திருப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 1,288 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்வா நீண்ட நேரமாய் யோசித்துக் கொண்டிருந்தான். அவனது மனம் பூராவும் தனக்கு வரப்போகின்ற மனைவியைப் பற்றியும், அவளோடு தான் நடத்தப் போகின்ற குடும்ப வாழ்வைப் பற்றியும், தனது குடும்பத்தாருடன் நல்ல விதமான உறவை வளர்த்துக் கொள்வாளா என்பது பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்குப் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும், தனக்குப் பாடல்களைப் பாட வரவில்லையே என்ற ஏக்கம் அவனுக்கு நிறையவே உண்டு. குளியலறைக்குள் புகுந்து கொண்டு தனக்கு வந்ததையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பாட்டை அவன் பாடிக் கொண்டிருப்பான். அண்மைய காலமாக அவன் நெஞ்சுக்குள்ளிருந்து வாய் வழியாக வந்து உதடுகளில் ஒருபாடல் உதிர்ந்து கொண்டிருந்தது.

அவன் வருங்கால மனைவியின் நினைவில் மூழ்கும் போதெல்லாம் அவனது உதடுகள்;

என்னைத் தாலாட்ட வருவாளா… என்று இழைந்து கொண்டேயிருப்பான்.

‘வருங்கால மனைவி” நினைக்கும் போதே அவனுக்குத் திக்கென்றது. அவளே தன் மனைவி என்று தீர்மானித்து விட்டது போன்ற உணர்வுகள் அவனை ஆட்டிப் படைத்தன.

பெண் பார்க்கப் போய் வந்த பெரியவர்கள் சம்பிரதாய முறைகளைப் பேசிவிட்டு வந்து விட்டார்கள். அம்மாவும் அக்காவும் எதையெல்லாமோ பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணின் குடும்பத்தைப் பற்றி, அவர்களின் வசதி வாய்ப்புகள், பழக்க வழக்கங்கள் பற்றியெல்லாம் வாய் வலிக்கப் பேசினார்கள்.

“பொண்ணு ரொம்ப லட்சணமா அழகா இருக்காம்மா… நம்ம தம்பிக்கு நல்ல பொருத்தமா இருப்பா…”

அக்காதான் சொன்னாள். அம்மாவும் தலையசைத்தாள்.

அவனுக்கும் சந்தோஷமாக இருந்தது. இப்போதே அந்த வீட்டுக்கு மருமகளாய் வந்துவிட்டது போன்ற மகிழ்ச்சியில் உள்ளம் ததும்பியது. சாய்வு நாற்காலியில் குழந்தைபோல் ஆடிக் கொண்டிருந்தான்.

“ரொம்ப அழகா பாடினாம்மா… நம்ம செல்வாவுக்குத்தான் பாட்டுன்னா ரொம்ப பைத்தியமாச்சே…!”

மறுபடியும் அக்கா அவனது நெஞ்சுக்குள்ளிருந்த அந்தக் குருவியை உசுப்பிவிடுகிறாள். அது விசுக்கென்று சிறகை விரித்தது.

பாடுவதில் மட்டுந்தானா அவள் சிறந்திருந்தாள்? பார்ப்பதற்கும் தான் விருந்தாக இருந்தாள். என்ன அழகான கண்கள்! மிகப் பெரியவை. அவற்றைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

“என்னடா யோசனை?” என்று அக்கா அவனை அதட்டியபோது வெட்கம் வந்து அவனைத் தொற்றிக் கொண்டது. தன் மன உணர்வுகளை முகம் காட்டிக் கொடுத்துவிட்டதோ என்று சங்கடப்பட்டான். ஒரு புன்சிரிப்போடு பேசாமல்… இருந்தான்.

“பொண்ண பிடிச்சிருக்கா இல்லையா…?” அக்கா அவனைக் கிண்டல் செய்வதாய் நினைத்தான்.

“யாருக்குத்தான் அவளைப் புடிக்காதாம்… அவன் மனசுக்குள் சொல்லிக் கொண்டான். அக்காவுக்கு அவன் பதில் சொல்வதற்குள் அம்மா முந்திக் கொண்டார்.”

“அவுங்களோட பேசிமுடிக்கிறதுக்கு இன்னும் எவ்வளவோ பாக்கியிருக்கே… அதுக்குள்ளே நீ ஏன் அவனை சீண்டிக்கிட்டிருக்கே? அம்மாவைச் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

“இந்த அம்மாக்களே இப்படித்தான். ஏடாகூடமா எதாச்சும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க…!” என்று மனம் கசிந்தது.

“பொண்ணும் ராஜாத்தியாட்டம் இருக்கா… நம்ம தம்பியோட ஜாதகமும் நல்லா பொருந்தி வருது. இன்னும் என்ன வேண்டிக் கெடக்கு… முகூர்த்த நாள் குறிச்சிட வேண்டியது தானேம்மா…!”

அக்கா அம்மாவை நெருக்க அம்மா தன்னுடைய கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.

“எல்லாம் பொருந்தியிருக்கு… சந்தோஷம் தான். அவளோட மாதச் சம்பளம் என்ன வருதுன்னு தெரியுமா உனக்கு?”

அக்கா புன்னகையுடன் சொன்னாள், “எல்லாம் கேட்டுட்டேன்மா… அவளுக்குச் சம்பளம் இரண்டாயிரத்துக்கு மேலேயே வருது…!”

அம்மாவின் முகம் தாமரையாய் மலர்ந்தது. அவனுள்ளும் ஓர் இன்ப அதிர்ச்சி பரவியது. அதன் பின் இரவு உணவு தூக்கம் என்று அன்றைய பொழுது போய் மறுநாளும் வந்தது.

அந்தக் காலைப் பொழுது அந்த வீட்டுக்கு கண்ணீர்ச் செய்தியைத் தாங்கி வந்து விடிந்தது. ஜோகூரில் வாழ்ந்து வந்த அவனது மூத்த அக்கா சங்கரியின் கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக வந்த செய்தி அறிந்து அனைவரும் கலங்கினார்கள். செல்வாவின் சந்தோஷமெல்லாம் எங்கோ ஓடிப் போனது. அக்காவின் குடும்பச் சுமையை அவன்தான் தாங்கியாக வேண்டும். வேறு வழியேயில்லாத நிலை. மூன்று பெண்குழந்தைகளைப் படிக்க வைத்துக் காலத்தோடு கல்யாணமும் செய்து வைக்க வேண்டும்.அவனுக்குத் தன் அக்கா சங்கரி மீது எப்போதும் அளவு கடந்த பாசம் உண்டு. அம்மாவைவிட அன்பு காட்டி மார்பிலும், தோளிலும், மடியிலும் போட்டு வளர்த்தவள். சின்ன வயதில் தனக்குக் கிடைப்பதை எல்லாம் தம்பிக்கே கொடுத்து வளர்த்தவளாயிற்றே…! நொறுங்கிப் போனான்.

குடும்பத்தோடு ஜோகூருக்குப் போய் அக்காவைப் பார்த்து கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்து அத்தானுக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதையைச் செய்து விட்டு அக்காவையும் குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்தான்.

ஒரு வாரம் ஓடியிருக்கும். அம்மா பிள்ளையிடம் சொன்னார்.

“உடனே அந்த வீட்டுக்குத் தகவல் அனுப்பு…! கல்யாணத்தைச் சீக்கிரம் முடிக்கணும்னு சொல்லீட்டு வா…!” என்றார். அவன் மௌனமாய் அமைதியாய் அம்மாவைப் பார்த்தான்.

“என்னப்பா பார்க்கறே… எவ்வளவு சீக்கிரம் அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வர்ராளோ அவ்வளவு சீக்கிரம் நமக்கு நாலுகாசு மிச்சப்படுமே… அதுக்காகத்தான் சொல்றேன். காலம் கடத்தாம முடிச்சுட்டு வாப்பா…!

கொஞ்சமும் மனிதத்தன்மை இல்லாத வார்த்தைகளைக் கேட்டுத் தன் காதுகளைப் பொத்திக் கொண்டான். அம்மா மீது கோபம் வந்தாலும் அடுத்த கணமே அதிலிருந்த நியாயம் அவனுக்குப் புரிந்தது. அவளது வருகையினால் அந்தக் குடும்பத்தின் வருமானம் கொஞ்சம் பெருகும். புதிதாய் ஏற்பட்டுள்ள பிரச்சினையையும் சமாளிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டான். இன்னும் இரண்டொரு நாளில் அவர்களுக்கு விபரம் தெரிவிக்கலாம் என்ற முடிவோடு வேலைக்குப் போனான். விடுமுறை முடிந்து வேலைக்குச் செல்லப் பேருந்தில் ஏறிய போது அவனுக்கோர் அதிசயம் காத்திருந்தது. அவன் ஏறிய பேருந்தில் நெரிசல் அதிகமாயிருந்தது. எப்படியோ ஏறி ஓர் இருக்கையில் அமர்ந்து விட்டான். அவன் அமர்ந்த சிறிது நேரத்தில் அவனது அலுவலகத்தில் பணிபுரியும் மைதிலி என்ற ராணி அதே வண்டியில் வந்து ஏறினாள். நெரிசலில் இடம் தேடி அமரப்போனவள் அவனுக்கு ஒரு காலை வணக்கம் சொல்லிவிட்டுப் பின்னாலிருந்த நீண்ட இருக்கையில் போய் அமரப் போனாள்.

அதற்குள் முன்னாலிருந்த இருக்கை காலியானதால் அதிலேயே அமர்ந்து கொண்டாள். தனக்குக் காலை வணக்கத்தைச் சொல்லிவிட்டுச் சென்றவளைப் பார்வையால் தொடர்ந்தவன் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த “அவள்” தென்பட்டாள். அவனுக்கு உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்து அடங்கியது.

தனது கனவு தேவதை! வருங்கால மனைவியை அன்று அந்த வண்டியில் பார்ப்பானென்று அவன் நினைக்கவேயில்லை. அதனால் பரபரப்புடன் கண்களால் அவளைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். அவளோ தன் கையில் அன்றைய நாளிதழை விரித்துப் படித்துக் கொண்டிருந்தாள்.

பேருந்தில் பயணிகள் அதிகரிக்கவே ஒருவருக்கொருவர் கொஞ்சம் விட்டுக் கொடுத்து நகர்ந்து உட்கார்ந்து கொண்டனர். வண்டி வேறொரு சந்திப்பில் வந்து நின்று சில பயணிகள் இறங்க வேறு சிலர் ஏறினார்கள். அதில் கையில் ஒரு சிறுவனைப் பிடித்துக் கொண்டு நிறைமாதக் கர்ப்பிணி ஒருவரும் ஏறுகிறார்.

கடைசி இருக்கையில் இடம் இருந்ததால் அதில் தன் மகனை அமர்த்தி விட்டுத் தானும் அமர முயற்சிக்கிறார். இட நெருக்கடியினால் அவரால் சரியாக அமரமுடியாத நிலை. “நீங்கள்லாம் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தா அவுங்க உட்கார இடம் கிடைக்கும்”

குரலுக்குரியது யாரென்று செல்வா திரும்பிப் பார்க்கிறான்… ராணிதான் பின்னால் திரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தாள். இரண்டு பெண்கள் கொஞ்சம் நகர்ந்தார்கள். ஆனால் பத்திரிகையை விரித்துப் படித்துக் கொண்டிருந்தவளோ அதைக் காதில் வாங்கியதாய்த் தெரியவில்லை. அவள் படிப்பதிலே மும்முரமாக இருந்தாள்.

“ஏங்க… நீங்க கொஞ்சம் நகரக் கூடாதா…? ஒரு கையகலம் நகர்ந்தா கூடப் போதுமே…”

கொஞ்சம் கனத்த குரலில் ராணி சொன்னாள். செல்வா திடுக்கிட்டுப் போனான். அந்தப் பெண் கையிலிருந்த நாளிதழை மடித்து மடியில் போட்டுக் கொண்டதோடு ராணியை முறைத்துப் பார்த்தாள்…!

“இதுல ஆறு பேருக்கு மேல உட்கார முடியாதுன்னு உனக்குத் தெரியாதா… உனக்குத்தான் சட்டம் தெரியாதுன்னா என்னையுமா சட்டத்தை மீறி நடக்கச் சொல்றே…” உனக்குப் பாவமா இருந்தா நீ உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டுக் கொடேன்… !”

அந்த நிலா போன்ற முகத்தின் சிவந்த உதடுகளில் இருந்து கொட்டும் வார்த்தைகளால் செல்வா உறைந்து போனான். ராணியோ சட்டென்று எழுந்து நின்று அந்தப் பெண்மணியை அமரச் செய்து விட்டு அவள் அந்தப் பின் இருக்கையில் அமர்ந்து அந்தச் சிறுவனைத் தூக்கித் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள். சுற்றியிருந்தவர்களின் கண்கள் அவளை மரியாதையுடன் பார்த்தன. பேருந்து தன் விருப்பம் போல் ஓடிக் கொண்டிருந்தது. செல்வா இரண்டு பெண்களையும் மாறி மாறிப் பார்க்கின்றான். அவனது கனவு மாளிகை பொலபொலவென இடிந்தது. அக்கா குறிப்பிட்ட அவளின் வருமானம் அந்தப் பெரிய நம்பிக்கையில் எண்ணி அவளைக் கொண்டு தங்களின் குடும்பச் சுமையைக் குறைக்க நினைக்கும் அம்மா…! அவர்களை நினைத்துத் தனக்குள் நகைத்துக் கொண்டான்.

ஆறு பேருக்குரிய இடத்தில் இன்னொருவர் அமர்ந்து பயணம் செய்ய இடம் கொடுக்க மறுத்தவள்… தன் குடும்பத்துக்கு அப்பால் இன்னும் ஒரு குடும்பத்தையும் காப்பாற்ற மனம் ஒப்புவாளா…? குத்திக் காட்டும் பிரச்சினைகளை உண்டாக்காமல் தான் இருப்பாளா…? என்ற கேள்வி அவனுள் எழ அவள் மீது உண்டாகியிருந்த அந்தத் திடீர்க் கற்பனை கலைந்து போயிற்று.

பேருந்தில் இருந்து மைதிலி என்ற ராணி இறங்கி நடந்தாள். அவனும் இறங்கினான்.

“ஹலோ மைதிலி, காலை வணக்கம்!” என்றான் எளிய புன்னகையுடன். அவள் நடந்தாள். சுமாரான அழகுதான் என்றாலும் அவளது எளிமையான தோற்றமே அவன் கண்களில் அவளைப் பேரழகியாய்க் காட்டியது.

இந்த மைதிலியுடன் அவ்வளவு பழக்கம் இல்லைதான். அதனால் என்ன? இனிப் பழகிக் கொண்டால் போகிறது என்று நினைத்துக் கொண்டான்.

மைதிலிக்குந்தான் நாட்டின் உயர்ந்த வங்கியில் உத்தியோகம். அவளுந்தான் நான்கு இலக்கத்தில் சம்பளம். அவன் அம்மா வேண்டாம் என்பாளா என்ன?

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *