குட்டிக்கரணம் அடிக்கும் பாட்டி

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,961 
 

இன்று என்ன தேதி என்றால் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நேற்றைய தேதியை நினைவுபடுத்த முயற்சித்து அதுவும் மறந்துபோய் கடைசியில் முயற்சியைக் கைவிட்ட பிறகு ஞாபகம் வந்து தொலைக்கும். ஆனால் பாட்டியை முதன்முதலாகப் பார்த்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது. ஒன்றாவதோ இரண்டாவதோ படிக்கிறேன் (அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு முன்பா?).

நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த இடத்தின் பெயர் ஹெல்த் கேம்ப். வெள்ளைக்காரர்களோ அல்லது அவர்களது இந்திய குமாஸ்தாக்களோ வைத்த பெயர். பசும்புல் நிறைந்த மேட்டுப்பகுதி. தாசில்தார் சிரஸ்தார் என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டவர்களின் குடியிருப்புகள். அதற்கு மேல் பகுதியில் போலீஸ் குடியிருப்பு. அதற்கும் மேல்புறம் நாங்கள். அநேகர் நடுத்தர வர்க்கத்தினர். அப்பாவுக்கு எல்.ஐ.சி.யில் வேலை. கொஞ்சம் இஸ்லாமும் கொஞ்சம் கம்யூனிசமும் கலந்த கலவை அவர். கடற்படை எழுச்சியில் பங்கு பெற்றதால் அங்கிருந்து விரட்டப்பட்டவர். அதன் மிச்ச சொச்சம் எப்போதும் அவரோடிருக்கும். எல்லாவற்றிலும் கலகம் புரிவார். இஸ்லாத்தில் இருந்து கொண்டே மதவாதிகளுடன். கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டே கம்யூனிஸ்டுகளுடன். வேலையில் இருந்துகொண்டே மேலதிகாரிகளுடன். ஒரு நாள் திடீரென எல்.ஐ.சி. வேலையை ராஜினாமா செய்தார்.

குட்டிக்கரணம் அடிக்கும் பாட்டிகதை அப்பாவைப் பற்றியதல்ல. பாட்டியைப் பற்றியது. ஒரு நாள் வாசலில் வெள்ளை நிறத்தில் வேட்டி மாதிரியும் அதே நேரத்தில் ஜிப்பா மாதிரியுமான உடையில் ஒரு பெண்மணி. திருவிதாங்கூர் பகுதியின் பழைய தலைமுறை கிறிஸ்துவப் பெண்கள் இப்போதும் இந்த உடையை அணிகின்றனர். அவர்களை சேடத்தி என்று விளிப்பார்கள். சேட்டன் ஆண், சேடத்தி பெண். அப்போதெல்லாம் ஆடைக்குள் மதம் புகுந்திருக்கவில்லை. அதனால் வித்தியாசம் தெரியாது. நான் வீட்டிற்குள் ஓடி அம்மாவிடம் ஒரு சேடத்தி வந்திருப்பதாகக் கூவுகிறேன். வாசலில் தொடர் சிரிப்பு. அம்மா வந்து பார்த்து அம்மாவும் சிரிக்கிறார். “”டேய் இது உன் உம்மும்மாடா” என்கிறார். உம்மும்மா என்றால் பாட்டி. பாட்டியின் சிரிப்பு இருமடங்காகிறது. தலைமேலிருந்து கூடையை இறக்கி வைத்து ஒவ்வொரு பொருளாக எடுக்கிறார் பாட்டி. கருப்பட்டி, குளியலின்போது தேய்த்துக் கொள்வதற்கென ஒரு நார். அவுலோஸ் பொடி, சமையல் கத்தி, தேங்காய்…இவைதான் இப்போது ஞாபகத்தில் உள்ளவை. ஊரிலிருந்து கொண்டு வந்தவை.

பிறகு பாட்டியைப் பார்த்து நான் ஐந்தாம் வகுப்பு முடித்து ஊருக்குப் போனபோது ஊருக்குப் போவது என்பதே தனி சுவாரசியம். எங்கள் கூடலூரிலிருந்து மூக்கு நீண்ட பேருந்தில் நிலம்பூர் செல்ல வேண்டும். நிலம்பூர் நகரத்துக்குள் போவதற்கு முன்பே இடது கைப்பக்கம் திரும்பி மூன்று கிலோ மீட்டர் சென்றால் நிலம்பூர் தொடர்வண்டி நிலையம். இங்கிருந்து புறப்படும் ஒரே ஒரு ரயிலைப் பிடிப்பதற்காகவே ராஜலட்சுமி அய்யரால் தனிப்பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. நிலம்பூர்தான் கடைசி ஸ்டேஷன். உலகத்திற்கே கடைசி போன்ற ஒரு தோற்றம். அங்கிருந்து ஷொர்னூர் அங்கிருந்து எர்ணாகுளம் என வண்டிகள் மாறி மாறிப் பயணித்து விடியற்காலை 4 மணிக்குக் கோட்டயம்.

புகை கக்கியபடியே நீராவி என்ஜின் ரயில்பெட்டிகளை இழுத்து வந்து நிலம்பூர் ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு தனியாகத் தான் மட்டும் சுழன்று ஓடி பக்கத்துத் தண்டவாளத்து வழியாக ரயில்பெட்டிகளின் முன்பக்கம் இணைந்து செல்வதுமான விளையாட்டில் நானும் மானசீகமாகச் சேர்ந்து கொள்வேன். ரயில் பயணத்தின்போது அம்மா ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஸ்டேஷனில் நிற்கும்போதும் அதன் பெயரைக் குறித்துக் கொள்வார். கோட்டயத்திலிருந்து முண்டக்காயம் (அங்கே தான் நான் பிறந்தேன்) வரை பேருந்துப் பயணம். ரொம்ப நாளைக்குப் பிறகு முண்டக்காயம் என்ற பெயரை உச்சரிக்க மாட்டேன். ஏதோ கெட்ட வார்த்தை சொல்வது போலக் கூச்சம். அதுதான் மாவட்டம். கோட்டயத்தில் எங்கே என்றால் காஞ்சிரப்பள்ளி என்பேன். அதுதான் தாலுகா, அதற்கு மேல் யாரும் அநேகமாக கேட்க மாட்டார்கள்.

பெயர்தான் அப்படியே தவிர முண்டக்காயம் எனக்கு ரொம்பப் பிடித்தமான இடம். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஓர் ஆறு வழிமறித்துக் கொண்டேயிருக்கும். பாறைகளாலான பெரிய பெரிய குன்றுகள். அவற்றின் மேல் கட்டப்பட்ட வீடுகள். பாட்டியின் வீடும் அப்படி ஒரு பாறைக்குன்றின் மீதுதான் இருந்தது. பாறை வழியாகக் கீழே நடந்தால் ஆறு. வீட்டின் பின்புறம் கற்களாலான அடுக்குகள். அவை நிறையத் தென்னைகளைத் தாங்கிப் பிடித்திருந்தன. தென்னை மரத்தை முதன் முதலாக அங்கேதான் கிட்டப்போய் பார்த்தேன். தேங்காய் பறித்துப் போட ஒருவர் வருவார். பிறகுதான் தெரிந்தது அவர் என் சித்தப்பாதானாம். சித்தியின் கணவர். தேங்காய் பறித்துப் போட வந்தவர் அப்படியே சித்தியின் மனசையும் பறித்துப் போய்விட்டார். சாதி மாறி திருமணம் செய்த சித்தியின் வீட்டுக்கு யாரும் போவதில்லை என்றார்கள். பார்த்தால் தனித்தனியாக ஒவ்வொருவரும் போய் வந்து கொண்டுதானிருந்தார்கள். வீட்டின் வலது பக்கமாகக் கொஞ்ச தூரம் சென்றால் சித்தியின் வீடு. அங்கிருந்து கீழே பார்த்தால் அங்கேயும் ஓர் ஆறு தெரியும். நானும் அம்மாவும் போனோம். மரவள்ளிக் கிழங்கு வேக வைத்தும், பலாப்பழமும் தந்தார் சித்தி. இருட்டுவதற்குள் அம்மா பாட்டி வீட்டிற்குத் திரும்பினார். நான் அங்கேயே தங்கினேன். எனக்கென்னவோ சித்தப்பாவைப் பிடித்திருந்தது. கட்டான உடல், விரிந்த மார்பு, மார்பு நிறையக் கருகருவென முடி, அடர்ந்த மீசை. என்னிடம் புன்னகைத்துக் கொண்டேயிருந்தார்.

பாட்டியின் வீடு என்றால் பாட்டியை அந்த வீட்டில் அபூர்வமாகத்தான் பார்த்தேன். மாமா தான் அங்கே எல்லாம். மாமாவுக்கு பீடி சுருட்டும் வேலை. ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு முறத்திலுள்ள பீடி இலையைக் கத்தரித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு பாடலாக நேயர் விருப்பம் கேட்டுக்கொண்டிருப்பார்.

உள் அறையில் தாத்தா படுத்த படுக்கையாகக் கிடந்தார். வாய் இழுத்துக் கொண்டுவிட்டதால் ஒருவிதமான அடிக்கட்டைக் குரலில் மாமாவைக் கூப்பிட்டு பாடச் சொல்வார். அம்மாவுக்கு தாத்தா மீது பாசம். ஆனால் பாட்டி அந்த அறைக்குள் போனதைப் பார்த்ததேயில்லை. பாட்டியை தாத்தா நிறைய கொடுமைப்படுத்தியிருந்ததாக யாரிடமோ அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

எனக்கு தாத்தாவைப் பார்க்க பயம். அந்த அறைக்குள் போகமாட்டேன். படுத்த படுக்கையிலும் தாத்தா பீடி குடித்துக் கொண்டேயிருப்பார். பீடி பற்றவைக்க அடுப்பங்கரையிலிருந்து கொள்ளிக் கட்டையை யாராவது கொண்டு போய் கொடுப்பார்கள். ஒருமுறை என்னிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. உடல் நடுங்க பயத்துடன் சென்று கொடுத்துவிட்டு ஓடிவந்தேன்.

கொஞ்ச நாளில் மறுபடியும் கூடலூர். இப்போது வீடு மாறியிருந்தது. இப்போது மேல் கூடலூர். ஹெல்த் கேம்ப் வீட்டுக்குப் பிறகு இது ஆறாவது வீடு.

வீட்டுக்கு முன்புறம் மாரியம்மன் கோயில். மேல் கூடலூரில் ஒவ்வொரு வீட்டுக்கூரையிலும் ஒரு குரங்குக் குடும்பம் இருக்கும். ரேஷன் கார்டில் பெயர் இருக்காதே தவிர, குரங்குகள் ஏதோ அவர்கள் சொந்தக் குடும்பம் போலவும், சில நேரம் அதீத உரிமை எடுத்து குடும்பத் தலைவர் போலவும் புழங்கும். அம்மா அருகில் கல்லில் சட்னி அரைத்துவிட்டுத் திரும்புவதற்குள் ஏதேனும் ஒரு குரங்கு கையை விட்டு அள்ளித் தின்றுவிடும். பிறகு காரம் தாங்காமல் கூரை மேல் அங்கும் இங்கும் தாவுவதும் “ஈ’ என்று இளித்துக் காட்டுவதுமாக அனிமல் பிளானட்டின் ஒரு எபிசோடே ஓடிக்கொண்டிருக்கும். கூடவே பாட்டியும் வந்து சேர்ந்தார். அந்த வீட்டில்தான் பாட்டி தனக்குள் பேசிக்கொள்வதை கவனிக்க ஆரம்பித்தேன். காலை நீட்டி அமர்ந்து கொண்டு எதிரில் இல்லாத ஒருவருடன் சுவாரசியமாக கையை அசைத்து அசைத்துப் பேசுவார். சிரிப்பு, கோபம், ஆச்சரியம், ஆர்வம் என பாவங்கள் மாறி மாறித் தெரியும் அந்த முகத்தில். நாம் கவனிப்பது தெரிந்தால் சட்டென ஒரு கனைப்பு கனைத்து எதையோ தேடுவது போல பாவனை செய்வார்.

ஒருநாள் பாட்டி தனக்குள் மூழ்கிப் பேசிக் கொண்டிருக்கையில் வீட்டுக்குள் யாரும் இல்லை என்று நினைத்து எதையாவது லபக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட குரங்கு சமையலறைப் படிக்கட்டில் இறங்கி வந்தது. ஏதோ சத்தம் கேட்டு பாட்டி திரும்ப, பாட்டியைப் பார்த்து குரங்கு உறைந்து போக பாட்டி அய்யோ என்று கத்தி கடைசி “யோ’விலேயே முகம் ஸடில் ஆகிவிட கிட்டத்தட்ட அதே முகபாவத்தை குரங்கும் வெளிக்காட்ட ஓரிரு நிமிடத்தில் குரங்கு தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கிவிட்டது. பாட்டியும் பயம் நீங்கி சிரிக்க ஆரம்பித்தார். நானும் அம்மாவும் சிரிப்பில் ஐக்கியமானோம். குரங்கும் பாட்டியும் நேருக்கு நேர் முறைத்துக் கொண்டு நின்றதை மறுபடியும் நினைவுபடுத்தி அம்மா,””இதில் எது குரங்கு என்று குழம்பிவிட்டேன்” எனச்சொல்ல பாட்டி இன்னும் சத்தமாகச் சிரித்தார்.

பாட்டிக்கு என் மீது எப்போதும் தனிப்பிரியம் உண்டு. யாராவது திண்பண்டம் கொண்டு வந்தால் நான் இல்லாவிட்டாலும் என் பங்கு எனக்கு வந்து சேருவதில் கராறாக இருப்பார். அம்மா, பாட்டியைச் சீண்டுவதற்காக, “”அவனுக்கெல்லாம் வேண்டாம். சாப்பிட மாட்டான்” என்று சும்மா சொல்வார். அவ்வளவுதான் அன்று முழுவதும் பாட்டி முகத்தைத் தூக்கி வைத்திருப்பார். பாட்டி வெறுந்தரையில் லாகவமாக குட்டிக்கரணம் போட்டுக் காண்பிப்பார். எத்தனை முறை கேட்டாலும் சோர்வடையாமல் குட்டிக்கரணம் போடுவார். ஒவ்வொருமுறை போடும்போதும் தவறாமல் அதே ட்ரேட் மார்க் சிரிப்பும் கொசுறாக வரும்.

ஒருமுறை மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது ரிக்கார்ட் டான்ûஸ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். வெள்ளைச் சட்டை, கைலி, தலையில் முண்டாசு என லோக்கல் காஸ்ட்யூமில் பாட்டி கூட்டத்தோடு நின்றார். பக்கத்தில் நின்றவர் ஆள் தெரியாமல் பாட்டியின் தோளில் கை வைத்து நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தார். பாட்டியும் அலட்டிக்கொள்ளவில்லை. தற்செயலாக ஆசாமி பாட்டியின் முகத்தைப் பார்த்து கிலியடித்துப்போய் விலக,பாட்டியிடமிருந்து அதே சிரிப்பு.

கடைசியாக, பாட்டியைப் பார்த்தது கூடலூர் பேருந்து நிலையத்திற்கருகில் குடியிருந்தபோதுதான். நாங்கள் எல்லோரும் பெரியவர்களாயிருந்தோம். பாட்டியின் வயது கூடியும் அதே சுறுசுறுப்பு. தனக்குள் பேச்சு, இம்முறை ஏனோ பாட்டி குட்டிக்கரணம் போட்டு காண்பிக்கவில்லை; நானும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் போட்டுக் காட்டியிருப்பார் என்றே தோன்றுகிறது.

ஏன் என்று தெரியாது! பாட்டியை அம்மா “தங்கச்சி’ என்றுதான் கூப்பிடுவார். இருவரில் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிவதும் அம்மாதான். பாட்டியிடம் சதாசர்வ நேரமும் ரசிக்கத்தக்க குழந்தைத்தனம் ஒட்டிக் கொண்டிருக்கும்.

அம்மா அழுது கொண்டிருந்தார்.

“”பாட்டி போயிட்டாடா”

“”எப்படி?”

பாட்டி ஊரில் உள்ள நான்கு சித்திகளின் வீட்டிலும் மாறி மாறித் தங்குவது வழக்கம். இடைக்காலத்தில் பாட்டிக்கு ஒரு பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது. சின்னதாக எந்தப் பொருளைப் பார்த்தாலும் எடுத்து மடியில் கட்டிக்கொள்வார். சித்திகளின் வீட்டில் இது பெரும் பிரச்னையாக வெடித்து கடைசியில் பாட்டியை எந்த வீட்டிலும் தங்க வைக்க முடியாதென்று சொல்லிவிட்டார்கள். ஒருநாள் இரவில் ஒரு சித்தியின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பாட்டி முண்டக்காயம் கடைவீதியில் பூட்டிக்கிடக்கும் ஓட்டல் ஒன்றின் முன்பு படுத்துக்கொண்டார். விடிந்து வெகு நேரமாகியும் விழிக்காததால் ஆட்கள் வந்து பார்க்க பாட்டியின் மூச்சு நின்றிருந்தது.

உயிர் பிரியும்போது பாட்டி சிரித்திருப்பாளா?

– கூடலூர் அன்வர் ஷாஜி (மே 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *