிடந்தாள் தனம்.

அழகேசனோ குடித்தால் வேதனை தீரும் என்று குடித்துக்கொண்டு இருந்தான். கல்யாணம் நெருங்கிக்கொண்டு இருந்தது. தனத்தின் அம்மாவும் அப்பாவும் வெளியூருக்குத் திருமணப் பத்திரிகை கொடுக்கக் கிளம்பிவிட்டார்கள். தனம் வெகு நேரம் ஒரே சிந்தனையில் வராண்டாவில் படுத்திருந்தாள். அன்று முழுவதும் அழகேசன் வீட்டில் பாட்டு கேட்கவில்லை. அவன் வீட்டிலும் யாரும் இல்லை. தெருவே வெறிச்சோடிக்கிடந்தது. அவன் வீட்டுக்குள் இருக்கிறானா? அவனிடம் போய்ப் பேசுவோமா என்று யோசித்தபடியே இருந்தாள் தனம். அவன் பாடல்களைப் போடாமல் இருந்தது ஏதோ விபரீதத்தை உணர்த்தியது அவளுக்கு. ஒருவேளை அவன் தற்கொலை செய்துகொண்டுவிடுவானோ என்று பயந்தாள். ஒரு ஸ்டூலை எடுத்துப்போட்டு இரண்டு வீட்டுக்கும் பொதுவாக எழுப்பப்படாமல் இருந்த சுவர் தாண்டி எட்டிப் பார்த்தாள். அழகேசன் வராண்டாவில் விட்டத்தைப் பார்த்தபடி தலைக்குக் கையை வைத்துப் படுத்து இருந்தான். அவன் முகத்தில் இருந்த கடும் சோகம் அவளை உலுக்கியது. அவன் அவளைப் பார்ப்பதற்கு முன்பு கீழே இறங்கினாள். அவன் வீட்டுக்குப் போய் அவனைப் பார்த்துப் பேசிவிடலாம் என்று முடிவுக்கு வந்தாள். அடுத்த நொடியே அவன் மீது ஏதோ ஒரு கசப்பு பரவியது. அதுவும் இல்லாமல் பத்திரிகை கொடுக்க ஆரம்பித்த பின் என்ன செய்ய முடியும்? அப்பா ‘கொன்னுப் போட்டுடுவார்’ என்று பயந்து அமைதியாகி, மறுபடியும் படுத்துக்கொண்டாள். துக்கம் அதிகரித்துக்கொண்டு இருந்ததே தவிர, குறைந்த பாடு இல்லை. குளித்தாலாவது மனம் அமைதியாகும் என்று நினைத்தாள். வெளிக் கதவைத் தாழிட்டுவிட்டுக் கடும் வெயிலில் பாத்ரூமுக்குள் குளித்துக்கொண்டு இருந்தாள். அவள் குளிக்கும் சத்தத்தைக் கேட்டுக்கொண்டு இருந்த அழகேசன், பொதுச் சுவர் அருகே வந்து நின்றான். ஏதோ ஒரு வேகத்தில் அவன் சுவரேறி தனம் வீட்டுக்குள் குதித்தான். பாத்ரூமுக்குள் இருந்து வெளியே வந்த தனம், தன் முன் குரோதத்துடன் நின்றிருக்கும் அழகேசனைப் பார்த்ததும் நடுங்கிப்போனாள். எப்போதும் அவன் மேல் இருக்கும் கசப்பு அவள் முகத்தில் பரவியது. அவனோ வாழ்வின் மேல் மிகப் பெரிய அவநம்பிக்கைகொண்டவனாக வெறியோடு அவளைக் கட்டி அணைத்தான். மனதின் அலைவுறும் நேசத்தினை கட்டியணைத்துத்தான் சொல்லத் தெரிந்திருந்தது அவனுக்கு. எங்கிருந்துதான் அவளுக்கு அத்தனை கோபம் வந்தது என்று தெரியவில்லை. மூர்க்கத்தோடு அவனை நெட்டித் தள்ளி பலமாகத் தாக்கினாள். அவன் எந்த மூர்க்கத்தையும் காட்டவில்லை. அவளை அணைக்க வேண்டும் என்ற ஆசை மட்டும்தான் அவனுக்கு இருந்தது. அவள் அவனை விலக்கியதும் நோஞ்சானைப் போலத் தடுமாறி நின்றான். ”இப்ப நீ போகப்போறியா… இல்லையா?” என்று அவள் கோபத்தோடு கத்த… அவன் அவளை ஈர்க்கும் விதமான சிரிப்பு ஒன்றைச் சிரித்தபடி நின்றான். அவளுக்கு உண்மையாகவே குழப்பமாகிப்போனது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவன் எதற்காக இப்படிக் குதித்து வர வேண்டும்? இவ்வளவு நேரம் கதவு திறந்துதானே இருந்தது. இப்படியான ஓர் அதிரடி நடவடிக்கையை அவன் எப்போதும் செய்திருக்கவில்லை. ”போ வீட்டுக்கு ஆள் வரப்போறாங்க” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் அவளருகே வந்தான். அவள் அவனைக் கையால் தடுத்து விலக்கியதும், தள்ளி நின்று சிரித்தான். ”நீயென்ன பைத்தியமா? போகப்போறியா இல்லையா? எதாவது பேசித் தொலை” என்று அவள் அவனைக் கெஞ்ச ஆரம்பித்தாள். அப்போதும் அவன் சிரித்தபடி நிற்க… நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த தனம், தலையில் அடித்து வராண்டாவில் உட்கார்ந்தாள். பல நாள் பேசிப் பழகிய காதலனைப்போல அவன் அவள் அருகில் வந்து அமர்ந்தான். எப்போதும் இல்லாத அன்போடும் வாஞ்சையோடும் அவன் பார்வை இருந்தது. துக்கத்தில் இருக்கும் தன்னை அவன் மீட்க வந்திருப்பதுபோல் அவனை உணரத் தொடங்கினாள். அவன் மீதிருந்த கசப்பு நீங்கி உடல் முழுவதும் அவன் மீதான காதல் பரவியது. உடலில் ஏதோ மயக்க மருந்தைச் செலுத்தியதுபோல் மனதில் போதையும் நிலைகுலைதலுமாக இருந்தாள். அத்தனை நாள் அவனிடம் பேசாத வார்த்தைகள் எல்லாம் உயிர்கொண்டு எழுந்து, அவள் மனதை நிறைத்தன. அன்பின் ரகசிய இழைகளை அத்தனை நாளும் அறியாது இருந்தாள். அவன் மீது இருந்த கசப்பெல்லாம் வெறும் மூகமூடியாகத்தான் இருந்திருக்கிறது. விலக்கிப் பார்த்தால் மன ஆழத்தில் ஆற்று மணலைப்போல அன்பு பரவிக்கிடக்கிறது.

”உனக்கு என்னைப் பிடிக்கலையா?” என்று அவன் கேட்டதும் ”தெரியல, ஆனா நீ போடுற பாட்டு பிடிக்கும்…” என்றாள்.

”எனக்குத் தெரியும்” என்று அவன் சிரித்தபடி ”ஏன், நீ என்ன இப்படித் தவிக்க விடுற? உன் மேல ஆசைப்பட்ட நாளில் இருந்து இப்ப வரைக்கும் எனக்கு வேற சிந்தனை இல்ல. நீ மட்டும்தான் என் நெனப்புல இருக்க. நான் படிக்கலனு உனக்குப் பிடிக்கலையா” என்று கேட்க… அவள் ‘இல்லை’ என்று தலையாட்டிவிட்டு ”எனக்கு ஒரு நேரத்துல உன்னைப் பிடிக்கும், இன்னொரு நேரத்துல உன்னைப் பிடிக்காது. நீ சின்ன வயசுல என்னை அடிக்கிறது ஞாபகத்துக்கு வந்து வெறுப்பாயிடும். அப்புறம் நீ உருகி உருகிப் பாட்டு போடுறப்ப உன் மேல விருப்பம் வரும். இப்ப வரைக்கும் எனக்கு உன்னைப் பிடிக்குதா, பிடிக்கலையாங்கிறதுல குழப்பமாத்தான் இருக்கு. நீ ஏன் இவ்வளவு கேவலமா சுவரேறிக் குதிச்சு வந்த? அதை நெனைக்கிறப்ப இப்பவும் உன் மேல வெறுப்பாதான் இருக்கு. இப்படித்தான் நிலையா உன்னை எனக்குப் பிடிக்காத மாதிரி எதையாவது செய்ற.”

– அவள் பேசுவதைக் கேட்டுவிட்டு, அவள் கைகளைப் பிடித்தபடி, ”உன்னை விரும்புறேங்கிறதை எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியல. எப்பவும் நீ கோபமாவே என்னைப் பார்ப்ப. எப்பவாவது லேசா சிரிப்ப. அதுகூட நீ வேற யாரையோ பார்த்துச் சிரிச்சியா, இல்ல தானா சிரிக்கிறியானு புரியாது. அப்பல்லாம் வருத்தமா இருக்கும். பாட்டு போடுறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியாது. பிடிக்காத பிள்ளையையே நெனச்சுக் கிட்டு இருக்கோமோனு கவலைப்பட ஆரம்பிச்சிடுவேன். எங்க நேர்ல சொன்னா, ‘உன்னைப் பிடிக்கலடா’னு சொல்லிருவியோனு பயந்துக்கிட்டுதான் உன்கிட்ட பேசல. உனக்குக் கல்யாணம் பேசின உடனே செத்துப்போயிடலாம்னுதான் நெனைச்சேன். ஆனா, உன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கதான் இப்ப இப்படிச் செஞ்சேன்.”

சில நிமிஷங்கள் இருவரும் எதையும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். நேரம் ஆக ஆக… தனத்துக்குக் காய்ச்சல் வருவது போல் இருந்தது. ”இப்ப எதுவும் செய்ய முடியாது. கிளம்பு. வீட்டை எதுத்து ஒண்ணும் செய்ய முடியாது… சாக வேண்டியதுதான்” என்று புலம்பினாள்.

”வா, எங்கயாவது ஓடிப்போகலாம். இல்ல, எங்க அக்கா வீட்டுக்குப் போவோம். நான் ஊருக்குப் போறப்பல்லாம் எங்க அக்கா உன்னைப்பத்திக் கேட்கும். நீ எப்படி இருக்கனு. நான் பதில் சொல்லாம முறைப்பேன். எங்கக்கா அமைதியாகிடும். உன்னை எனக்குப் பிடிக்காதுன்னு எங்கக்கா நெனைச்சிட்டு இருக்கு. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா அக்கா சந்தோஷப்படும். கல்யாணம் பண்ணிக்குவோம். அப்புறம் எல்லாஞ் சரியாயிடும்.”

”அம்மா அப்பாவைத் தவிக்க விட்டுட்டு அப்படியெல்லாம் வர முடியாது. இப்ப நீ போ. நான் நாளைக்குச் சொல்றேன்” என்று கதவைத் திறந்து வெளியே ஆள் இருக்கிறார் களா என்று பார்த்துவிட்டு, அவனைக் கையைப் பிடித்து வாசற்படிக்கு இழுத்து வந்தாள். அவன் அவளைப் பார்த்துச் சிரித்தபடியே அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றான். அவனுடைய செயல் ஒரு குழந்தையைப்போல அவளுக்குத் தோன்றியது. அவன் மீது அன்பு பெருகியது. சந்தோஷமும் பயமும் கலந்த மன நிலையில் இருந்தாள். வாசல்படிக்கு வெளியே அவனை இறக்கிவிட்டாள். அவன் அங்கேயே நின்று அவளைப் பார்த்துச் சிரித்தும் பின் கெஞ்சியும் ”தனம் என்னை விட்டுட்டுக் கல்யாணம் கட்டிக்கிட்டுப் போயிடாதே. வா, நாம எங்கயாவது போயிடலாம்” என்றான்.

”இப்ப நீ போ… நான் அப்புறமா சொல்றேன்” என்று அவனைக் கையெடுத்துக் கும்பிட்டு, தெருவில் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். அவள் வீட்டுக்குஉள்ளே யும் அவன் வாசல்படியிலேயும் நின்று ஒருவருக்கு ஒருவர் கெஞ்சிக்கொண்டு இருந் தார்கள். அவள் கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலைக்குப் போய் கண்ணைக் கசக்கியதும், ”சரி… நீ அழாதே… நான் போறேன். ஆனா, எனக்கு நல்ல முடிவைச் சொல்லு. கை விட்டுடாத” என்றபடி அவன் தன்னுடைய வீட்டு வாசல்படியில் போய் உட்கார்ந்தான். தனமும் உடனே வீட்டுக்குள் போய்ஒளிந்து கொள்ளாமல் தன் வீட்டு வாசல்படியில் நின்று அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். இத்தனை ஆண்டுகளில் இது போல் எப்போதும் அவர்கள் இப்படிப் பார்த்துக்கொண்டது இல்லை. அந்த நொடி யில் அவனோடு வாழ வேண்டும் என்று மனம் ஆர்ப்பரித்தது. சந்துக்குள் யாரோ வருவதுபோல் தெரிய வீட்டுக்குள் போய் விட்டாள் தனம். இருவரும் எட்டிவிடும் தூரத்தில் இருந்துகொண்டு ஒருவரை ஒருவர் விருப்பத்துடன் நினைத்து ஏங்கிக்கொண்டார் கள். தனத்தின் மனதில் அன்பும் தவிப்பும் தாண்டவமாடியது. அழகேசனை மறந்து, மணிகண்டனைக் கட்டிக்கொண்டு வாழ முடியாது என்று முடிவு செய்தாள்.அழகேசன் அதற்குப் பின் பாடல்களை ஒலிக்கச் செய்யவில்லை. அதற்கான தேவை யும் இல்லாமல் இருந்தது. பாடல்கள் எதுவும் இல்லாமல் தனத்தை முழுவதுமாக ஆக்கிர மித்து இருந்தான் அழகேசன். அவனுடைய சிரிப்பு, தான் சொல்வதை எல்லாம் கேட்கிற தன்மையை யோசித்துச் சிரித்தாள். ”கொஞ்சம் முரட்டுக் குணம் இருக்கு. அது சரியாப் போய்டும்” என்று ஏதோ அவனோடுதான் அவளுடைய திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதைப்போல கனவில் மிதந்துகொண்டு இருந்தாள். அதே கணத்தில் உண்மை தாக்க, நொறுங்கிச் சிதறுவதைப்போல பயம் கொண்டாள்.

அன்று இரவு அம்மாவிடம் மெதுவாக ”அம்மா, எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்” என்று ஆரம்பித்ததும் பதறியடித்து எழுந்து உட்கார்ந்தாள் அம்மா.

”நீ எதை மனசுல வெச்சுட்டுப் பேசுறேனு தெரியும். ஒன்ன ஒத்த பிள்ளனு ஆசையா வளத்ததுக்கு உங்க அப்பாவை அவமானப் படவிட்டு சாக வைக்கப்போறியா?”

தனம் அழகேசனைப்பற்றி எதையும் சொல்லாமல் இருக்கும்போதே, அம்மா அவனைப்பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள். ”குடிகாரப் பய, டிராக்டர் ஓட்டித் திரியுறான், முட்டாளு. படிப்பாவது ஒழுங்கா வந்துச்சா? நீ அவன்கூட ஓடிப்போகணும்னு நெனச்சே… குடும்பம் அழிஞ்சுதான் போகும். பக்கத்துப் பக்கத்து வீட்ல குடியிருக்கோம். ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக் குத்திட்டுத்தான் சாவாங்கெ… எல்லாத்தையும் அழிக்கணும்னு நீ முடிவு பண்ணினா, நீ எதை வேணுனாலும் செய்…” என்று அம்மா படபடப்பாகப் பேசியதும் தனத்துக்குப் பயம் தொற்றிக்கொண்டது.

”நான் ஒண்ணுஞ் சொல்லலம்மா… நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அம்மாவை அமைதிப்படுத்திவிட்டுத் திரும்பிப் படுத்து அழுதாள். ஒருத்தர் சந்தோஷத்துக்காக இன்னொருத்தர் சந்தோஷத்தைப் பறிச்சுக்கிட்டேபோற இந்த வாழ்க்கையில மொத்தத்துல யாரும் சந்தோஷமா இருக்கறது இல்ல என்பதை உணர்ந்த தனம், சிறு குழந்தையைப் போல் மனம் ஏங்கித் தவித்தாள். யாரும் அறியாத பொழுதில், அழகேசனோடு அந்தத் தெருவில் இருந்து மறைந்துவிடத் துடித்தாள். சக்கரைக் கிழவியின் மனதுக் குள் படிந்துகிடக்கும் கதைகளில் இருந்து எல்லோரையும் மயக்கமுறச் செய்யும் மாயக் கிழவியின் மந்திர சக்தி யைத் தேடினாள் தனம். கிழவியோ நினைவு தப்பி கண்களை மூடியபடி அந்தச் சந்தின் மூலையில் சுவரின் நிழலில் சாக்கை விரித்துப் படுத்துக்கிடக்கிறாள். அவள் நினைவில் இருந்த தேவதைக் கதைகள் எங்கோ வனாந்திரக் காட்டுக்குள் ஒளிந்துகொண்டன.

அடுத்த நாளும் அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் தனத்துக்காக அழகேசன் காத்திருந்தான். அவள் அவன் கண் முன் நிழலாடவில்லை. எப்படியும் அவள் வந்துவிடுவாள் என்றே அவன் நினைத்தான். தனம் வீட்டைவிட்டு வெளியேறி அழகேசனைச் சந்திக்கும் சூழ்நிலையை யோசித்துப்பார்க்க முடியாதபடி அம்மாவோ அல்லது உறவினர்களோ வீட்டில் அவளோடு இருந்தார்கள். பாட்டுச் சத்தம் கேட்கா மல் அழகேசனின் வீடு சாவு வீட்டைப் போல் இருந்தது. அழகேசன் என்ன ஆனான் என்பதுபற்றி எதுவும் தெரியா மலே திருமணத்துக்கு முதல் நாள் தனத்தை ஊரைவிட்டு அழைத்துப்போய்விட்டார்கள். அந்தச் சந்தின் நீண்ட மதில் சுவர்கள் மிகப் பெரிய மயானச் சுவர்களாக நின்று அவளை வழி அனுப்பியதாக அவளுக்குத் தோன்றியது. கடைசியாக அவனை, அவன் வீட்டு வாசல்படியில் உட்கார்ந்து இருந்தபோது பார்த்த அவனுடைய சித்திரம் அவளை உருத்தெரியாமல் அழிக்கக்கூடியதாக இருந்தது. அழகேசன் மீதான கசப்பு நீங்கி, நேசத்தின் சிறகுகளைச் சுமந்து காலம் எல்லாம் வலி கூட்டும் அன்புடன் அந்தத் தெருவினைக் கடந்து செல்கிறாள் தனம். வறண்ட காற்றை மேலும் வறண்டுபோகச் செய்யும் துயர் மூச்சினை விட்டபடி முற்றத்தில் கிடக்கிறான் அழகேசன்.

– அக்டோபர் 2011

Print Friendly, PDF & Email

3 thoughts on “அழகேசனின் பாடல்

  1. இளையராஜாவின் பாடல்கள் எந்த மனதையும் கரைய செய்யும் எந்த உயிரையும் உருக செய்யும் இது சத்தியம்

  2. அப்பாவி கிராமத்துப்பெண்ணின் வலுவிழந்த மனக்குமுறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *