தெக்குப் புஞ்சை

 

மகா கனம் பொருந்திய முதன் மந்திரி அவர்கள் சமூகத்துக்கு,

மதுரை ஜில்லா, பெரியகுளம் தாலுக்கா வட வீரநாயக்கன்பட்டி உட்கிடைக் கிராமம் வட புதுப்பட்டியில் வசிக்கும் பெரியசாமி மகன் தியாகராஜன் எழுதிக்கொள்ளும் மடல் என்னவென்றால், நீங்கள் கெவர்மென்ட்டார் சில வருஷங்களுக்கு முன்பு வைகை டேமை நல்ல முறையில் ஏற்பாடு செய்து அதுவும் கட்டித் திறந்துவிட்டபடியால், (மேற்படி) டேமைக் குறித்து எங்கள் ஊர்ச் சனங்கள் பலவாறாகப் பேசிக்கொள்கிறார்கள்… இந்த சர்க்கார் பலவிதமான அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டுவந்து, அவையெல்லாம் இந்த மக்களுடைய ஷேம லாபங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கிறதென்றும், வைகை ஆற்றுப் பாசனத்தின் விஸ்தீரணம் ஜாஸ்தியாகிவிட்டதென்றும் சொல்கிறார்கள்… எனக்கு அது பூரணமாய் ஒப்புக்கொள்கிறபடிக்கு இல்லை.

நான் ஏற்கெனவே உங்கள் சமூகத்துக்கு சில மகஜர்கள் அனுப்பி இருந்தேன்… வைகை டேமை நீங்கள் கட்டும்போது, கிழக்கு முகமாக இருக்கும் எங்கள் ஊருக்கும் அதிலிருந்து கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வர வேணுமென்று சொல்லி, அதற்கான ஸ்கெட்ச் படத்தையும் நானே வரைந்து, உடன்வைத்து பல டாக்குமென்ட்டுகளுடன் எல்லா ஆபீஸர்களுக்கும் அனுப்பி இருந்தேன்… நீங்கள் மிகவும் நல்லவர்… சமூக முன்னேற்றத்துக்காகத் தொண்டு செய்கிற கர்மயோகி. ஆனால், ஆபீஸர்கள் அப்படி இல்லை. உங்கள் சமூகத்துக்கு என் மகஜர் கிடைக்கவில்லை என்று அபிப்ராயப்படுகிறேன்… உங்கள் ஆபீஸர்களை நான் நேரில் பார்த்து இது விஷயமாகப் பிரஸ்தாபித்தபோது, அவர்கள் டேமுக்கும் உங்கள் ஊருக்கும் நடுவில் மூன்று கரடுகள் இருக்கின்றன. உங்கள் ஊர் மேட்டுப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கிற படியால், கால்வாய் வெட்டி கொண்டுவருகிற என்னுடைய யோசனை சரி வராது என்று தாட்சண்யமின்றிச் சொல்லி விட்டார்கள்.

இப்பவும் இது பிரகாரம் நான் உங்களிடம் என்ன விண்ணப்பம் செய்துகொள்கிறேன் என்றால், எங்களது ஊரில் தண்ணீர்ப் பிரச்னை பலமாக இருக்கிறது. கிராமக் கிணற்றில் பங்குனி, சித்திரை மாதங்களில் தண்ணீர் வெகு ஆழத் துக்குப் போய்விடுகிறபடியால், பெண்டுபிள்ளை கள் ரெண்டு கடகால்போட்டு நீர் இறைத்து சிரமப் படுகிறார்கள்… தோட்டந்துரவுகளுக்குப் போய் வருகையில், தலையில் விறகு சுமந்துவந்து அடுப்பைப் பற்றவைத்துவிட்டு, பிற்பாடு வந்து தண்ணீர் இறைக்க வேண்டியிருக்கிறது… மொத்த ஊருக்கும் ஒரு கிணறு பத்தவில்லை.

அதனால், நான் என்னுடைய ஸ்கெட்ச் படங்களை இத்துடன்வைத்து உங்கள் சமூகத் துக்கு நேரடியாக விண்ணப்பம் செய்திருக் கிறேன். இதைத் தந்திபோல் பாவித்து ஆக வேண்டிய காரியங்களை ஜரூராகச் செய்து, எங்கள் அவதியைத் தீர்த்துவைக்க வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
தியாகராஜன்.

விநோதமான தமிழில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு தாத்தாவைப் பார்த்தான் வினோத். அவர் எதிரில் இருந்த சுவரை ஊடுருவி எதையோ பார்த்துக்கொண்டு இருந்தார்… திக்கித் திக்கி ஆழமாக மூச்சை இழுத்துவிட்டார்… பலமாக இருமினார்.

”அப்ப காமராஜர் முதலமைச்சரா இருந்தாரு. அவருக்கு எழுதின மகஜரோட நகல் இது. எப்பவுமே ஒண்ணு எழுதினா இன்னொண்ணும் அதே மாதிரி காப்பி எடுத்து வெச்சிக்கிருவேன். எல்லாத்துக்கும் ரிக்கார்டு வேணுமில்ல? என்ன சொல்றே?”

”ஆமா தாத்தா!”

”நீ காமராஜரைப் பார்த்திருக்கியா?”

”நான் எம்பத்தி ஒம்பதுலதானே தாத்தா பிறந்தேன்?”

”ஆமாமா!” குற்ற உணர்ச்சியுடன் புன்னகைத்தார் தாத்தா.

”வயசாச்சில்லே? கொள்ள விஷயம் மறந்து போகுது. ஆனா, பழசு மாத்திரம் புளி போட்டு விளக்கின மாதிரி ஞாபகம் இருக்கு. எழுபத்தி அஞ்சுல காமராஜரு தவறிட்டாரு. நான் மெட்றாஸ் போகணும்னு தவியாத் தவிச்சேன். கையில அப்ப காசு இல்லாததால போக முடியலை. ரேடியோ கேட்டுக் கேட்டு அழுதுகிட்டே இருந்தேன். கல்யாணமே பண்ணிக்காம நாட்டுக்காக வாழ்ந்த மனுசன். புள்ளை இல்லாட்டி என்னய்யா? நாங்க எல்லாருமே உங்க புள்ளைகதான்னு சொல்லி மொட்டை போட்டோம். என்னையும் சேர்த்து நம்மூரில் நாப்பது அம்பது பேர் இருக்கும்… மொட்டை போட்டவங்க. அப்படி மனுசன் எல்லாம் இனிமே கிடைப்பாங்களா இந்த நாட்டுக்கு?”

தாத்தா கண்ணை மூடிக்கொள்ள… அலுப்புடன் வினோத் எழுந்து வெளியே வந்தான். ஹாலில் வெங்கடேசன் ஆர்வத்துடன் காத்திருந்தார். உடனிருந்த செல்வி கண்கள் மின்ன இவனைப் பார்த்தாள்.

”என்னடா? எதாச்சும் தெரிஞ்சுச்சா?”

”போம்மா நீ வேற? இவரு எப்பவோ கிராமத்துக்குக் குடி தண்ணி வேணும்னு பெட்டிஷன் எழுதி இருக்காரு. அதோட காப்பி கையில சிக்கிருச்சு. அதைப் படிச்சுக்காட்டச் சொன்னாரு. படிச்சுக் காட்டினேன்… அவ்வளவுதான்! போட்டு அறுக்க ஆரம்பிச்சிட்டாரு!”

”ச்சை!” என்று தலையில் அடித்துக் கொண்டார் வெங்கடேசன். ”இந்த மாதிரி தேவையத்த எழவெல்லாம் கிடைக்குது… மூலப் பத்திரம் இருக்கா… இல்லையா?”

வினோத், தெரியவில்லை என்று தலை அசைத்தான்.

”அட்வான்ஸ் மட்டும் பத்து லட்சம் தர்றேன்னு சொல்றாங்கடா. பத்திரம் முடிக் கும்போது, முப்பது லட்சம் தர்றேன்னு சொல்றாங்க. ஜாக்பாட் அடிச்ச மாதிரிடா நமக்கு இந்த சான்ஸு. இந்தாளு இப்படிப் பண்ணித் தொலையிறாரே?”

”உங்கப்பா ஓடியாடித் திரிஞ்ச காலத்துலயும் ஒண்ணும் பிரயோஜனமில்ல. நாமளே கையை ஊனிக் கர்ணம் அடிச்சுப் பொழைக்கிறோம். சரி… இப்ப இப்படி ஒரு சான்ஸ் வந்துருக்கே. நல்லபடியா வித்து கைக்குக் காசு வந்தா, அஞ்சு லட்சத்தை எடுத்துக்கிட்டுப் போயி, அம்புட்டுக்கும் நகை வாங்கலாமுன்னு ஆசையா இருந்தேன். நடக்காது போலிருக்கே? அதான் என் தலையில ஏறி உட்கார்ந்துக்கிட்டு இறங்குவனானு சொல்றானே சனீஸ்வரன்!”

வினோத் புலம்பும் அம்மாவைப் பார்த்தான். பக்கத்து ஊர் நடுநிலைப் பள்ளியில் டீச்சராக இருக்கிறாள். சீட்டுப் போட்டு மூணு வருஷம் மாதா மாதம் பணம் கட்டி ஈசலின் இறகு மாதிரி மெல்லிசாக ஒரு தங்கக் காசு வாங்கி வந்து, லட்சுமி படத்தின் முன்புவைப்பாள். அந்த இத்தனூண்டு தங்கக் காசுக்குள்ளேயே ஒரு லட்சுமி உண்டு. அந்த லட்சுமியின் கையில் இருந்தும் புள்ளி புள்ளியாகத் தங்கக் காசுகள் சொரிந்துகொண்டுதான் இருக்கின்றன. செல்வி இப்படியாக இதுவரை மூன்று, நான்கு காசுகள் சேர்த்து பீரோவின் உள் அறையில்வைத்திருக்கிறாள். அவ்வப்போது அவற்றை எடுத்துக் காதலுடன் பார்ப்பாள். அந்தத் தருணங்களில் எல்லாம் பலப் பல பளபள காசுகள் கோத்த காசு மாலை ஒன்றை அணிந்து அவள் ஒரு கல்யாண ரிசப்ஷனுக் குப் போவதுபோலவும், அங்கு இருக்கும் எல்லோரும் அவளையே பார்ப்பதுபோலவும், வலிய வந்து பேசுவதுமாகக் கற்பனை ஓடும். ‘ம்… எல்லாம் கற்பனையாகவேமுடிஞ்சி ருமோ’ என்கிற ஏக்கம் மீதூற அவள் புருஷனைப் பார்த்தாள்.

வெங்கடேசன் ஒரு வாழ்ந்துகெட்ட மனிதன். இருந்த பணம், சொத்துகளை எல்லாம் புதுப் புது பிசினஸ்களில் முதலீடு செய்து, அடி மேல் அடி வாங்கி நொடித்துப் போனவன்… கடைசி அடி பத்து வருஷத்துக்கு முன்னால் பலமாக விழுந்தது. அந்தச் சமயத்தில் தேக்கு மரத் திட்டம் என்று ஒரு பேச்சு ஊரெல்லாம் ஓடிக்கொண்டு இருந்தது. பெரிய பெரிய கார்களில் ஆட்கள் வந்து இறங்கினார்கள். ராக்கெட் ஏவுகிற விஞ்ஞானிகள்போல் உடை அணிந்துகொண்டு மொட்டை வெயில் காயும் கரட்டுக் காட்டைக் காட்டி, ‘இங்கேதான் ப்ளாண்டேஷன்வரப் போகுது. நீங்க வாங்கற மரங்களை உங்க பெயர்ல ரிஜிஸ்டர் பண்ணிருவோம். அந்த மரம் வளர வளர… உங்க பணமும் கூடவே வளரும்.’ என்றெல்லாம் கூலிங் கிளாஸைக் கழட்டாமல் பேசினார்கள். வெங்கடேசன் காடு கரையை வித்து பணத்தைத் திரட்டி அதில் போடும் எத்தனிப்பில் இருந்தபோது, தியாகராஜன் மகனை அழைத்துப் புத்தி சொன்னார்.

”ஏம்ப்பா, நாமெல்லாம் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்துட்டு… நான் காசு குடுப்பேன், அவன் மரம் நடுவான்னா என்ன கேனத்தனம் இது? பேசாம நமக்கு இருக்கிற தரிசுக் காட்டில் நீ அம்பது தேக்கு மரம் நடு… நெதமும் நீ தண்ணியை இறைச்சு ஊத்து… அது வளரட்டும். அதை விட்டுப்போட்டு கம்பெனிக்காரன் நடுவான்… மரம் எம் பேருல இருக்கும்னு கதை சொல்றியே?”

”உனக்கு இந்த ஸ்கீமைப்பத்தி என்னா தெரியும்? ‘கார்ப்பரேட் ஃபார்மிங்’னு புது ஐடியா. ஒரு மரத்துக்கு இவ்வளவுனு பணம் அட்வான்ஸ் பண்ணிட்டு, நம்ம பாட்டுக்கு ஜாலியா இருக்க வேண்டியதுதான். தண்ணிவிட்டு மரம் வளர்க்கிறதுஎல்லாம் கம்பெனி பண்ணிரும். மரம் வளர்ந்த பிறகு, லம்ப்பா காசு நம்ம கையில் வரும். நோகாம சம்பாரிக்கிற ஜோலி!” -வெங்கடேசன் குரலில் அப்படி ஓர் உற்சாகம்.

”ம்! உன்கிட்ட காசு வாங்கிக்கிட்டு அவன் வைக்கிறதாச் சொல்ற தேக்குச் செடியைக் காட்டுப் பன்னியோ, எருமையோ வந்து மிதிச்சு உழப்பிருச்சுனா, என்ன செய்வி யாம்?”

”அதுக்குத்தான் மரத்தை இன்ஷூரன்ஸ் பண்ணிர்றோமில்லை?” என்றார் வெங்கடே சன் பெருமிதத்துடன்.

”என்னது… மரத்தை இன்ஷூரன்ஸ் பண்றதா?”

”ஆமா. கம்பெனியே பண்ணிருது. முதல் பிரிமியத்தை அவங்களே கட்டிடுவாங்க. இருபது மரம் ரெஜிஸ்டர் பண்ணா, வெள்ளிக் குத்துவிளக்குத் தர்றாங்க. நல்ல ஸ்கீம் அப்பா… நீங்க பழைய ஆளு. உங்களுக்கு என்ன தெரியும்? பேசாம இருங்க.”

இவரின் ஆட்சேபணையைச் சட்டை செய்யாமல் போய், சாண் உயரத்துக்கு ஒரு வெள்ளிக் குத்துவிளக்குடன் வீட்டுக்கு வந்த வெங்கடேசன், அதை என்னமோ உலகக் கோப்பை வாங்கிய பாவனையில் அப்பாவிடம் ஆட்டிக் காட்டினான். தனது எதிர்கால வருமானம் வளமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது என்று இறுமாந்துஇருந்தான். தேக்கு மரமாவது தென்னை மரமாவது? சீமைக்கருவேல மரம்கூடக் கிடைக்கவில்லை. அது ஒரு ஃப்ராடு கம்பெனி என்று பேப்பரில் செய்தி வந்தபோது வெங்கடேசன் உடைந்துபோனான். செல்வி அந்தக் குத்துவிளக்கை அவர் மூஞ்சியில் எறிந்தாள்.

இப்படியாக ஏதோதோ நடந்து, குடும்பப் பொருளாதாரம் தற்போது ரொம்பச் சிக்கலில் இருக்கிறது. செல்வியின் சம்பளம் கைக்கும் வாய்க்குமாக இருக்க… இப்போது குடும்பத்தின் கவனம் எல்லாம் தியாகராஜன் மீது குவிந்திருக்கிறது. அதற்குக் காரணம், ஒரு இரண்டு ஏக்கர் புஞ்சைக் காடு! சீந்துவார் அற்றுக்கிடந்த அந்தக் காட்டுக்குத் திடீர் என்று மவுசு. இவர்களது காட்டில் இருந்து அரை கி.மீ. தள்ளி பெரிசாக நாலு ரோடு போட கவர்மென்ட் ஸ்கீம் வந்ததில் இருந்து, அந்த ஏரியாவில் ரியல் எஸ்டேட் மதிப்பு எக்கச்சக்கமாகக் கூடிப்போனது. வெங்கடேசனுக்கும் செல்விக் கும் சொல்லித் தீராத சந்தோஷம். வீட்டுக் கும் தரகர்கள் படையெடுக்க ஆரம்பித் தார்கள். ஒரு சென்ட் முப்பதாயிரம்னா பேசிரலாம் என்று அவர்கள் சொல்ல… இவர்கள் படபடவென்று மனக் கணக்குப் போட்டு மகிழ்ந்துபோனார்கள். ஆனால், எதிர்பாராமல் அதில் ஒரு சிக்கல் வந்தது. சம்பந்தப்பட்ட புஞ்சைக் காட்டின் மூலப் பத்திரம் வேண்டும் என்று வாங்குகிற பார்ட்டி கேட்க… வெங்கடேசன் குழம்பிப் போனார். அவரிடம் இருந்த பத்திரங்களில் அந்த மூலப் பத்திரம் இல்லை. தியாகராஜனிடம் கேட்டபோது, வயோதிகத்தின் காரணமாக நினைவு தப்பிப் போய் பேந்தப் பேந்த விழித்தார்.

”என்னது… நமக்கேது புஞ்சைக் காடு? அதைத்தான் நீ வித்து புளிய மரம் வாங்கிட் டியே?”

”அய்யோ நீ வேற? அது தேக்கு மர ஸ்கீம். அதுக்கு இந்தக் காட்டை விக்கலை. மேக்குப் புஞ்சையைத்தான் வித்தோம். நான் சொல்றது தெக்க இருக்கக் காடு?”

”தெக்க நமக்கு ஏது காடு? அதெல்லாம் இல்லை.”

இடி விழுந்தது மாதிரி இருந்தது வெங்கடேசனுக்கு. ”யோவ்! வயசானா… அதுக்காக இப்படி இருக்கற சொத்தை இல்லேனு சொல்லுவியா? தெக்க இருக்குய்யா… ரெண்டு ஏக்கர். அந்த மூலப் பத்திரம் எங்க இருக்கு? கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாரு… சொஸைட்டியில ஏதும் அடமானம்வெச்சு லோன் வாங்கி இருக்கியா?”

”ஞாபகம் வரலையே?” என்றார் பரிதாப மாக. மகன் போட்ட அதட்டலில் கண்கள் கலங்கி இருந்தன.

”ம்க்கும்… வைகை டேம் கட்டறதுக்கு யோசனை சொன்னது, இந்திரா காந்திக்கு லெட்டர் போட்டது, மானெக்ஷாவுக்குப் பாராட்டுக் கடிதம் அனுப்பினது இதைப்பத்தி எல்லாம் கேட்டா ஒண்ணுவிடாம சொல்றே. ஆனா, இது மாத்திரம் உனக்கு ஞாபகம் இல்லையா?”

”மானெக்ஷா யாருங்க?” என்று கேட்டாள் செல்வி.

தாத்தா உற்சாகமாக, ”இந்தியா – பாகிஸ்தான் சண்டையில நம்ம தளபதிம்மா அவரு!” என்றார். சொல்லுகையில் அவர் கண்கள் பளபள என்று மின்னின.

கடுப்பான வெங்கடேசன் எரிந்து விழுந்தார். ”நீ எல்லாம் டீச்சரா வேற இருக்கே… உனக்கு மானெக்ஷா தெரியலை. இந்தாளுக்கு இது தெரிஞ்சு ஒரு மண்ணும் ஆகப்போறது இல்லை. ஆனா, இது தெரியுது. புஞ்சைக் காடு பத்தித் தெரியலை. யார் யாருக்கு எது ஞாபகம் இருந்தா பிரயோ ஜனமோ, அது ஞாபகம் இருக்காது. இந்தக் குடும்பம் விளங்குமா?”

தலையில் அடித்துக்கொண்டார் வெங்கடேசன். பலவாறாகக் கேட்டுப் பார்த்தும் தாத்தாவுக்குப் புஞ்சைக் காட்டின் மூலப்பத்திரம் குறித்துத் தெரியவில்லை. அப்போதுதான் செல்வி யோசனை சொன்னாள்.

”உங்களுக்கும் உங்கப்பாவுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம்தான். நீங்க ஒண்ணும் கேக்க வேணாம். வினோத் அவருகிட்ட பேச்சுக் கொடுக்கட்டும்… பேரன்கிட்ட அவரு மனசுவிட்டுப் பேசுவாரு. கரெக்டா ஞாபகம் வந்து சொல்லிருவாரு பாருங்களேன்!”

வெங்கடேசன் மனைவியை ஒரு கணம் வியந்து பார்த்தார். மானெக்ஷாவைத் தெரிய வில்லை என்று அவளைக் குறைத்து மதிப் பிட்டது எவ்வளவு பெரிய தவறு. ராஜதந்திரங் களைக் கரைத்துக் குடித்திருக்கிறாயடி நீ! என்று இறும்பூது எய்தினார்.

இதன் பின் மூன்று நாட்களாக வினோத் தாத்தாவுடன் கிடையாய்க் கிடக்கிறான். வினோத்துக்கு இது ரொம்பக் கடுப்பான வேலைதான். பக்கத்து டவுன் கல்லூரியில் இன்ஜினீயரிங் படிக்கிறான். நேரம் போக பகல் எல்லாம் ஸ்டார் கிரிக்கெட் சேனலிலோ, ஈஎஸ்பிஎன்னிலோ நடந்து முடிந்த மேட்சு களைப் பார்த்துக்கொண்டு இருக்கும் பொறுப் பான இளைய தலைமுறையின் பிரதிநிதி. அதைப் பார்க்கும்போது எல்லாம் வெங்க டேசனுக்குக் கடுப்பாக வரும்.

”நடந்துக்கிட்டிருக்க மேட்சைப் பார்க் கிறதே வெட்டி வேலை. நீ எப்பவோநடந்து முடிஞ்ச மேட்சைப் பார்த்துக்கிட்டு இருக் கியே. இது வேலையத்த வேலைடா! உன் வயசுல நான் தொழில் பண்ண ஆரம்பிச்சுட்டேன். தெரியுமா?”

”தெரியும்… தொழில் பண்றேன்னு சொல்லி, எல்லாத்தையும் வித்து நஷ்டப்பட்டே. எல்லாமே அம்மா சொல்லிஇருக்கு.”

வெங்கடேசன் க்ளீன் போல்டாகி, பல வீனமான குரலில், ”டைம் வேஸ்ட்டுடா… அதான் சொல்றேன்!”

”நான் டைமை மட்டும்தான் வேஸ்ட் பண்றேன். நீ டைம், பணம் எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிட்டு, எனக்கு அட்வைஸ் பண்றியே?”

இப்படிப்பட்ட அதிரடிகளை மகனிட மும் மனைவியிடமும் வாங்கி வாங்கி, வெங்கடேசனின் மனமெங்கும் விழுப்புண்களின் மௌன ஓலம். தோல்விகளில்இருந்து மீண்டெழுந்து தன்னை நிரூபிக்கக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாக, தெற்கே இருக்கும் புஞ்சைக் காட்டைத்தான் மலைபோல் நம்பி இருக்கிறார்.

நாற்பது லட்சம்! அதில் கடன்களுக்கு அஞ்சு, மனைவிக்கு அஞ்சு, மகனின் படிப் புச் செலவுக்கு அஞ்சு என்று ஒதுக்கிவிட்டு, பதினஞ்சை பேங்கில் டெபாசிட் பண்ணிவிட்டு, பத்து ரூவாயை எடுத்து ஏதாவது தொழில் செய்யலாம். இப்போது ரியல் எஸ்«டட்தான் ‘பீக்’கில் இருக்கிறது. எல்லோரும் வீடு கட்டும் வேகத்தில் வெறிகொண்டு அலைகிறார்கள். ஊரில் முக்கால்வாசித் தோட்டங்களை ப்ளாட் போட்டாகிவிட்டது. ஊரில் பாதிப் பேர் ரியல் எஸ்டேட் புரோக்கரேஜ்தான் பண்ணுகிறார்கள். நாமும் அதில் இறங்கிவிட வேண்டியதுதான் என்கிற தீர்மானத்தில் இருக்கிறார்.

பெரிசு பத்திரத்தை எங்கே வெச்சுது என்றுதான் தெரியவில்லை. வினோத் மூணு நாளாகப் பேச்சுக் கொடுத்துக்கொண்டு இருக்கிறான். தாத்தாவிடம் இருந்து தேவை யான தகவல்களைத் தவிர, மற்றதெல்லாம் நிறையவே கிடைக்கிறது. அவருக்கு வயது 72. அந்த வயதுக்கு ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார். இருமலும் ஞாபக மறதியும் தான் பிரச்னை.

”இன்றைக்கு எப்படியாவது விஷயத்தைக் கறந்துவிடு” என்று செல்வி இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் தட்டில்வைத்துக் கொடுத்தாள் அம்மா.

”ம்! எனக்கும் உங்கப்பாவுக்கும் ஷ§கர் வந்திருச்சு. ஆனா, இப்பவும் உன் தாத்தன் தேங்காய்ப் பாலுக்கு சீனி பத்தலைங்கிறாரு. கொண்டுபோய் குடுத்து, எப்படியாவது நைஸாப் பேசி இன்னிக்கி அந்தப் பத்திர விவரம் கேட்டுரு!”

”மூணு நாளாக் கேட்டுக்கிட்டு இருக்கேம்மா. அவரு எங்க சொல்றாரு? நேரு, காமராஜரு, ராஜாஜி, இந்திரா காந்தினு எதுக்கெடுத்தாலும் ஏதாவது மொக்கை போட ஆரம்பிச்சிர்றாரு. பெரிய இம்சையா இருக்கும்மா… உஸ்ஸ்… முடியலை..!”

”அதெல்லாம் பாத்தா முடியுமாப்பா? நமக்குக் காரியம் ஆகணுமில்ல? உனக்கு வேற டொனேஷன் கொடுத்து இடம் வாங்கினதும் இல்லாம, ஏகப்பட்ட செலவுஆகுது. இந்தக் காட்டு விஷயம் முடிஞ்சுருச்சுன்னா, நாம கொஞ்சம் நிம்மதியா மூச்சுவிடலாம்!”

”எனக்குப் புதுசா நாலு ஜீன்ஸ் வாங்கணும்மா!”

”வாங்கிரலாம்யா!”

”ரீ-போக் ஷூ ஒண்ணு கண்டிப்பா வேணும்… சிக்ஸ் தௌசண்ட் ஆகும்!”

கேட்டுக்கொண்டு இருந்த வெங்கடே சனுக்கு மூச்சடைத்தது. அவர் மூன்று மாதமாக ஒரு ஹவாய் செருப்பைப் போட்டுக் கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். நூற்றி இருபது எங்கே? ஆறாயிரம் எங்கே? என் தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் இவ்வளவு பெரிய இடைவெளியா? ‘இந்தியா வளர்ச்சிப் பாதையில் எகிறுகிறது’ என்று மன்மோகன்சிங் சொல்வது இதைத்தானா? தாங்க முடியாமல் அவருக்கு வயிறு கொதித்தது. என்றாலும் அவர் எதுவும் பேசவில்லை.

தலையை ஆட்டிய வினோத், தட்டுடன் உள்ளே நுழைந்தான். தாத்தா வாங்கி ஆர்வமாகச் சாப்பிட ஆரம்பித்தார்.

”தாத்தா… அந்த தெக்குக் காட்டுப் பத்திரம் எங்கே இருக்குனு ஞாபகம் வந்துச்சா?”

தாத்தாவின் முகம் யோசனையில் ஆழ்ந்தது. ”ம்… உங்கப்பன் பத்திர ஆபீஸ்ல அதுக்கு வில்லங்கம் போட்டுப் பார்த்திருப்பானே?”

”பார்த்தாரு தாத்தா… அது உங்கப்பா பேர்ல இருக்காம். ஆனா, மூலப் பத்திரம் இல்லாம வாங்க மாட்டோம்னு பார்ட்டி சொல்லுதாம்!”

”பார்ட்டின்னா?”

”பார்ட்டின்னா வாங்கறவங்க!”

”வாங்கறவன்தான் பார்ட்டியா? அப்ப நாம?”

”நாமளும் பார்ட்டிதான் தாத்தா. நாம விக்கிற பார்ட்டி… அவன் வாங்கற பார்ட்டி!”

”ம்… நமக்கு ஒரு காலத்துல மூணு தோட்டம் இருந்துச்சு. சடையன் தோட்டம், சுளியன் தோட்டம், கட்டையன் தோட்டம்னு. சடையன், சுளியன், கட்டையன் எல்லாரும் நமக்குத் தோட்டத்தை வித்தவங்களோட பேரு. வாங்கின பிறகும்கூட அவங்க பேரை வச்சுத்தான்டா அந்தத் தோட்டத்தை எங்கப்பன் அடையாளஞ் சொல்லுவான். அப்படி மனுசங்க எல்லாம் அழிஞ்சுப் போயாச்சு. எல்லாப் பயலும் பார்ட்டி ஆயிட்டாங்களா? பேரு புள்ளி இல்லையா?”

வினோத் திகைத்தான்…

”நீ சின்னப் புள்ளை… உன்கிட்டதான் சொல்லணும்… ஊரில் அம்புட்டுப் பயலும் தோட்டத்தை விக்கிறாங்களே? நிலம்கிறது பூமித் தாய்டா. நமக்குப் பச்சையைக் குடுக்கிறவ. வித்து வித்து வீடாக் கட்டினா எப்படி? நான் செத்துருவேன். உங்கப்பனும் செத்துருவான். நீ எதைடா சாப்பிடுவே?”

”தாத்தா… பத்திரம் எங்கன்னு கேட்டா ஞாபகப்படுத்திச் சொல்லுவியா? அதை விட்டுட்டு வெட்டியா என்னென்னமோ சொல்றியே? ப்ளீஸ்… சொல்லு தாத்தா. எனக்கு ரீ-போக் ஷூ வாங்கணும்!”

”என்னது?”

”ஷூ தாத்தா… கால்ல போடறது…”

”செருப்பு வாங்க காட்டை விக்கணுமா?” என்றார் தாத்தா. முகம் வாடிப் போனவராக பேரனைப் பார்த்தார்.

”அய்யோ! அறுக்காத தாத்தா…”

”ஞாபகம் வரலைப்பா!”

வினோத் அவரை எரிச்சலுடன் பார்த்துவிட்டு எழுந்து வெளியே போனான்.

பேரனை முதல்முதலாக அப்படிப் பார்த்ததில் தாத்தா கலங்கிப்போனார்.

இவருக்கு நன்றாக நினைவிருக்கிறது… ஒருமுறை போகிக்குப் பழசை எரிக்கையில் இவர் சம்சாரம் தெரியாத்தனமாக அந்தப் பத்திரத்தை எரித்துவிட்டாள். வெங்கடேசன் அப்போது சின்னப் பையன். புஞ்சைக் காடுதானே என்று அதைப்பற்றி இவரும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்போது துளைத்து துளைத்துக் கேட்கிறார்கள். உண்மையைச் சொல்லிவிடலாம்தான். ஆனால் அப்புறம் சோறு கிடைக் குமோ என்னமோ?

ஆயிரம் நியாயம் பேசினாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறது… வயசானாலும் பசிக்கிறது.

தாத்தா மனசுக்குள் அழுதார்!

- ஆகஸ்ட் 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
திருவல்லிக்கேணி டீக் கடைகளில் ஒன்றில் காலை ஏழு மணிவாக்கில் சிங்கிள் டீ குடிப்பது வாழ்வின் மறக்க முடியாத சங்கதி இல்லைதான். ஆனால், என் வாழ்வில் அப்படி நேர்ந்துவிட்டது. ஏனெனில், அது 2000-ம் ஆண்டு. எனது பிறந்த தினம் அன்று. அப்போது, அங்கே ...
மேலும் கதையை படிக்க...
சந்தானம் எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் பிரவேசித்தார். நெஞ்சு வரையில் இன் செய்த பேன்ட். நாலு வருடங் களுக்கு முன்பு தள்ளுபடி விலையில் வாங்கிய அசல் லெதர் பெல்ட். கையில் இருந்த தோல் பைக்கு வயது ஆறு. அதில் நிறையக் காகிதங்களும் பகவத் ...
மேலும் கதையை படிக்க...
யாமிருக்க பயமேன்
வாழ்வின் சந்தர்ப்பங்களில் நிகழும் பல அனுபவங்கள் சிறுகதைகளின் சாயலோடுதான் இருக்கின்றன. பார்க்கிற விஷயங்கள் மனதில் இருக்கும் கருத்துகளோடு இணைகையில் கதை தோன்றுகிறது. சில சமயங்களில் நிகழும் விஷயங்கள் கிட்டத்தட்ட கச்சிதமான சிறுகதை போலிருப்பது எனக்கு வியப்பளிக்கிற விஷயம். தற்போது சொல்லப் போகிற ...
மேலும் கதையை படிக்க...
வாழ்க்கை நொடிகளால் ஆனது. விநாடிகளைத் தான் நொடி என்று சொல்கிறேன். என் தாத்தா ‘நொடி’ என்று வளைவையோ, திருப்பத்தையோ குறிப்பிடுவார். அவர் சொல்லும் அர்த்தத்தில் வாழ்க்கை என்பது திருப்பங்களால் ஆனது; அதுவும் சரிதான்! ஆக மொத்தத்தில், வாழ்க்கை என்பது எனது நொடிகளாலும், ...
மேலும் கதையை படிக்க...
மகன்
எல்லா வாக்கியங்களையும் என்னால் சுலபமாக நம்பிவிட முடியும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதனை ஈஸியாக நம்பிவிடுகிறவன் நான். என்னால் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் எப்போதும் நம்ப முடிவ தில்லை. ‘நானும் என் அப்பாவும் நண்பர்கள் மாதிரி’ என்று ...
மேலும் கதையை படிக்க...
ஒரு எலிய காதல் கதை
கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள் தரையும், லிஃப்ட்டும், கனவான்களும், கனவான்கள் பெற்ற கண்கவர் கன்னிகளும்கொண்ட அபார்ட்மென்ட் அல்ல. தண்ணீர் லாரிக்காக யுத்தம் செய்கிற வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. ...
மேலும் கதையை படிக்க...
மாமா ஒருவரை சமீபத்தில் சொந்த ஊர் திருமணம் ஒன்றில் சந்தித்தேன். பல ஆண்டுகள் ஊர்ப்பக்கம் வராமல் இருந்து இடைவெளிவிட்டு வந்திருக்கிறார். அவர் முகம் மிரண்டுபோய் இருந்தது. ஊரில் அவர் மிரளும்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இருந்தது கல்யாண மண்டபத்தில். பெண்கள், ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: பாஸ்கர் சக்தி கிராமத்தின் லட்சணங்கள் எண்பதாம் வருடத்திலிருந்து மாறத் தொடங்கி இருப்பதாக, அதே ஊரில் வேலை பார்க்கும் காளமேக வாத்தியார் முப்பது வருடங்களாகச் சொல்லி வருகிறார். ஆனால் அவர் மட்டும் மாறுவதாக இல்லை!   வேட்டி நுனியை இடக்கையால் தூக்கிப் பிடித்தபடி மூக்குப்பொடியும், ...
மேலும் கதையை படிக்க...
ராமையா தட்டில் இருந்த சோற்றை உண்ணாமல் கைகளால் அதனை அளைந்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தார். கொஞ்ச காலமாகவே அப்படித்தான் இருக்கிறார். நாச்சார் அவரைச் சலிப்புடன் பார்த்தாள். மனைவிமார் புருஷன்மாரைப் பார்க்கிற பார்வைகள் ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஏற்ப மாறுகின்றன. கல்யாணம் முடிச்ச ...
மேலும் கதையை படிக்க...
ஈவது விலக்கேல்?
கல்லூரியில் படிக்கும் காலங்களில் தினம் பஸ் ஏறி முப்பது கி.மீ. பயணம் செய்ய வேண்டும். அது ஒரு பெரும் பேறு. கல்லூரி அளிப்பதற்கு இணையான சந்தோஷத்தை அதை நோக்கிய பயணம் அளித்து வந்தது. எங்கள் ‘செட்’ பையன்கள் சிலர், பாட்டு போடும் ...
மேலும் கதையை படிக்க...
அறை நண்பர்
தாம்பரம் சந்திப்பு
யாமிருக்க பயமேன்
மின்னு
மகன்
ஒரு எலிய காதல் கதை
வாடகை சைக்கிளும் எஸ்.டி.டி பூத்தும் இன்ன பிறவும்…
அழகர்சாமியின் குதிரை
அதனதன் வாழ்வு
ஈவது விலக்கேல்?

தெக்குப் புஞ்சை மீது ஒரு கருத்து

  1. SAKTHIVEL says:

    அருமையான கதை…நாகரீகம் நினைத்து வருந்துகிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)