எதுக்கு தாத்தா இது?

 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜெயபாலனுக்கு தோட்டக்காரத் தாத்தா செய்யும் வேலை பிடிக்க வில்லை.

“அது என்ள செடி தாத்தா? பூவும் அழகும் இல்லாத செடியை எதற்கு வைக்கறீங்க?”

“இது துளசிச் செடி தம்பி. இது கற்பூரவல்லி. பூவோ, அழகோ இல்லேன்னாக் கூட இது சமயத்துக்குப் பயன்படும். மற்ற பூச்செடிகளோட இதுவும் ஒரு மூலையில் இருந்துட்டுப் போகட்டுமே?”gokulam_tamil1991-12-01_0003-pic

“எதுக்குத் தாத்தா இதெல்லாம்? கண்ட கண்ட செடிகளையெல்லாம் நட்டுத் தண்ணீரையும் வீணாக்கி… அப்பா வரட்டும் சொல்றேன்…”

“சின்ன ஐயாவே உனக்கு இதன் அருமை இப்போ தெரியாது. போகப் போகத் தெரியும்…” வெற்றிலைக் காவி படிந்த பல்லைக் காட்டி, வயதான தோட் டக்காரத் தாத்தா சொன்ன பதில் அவனுக்குப் பிடிக்கவில்லை.

இரவு எட்டு மணி இருக்கும். சாதம், குழம்பு, காய், கீரை வகைகளுடன் சாப்பாட்டு அறை களைகட்டியது.

“இரவு சாப்பாட்டில் கீரை வேண்டாம் என்று சொன்னேனே மறந்து விட்டாயா லட்சுமி?”

“மத்தியானம் செய்த முருங்கைக் நீரை கொஞ்சம் மீந்து விட்டது. என்ன செய்வது? வீணாக்கலாமா?” – அம்மாவின் சாந்தமான பதிலைக் கேட்டு அப்பா சாப்பிடத் தொடங்கினார்.

“நம்ம தோட்டக்காரத் தாத்தா சுத்த மோசம்பா. பூவோ, அழகோ இல்லாத கண்ட கண்ட செடியையெல்லாம் நம்ம தோட்டத்துல வைக்கிறார். வேண்டாம் எடுங்கள்னு சொன்னா கேட்பதில்லை” என்று புகார் சொன்னான் ஜெயபாலன்.

“என்ன லட்சுமி? நீ இதையெல்லாம் கவனிக்காம என்ன பண்றே?”

“நானும் பார்க்கிறேளே. ஏதோ சில மருந்துச் செடிகளை நட்டு வெச்சா ஒரு அவசரத்துக்கு, அவசியத்துக்கு ஆகுமே…?”

அம்மா தோட்டக்காரத் தாத்தாவை நியாயப்படுத்துவதாக ஜெயபாலன் நினைத்தான். அப்பா விடவில்லை!

“நம்ம பையனுக்குப் பிடிக்கலேன்னா உடனே எடுத்துட வேண்டியது தானே”

ஜெயபாலனுக்கு ஒரே ஆனந்தம். ”நாளையோ அல்லது மறுநாளோ டவுன் பஸ் ஏறி விவசாயப் பண்ணைக்குப் போய் அற்புதமான பூச்செடிகள், குரோட்டன்ஸ் வகையறாக்களை வாங்கி வந்து நடச் சொல்லி…. இந்தத் துளசி, ஓமவல்லியெல்லாம் இங்கு வேண்டாம்…” – கண்டிப்பாகச் சொன்னார் அப்பா.

ஜெயபாலனுக்குத் திருப்தியானது.

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு வெள்ளிக் கிழமை. அன்று பொது விடு முறை நாள். சனி, ஞாயிறு லீவும் சேர்ந்து கொண்டது. வியாழக்கிழமை மாலையே ஜெயபாலன் பக்கத்தூரில் இருக்கும் அத்தை வீட்டிற்குப் பயணமாளான்.

போகும் போது நன்றாகப் போனவன் வரும் போது முகவாட்டத்துடன் வந்தான்.

“ஏண்டா ? என்ன ஆச்சு? உடம்புக்கு என்ன வந்தது?” கேட்டுக் கொண்டே நெற்றி, முகம், கழுத்து எல்லாம் தொட்டுப் பார்த்தாள் அம்மா. சளி பிடித்து இலேசான ஜுரம் இருப்பது தெரிந்தது.

gokulam_tamil1991-12-01_0004-pic“வாயைக் கட்டாமல் ஐஸ், நாகப் பழம் சாப்பிட்டிருப்பே. போதாக் குறைக்கு பச்சைத் தண்ணியில் குளித்திருப்பே… தெரியுமே! இதுக்குத்தான் உன்னை எங்கேயும் அனுப்புவதில்லை .”

பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி அம்மா அப்பட்டமாக உண்மையைச் சொல்லவே பதில் பேச முடியாமல் ஜெயபாலன் கட்டிலில் படுத்துக் கொண்டான்.

டாக்டர் வீட்டுக்கு அழைத்துப் போக அவனுடைய அப்பா அவசரப் பட்டார்.

“இன்றைக்குப் பார்த்துக் கொண்டு நாளைக்குப் போகலாம்பா டாக்டர் வீட்டுக்கு” என்று முரண்டினான் ஜெயபாலன்.

அந்த டாக்டர் தொட்டதற்கெல்லாம் ஊசி போட்டு விடுபவர். ஜெயபாலனுக்கோ ஊசி என்றாலே பயம்.

“பையனுடைய உடம்புவாகு உங்களுக்கு என்ன தெரியும்? குழந்தையிலிருந்தே அவனுக்கு கை வைத்தியம், நாட்டு வைத்தியம்தான் சட்டுன்னு கேட்கும். சளி பிடிச்சு, அதனாலே இலேசான ஜூரம் இருக்கு. தோட்டத்துப் பக்கம் போய், கைப்பிடி அளவு துளசி இலை கொண்டாங்கோ… கஷாயம் போட்டுக் கொடுத்தா நொடியிலே சரியாயிடும். போங்கோ …” – அம்மா அப்பாவை விரட்டினாள்.

துளசிக் கஷாயம் குடிக்கச் சொல்லி நன்றாகப் போர்வையை இழுத்துப் போர்த்தினாள் அம்மா.

இரவு ரசம் சாதம் சாப்பிட்டுப் படுக்கும் போது உடம்பு இதமாகவே இருத்ந்து. சளி ஜுரம் குறையத் தொடங்கியது.

காலையில் எழுந்ததும் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்துப் போய் துளசிச் செடிக்கு ஊற்றினான் ஜெய பாலன்.

“தாத்தா, மற்ற செடிகளோடு துளசிச் செடியும் கற்பூரவல்லியும் கூட இருக்கட்டும். எடுத்துடாதீங்க” என்றான் தோட்டக்காரத் தாத்தாவிடம்!

தோட்டக்காரத் தாத்தாவுக்கு முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

- 01-12-1991 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)