Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார்

 

இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம், தன் பிள்ளைக்காக, அவனைப் பார்க்க அவரே விடுமுறை நாளுக்குக் காத்திருத்தல் என்றாச்சு. நகரத்தில் அவன் ஒரு நடமாடும் காந்தம். உயர்ந்த கட்டிடத்தில் உயர்ந்த உத்தியோகம். சட்டை காணாத தன் வாழ்க்கை போல இல்லை இது. நேரமின்றித் தவிக்கிற அவனது கணங்கள். பொற்கணங்கள். கார் வைத்திருக்கிறான். தொலைபேசி எப்போதும் கூடவே. குரைக்கிற நாயைக் கூடக் கூட்டிப் போகிறாப்போல. கிராப் எடுப்பும் உடைகளும், எல்லாமே மாறிவிட்டன. அழுத மூக்கை அவர்தான் சிந்திவிட வேண்டும் என்றிருந்த பிள்ளை. டென்னிஸ் விளையாடுகிறதைப் போல, முன்மடிந்த வாக்கில் ஓடியோடி பந்தடிப்பது போலக் காசு வேட்டையாடுகிறான். சொந்த ஜாகை, வீட்டில் வேலையாட்கள் என அவன் உலகம் விரிந்து விட்டது. சிறகு எனப் பொன்னாடை போர்த்தி அலைகிற மனிதன்.

குளத்து ஐயருக்கு பிள்ளையையிட்டு எப்பவுமே மயக்கம் சார்ந்த பெருமை உண்டு.

பார்த்து எத்தனை நாளாச்சி. அவனும் வரக் கூடாது என்றில்லை. வருகிறதைப் பற்றி நினைக்கவே நேரமில்லை அவனுக்கு. அவளாவது! அவன் மனைவியாவது அவனை ஊக்கி வெளியிடம் நாலு இடம் போக வர என்றிருக்கலாம். அவள் டாக்டர். நகரத்தில் அவளை நம்பி ஆயிரம் ஜனங்கள். தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல் மாற்றினாற் போல, பாதிப் பேச்சிலேயே அவளுக்கு அழைப்பு வந்து விடும். அந்தப் பொழுதின் முகமே மாறிப்போகும். வேலை அப்படி. அது வேறுலகம் அல்லவா?

தனிமைச் சிறு கணங்கள் என்னுடையவை. உலகின் ஒரு பகுதி என தன்னைப் பாராட்டாமல் வாழ்கிற கணங்கள். அவன் வேறு மாதிரி. தன் முனைப்பானவன் – புறப்பட்ட அம்பு. அனுபவங்கள் சிக்காது. தேடிப் போக வேண்டும். கணவனும் மனைவியும் பேசும்போதே திடீரென்று தங்களை அறியாமல் பேச்சு ஆங்கில பாஷையில் மாறிப் போகிறது. அவருக்குப் புரியும் என்றாலும் பேச இந்த வேகம் கிடையாது அவரிடம். அவர்கள் அவருடன் ஆங்கிலத்தில் பேச அவர் தமிழில் பதில் சொல்கிற கணங்கள் அநேகம்!

மடப்பள்ளியில் சிறு வெண்கலப்பானைச் சாதம். பிரசாதம் என சந்நிதியில் பிரசாதம் காட்டி எடுத்துக் கொண்டு வருவார். சாம்பார் அல்லது ரசம் அல்லது கொத்துமல்லிச் சட்னி, தேங்காய்த் துவையல் ஏதோ ஒன்று சேர்த்துக் கொள்ள அவர் வயிற்றுப்பாடு தீர்ந்தது. கத்திரிக்காய் அல்லது வெண்டைக்காய் வதக்கல் அல்லது அப்பளம் பொறித்தால் கூடத் தொட்டுக் கொண்டு சாப்பிடத் தாராளம் அல்லவா?

மனைவி இல்லாத கணங்களைப் பிரச்சனையாக உணராமல், மனம் அடுத்த சுற்றுக்குப் பழகிக் கொண்டது. கோவில் கைங்கர்யம் பரம்பரை பாத்யதை என்றாச்சி. வம்சாவளியாய் ஊரும் ஊர்மண்ணும் இரத்தத்தில் இருக்கிறது. மண்தாண்டி எல்லை கடக்க மனம் வரமாட்டேனென்கிறது.

”இதெல்லாம் நம்ம பிரமைப்பா” என்கிறான் நீலு.

”உலகமே பிரம்மாண்டமான பிரமைதாண்டா” என்று குளத்து பதில் சொல்லிச் சிரிக்கிறார்.

”நாம வாழறதா நினைச்சிக்கறதே ஒரு பாவனைதான்றேன்! நம்மால என்ன முடியுஞ் சொல்லு. அவன் ஆட்டுவிக்கிறான். நாம வெறும் பொம்மை”.

”இன்னும் எத்தனை தலைமுறைக்குச் சபரிமலை இருமுடி போல இப்படித் தூக்கி வெச்சிண்டு திரியப் போறீங்களோ தெரியல” என்று சிரித்தான் நீலு. அவருக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது அவன் ஃபோர்த் ஃபார்ம், ஒன்பதாங் கிளாஸ். தனது மூளையைப் பொக்கிஷ அறையாய் அவன் சட்டெனப் பிடித்துக் கொண்டதும், அதில் விளைச்சல் எடுத்த, அறுவடைகண்டு தானியங்களை அவருக்குப் படையல் செய்ததுமான கணங்கள். ”கடவுள் இல்லை” – என்பது அவன் நம்பிக்கை. அவன் வாதம். அந்த-வயதின் வாதம் அது அல்லவா?

அந்தந்த வயதுக்கேற்ற எடுப்புகள் வேண்டிதான் இருக்கிறது. சிறு பாலகனாய் அவர் கைப்பிடித்துக் கூட வந்தவன். ”அப்பா தூக்கிக்கோ” என்று அழுதவன்தான். இப்போது ரொம்ப தூரம் அவன்கூட அவர் நடந்து வருகையில் அவரைக் கேட்டான் அவன் ”கால் வலிக்கிறதாப்பா?”… அவர் புன்னகைத்துக் கொள்கிறார்.

”அவன் இருக்க முடியாது. ஆதியில் உலகில் என்ன இருந்தது. எதுவுமேயில்லை”

”ஆமாம், எதுவுமே இல்லை என்று நமக்குப் படுவதில் ஏதோ எப்படியோ மறைந்திருக்கிறது. ஒளிந்திருக்கிறது. என்னவோ மிகப் பெரும் பலத்துடன், என்னமோ மிகப் பெரும் ஆளுமை சக்தி, மிகத் தீர்மானமான சக்தி, அது நம்மை இயக்குகிறது. அதற்கு இறைநம்பிக்கை எனப் பெயர் சூட்டுகிறோம். அவனை நம்மால் நம் சிற்றறிவால் புரிந்து கொள்ள இயலாது என நாம் கட்டாயம் புரிந்து உணர வேண்டும். புரிந்து கொள்ள முயல்கிறோம் மதத்தின் மூலமாக’ ‘ என்று புன்னகைத்தார் குருக்கள்.

”இந்தியா ஆன்மிக நாடப்பா” என்றார் மகனைப் பார்த்து. ”இவர்கள் மத நம்பிக்கை மிகப் பெரிய அளவில் கொண்டவர்கள். அதன் சிந்தனையில் திளைத்தவர்கள். ஆகவேதான் அவர்கள் பூஜ்யத்தைக் கண்டு பிடித்தார்கள். வேறு யாராலும் பூஜ்யம் என்ற எண்ணைக் கண்டு பிடித்திருக்கவே முடியாதுதான். விளங்குகிறதா நீலு? பூஜ்யம் எத்தனை புதிர்களைக் கிடுகிடுவென்று முடிச்சு-அவிழ்த்து எறிந்தது இல்லையா? இன்றைய கம்ப்யூட்டர் வரை பூஜ்யம் அற்புதமாய்க் கூட உதவிக்கொண்டே வரவில்லையா நீலு?”

அவருக்கே ஆச்சரியம் தான் இவ்வளவு பேசியது – எல்லாம் கடவுள் சித்தம் போலும்.

”அப்படியானால் நமது இப்பிறப்பின் அர்த்தம் ஊடுபொருள் – சரி… தாத்பர்யம் என்ன?”

”தெரியாது! சந்ததிகளைக் கடந்து மானுடம் மேலும் மேலும் முன்னேறிச் செல்கிறது. இயற்கையை சுவீகரித்துக் கொண்டு தன் அறிவுப்பரப்பை விஸ்தரித்துக் கொண்டு செல்கிறது அல்லவா?”

”ம் – ஓர் எல்லையில் மார்க்சியமும் மதமும் சந்திக்கவே செய்யும். அது முரண் அல்ல” என்றான் நீலு சர்வ அலட்சியமாய்.

அவர் திகைத்தார். அப்படியா? முரண்களால் அதனிடை ஒற்றுமை. சாத்தியமா இது?

கடவுளை அலட்சிக்கிற ஒவ்வொருவனிடமும் கடவுள் இருக்கிறார்.

அவன் சுயபலனை எதிர்பாராதவன் அல்லவா? அம்மட்டில் பிறரை எதிர்பாராத நேயக்காரன் அல்லவா?

”உலகின் பெரும் புதிரை நோக்கி நாம் நகர்கிறோம் என்று உனக்குப் படாதது வியப்புதான்”

”சரி, அதை வெறும் கடவுளை வணங்குகிற எளிய நிலையில் நாம் வீணடிக்கலாமா? நமக்கு அதற்கு உரிமை உண்டா அப்பா?”

”வளர்ந்த பின் பெற்ற தந்தையைப் பற்றி மறந்து விடுவது போல நீ பேசுகிறாய்” என்று சிரித்தார் குளத்து.

ஆனால் குழந்தையின் மழலைத் தத்துவங்கள் அவரை பிரமிப்பில் ஆழ்த்தின. என்னை மறந்து தன் போக்கில் சிறகு விரிக்க அவனுக்குச் சுதந்திரம் தந்தவனே நான்தான். கடவுளும் அத்தகைய ஒரு நிலை எடுத்திருக்க வேண்டும். எதோ ஒரு எதிர்பார்ப்பு அவருக்கு இல்லாமல் எதற்கு நம்மை இந்தப் பூமியில் பிறப்பித்திருக்கக் கூடும்.

அடேடே இந்தச் சிந்தனையிலேயே முதல் கட்டத்திலும் இரண்டாவது கட்டத்திலும் எத்தனை முரண், சிக்கல்?

”மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார். அவனது பயம் சார்ந்த பிரதிபிம்பம். பிரமை. பீதியின் நிழல். அவனது மரணத்தின் நிழல்-பிரம்மாண்டம்! அதன் பெயர் கடவுள்”

”மரணம், காலம், கணக்குகள் வாழ்க்கையில் எத்தனை நூல்சிக்கல்கள்!” என்று அவர் பேசுவதை அவன் கைமறித்துத் தடுத்தான். ”மொழியலங்காரச் சிந்தனைகள் வேண்டாம் அப்பா, தயவுசெய்து” என்றான் உடனடியாக.

நுணுக்கமான சூட்டிகையான பிள்ளைதான்!

அவர் கைப்பிடிக்குள் அவன் இல்லை என விரைவில் அவன் நிரூபித்தான். மண் எல்லை கடந்தான் அவன், அவருக்கு அது வருத்தமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. கடமைசெய்! பலனை எதிர்பாராதே! கீதை!

தனிப்பெரும் தத்துவம் அல்ல அது. இயற்கையின் வாழ்வம்சமே. மிருகங்கள் அப்படியே வாழ்கின்றன அல்லவா? பெத்ததோடு அவை குஞ்சுகளின் இறக்கை முளைக்கும் வரை காத்திருந்து வழியனுப்பி வைத்து விடுகின்றன. இது என் குஞ்சு என வளர்த்த – பெற்ற தாய் பிறிது கண்டு கொள்ளுதல் இயலுமோ?

கடவுள் ஊனிலும் உயிரிலும் இருக்கிறான்.

ஆனால் ஊனில் இல்லை. உயிரில் இல்லை, இரண்டின் கலவையாக இரண்டின் பேரிணைப்பாக நடுவே படைப்பிலக்கிய இரகசியமாய் அவன், உள்க்குறிக்கோள், அம்பின் திசையாய் வேகமாய் அவன், அருவ உருவம் அவன்.

கடவுளுக்கு உருவம் உண்டா?

”ஏன் இல்லை?” என்றான் நீலகண்டன். ”புராணங்கள் இதிகாசங்கள் மாற்றி மாற்றிச் சொல்கின்றனவே! படைப்பின் உச்சகட்டமான மனிதன்… அவன்தான் கடவுள். அதுவே அவன் உருவம். இறுதி அவதாரம் என விளங்கவில்லையா அப்பா”

அவர் அவனைப் பார்த்தார்,
”நீங்கள் தினந்தோறும் கற்பூரம் காட்டும் மூல விக்கிரகர், அதில் மனித முக வடிவம் எதற்கு அப்பா?” என்கிறான் அவன் தொடர்ந்து.

முரண்களின் சங்கமத்தில் கடவுள் ஒளிந்திருக்கிறார். பிடி கொடுக்காமல். ஆனால் உணர வைக்கிறார்.

எளிய பரபரப்பில்லாத மனிதன் நான். எனது உயிரை சர்வவியாபியான கடவுளின் துகளாக நான் காண்கிறேன்.

நீலகண்டன் நியதிகளில் சவாரி செய்தபடி தன்னை பிரபஞ்சத்தின் சாரதி என உணர்கிறான்.

இரு நிலைகளிலும் கடவுள் இருக்கிறார்.

முரண்களின் சங்கமமாக!

நீலகண்டன் வந்த தினங்களில் மீண்டும் விவாதங்கள் இவ்விதமே வளைய வந்தன. அவற்றின் உச்சபட்ச உக்கிரத்துடன்.

நாம் சந்திக்கவே முடியாது என்ற கட்டத்தில் சட்டென்று தத்துவங்கள் சந்தித்து விடுகின்றன – ஆச்சர்யம்.

”கோவில் எப்படி இருக்குப்பா” என்கிறான் நீலகண்டன்.

”அப்டீன்னா?”

”நீங்க இன்னமும் மாறவே இல்லையே”

”நீயும்” என்று சிரித்தார் குளத்து.

”சாயந்தரம் கோவிலுக்கு வாடா! எல்லாருமா வாங்கோ” என்றார் மருமகளைப் பார்த்து.

அவன் வந்ததுகூட இல்லை. கூட அவள் அவரைப்பார்க்க வந்தது ஆச்சரியம். ஒரே நாளில் அவள் திரும்பிப் போய்விடுவாள். அவள்வேலை அப்படி,. இம்முறை அவளும் கூட ரெண்டுநாள் தங்கிப் போவதாகச் சொன்னாள். நியதிகளில் அலுத்துப் போய் அவர்கள் வந்திருந்தார்கள் என யூகித்தார்.

அதைத்தான் அவன் கேட்கிறான் போலும் – அப்பா உங்களுக்கு உங்கள் காலாந்தர நியதிகள் இன்னும் அலுக்கவில்லையா?

சுயம் சார்ந்த பிரமைகள் நியதிகளை அலுப்பாய் உணர வைக்கின்றன. சகலத்திலும் தன்னை உணர்ந்ததற்குப் பின் நியதிகளைப் பற்றிய கணிப்புகள் பின்னடைவு கொண்டு நித்தமும் பிரபஞ்ச வாசனை நுகர்ச்சி ஒரு மானுடனுக்கு அலுக்குமோ?

அவர் புன்னகை செய்து கொள்கிறார் -

அன்று மாலை நீலகண்டன் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தான்.

கர்ப்பக்கிரகத்துள் நின்று கற்பூரங் காட்டுகிறார் குருக்கள். நீலகண்டன் கைகட்டி நிற்கிறான் உற்றுக் கடவுளை அவதானித்தபடி! என்ன ஒரு சவால் அந்த நிற்றலில். கடவுள் சந்நிதியில் அவர்முன், இது சாத்தியமா? என்ன அழகான சக்தியாளுமை கொண்ட விக்கிரகம் இது என்கிறார்கள். இவனுக்கான அனுபவம் என எதுவும் இராதா?

கற்பூரத்தட்டை நீலகண்டன் முன் நீட்டிக் காட்டினார் குருக்கள். குனிந்து நெற்றியில் கற்பூரத்தட்டின் திருநீற்றை எடுத்து அவன் பூசிக் கொண்ட கணம் அவர் முதுகுசிலிர்ப்புடன் – யாரோ பார்க்கிற பிரமையில், திரும்பிப் பார்த்தார், சந்நிதியில் உள்ளே மனிதன். ம் மனிதன். கடவுள் விக்கிரகமல்ல. அவன்! மனிதன். நீலகண்டனைப் பார்த்து அந்த கற்பூர ஆராதனைக்குக் கும்பிட்டாற்போல இருந்தது.

- ஜூலை 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
சிறிய ஊர், என்றாலும் மடத்தினால் ஊர் பேர்பெற்றதாய் இருக்கிறது. ஜனங்கள் அமைதியானவர்கள். சாதுவானவர்கள். மடாதிபதிக்கு ஊரில் நல்ல செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டு. மடத்தின் பெயரில் பள்ளிக்கூடம், கல்லூரி எல்லாம் இருக்கிறது. பச்சைச் சீருடையில் சிறார்கள் காலைகளில் தெருவெங்கும் பரபரத்துத் திரிகிறார்கள். தவிர ...
மேலும் கதையை படிக்க...
கருப்பு. அவள் பேரே அதுதான். கருப்பில் அது தனிரகம். மினுமினுத்த மைக்கா. தென்னம் பாளையின் அடிபோல் முறுக்கேறிக் கிடந்தது உடம்பு. எங்கிருந்து அந்த ஊட்டமும் வளமையும் வந்ததோ.. நல்ல நிமிர்ந்த எடுப்பான நெஞ்சு. சேர நன்னாட்டிளம் பெண் போல... ஆண்களைக் கட்டியாள்கிற, அயரவைக்கிற வசிய ஆளுமை. ஊர் வெட்டியானின் ...
மேலும் கதையை படிக்க...
ரமணி பேயைப் பார்த்து விட்டதாய்ச் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. பேய் வீட்டை நெருங்குகையில் திடுமெனத் தெருவிளக்குகள் அணைந்து விடுகின்றன. பெரும் இருள் கவ்வி விடுகிறது. முக்கியமாகப் பேய்கள் நமக்குத் தெரிந்த அடையாளங்களிலேயே நம்முன் வந்து ஏமாற்றி விடுகின்றன. இதில் அத்தனை பேய்களுமே ...
மேலும் கதையை படிக்க...
வாடகைக்காரில் இருந்து இறங்கிக் கொண்டேன். லேசாய்த் தூறிக் கொண்டிருந்தது. இரைச்சலுடன் காற்றில் என்னைச் சுற்றி சுழற்றியடிக்கும் மழை. மங்கலான தெரு விளக்குகள். வெளிறி மங்கிய ஆளரவமற்ற வெளியில் ரயில் நிலையத்தின் பெரு நிழல் தலைநீட்டிக் கிடந்தது. தெருவோரத்தில் வரிசையான மரங்கள். அவற்றின் ...
மேலும் கதையை படிக்க...
அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன் அவர்களின் உடல்களும் கரையில் ஒதுங்கின. அதற்கடுத்த ஒன்பது நாளும், தேவாலயத்தை நோக்கி மேடேறும் தெரு நெடுகிலும், கையால் செய்த சவப்பெட்டிகளின் வரிசை. ...
மேலும் கதையை படிக்க...
இந்த உலகம் இத்தனை சந்தோஷமானதா என அவளுக்கு ஆச்சரியமாய், திகைப்பாய் இருந்தது. உஷாவின் மறுபெயர் நெருப்பு அல்லவா... சற்று தள்ளி ஆண்களை நிறுத்தி, நிறுத்தி அவள் பேசுவதான உணர்வலைகளால் ஆண்கள் அவள் அருகில் தாக்கப்பட்டார்கள். அதனால் அவளைவிட- அவர்கள் அவளிடம் சிறு ...
மேலும் கதையை படிக்க...
அவர் பெரிய திருவடி. மூதறிஞர். இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு சைவ சமயக் குரவர் எனத் தெளிந்த மகாப் பெரியவர். வற்றிய வரியோடிய தேகத்தில் உதிரத்துக்கு பதிலாகத் தமிழ் ஓடுகிறது. இறைபக்தியே அதன் வளமைச் செழுமை. கண்பார்வை சற்று ஒடுக்கந்தான். செவிப்புலனும் அத்தனைக்கு சிலாக்கியமாய் 'சொல்லுந்தரமாய்' இல்லை. எனினும் ...
மேலும் கதையை படிக்க...
ஆர்னால்ட் ஃபைன் (அமெரிக்கா) நியூ யார்க்கில் இருந்து வெளிவரும் தி ஜுயிஷ் பிரஸ் இதழின் ஆசிரியர் ஆர்னால்ட் ஃபைன் 1984ல் எழுதிய ஒரு உண்மைக்கதை. மகா குளிரான ஒரு தினம். நான் வீடு திரும்புகிற வழியில் காலில் தட்டியது ஒரு மணிபர்ஸ். யாரோ தெருவில் ...
மேலும் கதையை படிக்க...
தளர்ந்த முகத்தை உயர்த்தித் தூரம் வரை பார்த்தாள். கும்பலாய்க் கூரைகள். ஓலையிட்டவை, தகரம், சில ஓடு போட்டிருந்தன. பனைமரத்தின் விரிந்த தோகைகள் சிறு காற்றுக்கு ஆடுகின்றன. அந்த சலசலப்பை மனதில் உணர்ந்தாள். நெளம்பி தனக்குச் சொந்தமான அந்த மூணு நாளை எண்ணிப் ...
மேலும் கதையை படிக்க...
அப்பா இறந்துபோனது அரியரத்தினத்துக்கு ரொம்ப துக்கமாய் இருந்தது. ஜனனம் உலகத்தில் எதோ அர்த்தத்தைக்கொண்டு வருகிறது. அர்த்தத்தை உணர்த்திக்கொண்டு வருகிறது. மரணமோ அதை அழித்து விடுகிறது. வாழ்க்கை என்பதன் அபத்தத்தை மரணம் எடுத்துச்சொல்லி விடுகிறது. அர்த்த அனர்த்தக் குழப்பத்திலேயே பெரும்பாலோரின் வாழ்க்கை முடிந்துவிடவும் ...
மேலும் கதையை படிக்க...
நாதஸ்வாமி
கருப்பு சிவப்பு வெள்ளை
பேய்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
சமுத்திர ஆண்டவர்
ஆண்மேகம் பெண்மேகம்
கடலில் கிளைத்த நதி
மணிபர்ஸ்
ஒன்று இரண்டு நான்கு
தாய்மடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)